பள்ளிப் பண்ணைகள்! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » பள்ளிப் பண்ணைகள்! (பள்ளிப் பண்ணைகள்! - ரிப்போர்ட்)
பள்ளிப் பண்ணைகள்!
RAWALIKADate: Thursday, 30 Jan 2014, 8:45 AM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
பள்ளிப் பண்ணைகள்!வதைபடும் மாணவர்கள்

பாரதி தம்பி, ஓவியம்: ஹாசிப்கான், படம்: எம்.விஜயகுமார்


இந்தப் பக்கம் கோழிப் பண்ணைகள்... அந்தப் பக்கம் தனியார் பள்ளிகள்...

இவை இரண்டும்தான் நாமக்கல் மாவட்டத்தின் இரு பெரும் வர்த்தக மையங்கள்! இங்கு மழைக் கால ஈசல்களைப் போல முளைத்து இருக்கும் தனியார் பள்ளிகளில், மாநிலம் முழுவதும் இருந்தும் பிள்ளைகளைக் கொண்டுவந்துகொட்டுகின்றனர் பெற்றோர்கள். ப்ளஸ் ஒன்-னுக்கு ஒரு லட்சம், ப்ளஸ் டூ-வுக்கு இரண்டு லட்சம் என்று தொடங்கி, சில பள்ளிக்கூடங்கள் 10 லட்சம், 20 லட்சம் வரையிலும் கட்டணம் வசூலிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் பள்ளியில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் ஒரே சமயத்தில் 40 கோடி ரூபாய் பிடிபட்டது என்பதைவைத்தே, இந்த வசூல் வேட்டையின் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ளலாம்.

இப்படி பணக்காரர்களும் நடுத்தர வர்க்கத்தினரும், லட்சம் லட்சமாகப் பணத்தைக் கொண்டுவந்து கொட்ட... மறுபுறம் அதை வாங்கிக் கல்லாவில் கொட்டிக்கொண்டு, அந்தப் பிள்ளைகளைப் பிணமாகத் திருப்பி அனுப்புகின்றன சில பள்ளிக்கூடங்கள்.

2013-14-ம் கல்வி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், நாமக்கல் மாவட்டத்தின் தனியார் பள்ளிகளில் படித்த நான்கு மாணவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். தூக்கிட்டுக்கொண்டும், பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டும் அவர்கள் உயிரற்ற சடலமாகக் கிடத்தப் பட்டிருக்கும் காட்சியைப் பார்க்கப் பகீரென்று இருக்கிறது.

பெற்று வளர்த்து ஆசை ஆசையாகப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட பிள்ளை, சடலமாக வீடு திரும்பும் நாளில், அந்தத் தாயின் வயிறு பற்றி எரியாதா? தகப்பனின் மனம் வெம்பித் துடிக்காதா? தன்னை விட தன் பிள்ளை ஒரு படியேனும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக, சொத்துகளை அடகு வைத்து பள்ளிக் கட்டணம் செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினர் அவர்கள். கண்ணீர்விட்டுக் கதறி அழுது, 16-ம் நாள் காரியம் முடித்து காலம் எல்லாம் மகளின்/மகனின் நினைவுகளுடன் நடைபிணங்களாக முடங்கிப் போகின்றனர்.

லட்சம் லட்சமாகப் பணத்தையும் பிடுங்கிக்கொண்டு, பிள்ளைகளின் உயிரையும் பலிகொண்ட தனியார் பள்ளிகளின் மதில் சுவர்களைக்கூட அவர்களின் சோகம் தீண்டுவது இல்லை. ஆனால், இவர்களிடையே 'என் மகனின் சாவுக்குக் காரணமானவர்களைத் தண்டித்தே தீருவேன்!’ என்று வைராக்கியமாகப் போராடிக்கொண்டிருக்கிறார் வழக்குரைஞர் மாரிமுத்து.




Message edited by RAWALIKA - Thursday, 30 Jan 2014, 8:49 AM
 
RAWALIKADate: Thursday, 30 Jan 2014, 8:50 AM | Message # 2
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
பிணமாகத் திரும்பும் பிள்ளைகள்...

சங்ககிரியைச் சேர்ந்த மாரிமுத்துவுக்கு இரண்டு மகன்கள். இருவரும் நாமக்கல் குறிஞ்சி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தனர். மூத்த மகன் இப்போது சென்னையில் மருத்துவம் படிக்கிறார். இளைய மகன் மோகன்ராஜ், இந்தப் பள்ளியில் ப்ளஸ் டூ படித்தார். வீட்டில் இருந்து ஒரு மணி நேரப் பயண தூரத்தில்தான் பள்ளி என்றபோதிலும், உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கிப் படித்தால் பையன் நல்ல மதிப்பெண் எடுப்பான் என்று நம்பி, விடுதியில் சேர்த்துவிட்டார். ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி மாரிமுத்துவிடம் பிணமாகத்தான் மோகன்ராஜ் ஒப்படைக்கப் பட்டான்.

''செப்டம்பர் 13-ம் தேதி இரவு எனக்கு ஸ்கூல்ல இருந்து போன். 'உங்க பையன் படிப்பு பத்திப் பேசணும். நாளைக்கு ஸ்கூலுக்கு வந்திருங்க’னாங்க. கொஞ்ச நேரத்துல மறுபடியும் போன். 'உங்க பையனுக்கு உடம்பு சரியில்லை. நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம்’னு சொன்னாங்க. நான் பதறியடிச்சுப் போனேன். அங்கே ஒரு வீல் சேரில் என் பையனைப் பிணமா உட்காரவெச்சி ருந்தாங்க. பள்ளிக்கூட ஆட்கள் யாரையும் காணலை. 17 வருஷமா நாங்க உயிருக்கு உயிரா வளர்த்த பையன் சார்... உயிரை எடுத்துட்டாங்க. என்ன ஏதுனு பதில் சொல்லக்கூட நாதி இல்லை.

ஸ்கூலுக்கு ஓடினேன்.'ரெண்டு குரூப் பையன்களுக்கு நடுவுல சண்டை. இவன் விலக்கிவிட்டிருக்கான். அதில் ஒரு குரூப் இவனைத் திட்டியிருக்கு. மனசு உடைஞ்சுபோயி ஃபேன்ல தூக்கு மாட்டித் தற்கொலைப் பண்ணிக்கிட்டான்’னு அலட்சியமாப் பதில் சொல்றாங்க. என்னை ஸ்கூல் உள்ளேயே விடலை. பிறகு வக்கீல்கள், நீதிபதி எல்லோரையும் கூட்டிக்கிட்டு உள்ளே போய்ப் பார்த்தா அவன் தூக்குப் போட்டதா சொல்ற ஃபேன்ல தூசிகூட கலையலை. ஃபேன் வளையலை. அறுத்து எடுத்தோம்னு காட்டின நைலான் கயிறு, ரெண்டு பக்கமும் முடிச்சுப் போட்டு புதுசா இருக்கு. கண்ணாடி வழியா பார்த்து உடைச்சோம்னு சொல்றாங்க. ஆனா, உடைஞ்ச கண்ணாடித் துண்டு ஜன்னலுக்கு வெளியே கிடக்கு. வெளியில் இருந்து உடைச்சா கண்ணாடித் துண்டு உள்ளேதானே விழணும்?

இது எல்லாத்தையும் கேட்டா, 'தப்பு நடந்திருச்சு. பெரிசுபடுத்தாம விட்டுருங்க.. உங்களுக்கு என்ன வேணுமோ செய்றோம்’னு பேரம் பேசுறாங்க. இப்பவும், அவங்க திட்டம் போட்டு என் பையனை அடிச்சுக் கொன்னுட்டாங்கனு சொல்லலை. அடிச்சதுல படாத இடத்துல பட்டுக்கூட அவன் இறந்து இருக்கலாம். இல்லை, வேறு எதுனா நடந்திருக்கலாம். ஆனா, அவன் எப்படிச் செத்தான்? அது எனக்குத் தெரிஞ்சாகணும்.

அதைத் தெரிஞ்சுக்கிறது அவ்வளவு சுலபமா இல்லை. எஃப்.ஐ.ஆர். போடவே பெரும் போராட்டமாயிருச்சு. பிறகு ஒரு வழியா, ஸ்கூல் கரஸ்பாண்டென்ட் தங்கவேலுவைக் கைது பண்ணினாங்க. 28 நாட்களுக்குப் பிறகு, இப்போ அவர் ஜாமீனில் வந்துட்டார். நான் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கேட்டு மனு போட்டிருக்கேன்'' என்ற மாரிமுத்து, இன்னும் தன் மகன் மோகன்ராஜின் உடலை அடக்கம் செய்யவில்லை. சடலத்தைப் பதப்படுத்தி கண்ணாடிப் பெட்டி ஒன்றில் வைத்து பூமிக்குள் புதைத்து வைத்திருக்கிறார்.

நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து மகிழ்ந்திருக்க வேண்டிய மோகன்ராஜ் என்கிற இளைஞனின் சடலம், இப்போது நீதிக்காகப் பூமிக்குள் காத்திருக்கிறது.



''இந்தப் பகுதியின் தனியார் பள்ளிகளில் நிகழும் மர்ம மரணங்கள் வெளி உலகுக்குத் தெரியாமல் மறைக்கப்படுகின்றன. உயிர் இழந்த மாணவரின் குடும்பத்தாருக்குக் கோடிக்கணக்கில் பண பேரம் பேசப்படுகிறது. எதிர்த்துப் பேசுபவர்கள் மிரட்டப்படுகின்றனர். மற்ற பெற்றோரோ, 'நாம் வாய் திறந்தால் நம் பிள்ளையை ஏதேனும் செய்துவிடுவார்களோ?’ என்று அச்சத்தில் வாய் மூடிக்கொள்கின்றனர்.

இதனால், சிறைச்சாலைகளைப் போல, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளைப் போல, பிரமாண்டமாக விரிந்துகிடக்கும் நாமக்கல் தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றிலும் பல்லாயிரம் மாணவர்கள் இறுகிய மனங்களுடன், தற்கொலைக்கு முந்தைய மனநிலையுடன் நடமாடிக்கொண்டிருக்கின்றனர். தன் பிள்ளை படிக்கும் பள்ளிக்கூடத்தில் இருந்து போன் வந்தால், 'என்னமோ ஏதோ’ என்று பதறித் துடித்துத்தான் போனை எடுக்கிறார்கள் பெற்றோர்கள்'' என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் ஏ.டி.கண்ணன்.


Message edited by RAWALIKA - Thursday, 30 Jan 2014, 8:55 AM
 
RAWALIKADate: Thursday, 30 Jan 2014, 8:55 AM | Message # 3
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
பள்ளிகளில் நடப்பது என்ன?


எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதில் தொடங்குகிறது இதன் வரலாறு. 1990-களுக்குப் பிறகு இது அதிகரித்தது. சாராய வியாபாரிகள், கந்துவட்டி வசூலிப்பவர்கள், ஊரை அடித்து உலையில் போட்டவர்கள் எல்லாம் கல்வித் தந்தைகளாக உருவெடுத்தார்கள்.

விவசாயமோ, வேறு இயற்கை வளங்களோ இல்லாத நாமக்கல் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளைத் தொடர்ந்து பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை பெருத்தது. கோழிப்பண்ணை முதலாளிகள், பள்ளிக்கூடங்களைத் திறந்து கோழிப்பண்ணைகளைப் போலவே பள்ளிக்கூடங்களையும் நடத்தினார்கள். 'கோழி குருடா இருந்தா என்ன... குழம்பு ருசியா இருக்கா?’ என்று பழமொழி சொல்வார்களே... அதுபோலவே, மாணவர்களை அவர்கள் எப்படிக் கொடுமைப்படுத்தினால் என்ன... நல்ல மதிப்பெண் எடுக்கிறானா... என்பது மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டது!

இப்படி ஊதிப் பெருக்கப்பட்ட நாமக்கல் தனியார் பள்ளிகள், இன்று நம்ப முடியாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளன. ஒவ்வொரு அட்மிஷன் நேரத்திலும், பணம் எண்ணும் இயந்திரத்துடன் வங்கியில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கே வந்துவிடுகிறார்கள். ஏனெனில், அந்தப் பணத்தை வங்கிக்குக் கொண்டுசென்றால் அள்ளி மாளாது; எண்ணி மாளாது. இதனால் வங்கியே அவர்களைத் தேடி வருகிறது.

குறிப்பிட்ட ஒரு பள்ளியில் படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை மட்டும் 23 ஆயிரம் பேர் என்றால், அதன் பிரமாண்டத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். மாணவர்கள் கணக்கு தனி. அந்தப் பள்ளி மாணவர்களுக்கு என 500 பள்ளிப் பேருந்துகள் இருக்கின்றன. அவற்றுக்கு டீசல் பிடிப்பதற்கு என்றே பள்ளிக்குள் ஐந்து டீசல் பங்குகள் இருக்கின்றன. 'டீலக்ஸ், லக்ஸுரி, ஏ.சி., நான் ஏ.சி’ என வகை வகையாக விடுதிகள் இருக்கின்றன.


வியாபாரப் போட்டி!


பள்ளிகளுக்கு இடையில் போட்டி அதிகரித்துவிட்டதால் 'மற்ற பள்ளிகளைவிட எங்களுடையதுதான் சிறந்தது’ என்று நிரூபிக்க போட்டிப்போடுகின்றனர். கோடிக் கணக்கான ரூபாய்க்கு விளம்பரங்களை வழங்குகின்றனர். மாநிலம் முழுக்க உள்ள அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர் களைத் தேடிப் பிடித்து, 'எல்லா செலவையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்’ என்று அழைத்து வந்து, தங்கள் பள்ளியில் அனுமதித்துக்கொள்கின்றனர். அப்போதுதானே, அவர்களைக் காட்டி மற்றவர்களை ஈர்க்க முடியும்?

ஒரு பள்ளியின் முதலீடு என்பது, ஏக்கர்கணக்கான நிலமும், கட்டடங்களும், பேருந்துகளும் மட்டுமல்ல; ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் ப்ளஸ் டூ-வில் என்ன ரிசல்ட் கொடுக்கிறார்கள் என்பதும்தான். இவையே அந்தப் பள்ளியின் தர வரிசையை மதிப்பிடுகின்றன. அதனால்தான் நன்றாகப் படிக்கும் மாணவர்களாகத் தேடிப் பிடித்துச் சேர்க்கின்றனர். சேரும் அனைவரையும் சக்கையாகப் பிழிந்து படிக்கச் சொல்வதும் இதனால்தான்.

''நள்ளிரவு 1 மணி, 2 மணிக்கு சாலையில் இருந்து பள்ளிகளின் விடுதிகளைப் பார்த்தால், விளக்கு வெளிச்சம் தெரியும். அசந்து தூங்கினால்கூட அடித்து எழுப்பிவிட்டுப் படிக்கச் சொல்கின்றனர். ஓர் இயந்திரத்தைப் போல மாணவர்களை வேலை வாங்குகின்றனர்'' என்கிறார் கண்ணன்.

சரி, இப்படி எல்லாம் கசக்கிப் பிழிந்து நல்ல ரிசல்ட் எடுக்க வேண்டும் என மெனக்கெடுவது எதற்காக? மாணவனின் எதிர்கால நன்மைக் காகவா? 'நிறையப் பணம் வாங்குகிறோம். அந்தக் காசுக்கேனும் இவர்களை ஸ்டேட் ரேங்க் எடுக்க வைத்துவிட வேண்டும்’ என்ற தார்மீகப் பொறுப்பு உணர்ச்சியா? இரண்டும் இல்லை. இந்த ஆண்டு நல்ல ரிசல்ட் வந்தால், அடுத்த ஆண்டு கல்விக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம். அதற்காகத்தான் அடித்து எழுப்பிப் படிக்கச் சொல்கிறார்கள்!

ஆனால், அந்த அப்பாவி மாணவர்களோ இளம் குருத்துகள். 16, 17 வயது என்பது, வெறுமனே புத்தக எழுத்துகளைப் படித்துக்கொண்டிருப்பதற்கான வயது அல்ல. உற்சாகத்துடன் ஓடியாடி விளையாடி, நண்பர்களுடன் குதூகலமாகச் சிரித்து மகிழ வேண்டிய பருவம். இந்தத் தனியார் பள்ளிகளிலோ... விளையாட்டு என்பது துளியும் கிடையாது. இப்படி முடக்கிப்போட்டு புத்தகப் புழுக்களாக அவர்களை மாற்ற முயலும்போதுதான் அவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். விடலை வயதும், வளர் இளம் பருவமும் எதிர்மறைச் சிந்தனைகளுக்கு இட்டுச்செல்கின்றன. இறுதியில் அது தற்கொலை என்னும் மீளாத் துயரத்தில் முடிகிறது.



ஒருவேளை அந்த வயதுக்கே உரிய துடுக்குடன் அவர்கள் எதிர்க்க முற்பட்டால்? அப்போது அதன் பெயர் 'மர்ம மரணம்’! அதையும் தாண்டி பிரச்னைகள் ஏற்பட்டால், தடுத்து நிறுத்த பெரும்பாலான தனியார் பள்ளிகளில் 'பவுன்சர்கள்’ இருக்கிறார்கள். தனியார் 'பார்’களில் குடித்துவிட்டுக் கலாட்டா செய்பவர்களைத் தூக்கி வெளியில் போட கட்டுமஸ்தான நபர்களை வேலைக்கு வைத்திருப்பார்கள். அவர்களுக்கு 'பவுன்சர்கள்’ என்று பெயர். அதுபோலவே இந்தப் பள்ளிகளும் பவுன்சர்களைப் பணிக்கு வைத்துள்ளன.


Message edited by RAWALIKA - Thursday, 30 Jan 2014, 8:59 AM
 
RAWALIKADate: Thursday, 30 Jan 2014, 8:59 AM | Message # 4
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அது ஒரு மர்ம உலகம்!

இந்தப் பள்ளிகளுக்குள் யாரும் உள்ளே நுழைய முடியாது. டி.வி. பார்க்கவோ, செய்தித்தாள் வாசிக்கவோ அனுமதி இல்லை. வீட்டாருடன் செல்போனில் பேச முடியாது. வெளியே என்ன நடக்கிறது, வெளி உலகம் எப்படி இயங்குகிறது... எதுவும் அந்த மாணவர்களுக்குத் தெரியாது. ஒரு ரூபாய் காயின் போன் பூத்கூட உள்ளே இருக்காது.

தனது பிள்ளையைப் பறிகொடுத்த மாரிமுத்து சொல்வதைக் கேளுங்கள். ''நம்ம பிள்ளையைப் பார்க்கணும்னா, ஸ்கூலுக்குப் போய் மனு எழுதிக் கொடுத்துட்டு காத்திருக்கணும். சிறையில் கைதியைப் பார்க்கி றோமே... அதுபோல. ஒருமுறை நான் இப்படி எழுதிக் கொடுத்துட்டுக் காத்திருந்தேன். ரெண்டு மணி நேரத்துக்கும் மேல ஆச்சு. வெறுத்துப்போயி பக்கத்துல உட்கார்ந்து இருந்தவர்கிட்ட, 'நான் ஒரு வக்கீல். என்னையே இப்படி காக்கவைக்கிறாங்களே’னு சொன்னேன். அவர், 'நான் புதுக்கோட்டை ஜட்ஜ்’னு சொன்னார். எனக்கு முன்னாடி இருந்தே ரொம்ப நேரமாத் தன் பையனைப் பார்க்க உட்கார்ந்திருக்கார். நீதிபதியா இருந்தாலும், கலெக்டரா இருந்தாலும் இதுதான் நிலைமை. ஆளும் கட்சி அமைச்சர், மாவட்டச் செயலாளர் யாரும் இவங்களை எதுவும் பண்ண முடியாது. எல்லாருக்கும் தேர்தல் நிதி கொடுக்குறாங்களே... அப்புறம் என்ன செய்ய முடியும்?'' என்று இவர் சொல்வது இந்தப் பிரச்னை யின் அரசியல் கோணத்தை வெளிப்படுத்துகிறது.

இது ஒரு கூட்டுக்கொள்ளை!

தனியார் பள்ளிகளின் கல்விக்கொள்ளை என்பது, அவர்களின் சாமர்த்தியத்தால் மட்டும் நடைபெறுவது இல்லை. அதற்கு கல்வித் துறை முதல் காவல்துறை வரை பல்வேறு துறை அரசு அதிகாரிகளும், அனைத்துக் கட்சி அரசியல் வாதிகளும் துணை போகின்றனர். அதனால்தான் அவர்கள் சட்டத்தைக் கால் தூசிக்குச் சமமாக மதிக்கிறார்கள்.

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் தொடர்பான சிங்காரவேலர் கமிட்டி, மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு வகுப்புக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நெறிமுறை வகுத்து அறிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 151 தனியார் பள்ளிகளுக்கான வகுப்புவாரியான கட்டண விகிதத்தை, தமிழக அரசின் கல்வித் துறை இணையதளத்திலேயே காணலாம். இதன்படி ப்ளஸ் டூ-வுக்கான அதிகபட்சக் கட்டணம் 21 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அதிலும் பெரும்பாலான பள்ளிகளுக்கு ரூபாய் 7,000, 10,000-தான் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் நடைமுறையில், லட்சக்கணக்கில் பணம் பிடுங்குகின்றனர். எதற்கும் பில் கிடையாது. இதை யார் கண்காணிப்பது? யார் நடவடிக்கை எடுப்பது? கல்வித் துறைதான் செய்ய வேண்டும். ஆனால், செய்வது இல்லை.

மாணவர்களை பள்ளி நிர்வாகம் வன்கொடுமை செய்வதாகக் காவல் துறைக்குப் போனால், அவர்கள் வழக்குப் பதிவுசெய்வது இல்லை. 'அது கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் வரும்’ என்கிறார்கள். கல்வித் துறையிடம் கேட்டால், 'பள்ளி வகுப்பறையில் எதுவும் நடந்தால்தான், நாங்கள் நடவடிக்கை எடுப்போம். விடுதியில் நடப்பது எங்கள் வரம்புக்குள் வராது’ என்கிறார்கள். இப்படி வெவ்வேறு வகைகளில் அனைத்து அரசுத் துறைகளும் கல்விக் கொள்ளையர்களுக்குத் துணைபோகின்றன.

'ஆனால் பெற்றோர்கள் விரும்பித்தானே சேர்க்குறாங்க. யாரும் கையைப் பிடிச்சு இழுக்கலையே..’ என்று சிலர் கேட்கக்கூடும். கையைப் பிடித்து இழுக்கவில்லை; மனதைப் பிடித்து இழுக்கின்றனர். தனியார் பள்ளிக்கூடங்கள் மட்டுமே தரமான கல்வியைத் தர முடியும் என்று மக்களை நம்பவைத்துள்ளனர். அந்த நம்பிக்கை உண்மையா, பொய்யா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் கல்வி என்பது நாகரிகத்தின் அடையாளம். ஆனால், இந்தத் தனியார் கல்வி நிலையங்களில் பெற்றோர்களை நடத்தும் விதம் அநாகரிகத்தின் உச்சம். கரஸ்பாண்டென்ட் அறை வாசலில் அடிமைகள் போல காத்துக்கிடக்கின்றனர் பெற்றோர்கள். பெற்ற பிள்ளையை அனுப்பிவைத்து, சம்பாதித்த பணத்தை அள்ளிக் கொடுத்து எதற்கு பயந்து, பணிந்துபோக வேண்டும்?

வேறு சிலர், 'நாமக்கல் பள்ளிக்கூடங்களைப் பத்தி நீங்க என்ன வேணும்னா சொல்லலாம். ஆனா, அங்கே படிக்கிற பசங்க நல்ல மார்க் எடுக்கிறாங்களே? நல்ல ரிசல்ட் வருதே?’ என்று சொல்லக்கூடும். முதல் விஷயம், மாநிலம் முழுவதும் 400-க்கு மேல் மதிப்பெண் எடுக்கும் படிக்கும் திறன் உள்ளவர்கள்தான் இங்கு சேர்க் கப்படுகின்றனர். அதையும் தாண்டி, ஒரு காட்டு யானையை சங்கிலி போட்டு கோயிலில் கட்டிவைத்து சில்லறை வாங்கப் பழக்கப்படுத்து வதைப் போல... இரவும் பகலும் ஒரே அறையில் அடைத்து வைத்து படிப்பு மட்டுமே வேலை என்றால், ரிசல்ட் வரத்தான் செய்யும்.


Message edited by RAWALIKA - Thursday, 30 Jan 2014, 9:03 AM
 
RAWALIKADate: Thursday, 30 Jan 2014, 9:04 AM | Message # 5
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
 
RAWALIKADate: Thursday, 30 Jan 2014, 9:04 AM | Message # 6
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
உடனடி நடவடிக்கை அவசியம்!

நல்ல மதிப்பெண் எடுத்து வேலைக்குச் செல்வது மட்டுமே ஒரு மாணவனின் தகுதிக்கான அளவுகோல் அல்ல. உலக நடப்புத் தெரியாமல், ஆண்-பெண் நட்பு அறியாமல், விளையாடாமல், சிரிக்காமல் வெறுமனே படிக்க மட்டும் செய்யும் இவர்கள், நாளை கல்லூரிக்குச் செல்லும்போது இரண்டுவிதமான மனநிலைக்கு ஆட்படுகின்றனர். ஒன்று கட்டிக்கிடந்த மாட்டை அவிழ்த்துவிட்டதும் தறிகெட்டு ஓடுவது போல ஒழுக்கக்கேடுகளுக்கு அடிமையாகின்றனர். இல்லையெனில், பள்ளிக்கூடத்தில் உருவாக்கப்பட்ட ஆழ்மன பயம் அப்படியே வடுவாகப் பதிந்து, புற உலகை அதன் இயல்புடன் ஏற்றுக்கொள்ள இயலாமல் தடுமாறுகின்றனர். சமூகம் எப்படி இயங்குகிறது என்பது குறித்த எந்த அறிமுகமும் இல்லாத இந்த மாணவர்கள் படித்து மருத்துவர், பொறியாளர், அரசு அதிகாரிகள், பன்னாட்டு நிறுவன நிர்வாகிகள் என செல்லும்போது... ஒரு பிரச்னையின் பல்வேறு பரிமாணங்களையும் பார்க்காமல் வெறுமனே லாப-நஷ்டக் கணக் காகச் சுருக்கி மதிப்பிடுகின்றனர். உலகத்தை விசாலமாக அணுகுவதற்குரிய சிந்தனைச் செறிவு அவர்களுக்கு இருப்பது இல்லை. நவீன வகுப்பறை என்பது, கால மாற்றங்களை உள்வாங்கியதாக இருக்க வேண்டும். மேலும், மேலும் இறுக்கமான வகுப்பறைகளை உருவாக்குவது எதிர்காலத்துக்குப் பெரும் கேடு.

இந்தப் பின்னணியில் நாமக்கல் தனியார் பள்ளிகளை முறைப் படுத்தும் முயற்சிகளை அரசு விரைவுப்படுத்த வேண்டும். அவர்களின் வரம்பற்ற லாபவெறிக்குப் பலியாகும் மாணவர்களின் உயிர்களைக் காப்பாற்ற இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை அவசியம்!


''தனியார்ல சேர்க்காதீங்க!

''
நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் படித்த மதுரை, வாடிப்பட்டி அருகே குட்டிமேய்க்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசனின் மகன் வெங்கடேஷ், நன்றாகப் படிக்கக்கூடியவன். இவன் அலங்காநல்லூர் அரசுப் பள்ளியில் படித்து 10-ம் வகுப்பு இறுதித் தேர்வில் எடுத்த மதிப்பெண் 444. மருத்துவர் ஆக வேண்டும் என்பது அவனது லட்சியம். இதனால் தங்கள் தகுதிக்கு மீறி ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ-வுக்கு சுமார் 3.5 லட்சம் ரூபாய் கட்டி இந்தப் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள் வெங்கடேஷின் பெற்றோர். கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி மாலையில் பள்ளியில் இருந்து போன் வந்திருக்கிறது. 'இங்கே என்னன்னமோ நடக்குதுப்பா’ என்று அழுதிருக்கிறான். மறுநாள் காலையில் வெங்கடேஷ் வீட்டுக்கு போலீஸ் வந்தது. ''உங்க பையன் ஸ்கூல்ல தூக்குப் போட்டுக்கிட்டானாம்'' என போலீஸ் சொன்னத் தகவலைக் கேட்டு, மொத்தக் குடும்பமும் பித்துப்பிடித்தது போல் துடித்துப்போனது. இப்போது வரையிலும் அவர்கள் பிள்ளையைப் பறிகொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. மீண்டுவிடும் துயரமா அது? ''யய்யா பெத்தவங்களே.. பிள்ளைங்களை உங்கக் கண்ணு முன்னாடி உள்ளூர்ல இருக்குற அரசாங்கப் பள்ளிக்கூடத்துலயே சேர்த்துவிடுங்க. படிக்கிறானோ இல்லையோ... உயிரோடவாச்சும் இருப்பான். எங்கேயோ இருக்குற தனியார் பள்ளிக்கூடத்துல சேர்த்துவிட்டு பிள்ளைங்களைச் சாக விட்டுறாதீங்க. எல்லாம் பணம் பிடுங்கிக் கூட்டம்'' என்று சீனிவாசன் கதறுகிறார் இப்போது.


Message edited by RAWALIKA - Thursday, 30 Jan 2014, 9:06 AM
 
RAWALIKADate: Thursday, 30 Jan 2014, 9:06 AM | Message # 7
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
''மாணவிகளும் மாணவர்களும் பேசிக்கொள்ளக் கூடாது!

ஒழுக்கமான, கட்டுப்பாடான பள்ளி என்ற பெயர்தான் தங்கள் பள்ளியின் நற்பெயரைக் காப்பாற்றும் என்று, தனியார் பள்ளி நிர்வாகிகள் தீர்மானமாக நம்புகின்றனர். அதனால் இந்தப் பள்ளிகளில் ஆண்-பெண் நட்பு அறவே சாத்தியம் இல்லை. நாமக்கல் குறிஞ்சி பள்ளியின் தாளாளர் தங்கவேலுவுடன் நடத்திய உரையாடல் இதைத் தெளிவாக உணர்த்துகிறது.

''மாணவன் மோகன்ராஜ் எப்படி இறந்தான்?''

''தேனியைச் சேர்ந்த ஒரு பையனுக்கும் இவனுக்கும் சண்டை. பள்ளி நிர்வாகத்துக்குத் தெரிய வந்ததும் இருவரையும் விலக்கிவிட்டு, இரண்டு பேரின் பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்து வரச் சொன்னோம். அது எப்படியோ மோகன்ராஜுக்குத் தெரிந்துவிட்டது. பெற்றோருக்குத் தெரிந்தால் அவமானம் என்று நினைத்து, தூக்குப் போட்டுக்கொண்டு இறந்துவிட்டான்!''

''வெங்கடேஷ் இறந்தது எப்படி?''

''2013 டிசம்பர் 31-ம் தேதி, வகுப்பில் தேர்வு விடைத் தாளை மாணவர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தார் ஒரு பெண் ஆசிரியை. அவருக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி, வெங்கடேஷ் கை கொடுத்துள்ளான். டீச்சர் கை கொடுக்க மறுத்தும் விடாமல் வழி மறித்துள்ளான். டீச்சர் அழுதுகொண்டே சென்றுள்ளார். இந்த விஷயம் தெரிய வந்ததும் வெங்கடேஷின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தோம். ஆனால், இரண்டு நாட்களாக அவர்கள் வரவில்லை. இதற்கு இடையில் பள்ளித் தரப்பில் இருந்து பெற்றோரை வரவழைக்கும் விஷயம் தெரிந்து, அந்தப் பையன் தற்கொலை செய்துகொண்டுவிட்டான்!''

''ஒரு மாணவன் ஆசிரியைக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்வது நாகரிமான செயல்தானே?''

''சார், அவர் ஒரு பெண் ஆசிரியை. மாணவிகளும் மாணவர்களும் பேசிக்கொள்ளக் கூடாது என்பது எங்கள் பள்ளியின் கட்டுப்பாடு. இதுபோன்ற அநாகரிகச் செயல்களை அனுமதிக்க முடியாது!''

''3,000 மாணவர்களுக்கும் அதிகமானோர் உங்கள் பள்ளியில் படிப்பதாகச் சொல்கிறீர்கள். எந்த நம்பிக்கை யில் பிள்ளைகளை அனுப்பிவைப்பது?''

''இந்தப் பிரச்னைகளில் எங்கள் தரப்பில் நியாயம் உள்ளது என்பது மற்ற பெற்றோர்களுக்குத் தெரியும். எனினும் மாணவர்களின் மீது இனிமேல் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வோம்!''

பாரம்பரிய வகுப்பறைச் சூழல் மாற்றப்பட்டு ஆண், பெண் நட்பின் மாற்றங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று உலகளாவிய அளவில் பேசப்படும் நிலையில், நமது பள்ளிகள் காலத்தைப் பின்நோக்கி இழுத்துச் செல்கின்றன. அதை 'ஒழுக்கம்’ என்றும் 'கட்டுக்கோப்பு’ என்றும் பறைசாற்றிக்கொள்கின்றன!


Message edited by RAWALIKA - Thursday, 30 Jan 2014, 9:10 AM
 
MeenatchiDate: Thursday, 06 Feb 2014, 10:05 AM | Message # 8
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
hi rawalika,

  Lastweek im also read that story in vikadan.romba pavama iruthathu pa.ipadi koda irupagala ena....


Meenatchi .S
 
RAWALIKADate: Thursday, 06 Feb 2014, 10:37 AM | Message # 9
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
பிராய்லர் பள்ளிகள்...
ஃபாலோ அப் பார்வைகள்பாரதிதம்பி
 நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள், மதிப்பெண்களைக் குவிப்பதற்காக மாணவர்களை மிரட்டி வதைக்கும் அவலம் குறித்து கடந்த இதழில் வெளியான 'பிராய்லர் பள்ளிகள்’ கட்டுரையில் எழுதியிருந்தோம். அதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் இருந்து ஆவேசமும் ஆதங்கமுமான உணர்வுப் பகிரல்கள்!நாமக்கல் பள்ளி ஒன்றில் படித்து, இப்போது சேலத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் பேசினார். அவரது பெயரை குமார் என்று வைத்துக் கொள்ளுங்கள். குரல் உடைந்திருந்தது. திக்கித் திக்கிப் பேசினார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதாகக் கருதினேன். ஆனால், உண்மை அதுவல்ல!''திருச்செங்கோட்டுக்குப் பக்கத்துல இருக்கும் ஒரு பிரைவேட் ஸ்கூல்லதான் படிச்சேன். நீங்க சொல்லியிருந்த எல்லா டார்ச்சரும் எங்க ஸ்கூல்லயும் உண்டு. சுதந்திர தினம், குடியரசு தினங்களுக்குக்கூட லீவு கிடையாது. எந்த நேரமும் படிப்பு, படிப்புதான். ராத்திரி ரெண்டு மணி வரைக்கும்கூட படிக்கச் சொல்வாங்க. ப்ளஸ் ஒன் சேர்ந்த முதல் நாள்ல இருந்து ப்ளஸ் டூ புத்தகத்தைத்தான் படிச்சோம். ப்ளஸ் ஒன் புத்தகங்களை நாங்க பார்த்ததே இல்லை.சின்ன வயசுல எனக்குப் பேச்சு கொஞ்சம் திக்கும். அதைப் பயிற்சி மூலமா கொஞ்சம், கொஞ்சமாக் குறைச்சேன். ஆனா, இந்தப் பள்ளிக்கூடத்துக்கு வந்ததும் அவங்க பண்ண டார்ச்சர் தாங்காம மறுபடியும் எனக்குத் திக்க ஆரம்பிச்சிருச்சு. எதுக்கு எடுத்தாலும் பயப்பட ஆரம்பிச்சேன். திக்குவாய் இன்னும் அதிகமாச்சு. ஒரு பக்கம் ஸ்கூல்ல திட்டு, அடி, பனிஷ்மென்ட்... மறுபக்கம் 'லட்சம், லட்சமாப் பணம் கட்டிப் படிக்கவைக்கிறோம். படிக்கலைனா எல்லாம் வேஸ்ட்டாப் போயிடும்’னு அப்பா-அம்மாவோட சென்ட்டிமென்ட்டல் மிரட்டல்.

'செத்துப்போயிடலாமா’னுகூடத் தோணும். பல நாள் தற்கொலைக்கு முயற்சி பண்ணி, தைரியம் இல்லாம விட்டிருக்கேன். அந்த ஸ்கூல்ல இருந்து வெளியே வந்து இப்போதான் மெதுவா மீண்டு வர்றேன். இந்தத் தனியார் பள்ளிக்கூடங்கள் எல்லாத்தையும் இழுத்து மூடணும் சார். அங்கே படிச்சா மார்க் கிடைக்கலாம்; வேலைகூட கிடைக்கலாம். ஆனா, யாரும் மனுஷனா இருக்க மாட்டாங்க. வாழ்நாள் முழுக்க நடைபிணமாத்தான் இருக்கணும்!'' என்று கண்ணீர் ததும்பப் பேசினார்.
'பிராய்லர் பள்ளி’களில், பெரும்பாலும் வசதியான உயர் நடுத்தர வர்க்கத்தினர்தான் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். அதற்கான பின்னணி, பொருளாதாரக் காரணிகளாக அமைந்திருக்கிறது. இவர்களுக்கு, பொதுவாக எந்த அரசுத் துறைகளின் மீதும் மரியாதை இல்லை. ஆனால், தங்கள் பிள்ளை மருத்துவமோ, பொறியியலோ படிக்க வேண்டுமெனில், அது அரசுக் கல்லூரியில்தான் படிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஏனெனில், அங்குதான் கட்டணம் மிகக் குறைவு. ஒருவேளை பிள்ளைகள் குறைந்த மதிப்பெண் எடுத்து தனியார் மருத்துவ/பொறியியல் கல்லூரிகளில் சேர்க்க வேண்டுமென்றால், 50 லட்சம் முதல் 1 கோடி வரை நன்கொடை அளிக்க வேண்டியிருக்குமே. அதற்குப் பதிலாக நான்கைந்து லட்சம் செலவழித்து நாமக்கல் பள்ளியில் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ சேர்த்துவிட்டால் எப்படியும் ஸ்டேட் லெவல் மதிப்பெண் எடுக்க வைத்துவிடுவார்கள். நல்ல கட்-ஆஃப் வாங்கி அரசுக் கல்லூரியில் இடம் வாங்கிவிட்டால், 50 லட்சம் லாபம். இதுதான் அவர்களின் கணக்கு!இத்தனை வியூகம் வகுக்கும் அவர்கள், ஏனோ பிராய்லர் பள்ளிகளின் நடத்தை மீது மட்டும் கவனம் செலுத்துவதே இல்லை. பிள்ளைகளின் மனநலன் எந்த அளவுக்கு சீர்குலைகிறது என்பதை அவர்கள் கொஞ்சமும் கவனத்தில் கொள்வதே இல்லை. மாநில அளவிலான மதிப்பெண் களுக்காக எத்தகைய துன்பத்தையும் ஏற்றுக் கொள்கின்றனர். மாதம் ஒரு நாள் பிள்ளைகளைச் சந்திக்க பெற்றோர்களுக்கு இரண்டு மணி நேரம் ஒதுக்கப்படும். அந்த இரண்டு மணி நேரக் காட்சியைக் காண நேர்ந்த ஒருவர், அதை இப்படி விவரிக்கிறார்...''அந்த நேரத்துல ஸ்கூல் கேம்பஸ் முழுக்க எங்க பார்த்தாலும் பென்ஸ், ஆடி, ஹம்மர், பி.ம்.டபிள்யூ, ரோல்ஸ்ராய்ஸ்னு உலகத்தோட அத்தனை சொகுசுக் கார்களும் நிக்கும். பிள்ளைகளை அழைச்சுட்டு வந்து கார்ல வைச்சு சாப்பாடு ஊட்டி, வீடியோ கேம்ஸ் விளையாடி, உறவினர்களிடம் செல்போனில் பேசினு... ஒரே அழுகையாக இருக்கும். நேரம் முடிஞ்சதும் கண்ணீருடன் கை அசைத்து விடை பெறுவார்கள். அச்சுஅசலாக ஒரு சிறைக் கைதியை மனு கொடுத்து பார்த்துட்டுப் போற மாதிரியே இருக்கும்!'''சரிங்க.. அரசுப் பள்ளிகள்தான் தரம் இல்லாம மோசமா இருக்கே. தனியார் பள்ளிகள்ல சேர்க்கிறதைத் தவிர வேற என்ன வழி?’ என்று பாவப்பட்ட பெற்றோர்கள் கேட்கலாம். அந்த வழியை நாம்தான் உருவாக்க வேண்டும். தனியார் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு மூளையை மழுங்கடித்து, உயிரைப் பலிகொடுப்பதற்குப் பதிலாக, அருகில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்த்து விட்டு அங்கு தரமான கல்விக்காகப் போராட வேண்டும். இது ஒன்றும் மலையைப் பிளக்கும் வேலை அல்ல. பெற்றோர்கள் ஒன்றிணைந்தால் இது முடியாத காரியமும் அல்ல. தனியார் பள்ளியின் வாசலில் அடிமைகளைப் போல அஞ்சி நிற்பதற்குப் பதில், அரசுப் பள்ளி வாசலில் உரிமையுடன் நெஞ்சு நிமிர்த்தி போராடலாம். அது ஒன்றே இந்தப் பிரச்னைக்கான ஒரே தீர்வு... சாத்தியமான தீர்வு!
 
RAWALIKADate: Thursday, 06 Feb 2014, 10:38 AM | Message # 10
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline


“ஆசிரியர்களே காரணம்!”

சந்திரசேகரன் - ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர், கந்தசாமி கண்டர் கல்லூரி, பரமத்தி வேலூர்:

''என்கிட்ட படிச்ச பல மாணவர்கள், இந்தப் பகுதியில் இப்போது தனியார் பள்ளிகளை நடத்துகின்றனர். நாமக்கல் மாவட்டத் தனியார் பள்ளிகளின் பெருக்கத்துக்குக் காரணமே அரசுப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள்தான். 50 ஆயிரம், 80 ஆயிரம் சம்பளம் வாங்கும் இவர்கள் 10, 20 பேர் ஒன்றுசேர்ந்து ஒரு பள்ளிக்கூடம் தொடங்கிவிடுகின்றனர். கல்வித் துறை அதிகாரிகளைத் தெரியும் என்பதால் யாரைப் பிடிக்க வேண்டும், எப்படிக் காய் நகர்த்த வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்துள்ளது. 'கல்வி’ என்ற புனிதமான சேவைப் பணியை, பணம் பார்க்கும் வியாபாரமாக மாற்றிய அயோக்கியர்கள் இவர்கள்தான்!''

 “2-ம் வகுப்புக்கு 10 லட்சம்!”

மலர்க்கொடி - தனியார் பள்ளி முன்னாள் ஆசிரியை, நாமக்கல்.

''பாவம் சார் பசங்க... ஆடு, மாடுங்க மாதிரி அவங்களை ஸ்கூல்லயும் ஹாஸ்டல்லயும் அடைச்சுவெச்சிருக்காங்க. அந்தப் பசங்க சிரிச்சிப் பேசி சந்தோஷமா இருந்து நான் பார்த்ததே இல்லை. எப்பவும் பேய் அறைஞ்ச மாதிரியே இருப்பாங்க. வீட்டு ஞாபகத்துல சுணங்கிப்போயிடுவாங்க. போன்லகூட அம்மா-அப்பாகூட பேச முடியாது. படிக்கச் சொல்லி பண்ற டார்ச்சர் தனி. என்னால இந்தக் கொடுமை யைப் பார்த்துக்கிட்டு வேலை பார்க்க முடியலை. மன உளைச்சல் தாங்காம வேலையை ரிசைன் பண்ணிட்டேன்.

என் அம்மா-அப்பா ரெண்டு பேருமே ஆசிரியரா இருந்தவங்க. கல்வியை வியாபாரம் ஆக்கக் கூடாதுன்னு டியூஷன்கூட எடுக்க மாட்டாங்க. ஆனா, இந்தப் பள்ளிக்கூடங்கள் முழுக்க, முழுக்கக் கொள்ளைக்கூடங்களா நடக்குது.
சொன்னா நம்ப மாட்டீங்க. சமீபத்தில் ஒரு பெற்றோர், தங்களோட பையன் ஸ்கூல் அட்மிஷனுக்காக ஆங்கிலத்தில் பேசணும்னு என்னை அழைச்சுட்டுப் போயிருந்தாங்க. ஊட்டி கான்வென்ட்ல 2-ம் வகுப்பு அட்மிஷனுக்கு அவங்க கொடுத்த நன்கொடை 10 லட்சம். எனக்கு மயக்கமே வந்திடுச்சு. நம்ம பள்ளிக் கூடங்கள் செயல்படும் முறையை நினைச்சு, அதில் வீணடிக்கப்படும் பசங்களோட எதிர் காலத்தை நினைச்சு எனக்குத் தூக்கமே வர்றது இல்லை. அரசாங்கம் ஏதாச்சும் பண்ணணும் சார்... இல்லைன்னா மொத்தத் தமிழ்நாடும் பாழாப்போயிடும்!''


 “போலி ஆசிரியர்கள்... போலி பள்ளிகள்!”

இமையம் - எழுத்தாளர், அரசுப் பள்ளி ஆசிரியர், விருத்தாசலம்.

''அரசுப் பேருந்துகள் ஓடாத கிராமங்கள், தமிழகத்தில் இருக்க முடியும். ஆனால், தனியார் பள்ளிப் பேருந்துகள் ஓடாத கிராமங்களே இல்லை. அரசு அங்கீகாரம் பெற்றப் பள்ளிகளைவிட அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம். சேலம் மாவட்டத்தில் 80 பள்ளிகளும், கன்னியாகுமரியில் 54 பள்ளிகளும் அங்கீகாரம் பெறாமல் பல ஆண்டுகளாக இயங்கிவருகின்றன என்பதை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களே அறிவித்துள்ளனர். இதுமாதிரி ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கீகாரம் பெறாத நூற்றுக்கணக்கான பள்ளிகள் இன்றும் இயங்கி வருகின்றன.

தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்கள், சரியான பயிற்சியோ, பட்டமோ பெறாதவர்கள்தான். மருத்துவப் படிப்பு படிக்காமல் மருத்துவம் செய்பவர்களை போலி மருத்துவர்கள் என்று அரசு கைதுசெய்கிறது. போலி மருந்துகள், போலி மதுபாட்டில்கள், போலி சாமியார்கள், போலி குடும்ப அட்டைகள், போலி நிதி நிறுவனம், போலி ஆவணம் தயாரித்தவர்கள் மீது கடமையாக நடவடிக்கை எடுக்கிற அரசு, போதிய பயிற்சியோ, பட்டமோ பெறாமல் பாடம் நடத்துகிற போலி ஆசிரியர்கள் மீதும், அரசு அங்கீகாரம் பெறாமல், கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நடத்தப்படுகிற போலி தனியார் பள்ளிகள் மீதும் ஏன் நடவடிக்கை எடுப்பது இல்லை?''


 “தேர்விலும் தில்லுமுல்லு!”

தளபதி - வழக்கறிஞர், கோபிசெட்டிபாளையம்.

''இந்தத் தனியார் பள்ளிகள் பெரும்பாலானவை தேர்வு மையங்களாகவும் உள்ளன. தங்கள் பள்ளியிலேயே தேர்வு மையம் இருப்பதால், இவர்கள் தேர்வில் செய்யும் தில்லுமுல்லுகள் சொல்லி மாளாது.

கடந்த ஆண்டு ஒரு பள்ளியில் அரசுப் பொதுத் தேர்வின்போது ஒரு போர்டில் விடைகளை எழுதிப் போட்டார்கள். இங்குள்ள ஆசிரியர்கள், 'பேப்பர் சேசிங்’கில் கை தேர்ந்தவர்கள். இந்தத் தனியார் பள்ளிகளுக்கு மேற் பார்வையாளர்களாக வரும் ஆசிரியர்களுக்கு, நாள் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் தரும் பள்ளிகளும் உண்டு. சில பள்ளிகளில் ஒரு பவுன் மோதிரம் போடப்படுகிறது. முதலில் இந்தத் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்வு மைய அந்தஸ்தை உடனே திரும்பப் பெற வேண்டும்!''
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » பள்ளிப் பண்ணைகள்! (பள்ளிப் பண்ணைகள்! - ரிப்போர்ட்)
  • Page 1 of 1
  • 1
Search: