தொழில்நுட்பம் - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » தகவல் தொழில்நுட்பம் » தொழில்நுட்பம் (தொழில்நுட்பம்)
தொழில்நுட்பம்
RAWALIKADate: Tuesday, 15 Apr 2014, 4:46 PM | Message # 11
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
ஸ்மார்ட்போன்: தகவல் திருடும் போலி ஆப்ஸ்கள்!

Thanks - Vikatanசெ.கார்த்திகேயன்

இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தங்களின் தனிப்பட்ட தகவல்களை அதில் பதிந்து வைத்திருக்கின்றனர்.  மின்னஞ்சல் முகவரியில் இருந்து வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு வரை அத்தனை விஷயங்களும் இதில் அடங்கும். இந்தத் தேவைக்கெல்லாம் ஸ்மார்ட் போனில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஆப்ஸ் எனப்படும் அப்ளிகேஷன்களைத்தான்.

சாதாரணமாக கேமில் தொடங்கி, வங்கிக் கணக்கு விவரங்களைத் தரும் ஆப்ஸ்கள் வரை பல ஆப்ஸ்கள்  ஆஃப் மார்க்கெட்டில் இலவசமாகவும், சிறிய கட்டணத்துடனும் கிடைக்கின்றன. இவையெல்லாம் பாதுகாப்பானவை தானா, இதில் உள்ள போலிகளை எப்படி கண்டுபிடிப்பது, போலிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்பது போன்ற கேள்விகளுடன் பி.கே.ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணாவிடம் பேசினோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

''ஸ்மார்ட் போன்களின் விலையும் குறைந்துவருவதால் அதன் மீதான மோகம் மக்களுக்கு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. ஆனால், அதன் மீதான விழிப்பு உணர்வு இருக்கிறதா என்றால், இல்லை.ஸ்மார்ட் போன்கள் கணினியைப் பின்னுக்குத் தள்ளி அது செய்யும் வேலைகளில் பெரும்பாலானவைகளைத் தானே செய்கின்றன. இந்தநிலையில் மோசடி கும்பல்களின் பார்வை கணினி களிடமிருந்து ஸ்மார்ட் போன்களின் பக்கம் இப்போது திரும்பி இருக்கிறது.



இதற்கோர் உதாரணம், சில ஆண்டுகளுக்குமுன், கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மார்க்கெட்டில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தேர்டு பார்ட்டி அப்ளிகேஷன்களில் டிராய்டுட்ரீம் (DroidDream) என்னும் டிரோஜன் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் உள்ள அப்ளிகேஷன்களை இயக்கியவுடன், போனில் அதன் உரிமையாளர் அனுமதியின்றி அனைத்து தகவல்களையும் கையாளும் வசதியை இந்த வைரஸ் பெற்றுவிடுகிறது.

இதன்மூலம் மேலும் பல வைரஸ் கொண்ட அப்ளிகேஷன்களை எளிதாக டவுண்லோடு செய்கிறது. இந்த வைரஸ் குறித்து அறிந்த கூகுள் நிறுவனம், தன் ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களையும் ஆய்வு செய்து, இந்த வைரஸ் இருந்த அப்ளிகேஷன்கள் அனைத்தையும் நீக்கியது.சீனாவில், இந்தவகையான வைரஸ்கள், ஆன்லைன் அமைப்புகள் வழியே மொபைல் போன்களில் பரவியது கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தன.  அந்தச் சமயத்தில் வைரஸ் எதிர்ப்பு நிறுவனங்களும் ஸ்மார்ட்போன் பயனாளர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்தது. 'மொபைல் போனுக்கான ஆப்ஸ்களை டவுண்லோடு செய்யும் போது அது  பாதுகாப்பானதுதானா என்று கண்டறியுங்கள்’ என்பதே அந்த கோரிக்கை.உத்தரவாதம் இல்லை!



நீங்கள் எந்த ஆப்ஸை எதிலிருந்து டவுண்லோடு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அவை பாதுகாப்பானதா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, ஆண்ட்ராய்டு போனில் ரயில் டிக்கெட் புக் செய்ய ஒரு அப்ளிகேஷனை கூகுள் பிளேயில் இருந்து டவுண்லோடு செய்தால் அது பாதுகாப்பானது. கூகுள் பிளே அல்லாத வேறு தளங்களின் மூலம் டவுண்லோடு செய்தால் அது பாதுகாப்பானது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
டிசேபிள் செய்வது அவசியம்!

கூகுள் பிளேயில் இருந்து நீங்கள் டவுண்லோடு செய்யும் ஆப்ஸ்களின்  பாதுகாப்பு கூகுள் பிளேயால் உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு வேறு தளங்களில் இருந்து டவுண்லோடு செய்யப்படும் அப்ளிகேஷன்கள் இன்ஸ்டால் செய்ய விரும்பவில்லை எனில், Settings > Security / Settings > Applications பகுதியில் Unknown sources என்பதை டிசேபிள் செய்திருக்க வேண்டும்.

ரிவியூ  படியுங்கள்!

கூகுள் பிளேயிலிருந்து எந்த அப்ளிகேஷனையும் டவுண்லோடு செய்துகொள்ளலாமா எனில், அது பாதுகாப்பானதல்ல. சில சமயங்களில் புதிய அப்ளிகேஷன் ஒன்றை டவுண்லோடு செய்வது நம் பாதுகாப்புக்குப் பிரச்னையாக அமையலாம். எனவே, அதிகமாக டவுண்லோடு செய்யப்பட்ட அப்ளிகேஷனை தேர்வு செய்வது புத்திசாலித்தனம். அதோடு ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனை  பயன்படுத்தும்முன் அதை பயன்படுத்தி யவர்களின் கருத்தை கூகுள் பிளேயில் படிப்பதும் அவசியம்.

 
RAWALIKADate: Tuesday, 15 Apr 2014, 4:46 PM | Message # 12
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நிறுவனத்தின் பெயரை கவனி!

முக்கியமானதொரு ஆப்ஸை டவுண்லோடு செய்யவேண்டும் எனில், அது குறிப்பிட்ட நிறுவனம்தான் வெளியிட்டுள்ளதா என்பதை அறிந்துகொண்டு டவுண்லோடு செய்வது நல்லது. ஆப்ஸ்களின்  பெயருக்கு கீழே அதை வெளியிட்ட நிறுவனத்தின் பெயரும் இருக்கும். நிறுவனத்தின் பெயரை இணையத்தில் தேடுவதன் மூலம் அதுபற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, ஃபேஸ்புக் நிறுவனத்தின் அப்ளிகேஷன்களின் கீழே அந்த நிறுவனத்தின் முழுப்பெயர் இருக்கும்.
படிக்காமல் அனுமதி தரக்கூடாது!



அப்ளிகேஷன் ஒன்றினை டவுண்லோடு செய்வது என்று முடிவு செய்தபின் நீங்கள் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம், ''permissions'' எல்லா அப்ளிகேஷன்களும் இதைக் கேட்கும். இணையத்தை எப்போது அக்சஸ் செய்யவேண்டும் என்று அனுமதி கேட்டபின், அந்த அப்ளிகேஷன் இணையம் சார்ந்த சேவையைத் தரும் அல்லது உங்களுக்கு நிறைய விளம்பரங் களைக் காட்டும். இதேபோல, நீங்கள் இருக்கும் இடம், போன் கால்/மெசேஜ் போன்றவற்றைச் செய்யும் பெர்மிஷன், போன் காண்டாக்ட்களை அக்சஸ் செய்யும் பெர்மிஷன், சோஷியல் நெட்வொர்க் நண்பர்களை அக்சஸ் செய்யும் பெர்மிஷன், போட்டோ எடுக்கும் பெர்மிஷன் என்று பல செயல்களைச் செய்ய உங்களிடம் அனுமதி கேட்கப்படும்.
இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது, 'போன்கால்/மெசேஜ் போன்றவற்றை அக்சஸ் செய்யும் பெர்மிஷன், போன் காண்டாக்ட்களை அக்சஸ் செய்யும் பெர்மிஷன்'. ஏனெனில், எல்லா அப்ளிகேஷன்களும் அக்சஸ் செய்யும்பட்சத்தில் உங்கள் பாதுகாப்புக் கேள்விக்குறியாகும். எனவே, குறிப்பிட்ட அப்ளிகேஷன் எந்த மாதிரியான பெர்மிஷன்களைக் கேட்கிறது, அது நிஜமாகவே தேவையானதுதானா என்று தெரிந்துகொள்வது பாதுகாப்பானது.அப்டேட் கவனம்!

ஆரம்பத்தில் சில பெர்மிஷன்களை மட்டும் கேட்டுவிட்டு, நீங்கள் ஆப்ஸ்களை அப்டேட் செய்யும்போது புதிய பெர்மிஷன்களைக் கேட்கும் அப்ளிகேஷன்களும் உள்ளன. எனவே, அப்டேட் செய்யும்போதும் இதைக் கவனிப்பது அவசியம். சில கூடுதலான சாமர்த்தியங்களுடன் தற்போதைய ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகள் இயங்கி வருகின்றன. இருந்தாலும், எந்த நேரமும் ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகள் நமக்குத் துணை இருக்காது. பல நேரங்களில் நம் சமயோசிதப் புத்திசாலித்தனம்தான், இத்தகைய தீய விளைவுகளிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க உதவும்'' என்றார் பிரபு கிருஷ்ணா.

ஆப்ஸ்களை எப்படி வைரஸ்கள் தாக்குகின்றன, அதிலிருந்து எந்த மாதிரியான தகவல்கள் திருடப்படும், வரும்முன் காப்பது எப்படி என்ற கேள்விகளுடன் அப்ளிகேஷன் டெவலெப்மென்ட் நிறுவன வட்டாரத்தில் பேசினோம். அவர்கள் சொன்ன விளக்கங்கள் இங்கே உங்களுக்காக...



ஆப்ஸ் வைரஸ்கள் உஷார்!

இன்றைய நிலையில் தகவல் திருடுபவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகத் திகழ்கின்றன வைரஸ்கள். ஸ்மார்ட்போன் உலகில் பெரும்பாலான வைரஸ்கள் மிகவும் துடிப்புடன் செயல்படுகின்றன. ஸ்மார்ட்போன் செயல்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்கும் அப்ளிகேஷன் களைப் போலியாகத் தயாரிக்கும் மோசடி கும்பல், அதைக் குறிவைத்து      தாக்குவதுபோலவே வைரஸ்களையும் உற்பத்தி செய்து உலாவவிடுகிறது. இந்தவகை வைரஸ்கள், தான் புகுந்த சாதனங்களில் உள்ள எஸ்.எம்.எஸ். மற்றும் தனிநபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது.

தகவல் திருடன்!

ஒரிஜினல் குறியீடுகள் கொண்ட ஆப்ஸ்களாக இருந்தால் அது உட்புகுந்த வைரஸால் பாதிக்கப்படுவதில்லை. போலியான அப்ளிகேஷன்களாக இருந்து அதைப் பயனாளர்,  ஒரிஜினல் அப்ளிகேஷன் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயன்படுத்தும்போது,  கெடுதல் ஏற்படுத்தும் குறியீடுகள் மூலம் தகவல்கள் திருடப்படுகின்றன. இ-மெயில் முகவரிகள், மொபைல் போனின் தனி அடையாள எண்கள், அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட செய்திகள் ஆகியன திருடப்பட்டு அனுப்பப்படுகின்றன.



இந்த வைரஸ் மூலம், அப்ளிகேஷன் ஒன்றில் உள்ள ஃபைல்கள் அதே பெயரில், புதிய ஃபைல்களைப் பதிக்கிறது. இதனால் எந்தச் சோதனைக்கும் முதலில் உள்ள ஒரிஜினல் ஃபைல் உள்ளாகிறது. ஆனால், பின்னர் செயல்பாட்டில், திருட்டு ஃபைல் இயங்கி, சேதத்தினை விளைவிக்கிறது. அதுமட்டுமின்றி, போனைப் பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே, அந்த போனிலிருந்து இந்த வைரஸ் அழைப்புகளையும், தனிச் செய்திகளையும் அனுப்புகிறது.

வரும்முன் காப்பது!

அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னால், அதற்குத் தேவையான அனுமதியைச் சோதனை செய்திடவும். நம்பிக்கையற்ற இணையதளங்களுக்கான இணைப்பை அவசரப்பட்டு கிளிக் செய்துவிடக் கூடாது. நம்பகத்தன்மையான மொபைல் ஆன்ட்டி வைரஸ் ஒன்றின் மூலம், போன் முழுவதையும் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும். நம்பிக்கையற்ற தளங்களிலிருந்து எதனையும் டவுண்லோடு செய்யக்கூடாது. முழுமையாக நம்பிக்கையான தளங்கள் என்று தெரிந்தபின்னரே, எந்த புரோகிராமினையும் டவுண்லோடு செய்து பயன்படுத்துங்கள். கூகுள் பிளே ஸ்டோர் போன்ற மிகவும் நம்பகத்தன்மையான ஆஃப் மார்க்கெட்டில் மட்டுமே தேவையான அப்ளிகேஷன்களையே பயன்படுத் தினால், உங்கள் தனிப்பட்ட தகவல் களுக்கு எந்த பங்கமும் வராது!

படங்கள்:  தி.குமரகுருபரன்.
 
RAWALIKADate: Sunday, 23 Nov 2014, 9:08 AM | Message # 13
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
ஆண்ட்ராய்டு போன்... பாதுகாக்கும் வழிகள்!

Thanks - Vikatan

செ.கார்த்திகேயன்.

இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ்
ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம்.
ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில்  பதிந்து
வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர, வைரஸ்களின்
தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும் செய்யும்.
ஆண்ட்ராய்டு போன்களை  பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார் தொழில்நுட்ப
வல்லுநர் பிரபு கிருஷ்ணா.

ஸ்கிரீன் லாக்!

எல்லா ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதுதான் அடிப்படையான பாதுகாப்பு வசதி. இதில் பேட்டர்ன், பின் (PIN), பாஸ்வேர்டு என்ற மூன்றும்
எல்லா ஆண்ட்ராய்டு போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ்
பகுதியில், இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத் துவது கட்டாயம்.

இதுமாதிரியான எந்த பாதுகாப்பும் இல்லாத போன்கள் தொலைந்து, அது இன்னொருவர்
கையில் கிடைக்கும் போது, அந்த போன்களில் இருக்கும் அனைத்து விஷயங்களையும்
ஒருவர் எளிதாக எடுத்து பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க இது ஒரு சிறந்த வழி.



என்க்ரிப்ட் வசதி!

மேலே சொன்ன செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் ஸ்கிரீன் லாக் பகுதிக்குக் கீழ் ‘என்க்ரிப்ட்’ என்ற வசதி இருக்கும். இந்த வசதியைப்
பயன்படுத்துவதன் மூலம் போனில் இருக்கும் முக்கியமான தகவல்கள் அனைத்தும்
‘என்கிரிப்ட்’ செய்யப்பட்டுவிடும். ஒவ்வொருமுறை போனை ஆன் செய்யும்போதும்
நாம் ‘டிகிரிப்ட்’ செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நம் போன்
தொலைந்துபோனாலும் முக்கியமான தகவல்களை யாராலும் திருட முடியாது.

ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்!

செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் அடுத்ததாக இருக்கும் வசதிதான் இது. இதன்மூலம் நமது போன் காணாமல் போகும்போது
android.com/devicemanager என்ற முகவரிக்குச் சென்று, ஐந்து நிமிடங்களுக்கு
போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி அல்லது டிவைஸ் லாக் ஆகும்படி அல்லது
தகவல்கள் அனைத்தையும் அழிக்கும்படி (Erase) செய்ய முடியும். இதற்கு, போனில்
இணைய இணைப்பு இருக்க வேண்டும். அதேபோல, போன் சுவிட்ச்ஆஃப் ஆகி இருக்கவும்
கூடாது. இதுவும் ஒருவகையில் குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிதான்.

அலுவலக/பொது இணையத்தைப் பயன்படுத்துதல்!பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான  ESET சொல்லும் கணக்கின் படி, அலுவலகங்களில் வை-ஃபை மூலம் இணையத்தைப் பயன்படுத்து வதால், 30-40%
வைரஸ் பிரச்னையால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் வை-ஃபை
பயன்படுத்துவதற்குமுன், அது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை நெட்வொர்க்
அட்மினிடம் கேட்டு, அதற்குப் பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது.

 

இதேபோல, பொது இடங்களில் கிடைக்கும் இலவச வை-ஃபை இணைப்பின் பாதுகாப்பும் கேள்விக்குரியதே. பொது இடங்களில் கட்டாயம் இணையம்
பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளவர்கள், 2ஜி/3ஜி டேட்டா ரீசார்ஜ் செய்து
பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.

முக்கியமான தகவல்கள் பத்திரம்!

உங்களுக்கு மிக முக்கியமானதாகத் தோன்றும் எந்தத் தகவலையும் உங்கள் போனில் பதிவு செய்து வைக்காதீர்கள். இதனால் போன்
திருடுபோவது தவிர, போன் பழுதாகி அதை சர்வீஸ் சென்டரில் தரும்போதும்
பாதுகாப்பாக இருக்க முடியும்.

நம்பகமில்லா அப்ளிகேஷன்கள் வேண்டாம்!

குறிப்பிட்ட அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோடு செய்யும்முன் அதன் தேவை, பாதுகாப்பு போன்றவற்றைத் தெரிந்துகொண்டு டவுன்லோடு செய்வது நல்லது.

குறிப்பாக, கூகுள் ப்ளே இல்லாமல் வேறு எங்கிருந்தும் இன்ஸ்டால் செய்யப்படும் அப்ளிகேஷன்கள் போனுக்குப் பாதுகாப்பானதில்லை.

அப்ளிகேஷன் லாக்!



முக்கியமான தகவல்கள் இருக்கும் கேலரி, இன்பாக்ஸ், மெயில் அப்ளிகேஷன்களை எப்போதும் லாக் செய்து வைக்கலாம்.
இதெற்கென்றே கூகுள் ப்ளேயில் நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன. இது, ஒவ்வொருமுறை
குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஓப்பன் செய்யும்போதும் ஒரு பாஸ்வேர்டு/பின் (PIN)
நம்பர் கேட்கும்.

ரூட் (Root) செய்ய வேண்டாம்!
போனை ரூட் செய்வது என்பது நம் விண்டோஸ் கணினியில் அட்மின் கணக்கை பயன்படுத்துவதுபோல. இதன்மூலம் போனுக்குத் தேவையான லேட்டஸ்ட்
ஆபரேட்டிங் சிஸ்டம் முதல், இயங்காத அப்ளிகேஷனை இயங்கவைப்பது வரை என
பல்வேறு வசதிகள் கிடைக்கும்.

ஆனால் ரூட் அக்சஸ் உள்ள அப்ளிகேஷன், போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும்
அறியும் வசதியைப் பெறும். இதனால் பாதுகாப்பற்ற ஏதேனும் ஒரு அப்ளிகேஷன்
மூலம் நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்.

பிரவுஸர்கள் எச்சரிக்கை!
போனில் பிரவுஸர்களைப் பயன்படுத்தும்போது பாஸ்வேர்டு அல்லது இதர தகவல்களைக் கொடுத்தால், பயன்படுத்தி முடித்தபின் ஹிஸ்டரியை
அழித்துவிடுவது (Delete) முக்கியமானது.

அதேபோல, பணப் பரிவர்த்தனை தொடர்பான வேலைகளுக்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனை டவுன்லோடு செய்வதுதான் பாதுகாப்பானது.

அப்டேட் அவசியம்!

போனின் சாஃப்ட்வேரை புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்துவைத் திருப்பது அவசியமான ஒன்று. அதேபோல, அப்ளிகேஷன்களுக்கும் அப்டேட்
வசதி வரும்போதெல்லாம் அதைச் செய்துகொள்ள வேண்டும்.ஆனால், அந்தசமயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்ளிகேஷன்கள் நம்மிடம் கேட்கும் அனுமதிகளை நன்கு படித்துப்
பார்த்த பிறகே, அனுமதி வழங்க வேண்டும்.
போன் தொலைந்துவிட்டால்..?
இறுதியாக, இத்தனை பாதுகாப்பாக இருந்தும் உங்கள் போன் தொலைந்துபோய்விட்டால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஜிமெயில்,
ஃபேஸ்புக் போன்றவற்றின் பாஸ்வேர்டை மாற்றுவது.அடுத்தபடியாக, ‘ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்’ மூலம் போனில் இருக்கும் தகவல்களை அழிக்க முயற்சி செய்வதுதான்.

ஆண்ட்ராய்டு போனின் பாதுகாப்புக்கான வழிகளைச் சொல்லிவிட்டோம். இந்த வழிகளை நீங்களும் பின்பற்றலாமே!
 
RAWALIKADate: Thursday, 16 Apr 2015, 10:24 PM | Message # 14
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
கையால் எழுதி மேசேஜ் அனுப்பலாம்; அசத்தும் கூகுள்!



நீங்கள் ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர் என்றால் இனி மெசேஜ்களை டைப் செய்து தான் அனுப்ப வேண்டும் என்றில்லை. உங்கள் கையாலேயே எழுதி அனுப்பலாம் தெரியுமா? அதற்கான வசதியை கூகுள், ஹேன்ட்ரைட்டிங் இன்புட் (Google Handwriting Input ) எனும் புதிய செயலி ( application) மூலம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ் உள்ளிட்ட 82 உலக மொழிகளில் இந்த வசதியை பயன்படுத்தலாம்.



ஸ்மார்ட்போனில் என்னதான் சூப்பர் கீபோர்ட்கள் வந்துவிட்டாலும் கூட, பலருக்கு டைப் செய்வது என்றால் எட்டிக்காய் சங்கதிதான். இன்னும் பலருக்கு என்ன இருந்தாலும் கையில் எழுதி அனுப்புவது போல வருமா? என்ற உணர்வும் இருக்கலாம். இந்த இரண்டு குறைகளையும் தீர்க்கும் வகையில் கூகுள், ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான கைவிரலிலேயே எழுதி அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. கையால் எழுதப்படும் எழுத்துக்கள் ஆப்டிகல் கேரக்டர் ரிகக்னேஷன் முறையில் புரிந்து கொள்வதன் அடிப்படையில் இந்த வசதி செயல்படுகிறது.



கூகுள் ஹேன்ட்ரைட்டிங் இன்புட் செயலி மூலம், டச் ஸ்கிரீனில் கைவிரலால் பக்குவமாக எழுதலாம். அல்லது ஸ்டைலீசாகும் எழுதலாம். உங்கள் கையெழுத்து கிறுக்கலாக இருக்கும் என்ற கவலையே வேண்டாம், இதில் எழுதிப்பாருங்கள் எந்த வகையான எழுத்துக்களையும் புரிந்து கொள்வோம் என கூகுள் சொல்கிறது.

எழுத்துக்கள் மட்டும் அல்ல, இமோஜிகள் என சொல்லப்படும் ஐகான்களையும் இதில்
வரைந்து காட்டலாம்.

ஒரு முறை தரவிறக்கம் செய்துவிட்டால் இணைய இணைய்ப்பு இல்லாவிட்டாலும் பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற மெசேஜிங் சேவைகளிலும் இதை பயன்படுத்தலாம். ஏற்கனவே கூகுள் மொழிபெயர்ப்பு வசதியில் இது போன்ற அம்சம் இருக்கிறது. அதை ஆய்வு மூலம் விரிவாக்கு இந்த வசதியை ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.’



இதில் பக்கம் பக்கமாக எழுத முடியாது, ஆனல் நச்சென்று நாலு வரிகள் எழுதி அனுப்பலாம். கூகுள் பிளேஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store....ing.ime

இதை பயன்படுத்துவது தொடர்பான விரிவான விளக்கங்களுக்கு: https://support.google.com/faqs/faq/6188721

- சைபர்சிம்மன்
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » தகவல் தொழில்நுட்பம் » தொழில்நுட்பம் (தொழில்நுட்பம்)
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Search: