மகா சிவராத்திரி - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » மகா சிவராத்திரி (சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்)
மகா சிவராத்திரி
PattuDate: Wednesday, 26 Feb 2014, 6:43 PM | Message # 11
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூசைகளின் போது எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.

முதல் சாமம்:

இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.

இரண்டாம் சாமம்:

இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.

மூன்றாம் சாமம்:

இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.

இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

நான்காம் சாமம்:

இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.

குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.

மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெருமானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக!




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 26 Feb 2014, 6:47 PM | Message # 12
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
சிவராத்திரி சமயத்தில் மட்டும் கிடைக்கும் சிவகரந்தை எனும் பத்ரம் (இலை) கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரக் கூடியது.

சிவராத்திரி நாள், சிவபிரான் இலிங்கத்தில் தோன்றியருளிய நாள்; பிரமா, விட்டுணு ஆகியோரிடையே சோதிமயமாகத் தோன்றிய நாள்; புனர் உற்பத்திக்காக அம்மை அப்பனைப் பூசித்த நாள்.

ஒரு சமயம் பிரளயத்தில் எல்லா உயிரினங்களும் அழிந்து பிரபஞ்சமே சூனியமாகி விட்டது. உயிர்கள் அனைத்தும் திரும்பவும் தோன்றி, வாழ்ந்து ஈடேறும்பொருட்டு ஐந்தொழில்களையும் அப்பனே ஏற்று நடத்துவான்வேண்டி, இரவில் நான்கு சாமங்களிலும் அம்மை, அப்பனை உளமுருகி வேண்டிய நாளே சிவராத்திரி.

சிவராத்திரிக்கு விரதத்திற்கு புராணங்கள் கூறுகிற ஏனைய விளக்கங்கள்

அடி முடி தேடி சோர்வுற்று செருக்கு நீங்கப்பெற்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாகக் காட்சி அளித்த நாள் சிவராத்திரி எனவும் கருதப்படுகிறது.

பார்வதி தேவி ஒருமுறை விளையாட்டாக சிவபெருமானின் கண்களை தனது கைகளால் மூட, புவனங்கள் முழுவதும் இருண்டுவிட்டது.

இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பார்வதி தேவி உணவின்றி முழு விரதம் இருந்து ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை செபித்து வழிபட்ட நாளே சிவராத்திரி என்றும் கருதுவர்.

இவ்வாறு ஏற்பட்ட இருளை நீக்கி ஒளியை வழங்க வேண்டி தேவர்கள் எம்பெருமானை நோக்கி தவமியற்றி வழிபட்டபோது எம்பெருமான் தேவர்களின் வழிபாட்டிற்கு இரங்கி அருள்பாலித்த நாள் சிவராத்திரி என்றும் கருதுவர்.

வாசுகிப் பாம்பை கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது வலிதாங்கமுடியாது வாசுகிப் பாம்பானது நஞ்சைக் கக்கவே, தேவர்களைக் காக்கும் பொருட்டு, அவ் விடத்தை எம்பெருமான் அருந்தி நீலகண்டரான காலமே சிவராத்திரி என்றும் கருதப்படுகிறது.

சிவராத்திரி அ‌ன்று விரதம் அனுட்டிக்கும் அடியவர்கள் அதிகாலை நீராடி, அன்று முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வேண்டும். பகலில் நித்திரை கொள்ளக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கிற பூசைகளில் கலந்து எம்பெருமானை வணங்கவேண்டும்.

வீ‌ட்டி‌ல் பூசை செ‌ய்வதாயின், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூசையை‌த் ஆரம்பிக்க வே‌ண்டு‌ம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூசிக்க வேண்டும். வில்வ இலைகளைப் பயன்படுத்தி பூசிப்பது பெரும் சிவபுண்ணியத்தைத் தரவல்லது.பின்னர் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

கோயில்களில் பிரதட்சிணமாக (வீதி வலம்) வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூசை செய்ய முடியாதவர்கள் நான்கு சாமத்திலும் சிவபுராணம் கேட்டும், தேவாரம்,திருவாசகம் என திருமுறைகள் ஓதியபடியும், சிவாலய தரிசனம் செய்தும் விரதத்தை மேற்கொள்ளலாம்.

எம்பெருமான் சிவபெருமானை அபிடேகப்பிரியன் என்பர். ஆதலால் நான்கு சாமங்களிலும் எம்பெருமானுக்கு அபிடேகம் நடைபெறும். இவ் அபிடேகத்தை கண்ணால் கண்டு உள்ளத்தால் எம்பெருமானை உணர்ந்து வழிபடுவர்களுக்கு சிவானந்தப் பெருவாழ்வு அமைவது உறுதி.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 26 Feb 2014, 6:49 PM | Message # 13
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
நான்கு காலப் பூசைகளில் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடைபெறும் சிவபூசையை ”லிங்கோத்பவ காலம்” என்பர்.இதனை விசுவரூப தரிசனம் என்றும் அழைப்பர்.

மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூசையையு‌ம், உச்சிக்காலப் பூசையையு‌ம் முடித்துக் கொள்ளவேண்டும். இப்பகல் பொழுதை சிவபுராணம் ஓதியபடியோ அன்றி சிவபுராணத்தை செவிமடுத்து பொருளுணர்ந்து கேட்டபடியோ கழிப்பது பெரும்பேறை வழங்கும்.

ஏனைய திருமுறைகளைப் படிந்தவாறு இப்பகல் பொழுதைக் கழிப்பதும் உத்தமமாகும்.ஈற்றில்,உபதேச‌ம் தந்த குருவை பூசை செய்து, உடைகள் மற்றும் உணவினை சிவாச்சாரியார்களுக்கு தானமாக அளித்து, விரதத்தை நிறைவு செய்யும் முகமாக சிவசிந்தையோடு சிவார்ப்பணம் செய்து உணவு உண்ண வேண்டும்.

சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு சாமப்பூசை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். சிவராத்திரி விரதமானது வயது,பால்,இன,மத வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அனுட்டிக்ககூடியது.

அறியாமல் அனுட்டித்தாலே கோடி புண்ணியத்தை வழங்கவல்லது சிவராத்திரி விரதமாகும். வேடனுக்கு அருள்பாலித்த விரதமாயிற்றே! தானங்கள், ஏனைய விரதங்கள் என எவற்றாலும் நுகரமுடியாத சிவானத்தத்தை ஊட்ட வல்லது சிவராத்திரி விரதமாகும்.

பரம்பொருளையே மனதில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமாகையால் இப்பேறு சிவராத்திரி விரதத்திற்கு அமைவது யதார்த்தமானது.

சிவராத்திரி விரதத்தை அனுட்டிப்பவர்கள் எம்பெருமானுடனாய அம்மையையும் சேர்த்தே வழிபடுதல் வேண்டும். அம்மை மகாபிரளயத்தின் பின்னர் மீண்டும் உலகம் உய்ய மேற்கொண்ட நோன்பே மகாசிவராத்திரி விரதம் என ஆகமங்களும் புராணங்களும் பொதுவாகக் கூறுவதாலும் அம்மை அர்த்தநாரியான நன்னாள் சிவராத்திரி என்பதாலும் அம்மையையும் சேர்த்து வழிபடுதல் உத்தமமானதும் முழுப்பலனையும் தரவல்லதும் என்பர் ஆன்றோர்.

பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது என்பர்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 26 Feb 2014, 6:51 PM | Message # 14
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
சிவராத்திரி நன்னாளின் சிறப்பு

எப்போதும் இப்பூமியைச் சுமந்து கொண்டிருப்பதன் காரணமாக ஆதிசேடன் தான் இழந்த பலத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, ஒரு சிவராத்திரி நன்னாளில் முதல் சாமத்தில் திருக்குடந்தையில் உள்ள நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேசுவரத்தில் நாக நாத சுவாமியையும், மூன்றாம் சாமத்தில் சேஷபுரி என அழைக்கப்படும் திருப்பாம்புரத்தில் பாம்பீசுவரரையும், நான்காம் சாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் வணங்கினான்.

எம்பெருமானும் மனம் குளிர்ந்து ஆதிசேடன் இழந்த வீரியத்தை வழங்கி திருவருள் பாலித்தார். இதனால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் உடலிலுள்ள எல்லா வியாதிகளும் நீங்கி சுகமாக வாழ்வர் என்றும் சர்ப்ப தோசம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

பிருங்கி முனிவர் சக்தியை வணங்காது சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்ததால் கோபம் கொண்ட சிவகாமி அம்மை, எம்பெருமானைவிட்டு விலகி பூலோகம் சென்று, மீண்டும் எம்பெருமானுடன் இணையவேண்டி எம்பெருமானை நோக்கித்தவம் இருந்தார்.

அம்மையின் தவத்தில் மகிழ்ந்த அப்பன், அம்மையை தன்னில் ஒருபாதியாக்கி அர்த்தநாதீசுவராக காட்சியளித்த இனிய நாளும் இந்நாளாகும்.

கீழே கூறப்பெற்றுள்ள அதிசய நிகழ்வுகள் இப்புனித தினத்தில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன:

1.அம்மை, அப்பனை நோக்கிக் கடுந்தவமியற்றி அப்பனின் இடப்பாகத்தில் இடம் பெற்று உமையொருபாகனானது.

2.அருச்சுனன் தவம் செய்து பாசுபதம் எனும் ஆசுகம்(அஸ்திரம்,அம்பு) பெற்றது.

3.கண்ணப்ப நாயனார் தன் கண்களையீந்து முத்தி பெற்றது.

4.பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாள்

5.மார்க்கண்டேயருக்காக எம்பெருமான் காலதேவனை தண்டித்த நாள்.

கண்ணப்ப நாயனார் எம்பெருமானுக்கு தனது கண்களைக் கொடுத்த நாள். இப்புண்ணிய தலம் திருக்காளத்தி திருதலமாகும்.

"தேவர்களின் தலைவனாகிய சிவபெருமானே, நான் இப்பிறப்பு நீங்கி, எப்பிறப்பையும் அடையலாம். எங்கேயோ இருந்து,எதனையும் மறக்கலாம்.

ஆனால் சிறப்பாக, மலர்கள், நீர் ஆகியவற்றால் உன்னை அன்புடன் பூசிக்கின்ற இந்தப் பழக்கத்தை மட்டும் மறவாமல் நான் கடைப்பிடித்து ஒழுகும் வரத்தை அடியேன் முழுமையாய்ப் பெறும்படி திருவருள் பாலிக்கவேண்டும்." என திருமந்திரத்தில் திருமூல நாயனார் எம்பெருமானை உருகி வேண்டுகிறார்.

நாமும் எம்பெருமானிடன் வேண்டுவோமாக.

"மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும்
சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி
மறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே"   - திருமந்திரம்



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 26 Feb 2014, 6:53 PM | Message # 15
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மஹா சிவராத்திரி விரதப்பலன்:

அம்மை வேண்டிக் கொண்டதற்கிணங்க நாம் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் அந்த கயிலை நாதன் நமக்கு இம்மையில் நமது எல்லா தோஷங்களியும் நீக்கி, பய உணர்வை அகற்றி, தீராப் பிணிகளை தீர்த்து, மனக்கவலைகளை மாற்றி சகல மங்களங்களையும் வழங்குவதுடன் நமக்கு மறு பிறப்பு இல்லாமல் சிவகணங்களுள் ஒருவராகும் வாய்ப்பையும் வழங்குகிறார்.

முன்னொரு காலத்தில் வாரணாசியில் சுஸ்வர என்ற பெயருள்ள ஒரு ஏழை வேடன் இருந்தான். ஒரு சிறிய குடிலில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்த அவன் காட்டில் வேட்டையாடி கிடைக்கும் பறவை விலங்கு ஆகியவற்றின் மூலம் தனது குடும்பத்துக்கு உணவளித்து வந்தான்.

ஒரு நாள் அவன் வேட்டை ஆடும் போது ஒரு புலி அவனை துரத்தியது. புலியிடமிருந்து தப்பிக்க அவன் ஒரு மரத்தின் மேலே ஏறிக் கொண்டான். புலியும் மரத்தின் கீழே அவன் இறங்கி வந்தால் அவனைக் கொன்று புசிக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்தது. பகல் முழுவதும் இவ்வாறு அவன் ஒன்றும் சாப்பிடாமல் மரத்தின் மேலேயே இருந்தான்.

அந்தியும் ஆகியது புலியும் நகர வில்லை வேடனாலும் கீழே வர முடியவில்லை. இரவிலே தூங்காமல் இருக்க மரத்தில் இருந்த இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். நடு நடுவே தன் குடுவையில் இருந்த தண்ணிரையும் கீழே ஊற்றிக் கொண்டிருந்தான்.

காலை புலர்ந்தது புலி ஓடி விட்டது, வேடனும் கீழிறங்கி வந்து தன் இருப்பிடன் சென்றான். அவன் அவ்வாறு அமர்ந்திருந்த மரத்தின் அடியில் ஒரு ”சிவலிங்கம்” இருந்ததாலும், அந்த மரம் வில்வ மரமாக இருந்ததாலும், அந்த இரவு சிவராத்திரியாக இருந்ததாலும் புலியின் பயத்தினாலேயே வேடன் இவ்வாறு பகலில் உணவு உண்ணாமலும் இரவிலே லிங்க மூர்த்திக்கு அபிஷேகமும் வில்வ தளங்களால் அர்ச்சனை செய்ததால் வேடனுக்கு சிவராத்திரி விரதப் பலனைக்கொடுத்து முக்தி கொடுத்தருளினார் எம்பெருமான். நாமும் தூய மனத்தோடு இந்த விரதத்தை மேற்கொண்டால் அந்த இறைவனது அருளைப் பெறலாமே.

வேடன் இவ்வாறு முக்தி பெற்ற ஐதீகம் நடைபெற்றதாகக் கூறப்படும் தலங்கள் திருவைகாவூர் மற்றும் பெரும் புலியூர் ஆகும் இத்தலங்களில் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

மஹா சிவராத்திரி 10 நாள் பெருவிழாவாக தேரோட்டத்துடன் நடைபெறும் மற்ற தலங்கள் ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ இராமேஸ்வரம், ஸ்ரீ கோகர்ணம் மற்றும் பணிப்புலம் வயல்கரை சம்புநாதீஸ்வரர் ஆகும்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 26 Feb 2014, 6:55 PM | Message # 16
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
சிவராத்திரியுடன் தொடர்புடைய மற்றொரு ஐதீகம்:

அகில உலகமும் பெருங் கடல் மூடிப் பிரளயம் ஏற்படும் ஊழிக் காலத்தில் சகல ஜீவ ராசிகளும் எம் ஐயனின் காலடியில் ஒடுங்குகின்றன. அப்போது கங்காளராய் எம் ஐயன் மீண்டும் படைப்புத் தொழிலைத் தொடங்க ஓம் என்னும் பிரணவத்தை நல் வீணையில் வாசித்துக் கொண்டு இருப்பார். இதை அப்பர் பெருமான் தம் பதிகத்தில் இவ்வாறு பாடுகின்றார்,

பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் கபேளரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை நல் வீணை வாசிக்குமே!.

அந்த பிரளய காலத்தில் எம் அம்மை பார்வதி உயிர்களுக்கு இரங்கி தவம் கிடந்து இறைவனை பூஜை செய்த இரவே சிவராத்திரி ஆகும். பின்னர் படைப்பு தொடங்கிய பிறகு இந்நாளில் இறைவனை வணங்குபவர்களுக்கு இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் எல்லா நன்மைகளையும் வழங்க வேண்டும் என்ற அம்மையின் வேண்டுகோளுக்கிணங்கி சிவ ராத்திரி நன்னாளில் அவரை வழிபடுபவர்களுக்கு இம்மையில் எல்லா சுகங்களையும் அளிப்பதுடன் வீடுப் பேற்றையும் அருளுகின்றார்.

தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும் விஷ்ணுவும் சண்டையிட்டனர், அவர்களது கர்வத்தை அடக்க சிவ பெருமான் பெரிய நெருப்பு பிழம்பாய் நின்று அடியும் முடியும் கண்டு பிடிக்குமாறு கூற இருவராலும் கண்டுபிடிக்க முடியாமற் போனது। இவ்வாறு எம்பெருமான் லிங்கோத்பவ மூர்த்தியாய் நின்ற நாள் திருக்கார்த்திகை ஆகும். பின் இருவரும் சிவ லிங்க ரூபமாக அவரை வணங்காத தமது தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்ட, மஹா சிவராத்திரி நன்னாளில் எம்பெருமான் லிங்க ரூபமாக தோன்றி இருவருக்கும் அருள் வழங்கின நாள் என்பதும் ஒரு ஐதீகம்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 26 Feb 2014, 6:56 PM | Message # 17
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
திருக்கோயிலுள்ளிருக்கும் சிவலிங்கம் பரார்த்தலிங்கம் எனப் பெயர் பெறும். அது சுயம்புலிங்கம், காணலிங்கம், தைவிகலிங்கம், ஆரிடலிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்படும். அவற்றுள்,

1.  சுயம்புலிங்கம் - தானாகவே தோன்றியது.

2.  காணலிங்கம் - விநாயகர் சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே ஸ்தாபிக்கப்பட்டது.

3.  தைவிகலிங்கம் - விஷ்ணு முதலிய தேவர்களாலே ஸ்தாபிக்கப்பட்டது.

4.  ஆரிடலிங்கம் - இருடிகளாலே தாபிக்கப்பட்டது. அசுரர் இராக்சதர்களாலே ஸ்தாபிக்கப்பட்டது .

5.  மானுடலிங்கம் - மானுடராலே ஸ்தாபிக்கப்பட்டது.

மானுடலிங்கத்திலும் உயர்ந்தது ஆரிடலிங்கம்; அதனிலும் உயர்ந்தது தைவிகலிங்கம்; அதனிலும் உயர்ந்தது காணலிங்கம்; அதனிலும் உயர்ந்தது சுயம்புலிங்கம்.

சிவனாருக்கு உகந்த வில்வத்தின் சிறப்பு:

வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களும் உள்ளன.

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 26 Feb 2014, 6:58 PM | Message # 18
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
சிவராத்திரியில் முக்கியமான லிங்கோத்பவ காலம்:

சிவராத்திரியில் மூன்றாம் காலத்தை லிங்கோத்பவ காலம் என்பார்கள். மிகச் சிறப்பு வாய்ந்த தருணம் அது. இதுவே, சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு, அருவுருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரமாகும். இந்த வேளையில் சிவபூஜை செய்வது அதிக சிறப்புத் தருவதாகும்.

லிங்கோத்பவ காலத்தில், இறைவனுக்கு நெய்பூசி வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளியால் நெய்த ஆடைகளை அணிவித்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும். நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானை பிரமனும் திருமாலும் ஆயிரம் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தார்கள். அதனை நினைவுகூரும் வகையில், உருத்திரருக்கு எண்ணில்லாத வணக்கங்களைக் கூறும் ருத்திரத்தை ஓத வேண்டும்.

மேலும் சிவ சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள ”இருநிலனாய் தீயாகி” எனும் பதிகத்தையும், லிங்கபுராணக் குறுந்தொகையையும் தவறாது ஓதி வழிபடலாம்.


நிகழ்வுகள்:

நாம் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, எம்வாழ்வில் செய்த தீய செயல்களின் பாவங்களில் இருந்து விமோசனம் தந்து எம்மை பாவத்தின் பிடியில் இருந்து மீட்டெடுத்து பத்திவழி நடத்திட இப்புனித தினத்தில் பக்திசிரத்தையுடன் ஆன்மீக சீலராக சிவனடியில் சேர்ந்திடுவோம்.

விரதங்களில் கடுமையானதும் கட்டுப்பாடு மிக்கதும், நிறைந்த பலந்தருவதும் இச் சிவராத்திரி விரதமேயாகும். எனவே மிகுந்த கட்டுப்பாட்டுடனும் பயபக்தியுடனும் அனுஷ்டித்து மாதொரு பாகனான எம் பெருமானின் அருளுக்கும், அம்மையின் அருளுக்கும் பாத்திரமாவோமாக.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
RAWALIKADate: Thursday, 27 Feb 2014, 2:26 PM | Message # 19
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
பட்டு

நீங்கள் சரியான நேரத்துல reminder மாதிரி buzz பண்ணுவது எனக்கு ரொம்பவும் உதவியா இருக்கு.

என் சிவராத்திரி விரதத்தில் கிடைக்கும் புண்ணியத்தில் உங்களுக்கும் பங்கு உண்டு.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » மகா சிவராத்திரி (சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்)
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Search: