லைப்ரரி
|
|
RAWALIKA | Date: Sunday, 01 Jun 2014, 9:10 PM | Message # 1 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| நாணயம் லைப்ரரி : பாசிட்டிவ், நெகட்டிவ்: உங்கள் ஆட்டிட்யூட் எப்படி?
இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் 'தி டாப் பர்ஃபார்மர்’ஸ் கைடு டு ஆட்டிட்யூட்’ என்னும் டிம் உர்ஸினி, கேரி டிமோஸ் மற்றும் மார்க் ஏ.யாபன் என்ற மூவர் சேர்ந்து எழுதியது. நம் ஆட்டிட்யூடை மாற்றிக்கொள்வதன் மூலம் நாம் நம்முடைய பணியிடத்தில் எப்படி முன்னேறலாம் என்று சொல்லும் புத்தகம் இது.
தன்னுறுதியே (பாசிட்டிவிட்டி) உலகை வெல்லத் தேவையான அடிப்படை மந்திரம். இந்தத் தன்னுறுதியையும் மனப்பாங்கையும் (ஆட்டிட்யூட்) செப்பனிட்டு சீர்செய்து வெற்றி பெறுவது எப்படி என்பதைச் சொல்லித்தருவதே இந்தப் புத்தகத்தின் பணி என்கிறார்கள் ஆசிரியர்கள்.
ஆட்டிட்யூட் என்றால் என்ன என்று சுவாரஸ்யமான சம்பவத்தைச் சொல்கிறார்கள் ஆசிரியர்கள். விற்பனை பிரதிநிதிகளுக்கான ஒருபயிற்சி வகுப்பின் இறுதியில் வகுப்புகள் எப்படி அவர்களுடைய வேலைக்கு உதவிகரமாக இருந்தது என்று பயின்றவர் களிடம் கேட்டபோது, பலரும் பல விஷயங்களைச் சொன்னார்களாம். இறுதியில் ஒருவர், 'என் வேலையை மொத்தமாக நான் கரைத்துக் குடித்துவிட்டேன். இந்தமாதிரி பயிற்சி வகுப்புகளெல்லாம் எந்த விதத்திலும் எனக்கு பிரயோஜனமில்லை’ என்றாராம். அட, திறமையான ஆளா இருப்பாரு போலிருக்கே என்று நினைத்து அவருடைய பாஸிடம் பேசினால் அவரோ, 'அவன் நல்ல சேல்ஸ்மேன்தான். ஆனால், அவன் நல்ல என்ற இடத்திலேயே இருக்கிறான். தலைசிறந்த சேல்ஸ்மேனாகக் கூடிய அருகதை அவனுக்கு இல்லை. ஏனென்றால், அவன் ஆட்டிட்யூட் சரியில்லை. கொடுத்த டார்கெட்டுக்கு வித்துத்தொலைச்சுடறான். அதனால அவனை வேலையை விட்டு அனுப்பாம விட்டுவச்சிருக்கேன்’ என்றாராம். இப்படி வேலைக்கான திறமையைத் தன்வசம் வைத்திருப்பவர்கள்கூட முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாமல் ஒரே இடத்தில் நின்றுவிடுவது ஆட்டிட்யூட் குறைபாட்டினால்தான் என்கின்றனர் ஆசிரியர்கள்.
ஆட்டிட்யூட் என்பது நீங்கள் உங்களை எப்படி எடுத்துச் செல்கிறீர்கள்; நீங்கள் மற்றவர்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்; நீங்கள் உலகத்தை உங்களுடன் எப்படி அவ்வப்போது ஒப்பிட்டுக்கொள்கிறீர்கள் என்கிற மூன்று வகை விஷயங்களை நன்றாகப் புரிந்துகொண்டால்தான் ஆட்டிட்யூடை வெற்றிகரமாகக் கையாள முடியும். ஆட்டிட்யூடில் அப்படி என்ன இருக்கிறது?, அது எவற்றால் ஆனது? ஆட்டிட்யூட் என்பது மூளை, மனது மற்றும் உடல் என்ற மூன்றின் கலவையைக் கொண்டது. மனத்தின் நினைப்பு மூளைக்குள் சென்று உடல் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. எகத்தாளமான பார்வை, உடல் மொழி யெல்லாம் வேறெங்கிருந்து வருகிறது? மனத்திலிருந்து மூளைக்குச் சென்று உடல்வழியாக வெளிப்படுகிறதுதானே என்கிறார்கள் ஆசிரியர்கள்.
பாசிட்டிவ் மனப்பாங்கு எப்படி முன்னேற்றும் என்பதை மிகவும் விளக்கமாகச் சொல்லியுள்ள ஆசிரியர்கள், ஒரு காரியத்தைச் செய்ய முயலும்போது கற்பனைத் தடங்கல்கள் எக்கச்சக்கமாக இருக்கும். ஆனால், நிஜத் தடங்கல்களோ எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருக்கும். பாசிட்டிவ் ஆட்டிட்யூட் உள்ள நபரோ காரியத்தைச் செய்ய முயல்வார். தடங்கல்கள் குறைவாக இருப்பதால் எளிதில் காரியத்தை முடித்தும்விடுவார். நெகட்டிவ் ஆட்டிட்யூட் நபரோ கற்பனைத் தடங்கல்களைக் கண்டு பயந்து காரியத்தை ஆரம்பிக்கவே மாட்டார் என்கின்றனர் ஆசிரியர்கள். ஒரு மனிதன் வாழ்வில் எத்தனை மகிழ்ச்சிகரமான மற்றும் துக்ககரமான விஷயங்களை எதிர்கொள்கிறான் என்பது அவன் கொண்டுள்ள ஆட்டிட்யூடை வைத்தே நிர்ணயமாகிறது என்கின்றன ஆய்வுகள். தனிமனித வெற்றி மட்டும் ஆட்டிட்யூடால் பாதிப்படைவதில்லை, குழுவின் வெற்றியுமே ஆட்டிட்யூடால்தான் நிர்ணயிக்கப்படுகிறது.
நல்ல திறமைவாய்ந்த நபர்கள் அடங்கிய குழு மட்டரகமான ஆட்டிட்யூட் = மோசமான டீம்.நல்ல திறமைவாய்ந்த நபர்கள் அடங்கிய குழு சுமார் ஆட்டிட்யூட் = ஆவரேஜ் டீம்.நல்ல திறமைவாய்ந்த நபர்கள் அடங்கிய குழு ஆவரேஜ் ஆட்டிட்யூட் = நல்ல டீம்.நல்ல திறமைவாய்ந்த நபர்கள் அடங்கிய குழு சூப்பர் ஆட்டிட்யூட் = சூப்பரான டீம் என்ற ஃபார்முலாவையும் சொல்லியுள்ளனர் ஆசிரியர்கள். திறமையானவர்கள்கூட சில சமயம் கஷ்டப்படுவதற்கு காரணம் ஆட்டிட்யூட்தான். திடீரென அவர்கள் திக்கற்றவர் களாக நினைத்துக்கொள்ள ஆரம்பித்துவிடுவதுதான் குழப்பத்தின் ஆரம்பம். மாறாக, அவர்கள் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை ஆட்டிட்யூடுக்கு மாறிய மறுநிமிடமே அவர்களுடைய செயல்பாட்டில் மாறுதல்களைக் காணலாம் என்கின்றனர் ஆசிரியர்கள்.ஆட்டிட்யூடை மாற்றிக்கொள்ள கொஞ்சம் எண்ணத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர்கள், இதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொல்கின்றனர். ஒரு தவறு செய்கிறீர்கள். நான் ஒரு தப்பு செய்துவிட்டேன் என்று நினைப்பது குற்ற உணர்ச்சி. இந்தத் தப்பை பண்ணிய நானெல்லாம் ஒரு மனுச ஜென்மமா என்று நினைப்பது தன்னிரக்கம். இதை நான் சரி பண்ணிக்கொள்வேன் என்று நினைப்பது மீண்டுவருவதற்கான பற்றுகோல். இதில் சராசரி மனிதனுக்கு எது உதவும்? இறுதியாகச் சொன்னதுதானே புதியதொரு எதிர்காலத்தை உருவாக்க வழிவகை செய்யும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
இறுதி அத்தியாயத்தில் நல்ல ஆட்டிட்யூடை வளர்த்துக் கொள்வது எப்படி என்று விளக்கமாகச் சொல்லியிருக்கும் ஆசிரியர்கள், நல்ல ஆட்டிட்யூடைக் கொண்ட ஒரு நிஜ மனிதரைப் பற்றியும் விவரித்துள்ளார்கள். ஜெர்ரி எனும் ரெஸ்டாரன்ட் மேனேஜர், தனது வேலையைவிட்டு இன்னொரு ஹோட்டலுக்குப் போனால், அவரோடு வேலை பார்த்த பலரும் அவருடனே போய்விடுவார்களாம். இதைக் கேள்விப்பட்டு அவரை நேரில் சந்தித்தனர் ஆசிரியர்கள். 'நீங்கள் எப்படி எப்போதும் நல்ல ஆட்டிட்யூடுடன் இருக்கிறீர்கள்’ என்று கேட்டனர். 'காலையில் எழுந்தவுடன் நான் என்னிடம் ஒரே கேள்வி கேட்டுக்கொள்வேன். என் முன்னால் இரண்டு சாய்ஸ் இருக்கிறது. நல்லது, கெட்டது. நான் எதை எடுக்கவேண்டும். நல்லதைத்தானே? அதனால் நல்ல ஆட்டிட்யூடை நான் எடுக்கிறேன்’ என்றாராம்.
நீண்டநாள் கழித்து ஒருநாள் அவர் வேலை பார்த்த ரெஸ்டாரன்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடக்க, அதில் அவருக்கும் குண்டுகாயம் ஏற்பட்டது. 18 மணி நேர அறுவை சிகிச்சைக்குப்பின் பிழைத்த அவரை மருத்துவமனையில் சென்று பார்த்து, 'குண்டு காயத்திலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள்?’ என்று கேட்டதற்கு, 'என் முன்னால் இப்பவும் இரண்டு சாய்ஸ்தான் இருந்தது. வாழ்வதா, செத்துப்போவதா என்பதுதான். நான் வாழ்வது என்ற சாய்ஸை எடுத்தேன்’ என்றாராம்.இறுதியாக, 'ஆட்டிட்யூட் பற்றி படித்தீர்கள். படித்தால் மட்டும் போதாது. அன்றாடம் ஒவ்வொரு நிமிடமும் இதன்படி நடக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்தக் கலை உங்களுக்கு வரவே வராது’ என்கின்றனர் ஆசிரியர்கள். முன்னேற விரும்பும் அனைவரும் படித்தேயாக வேண்டிய புத்தகம் இது.
- நாணயம் டீம். (குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்.)
|
|
| |
RAWALIKA | Date: Sunday, 01 Jun 2014, 9:14 PM | Message # 2 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| நாணயம் லைப்ரரி : முயற்சியும் அதிர்ஷ்டமும்!
எடுத்த காரியம் எல்லாவற்றிலும் தோல்வி அடைந்தபின்னரும் ஒருநாள் பெரிய அளவில் வெற்றியை சாதிக்கும் வாய்ப்பு இருக்கிறதா? அப்படிக்கூட நடக்குமா என்ன என்றுதானே நினைக்கிறீர்கள்? நீங்கள் நினைப்பது சரியல்ல. எடுத்த முயற்சி எல்லாவற்றிலும் தோல்வியுற்றபின்னர்கூட வெற்றி பெறமுடியும் என்பதை ஓர் உண்மைக் கதையின் மூலம் சொல்லும் புத்தகத்தைத்தான் இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துகிறோம்.
'ஹவ் டு ஃபெயில்’ என்கிற இந்தப் புத்தகத்தை எழுதிய ஸ்காட் ஆடம்ஸ் ஒரு கார்ட்டூனிஸ்ட். டில்பர்ட் என்ற அவருடைய கார்ட்டூன் ஸ்ட்ரிப்புகள் (Dilbert.com) உலகளவில் 70 நாடுகளில் 2000 செய்திப்பத்திரிகைகளில் வெளியா கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
'எனக்குத் தொட்டது எதுவுமே துலங்கவில்லை. ஏன் இப்படி? எப்படி இந்த நிலையை மாற்றுவது? என்பது குறித்து ஆழ்ந்து சிந்தித்துச் செயலாற்ற நான் கண்டுபிடித்த வழிமுறைகளைத்தான் நான் இந்தப் புத்தகத்தில் தந்துள்ளேன்’ என்கிறார் ஆடம்ஸ்.
'இந்த வழிமுறைகள்தான் என்னை வெற்றிப்படியில் ஏறவைத்தது'' என்று சொல்லி ஆரம்பிக்கின்ற ஆடம்ஸ், ''எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், வாய்ப்பு கையில் கிடைக்கும்போது அதிர்ஷ்டம் நம்மைப் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, எனக்குக் கிடைத்த வாய்ப்பை எப்படி சரியாகக் கையாண்டு அதிர்ஷ்டம் என்னைத் தேடி கண்டுபிடித்து வரச்செய்தேன் என்பதுதான் இந்தப் புத்தகத்தின் சாராம்சம்’ என்று சொல்லும் ஆசிரியர், 'இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளவற்றை மற்றத் தொடர் தோல்வியைச் சந்திப்பவர்களின் நடவடிக்கைகளுடன் சரிபார்த்துச் சரியாக இருக்கிறதா என்று நீங்களே சரிபார்த்துக்கொள்ளுங்கள்’ என்கிறார்.
''உங்களுக்கெல்லாம் அட்வைஸ் சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆளில்லை. சொல்லப்போனால் உலகத்திலேயே நான் மிகச் சின்ன ஆள். நான் ஒரு பெரிய எழுத்தாளனும் இல்லை. நிபுணனும் இல்லை. நான் எப்படி இதுபோன்ற அறிவுரைகளைச் சொல்லும் புத்தகம் எழுதி சம்பாதிக்கிறேன் என்பதே எனக்குப் புரியவில்லை'' என்று ஆரம்பிக்கிறார் ஆடம்ஸ்.
''ஆனால் நான் எதையும் இலகுவாகச் சொல்லும் திறமை கொண்டவன். இலகுவாக ஒரு விஷயத்தைச் சொல்வதால் அதை இலகுவாக நீங்கள் புரிந்துகொண்டு செயல்படுத்தலாம்'' என்கிறார்.
உதாரணத்துக்கு, 'முதலாளித் துவத்தை எடுத்துக்கொள்வோம். முதலாளித்துவத்தை எளிமையாய்ப் புரிந்துகொள்ள என்ன சொல்ல வேண்டும். லாபம்! லாபம்! லாபம்! என்பதைத்தானே! அதற்காகத்தானே இத்தனை போட்டியும், பிரச்னையும், வேற்றுமையும், ஒற்றுமையும் என்கிறார் ஆடம்ஸ். அதற்காக லாபத்தையே குறிக்கோளாகக்கொண்டு அதிவேகத்தில் செயல்பட்டால் சிக்கல்கள் வரத்தானே செய்யும். இதை எப்படிச் சொல்வது? தொழிலில் லாபம் என்பது ஒரு சுத்தியலைப் போன்றது. சுத்தியலை எப்போதுமே ஆணியை அடிக்க அளவாக உபயோகப்படுத்த வேண்டும். மரத்தில் ஆணி முழுவதுமாக இறங்கிய பின்னரும் ஓங்கிஓங்கி அடித்தால் மரம்தான் உடையும். அதேபோல்தான் லாபநோக்கமும்’ என்று நச்செனச் சொல்கிறார் ஆடம்ஸ்.
ஆடம்ஸ் எந்தெந்த தொழில் களில்/வேலைகளில் ஈடுபட்டு எப்படிப்பட்ட தோல்வியை அடைந்தார் என்று ஒரு தனி அத்தியாயத்தில் சொல்லியுள்ளார். இந்த வேலைகளில் கிடைத்த பல சுவையான அனுபவங்களையும் அதில் முன்னேற்றத்தைப் பெற அவர் செய்த பல சுவையான, அதேநேரத்தில் பலசமயம் தோல்விகளைத் தந்த பல யுக்திகளையும் விளக்கமாகக் கொடுத்துள்ளார் ஆடம்ஸ்.
'மனிதனுக்கு எனர்ஜி மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு செயலுக்கும் எனர்ஜியே ஆதாரம். எனர்ஜியை உருவாக்கி செலவழிப்பதில் நமக்கு மிகவும் கவனம் தேவை’ என்று சொல்லும் ஆடம்ஸ், எனர்ஜி எப்படி உருவாகிறது என்பதற்குப் பின்வரும் உதாரணத்தைக் கூறியுள்ளார்.
''உங்களுடைய பாஸ், ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. இதை முடித்தேயாக வேண்டும். அதனால் இரண்டு வாரத்துக்கு ஞாயிற்றுக்கிழமைகூட விடுமுறையில்லாமல் வேலை பார்த்து இதை முடித்துக்கொடுங்கள் என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பாஸ் சொல்லும் வேலை அதிமுக்கியமான ஒன்றாக இருந்து, அந்த வேலையை நீங்கள் முடித்துத் தந்தால், அந்தப் பாஸ் உங்களுக்கு புரமோஷனுக்கு உதவுவார் என்று தெரிந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? ரொம்பவும் எனர்ஜெட்டிக்காகக் கண்ணும் கருத்துமாய் வேலையைச் செய்து சபாஷைப் பெறுவீர்கள்.
வேலையின் முக்கியத்துவம் மற்றும் அதைச் செய்வதால் வரும் நன்மைகள் என்ற இரண்டும் உங்கள் எனர்ஜி லெவலை அதிகரிக்கச் செய்யும். அதற்கு மாறாக, எந்த அதிகாரமும் இல்லாத உங்கள் பாஸ், உப்புச்சப்பில்லாத வேலையை விடுமுறை எடுக்காமல் செய்யச் சொன்னால், உங்கள் எனர்ஜி லெவல் அதலபாதாளத்துக்குச் சென்று விடுகிறது இல்லையா?'' என்று கேட்கிறார் ஆடம்ஸ்.
அதேபோல் சிரிப்பின் பலனையும் விவரிக்கும் ஆசிரியர், மூளை சந்தோஷத்தில் இருந்தால் அது சிரிப்பாக வெளிப்படுகிறது. நீங்கள் (உங்கள் மூளை) கோபத்தில் இருக்கும் போதுகூட நீங்கள் வலிய சிரிக்க முயற்சித்தீர்கள் எனில், அதனாலேயே மூளையும் உற்சாகப்படும் என்று சொல்கிறார்.
இறுதியாக அதிர்ஷ்டம் குறித்துச் சொல்லும் ஆசிரியர், 'உலகத்தில் ஒருவர் பெறுகிற எல்லா வெற்றிக்கும் அதிர்ஷ்டம்தான் காரணம் என்கிறார்.
அட, இவரா இப்படிச் சொல்கிறார்? என ஆச்சர்யப்படுகிறீர்களா? எங்கே, எப்போது பிறந்தீர்கள், உங்கள் பரம்பரை என்ன? உங்கள் ஜீன்கள் எப்படிப்பட்டவை? உங்கள் நண்பர்கள் யார்?, பகைவர்கள் யார்? என்பதெல்லாம் உங்களுடைய வெற்றியை முடிவு செய்கிறது என்றால் இவை எல்லாமே அதிர்ஷ்டமாக இருப்பதால் கிடைப்பதுதானே என்று சொல்லும் ஆசிரியர், அதற்காக அதிர்ஷ்டம் என்ற ஒன்றை நம்பியே ஒன்றும் செய்யாமல் இருந்தால் வெற்றி பெற முடியுமா என்ன? என்றும் கிண்டலாகக் கேட்கின்றார்.
''அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி இருந்தால் அது நமக்கு உதவப் போகிறதோ இல்லையோ, உதவாமல் போவதற்கான வாய்ப்பு நிச்சயம் அதிகமாக இருக்கிறது. ஆனால், முயற்சிகளைத் தளராது தொடர்ந்து செய்தால் அதிர்ஷ்டம் நிச்சயமாக நம்மைத் தேடிக் கண்டுபிடித்து உதவி செய்யும்'' என்று கூறி முடிக்கிறார் ஆடம்ஸ்.
பல தோல்விகளுக்குப் பின்னால் வாழ்வில் வெற்றியைக் கண்டிருக்கும் ஆடம்ஸ் சொல்லும் அனுபவ பாடங்களைப் படித்தால் நம்முடைய வெற்றிப்பாதையை நன்றாக செப்பனிட்டுக்கொள்ளலாம்!
- நாணயம் டீம் (குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)
|
|
| |
RAWALIKA | Date: Sunday, 01 Jun 2014, 9:16 PM | Message # 3 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| நாணயம் லைப்ரரி - எல்லாவற்றையும் மாற்றுங்கள்!
கேரி பேட்டர்ஸன், ஜோசப் கிரென்னி, டேவிட் மேக்ஸ்ஃபீல்டு, ரான் மேக்மில்லன் மற்றும் அல் சுவிட்ஸ்லர் என்ற ஐந்துபேர் எழுதிய 'எல்லாவற்றையும் மாற்றுங்கள்’ என்கிற புத்தகத்தைத்தான் இந்த வாரம் அறிமுகப்படுத்துகிறோம். இந்தப் புத்தகம் உங்களுக்குத் தரும் உத்தரவாதம் ஒன்றே ஒன்றுதான். 'நாங்கள் சொல்லும் விஷயங்களை உடனடியாகவும், முழுமனதுடனும், தொடர்ந்தும் செய்துவந்தீர்கள் என்றால் உங்கள் பழக்கவழக்கங்கள் (எவ்வளவு கெட்டதாக இருந்தாலும் சரி, எத்தனை நாள்பட்டதாக இருந்தாலும் சரி) சுலபமாக மாற்றிக்கொள்ள முடியும்’ என்கின்றனர் ஆசிரியர்கள்.
ஒரு மனிதன் தன்னை முன்னேற்றப் பாதையில் செல்லுமளவுக்கு மாற்றிக்கொள்ள என்னென்ன விஷயங்களைச் செய்யவேண்டும் என்பதைப் பற்றி அறிந்துகொள்ள, இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் நடத்திய 'சேஞ்ச் எனிதிங்’ லேப்-ல் கிட்டத்தட்ட ஐயாயிரம்பேரது நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.மனிதர்கள் எந்தெந்த விஷயத்தில் என்னென்ன தவறு செய்வதால், மாற்றம் என்பதைக் கொண்டுவர முடியாமல் தவிக்கின்றனர் என்பதை விளக்கமாகவே எடுத்துச் சொல்லி இருக்கின்றனர்.
''பல்வேறுவிதமான நபர்களை ஆய்வு செய்ததன் மூலம் நாங்கள் கண்டுபிடித்தது சரியான வழிவகை களைக் கையாள்வதின் மூலம் மனிதர்கள் தங்களை மாற்றிக்கொள்ள முடிகிறது என்பது மட்டுமல்ல, தொடர்ந்து அந்த மாறிய (திருந்திய) நிலையிலேயே பயணிக்க முடிகிறது'' என்கின்றனர் இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர்கள். 'முதலில் நாம் அனைவரும் தவறாக நினைப்பது வெற்றிபெறத் தேவை வில்பவர் என்று. இதுவே மிகப் பெரிய தவறு’ என்று சொல்லும் ஆசிரியர்கள், 'ஒரு கெட்ட பழக்கத்தைவிட்டு வெளியேவர, ஒரு ஈடுபாட்டைக் கவரும் மற்றொரு நல்ல விஷயம் உதவுமளவுக்கு வில்பவர் உதவாது’ என்கின்றனர். 'வில்பவரை உபயோகித்துத் தன்னை மாற்றிக்கொள்ள நினைக்கும் அனைவருமே தோல்வியடைவது இதனால்தான்.
ஏனென்றால், நாம் கண்முன்னே நாம் அடிமையான ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு எனது வில்பவர் மூலம் அந்த விஷயத்தை மாற்றுவேன் என்பது நடக்காத காரியம். வேறொரு ஈடுபாடான காரியத்தில் மனம் லயிக்கும்போது கண்முன்னே இருக்கும் நம்மை அடிமையாக்கிய விஷயம்கூட நமக்கு மறந்துபோய்விடும்’ என்று தங்கள் ஆய்வு முடிவு சொல்வதாகச் சொல்கின்றனர். 'வில்’லைவிட 'ஸ்கில்’லே அடிமைத்தனத்திலிருந்து வெளிவர உதவும் என்று வாதிடுகின்றனர் ஆசிரியர்கள். 'அப்படியே தப்பித் தவறி நீங்கள் வில்பவரின் மூலம் மாற்றத்தைக் கொண்டுவந்துவிட்டாலுமேகூட அந்த மாற்றம் நிலைத்துநிற்காது’ என்கின்றனர். மாற்றத்தைக் கொண்டுவருவதில் சிறப்பாக வேலைசெய்யும் ஆறு விஷயங்களாக ஆசிரியர்கள் பின்வருவனவற்றைப் பட்டியலிடு கின்றனர். முதலாவதாக, பிடிக்காததை விரும்ப ஆரம்பியுங்கள் என்பதை முதலில் சொல்லும் ஆசிரியர்கள், மனிதனுக்கு ரொம்பவுமே பிடித்த விஷயங்கள் எப்போதுமே கெடுதியையும், ரொம்பவுமே பிடிக்காத விஷயங்கள் நல்லதையுமே தருவதாக இருக்கும். பிடிக்காத விஷயங்களை எப்படிப் பிடிக்கவைப்பது? உங்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் பிடித்த மனிதர்களிடம் இருந்தால், உங்களுக்கு அது பிடித்துப்போகும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
இரண்டாவதாக, உங்களால் செய்ய முடியாது என்று நீங்கள் நினைப்பதை நீங்கள் செய்யப் பழகுங்கள் என்பதைத்தான். பிடிக்காததைச் செய்யவேண்டுமென்றால் பிடித்ததைச் செய்யாமல் இருக்கவேண்டும் இல்லையா? பிடித்த விஷயத்தின் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்காமல் இருக்க என்னென்ன செய்யவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். இது 'வில்’ அல்ல, 'ஸ்கில்’ என்கின்றனர் ஆசிரியர்கள்.
மூன்றாவதாகவும், நான்காவதாகவும் ஆசிரியர்கள் சொல்வது உங்களைச் சுற்றி இருப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் என்பதைத்தான். ஏனென்றால், நம்முடைய நல்லதுக்கும் கெட்டதுக்கும் நண்பர்களே காரணம். நண்பர்கள் உங்களை நல்வழிப்படுத்தி முன்னேற்றத்துக்கு வழிவகைச் செய்வார்கள். ஆனால், உடனிருப்பவர்களோ உங்களை அந்தத் திசையில் இருந்து எதிர்த்திசையில் போக வைப்பார்கள் என்கின்றனர் ஆசிரியர்கள்.ஐந்தாவதாக, பொருளாதார விதிகளைத் தலைகீழாக மாற்றுங்கள் என்கின்றனர். என்ன அது? கடைகள், விமான நிறுவனங்கள், ரெஸ்டாரன்ட்கள் போன்றவையெல்லாம் அடிக்கடி உபயோகிப்போர்களுக்கு இன்சென்டிவ்களாகப் பாயின்ட்கள் தருகிறது. இவையெல்லாம் உங்கள் செலவை அதிகப்படுத்தவும் உடலைக் கெடுக்கவுமே உதவுபவையாக இருக்கும்.
ஒவ்வொருமுறை நீங்கள் தேவையில்லாத உணவை உண்ணும்போதும் பிற்காலத்தில் மருத்துவச் செலவுக்காக ஒருதொகையை எடுத்து தனியே வைக்கவேண்டியிருக்கும் என்ற உணர்வேயில்லாமல் இருக்கிறீர்கள். இப்படி கெட்ட விஷயங்களுக்குத் தரப்படும் ரிவார்ட் பாயின்ட் சிஸ்டத்தை நீங்கள் உங்களுக்கே நல்ல விஷயங்களைச் செய்யும்போது அளித்துக்கொள்ளுங்கள். வெற்றியை நோக்கிய உங்களுடைய செயல்பாடுகள் சூடுபிடிக்க ஆரம்பிக்கும் என்கின்றனர்.
ஆறாவதாக, உங்களைச் சுற்றியிருக்கும் இடத்தை (பெர்சனல் ஸ்பேஸ்) கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். எப்படி விலங்குகளை வேலிபோட்டுக் கூண்டில் அடைக் கிறோமோ, அதேபோல் நமது கெட்டபழக்கங்களையும் கூண்டில் அடைத்துவைக்க வேண்டுமென்றால் நம்மைச் சுற்றி நமக்கு நாமே வேலியை அமைத்துக்கொள்ள வேண்டும். நண்பருடன் பாருக்குள் கால் எடுத்து வைத்துவிட்டால் குடிக்காமல் வெளியேற வாய்ப்பேயில்லை இல்லையா என்று கேட்கும் ஆசிரியர்கள், நாம் விரும்பும் விஷயங்களைப் பக்கத்திலும் விரும்பாத விஷயங்களைத் தொலைவிலும் வைக்க இந்த வேலி உதவும் என்கின்றனர். ''என்னதான் நாங்கள் சொன்னாலும் நீங்கள் செயல்பட ஆரம்பித்தால்தான் மாறுதல் வரும். எனவே, சிறியதாக ஆரம்பித்தாலும் இப்போதே ஆரம்பியுங்கள். மாறுதல்கள் எப்படி நன்மை பயக்கிறது என்பதைப் பதிவு செய்யுங்கள்.
நீண்டகாலத்தில் இந்த மாறுதல்கள் எப்பேர்ப்பட்ட பலனைத்தர வாய்ப்புள்ளது என்பது பற்றி எண்ணிப்பாருங்கள். இந்த எண்ணங்களே உங்களை மாற்றிவிடும்'' என்கின்றனர் ஆசிரியர்கள்.இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் முன்னேற்றம் பெற அனைவருமே முயற்சிக்கலாம். - நாணயம் டீம். (குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)
|
|
| |
RAWALIKA | Date: Sunday, 01 Jun 2014, 9:18 PM | Message # 4 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| கவலையால் கஷ்டப்படுகிறீர்களா? சுயமுன்னேற்றம் குறித்து பல்வேறு புத்தகங்கள் இருக்கிறது. இருந்தாலும், சுயமுன்னேற்றம் குறித்து மிகவும் பிராக்டிக்கலாகச் சொல்லும் புத்தகமான 'வாட் யூ கேன் சேஞ்ச் அண்ட் வாட் யூ கேன் நாட்’ எனும் மார்ட்டின் இ பி செலிக்மேன் எழுதிய புத்தகத்தை இந்த வாரம் அறிமுகப்படுத்துகிறோம்.
எதை உங்களால் மாற்றிக்கொள்ள முடியும், எதை உங்களால் மாற்றிக்கொள்ளவே முடியாது என்பதைப் புரிந்துகொண்டு, நீங்கள் யார் என்பதை ஒப்புக்கொள்ள பயின்று கொள்ளுங்கள் என்று சொல்லும் புத்தகம் இது.
பொதுவாக சைக்கோதெரபி என்னும் மற்றொருவர் தரும் பயிற்சிகள், கவுன்சிலிங் மற்றும் சுயமுன்னேற்ற முயற்சிகள் மூலமாகவும் நாம் வளமாக மாற முயற்சிக்கிறோம். மனச்சோர்வில் இருந்து வெளிவர என்னென்னவோ செய்து பார்க்கிறோம். சிலசமயம் சில உத்திகள் வேலை செய்கிறது. தனிமனித முயற்சியோ அல்லது மற்றொருவர் தரும் சைக்கோதெரபி ஆலோசனைகளோ நிறைய சமயங்களில் பலனளிக்காமல் போய்விடுகிறது. ஆனால், செலவுகளோ எக்கச்சக்கமாகிறது. இறுதியில் நாம் ஓர் உதவாக்கரை என்ற குற்ற உணர்ச்சி நமக்குள்ளே வந்துவிடுகிறது. இதிலிருந்து தப்பிக்க நாம் முன்னேற்றத் துக்கான முயற்சிகள் எடுப்பத்தையே தவிர்த்துவிடுகிறோம்.
சிறு வயதிலிருந்தே நமக்கு அனைவரும் சொல்வதே, நம்முடைய எந்த குணத்தையும் நம்மால் மாற்றிக்கொள்ள முடியும் என்பதுதான். எதிலும் நம்மால் முன்னேற முடியும் என்பதை நாம் படித்த பள்ளி நமக்குச் சொல்லித் தருகிறது. அப்படி எல்லாவற்றிலும் நம்மை மாற்றிக்கொள்ளவும் முன்னேற்றிக் கொள்ளவும் முடிந்தால் அனைவருமே சிறந்த சீரிய பண்பாளராக அல்லவா இருந்திருக்க வேண்டும்.
ஆனால், நிஜத்தில் அப்படி இல்லையே! விற்கும் கலை, ஞாபகசக்தி, டைம் மேனேஜ்மென்ட், கோபத்தை அடக்குதல், போன் பேசுதல், எழுத்துப் பயிற்சி, பயத்திலிருந்து மீளுதல் எனப் பல்வேறுவிதமான பிரச்னைகளுக்கும் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் புரளும் பயிற்சி வகுப்புகள் உலகமெங்கும் இருக்கின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகள் எல்லாம் மனிதனால் தன்னை மாற்றிக்கொள்ள முடியும் என்ற தத்துவத்தை நம்பியே பிழைப்பை நடத்துகின்றன. கல்தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே இந்த நம்பிக்கை இருக்கிறதோ என்ற சந்தேகம் வரும் அளவுக்கு இது புரையோடிப் போயிருக்கிறது என்று சொல்லும் ஆசிரியர், ஆனால் ஆரம்பத்தில் மனிதன் தனது குணாதிசயங்களை மாற்றிக்கொள்ள முடியாது என்றே நம்பிவந்திருந்தான் என்று கூறுகிறார்.
உயிரியல் மருத்துவம் சொல்லும் கோட்பாடுகள் மூன்று. மனநோய் என்பது உடல்நோயால் வருவது. கோபதாபங்கள் மற்றும் மனநிலை மூளையில் நடக்கும் வேதியியல் மாற்றத்தால் வருவது. ஒருவரின் சுபாவம் (பர்சனாலிட்டி) அவருடைய மரபணுவிலிருந்து வருவது என்பதாகும் அந்த முன்றும். இந்த மூன்று கோட்பாடுகளுமே நம்மை நாம் மாற்றிக்கொள்ள முடியும் என்பதற்கு எதிரானவை இல்லையா? என்று கேட்கும் ஆசிரியர், அதேசமயம் இந்தக் கருத்துக்கு எதிர்மறையாக உள்ள உளவியலாளர்களின் கோட்பாட்டை கொஞ்சம் பாருங்கள் என்கிறார்.
உடல் நோயை குணப்படுத்தினால் மனநோயும் குணமாகும். மருந்துகள் மனச்சோர்வைப் போக்கி உற்சாகத்தைத் தந்து மனநிலையை சீரமைக்கும். நமது சுபாவம் என்பது மாற்ற முடியாதது என்ற மூன்றும் உயிரியல் மருத்துவத்துக்கு நேரடியான எதிர்கருத்துக்கள் இல்லையா? என்று கேட்கிறார்.
நான்கு பாகங்களாக எழுதப்பட் டிருக்கும் இந்தப் புத்தகத்தில் இரண்டாவது பாகத்தில் கவலை, சோர்வு மற்றும் கோபத்தில் இருந்து மாறுவது எப்படி என்று விவரமாக எழுதியுள்ளார். நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, ஒவ்வொருநாளும் நாம் கவலை, சோர்வு, கோபம் என்ற மூன்றையுமே எதிர்கொள்கிறோம். இதில் கவலையைக் குறைப்பது எப்படி என்று பார்ப்போம். கவலையை குறைப்பது எப்படி என்பதைவிட கவலையை எப்போது குறைக்க முயற்சிக்கலாம் என்பதுதான் முக்கியம் என்கிறார் ஆசிரியர்.கவலைகள் நம்முடைய மனத்தில் நிலவும் சூழ்நிலை மற்றும் வெளியில் நிலவும் சூழ்நிலையால் வருகின்றன. வெளியில் நிலவும் சூழ்நிலைதான் நம் மனத்தினுள் பயத்தினை உண்டுபண்ணுகிறது. ஏனென்றால், கவலை பயத்தை உருவாக்கி பல மாற்றுத் திட்டங்களைப் போட வைக்கிறது. வெளிச்சூழலால் படவேண்டிய நிஜக் கவலையைக் காட்டிலும் பலமடங்கு கவலைகளை நாம் மனத்தில் கொண்டிருக்கும்போது நாம் தீட்டும் திட்டங்கள் நிச்சயமாக தோல்வி அடையும். அதனாலேயே பயம் இன்னமும் கூடும். எனவே, கவலையைப் பொறுத்தவரை, வெளிச் சூழல் மனச்சூழல் என்ற இரண்டும் ஒரேயளவில் இருக்கும்போது மட்டுமே சரிசெய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
அடுத்து ஆசிரியர் சொல்லும் குணம் வேட்கை (அப்சஷன்). எல்லாருக்கும் ஏதாவது ஒன்றின் மீது தீவிர ஈடுபாடு இருக்கவே செய்கிறது. இன்றைய டெக்னாலஜி உலகில் நம்முடைய நேரத்தை வீணே செலவிடுவதற்கான / கவனத்தை சிதைக்கிற விஷயங்கள் எக்கச்சக்கமாகிவிட்டன. இதை முழுவதுமாக மாற்றுவது கடினம். கொஞ்சம் குறைக்கலாம். முக்கிய வேலை இருக்கும்போது தவிர்க்கலாமே தவிர, ஒரேயடியாக ஒழித்துக்கட்ட முடியாது என்கிறார் ஆசிரியர்.
அடுத்தபடியாக, ஆசிரியர் சொல்வது வாட்டத்தை (டிப்ரஷன்). நமது முன்னோர்களைக் காட்டிலும் நம்முடைய வாட்டம் அதிகமாகவே இருக்கிறது. இன்றைய சூழலில் பத்து வயது குழந்தைக்கே டிப்ரஷன் வந்துவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஒரு மனிதர் டிப்ரஷனில் இருக்கும்போது சிந்திப்பதற்கும், டிப்ரஷனில் இல்லாதபோது சிந்திப்பதற்கும் வித்தியாசம் நிறையவே இருக்கிறது. டிப்ரஷனில் இருக்கும் போது சோகமும், உற்சாகமின்மையும், செயல்பாடற்ற நிலையும் நம்மிடையே வந்து குடிகொண்டுவிடுகிறது. டிப்ரஷனில் இருந்து தப்பிக்க முடியும். ஆனால், அதற்கு நாம் நம்முடன் எதிர்வாதம் செய்து பழகவேண்டும். என்னவாயிடும், குடியா முழுகிவிடும் என நமக்கு நாமே கேள்விகளைக் கேட்டு சரிசெய்து கொள்ளவேண்டியிருக்கும் என்கிறார் ஆசிரியர்.
இறுதியாக, குழந்தைப் பருவ குணாதிசயங்களிலிருந்து வெளிவரச் சொல்கிறார் ஆசிரியர். குழந்தையாக இருக்கும் போது வெளி உலகமே நம்முடைய நடவடிக்கையை முடிவு செய்கிறது. நாம் வளர்ந்து முழுமனிதனான பின்பு நமது நடவடிக்கைகள் பலவும் நம்முடைய சூழ்நிலைகளை உருவாக்கவல்லதாக இருக்கிறது. இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமல் வயதானபிறகும் குழந்தைப் பருவத்து குணங்கள் பலவற்றை கைவிடாததால், பல இன்னல்களுக்கு நாம் ஆளாகிறோம். இதை மாற்றிக்கொள்வது ஒன்றும் சுலபம் இல்லை என்றாலும், இந்த குணாதிசயங்களை கண்டறிந்து மாற்றினாலே முன்னேற்றம்தானே வரும் என்கிறார் ஆசிரியர். இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் கொஞ்சம் கடினமான நடையில் இருந்தாலும், மனித சுயமுன்னேற்றம் குறித்த விஞ்ஞானத்தைத் தெரிந்துகொண்டு முன்னேற விரும்புபவர்களுக்கு சரியானதொரு புத்தகம்! முன்னேற விருப்பமில்லாதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன! - நாணயம் டீம். (குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்.)
|
|
| |
RAWALIKA | Date: Sunday, 01 Jun 2014, 9:23 PM | Message # 5 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| நாணயம் லைப்ரரி :இந்தியாவுக்கேற்ப பொருளை மாற்று!
சித்தார்த்தன் சுந்தரம்,பிசினிஸ் கன்சல்டன்ட் ''வி ஆர் லைக் தட் ஒன்லி’ (சுருக்கமாக, WALTO) என்கிற புத்தகத்தைத் தொடர்ந்து ஐந்து வருடத்துக்குப் பிறகு, 'மார்க்கெட் ஸ்ட்ராடஜி கன்சல்டன்ட்’ ரமா பிஜாபுர்கர் எழுதியிருக்கும் புத்தகம் 'எ நெவர் பிஃபோர் வேர்ல்டு.’ இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டு, மூன்றாவது பத்தாண்டில் நடைபோட்டுவரும் இந்த வேளையில் பல துறைகளில் மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதில் மாறிவரும் நுகர்வுக் கட்டமைப்பு மற்றும் நுகர்வோர்களின் நடவடிக்கைகளும் ஒன்றாகும்.
நுகர்வுச் சமூகம் என்பதை மையப்படுத்தி மக்களின் வாழ்க்கை முறையில் அவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது, அதை எதற்காக, எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல் நுகர்வோர்களின் தேவைகளையும், ஆசைகளையும் பொருத்தமான முறையில் நிறைவேற்ற நிறுவனங்கள் என்ன செய்கின்றன, என்ன செய்யவேண்டும் என்பதை பல புள்ளிவிவரங்களுடன் நூலாசிரியர் ரமா விளக்குகிறார்.
''இந்தியா என்பது வித்தியாசமான பிரதேசம். உலகளவில் பெரிய இ-காமர்ஸ் (IRCTC) வர்த்தகம் நடத்தும் இந்திய ரயில்வேதான், அழுக்குபடிந்த, வசதியற்ற, தொழில்நுட்பம் குறைந்த ரயில் சேவையையும் நடத்திவருகிறது. எவ்வளவு விலை அதிகமான ஸ்மார்ட் போனாக இருந்தாலும் சரி, அதில் சாமியின் படத்தைத் தரவிறக்கி அதை 'வால் பேப்பரா’க்கி கோயிலுக்குப் போவதற்குப் பதில் போன் திரையைப் பார்த்து கும்பிடுகிறோம். உலகின் லேட்டஸ்ட் காஸ்ட்லி கார் வாங்கினாலும் எலுமிச்சம் பழத்தை டயரின் கீழ் வைத்து பூஜை செய்ய நாம் தவறுவதில்லை.
பன்னாட்டு நிறுவனங்கள், வளர்ந்த நாடுகளில் அறிமுகப்படுத்தி வெற்றிபெற்ற பொருட்களையோ, சேவைகளையோ அப்படியே இந்தியாவில் அறிமுகப்படுத்த நினைத்தால் இனி ஜெயிக்க முடியாது. காரணம், அந்தக் காலகட்டத்திலிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இப்போதிருக்கிற சூழ்நிலைக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது. இதை அறிந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் - ஹிந்துஸ்தான் யுனிலீவர், ப்ரெக்டர் அண்டு கேம்பிள், பெப்சிகோ, பிலிப்ஸ், ஜெனரல் எலெக்ட்ரிக், எம்டிவி, கார்கில், நோக்கியா போன்ற நிறுவனங்கள் தங்களின் பொருட்களையும், சேவைகளையும் இந்திய நுகர்வோர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைத்ததின் மூலம் இந்தியச் சந்தையில் நன்கு கால் பதித்து நிற்கிறது' என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ரமா.
உதாரணமாக, ஹிந்துஸ்தான் லீவரின் 'ஃபேர் அண்டு லவ்லி’ க்ரீம். 1970-களில் இந்தியாவிற்கென்றே தயாரித்து அறிமுகப்படுத்திய பிராண்டு. இன்றைக்கு இதன் விற்பனை கிட்டத்தட்ட ரூ.1,000 கோடிக்கும் மேல். இந்த வெற்றிக்குப்பின் இந்த பிராண்டு பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
''ஒரே அளவு அனைத்துக்கும் பொருந்தும்’ (one size fits all approach) என்கிற அணுகுமுறையில் இருந்து பன்னாட்டு நிறுவனங்கள் வெளியே வரவேண்டும்'' என்கிறார் எம்.டி.வி இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்த அலெக்ஸ் குருவில்லா. இதற்கு மாறாக, 'டிஸ்னி’ சேனல் சுத்தமான, உலகளாவிய நேயர்களின் விருப்பத்திற்கேற்ப தங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தது. இதற்கு இந்திய மக்களிடம் அவ்வளவு வரவேற்பு இல்லை. எனவே, இந்தியச் சந்தையில் காலூன்ற வேண்டுமெனில் பன்னாட்டு நிறுவனங்கள் 'டிரான்ஸ்ப்ளாண்டிங்’ அணுகுமுறையிலிருந்து 'டிரான்ஸ்லேட்’ என்கிற அணுகுமுறைக்கு மாற வேண்டும்'' என்கிறார் ஆசிரியர்.
மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் இந்தியர்களின் சுவையறிந்து 'மெக் ஆலு டிக்கி பர்கரை’ அறிமுகப்படுத்தியதுடன் பல 'காரசாரமான’ பர்கர்களையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஜெயிக்கவேண்டுமெனில், மாறிவரும் இந்திய நுகர்வோர்களைக் கவரவேண்டுமெனில்,
1. அவர்கள் தேவையறிந்து அதற்குப் பொருத்தமான பொருள் மற்றும் சேவையை உருவாக்க வேண்டும்.2. உலகளவில் பிரபலமான பொருள் 'உள்நாட்டு’ பொருளைவிட உசத்தி என்கிற முரட்டுப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும்.
3. இந்தியா என்பது ஒரே நாடாக இருந்தாலும் நுகர்வோர்களின் விருப்பு, வெறுப்புகள் ஊருக்கு ஊர் மாறுபட்டிருக்கிறது என்பதை நினைவில்கொண்டு அதற்கேற்றாற்போலத் தங்களது யுக்தியை வகுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவர்கள் அனைவரின் விருப்பு, வெறுப்பு ஒரேமாதிரியாக இருக்கும் என்று பொருட்களையும், சேவைகளையும் அறிமுகப்படுத்தினால் நுகர்வோர்களிடம் அவ்வளவாக வரவேற்பிருக்காது. காரணம், மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவர்களின் வருமானம் பலநிலைகளைக் கொண்டதால் அவர்களுக்குப் பிடித்தது / பிடிக்காததில் வித்தியாசம் இருக்கும் என்கிறார்.
பிராந்தியவாரியான நுகர்வோர்களைக் கவரும் பொருட்டுப் பல ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்திய மொழிகளில் 'டப்’ செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இது 'குளோக்கலைசேஷன் (Glocalization)’ என்று மார்க்கெட்டிங் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வரும் ஒரு சொற்றொடர் ஆகும். சிறிய மற்றும் பிராந்திய அளவிலான நிறுவனங்கள் நுகர்வோர்களின் தேவையறிந்து அவர்களின் விருப்பத்துகேற்ப நூதனமான பொருட்களைக் குறைந்த விலையில் தயாரித்து விற்கும்பட்சத்தில் வெற்றி நிச்சயம் என்றும் சொல்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். அப்படி வெற்றி கண்ட சில பொருட்களின் பட்டியலை தருகிறார் ஆசிரியர். இன்வெர்ட்டர் பொருத்தப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள், சினிமா மோகம்கொண்ட குறைந்த வருமானம் கொண்டவர்களுக்காகத் தொலைக்காட்சியுடன் இணைந்த விசிடி பிளேயர், குண்டும், குழியுமான சாலைகளில் காரில் செல்லும்போது முதுகுக்குப் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்ட ஸீட், ஆண்டுக்கு 21 மில்லியன் குழந்தைகள் இந்தியாவில் பிறக்கிறார்கள். இவர்களுக்கென்று குறைந்த விலையில், மக்கிப் போகக்கூடிய டயப்பர்கள், 'ஹீட் - ஈட்’ சப்பாத்திகள், குறைந்த விலையில் கசிவை அடைக்க 'வாட்டர் புரூஃப்’ ஸ்பிரே, குறைந்த மின்சாரச் செலவில் இயங்கும் ஏர்கண்டிஷனர், பேட்டரியால் இயங்கும் மிக்ஸி (இது தமிழக இல்லத்தரசிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!), விலை குறைந்த குளிர்சாதனப் பெட்டி... என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்தப் புத்தகத்தில் ஏராளமான புள்ளிவிவரங்கள் தரப்பட்டிருக்கிறது. அது எல்லோராலும் சரியாக படித்துப் புரிந்துகொள்ள முடியுமா என்கிற ஒரு சந்தேகத்தைத் தவிர, மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது என்பதில் சந்தேகமே இல்லை.
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)
|
|
| |