கல்விக் கடன்... கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » கல்விக் கடன்... கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! (நன்றி விகடன்)
கல்விக் கடன்... கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
RAWALIKADate: Sunday, 18 May 2014, 7:22 PM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
கல்விக் கடன்... கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
செ.கார்த்திகேயன்

சமீபத்தில்தான் பன்னிரண்டாம் வகுப்புக்கான ரிசல்ட் வெளியானது. மாணவர்கள் எல்லாரும் அடுத்து என்ன படிக்கலாம், எந்தத் துறையைத் தேர்வு செய்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதில் பரபரப்பாக இருப்பார்கள். ஆனால், பெற்றோர்களோ, மகன்/மகளின் கல்விச் செலவுக்கு என்ன செய்யப்போகிறோம், எந்த வங்கியில் கடன் வாங்கப் போகிறோம் என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள்.

பல்வேறு பொதுத்துறை வங்கிகளும் தனியார் வங்கிகளும் கல்விக் கடன் அளித்துவருகின்றன. இந்தக் கல்விக் கடனை  பெறுவது எப்படி?, கல்விக் கடனுக்காக எந்தெந்த வங்கிகளை அணுகலாம்?, எதன் அடிப்படையில் கல்விக் கடன் தருவார்கள்? கல்விக் கடன் வாங்க வங்கியில் என்னென்ன சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்? என்கிற கேள்விகளுக்கான  பதிலை தெரிந்து கொள்ள வங்கி வட்டாரத்தில் உள்ள பலருடன் பேசினோம். அவர்கள் தந்த விவரங்கள் இதோ உங்களுக்காக...
எங்கே, எப்படி வாங்கலாம்?

அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள பொதுத்துறை/ தனியார் வங்கியில் கல்விக் கடன் பெறலாம்.கல்விக் கடன் பெறுவதற்கு  பள்ளிப் படிப்பை படித்திருக்க வேண்டும். கல்விக் கடனை பெறுவதற்குமுன் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புள்ள படிப்பு களையும், பயில்வதற்கான சிறந்த கல்லூரியையும் தேர்வு செய்வதில் கவனம் அவசியம்.

கல்விக் கடன் பெற நினைப்பவர் கள், முதலில் கல்லூரியில் தங்களின் நிதியைப் பயன்படுத்திச் சேர்ந்துகொள்வது அவசியம். அதன்பின் அருகில் இருக்கும் வங்கி மேலாளரை அணுகி கல்விக் கடன் பெறுவதற்கான விதிமுறைகளைத்  தெரிந்துகொண்டு, அவர்கள் தரும் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும்.



யாருக்கு கிடைக்கும்?

இந்திய அரசாங்கம் கல்விக் கடன் பெற தகுதி உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்கிற உத்தரவை அனைத்து வங்கிகளுக்கும் பிறப்பித் திருக்கிறது. ஏழை மாணவர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என யாராக இருந்தாலும், கல்விக் கடன் கிடைக்கும்.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கற்றுத்தரப்படும் அனைத்து படிப்புகளுக்கும் கல்விக் கடன் கிடைக்கும் (டிப்ளமோ படிப்புகள் உள்பட).
ஆனால், வேலை வாய்ப்பில்லாத படிப்புகளுக்குக் கல்விக் கடன் வழங்க வங்கிகள் தயங்கவே செய்யும். அதுமாதிரி தரப்படும் கடன்கள் திரும்ப வருமா என வங்கிகள் அஞ்சுவதே இதற்குக் காரணம். தவிர, அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் கண்டிப்பாகக் கிடைக்காது.
எவ்வளவு கிடைக்கும்?

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கல்விக் கடன் கிடைக்கும். வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர் களுக்கு அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் கிடைக்கும்.

இதற்கு அதிகமாகக் கல்விக் கடன் தேவையெனில், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையிலோ, அவர்கள் தேர்வு செய்திருக்கும் படிப்பின் எதிர்காலத்தின் அடிப்படையிலோ அல்லது பெற்றோர்களின் வருமான விகிதம் போன்ற அடிப்படை விஷயங்களை சரிபார்த்தோ அதிக கல்விக் கடன் கேட்கும் மாணவனுக்குக் கடன் கொடுக்க லாமா, வேண்டாமா என்பதை வங்கியே முடிவெடுக்கும்.
சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்!



* கல்வி பயில சேர்ந்திருக்கும் கல்லூரியிலிருந்து போனோஃபைட் என்று சொல்லப்படுகிற சேர்ந்ததற்கான ரசீதையும், ஃபீஸ் ஸ்ட்ரக்சர் என்று சொல்லப்படுகிற கல்லூரிக் கட்டணத்துக்கான விவரச் சான்றிதழ் மற்றும் இதர கட்டண விவரங்கள் (ஹாஸ்டல் ஃபீஸ், மெஸ் ஃபீஸ் போன்றவை) அடங்கிய சான்றிதழ்களையும் கடன் பெறப்போகும் வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

 பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றுக்காக ரேஷன் கார்டு அட்டையின் அட்டஸ்டட் நகல், வருமானச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வங்கிகள் வழங்கும் கடன் தொகையில் கீழ்க்கண்ட செலவினங்கள் முழுமையாக அடங்கும்.கல்லூரியில் கட்ட வேண்டிய கல்வித் தொகை.தேர்வுக் கட்டணம், புத்தகம் மற்றும் ஆய்வகக் கட்டணம்.விடுதி மற்றும் சாப்பாட்டுச் செலவுகள்.மாணவர்களின் கல்விச் சாதனங்கள் மற்றும் சீருடைகள்.
படிப்புக்கான கம்ப்யூட்டர் வசதி மற்றும் புராஜெக்ட் செலவினங்கள்.
 
RAWALIKADate: Sunday, 18 May 2014, 7:22 PM | Message # 2
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அவசியமானவை!

 இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகளைத் தேர்வு செய்திருக்க வேண்டும்.
அரசின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்திருக்க வேண்டும்.பிளஸ்2
மதிப்பெண்கள் கூட்டு சதவிகிதத்தின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி.
பிரிவினராக இருந்தால் 50 சதவிகிதமாகவும், மற்றப் பிரிவினருக்கு 60
சதவிகிதமாகவும் இருத்தல் அவசியம்.

உத்தரவாதம் தேவையில்லை!

ரூ.4 லட்சம் வரை எந்தவொரு உத்தரவாதமும் தேவையில்லை.
ரூ.4.75 லட்சம் ரூபாய் வரை பெற்றோர்களில் ஒருவரோ அல்லது மூன்றாம் நபரோ தனிநபர்
உத்தரவாதம் தரவேண்டும்.ரூ.7 லட்சத்துக்கு அதிகம் என்கிறபோது தன்வசம்
இருக்கும் சொத்துக்களில் ஏதாவது ஒன்றை பிணையமாக வைக்க வேண்டும் (உள்நாடு
மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் எல்லாருக்கும்  இது
பொருந்தும்).



திரும்பக் கட்டும் முறைகள்!

கல்விக் கடனுக்கான அசலையோ அல்லது வட்டியையோ படிக்கிற காலத்தி லேயே கட்டவேண்டும் என
எந்த வங்கியும் சொல்வதில்லை. படித்து முடித்து ஓராண்டு ஆனதும் அல்லது வேலை
கிடைத்து ஆறு மாதம் கழித்து, இதில் எது முதலில் வருகிறதோ, அன்றிலிருந்து
வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த ஆரம்பித்தால் போதும்.

முழுக் கடனையும் திருப்பிச் செலுத்தக் குறைந்தது ஐந்து ஆண்டுகள் அவகாசம்
தரப்படும். படித்து முடித்தபின் வேலை செய்யும் நிறுவனத்தின் மதிப்பு,
வாங்கும் சம்பளம் அடிப்படையில் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் வரை அவகாசம்
தரப்படும். இந்த முடிவு வங்கிக்கு வங்கி மாறுபடும்.

படிக்கும்போது கட்ட தேவை யில்லை!

கல்விக் கடன் வாங்கும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கு
குறைவாக இருந்தால், அவர்களின் வருமான சான்றிதழை வங்கியிடம் சமர்ப்பிக்க
வேண்டும். வருமான சான்றிதழை ஆரம்பத்தில் சமர்ப்பித்தால் போதுமானது. மாணவன்
படிக்கும் காலத்தில் வாங்கும் கடனுக்கான வட்டியை பெற்றோர்கள் கட்டவேண்டிய
அவசியம் கிடையாது. அந்தக் கடனுக்கான வட்டியை மத்திய அரசாங்கம்
வங்கிகளுக்குச் செலுத்திவிடும்.

சலுகை!

இடைவிடாமல் சரியாகக் கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு சதவிகித
வட்டி சலுகை தரப்படும். பொதுவாகவே, கல்விக் கடனுக்கான வட்டி விகிதத்தில்
மாணவிகளுக்கு 0.5% சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.
வரிச் சலுகை!

திரும்பச் செலுத்தும் கல்விக் கடனுக்கு வட்டிக்கு மட்டும் 80இ பிரிவின் கீழ்
வரிச்சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்குக் கிடையாது. யாருக்காகக்
கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குத்தான் வரிச்சலுகை கிடைக்கும். கடனை
திரும்பச் செலுத்த ஆரம்பித்து எட்டு ஆண்டுகள் வரை கல்விக் கடனுக்கான
வட்டிக்கு வரிச் சலுகை பெறலாம்.
எச்சரிக்கை!

கல்விக் கடன் வாங்கிப் படிக்கும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை
ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு இடையே வங்கி மேலாளரிடம் காட்ட வேண்டும். ஏதேனும்
ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் போனால், மேற்கொண்டு தரவேண்டிய கடன் தொகை
நிறுத்தப்படலாம். மீண்டும் அந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற்றபிறகே
வங்கியிடமிருந்து கல்விக் கடனை எதிர்பார்க்க முடியும்.

கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தினாலோ, ஒழுங்கீனமாக நடந்துகொண்டாலோ, கல்லூரி
யிலிருந்து விலக்கப்பட்டாலோ கல்விக் கடன் நிறுத்தப்படும். அப்படி
நிறுத்தப்பட்டால் அதுவரை வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்த
வேண்டியிருக்கும்.

கட்டாமல் போனால்..?

கல்விக் கடனை திரும்பக் கட்டாமல் போனால், நீதிமன்ற நடவடிக்கை, பாஸ்போர்ட் முடக்கம்
என்று எல்லா நடவடிக்கைகளையும் வங்கி எடுக்க முடியும். அவ்வளவு ஏன், கடனை
திருப்பிக்கட்ட மறுப்பவர் பணி செய்யும் நிறுவனத்தைகூட வங்கி அணுகி, கடனை
கட்டச் சொல்லலாம்.

கல்விக் கடன் வாங்கிப் படித்த மாணவர், படித்து முடித்தபின் வேலை கிடைக்காவிட்டால், அது தொடர்பான விவரத்தை சம்பந்தப்பட்ட
வங்கியில் தெரிவித்தால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம்
நீட்டிக்கப்படும்.

மறுக்கப்படுவதற்கான காரணங்கள்!

கல்விக் கடன் தர சில வங்கிகள் தயக்கம் காட்டுவது ஏன் என ஓய்வு பெற்ற வங்கி மேலாளர்
ஒருவரிடம் கேட்டோம்.  ''வங்கிகள் சிலருக்கு கல்விக் கடன் தரமறுப்பது
உண்மையே. ஆனால், எல்லாருக்கும் கல்விக் கடன்கள் தர மறுப்பதில்லை. கல்விக்
கடனை திரும்பக் கட்டுவதற்கு உத்தரவாதம் இல்லை என்பதாலேயே பெரும்பாலான
வங்கிகள் கல்விக் கடனுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.

கல்விக் கடன் என்பது நமது பிறப்புரிமை. அந்த உரிமையைப் பறிக்கவோ, பறிகொடுக்கவோ
வேண்டாம். அதேசமயம், வாங்கும் கடனை திருப்பிச் செலுத்த வேண்டியதும் நமது
கடமையே.

ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் கல்விக் கடன் வாங்கினால் அதை திரும்பக் கட்டத் தேவையில்லை என்றுதான் நினைக்கிறோம். இந்த எண்ணம்
தவறானது'' என்றவர், சில முக்கியமான விஷயங்களையும் சொன்னார்.

''கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் தந்தையோ, பெற்றோரில் ஒருவரோ அந்த
வங்கியில் ஏற்கெனவே ஏதோ ஒரு கடன் பெற்று அதைச் சரிவரத் திருப்பிச்
செலுத்தாமல் இருந்தால்  கடன் மறுக்கப்பட வாய்ப்பு அதிகம்.

மேலும், மாணவரின் குடும்பத்தில் ஏற்கெனவே ஒருவர் கல்விக் கடன் பெற்று அதைத்
திருப்பிச் செலுத்தாமல் இருந்தாலோ, கல்விக் கடன் கேட்கும் மாணவர் குறைவான
மதிப்பெண் எடுத்திருந்தாலோ, அங்கீகரிக்கப்படாத கல்வி மற்றும் கல்வி
நிறுவனங்களைத் தேர்வு செய்திருந்தாலோ கல்விக் கடன் மறுக்கப்படலாம்.  

ஆனால், எல்லாச் சான்றிதழ் களையும் தந்தபிறகும் கல்விக் கடன் நிராகரிக்கப்பட்டால்,
அதற்கான காரணத்தைச் சரியாகச் சொல்லவில்லை என்றால், சட்டபடி அணுகுகிற உரிமை
மாணவனுக்கு உண்டு'' என்றார்.படங்கள்:  ர.சதானந்த்.
 
RAWALIKADate: Sunday, 18 May 2014, 7:28 PM | Message # 3
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
தீர்வு தரும் 'வாய்ஸ் ஆஃப் இந்தியன்’!

கல்விக் கடன் கிடைக்காத மாணவர்களுக்கு உதவுவதற்கென்றே செயல்பட்டு வருகிறது 'வாய்ஸ் ஆஃப் இந்தியன்’ என்கிற பொதுநலச் சேவை நிறுவனம். சென்னை பிராட்வேயில் இயங்கிவரும் 'வாய்ஸ் ஆஃப் இந்தியன்’ நிறுவனத்தை இயக்கிவரும் தீபக் என்பவரை சந்தித்துப் பேசினோம்.

''வாய்ஸ் ஆஃப் இந்தியன் என்னும் அமைப்பானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்.டி.ஐ.) அரசுத் துறை சம்பந்தமான மக்கள் பிரச்னைக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் மூலம் நானும் என் நண்பர்கள் சுரேஷ் குமார் மற்றும் ராஜேந்திர பிரசாத் ஆகிய மூவரும் சேர்ந்து ஆர்.டி.ஐ மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்கிற தெளிவை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறோம். ஓய்வு பெற்ற தாசில்தார் பாலசுப்ரமணியன் மற்றும் சிவராஜ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, சென்னை, வேலூர், காஞ்சிபுரம், மதுரை என நான்கு நகரங்களில் இயங்கி வருகிறது'' என்றார் தீபக்.
சந்திக்கும் பிரச்னைகள்!

இந்த அமைப்பின் இன்னொரு முக்கியஸ்தரான சுரேஷ் குமார், 'சென்னையில் 1 மற்றும் 15-ம் தேதிகளிலும், மதுரையில் மாதத்தின் முதல் சனிக்கிழமையிலும் கல்விக் கடன் பெறுவதற்கான  ஆலோசனை தரும் கூட்டத்தை,  நாங்கள் நடத்துகிறோம்.


இந்த உதவி மையத்தின் மூலம், வங்கிகள் கல்விக் கடன் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தைத் தராமல் இருப்பது;  விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தும் 30 நாட்களுக்குள் கடனை வழங்காமல் மாதக் கணக்கில் எந்தப் பதிலும் தராமல் இருப்பது; படிக்கத் தேவையான கட்டணத்தைவிடக் குறைந்த அளவு கடன் வழங்குவது; படிக்கும்போதே வட்டி செலுத்துமாறு வற்புறுத்துவது ஆகிய பிரச்னைகளுக்கு ஆர்.டி.ஐ சட்டம் மூலம் விண்ணப்பித்து, அதற்கான தகுந்த பதில் பெற அவர்களுக்கு உதவுவோம். பாதிக்கப்பட்டவர்கள் பயனடைய வழிநடத்துவது மட்டுமே எங்கள் வேலை.

சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து எங்கள் பார்வைக்கு அதிகமான புகார்கள் வந்துள்ளன. கடந்த மூன்று வருடங்களாக இயங்கிவரும் வாய்ஸ் ஆஃப் இந்தியா இதுவரை மட்டும் மொத்தம் 12,000 பேருக்கு கல்விக் கடன் பெறுவதில் உதவி செய்திருக்கிறது'' என்றார் அவர்.
படம், தகவல்: ரெ.சு.வெங்கடேஷ்
 
shanDate: Sunday, 18 May 2014, 10:40 PM | Message # 4
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஹாய் ரவளி,
அருமையான தகவல்கள் ........
 
NathasaaDate: Monday, 16 Jun 2014, 9:43 AM | Message # 5
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
thnQ for this valid Infos viji sis
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » கல்விக் கடன்... கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! (நன்றி விகடன்)
  • Page 1 of 1
  • 1
Search: