எபோலா எமன்! தப்புவது எப்படி? - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » எபோலா எமன்! தப்புவது எப்படி? (Thanks - Doctor Vikatan)
எபோலா எமன்! தப்புவது எப்படி?
RAWALIKADate: Friday, 22 Aug 2014, 9:27 PM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline


இப்போது உலகை அதிரவைக்கும் ஒரு சொல் 'எபோலா’. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று விதவிதமான வியாதிகள், விஞ்ஞான முன்னேற்றத்துக்குச் சவால்விட்டு, அவ்வப்போது மனிதனை மரணபீதிக்குள் உறையவைக்கும். அந்த வரிசையில் வந்திருக்கும்  மற்றொரு அபாயத்தின் பெயர் 'எபோலா’. 1976ல் ஆப்பிரிக்க நாடுகளில் கடும் உயிரிழப்பை ஏற்படுத்திய இந்த வைரஸ் கிருமி, இப்போது மீண்டும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. அச்சத்தில் ஆழ்ந்துபோயிருக்கிறது ஆப்பிரிக்கா.



இந்தியாவுக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை. 'எபோலா வைரஸ் தாக்குதலில் இருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம்' என்கிறார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். ஆனாலும், ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் ஏராளமான இந்தியர்கள் மூலம் இந்த வைரஸ் கிருமி  இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.  இதனால் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் ஒவ்வோர் இந்தியரும் தீவிரப் பரிசோதனைக்குப் பிறகே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள கினியாவில் இருந்து தமிழகம் வந்த இளைஞர் ஒருவரை மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தனர். இத்தனைக்கும் அவர் அப்பா மரணப்படுக்கையில் இருந்தார். இருந்தபோதும் 'நோய்க்கூறுகள் இல்லை’ என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகே, அவர் சொந்த ஊரான தேனிக்கு அனுப்பப்பட்டார். இந்த எபோலா எமன் குறித்த   'பய’டேட்டாவைத் தருகிறார் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் பொது மருத்துவர் சிவராஜ்.

'எபோலா வைரஸ் என்றால் என்ன?'

'இந்த நோய் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நகரில் எபோலா நதிக் கரையில் இருந்து பரவியது. அதனால் தான் இந்த நோய்க்கு எபோலா என்று பெயர்.  ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த லைபீரியா, சியரா லியோன் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இந்த நோய் தாக்கி இதுவரை 1,500க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.



நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.'

'எபோலா வைரஸ் எங்கிருந்து எப்படிப் பரவும்?'

'எபோலா வைரஸ்,  ஐந்து வகைளாகப் பிரிக்கப்படுகிறது. அதில் நான்கு வைரஸ்கள் மனிதர்களையும், ஒரு வைரஸ் விலங்குகளையும் தாக்கக் கூடியவை. இந்த எபோலா வைரஸ், விலங்கிலிருந்துதான் மனிதர்களுக்குப் பரவி இருக்கிறது. பாதிக்கப்பட்ட நபரோடு நெருக்கமாகப் பழகும்போது, எளிதில் இந்த வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. நோயாளியின் ரத்தம், எச்சில், சிறுநீர், விந்து போன்ற உடல் திரவங்கள் மூலம் பரவும்.  பாதிப்புக்கு உள்ளானவர் பயன்படுத்திய மருத்துவக் கருவிகளை சரியான முறையில் சுத்தம் செய்யாமல் மற்றவர்களுக்கு உபயோகப்படுத்தும்போதும் இந்த நோய் பரவ அதிகம் வாய்ப்பு உண்டு. இந்த நோய்க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் உரிய பாதுகாப்பு இன்றி, நோயாளியை அணுகினாலும், அவர் களுக்கும் பரவும் அபாயம் உண்டு!'

'எபோலா வைரஸின் அறிகுறிகள் என்ன?'

'உடலில் எபோலா வைரஸ் நுழைந்து  இரண்டு முதல் 10 நாட்களுக்குப் பிறகுதான் அதன் அறிகுறிகளே தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு 21 நாட்கள் வரைகூட அறிகுறிகள் தெரியாமல் இருக்கலாம். முதலில் சாதாரணக் காய்ச்சல் போல்தான் இருக்கும். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தலைவலி, வாந்தி, மயக்கம், மூட்டுவலி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும். மேலும் மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி மற்றும் ரத்தப்போக்கு இருக்கும்.

இந்தப் பாதிப்புகள் நீடிக்கும் பட்சத்தில், ரத்த அழுத்தம் குறைந்து, நாடித் துடிப்பு பல மடங்கு உயரும். எபோலா வைரஸ் உடல் முழுதும் பரவிவிட்டதை உறுதி செய்யும் அறிகுறிகள் இவை. அதன் பிறகு இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எழுந்து உட்காரக்கூட முடியாத நிலை ஏற்படும். இந்த நோய் தீவிரமானால், பாதிக்கப்பட்டவருக்கு உடல் வலி, தசை வலி அதிகரிக்கும்.  தலை முடி ஏராளமாக உதிரத் தொடங்கும். தோலில் அரிப்பு ஏற்பட்டு உடல் சிவந்து காணப்படும். கண் பார்வை மங்கலாகும். பார்வையே பறிபோகும் நிலையும் ஏற்படலாம். இறுதியில் மரணம் நிகழும்.'

 
RAWALIKADate: Friday, 22 Aug 2014, 9:27 PM | Message # 2
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
'இதற்கான சிகிச்சை என்ன?'

'இப்போதைய நிலவரம் வரை எபோலா வைரஸ் கிருமியை அழிக்க மருந்தும் இல்லை. தடுப்பதற்கான தடுப்பூசியும் இல்லை. ஆனால் காய்ச்சல் வந்தால், அது சாதாரணக் காய்ச்சல் என்று அலட்சியமாக இருக்காமல் உடனடியாகப் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். அதாவது இந்த வைரஸ் ஏற்படுத்தும் காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் எபோலா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். ஆனால் இது தொடர் சிகிச்சையாக இருக்கவேண்டும்.

எபோலா நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதும், அவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பிறகு அவர், தனி அறையில் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அந்த நபருக்கு நோய் எதிர்ப்புச் சக்திக்கான மருந்துகளை மருத்்துவர்கள் தொடர்ச்சியாகத் தந்துகொண்டிருப்பார்கள். எபோலா வைரஸ் நோய் ஒருவருக்கு இருப்பது ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியப்பட்டால், அதற்கு உரிய, தீவிர சிகிச்சை அளித்து அவரைக் குணப்படுத்த முடியும்.

மேலும், எபோலோ வைரஸ் பற்றிய விழிப்பு உணர்வை அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பலாம். எபோலா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டால், 50 முதல் 90 சதவிகிதம் வரை மரணத்துக்கான வாய்ப்புகள் உண்டு. .
இந்த நோய் இந்தியாவுக்கு வருவதற்கு அதிக சாத்தியம் இல்லை. எனினும், ஆப்பிரிக்காவில் இருக்கும் பலருக்கும் இந்த நோய் பரவி இருப்பதால், தற்போது அங்குள்ள பல நாட்டினரும் தங்கள் நாடு திரும்பும் எண்ணத்தில் இருக்கின்றனர். அவர்களில் எத்தனை பேருக்கு இந்த நோய் தாக்கி இருக்கும் என்பது தெரியாது. நமது அரசும் விழிப்புடன் இந்த நோய்க்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது' என்றார்.

இந்தியா இந்த எமனிடம் மாட்டாமல் இருக்கவேண்டியதே இப்போதைய நமது சவால்.



அச்சம் வேண்டாம்!


'தமிழகம் உட்பட இந்தியாவில் இந்த நோயின் பாதிப்பு இல்லை. பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை’ என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.  எபோலா வைரஸ் காய்ச்சல் வந்திருக்கிறதா என்பதை உறுதிசெய்வதற்கு, தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் IGM, PCR - என்ற பரிசோதனைகள் மேற்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நோய் குறித்த புகார்கள், சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய பொது சுகாதாரத் துறை கட்டுப்பாட்டு அறையின் 104 மற்றும் 0442345 0496, 0442433 4811 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். மத்திய அரசின் 24 மணி நேர அவசர உதவி மையத்துக்கு 01123061469, 3205, 1302 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இந்தியாவுக்குள் எபோலா...

எபோலா வைரஸ் இந்தியாவுக்குள் நுழையாமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளையும் இந்திய அரசு எடுத்து வருகிறது. பிறநாடுகளில் இருக்கும் இந்தியர்களிடமும் இந்திய தூதரக அதிகாரிகள் விழிப்பு உணர்வு எற்படுத்தி வருகிறார்கள். இந்த நோய் இந்தியாவுக்கு வர சாத்தியம் இல்லை என்றாலும், நைஜீரியாவில் இருந்து இந்தியாவிற்குப் பயணம் செய்த ஒருவர் எபோலாவினால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இ்தையடுத்து அவரைப் பரிசோதித்த சுகாதாரத் துறை, தற்போது அந்த நபர் நலமுடன் இருப்பதாகவும் அவர் தீவிரக் கண்காணி்ப்புில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம். ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் அதிகம் பரவியுள்ள லைபீரியா, சியராலியோ, நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் பயணி்ப்பதைத் தவிர்க்கவும்’ என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்களில் கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் எபோலா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பெறுவதற்காக, ராம் மனோகர் லோகியா மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான கண்காணிப்புப் பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இ.லோகேஸ்வரி
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » எபோலா எமன்! தப்புவது எப்படி? (Thanks - Doctor Vikatan)
  • Page 1 of 1
  • 1
Search: