வீட்டுக்குள் விவசாயம் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Jeniliya, Laya  
வீட்டுக்குள் விவசாயம்
RAWALIKADate: Monday, 09 Mar 2015, 8:04 AM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
வீட்டுக்குள் விவசாயம்
வீட்டுத்தோட்டம்

நன்றி - பசுமை விகடன்

நந்தினி செந்தில்நாதன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

''பந்தலிலே பாவக்கா... தொங்குதடி  லோலாக்கா'' என்று ஒரு பெண் பாட...

 ''போகையில பறிச்சுக்கலாம்... போகையில பறிச்சுக்கலாம்'' என்று இன்னொரு பெண் பதில் பாட்டு பாடுகிற கிராமத்து சிலேடை ரொம்பவே பிரபலமானது.

துக்க வீட்டுக்கு வந்த இரண்டு பெண்கள் பாடுவது போல இது அமைந்தாலும், அந்த வீட்டின் புறக்கடை வீட்டுத்தோட்டத்தில் பந்தல் அமைத்து, பாகல் கொடியைப் படர விட்டு இருக்கிறார்கள். பெண்ணின் காதில் தொங்கும் லோலாக்கு போல அதில் பாகல் பிஞ்சுகள் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றன என்பதாக அறிகிறோம்.



1980-களின் இறுதிவரை புறக்கடை இல்லாத வீடுகளை எங்கும் பார்க்கமுடியாது. ஒவ்வொரு வீட்டுப் புறக்கடையிலும் ஒரு சிறிய கிணறும், அதை ஓட்டிய துவைக்கும் கல்லும், சில வாழை மரங்களும், பூச்செடிகளும், அவரை, பாகல் கொடி படரும் சிறிய பந்தலும், கண்டிப்பாக கறிவேப்பிலை செடியும், ஒரமாய் ஒரு குப்பைக்குழியும், அதில் கீறிப் பறித்து மேய்ந்து திரியும் நாட்டுக்கோழிகளையும் காணாமல் இருக்க முடியாது.

காலச்சக்கரம் சுழற்றி அடித்ததில்... மறு முளைப்புத்திறன் கொண்ட நாட்டு ரக விதைகள் அழிந்து போயின. பெருகிய மக்கள் தொகையால், புறக்கடைகளில் புது வீடுகள் உருவாயின. வீட்டுத்தோட்டங்கள் இல்லாமல் போயின. தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிட மக்களும், தினசரி மார்க்கெட்டுகளுக்கு பை தூக்க ஆரம்பித்தனர். கூட்டுக்குடும்பங்கள் வழக்கொழிந்து போய், கோலம் போட வாசலின்றி 'கூட்டில்’ குடும்பமாய் வசித்து வரும் நம்மால், வீட்டுத்தோட்டத்தைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. 2010-ம் ஆண்டு வரை இதுதான் நிலைமை.

வீட்டுத்தோட்டம் காலத்தின் கட்டாயம்!


ஆனால், ஒவ்வொரு புதுமையும் பழமைக்குத் திரும்பியே ஆகவேண்டும் என்கிற சுழற்சி விதி தன் வேலையைக் காட்ட துவங்கியது. அதன் பலன் அந்தக்காலத்தில் இருந்த புறக்கடைத்தோட்டங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாடித்தோட்டங்களாக பரிணாம வளர்ச்சி பெற்றன. கான்கிரீட் வீடுகளின் மாடியில் தோட்டம் அமைத்து, தங்களது குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளைத் தாங்களே உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்கிற தொழில்நுட்பம் பரவ ஆரம்பித்தது. அதற்காக கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட்டன. ஊடகங்கள் கட்டுரைகளை வெளியிட்டன.

ரசாயனத்தில் விளையும் காய்கறிகளால் ஏற்படும் தீமைகள் குறித்து அதன் நச்சுத்தன்மை குறித்து நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள் பலரும் விழிப்பு உணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டனர். அது கிராமங்களைத்தாண்டி நகர்புறங்களில் வசிப்பவர்களையும் வெகுவாக ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

தங்கள் குடும்பத்துக்குத் தேவையான விஷமில்லா காய்கறிகளை நகரவாசிகளும் மாடித்தோட்டத்தில் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். தமிழக அரசும் தன் பங்குக்கு தோட்டக்கலைத் துறை மூலம் நகர்ப்புற காய்கறி அபிவிருத்தித் திட்டத்தை துவக்கியுள்ளது. முதல் கட்டமாக சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் மாடித்தோட்டம் அமைக்க மானியத்துடன் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள பயனாளிகள் அதைப் பெற்று வீட்டுத்தோட்டங்களை அமைத்து வருகிறார்கள். ஆம், மீண்டும் பழைய காலம் திரும்பிக்கொண்டிருக்கிறது.



2020-ம் ஆண்டு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தோட்டம் இருக்கும் என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. இனி... வீடுதோறும் விவசாயிகள் இருப்பார்கள். இது காலத்தின் கட்டாயம்.

மாடியிலே பாவக்கா... மதில் சுவத்தில் கோவக்கா..!


'பசுமை விகடன்’ அதை மனதில் கொண்டுதான் கடந்த எட்டு ஆண்டுகளாக வீட்டுத்தோட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரைகளை வெளியிட்டு வருவதோடு... கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் 'வீட்டுக்குள் விவசாயம்’ என்கிற இந்தப் புதிய பகுதி. வீட்டில் தோட்டம் அமைக்கும் தொழில்நுட்பங்கள், முன்னோடி வீட்டுத் தோட்ட விவசாயிகளின் அனுபவங்கள் ஆகியவை இந்த பகுதியில் இடம் பெறும். 'பந்தலிலே பாவக்கா...’ என்று சிலேடை பாடிய பெண்கள் இனி.... 'மாடியிலே பாவக்கா... மதில் சுவத்தில் கோவக்கா... விஷமில்லா கத்திரிக்கா... விளைஞ்சிருக்கு பாரக்கா’ என்று மாற்றிப் பாடலாம்.

''வீட்டுத்தோட்டம் ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் கிடையாது. அதன் சூட்சமங்களைப் புரிந்து கொண்டால் உங்களுக்குள் இருக்கிற விவசாயி விழித்தெழுவார்'' என்கிறார், பல ஆண்டுகளாக தங்களது வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகள், வாழை என விளைவிக்கும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை சரஸ்வதி.

முளைப்பாரிதான் மூலாதாரம்!


''கடைக்குப் போனோமா... பணத்தைக் கொடுத்து பை நிறைய காய் வாங்கினோமா... என்ற நிலையில் இருக்கும் பலருக்கு வீட்டுத்தோட்டம் குறித்த ஒரு தயக்கம் நிலவுகிறது. ஆனால், உண்மை அப்படியில்லை... கொஞ்சம் மெனக்கெட்டாலே வீட்டுத்தோட்டம் அமைப்பது ரொம்ப சுலபம். கோயில் திருவிழாக்களில் பெண்கள் பலரும் முளைப்பாரி எடுக்கிறார்கள். திருவிழா தொடங்கும் ஒரு மாதத்துக்கு முன் இருந்தே அதற்கான வேலையை வீடுகளில் தொடங்கி விடுவார்கள். நல்ல செம்மண் அல்லது வளமான வண்டல் மண்ணை நிலத்தில் இருந்து தோண்டி எடுத்து வந்து, அதில் உள்ள கட்டிகளை உடைத்து, சிறுகற்களை அப்புறப்படுத்தி அந்த பொலபொலப்பான மண்ணில் சிறிது ஆட்டு எரு அல்லது சாணம் கலந்து பாத்திரத்தில் பாதியளவு கொட்டி சமன்படுத்துவார்கள். தொடர்ந்து முளைப்பாரிக்குத் தேவையான நெல், கம்பு, சிறுசோளம், வரகு, கேழ்வரகு என்று ஏதாவது ஒரு சிறுதானிய விதைகளைத் தூவி அதை கிளறி விட்டு, மண் நனையும்படி தண்ணீர் ஊற்றி வெயில்படும்படி முற்றத்தில வைப்பார்கள். தொடர்ந்து தேவையான தண்ணீரைக் கொடுத்து வர 20 நாட்களில் பாத்திரத்தில் உள்ள விதைகள் முளைத்து 'திகுதிகு’ என்று வளர்ந்து பச்சைப்பசேல் என்று கண்ணைக் கவரும். அதைப் பெருமையோடு ஊர்வலமாய் எடுத்துச் சென்று சாமிக்குப் படைத்துத் திரும்புகிறார்கள். ஆக, பெண்கள்தானே முளைப்பாரியை விதைக்கிறார்கள், விளைவிக்கிறார்கள். ஆம், அந்தத் தொழில்நுட்பம்தான் வீட்டுத்தோட்டத்துக்கு மூலாதாரம்'' என்று வீட்டுத்தோட்ட லாவகம் குறித்து எளிமை விளக்கம் அளித்த சரஸ்வதி தொடர்ந்தார்.



''வீட்டுத்தோட்டம் அமைக்க, குறைந்தபட்சம் 50 சதுர அடி இடம் இருந்தாலே போதுமானது. நல்ல வெயில்படும் இடமாகவும் இருக்க வேண்டும். இதற்குத் தேவையான உபகரணங்களை இரண்டு விதங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஒன்று 'ரெடிமேட் கிட்ஸ்’. இதற்கு செலவு அதிகம். தேடல் குறைவு. அடுத்தது, வீணான பழைய பொருட்களில் செடிகள் வளர்ப்பது. இதற்கு தேடல் அதிகம். செலவு குறைவு. நாங்கள் வீணான பொருட்களைக் கொண்டுதான் வளர்க்கிறோம். அவற்றைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்'

-செழிக்கும்
 
RAWALIKADate: Monday, 09 Mar 2015, 8:09 AM | Message # 2
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
வீட்டுக்குள் விவசாயம் - 2


பழைய பொருட்களில் விதவிதமான செடிகள்..!

நஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில்... வீட்டில் விவசாயம் செய்ய தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பகுதி இது. இதழ்தோறும் வீட்டுத்தோட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களும், தொழில்நுட்பங்களும் இங்கே இடம் பிடிக்கின்றன.

வீட்டு மொட்டைமாடியில் காய்கறி பயிர் செய்து வரும் ஈரோடு சரஸ்வதி, பழைய பொருட்களை வைத்து தொட்டிக் காய்கறிகளை வளர்க்கும் விதம் குறித்து இங்கே பேசுகிறார்.



'மாடித்தோட்டம் அமைப்பதற்கு அடிப்படைத் தேவை மண் மற்றும் தொட்டிகள். இவற்றை எங்கே சேகரிப்பது என்ற கேள்வியில் தொடங்கும் சோம்பல்தான், உங்கள் வீட்டில் விவசாயம் நடக்காமல் இருப்பதற்கான அடிப்படைக் காரணம். யோசனை செய்து கொண்டிருந்தால் வேலை நடக்காது. எதுவுமே வீடு தேடி வந்து வாசல் கதவைத் தட்டாது. தற்போது கட்டட வேலை நடக்காத இடங்களே இல்லை. நமக்கு அருகே கட்டட வேலை நடக்கும் இடத்துக்குச் சென்று, அஸ்திவாரம் தோண்டி குவித்து வைத்திருக்கும் மண்ணில், மேல்மண்ணாகப் பார்த்து எடுத்து வரலாம். எந்த நகரத்தில் இருந்தும் அதிகபட்சமாக ஒரு மணி நேர பயணத்தில் விவசாய நிலங்களைக் காணலாம். அந்த நிலத்தின் உரிமையாளரைச் சந்தித்துக் கேட்டால் தேவையான மண் கிடைக்கும். அதேபோல மாட்டுச் சாணத்தையும் தேடிப் பெறலாம். இவை நகரங்களிலும் கூட கிடைக்கும்.



குறைந்த செலவில் தொட்டிகள்!

மண், சாணத்துக்கு அடுத்தது செடி வளரத் தேவையான தொட்டி. இதற்காக அதிக செலவு செய்து புதுத் தொட்டிகளை வாங்கத் தேவையில்லை. வீட்டில் உபயோகமில்லாமல் இருக்கும் பழைய டப்பாக்கள், வாட்டர் கேன்கள், பக்கெட்டுகள் ஆகியவற்றை உபயோகிக்கலாம். லாரிப் பட்டறை, கார் ஒர்க் ஷாப் போன்ற மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் இடங்களில் பழைய ஆயில், பெயின்ட் பக்கெட்டுகள், கிரீஸ் டப்பாக்கள் கிடைக்கும். காயலான் கடைகளில் கிடைக்கும் பழைய சின்டெக்ஸ், தகரங்கள், பெரிய பி.வி.சி பைப்கள் மற்றும் பழங்களை அடுக்கப் பயன்படுத்தும் மரப்பெட்டிகள் ஆகியவற்றை வாங்கி வந்தும் செடி வளர்ப்புத்தொட்டிகளாகப் பயன்படுத்தலாம். இவற்றுக்கு அதிக செலவு பிடிக்காது. கிரீஸ் டப்பாக்களில் எண்ணெய் வாசம் போகும்படி நன்றாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும்.



புதிதாக வீட்டுத்தோட்டம் அமைப்பவர்கள், அனைத்து காய்கறிகளையும் ஒரே நேரத்தில் நடவு செய்யாமல், 25 நாட்களில் அறுவடையாகும் கீரையிலிருந்து தொடங்கலாம். அதில் அனுபவத்தை வளர்த்துக் கொண்ட பிறகு மற்ற காய்கறிகளை விதைக்கலாம். மாடித்தோட்டத்துக்கும் பட்டம் உண்டு. எல்லா ஊரிலும் எல்லா காய்கறிகளும் வளரும் என்றாலும்... சில ஊரில் சில பயிர்களின் வளர்ச்சி மந்தமாக இருக்கும். அதை ஈடுசெய்ய நிழல்வலைப் பந்தல், மூடாக்கு போன்ற சில தொழில்நுட்பங்களைக் கடைபிடிக்க வேண்டும். அதைப் பற்றி பிறகு பார்க்கலாம்.



முதலில் கீரை சாகுபடியைப் பற்றி பார்ப்போம். வீட்டுத் தோட்ட விவசாயத்தில் மண் மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு தொட்டிக்கு ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல் மற்றும் ஒரு பங்கு எரு என்கிற விகிதத்தில்தான் கலந்து போட வேண்டும். செம்மண் அல்லது வண்டல் மண்ணைத் தரையில் கொட்டி, கல், கட்டிகளை அகற்றி பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், தென்னை நார்க்கழிவை (காயர் பித்) வாங்கி, மண்ணில் கலந்துகொள்ளலாம். ஒரு தொட்டிக்குத் தேவையான மண், மணல் மற்றும் உரத்துடன் 50 கிராம் அசோஸ்பைரில்லம், 25 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றையும் கொட்டிக் கலந்து தொட்டியில் முக்கால் பங்கு நிரப்ப வேண்டும். பிளாஸ்டிக் வாளிகளாக இருந்தால், அவற்றின் அடிப் பகுதியில், சுற்றிலும் கோணி ஊசி புகும் அளவுக்கு 12 இடங்களில் சிறு துவாரங்கள் இட வேண்டும். செடிகளுக்கு ஊற்றும் தண்ணீரில் தேவைக்கு அதிகமான தண்ணீர் வடிய இந்தத் துவாரங்கள் அவசியம். தொட்டிகளில் மண் நிரப்பி தண்ணீர் ஊற்றி மூன்று நாட்கள் அப்படியே வைத்திருந்தால், மூன்றாவது நாள், மண் ஈரத்தன்மை குறைந்து காணப்படும். அதில் விதையையோ அல்லது நாற்றையோ நடவு செய்யலாம்.



கிச்சனில் இருக்கு, கீரை விதை!

அடுத்து 'விதைக்கு எங்கே போவது?’ என்ற கேள்வி எழும். ஆரம்ப கட்டத்தில் சமையலறையில் உள்ள வெந்தயத்தையே விதைக்கலாம். ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உடைய இந்தக் கீரையை விதைக்க... கையளவு வெந்தயத்தை எடுத்து சுத்தப்படுத்தி, மண் நிரப்பி தயாராக உள்ள பக்கெட்டில் தூவி விதை மறையும்படி மண்ணைக் கிளறி விட்டு பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கவேண்டும். அடுத்த நான்கு நாட்களில் கீரை துளிர்க்கும். இப்படித் துளிர்த்து வரும்போது வெந்தயக்கீரைக்கு வெயில் அதிகம் இருக்கக் கூடாது. தென்னை ஓலை அல்லது நிழல்வலை மூலமாக வெயிலைக் குறைக்கலாம். களைகள் தென்பட்டால் கையால் பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். 10-ம் நாளில், 100 கிராம் மண்புழு உரத்தை மேலுரமாகத் தூவிவிடவேண்டும் (இது நர்சரிகளில் கிடைக்கும்). தினமும் நீர் தேங்காத அளவுக்கு தண்ணீர் தெளித்து வந்தால், கீரை 'தளதள’ என வளர்ந்து, 25-ம் நாளில் அறுவடைக்குத் தயாராகிவிடும்.



தொடர்ந்து, பாலக் கீரை, கொத்தமல்லித்தழை, அரைக்கீரை, சிறு கீரை, மணத்தக்காளி போன்ற கீரைகளையும் தொடர் அறுவடை கொடுக்கக்கூடிய செங்கீரை, புதினா போன்றவற்றையும் வளர்க்கலாம். கீரை விவசாயத்தை வெற்றிகரமாக முடித்து அனுபவம் பெற்ற பிறகு, காய்கறி விவசாயத்தின் பக்கம் கவனம் செலுத்தலாம்.

நிழல்வலையில் கவனம்!

 மண் நிரப்பிய வாளியை மாடியில் வைக்கும் போது, நேரடியாகத் தரையில் வைக்கக்கூடாது. மூன்று செங்கற்களை அடுப்பு போல கூட்டி அதன் மீது வைக்கலாம். நிறைய தொட்டிகளை வரிசையாக வைக்கும்போது நீளமான மரப்பலகையின் மீது தொட்டிகளை வைக்கலாம். கீரைகள் வளர்க்க மிதமான சீதோஷ்ணம் தேவை. நன்றாக வெயில் கொளுத்தும் மாதங்களில் பகல் நேரங்களில் கீரைத் தொட்டிகள் மேலே நிழல் வலை அமைக்க வேண்டும். மாலை நேரங்களில் பந்தலை விலக்கிக் கொள்ளலாம்.



கோடை காலங்களில் நிழல்வலை பயன்படுத்தினால், அதிக மகசூல் எடுக்கலாம். 10 லிட்டர் ஆயில் பக்கெட்டில், 5 கிலோ கீரை மகசூல் கிடைக்கும். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வழியாதபடி தார்பாலின் பந்தல் அமைத்துக் கொள்ளலாம்.

 முட்டைஓடு... பூச்சியே ஓடு!

மாடித்தோட்டத்தில் பெரும்பாலும் பூச்சித்தாக்குதல் இருக்காது. அப்படியும் தென்பட்டால், முட்டை ஓட்டுத்தூளுடன், சிறிது உப்பைக் கலந்து பக்கெட்டை சுற்றிலும் வளையம் போட்டால் பூச்சிகள் அண்டாது.
-செழிக்கும்-நந்தினி செந்தில்நாதன்படங்கள்: ரமேஷ் கந்தசாமி
 
RAWALIKADate: Tuesday, 10 Mar 2015, 8:42 AM | Message # 3
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
வீட்டுக்குள் விவசாயம் - 3


காம்பவுண்டுக்குள் காய்கறி!

நஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில்... வீட்டில் விவசாயம் செய்யத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பகுதி இது. இதழ்தோறும் வீட்டுத்தோட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களும், தொழில்நுட்பங்களும் இங்கே இடம் பிடிக்கின்றன. வீட்டு மொட்டைமாடியில் காய்கறி பயிர் செய்து வரும் ஈரோடு சரஸ்வதி, தனது அனுபவங்களைத் தொடர்கிறார்.



“செடிப்பயிர், கொடிப்பயிர், கிழங்குப்பயிர் என மூன்றுவகை பயிர்களையும் மாடித்தோட்டத்தில் சாகுபடி செய்யலாம். கத்திரி, மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை, காலிஃபிளவர் உள்ளிட்ட காய்கறிச் செடிகளை நாற்றங்கால் முறையில்தான் நடவு செய்ய வேண்டும். இதற்குத் தனியாக நாற்றங்கால் தொட்டிகளை அமைக்க வேண்டும். கீரை, அவரை, கொத்தமல்லித்தழை, பீன்ஸ் போன்ற செடிகளையும்; பாகல், புடலை, பீர்க்கன், சுரைக்காய் உள்ளிட்ட கொடிவகைப் பயிர்களையும்; பீட்ரூட், முள்ளங்கி, கேரட் போன்ற மண்ணுக்குக் கீழ் வளரும் காய்கறிகளையும் நேரடி விதைப்பு மூலம் விளைவிக்கலாம். நாற்றங்கால் விடத் தேவையான பக்கெட்டில், செறிவூட்டிய மண்ணை இட்டு நிரப்பி, விதைநேர்த்தி செய்யப்பட்ட காய்கறி விதைகளைப் பரவலாகத் தூவி தண்ணீர் தெளிக்க வேண்டும்.

தக்காளி!

நாற்றங்காலில் தக்காளி விதைகளை விதைத்த, 10-ம் நாளில் ஒரு லிட்டர் தண்ணீரில் 30 மில்லி பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து வேர் பகுதியில் ஊற்ற வேண்டும். நாற்று நன்றாக வளர இது அவசியம். விதைத்த 25 நாட்களில் தக்காளி நாற்றை எடுத்து நட வேண்டும். தக்காளி செடிக்கு 3 அடி உயரம் கொண்ட தொட்டி அல்லது மரப்பெட்டிகளைப் பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும். ஊட்டமேற்றிய மண்ணாக இருந்தால், இரண்டு நாற்றுகளும், நீளம் அதிகமான பெட்டியாக இருப்பின், அதற்கு தகுந்தாற்போல் அதிக நாற்றுகளையும் நடலாம். தகுந்த இடைவெளி அவசியம். நடவு செய்த 60-ம் நாளில் இருந்து தக்காளியை அறுவடை செய்யலாம். தொடர்ந்து 60 நாட்களுக்கு மகசூல் கொடுக்கும். இடையில் மண்புழு உரத்தை 500 கிராம் அளவில் மேலுரமாகக் கொடுக்கலாம். பூச்சித்தாக்குதல் இருந்தால், பூக்கும் பருவத்தில் மட்டும் 5 மில்லி வேப்பெண்ணெயை 100 மில்லி காதி சோப் கரைசலில் கலந்து புகைபோல் தெளிக்க வேண்டும். அப்படிச் செய்தால், சாறு உறிஞ்சும் பூச்சிகள், அசுவிணிப்பூச்சிகள் தீண்டாது. காய்ப் பருவத்தில் ஒரு முறை இதே கரைசலைத் தெளித்தால் காய்ப்புழு வராது.

ஆண்டு முழுவதும் அறுவடை!

தக்காளியில் காய் பிடிக்கும் தருணத்தில் எடை தாங்காமல் தண்டு ஒடிந்து விடும் வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க தொட்டியில் தாங்குக் குச்சிகளை நட்டு, செடியோடு இணைத்துக் கட்டவேண்டும். நன்றாகப் பராமரித்தால் ஒரு செடியிலிருந்து 3 கிலோ வரை மகசூல் பெறலாம். தினந்தோறும் தக்காளி தேவை என்றால், நாற்றங்கால், காய்ப்பு, அறுவடை என்கிற மூன்று பருவங்களும் ஒரே சமயத்தில் இருக்கும்படி வடிவமைத்துக்கொண்டால் ஆண்டு முழுவதும் கிடைக்கும். இதற்குத் தொட்டிகளை அதிகப்படுத்த வேண்டியது அவசியம்.

கத்திரி!

கத்திரியின் வேர்கள் ஆழமாகச் செல்லக்கூடியவை. அதனால், 4 அடி உயரம் உள்ள சின்டெக்ஸ் பீப்பாய்களைப் பயன்படுத்துவது நல்லது. 40 நாட்கள் வயது கொண்ட கத்திரி நாற்றுகளைத் தொட்டியில் நடவுசெய்து, பாசன நீருடன் பஞ்சகவ்யா கலந்து கொடுக்கவேண்டும். செடி, படர்ந்து கிளைபரப்பும் தன்மையும் கொண்டது என்பதால், தொட்டியில் இரண்டு நாற்றுகளை நடவு செய்து 25-ம் நாளில் நன்றாக இருக்கும் நாற்றை விட்டு மற்றொரு நாற்றைப் பிடுங்கி அப்புறப்படுத்தி விடலாம். நடவு செய்த 100-ம் நாளில் இருந்து கத்திரி அறுவடைக்கு வந்து விடும். மாதம் இருமுறை மேலுரம் கொடுத்து வந்தால், 250 நாட்கள் வரையிலும் கூட மகசூல் கொடுக்கும். மேலுரமாக 500 கிராம் மண்புழு உரம் ஒரு முறை கொடுக்க வேண்டும். தேவைப்படும்போது, ஆட்டு எரு அல்லது தொழுவுரத்தை அரைகிலோ அளவுக்குக் கொடுத்து வரலாம்.



காய்க்கும் பருவத்தில் காய்ப்புழுத் தாக்குதல் காணப்படும். இஞ்சி, பூண்டு, புகையிலை ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கசக்கி ஒன்றாகக் கலந்து அரை லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலக்க வேண்டும். மாட்டுச் சிறுநீர் இல்லையென்றால், 250 மில்லி மோரில் கலந்து கொள்ளலாம். அதோடு, 200 மில்லி காதி சோப் கரைசல் சேர்த்து இரண்டு நாட்கள் ஊறவைத்து வடிகட்டி... செடி முழுவதும் நன்றாக நனையும்படி புகைபோல் தெளிக்க வேண்டும். பூக்கும் பருவத்தில் ஒருமுறையும், காய்க்கும் பருவத்தில் நான்கு முறைகளும் இந்தக் கரைசலைத் தெளித்தால் காய்ப்புழுத் தாக்குதல் இருக்காது. தரமான காய்களைப் பறிக்கலாம். நன்றாகப் பராமரித்தால் ஒரு செடியில் இருந்து, குறைந்தபட்சம் 6 கிலோ காய்களை அறுவடை செய்யலாம்.

மிளகாய்!

 40 நாட்கள் முதல் 50 நாட்கள் வயது கொண்ட மிளகாய் நாற்றுகளை நடவு செய்யலாம். இதை 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாளிகளில் நடவு செய்யலாம். மூன்று மாதங்களில் காய்ப்புக்கு வரும். தொடர்ந்து  10 மாதங்கள் வரை நல்ல மகசூல் கொடுக்கும்.



கொடிப் பயிர்கள்!

மாடியில், நைலான் கயிறுகளைக் குறுக்கு நெடுக்காகக் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பாகல், பீர்க்கன், புடலை, சுரை போன்ற கொடிப்பயிர்களை தலா 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பக்கெட்டில் மண் கலவை நிரப்பி பயிர் செய்யலாம். 35-ம் நாளில் கொடியை எடுத்து, சிறிய பந்தல் போன்று அமைக்கப்பட்ட கயிற்றில் படரவிட்டால், 120-ம் நாள் முதல் காய்கள் தொங்கும். ரகத்துக்கு ஒரு கொடி வீதம் படர விட்டாலே போதுமானது. இதற்கும் உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை அனைத்தும் முந்தையப் பயிர்களுக்குச் சொன்னது போலவே மேற்கொள்ளலாம்.

முள்ளங்கி, பீட்ரூட், கேரட், வெங்காயம் உள்ளிட்ட மண்ணுக்கும் அடியில் வளரும் பயிர்களை மண்பானை, பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் தேவையான மண் கலவையை நிரப்பி தகுந்த இடைவெளியில் நடவு செய்யலாம். வீட்டுத்தோட்டத்தைப் பொறுத்தவரை... அனைத்துப் பயிர்களுக்குமே நீர் மேலாண்மை, உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை அனைத்தும் ஒரேமாதிரிதான். மாடித்தோட்டத்தின் மையப்பகுதியில் சோப்புக் கரைசலுடன், விளக்கு எண்ணெய் கலந்த விளக்குப்பொறி அமைத்து இரவு நேரத்தில் எரிய விட்டால்... வெளியில் இருந்து வரும் பூச்சிகளை அழிக்கலாம்’’ என்று வரிசையாக விவரித்த சரஸ்வதி, நிறைவாக,

“வீட்டுத்தோட்டம் மூலம், நம் குடும்பத்துக்குத் தேவையான நஞ்சில்லா காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம். எல்லா சீசனிலும் எல்லா காய்கறிகளையும் பெற்றுக் கொள்ளலாம். நல்ல உடற்பயிற்சியும் கிடைக்கும். மனம் புத்துணர்வு பெறும். காற்று மாசு வீட்டுக்குள் வராது. வீட்டுக்குள் குளுமை நிலவும். இப்படியான பல நன்மைகளைக் கொண்ட வீட்டுத்தோட்டம், ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார் அக்கறை பொங்க.

மாடியில் மண்புழு உரம்!



பயிர் இலைக்கழிவுகள் மற்றும் காய்கறிக் கழிவுகளை சிறிய பிளாஸ்டிக் பேரலில் போட்டு அதில் பாதி அளவு பசுஞ்சாணம் போட்டு நிரப்பி... அது நன்கு மட்கிய பிறகு, மண்புழுக்களை விட்டு நிழலான பகுதியில் வைக்க வேண்டும். தினந்தோறும் தண்ணீர் தெளித்து வந்தால், மூன்று மாதங்களில் காபித்தூள் நிறத்தில் மண்புழு உரம் கிடைக்கும். அதை, செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். இது, தழைச்சத்து கொண்ட நல்ல உரம். தொடர்ந்து மட்கும் கழிவுளை, பேரலில் கொட்டி வந்தால் வீட்டுத்தோட்டத்துக்குத் தேவையான மண்புழு உரத்தை ஆண்டு முழுவதும் நாமே தயாரித்துக் கொள்ள முடியும்.

தொடர்புக்கு,

 ப.சரஸ்வதி, 

செல்போன்: 95000-58591




-செழிக்கும்

 நந்தினி செந்தில்நாதன் 

படங்கள்:  ரமேஷ் கந்தசாமி
 
RAWALIKADate: Wednesday, 25 Mar 2015, 8:45 PM | Message # 4
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
வீட்டுக்குள் விவசாயம் - 4


நன்றி - பசுமை விகடன்

மானியத்தில் மாடித்தோட்டம்!

நஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் வகையில்... வீட்டில் விவசாயம் செய்யத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பகுதி இது. இதழ்தோறும் வீட்டுத்தோட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களும், தொழில்நுட்பங்களும் இங்கே இடம் பிடிக்கின்றன.

வீட்டுத்தோட்டம் அமைப்பது தொடர்பாக சமீப நாட்களாக ஏற்பட்டு வரும் விழிப்பு உணர்வைத் தொடர்ந்து தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை, மொட்டைமாடியில் காய்கறி உற்பத்தி செய்யும் வகையில் ’நீங்களே செய்து பாருங்கள்’ என்ற நகர்ப்புற காய்கறி அபிவிருத்தித் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் மானிய விலையில் வீட்டுத்தோட்டம் அமைக்கத் தேவையான பைகள், விதைகள், சிறு கருவிகள் மற்றும் இடுபொருட்கள் ஆகியவற்றை வழங்குவதுடன், தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.



இத்திட்டம் குறித்து இங்கு விளக்குகிறார், கோயம்புத்தூர் மாவட்ட வேளாண் தோட்டக்கலை துணை இயக்குநர்  ஏ.ராமகிருஷ்ணன். “நமது உணவில் காய்கறிகள் தவறாமல் இடம் பெறவேண்டும். 85 கிராம் பழங்களும், 300 கிராம் அளவிலான காய்கறிகளையும் வயது வந்தோர் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் சரிவிகித உணவு என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். ஆனால், பெரும்பாலும் நாள் ஒன்றுக்கு 130 கிராம் அளவுக்குத்தான் நாம் எடுத்துக் கொள்கிறோம் என்கின்றன, புள்ளிவிவரங்கள். பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களின் விலையேற்றம் காரணமாக உற்பத்திச்செலவு அதிகரித்து, காய்கறிகளின் விலை உயர்ந்து விடுவதால், தினந்தோறும் காய்கறிகளை உணவில் சேர்க்கமுடியாத நிலையில் பலர் இருக்கிறார்கள்.

ஆனால், விலைவாசியைப் பற்றி கவலைப்படாமல், நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே நமது வீட்டில் உற்பத்தி செய்து கொள்ளும்விதமாக நகர்புற காய்கறி அபிவிருத்தித் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது, தமிழ்நாடு அரசு. மானியத்துடன் கூடிய இந்தத் திட்டம் தற்போது சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளி களுக்கு தேங்காய் நார்கழிவுக் கட்டி (காயர் பித்) 2 கிலோ, 11 இஞ்சுக்கு 11 இஞ்ச் அளவுள்ள பாலித்தீன் பைகள், கத்திரி, தக்காளி, மிளகாய் விதைகள் தலா 5 கிராம், வெண்டை, கொத்தவரை, செடி அவரை, முள்ளங்கி விதைகள் தலா 20 கிராம் மற்றும் கீரைகள், கொத்தமல்லி விதைகள் தலா 200 கிராம் எனக் கொடுக்கிறோம்.

இடுபொருட்கள் ஐந்து சாதனங்கள் ஐந்து!

அதோடு, நாற்று உற்பத்தி செய்வதற்கு வசதியாக 50 குழிகளைக் கொண்ட ஒரு குழித்தட்டு, 5 லிட்டர் பூவாளி, கைத்தெளிப்பான், மண் கிளறும் முள்கொத்து, மண் அள்ளும் கரண்டி ஆகியவற்றையும் கொடுக்கிறோம். பயிர் வளர்ச்சிக்காக ஒரு கிலோ உரம், பூச்சித்தாக்குதல் இருந்தால், சமாளிக்க 100 மில்லி வேம்புப் பூச்சிவிரட்டி பாக்கெட், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா தலா 200 கிராம், சூடோமோனாஸ் 50 கிராம், டிரைகோடெர்மா விரிடி 50 கிராம் ஆகியவற்றையும் கொடுக்கிறோம். இவற்றுக்காக 50 சதவிகிதம் மானியம் போக பயனாளிகள் 1,375 ரூபாய் செலுத்த வேண்டும் (இது 2013-14-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தொகை). இதோடு, வீட்டுத்தோட்டம் அமைப்பது தொடர்பான தொழில்நுட்ப விவரங்கள் அடங்கிய கையேடு ஒன்றையும் அளிக்கிறோம்.

நடைமுறைபடுத்தும் போது, ஏற்படும் சந்தேகங்களுக்கு எங்கள் அலுவலர்கள் விளக்கம் அளிப்பார்கள்”  என்ற ராமகிருஷ்ணன், நிறைவாக, 



“வீட்டு மாடியில் அல்லது வீட்டைச் சுற்றி காலி இடம் இருக்கும் மாநகராட்சி எல்லைக்குள் குடியிருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம். திட்டத்தில் இணைய விரும்புபவர்கள், தோட்டக்கலை அலுவலகத்தில் குடும்ப அட்டை நகல், முகவரிச் சான்று... போன்ற  இருப்பிட ஆதாரத்தைக் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். வாடகை வீட்டில் வசிப்பவர்களும் கூட, இந்தத் திட்டத்தின் மூலம் மாடித்தோட்டம் அமைத்து மானியம் பெற முடியும். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகளைத் தேர்வு செய்கிறோம்.

2013-14-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 350 நபர்களுக்கு வழங்கியிருக்கிறோம். தொடர்ந்து பதிவு நடந்து வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வீட்டுத்தோட்டம் அமைப்பதால் வீடுகளின் வெப்பநிலை 6 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது. மாசுபடுதல் கட்டுப்படுத்தப்படுகிறது. மாடியில் தோட்டம் அமைக்கும்போது, செடிகளில் பூச்சி-நோய்களின் தாக்குதலும் வெகுவாக குறைகிறது. ஆக்சிஜன் அதிகளவு உற்பத்தியாகிறது. அத்துடன் நமக்கும் புத்துணர்வு கிடைக்கிறது” என்றார்.

குழித்தட்டு முறையில் நாற்று உற்பத்தி!

குறைந்த இடத்தில் அதிக நாற்றுகளை உற்பத்தி செய்ய குழித்தட்டு உதவுகிறது. 50 குழிகளைக் கொண்ட இதில் ஒவ்வொரு குழியும் 2 முதல் 3 அங்குலம் அளவில் இருக்கும். இதில் அதிக நீர் வெளியேற துளைகள் இருக்கின்றன. இந்தக் குழிகளுக்குள் தேங்காய்நார்க் கழிவுகளை இட்டு நிரப்பி, ஒரு விதையை அதில் நட வேண்டும். பிறகு, நுண்ணுயிர்கள் அடங்கிய கலவையை தென்னைநார்க் கழிவில் சேர்த்து கலந்து, குழியை மூட வேண்டும். பூவாளி மூலமாக லேசாக தண்ணீர் தெளித்து விதைகள் முளைத்து வரும் வரை, பாலித்தீன் கொண்டு மூடாக்கு போல மூடி வைக்க வேண்டும். முளைத்ததும் பாலித்தீனை அப்புறப்படுத்தி விட்டு, வெயில் படுமாறு வைக்க வேண்டும். அதிக, வெயில் நேரங்களில் நிழலில் வைத்துக் கொள்ளலாம். 30 நாட்களுக்கு மேல், தேவையைப் பொறுத்து நாற்றைப் பறித்து, தொட்டிகளிலோ, பைகளிலோ நடவு செய்யலாம்.

காய்கறிக் கழிவில் உரம்!

வீட்டில் வீணாகும் காய்கறிக் கழிவுகளையே உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 5 கிலோ காய்கறிக் கழிவில், 500 கிராம் நாட்டுச் சர்க்கரையைக் கலந்து ஒரு பீப்பாயில் போட்டு ஒருவாரம் வைத்திருந்தால் இரண்டும் கலந்து திரவமாக மாறிவிடும். இத்திரவத்தை செடிகளுக்கு ஊற்றினால், செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இதை அதிகமாக விட்டாலும் பாதிப்பு வராது.

-செழிக்கும்


தொடர்புக்கு,

வேளாண் தோட்டக்கலைத்துறை அலுவலகம்,

கோயம்புத்தூர்.

0422-2453578

நந்தினி செந்தில்நாதன்

 படங்கள்: ஸ்ரீநிவாசன், சே.சின்னதுரை
 
RAWALIKADate: Sunday, 12 Apr 2015, 10:45 PM | Message # 5
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
வீட்டுக்குள் விவசாயம் - 5

விதைப்பு முறைகள்!


நஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில்... வீட்டில் விவசாயம் செய்யத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பகுதி இது. இதழ்தோறும் வீட்டுத்தோட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களும், தொழில்நுட்பங்களும் இங்கே இடம் பிடிக்கின்றன.

வீடுகளில் காய்கறி வளர்ப்பை ஊக்குவிக்கும்விதமாக, தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நகர்ப்புற காய்கறி அபிவிருத்தித் திட்டம் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். அந்தத் திட்டத்தின் மூலமாக பலனடைந்த கோயம்புத்தூர் லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா கனகராஜ், தனது அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.



‘‘எனக்குச் சொந்த ஊரே கோயம்புத்தூருதான். கணவர் கனகராஜ் போட்டோ ஸ்டூடியோ வெச்சிருக்கார். நான் வீட்டைப் பார்த்துக்கிறேன். நகர்ப்புற காய்கறி அபிவிருத்தித் திட்டம் பத்தி தகவல் தெரிஞ்சு உடனே, முறைப்படி விண்ணப்பம் கொடுத்தேன். என்னைத் தேர்வு செஞ்சு மாடித்தோட்டம் அமைச்சுக் கொடுத்தாங்க. இப்ப ஒரு வருஷம் ஆச்சு. வீட்டுக்குத் தேவையான பெரும்பாலான காய்கறிகளை மாடியில் இருந்துதான் பறிச்சுக்கிறேன்’’ என்றவர், வீட்டுத்தோட்டம் அமைக்கும் தொழில்நுட்பங்களை ஆர்வமாக அடுக்கினார். அவரின் அனுபவம், இங்கே பாடமாக விரிகிறது.

உடனே விதைக்கக் கூடாது!

“வீட்டுத்தோட்டம் அமைக்கத் தேவையான பொருட்கள் அத்தனையையும் தோட்டக்கலைத்துறை ஒரு தொகுப்பாக (கிட்) கொடுக்கிறது. இதில்  1. தென்னைநார் கழிவு கட்டி 2 கிலோ 2. யு.வி கதிர்கள் தாங்கக்கூடிய பாலிதீன் பை - 20 3. பாலிதீன் விரிப்பு (4மீX4மீ) - 1. 4. உயிர் உரங்கள் - 2 பை. 5. உயிர் பூஞ்சண கொல்லி - 2 பை. 6. இயற்கை வேம்புப் பூச்சிக் கொல்லி - 250மி.லி.  7. கைத்தெளிப்பான் - 1. 8. பூவாளி-1. 9. முள்கரண்டி - 1 . 10. மண்அள்ளும் கரண்டி - 1 . 11. குழித்தட்டு - 1 12. நீரில் கரையும் உரம் (19:19:19:) - 2 கிலோ 13. செயல்முறை விளக்கக் கையேடு ஆகியவை தொகுப்பில் இருக்கும்.
முதலில் தென்னை நார்க்கழிவு (காயர் பித்) கட்டிகள் மீது சொதசொதப்பு ஏற்படும்படி தண்ணீர் தெளிக்க வேண்டும். தொடர்ந்து 10 நிமிடங்களில் தென்னை நார்க்கழிவுக் கட்டியானது நான்கு முதல் ஐந்து பங்காக அதிகரிக்கும். அதோடு தொழுவுரம் அல்லது ஆட்டு எரு ஒரு கிலோவை கலந்து கொள்ள வேண்டும் (இந்த இடுபொருட்களை  நாம்தான் வெளியில் வாங்கவேண்டும்). விதைக்கும் பையின் பக்கவாட்டில் கோணி ஊசி உட்புகும் அளவில் நான்கு துவாரங்களைப் போட்டுக் கொள்ள வேண்டும். தொடர்ந்து பைகளில் ஊட்டமேற்றிய கலவையை நிரப்ப வேண்டும். பைகளின் உயரத்தில் ஓர் அங்குலம் காலியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கலவை நிரப்பப்பட்ட பைகளில் உடனே விதையிடாமல், குறைந்தபட்சம் 7 நாட்கள் வைத்திருக்க வேண்டும். ஏழு நாட்களில் தென்னை நார்க்கழிவானது, காபித்தூள் நிறத்துக்கு மாறிவிடும். இதுதான் விதையிட ஏற்ற தருணம். இருபது பைகளிலும் பகிர்ந்து விதைப்பது நல்லது.



கத்திரி, மிளகாய், தக்காளி ஆகியவற்றை நாற்றங்கால் முறையில்தான் வளர்க்க வேண்டும். வீடுகளில் நாற்று உற்பத்தி செய்வதற்கு வசதியாக குழித்தட்டு முறை என்ற எளிமையான தொழில்நுட்பம் ஒன்றை தோட்டக்கலைத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறையில் வீட்டுத் தோட்டத்துக்கு மட்டுமல்ல, பல ஏக்கர் விவசாய சாகுபடிக்குத் தேவையான நாற்றுகளையும் குறைந்த இடத்தில் உற்பத்தி செய்து கொள்ள முடியும்.

பகிர்ந்து பயிரிடு!

20 பைகளிலும் ஒரே ரகத்தைப் பயிரிடக்கூடாது. காய்கறிகள், கீரை, கிழங்கு... என்று பலவித பயிர்களை வளர்க்கும்போதுதான் சரிவிகித காய்கறி உணவு கிடைக்கும். அதன் அடிப்படையில் கத்திரி, தக்காளி ஆகிய இரண்டு செடிகளையும் தலா 3 பைகளில் நடவு செய்யலாம். மிளகாய்ச் செடியை ஒரு பையில் வளர்க்கலாம். இதில் கத்திரி, மிளகாய் ஆகியவற்றின் மொத்த சாகுபடிக் காலம் 6 மாதங்கள். தக்காளியின் ஆயுட்காலம் 150 நாட்கள். இந்த மகசூல் காலம் முடிந்ததும் சுத்தமான இடத்தில் பைகளைக் கொட்டி காலிசெய்து... கொட்டப்பட்ட கலவையின் ஈரப்பதம் காய்ந்த பிறகு மீண்டும் அந்த மண்கலவையுடன், தொழுவுரம், மண்புழு உரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களை முதலில் சொன்ன அளவில் கலந்து பைகளில் நிரப்பி மீண்டும் நடவு செய்யலாம். இந்த மறுசுழற்சிமுறையில் செடிகள் தொடர்ந்து சிறப்பான மகசூலைக் கொடுக்கும். நாற்றங்கால் செடிகளை பைக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும்.



நேர்த்தியாக செய்ய வேண்டும் நேரடி விதைப்பு!

நேரடி விதைப்புப் பயிர்களான வெண்டை, கொத்தவரை, செடி அவரை ஆகியவற்றின் விதைகளை பைக்கு நான்கு வீதம் ஊன்ற வேண்டும். 130 நாள் பயிர்களான இவற்றில், வெண்டை விதையை 3 பைகளிலும் மற்ற இரண்டு செடிகளை தலா இரண்டு பைகளிலும் விதைக்க வேண்டும். 30 நாட்களில் பலன் தரக்கூடிய குறுகிய காலப்பயிர்களான முள்ளங்கி, கீரை, கொத்தமல்லி ஆகிய மூன்றையும் தலா 2 பைகளில் விதைக்கலாம். விதையின் அளவைவிட இரண்டரை மடங்கு ஆழத்தில் விதைகளை ஊன்ற வேண்டும். விதை ஊன்றியதும் அதே மண் கொண்டு மூட வேண்டும். கீரை விதைப்பைப் பொறுத்தமட்டில், ஒரு தேக்கரண்டி விதையுடன், இரண்டு பங்கு சலித்த மணல் அல்லது உயிர் உரத்தைக் கலந்து பைகளில் தூவி விடவேண்டும். தொடர்ந்து பழைய செய்தித்தாள் ஒன்றை விரித்து கீரை விதைத்த பையினை மூடிவைக்கவேண்டும். பின்னர் பூவாளி கொண்டு நீர் தெளிக்கவேண்டும். விதைகள் முளைக்கத் தொடங்கியவுடன் தாளை அப்புறப்படுத்தி விடலாம்.

நீர் மேலாண்மை!

பைகளின் தன்மை, பருவநிலை, பயிரின் வளர்ச்சி இவற்றை மனதில் கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். கோடை காலம் எனில் ஒரு நாளைக்கு இரண்டு முறை நீர் தெளிக்க வேண்டும். தேங்காய் நார்க்கழிவானது, இயற்கையில் நீரைத் தக்க வைக்கும் தன்மை கொண்டது. அதனால், கோடை காலம் தவிர மற்ற நாட்களில் ஒரு முறை தண்ணீர் தெளித்தாலே போதுமானது. காய்ச்சலும் பாய்ச்சலுமான பாசனம்தான் சிறந்தது. தொட்டி முறை விவசாயத்தில் அதிகப்படியான நீரை ஊற்றக் கூடாது. அதிகப்படியான நீர் மண்ணில் உள்ள சத்துக்களை வெளியேற்றுவதுடன், பூஞ்சண நோய்க்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடும்.



காய்ந்த குச்சி ஒன்றை எடுத்து பைகளில் உள்ள மண் கலவையினுள் குத்திப்பார்க்க வேண்டும். பைகளில் உள்ள கலவையின் துகள்கள் குச்சியில் ஒட்டினால் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. போதிய ஈரப்பதம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அப்படி மண்துகள் குச்சியில் ஒட்டாத பட்சத்தில் செடிகளுக்கு நீர் தெளிக்கலாம். 
உர மேலாண்மை, மூலிகை வளர்ப்பு, பால்கனியில் பசுமைக்குடில் விவசாயம் மற்றும் வீட்டுத்தோட்டத்தில் தான் பெற்ற லாபம் ஆகியவை குறித்து கிருத்திகா கனகராஜ் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அடுத்த இதழில்...



-செழிக்கும்

 நந்தினி செந்தில்நாதன்

 படங்கள்: த.ஸ்ரீநிவாசன், சே.சின்னதுரை
 
RAWALIKADate: Monday, 27 Apr 2015, 7:39 AM | Message # 6
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
வீட்டுக்குள் விவசாயம் - 6


நன்றி : பசுமை விகடன் 

(மாடி தோட்டம்)


நஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில், வீட்டில் விவசாயம் செய்யத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பகுதி இது. இதழ்தோறும் வீட்டுத்தோட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களும், தொழில்நுட்பங்களும் இங்கே இடம் பிடிக்கின்றன. கோயம்புத்தூரைச் சேர்ந்த வீட்டுத்தோட்ட விவசாயி கிருத்திகா கனகராஜின் அனுபவப் பகிர்வைப் பார்த்து வருகிறோம். இந்த இதழிலும் அவர் தொடர்கிறார்.

“தொட்டியில் மண்ணை நிரப்பி நாற்றை நட்டு தண்ணீர் ஊற்றுவதுடன் கடமை முடிந்ததாக நினைக்கும் பலரும், ‘பூ எடுக்கல. காய் அதிகம் பிடிக்கல’ எனப் புலம்புவதைக் கேட்கலாம். ‘நாம் கொடுத்தால் பயிர் நமக்குக் கொடுக்கும்’ என்பதுதான் பயிர்களுக்கான அடிப்படை. அதை மறந்துவிட்டு, ‘நான் எதையும் கொடுக்க மாட்டேன். நீ மட்டும் கொடு’ எனச் செடிகளிடம் கேட்பது எந்த வகையில் நியாயம் நண்பர்களே?



உரமிடு... உயிர்கொடு!

வேளைக்கு உணவு உண்டால்தானே நம்மால் சுறுசுறுப்பாகச் செயல்பட முடிகிறது. அதுபோலத்தான் பயிர்களுக்கும். அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான உரங்களைக் கொடுத்தால்தான் மகசூல் கிடைக்கும்.

வீட்டுத்தோட்டப் பயிர்களுக்கு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஆட்டு எரு, தொழுவுரம், செறிவூட்டிய மண்புழு உரம் ஆகியவற்றில் எதையாவது ஒரு தொட்டிக்கு 200 கிராம் வீதம் காய்ப்பு முடியும் வரை கொடுத்துவர வேண்டும். அப்போதுதான் நல்ல தரமான மகசூலை எடுக்க முடியும். மேலே சொன்ன இயற்கை உரங்களுடன் ஏதாவது ஓர் உயிர் உரத்தை 20 கிராம் அளவில் கலந்து கொள்ளலாம். இது, நுண்ணுயிரிகளை பல மடங்காகப் பெருக்கி, பயிருக்குத் தேவையான சத்துக்களை விரைவாக எடுத்துக் கொடுக்க உதவும்.

முட்டுக்கொடுக்க வேண்டும்!

தக்காளி, கொடிஅவரை, கத்திரி, மிளகாய் போன்ற செடிகள் வளரும்போது, காற்றின் வேகம் மற்றும் காய்களின் எடை போன்ற காரணங்களால் கிளைகள் ஒடிந்தும், தண்டு முறிந்தும் போய்விட வாய்ப்பு இருக்கிறது. எனவே காய் பிடித்தவுடன் குச்சிகளை ஊன்றி, அதில் செடிகளை இணைத்துக் கட்ட வேண்டும்.



சூட்டைத் தடுக்க மூடாக்கு!

வெயில் காலங்களில் செடிகளுக்கு ஊற்றும் தண்ணீரின் பெரும்பகுதி ஆவியாகி விடும். இதைத் தடுக்க... செடிகளின் வேர்பகுதிகளைச் சுற்றிலும் இலைகள், தென்னை மட்டைத்துகள் போன்ற மட்கும் பொருட்களைக் கொண்டு மூடாக்கு அமைக்கலாம். இது, தண்ணீர் ஆவியாவதைத் தடுப்பதுடன் களைகளையும் கட்டுப்படுத்தும். தவிர, இவை மட்கி உரமாகவும் மாறிவிடும்.

அதிகாலைப் பார்வை அவசியம்!

‘கேட்காத கடனும், பார்க்காத பயிரும் கைக்கு வந்து சேராது’ என்கிற பழமொழி வீட்டுத்தோட்டத்துக்கும் பொருந்தும். என்ன வேலை இருந்தாலும் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து, வீட்டுத்தோட்டத்தை ஒரு பார்வை பார்க்க வேண்டும். அப்போதுதான் புழு, பூச்சிகள் காலை வெயிலுக்காக இலைகள் மீது தவழ்ந்து திரிவதைக் காண முடியும். அவற்றை அப்படியே பிடித்து அழித்து அப்புறப்படுத்த வேண்டும்.

பால்கனியில் பறவைக்கூடு!

வீட்டுத்தோட்டத்தின் சில இடங்களில் அட்டைப்பெட்டி, மூங்கில் தூர் ஆகியவற்றை 10 அடி உயரத்தில் நிறுத்தி பறவைப்பரண் அல்லது பறவைக்கூடுகளை அமைக்கலாம். பரண் தளத்தின் மீது, பறவைகள் குடிக்க வாய் அகன்ற சிறிய பாத்திரத்தில் தண்ணீரும், ஒரு தட்டில் தீனியும் வைத்தால்... தேடிவரும் பறவைகள் தீனியோடு, செடிகளில் மேயும் புழுக்களையும் கபளீகரம் செய்துவிடும். புறநகர் பகுதிகளில் தோட்டம் அமைப்பவர்கள் இதைச் செய்தால் 70 சதவிகிதம் அளவுக்கு புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும்” என்ற கிருத்திகா கனகராஜ் நிறைவாக,



சொத்தைக்காய், சுத்தக்காய்!

“என்னதான் பராமரிப்பு செய்தாலும் விளையும் காய்கள் சில சொத்தையாவது தவிர்க்கமுடியாத ஒன்று. அப்படிச் சொத்தையாகும் காய்களை வீண் என்று குப்பையில் கொட்டத் தேவையில்லை. சொத்தைக் காய்களும் சுத்தமானதுதான். சொத்தை உள்ள பகுதியை மட்டும் வெட்டி எறிந்து விட்டு அந்தக் காய்களைக் கழுவி சமைக்கலாம். அதுதான் மிகுந்த சுவை கொண்டது. எங்கள் வீட்டுத்தோட்டத்தில் எங்களுக்கு இரட்டை லாபமுண்டு. குறைந்தபட்சம் மாதம் ஆயிரம் ரூபாய் வரை ஏற்பட்ட காய்கறிச் செலவு மிச்சமாகிவிட்டது ஒரு லாபம். அதோடு நஞ்சில்லா காய்கறிகள் கிடைப்பதால், பின்னாளில் ஏற்படப்போகும் மருத்துவச்செலவும் மிச்சம்” என்றார்.

-செழிக்கும்

தொடர்புக்கு,

கனகராஜ்,

செல்போன்: 73737-32236.
 
RAWALIKADate: Monday, 27 Apr 2015, 7:44 AM | Message # 7
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
பால்கனியில் பசுமைக்குடில்!




ஆண்டு முழுவதும் தரமான காய்கறிகளை வீட்டுத்தோட்டத்தில் முழுமையாக அறுவடை செய்ய முடியாது. குறிப்பாக, வெயில் கொளுத்தும் கோடை, அடைமழை, பனிக் காலங்களில் மகசூல் பாதிப்பு இருக்கும். இதைத் தடுக்க, மொட்டை மாடியில் பசுமைக்குடில் அமைக்கலாம். சந்தையில் கிடைக்கும் உபகரணங்களைக் கொண்டு குறைந்த செலவில் நாமே அமைத்து விடலாம். 10 அடி நீளம், 10 அடி அகலம், ஆறரை அடி உயரம் கொண்ட 100 சதுர அடி பரப்பில், சுமார் 30 பைகள் வைத்து, அதில் காய்கறிச் செடிகளை வளர்க்கலாம். . இது, வெளியில் இருந்து வரும் பூச்சிகளைத் தடுப்பதுடன், நீர் ஆவியாவதையும் கட்டுப்படுத்துகிறது. சீரான வளர்ச்சியைப் பெறுவதால் திறந்த வெளித்தொட்டிச் செடிகளை ஒப்பிடுகையில், பசுமைக்குடில் செடியில் நான்கு மடங்கு கூடுதல் மகசூல் கிடைக்கும்.


மஞ்சள் வண்ணம் மகசூல் திண்ணம்!


செடிகளில் ஏற்படும் ஆரம்ப கட்ட பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்த... 5 கிலோ வேப்பிலையைக் கசக்கி, 10 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைத்த கரைசலை செடிகளின் மீது தெளிக்கலாம். இது, அசுவிணி, சாறு ஊறிஞ்சும் பூச்சி போன்றவற்றைத் தடுக்கும். 

காய்ப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த... மிளகு, பூண்டு, இஞ்சி ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து, அரைத்து அரைப்பங்கு தண்ணீரில் கலந்து அதிகாலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.

வடிகட்டிய காபித்தூளை செடிகளுக்கு உரமாக போட்டால், அந்த வாசம் பூச்சிகளை விரட்டுவதுடன் செடிகளுக்கு நல்ல உரமாகவும் விளங்கும். இலைகளை அரிக்கும் ஒருவகைப்பூச்சிகளால் பச்சையம் சுரண்டப்பட்டு இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாகி விடும். இதனால் ஒளிச்சேர்க்கை நடைபெறாது. செடிகளால் உணவு தயாரிக்க முடியாமல் வாடிப்போகும். இப்படி பாதிக்கப்பட்ட இலைகளின் மீது மிளகுத்தூளை லேசாக தூவினால் இந்தப்பிரச்னை சரியாகும்.



காய்கறிச் செடிகளுக்கு இடையில் சில தொட்டிகளில் மஞ்சள் நிறப்பூக்களைக் கொண்ட செண்டுமல்லிப்பூச் செடிகளை வைக்கவேண்டியது அவசியம். மஞ்சள் நிறத்துக்கு பூச்சிகளை ஈர்க்கும் தன்மை உண்டு. ஆங்காங்கே ஜொலிக்கும் செண்டுமல்லிப் பூக்களைத் தேடி வரும் பூச்சிகள் அதன் வண்ணத்திலும், வாசனையிலும் மயங்கி அந்தத் தொட்டிகளிலேயே தங்கிவிடும். பக்கத்தில் உள்ள காய்கறிச் செடிகளை சேதாரம் செய்யாது. இந்த வகையிலும் பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

மூலிகை இருந்தால், மருத்துவம் தேவையில்லை!


எட்டு மிளகு இருந்தால் எதிரி வீட்டிலும் சாப்பிடலாம்’ என்பது மூதாதையர் வாக்கு. ‘மனைக்குள் மூலிகை இருந்தால் மருத்துவம் தேவையில்லை’ என்று அதை மாற்றி சொல்லலாம். கீரை, காய்கறிகள், கிழங்குகளோடு மூலிகைகளையும் வீட்டுத்தோட்டத்தில் பயிர் செய்துவருகிறார்கள் கிருத்திகா கனகராஜ் தம்பதி. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு முதல் உதவி மருத்துவத் தேவைக்காக கைகொடுப்பது தோட்டத்தில் வளர்ந்து வரும் மூலிகைச் செடிகளே. இந்த மூலிகைகள் பற்றியும், அதன் மருத்துவ குணங்களை பற்றியும் பேசினார்கள்.

“தூதுவளை, நிலவேம்பு, சோற்றுக்கற்றாழை, பிரண்டை, வெற்றிலைனு தொட்டிக்கு ஒரு செடி வீதம் வளத்துட்டு வர்றோம். சளி, தொண்டை சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துறதுக்கு இத பயன்படுத்துறோம். இவையெல்லாம் 6 அடி உயரம் வரை வளரக்கூடிய ஒருவகையான தாவரங்கள். கொடிகளை வெட்டி அப்படியே நடவு செய்யலாம். நடவு போட்டு 45-வது நாளில் இதன் இலைகளை பயன்படுத்தலாம். இலைகளை ரசம் வைத்து சாப்பிட்டாலும், அதன் மருத்துவ குணங்கள் கிடைக்கும்’’என்றனர்.

நந்தினி செந்தில்நாதன்

 படங்கள்: த.ஸ்ரீநிவாசன், சே.சின்னதுரை
 
  • Page 1 of 1
  • 1
Search: