பேசாத பேச்செல்லாம்...
|
|
RAWALIKA | Date: Thursday, 12 Jun 2014, 8:46 AM | Message # 1 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| பேசாத பேச்செல்லாம்... - 1
ப்ரியா தம்பி, ஓவியங்கள்: ஸ்யாம்
இரவில், சீக்கிரம் தூங்கச் சொல்லி மகளிடம் வெகுநேரமாகப் போராடிக் கொண்டிருந்தேன். அதைக் கொஞ் சமும் காதில் வாங்கிக்கொள்ளாதவளாக விளையாடிக் கொண்டிருந்தாள். ''மொபைல்ல டாக்கிங் டாம் எல்லாம் நீ சொன்னதும் தூங்குதுல்ல. நீயும் நான் சொல்றதைக் கேட்டு கொஞ்சம் தூங்கக் கூடாதா?'' - அதட்டல் பலிக்காது என்பதால், கெஞ்சலாகத்தான் கேட்டேன்.
''அது பொம்மை; நான் பொம்மை இல்ல...'' - உடனே வேகமாகப் பதில் வந்தது. மீண்டும் வற்புறுத்தவே, ''எனக்குத் தூக்கம் வரும்போதுதான் நான் தூங்க முடியும். உனக்காக எல்லாம் தூங்க முடியாது. திரும்பத் திரும்பத் தூங்கச் சொன்னா, 100-க்கு கால் பண்ணி போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்'' - விளையாட்டில் ஆழ்ந்தபடி சொன்னாள். சொல்லிவிட்டு கிண்டலாகப் பார்த்துச் சிரிக்க வேறு செய்தாள். அதற்கு மேல் நான் சொல்ல ஒன்றும் இல்லை.
அவள் மெதுவாகத் தூங்கிக்கொள்ளட்டும். எனக்கு, அவள் சொன்ன பதில் பிடித்திருந்தது. ஆறு வயதுகூட நிரம்பாத அவளுக்கு '100’ என்ற எண்ணைப் பற்றி நான்தான் சொல்லிக் கொடுத்திருந்தேன். அந்த எண்ணை அழைத்தே ஆகவேண்டிய இடத்தில் வாழ்க்கை எத்தனையோ முறை என்னை நிறுத்தியபோதும், நான் அதை யோசித்திருக்கவே இல்லை. என்னிடம் விளையாட்டாகச் சொன்னாலும்கூட, அவளால் அதை யோசிக்க முடிகிறது என்பதே பிரமிப்பாக இருக்கிறது. அதைவிடவும் முக்கியம், 'உனக்காக நான் எதுவும் செய்ய முடியாது’ என்ற அவளது வார்த்தைகள். எல்லாவற்றையும்விட இந்த வார்த்தைகளைத்தான் நான் மிக முக்கியமானவையாகக் கருதுகிறேன். ஏனென்றால், என் வாழ்வின் இத்தனை வருடங்களில் இந்த வார்த்தைகளை நான் எங்கும் பயன்படுத்த முடிந்ததே இல்லை.
என் பால்ய காலங்களில் நான் எப்படி இருந்தேன் என யோசித்துப் பார்க்கிறேன். அது இப்போதைய குழந்தைகளைப் போல நான்கு சுவர்களுக்குள் ஆரம்பித்திருக்கவில்லை. எங்களுக்கு முன் பரந்தவெளி இருந்தது; விளையாட நண்பர்கள் இருந்தார்கள்; எல்லாக் காலத்துக் குழந்தைகளைப் போலவும் எங்களுக்குள் நிறையக் கேள்விகள் இருந்தன. அந்தக் கேள்விகளை நாங்களே தூக்கிக்கொண்டு அலைந்தோம். எங்களோடு பேச யாருக்கும் நேரம் இல்லை. 'பசங்க யூரின் போறப்ப குட்டித் தும்பிக்கை மாதிரி ஒண்ணு இருக்குல்ல, அது ஏன் எனக்கு இல்ல?’ என என் மகள் இன்று இயல்பாகக் கேட்பதுபோல எங்களால் கேட்க முடிந்ததே இல்லை!
ஏழாவது, எட்டாவது படிக்கும்போது, வகுப்பில் திடீர் திடீரென மாணவிகள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் வயதுக்கு வந்துவிட்டார்கள் என்பது பின்னர் தெரியவரும். 'வயசுக்கு வர்றதுனா என்ன?’ என வயதுக்கு வராத நாங்கள் தீவிரமாக விவாதிப்போம். எங்களுக்கு அது பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. யாரிடம் கேட்பது? அம்மாக்களிடம் கேட்டால் அடி விழும் என்பதால், பக்கத்து வீட்டு சுசீலா அக்காவிடம் கேட்கத் தீர்மானித்தோம். நாங்கள் இருப்பதைப் பொருட்படுத்தாமல் கணவன்-மனைவி அந்தரங்கக் கதைகளை அள்ளிவிடுபவர் என்பதால் அவரைத் தேர்ந்தெடுத்தோம்.
'படிக்கிற வயசில கேள்வியைப் பாரு... அதைத் தெரிஞ்சு என்ன பண்ணப்போறீங்க? மாப்பிள்ளையா வரிசையா வந்து நிக்கிறான்?’ என எங்களைத் திட்டி அனுப்பினார். 'கணவன் - மனைவி அந்தரங்கங்களைவிட ரகசியமானதா வயதுக்கு வருவது?’ எனப் புரியாமல் குழம்பினோம். சுசீலா அக்கா மறக்காமல், நாங்கள் கேள்வி கேட்டதை எக்ஸ்ட்ரா பில்டப்களோடு எங்கள் எல்லோர் வீடுகளிலும் சொல்லிச் சென்றார். ஒருவருக்கொருவர் கூடுதல் குறைவின்றி எங்கள் வீடுகளில் அறை வாங்கினோம். 'அப்படி என்ன அவசரம்... இருக்க முடியலியோ..?’ எனத் தொடங்கி, காதில் கேட்க முடியாதவாறு சித்ராவின் அம்மா திட்டியதாக அவள் சொன்னாள். அதில் பாதித் திட்டுக்கு என்ன அர்த்தம் என்று எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. 'ஹஸ்பண்ட், ஒய்ஃப் இருந்தாத்தான் குழந்தை பிறக்கும்னு எங்களுக்குத் தெரியாதா?’ என என் மகளின் வகுப்புத்தோழி சொன்னதாக, அவள் அம்மா சொன்னபோது கொஞ்சம் அரண்டுதான் போனேன்.
இந்தப் பிள்ளைகளோடு நம் வாழ்க்கையை ஒப்பிடவே முடியாது எனத் தோன்றுகிறது. அப்போது எனக்கு 10 வயது தாண்டியிருக்காது. பக்கத்து வீட்டில் வசித்த ஒரு பெண், இரவு நேரங்களில் கதை சொல்வதற்காக அழைப்பார். அருகே படுக்க வைத்துக்கொள்வார். ஏதேதோ கதை சொல்லிக்கொண்டே என்னுடைய கைகளை எடுத்து தன்னுடைய மார்பில் வைத்துக்கொள்வார். கூச்சமோ, எரிச்சலோ உந்த நான் கைகளை இழுத்தால், 'இதயம் எப்படித் துடிக்குதுனு பாரு!’ என மீண்டும் கையை இழுத்து வைத்துக்கொள்வார். செய்வது சரியா, தவறா என்பதை யோசிக்கத் தெரியவில்லை. எனினும், அது பிடித்திருக்கவில்லை என்பதை இப்போது உணர முடிகிறது. தவறு எனில், யாரிடம் கேட்பது? இதைப் பற்றி பேச நமக்கு யார் இருந்தார்கள்?
இன்றைக்கு... குட் டச், பேட் டச் பற்றி பிள்ளைகளுக்கு நாம் சொல்லித்தரும்போது, 'யாரெல்லாம் குட் டச் பண்ணலாம்னு சொல்லு?’ என எவ்வளவு தெளிவாகக் கேட்கிறார்கள். 'அப்புறம் என்ன க்ளாஸ் படிக்கிற?’ என இன்றைக்குப் பிள்ளைகளை அழைத்து மார்பையோ, கன்னத்தையோ தடவிவிட முடியாது. 'தொடாதீங்க அங்கிள்...’ என ஒரே அதட்டலில் அதை நிறுத்திவிடுவார்கள். கோயில்களுக்குப் போய் வந்த அண்ணன்கள், நமக்குப் பாசிமாலை வாங்கி வருவது, நம் மேல் உள்ள அன்பால் என எவ்வளவு காலங்கள் பொய்யாக நம்பித் திரிந்திருக்கிறோம். நம் கழுத்தில் போட்ட அந்த மாலையை அந்த அண்ணன் தடவிப்பார்க்கும்போது எவ்வளவு அப்பாவியாகச் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தோம்.
'இப்படி எல்லாம் பண்ணா, 100-க்கு கால் பண்ணி உம் மேல கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்’ என நம்மால் ஏன் சொல்ல முடியாமல்போனது? அதற்கு, '100’ என்ற எண் பற்றி தெரிந்திருக்க வேண்டியது இல்லை. அந்த எதிர்ப்பு உணர்ச்சி நமக்கு ஏன் இல்லை? யார் அடித்தாலும் வாங்கிக்கொண்டோம்; எவர் சொன்னதையும் நம்பினோம். யோசித்துப் பார்த்தால், சுயசிந்தனைக்கு அந்த வாழ்க்கையில் எங்கேனும் இடம் இருந்ததா என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. நம் பிள்ளைகள் ஐந்து வயதில் பேசுவதை, நம்மால் 30 வயதிலும் செயல்படுத்த முடியவே இல்லை.
பதினொன்றோ, பன்னிரண்டோ படிக்கும்போது இங்கிலீஷ் டீச்சர், 'உங்களுக்கு என்ன பிடிக்கும்?’ என்ற கேள்வியைக் கேட்டபோது, வகுப்பில் பெண்கள் எல்லோருமே திணறினோம். பையன்கள் நம்பிக்கையோடு எழுந்து சொல்வதற்கு கிரிக்கெட், சினிமா என ஏதேதோ இருந்தன. 'எப்பவாச்சும் புக் படிப்போம்’, 'அழகா டிரெஸ் பண்ணப் பிடிக்கும்’, 'பாட்டு கேட்போம்’ எனப் பதில் சொல்வதற்குள் ஒருவழியானோம். 'வசதியான பின்னணியில் பிறந்து, சப்பாத்தியும் பட்டர் சிக்கனும் செய்யத் தெரிந்த, மெதுவாக நடக்கிற, நிதானமாகப் பேசுகிற, இசை கேட்கிற பெண்கள்தான் பெரும்பாலும் ஆங்கில இலக்கியம் படிக்க முடியும்போல!’ என அந்த டீச்சர் பற்றி நாங்கள் பேசியது இப்போது நினைவுக்கு வருகிறது.
இதுபோன்ற ரசனை சார்ந்த விஷயங்கள் மட்டுமல்ல, 'சாப்பிட என்ன பிடிக்கும்?’ என்று கேட்டால், 'எல்லாம்தான் பிடிக்கும்...’ என அசடு வழிவோம். 'என்ன பிடிக்காது?’ எனக் கேள்வியை மாற்றிக் கேட்டால், 'கொடுக்கிற எல்லாம் சாப்பிடுவோம்’ என்றுதான் பதில் சொல்ல முடியும். அந்தப் பழக்கம் இப்போது வரை பெரிதாக மாறவில்லை. இயல்பாக வீடுகளில் பழக்கப்படுத்தப்படாத உணவையோ, ஏற்றுக்கொள்ளாது என்ற உணவையோ தவிர்த்து 'எனக்குப் பிடிக்காது... வேண்டாம்’ என்று எதையும் மறுத்ததே இல்லை. ஏனென்றால், நாங்கள் அப்படித்தான் வளர்க்கப்பட்டோம்.
ஒரே உணவு மேஜையில் ஆண் குழந்தைகளுக்கு எனத் தனியாக உணவுகள் பரிமாறப்படும். 'வளர்ற பிள்ள நல்லா சாப்பிடட்டும்’ என்ற சலுகையில் தினமும் ஒரு ஆம்லெட்டாவது இருக்கும். வறுத்த மீன்களோ, இறைச்சியோ இல்லாமல் அவர்களால் சாப்பிட இயலாது. நாங்கள் எல்லா உணவுக்கும் பழகிக்கொள்ள வேண்டியவர்கள். 'பொண்ணுங்க... 'இதான் பிடிக்கும்’, 'இதான் வேணும்’னு சொல்ல முடியுமா?’ என எளிதாகக் கடந்துவிடுவார்கள். 'இதான் வேணும்னு சொல்ல முடியுமா?’ என்ற வார்த்தைகள் சொல்லும்போதே சிவப்பு பேனாவால் அண்டர்லைன் செய்யப்படும். சும்மா சும்மா சொல்ல முடியாது, எல்லா இடத்துலயும் நீயே அப்ளை பண்ணிக்கோ என்பதாக...
|
|
| |
RAWALIKA | Date: Thursday, 12 Jun 2014, 8:46 AM | Message # 2 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| 'மீன் பிடிக்கிற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணி, மீன் நிறைய நிறையச் சாப்பிடணும்’ என்ற லட்சியத்தை தேவிகா என்னிடம் பகிர்ந்த அன்று, நான் உருவமற்ற முட்டைக்காரனை மனதுக்குள் காதலிக்கத் தொடங்கினேன். பின்னாளில் 'வேலைக்குப் போய் நிறையச் சம்பாதிச்சு, நிறைய முட்டை சாப்பிடணும்’ என அந்த லட்சியம் உருமாறவும் செய்தது. அதிகப்பட்சம் ஒரு முட்டை ஒரு ரூபாயோ, ஒன்றே கால் ரூபாயோ இருந்திருக்கலாம். கேட்டால் வீட்டில் கொலை எல்லாம் செய்துவிட மாட்டார்கள். ஆனால், அதைக் கேட்கும் தைரியம் இருந்ததே இல்லை. இன்றைக்கு என் மகளிடமோ, அவள் வயதுப் பிள்ளைகளிடமோ 'என்ன பிடிக்கும்?’ என்று கேட்டால் மூச்சுவிடாமல் 300 விஷயங்களை அடுக்குவார்கள். அதில் 'இது வேண்டாம்...’ என ஒன்றைக்கூட நாம் மறுத்துவிட முடியாது. இதுபோன்ற நேரங்களில், அவர்கள் தங்கள் அம்மாக்களான எங்களுக்கும் சேர்த்தே பேசுவதாகத் தோன்றுகிறது. இதையெல்லாம் யோசிக்கும்போது முதல்முறையாகப் பள்ளி சுற்றுலா சென்ற சம்பவம் நினைவுக்கு வருகிறது.
ஒரு வாரம் தண்ணீர்கூடக் குடிக்காமல் பெரும் நாடகம் நடத்தினால்தான் போனாப் போகுது என்று சுற்றுலாவுக்கு அனுமதி தருவார்கள். அதற்கான கட்டணம் 300 ரூபாய். கிளம்பவேண்டிய அன்று காலை, அம்மா என் கையில் 500 ரூபாய் கொடுத்தார். 10 ரூபாய் தாண்டி பாக்கெட் மணியே வாங்கியிருக்காததால் ஒன்றும் புரியவில்லை. அந்த 10 ரூபாயும் தினமும் கிடைக்காது. 10 ரூபாய் ஒன்றைச் செலவு செய்த பிறகு, அடுத்த 10 ரூபாய் கிடைக்கும்; செலவுக்குச் சரியாகக் கணக்கு வேறு சொல்ல வேண்டும். இந்த நிலைமையில் 200 ரூபாய் அதிகம் கிடைத்தால்? புரியாமல் அம்மாவைப் பார்த்தேன். சுற்றுலாவுக்கு 20 ரூபாய் கேட்டதால், புளியங்கொம்பு ஒடிய ஒடிய அடி வாங்கிய கதை ஒன்று அம்மாவிடம் இருந்தது. என் மகள் எனக்கும் சேர்த்து உணவு ஆர்டர் செய்வதைப்போல், நான் என் அம்மாவுக்கும் சேர்த்து அன்று சுற்றுலா போனேன்.
மகள்களுக்கு வேண்டாம் என அம்மாக்கள் தடுக்கும் பெரும்பாலான விஷயங்களில், அதைச் செய்ய முடியாத அவர்களின் இளமைக் கால ஏக்கம் மறைந்திருப்பதைக் காண முடியும். மிக நுட்பமாகக் கவனித்தால் இரு தலைமுறைப் பெண்களுக்கு இடையேயான பொறாமை உணர்வுகூட அதில் இருக்கும். அம்மாக்களைத் தாண்டி மகள்கள் வளரத் தொடங்கும் காலங்களில், அம்மாக்களின் எரிச்சல் அதிகரிக்கிறது. தன் டீன் ஏஜ் வயதில், தான் நினைத்த எல்லாவற்றையும், தன்னால் செய்ய முடியாத எல்லாவற்றையும் மகள் செய்வதை அவர்களால் இயல்பாக ஏற்றுக்கொள்ளவே முடிவது இல்லை. நம் சமூகத்தில் பெண்கள் தங்கள் விருப்பத்தைப் பூர்த்திசெய்ய எப்போதும் ஒரு தலைமுறை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அந்த நீண்ட காத்திருப்புக்குப் பிறகும் அதில் அவர்கள் பங்கேற்க முடிவது இல்லை. வெறும் பார்வையாளர்களாக மட்டுமே கைத்தட்ட முடிகிறது.
எல்லாக் காலத்து நபர்களையும்விட 80-களில் பிறந்தவர்களுக்குச் சொல்வதற்கு நிறையக் கதைகள் உள்ளன. சினிமா, டி.வி., இளையராஜா இசை... என ஆரம்பித்து இந்தப் பட்டியல் நீளும். நம்மைவிட 10 ஆண்டுகள் பின்னால் பிறந்தவர்கள், தகவல் தொழில்நுட்பத்தின் பிள்ளைகளாகிப் போய்விட, நாம்தான் ஓர் அழிவின் இறுதியிலும், ஒரு புது வரவின் தொடக்கத்திலும் நின்று கொஞ்சம் தடுமாறினோம். அந்தத் தடுமாற்றத்தை மறைக்க, என்ன இருந்தாலும், 'எங்க பீரியட் மாதிரி வருமா? நீங்கள்லாம் இப்ப ஈஸியாச் செய்ற ஒவ்வொண்ணுக்கும் நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டோம் தெரியுமா?’ என விடாது பேசிக்கொண்டே இருக்கிறோம். சைக்கிள் வாங்க, சினிமா செல்ல, புத்தகம் வாங்க, நூலகம் செல்ல, தோழியைப் பார்க்க... என மிக அடிப்படையான விஷயங்களுக்காகத்தான், வருடங்களாக நாம் சார்ந்த நபர்களோடு போராடிக்கொண்டிருந்தோம்.
இந்தப் பிரச்னை நம் இளையவர்களுக்கு இல்லை. நாம் சந்தித்த பிரச்னைகளை அதே வயதில் அவர்கள் சுலபமாகக் கடந்துசெல்கிறார்கள். இன்றைக்கு அவர்களுக்கு காதல், ஒரு பொருட்டே அல்ல. நாம் அந்தக் காதல் என்ற ஒற்றை உணர்வுக்காக மட்டும் எவ்வளவு காலங்களைச் செலவிட்டோம்.
எங்களுடைய டீன்-ஏஜ் வயதுகளில் பேச்சின் பெரும் பகுதியைக் காதல்தான் பிடித்துக்கொள்ளும். சினிமா ஹீரோக்களை நினைத்தே எங்கள் தூக்கத்தையும் படிப்பையும் தொலைத்திருக்கிறோம். 'குஷி’ படம் பார்த்துவிட்டு, 'கல்யாணம் பண்ணா விஜய்யைக் கல்யாணம் பண்ணணும். இல்லைன்னா காளிகேசம் மலையில இருந்து குதிக்கணும்’ என்று சொன்ன ரேகா, நிஜமாகவே விஜய்யைக் காதலிக்கத் தொடங்கியிருந்தாள்; அல்லது அவ்வாறு நம்பத் தொடங்கியிருந்தாள். படிப்பை அப்படியே கோட்டைவிட்டாள்.
அன்பான தருணம் ஒன்றில் தலைகோதிவிட்ட ஒரே காரணத்துக்காக, நான் எங்கள் புரொஃபசரைக் காதலிக்க ஆரம்பித்தேன். அவர் பாடம் எடுக்கும் நேரங்களில் அவரோடு சினிமாத்தனமாக பைக்கில் சுற்றுவதாகக் கனவு காண ஆரம்பித்தேன். அதை அவரிடமே சொல்ல, என் நேசத்தைப் புரிந்துகொண்டு அது சாதாரண விஷயம் எனப் புரியவைக்கும் தெளிவு அவருக்கு இருந்ததால் நான் தப்பித்தேன்.
நாங்கள் இப்படித்தான் இருந்தோம். எங்களுக்கு, நிஜத்துக்கும் நிழலுக்குமான வித்தியாசம் தெரிந்திருக்கவே இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் குழப்பிக்கொண்டோம். பேசும் ஆண்களை எல்லாம் நேசித்தோம். எது காதல், எது நட்பு, எது சரி, எது தவறு எதிலும் தெளிவு இல்லை. ஆண்கள் அருகில் வந்தாலே சிலிர்த்துக்கொண்டோம். 'நாம் காதலிக்கலாமா?’ எனக் கேட்டால், அந்த நொடியே தலையை ஆட்டினோம். வீட்டின் அடக்குமுறைகள், அதை எப்போதும் மீற நினைக்கும் மனம், தனக்கு என்ன வேண்டும் எனத் தெளிவு இல்லாத மனது... இவற்றில் இருந்து வெளியே வருவதற்கே எவ்வளவு வருடங்கள் ஆனது. அதற்குள் மீட்க முடியாத பலதை நாங்கள் இழந்திருந்தோம்.
இந்தச் சூழல், முற்றிலும் மாறிவிட்டதாக நினைக்கவில்லை. ஆனாலும் எது வேண்டும், எது வேண்டாம் என்று இன்றைய பெண்களுக்குத் தெளிவு இருக்கிறது. ஆண்களைப் பார்த்தால் அவர்கள் சிலிர்த்துக்கொள்வது இல்லை. நட்புக்கும் காதலுக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரிகிறது. தன் படிப்பு, தன் வேலை பற்றிய தெளிவு இருக்கிறது.
'உன் இஷ்டத்துக்குத் தூங்குறதுக்கு நான் ஒண்ணும் பொம்மை இல்லை...’ என்கிற ஐந்து வயதின் தெளிவு, நம்பிக்கை அளிக்கிறது. அதை ஒரு பெண் குழந்தை சொல்லும்போது அது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில், எல்லாக் காலங்களிலும் இங்கு குழந்தைகள் ஆண் குழந்தை, பெண் குழந்தை என தனித்தனியாகத்தான் பிரிந்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு என பொதுவான உலகம் ஒன்று இங்கு இல்லை.
கார், பைக், துப்பாக்கி... எனப் பறந்து கொண்டிருப்பார்கள் ஆண் குழந்தைகள். பொம்மை, தொட்டில், சமையல் பாத்திரங்கள்... எனப் பொறுப்பாக இருக்கிறார்கள் பெண் குழந்தைகள். கிராமம், நகரம், மாநகரம் வித்தியாசம் இன்றி அவர்கள் இன்னும் அப்படித்தான் இருக்கிறார்கள். நாம் எப்படிச் சொல்லிக் கொடுத்தாலும், பெண் குழந்தைகள் சமூகம் முன்மாதிரியாகக் காட்டும் பெண்களின் மினியேச்சர்களாகவே இருக்கிறார்கள். வீட்டுக்குள் நுழைந்ததுமே வாங்கி வந்த சாக்லேட்டைக் கேட்கும் மகனுக்கும், தண்ணீர் எடுத்துத் தந்து நம்மைக் கவனிக்கும் மகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
மகள்கள், எந்தக் காலத்திலும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களிடம் உட்கார்ந்து பேசினால், வண்ணமயமான உலகம் ஒன்று அவர்களுக்குள் ஒளிந்திருப்பதைக் கண்டறிய முடியும். சதா நேரமும் தன்னைச் சுற்றி நடப்பதைக் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். மனம் முழுவதும் கேள்விகளால் நிரம்பி வழிகிறார்கள். நாமும் இப்படித்தான் இருந்தோம். வளர வளர நம்முடைய சிறகுகள் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டன. நம் கற்பனைகள் தவறு என்று சொல்லித்தரப்பட்டது. 'இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே’ என்பதைத் திரும்பத் திரும்பக் கேட்டு, 'எதைச் செய்வது?’ எனக் குழம்பிப் போனோம். அது நம் குழந்தைகளுக்கு நடக்காது என நம்புகிறேன். இதே கேள்விகளோடும், தன் உரிமை பற்றிய தெளிவோடும் வளரும் தலைமுறை என்னவாக இருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன். எப்படியிருப்பினும், தங்கள் கனவுகளைத் தாங்களே அனுபவித்து ருசிக்கும் வாய்ப்பு பெற்ற முதல் தலைமுறையாக அவர்கள் இருப்பார்கள் என்றே தோன்றுகிறது.
ஏனெனில், நம் பிள்ளைகள் காலத்தால் நம்மைவிட மூத்தவர்கள்... நாம் செய்ய வேண்டியது, '100-க்கு கால் பண்ணா கையை ஒடிப்பேன்’ எனச் சொல்லாமல் இருப்பதே! - பேசலாம்...
|
|
| |
SS | Date: Thursday, 12 Jun 2014, 9:19 AM | Message # 3 |
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| நல்ல தொகுப்பு... முற்றிலும் உண்மையே..
|
|
| |
shan | Date: Thursday, 12 Jun 2014, 2:17 PM | Message # 4 |
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| நல்ல கருத்து......ஆனால் இன்றைய அதிக சுதந்திரமும் ஆபத்தில் கொண்டு போய் கொண்டிரிகிறதே என்ற சந்தேகமும் உண்டு ........
|
|
| |