மனிதன் மாறி விட்டான்!
|
|
RAWALIKA | Date: Saturday, 05 Jul 2014, 2:06 PM | Message # 1 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
மனிதன் தினமும் எழுச்சி பெற்று வருகிறான். ஆனால் மனிதம்..? ஒவ்வொரு நொடியும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த வருத்தமே 'மனிதர்களின்’ வரவு செலவுக் கணக்கில் விஞ்சி நிற்கிறது. இரக்கம் ஏன் தேய்ந்து போகிறது? இதயம் ஏன் தொய்ந்து போகிறது? என்ற கவலை சமூக அக்கறையுள்ள அனைவரிடமும் மேலோங்கி நிற்கிறது. இந்த வருத்தமும் அக்கறையும் இப்போதுதான் இருக்கிறதா? அல்லது முன்பும் இருந்ததா?
'இன்றைய இளைஞர்கள் அகந்தையுடன் இருக்கிறார்கள்; அவர்கள் பெரியவர்கள் பேச்சை மதிப்பதில்லை; ஆசிரியர்கள் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வதில்லை’ என்று அங்கலாய்த்துக்கொண்டார் ஒருவர். இவர் நம்முடைய சமகாலத்தவர் அல்லர்.
சுமார் 25 நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏதென்ஸ் நகரில் வாழ்ந்த சாக்ரடீஸுக்கு இப்படி ஒரு வருத்தம் இருந்தது. எனவே, 'காலம் கெட்டுப்போன புலம்பல்’ காலந்தோறும் உண்டு. ஆனால், இது வெறும் புலம்பல் மட்டும்தானா? உண்மை அதற்குள் ஒளிந்துகொண்டு இருக்கத்தானே செய்கிறது. நாம் ஏன் இப்படி மாறிப்போனோம்?
நம் உடலில் லேசாகக் கீறினால் நம்முடைய குரங்குத்தனம் வெளிவந்துவிடும். ஏனென்றால், நம் நாகரிகம் என்பது மேம்போக்கான ஏற்பாடு; அழியும் முகப்பூச்சு. அதனால்தான், 'குரங்குகளிடம் இருக்கும் குரங்குத்தனத்தைக் காட்டிலும், மனிதனிடம் இருக்கும் குரங்குத்தனம் அதிகம்’ என்றார் நீட்ஸே.
குரங்குகளின் குரங்குத்தனம் ஓர் எல்லைக்குட்பட்டது. ஆனால், மனிதனின் குரங்குத்தனம் எல்லையற்றது!
ஒரு வீட்டில் மேசையில் இருந்த கத்தியை ஒரு குரங்கு எடுத்துக்கொண்டு ஓடியது. வீட்டில் இருந்த அனைவரும் பயந்தனர். குரங்கைத் துரத்தி ஓடினர். பிடிக்க முடியாமல் பதற்றப்பட்டனர். அங்கிருந்த பெரியவர் ஒருவர், 'பயப்படாதீர்கள்! குரங்கு எடுத்தால் கவலைப்பட வேண்டியது இல்லை. மனிதன் எடுத்திருந்தால் மட்டுமே கவலைப்பட வேண்டும்’ என்றார். கொஞ்சநேரத்தில் எடுத்த இடத்தில் கத்தியை வைத்துவிட்டு குரங்கு சென்றுவிட்டது. ஆனால், மனிதன் எடுத்துச் சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும். யாராவது கற்பனை செய்ய முடியுமா? ஏனென்றால், குரங்குகள் அணுகுண்டுகளைத் தயாரிப்பது இல்லை; தன்னுடைய இனத்தையே அழித்துப் பழி தீர்ப்பது இல்லை.
மனிதனின் வன்மமும் சுயநலமும் பரிணாம வளர்ச்சியோடு தொடர்புடையவை. 'சிறந்தவை நீடிப்பது இல்லை; தகுந்தவையே தம்மைத் தக்கவைத்துக்கொள்கின்றன’ என்ற பரிணாம வளர்ச்சியின் தத்துவத்தை டார்வின், மால்தூஸிடம் இருந்து பெற்றார். நம்மை 'மூன்றாவது சிம்பன்ஸி’ என்று ஜேரட் டைமண்ட் அழைப்பார். நம்முடைய மரபணுக்களில் இன்னும் நம்முடைய பழைய நினைவுகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. நம்முடைய உணவு, செயல்பாடு என்று அனைத்திலும் நம்முடைய உடலமைப்பு பெரிதும் பங்களிக்கிறது. உடலே மனத்தைப் பாதிக்கிறது. மனம் பாதிப்பது சூழலால். உடலை பாதிப்பது மரபுவழிச் சரடு. மனிதன் மாறிவிட்டான் என்று சொல்வதற்குக் காரணம் உடலமைப்பு, மனம் ஆகியவற்றின் மாற்றங்களால்தான்!
இன்று மனத்தின் பல பிரச்னைகளுக்கு நம் ஜீன்களே காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மது அருந்தத் தூண்டுவதற்கும், அதை கெட்டியாகப் பிடித்துக்கொள்வதற்கும் நம் உடலில் உள்ள குறிப்பிட்ட ஜீனே காரணமாக இருக்கிறது. அந்த ஜீன் இருப்பவர்கள் மதுவை முகர்ந்துகூட பார்க்காமல் இருந்தால், தப்பித்தார்கள். முகர்ந்துவிட்டால், மூழ்கியே விடுவார்கள்.
நம் கரு வளர்ச்சியில் நாம் மீன்கள், தவளைகள் எனப் பலவற்றின் கருவைப் போன்ற தோற்றங்களை அடைந்து உதிர்த்துக்கொண்டே வருகிறோம். சிறிது நேரம் நாமும் ஒரு செல் உயிராக இருக்கிறோம். நம் உடலுக்குள் லட்சம் ஆண்டுகளுக்கு மேல் நாம் அடைந்த மாற்றங்கள் இருக்கின்றன; அவை நம் ஆழ்மனத்தைத் தாக்குகின்றன. அவை செய்கைகளாக வெளிவருகின்றன. கொஞ்சம் சீண்டினால் உண்மை இயல்பு வெளிவந்துவிடுகிறது. நம் பிறப்பு, வளர்ப்பு அனைத்துமே உடலால் தீர்மானிக்கப்படுகிறது.
மனிதன் அடையும் வளர்ச்சியின் மறுபக்கமே, அவனுடைய வீழ்ச்சியின் தொடர்ச்சி. நாம் பல்கிப் பெருகவும் சிந்தித்து வளரவும் புதியன படைக்கவும், நிலையாகத் தங்கி விவசாயம் செய்யத் தொடங்கியதே காரணம். ஆனால் அப்போதுதான் நம் நோய்களும் உண்டாயின. நகரங்கள் பெருகின; ஜன சந்தடி கூடியது. நம் அறிவு, மருந்துகள் கண்டன; ஆயுள் அதிகரித்தது. உயிரை முட்டுக்கொடுத்து நிற்க வைக்கக் கற்றுக்கொண்டோம்.
நம் நாட்டில் 1920-ம் ஆண்டு வரை பிறப்பும் அதிகம்; இறப்பும் அதிகம். அதற்குப் பிறகு ஏற்பட்ட நச்சுயிர்க் கொல்லிகளின் உபயோகத்தால் இறப்பு குறைய, பிறப்பு அப்படியே நீடிக்க மக்கள்தொகைப் பெருக்கம். நாம் நெருக்கடியில் வாழும் நகர நெரிசலில் மாட்டிக்கொண்டோம். நம் அடிப்படை சுயநலம் சுருண்டு படுத்திருந்தது; இப்போது படமெடுக்கத் தொடங்கிவிட்டது.
இப்போதும் திறமையானவன் அல்ல; தகுந்தவனே தாக்குப்பிடிக்கும் இயற்கைத் தத்துவம். ரிச்சர்ட் டாகின்ஸ், 'சுயநல ஜீன் கோட்பாடு’ என்று கூறுவார். ஒரு மரபணு தன்னைக் கூடிய மட்டும் பெருக்கிக்கொள்வது பற்றியே அதிக முனைப்பு காட்டும் என்பார். அந்த அடிப்படையே, நம் பிறப்பும் வாரிசுகளும் பாரம்பரிய நீட்சியும். நாம் இயல்பில் சுயநலமானவர்கள். நாம் சுயநலமற்று இருப்பதும், சுயநல நோக்கம் குறித்தே. நம் உடலில்கூட மூளையை 'சுயநல மூளை’ என்பார்கள். நாம் உண்ணும் உணவில் முதல் 20 விழுக்காட்டை மூளை உறிஞ்சிக்கொள்ளும். அப்போதுதான் மற்ற அவயங்கள் இயங்க அது ஆணைப் பிறப்பிக்க முடியும். மூளையின் சுயநலம் உடலுக்கு உபாயமே தவிர அபாயம் அல்ல.
உடலின் சூட்சுமமும், அது உணர்த்தும் குறியீடுகளும் மனித இனத்துக்குப் பொதுவானவை. உடல்மொழியில் ஆங்கிலம், தமிழ் என்ற வேறுபாடு இல்லை.
நிற்கும்போதும் அமரும்போதும் கால்களை மடக்கும்போதும் கைகுலுக்கும்போதும், நாம் செய்கிற பல செயல்கள் ஒருவகையில் நம்முடைய உள்ளத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. நம் உதடுகள் பேசுவதைவிட உடல் பேசுவது அதிகம். நம் சொற்கள் சொல்வதைவிட நம் சைகைகள் உணர்த்துபவை நிறைய. நம் ஒவ்வொரு உடலசைவுக்குப் பின்னும் ஒரு பரிணாம வளர்ச்சிக் காரணம் உண்டு.
பாபூன் குரங்குகளிடம் இருக்கும் தலைமைப் பண்புகள் பத்தும் மனிதனிடமும் காணப்படுவதாக டெஸ்மண்ட் மாரிஸ் 'மனித உயிரியல் பூங்கா’ என்ற நூலில் எழுதியிருக்கிறார். நம் உருவ அமைப்புக்கும் புருவ அசைவுக்கும் பின்னால், பல லட்சம் ஆண்டுகள் இருக்கின்றன.
'மனிதனுக்கு சாகும் அவா உண்டு. சாகும் வேட்கையை வெல்லவே அவன் பிறரை சாகடிக்கின்றான்’ என்பார் சிக்மண்ட் ஃப்ராய்ட். தற்கொலைகள்கூட மரபணுத் தொடர்பு கொண்டவை என்பது அண்மைக் கண்டுபிடிப்பு. நாம் மாணவனாக இருக்கலாம்; ஆசிரியராக இருக்கலாம்; அதிகாரியாக ஆகலாம்; தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்; பெண் பார்க்கச் செல்லலாம், பணியாளர்களைத் தேர்வுசெய்யச் செல்லலாம். இப்படி எத்தனையோ சூழலில் ஒருவருடைய உடல் உணர்த்தும் குறிப்புகளைக் கொண்டு நம்முடைய பணியை எப்படிச் செம்மையாக செய்வது, எதிரே இருப்பவர் நம்பகமானவரா என அறிவது என்று உடலில் தொடங்கி உடல் மொழி மூலம் உள்ளம் தொடும் முயற்சியே இந்தத் தொடர்.
அடுத்தவர் நேசிக்கும் மனிதராக மாற எப்படிப்பட்ட தோற்றம் தேவை?
எந்தப் புன்னகை உண்மையானது?
ஒவ்வொரு மனித உடலுக்கும் ஒரு வாசம் உண்டு தெரியுமா?
எதிரே இருப்பவர் நம்மிடம் பேச ஆர்வமாக இருக்கிறாரா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?
கெட்ட செய்தியைக் கேட்டால் வயிறு கலக்குகிறதே, எதனால்?
நுகரும் திறன் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகம். ஏன்?
நாம் அனைவருமே கீழே விழுவதுபோல ஒருமுறையாவது கனவு கண்டிருக்க வேண்டுமே... எதனால்?
சிலரைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துப்போகிறதே... ஏன்?
பேசாதபோதும் நம் உடல் எதையோ உணர்த்திக்கொண்டே இருக்கிறதே... அதை நாம் அறிவோமா? - என்றெல்லாம் உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்தப் பயணம்.பிரபஞ்சத்தைப் போல பிரமாண்டமான உடலை அறிய ஒரு குவியாடியோடு வந்திருக்கிறேன்;
கண்களையும் இதயத்தையும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்!
அன்புடன்
உங்கள் நண்பன்
இறையன்பு
Message edited by RAWALIKA - Saturday, 05 Jul 2014, 2:08 PM |
|
| |
P_Sakthi | Date: Monday, 07 Jul 2014, 12:58 PM | Message # 2 |
![P_Sakthi](/avatar/41/175519.jpg) Major general
Group: *Checked*
Messages: 374
Status: Offline
| Thanks for sharing this Viji.
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 09 Jul 2014, 10:21 AM | Message # 3 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
பெரும்பாலான பாலூட்டிகள் பார்வையாலும் குரல் யூகங்களாலும் தங்கள் வகையை அடையாளம் காண்கின்றன. கூட்டம் கூட்டமாக வாழும் பாலூட்டிகள் இன்னொரு உயிரைப் பார்த்தும் முகர்ந்தும், மற்றவற்றைத் தெரிந்துகொள்கின்றன. பூச்சிகள், சுவையாலும் மனத்தாலும் தங்கள் இனத்தை அறிகின்றன. பறவைகளோ பார்வையாலும் பாட்டாலும் உணருகின்றன. மீன்களோ, ஒலியையும் கொஞ்சம் ஒளியையும் வைத்து அறிகின்றன. மின்மினிப் பூச்சிகள் இவற்றுக்கெல்லாம் விதிவிலக்கு. ஆண் பூச்சிகள், இனத்துக்குத் தகுந்தவாறு வித்தியாசமாக ஒளிரும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. எது தங்கள் சாதி என்று பகுத்தறியவும், தங்கள் வகையைச் சார்ந்த பெண் பூச்சிகளை ஈர்க்கவுமே இந்த ஏற்பாடு. சில பூச்சிகள் அவற்றை உண்பவற்றை ஏமாற்ற இறகுகளில் வித்தியாசமான வண்ணங்களை விரித்து வைத்து, அவற்றின் சுவையான உடலைக் காத்துக்கொள்கின்றன. மொனார்க் வண்ணத்துப் பூச்சிகள், சுவையில்லாத பட்டாம்பூச்சிகளின் வண்ணத்தை மிமிக்ரி செய்து பறவைகளிடம் இருந்து தப்பிக்கின்றன. இப்படி ஒவ்வொரு உயிரினமும் வெவ்வேறு வகையால் மற்றவற்றை அறிகிறது. மனிதன் எப்படி அறியப்படுகிறான்?
நம் உடல் ஒரு கடல். அது ஒரு நுண் பிரபஞ்சம். அறிவுக்கு அகப்படாத அதிசயம். நம் சொந்த உடலைப் பற்றியே நாம் இன்னும் அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம். மனித உடல், இயற்கை சலித்துச் சலித்துச் செய்த இனிய உருவம். அதை இன்னும் முழுமையாக அறிய முடியாமல் நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம். கடலுக்குள் தேடுவதும் காட்டுக்குள் தேடுவதும், வெளியே இருந்து செய்கிற முயற்சி. உடலுக்குள் தேடுவது படைப்பு ரகசியங்களை அறியும் சாகசப் பயணம்.
கனடாவைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவரான ஃபிரடெரிக் கிரான்ட் பேன்டிங், நீரிழிவு நோய்க்கான மருந்தை முதன்முதலில் தயாரித்தார். முதலில் நாய்களிடம் ஒரு பரிசோதனையை நடத்தினார். அப்போதுதான் கணையநீர் சுரப்பியில் (பேங்க்ரியாஸ்) சிறு தீவுகளைப்போல லாங்கர்ஹான்ஸ் என்கிற சுரப்பி இருப்பதைக் கண்டுபிடித்தார். அது இன்சுலின் என்கிற திரவத்தைச் சுரப்பதையும் அறிந்தார். இன்சுலின் சர்க்கரையை ஆவியாகச் செய்வதால், நம் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரில் சர்க்கரை இல்லாமல் இருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார். அதன்பிறகு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மனிதன் ஒருவனுக்கு அளித்தார்.
அடுத்தநாள் காலை அந்த நோயாளிக்குத் தொலைபேசி செய்தார். மறுமுனையில் இருந்து வந்த குரலில், புத்துணர்ச்சிப் புலப்பட்டது. அந்த நபர், முதல் நாள் மாலை ஒரு மாயாஜால மருந்து தன் உடலில் செலுத்தப்பட்டதாகவும், அதன்மூலம் உடல்நிலை சீரானதாகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். அந்தக் கண்டுபிடிப்பே அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வழிவகுத்தது.
மனித உடல் என்பது பல விசித்திரங்களின் தொகுப்பு. உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் அவசியமான பணி ஒன்றை ஏற்றுக்கொண்டு ஓயாமல் உழைக்கின்றன. உறுப்புகள் ஓய்வெடுத்தால், உடல் வாய்வெடுத்துவிடும். உறுப்புகளுக்கு மட்டும்தான் வாய்தா இல்லை.
இத்தனை நுட்பங்கள் நம் உடலில் எப்படிப் புகுந்துகொண்டன?
நம் நெருங்கிய உறவினர் என்று பார்த்தால் சிம்பன்சிதான். நம்முடைய மரபணுவும் சிம்பன்சியின் மரபணுவும் 98.4 சதவிகிதம் ஒத்துப்போகின்றன. வித்தியாசம் 1.6 சதவிகிதம்தான். கொரில்லாவுக்கும் நமக்கும் 2.3 சதவிகிதம்தான் வேறுபாடு. இந்தக் குறைந்த மரபணு மாற்றத்தில் இத்தனை முன்னேற்றங்கள் நம் உடலில் ஏற்பட்டுள்ளது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. நம் சிவப்பு ரத்த அணு, சிம்பன்சியின் 287 யூனிட்டுகளோடு ஒத்துப்போகின்றன. அப்படிப் பார்த்தால் ஜேரெட் டைமண்ட் கூறுவதைப்போல 'நாம் சிம்பன்சி குடும்பத்தின் மூன்றாம் இனம்’. அவ்வளவுதான்! எப்படி இந்த மூன்றாம் இனம் உலகம் முழுவதும் பரவி உலகத்தைத் தாண்டி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது என்பது சுவாரஸ்யமான ஆராய்ச்சி.
கணக்கற்ற அண்டங்கள் இருக்கும்போது பூமியில் மட்டும் எப்படி உயிர் வந்தது என்ற கேள்வியில் இருந்து தொடங்கினால்தான் இதை நாம் புரிந்துகொள்ள முடியும். கோல்டிலாக் விதிகள் பூமிக்குக் கச்சிதமாக பொருந்தியதால்தான், உயிர் இங்கு தோன்றியது. சரியான அளவுக்கு வெப்பம், எண்ணற்ற வேதியியல் கூறுகள், உயிர் தோன்றத் தேவையான திரவம் என்ற மூன்றும் பூமியில் ஏற்பட்டபோதுதான், வேதியியல் கூறுகள் கன்னாபின்னாவென்று இணைந்து உயிர் தோன்றியது. நுண்ணுயிரில் இருந்து மரபுக் கூறுகள் மாற்றமடைந்து பலவித உயிர்கள் உருவாகத் தொடங்கின. பனியுகத்தின்போது மரங்களில் இருந்து சமவெளிக்கு வந்த குரங்குகளின் உடலில் மாற்றம் ஏற்பட்டன. அவை சூழலுக்கேற்ப கிளைகளாகப் பிரிந்தன.
தாவ முடியாத சூழலில் வேட்டையாடி உயிர்வாழத் தள்ளப்பட்ட ஓர் உயிரினம் உருவானது. அந்த இனம் பழங்களை நம்பி வாழ முடியாது. புலிகளோடும் ஓநாய்களோடும் போட்டிபோட முடியாது. நகங்கள் இல்லை, கூர்மையான பற்கள் இல்லை. அது தன்னைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. நெருக்கடிகளின்போதுதான் நமக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் ஆற்றல் நம்மையும் அறியாமல் உடலில் இருந்து வெளிப்படும். பருந்து வருகிறபோதுதான் குஞ்சுகளைக் காப்பாற்ற கோழி பறந்து எதிர்க்கிறது அல்லவா? அதனைப்போல!
இந்த இடைப்பட்ட இனம் இரண்டு கால்களில் நிற்க முயன்றது. கொரில்லாவும் சிம்பன்சியும்கூடப் பின்னங்கால்களில் நிற்க முடியும். ஆனால், கொஞ்சம் நேரம்தான். இந்த இடைப்பட்ட குரங்கு மனிதன் இரண்டு கால்களில் நின்று நின்று பயிற்சி எடுத்து, முதுகுத்தண்டு அதற்குத் தோதாக வளைய, இப்போது அதில் முன்னேற்றம் பெற்றான்.
அப்படிச் செய்யும்போதெல்லாம் கைகள் இரண்டும் விடுதலையாயின. அவற்றைக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இரண்டாவதாக, கூட்டமாக வாழ்ந்தால்தான் பலமான எதிரியை சமாளிக்க முடியும். எனவே, கும்பல் கும்பலாக வாழத் தொடங்கினான். மூன்றாவதாக, தந்திரமாக இருந்தால்தான் தப்பிக்க முடியும். எனவே, எதிரிகளைக் காட்டிலும் தந்திரமாக வாழக் கற்றான். அதற்கு அவனுடைய விடுபட்ட கைகள் உதவின.
கைகளைக் கொண்டு கல்லில் ஆயுதங்கள் வடித்தான். மரத்தில் கட்டைகள் உருவாக்கினான். நெருப்பை அறிந்தான். அவன் சுயநலமாக இருப்பதற்கு, சுயநலம் இல்லாமல் இருந்தால்தான் சாத்தியம் என்பதை அறிந்துகொண்டான். எனவே கூட்டத்துக்குள் இருக்கும் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் அனுசரிக்க ஆரம்பித்தனர். அவன் உடல் படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்தது. அவன் மூளை பெரிதாகத் தொடங்கியது. 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு முழுமையாய் நிமிர்ந்த மனிதன் உருவானான். ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்திக்கும் மனிதன் உருவானான். அவன் மூளை இப்போது சிம்பன்சியின் மூளையைப்போல மூன்று மடங்கு. 1,400 மில்லி லிட்டர். எல்லாம் அந்த 1.6 சதவிகித மரபணு மாற்றத்தால் ஏற்பட்ட மகத்தான முன்னேற்றங்கள்.
நம்மைக் காட்டிலும் இன்னும் ஒரு சதவிகிதம் மரபணு மாற்றம் கொண்ட இன்னோர் இனம், லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகத்தான் போகிறது. ஒருவேளை அவ்வாறு ஓர் இனம் உருவானால், நியான்டர்தல் என்கிற ஆதி மனிதனை முற்றிலுமாக, க்ரோமேக்னன் என்கிற வளர்ச்சியடைந்த ஆதி மனிதன் முழுவதுமாக அழித்ததைப்போல நம் இனம் சுவடில்லாமல் போய்விடாதா? அதற்குள் எப்படி நாம் சுதாரித்துக்கொள்ளப்போகிறோம்? - அறிவோம்!
விடை தேடுங்கள்... தொடரின் முடிவில் விடை தருகிறேன்!
1. சிம்பன்சிகளுக்கு நெருங்கிய உறவினர் யார்?
அ) பாபூன் குரங்கு ஆ) கொரில்லாஇ) ஒராங்குட்டான் ஈ) மனிதன்
2. நாம் சட்டை அணியும்போது முதலில் எந்தப் பக்க கையை முதலில் நுழைக்கிறோம்?
அ) ஆண்களாக இருந்தால் முதலில் வலது கைஆ) பெண்களாக இருந்தால் முதலில் இடது கைஇ) இருவருமே வலது கை மூலம்தான்ஈ) ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரியாக!
3. நட்சத்திர ஹோட்டல்களில் ஆறேகால் அடிக்குமேல் இருக்கும் உயரமான மனிதர், எடுப்பான மகுடத்தைப் போன்ற தலைப்பாகையுடன் நின்றிருப்பது எதனால்? அ) விடுதிக்கு கம்பீரத்தை அளிப்பதற்குஆ) விருந்தினர்களின் பாதுகாப்புக்காகஇ) ரவுடிகள் உள்ளே நுழையாமல் தடுப்பதற்காகஈ) அவ்வளவு கம்பீரமானவர் நம் காரின் கதவைத் திறக்கும்போது, நம்மையும் அறியாமல் நம் தன்முனைப்பு திருப்திபடுவதற்காக. 4. மனிதப் புலன்களில் முதன்மையானது எது? அ) சுவைத்தல்ஆ) கேட்டல் இ) நுகர்தல்ஈ) பார்த்தல் 5. நம் உடலில் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தொடர்ந்து தேய்மானம் அடைகிற உறுப்பு எது?அ) மூளைஆ) இதயம்இ) பல்ஈ.) அனைத்துமே
|
|
| |
RAWALIKA | Date: Saturday, 12 Jul 2014, 10:07 AM | Message # 4 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
யார் எல்லோரோடும் கலக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார்களோ, அவர்களையே இயற்கை ஆசீர்வதிக்கிறது!
இந்த உண்மையை எளிமையான உதாரணம் மூலமாக விளக்குகிறேன். ஸ்டான்லி மில்லர், ஹெரால்ட் யூரே... ஆகிய இருவரும் சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். ஏராளமான பரிசோதனைகளைச் செய்தவர்கள். மீத்தேன், அமோனியா, ஹைட்ரஜன், தண்ணீர் ஆகிய நான்கையும் கண்ணாடிக் குடுவைகளில் வைத்து அவர்கள் ஒரு பரிசோதனைச் செய்தனர். இது நடந்து அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. சுமார் ஏழு நாட்கள் அந்தச் சோதனை நடந்தது. அவற்றின் முடிவில், கார்பன் பற்றி சில கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்கள்.
10 சதவிகித கார்பன் கனிமங்கள் தன்னிச்சையாகப் பலவற்றோடு கலந்து உயிர் தோன்றுவதற்குத் தேவையான சர்க்கரை, கொழுப்பு, நியூக்ளிக் அமிலங்கள் போன்றவற்றை உருவாக்குகின்றன என்பதுதான் இவர்களது கண்டுபிடிப்பு. இத்தனைக்கும் மீத்தேனில் மட்டும்தான் கார்பன் இருக்கிறது. கார்பன் எதுவோடு வேண்டுமானாலும் கலக்கும் சக்தி கொண்டது என்று கண்டுபிடித்தார்கள். பூமியில் இரண்டு விழுக்காடு மட்டும்தான் கார்பன் இருக்கிறது. நம் உடலிலோ அது 20 விழுக்காடு. பூமியில் கார்பனைப்போல எத்தனையோ மடங்கு சிலிக்கான் இருக்கிறது. ஆனால், கணினியில் சில்லு செய்யப் பயன்படுத்தும் சிலிக்காவை, மனிதனின் செல்லைச் செய்ய இயற்கை தேர்ந்தெடுக்கவில்லை. யார் எல்லோரோடும் கலக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார்களோ அவர்களையே இயற்கை ஆசீர்வதிக்கிறது என்று இதனால்தான் சொல்கிறோம்!
அந்நியர்களோடும் அந்நியோன்யமாகப் பழகுபவர்களே இயற்கையை அனுசரித்து வாழ முடியும். மனிதன் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் கைக்கொண்டு கும்பலாக வாழும்போது, அவனுடைய ஆற்றல் பன்மடங்காகப் பெருகியது. மற்ற உயிரினங்கள் தோற்றுப் போனதற்கும் மனிதன் வெற்றி பெற்றதற்கும் மூன்று அடிப்படைக் காரணங்கள் உண்டு.
ஒரு சிங்கம் காட்டைப் பற்றி ஓர் அங்குலம் விடாமல் அறிந்து வைத்திருந்தாலும், அதை அடுத்த தலைமுறைக்கு அறிவுறுத்திவிட்டுச் செல்ல முடியாது. அதன் அத்தனைத் திறமையும் அதன் மரணத்தோடு சமாதியாகிவிடுகிறது. மனிதன் அவனுடைய அறிவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடிந்தது. அதற்குக் காரணம் மற்றவற்றுக்கு இல்லாத நம்முடைய பேசும் ஆற்றல். ஆயுதங்கள் செய்த ஆதி கால நியான்டர்தல் மனிதனுக்கும் நமக்கும் 99.9 சதவிகிதம் மரபுக்கூறுகள் ஒத்துப்போகின்றன. அவற்றின் மூளை நம்முடையதைவிட கொஞ்சம் பெருசுதான். எஞ்சிய 0.1 விழுக்காட்டு ஜீனில் எப்படி இவ்வளவு பிரமாண்டமான விளைவுகள் ஏற்பட முடியும்? அந்த தம்மாத்தூண்டு மரபணு மாற்றம், நம்முடைய நாக்கிலும் குரல்வளையிலும் ஏற்படுத்திய பரிணாம வளர்ச்சியே இந்தப் பாய்ச்சலுக்குக் காரணம்.
நாக்கு வேறுபட்டு குரல்வளை வித்தியாசப்பட்டு விதவிதமான ஓசைகளை எழுப்பும் திறமை நமக்கு வாய்த்தபோது, நம்மால் பேசுவதற்கான ஒரு மொழியை அடைய முடிந்தது. அப்போது நாம் நம்முடைய அறிவை அடுத்த தலைமுறைக்கு பத்திரப்படுத்திவிட்டுச் செல்ல முடிந்தது. எனவே, சென்ற தலைமுறை கற்றதையும் படிக்கட்டாக வைத்துக்கொண்டு இந்தத் தலைமுறை அதன் மேல் ஏறி நின்று இன்னும் உயரமாகக் காட்சியளித்தது. மொழியும் ஒருமித்த கற்றலும் நம் மேன்மைக்கு முதல் இரண்டு காரணங்கள். மூன்றாவது காரணம், மனிதன் நேரத்தை உருவாக்கியது.
இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் உள்ள 100 பொருள்களைக் கொண்டு உலக வரலாற்றை நெய்ல் மெக்ரிகர் என்பவர் எழுதியிருக்கிறார். அதில் அவர் 'ஓல்டுவை கைக்கோடரி’ என்கிற தான்சானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பொருளை மூன்றாவது அம்சமாகச் சேர்த்திருக்கிறார்.
ஓல்டுவை கைக்கோடரி சகலவிதமான பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்ட பொருள். அரைக்கவும் கிழிக்கவும் மசிக்கவும் நறுக்கவும் வெட்டவும் உடைக்கவும், அந்த ஒரே ஒரு பொருள் ஒரு கட்டத்தில் நம் முன்னோர்களால் கையாளப்பட்டது. அந்த கைக்கோடரியில் இருக்கிற முக்கிய நுட்பமே அது சொல்லும் சூசகத் தகவல்கள்தான்.
கல்லால் ஆன ஒரு பொருளை உண்டாக்கும்போது, நம் நரம்பு மண்டலம் எப்படிச் செயல்படுகிறது என்பதை அறிய வேண்டும். அப்படி ஒரு பொருளை இப்போது நாம் செதுக்கினால்கூட, நம் மூளையின் ஒரு பகுதி மட்டும் அதிகமாக சுறுசுறுப்படைகிறது. இப்போது நாம் பேசும்போது எந்தப் பகுதி மூளையில் இயங்குகிறதோ, அந்தப் பகுதிதான் அப்படியொரு கைக்கோடரியைச் செய்யும்போது இயங்குகிறது. எனவே, மனிதன் உழைக்கத் தொடங்கியபோதுதான் உரைக்கவும் தொடங்கினான் என்பது, அதிசயமான அறிவியல் நுணுக்கம். அப்போதுதான் அவன் பேச முயன்றிருப்பான்.
இரண்டு கால்களால் நிற்கத் தொடங்கியபோது கைகளுக்குக் கிடைத்த விடுதலையை அவன் கற்கருவிகள் செய்யப் பயன்படுத்தினான். அவன் வேட்டையாடுபவனாகவும் சேகரிப்பாளனாகவும் இருக்கிறபோது, பசியை ஆற்றவே அவன் முழு நேரமும் விரயமாகிவிட்டது. அவனுடைய ஆயுதங்களில் முன்னேற்றமும் வேட்டையாடுதலில் வீரியமும் கலந்தபோது, சமூக ஒற்றுமை தொடங்கியது.
குரங்குகள் பழுத்த பழங்களைப் பறித்தால், அடுத்தவற்றுக்குக் கொடுக்காமல் அவையே உண்டுவிடும். ஏற்காடு செல்பவர்களில் சிலர் வாழைத்தாரை வைத்துக்கொண்டு ஜீவகாருண்யம் படைத்தவர்களைப்போல வழியில் தென்படும் குரங்குகளுக்கு பழங்களைப் போட்டவண்ணம் செல்வார்கள். ஒரே குரங்கே ஓடி ஓடி வந்து எல்லா இடங்களிலும் மற்றவற்றை முந்தி பழங்களை அபகரித்துக்கொள்ளும். அவற்றில் சில வாகனங்களில் அடிபட்டு இறந்துபோவதும் உண்டு. காட்டு விலங்குகளுக்கு ஊட்ட முயற்சிப்பது உன்னதமான செயல்பாடு அல்ல. பகிர்ந்துகொள்ளும் பழக்கம் குரங்குகளிடம் இல்லாததால்தான், சிலரை குரங்கு என்று திட்டுகிறோம்.
மாமிசப் பட்சிணிகள் உணவைப் பகிர்ந்துகொள்கின்றன. ஒரு புலி காட்டெருமையை வேட்டையாடினால் தனக்கு வேண்டியதை சாப்பிட்டுவிட்டு இடத்தைக் காலிசெய்கிறது. சிங்கம் வேட்டையாடினால் மீதியை கழுதைப்புலிகள் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. அவற்றுக்குப் பிறகு நரிகள். அவை விட்டவற்றை வல்லூறுகள். எஞ்சி இருக்கும் எலும்புகள், எறும்புகளுக்கு. மற்றவை மண்ணில் மக்கி உரமாகின்றன. மனிதன் மாமிசம் உண்ணும்போதுதான், கொரிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டு திவ்யமாக சாப்பிடக் கற்றுக்கொண்டான். மிச்சம் இருப்பதைப் பகிர்ந்துகொண்டான். அப்போது அவனுக்கு நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் அவனுடைய அறிவைக் கூர்மைப்படுத்தினான். ஆயுதங்களைச் செம்மைப்படுத்தினான்.
அவன் சிந்திக்கத் தெரிந்ததால் வேறுபட்டான். அவன் மனமே அவனைப் படைப்பின் மையமாக ஆக்கியது. பார்ப்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. பறவைகள் பழத்தைத் தின்பதோடு நிறுத்திக்கொண்டன. அவை எப்படி முளைக்கின்றன என்கிற உந்துதல் ஆறாம் அறிவின் காரணமாக அவனுக்கு ஏற்பட்டது. மிருகங்கள் புல்லைத் தின்பதோடும், புலாலைத் தின்பதோடும் மகிழ்ச்சியடைந்தன. மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கினான். மனிதன் நிலையாகத் தங்கி விவசாயம் செய்து வாழ ஆரம்பித்து 10,000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.
அவன் வளர்க்கும் பயிர்களைச் சாப்பிட காட்டு மிருகங்கள் அவன் வளாகத்தில் கால் எடுத்து வைத்தன. அவற்றை வளர்ப்பு மிருகங்கள் ஆக்கினான். அவற்றின் மாமிசமும் பாலும், சேமித்து வைக்கும் தானியங்களும் அவனுக்கு இளைப்பாற நேரம் தந்தது. இதுநாள் வரை 12 மணி நேரம் செய்த வேலையை, நான்கு மணி நேரத்தில் அவன் செய்ய முடிந்தது. எட்டு மணி நேரம் மிச்சமானது. இப்படித்தான் மனிதன் நேரத்தை உருவாக்கினான். வேறு எந்த மிருகமும் நேரத்தை உருவாக்க முடியாது. மனிதன் இன்றுகூட நேரத்தை உருவாக்கும் முயற்சியிலேயே தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். இன்று விஞ்ஞானம் எவ்வளவு செறிவாக நேரத்தை உருவாக்க முடியும் என்றுதான் அக்கறை செலுத்தி வருகிறது. விமானம், ரயிலைவிட அதிக நேரத்தை உருவாக்குகிறது. மின்னஞ்சல், தபாலைவிட அதிக காலத்தை மிச்சம் பிடித்துக் கொடுக்கிறது. இயந்திரங்கள் உற்பத்தி முறையை விரைவுபடுத்தி நேரத்தை உருவாக்குகின்றன.
சுருக்கமாகச் சொன்னால், நம் அத்தனை கண்டுபிடிப்புகளுமே நேரத்தை உருவாக்குபவையே! குழந்தை குறைப் பிரசவமாகிவிட்டால், வெளியே உள்ள இங்க்குபேட்டர் மூலம் நம்மால் செயற்கை கருப்பையை உருவாக்க முடியும். இந்த வசதிகள் எல்லாம் விலங்குகளுக்கு இல்லை. இதுதான் மனிதனை உலகமெங்கும் பரவி விரிய வைத்தது.
|
|
| |
RAWALIKA | Date: Saturday, 12 Jul 2014, 10:09 AM | Message # 5 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| குரங்குகளைத் தவிர மற்ற விலங்குகளுக்கு இனிப்பின் சுவை தெரியாது. ஒரு நாய்க்கு அரை கிலோ சாக்லேட் போட்டால், அது அத்தோடு காலி. எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு வாரம் வெளியூர் செல்ல நேர்ந்தது. அவர் வளர்க்கும் பூனைக்கு ஒரு டஜன் வாழைப்பழத்தைப் போட்டுவிட்டுப் போனார். ஊரில் இருந்து திரும்பி வந்து கதவைத் திறந்தால், ஒரே அழுகல் நாற்றம். வீட்டை விட்டு ஓடிய பூனை அதற்குப் பிறகு திரும்பி வரவே இல்லை.
குரங்குகளோடு மரபணு ஒத்திருப்பதால், நமக்குப் பழங்களின் சுவையும் தெரியும். விலங்குகளை வேட்டையாடி பச்சையாக தொடக்கத்தில் உண்ணும்போது, அவற்றின் உடல் சூட்டை அவன் உணர முடிந்தது. சூடாக இருக்கும்போதே சாப்பிட்ட அவன், நாளடைவில் சைவ உணவையும் சூடாக சாப்பிடக் கற்றான். பழங்களைத் தின்ற பழைய மரபணுவால், அவனுக்கு துவர்ப்பு, கசப்பு, இனிப்பு, புளிப்பு என்ற அத்தனை சுவை மொட்டுகளும் வந்ததோடு, ஆவி பறக்கச் சூடாக உண்ணும் பழக்கமும் வந்தது. மனித உடலில் இன்னும் புலப்படாத மர்மங்கள் இருக்கின்றன. மற்ற விலங்குகளுக்கு அவற்றின் உடலில் இருக்கும் உறுப்புகளின் விவரம் தெரியாது. சின்ன காயம் ஏற்பட்டால், அவை கிருமிகளின் வசப்பட்டு மண்டையைப் போட்டுவிடும். மனிதன் மட்டும் அவன் உடலை அறிய ஆரம்பித்தது விசித்திரமான பயணத்தின் தொடக்கம்!
அறிவோம்!
விடை தேடுங்கள்...
தொடரின் முடிவில் விடை தருகிறேன்!
1. சரளமாகப் பேச முடியாதவர்கள்பாடும்போது இயல்பாகப் பாடுவது எதனால்?
அ) பாட்டு இயல்பானதாக இருப்பதால்
ஆ) பேசும்போது பயம் ஏற்படுவதால்
இ) பாடும்போது அவர்கள் மட்டும் பாடுவதால்
ஈ) பாடுவதும் பேசுவதும் மூளையின் வெவ்வேறு கோணங்களால் இயக்கப் படுவதால்
2. மது அருந்தும் ஆண்கள் மனம்விட்டுப் பேசுவது
அ) சக நண்பர்களுடன்
ஆ) தன்னுடன் மது அருந்தும் சகாக்களுடன்
இ) பின்னணி தெரியாத புதிய மனிதர்களுடன்
ஈ) மது அருந்தகப் பணியாளர்களிடம்
உ) உளவியல் மருத்துவர்களிடம்
3. புதிய மனிதர் ஒருவர் நமக்கு மிகவும் நெருக்கமாக வந்து பேசினால் நாம் ஏன் எரிச்சல் அடைகிறோம்?
அ) அவர் உடல் நாற்றம்
ஆ) பேசும்போது எச்சில் தெளிக்குமே என்ற அச்சம்
இ) அத்துமீறல் என்கிற எண்ணம்
ஈ) நம் நெருங்கிய பிரதேசத்தில் அந்நியர் நுழைவதால் ஏற்படும் சங்கடம்
4. சிற்றுண்டி சாலைகளில் சில சர்வர்கள் சிலரை மட்டும் விழுந்து விழுந்து கவனிப்பது
அ) அவர்கள் முக்கியத்துவத்தால்
ஆ) அவர்கள் வசீகரத்தால்
இ) அவர்கள் பழகும் தன்மையால்
ஈ) அவர்கள் அதிகம் டிப்ஸ் கொடுப்பார்கள் என்கிற யூகத்தால்
|
|
| |
RAWALIKA | Date: Saturday, 19 Jul 2014, 3:31 PM | Message # 6 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
அடுத்தவர்களை ஏமாற்றுவதற்காகச் சில குறியீடுகளை நாம் பயன்படுத்துகிறோம். அவற்றை நம்பி சிலர் வழி தவறி விடுவதும் உண்டு. நிதி மோசடிகள் இப்படித்தான். ஒத்துழைப்பது போல ஏமாற்றுவதும், மகிழ்ச்சியாக இருப்பதுபோல நடிப்பதும் இந்த வகையறாக்களே. இது மனிதர்களிடம் மட்டும் இல்லை, விலங்குகளிடம் உண்டு. பலசாலியான குரங்கு பக்கத்தில் இருக்கும்போது ஓர் உணவுப் பொருளில் அக்கறை இல்லாதது போல நடக்கிற சில குரங்குகள், அந்த பலசாலியான குரங்கு வேறுபக்கம் திரும்பியதும் அதைச் சட்டென்று மின்னல் வேகத்தில் எடுத்து விழுங்கி விட்டு அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொள்வது உண்டு. அதைப் போலவே சில இளம் ஆண் யானை, சீல்கள் (கடல் நாய்) பெண்களைப் போல பாவலா காட்டி பெண் கூட்டத்துக்குள் புகுந்து அக்கூட்டத்தின் தலைமைப் பெண் சீலோடு உறவு வைத்துக்கொள்வதும் உண்டு. எனவே ஏமாற்றுவது மனிதனுக்கு மட்டும் உள்ள ஏகபோக சொத்து அல்ல என்று ஆறுதல் அடையலாம்.
மனிதன் உடலைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டியது அவன் சிந்திக்கத் தொடங்கியபோது ஏற்பட்ட சிலிர்ப்பான உணர்வு. விலங்குகளின் உடலுக்குள் இருக்கும் பாகங்கள் அவனுக்கு மாமிசப்பட்சிணியாக ஆனபோது தெரிய ஆரம்பித்தன. அவன் கும்பலைச் சார்ந்தவர்கள் விலங்குகளுக்குப் பலியாகும்போதும், அவை சாப்பிட்டு மீதமிருக்கும் பாகங்களை அவன் பார்க்க நேர்ந்தபோதும் தெளிவு உண்டானது. அப்போதுதான் உடலைப் பற்றிய புரிதல் அவனுக்குப் பிடிபட ஆரம்பித்தது. அவனுடைய கைகளைப் பயன்படுத்தும் விதங்களை இன்னும் அவனால் மெருகேற்ற முடிந்தது. காடுகளில் திரிந்தபோது அவன் அதிகமான நோய்களைச் சந்திக்கவில்லை. நிலையாகத் தங்கிய பிறகு அவன் உடல், குறைபாடுகளுக்கு ஆளாகத் தொடங்கியது.
தொடக்கத்தில் நோய் வாய்ப்படும்போது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளே அதற்குக் காரணம் என்று நினைத்தான். கிரேக்கர்கள் அப்பல்லோ என்கிற தெய்வத்தின் அம்புகளிலிருந்துதான் நோய்கள் தோன்றுவதாகவும் அவருக்கு ஏற்படும் கோபத்தைத் தணிக்கப் பலியிடுவது அவசியம் என்று நினைத்தார்கள். எல்லா கிரேக்கர்களும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய கருத்துக்கு தேல்ஸ் என்கிற ஞானி சவால் விட்டார். ஏதோ ஒரு காரணத்தால்தான் நோய் ஏற்படுகிறது என்கிற வாதத்தை அவர் முன் வைத்தார். எதையும் பகுத்தறிவு கொண்டு பார்க்க வேண்டும் என்பது அவருடைய கோட்பாடு. அல்க்மேயன் என்கிற கிரேக்க அறிவு ஜீவி ஒருவர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அவர்தான் முதலில் விலங்குகளை அறுத்து அவற்றைப் பற்றி அறிந்துகொள்ள ஆரம்பித்தார். கண்களின் நரம்புகளைக்கூட விவரிப்பு செய்தார். அவரையே உடற்கூறு இயலின் முதல் மாணவன் என்று குறிப்பிடலாம்.
உயிரியலின் அறிவு சார்ந்த வாதங்கள் ஹிப்போக்கிரட்டஸ் என்பவரிடமிருந்து தொடங்கின. கடவுளுக்கும், மருத்துவத்துக்கும் சம்பந்தமில்லை என்பது அவருடைய வாதம். பலி கொடுப்பதைவிட நோயாளிக்கு ஓய்வு கொடுப்பதுதான் அவசியம் என்று அவர் கருதினார். தூய்மையாக இருப்பினும், நல்ல காற்றை சுவாசிப்பதன் மூலமாகவும், எளிய உணவின் மூலமாகவும் நோயாளியைக் குணப்படுத்த முடியும் என்பதே அவர் சொன்ன வழிமுறை. இயற்கையே ஒருவனைக் குணப்படுத்துவதுதான் நல்லது என்பது அவருடைய மருத்துவமுறை. இன்று மருத்துவர்கள் வாசிக்கும் ஹிப்பாக்கிரட்டிக் உறுதிமொழி என்பது அவர் எழுதியதல்ல. பின்னால் யாரோ எழுதி அவருடைய நாமகரணம் சூட்டப்பட்ட பிரகடனம் அது. வலிப்பு நோயைக்கண்டு மக்கள் பயப்படுவதுண்டு. ஏதோ ஒரு தெய்விக சக்திதான் மனிதனின் உடலைப் பிணைத்திருப்பதாக அவர்கள் எண்ணினார்கள். அதற்கு புனித நோய் என்றுகூட பெயருண்டு. ஆனால் ஹிப்போக்கிரட்டஸ், புனிதநோய் என்கிற தலைப்பில் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். வலிப்புக்கும் தெய்விகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவர் நிரூபித்தார்.
உயிரியலைப் பற்றிய பாய்ச்சல் அரிஸ்டாட்டில் மூலம் நிகழ்ந்தது. அவர் உலகை உயிரற்றவை, உயிருள்ளவை என்று பிரித்தார். தாவரங்கள், விலங்குகள், மனிதன் என்று உயிருள்ளவை மூன்று வகைப்படும் என்றார். தாவரங்கள் நகர முடியாது, விலங்குகள் இடம் பெயரும். மனிதனே சிந்திக்க முடிந்தவன். விலங்குகளை சிவப்பு ரத்தம் இருப்பதாகவும், அது இல்லாததாகவும் பிரித்தார். அவற்றின் தர ஏணியை அவர் வடிவமைத்தார். அவரையே விலங்கியலின் தந்தை என்றும் குறிப்பிடவேண்டும். உலகத்தில் முதல் உயிரியல் பூங்காவை நிறுவியவர் அவர்.
கேலன் என்கிற கிரேக்கர் மருத்துவத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்தவர். கிளாடியாட்டஸ் என்கிற விளையாட்டை அருகில் இருந்து கவனித்து மரணமடைபவர்களுடைய உடல் பாகங்களைப் பற்றி அதிகமாக அவர் அறிந்துகொண்டார். நாய், ஆடு போன்ற விலங்குகளை அறுவைச் சிகிச்சை செய்து உடலைப்பற்றி அவர் அறிந்துகொண்டார். இறுதியாக அவர் குரங்கை அறுத்து அது எப்படி மனிதனைப்போல இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆரம்பித்தார். கேலன் மனித உடலின் வெவ்வேறு உறுப்புகளைப் பற்றி விரிவாகப் புத்தகங்கள் எழுதினார்.
இடைப்பட்ட காலத்தில் மத நம்பிக்கைகளின் காரணமாக உடல் குறித்த புரிதல் பெரிய அளவில் நிகழவில்லை. ஆனால் இந்தியாவில் சுஷ்ருதா, சராக்கா போன்ற மருத்துவ மேதைகள் பல்வேறு விதமான வழிமுறைகளையும், சிகிச்சை முறைகளையும் இயற்கையிலிருந்து உருவாக்கினார்கள். ஆனால் அவற்றின் ஆவணங்கள் பெரிய அளவில் கிடைக்காமல் போய்விட்டன. இருந்தாலும், கண்புரை அறுவைச்சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவற்றை உலகுக்களித்தது இந்தியாதான்.
அசோகர் காலத்தில், உலகத்திலேயே முதன்முதலில் இந்தியாவில்தான் விலங்குகளுக்கான மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. மேற்கில் தொய்வு ஏற்பட்டபோது அரோபியாவில் அரிஸ்டாட்டில், கேலன் என்பவருடைய படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டு அவைகுறித்து விளக்க உரைகளும் எழுதப்பட்டன. பாரசீக மருத்துவர் அலி அல்ஹுசைன் இபின்சினா என்பவர் அபிசின்னா என்கிற பெயரில் பல புத்தகங்கள் எழுதினார்.
உடற்கூறு பற்றி இத்தாலியிலிருந்த மொன்டினா டா லுசி என்பவர் நிறைய அறுவைச்சிகிச்சைகளைச் செய்து 1316-ம் ஆண்டு முதல் புத்தகத்தை எழுதினார். அவருடைய புத்தகத்தில் இருந்த பல தவறுகளை அவரால் களைய முடியவில்லை.
லியோனாடோ டாவின்சி ஓவியராக மட்டுமில்லாமல் உடற்கூறுகள் பற்றியும் பல ஆய்வுகளைச் செய்தவர். கண்கள், இதயம் போன்றவற்றைப் பற்றியெல்லாம் விளக்க அவற்றின் செயல்பாடுகளை விவரித்து சித்திரங்கள் தீட்டினார். அவருடைய படைப்புகள் அவருடைய சமகாலத்தினருக்குத் தெரியாமலேயே போய்விட்டன என்பதுதான் வருத்தமான நிகழ்வு.
|
|
| |
RAWALIKA | Date: Saturday, 19 Jul 2014, 3:31 PM | Message # 7 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| வெசாலியஸ் என்கிற பெல்ஜியாவைச் சேர்ந்த உடற்கூறு அறிஞர் மிகத்தெளிவான புத்தகம் ஒன்றை எழுதினார். அதற்கு மனித உடலின் வடிவமைப்பு என்று பெயர். அதுதான் முதல் துல்லியமான புத்தகமாகக் கருதப்படுகிறது. அவர் நடத்திய பொது உடற்கூறு அறுவைகள் சட்டவிரோதமாகக் கருதப்பட்டு, அதற்காக அவர் புனித யாத்திரை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டார். போனவர் திரும்பி வரவேயில்லை.
உடலின் முக்கிய அம்சம் ரத்தம். மனித உடலின் எடையில் 14-ல் ஒருபாகம் ரத்தத்துக்குச் சொந்தம். பெண்களைவிட அதிகம் ரத்தம் ஆண்களுக்கு. ஒரு கிலோ உடல் எடைக்கு 79 மில்லி லிட்டர் ரத்தம் ஆணுக்கும், 65 மில்லி லிட்டர் ரத்தம் பெண்ணுக்கும் இருக்கிறது. சராசரி எடையுள்ள ஆணுக்கு 5.5 லிட்டர் ரத்தமும், சராசரி அளவுள்ள பெண்ணுக்கு 3.5 லிட்டர் ரத்தமும் இருக்கின்றன. உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு பாகமும் ரத்தத்தால் தோய்ந்திருக்க வேண்டும். உடலில் திரவமயமான திசு ரத்தம்தான். நம் உடலில் 60 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. உயிரின் தொடர்ச்சி கடலில் நிகழ்ந்ததால் இதில் வியப்பு இல்லை. நிலத்திலும், நீர்ப்பின்னணியில் செல்கள் வேதியியல் மாற்றங்களை எதிர்கொள்வதற்காக இந்த ஏற்பாடு. சில பிராணிகளுக்கு உடலில் 99 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது.
ரத்தத்தில் 80 சதவிகிதம் தண்ணீர்தான். சிறுநீரகமும் 80 சதவிகிதம் தண்ணீரைக்கொண்டது. மூளையின் கிரே மேட்ரியிலும் 85 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. கடலிலிருக்கிற மாதிரியே சில தன்மைகள் ரத்தத்துக்கு உண்டு. சோடியம், குளோரைடு போன்ற வேதியியல் பொருட்கள் கடலிலிருப்பதைப்போலவே இருப்பதால் உப்புத்தன்மை ரத்தத்துக்கு உண்டு. ரத்தம் என்கிற ஒன்று உடலிலிருந்து வெளியாவதை காயத்தின்போதும், தாக்குதலின்போதும் உணர்ந்திருந்தாலும் அது எவ்வாறு மனித உடலில் செயல்படுகிறது என்பது புதிராகவே இருந்தது. இதயம் எப்படிப் பணியாற்றுகிறது என்பது கிரேக்கர்களுக்கு சரியாகப்பிடிபடவில்லை. இதயம் என்பது ரத்தத்தை பம்ப் செய்கிற ஒரு கருவிதான். ஆனால் அந்த ரத்தம் எங்கிருந்து வருகிறது, எங்கு செல்கிறது என்பது சரியாகத் தெரியவில்லை. வெய்ன்களைப் பற்றி மட்டுமே அவர்கள் தெரிந்துவைத்திருந்தார்கள். அவர்களுக்கு ஆர்ட்டரி பற்றித் தெரியவில்லை.
ஹிரோஃபிலஸ் என்பவர் இரண்டு வகைப்பட்ட குழாய்களும் ரத்தத்தை எடுத்துச் செல்வதை விளக்கினார். கேலன் ரத்தச் சுழற்சியைப் பற்றிய தவறான புரிதலை முன்வைத்தார். இதயத்தின் வலது பக்கத்துக்கு சில ரத்தக் குழாய்கள் ரத்தத்தை எடுத்துச் செல்வதாலும், பிறகு அது இடது பக்கம் செல்வதாகவும் வலது இடது பக்கப் பிரிவுகளுக்கு இடையே சின்னச் சின்ன ஓட்டைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதையும் அறிஞர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டார்கள். கேலன் குறிப்பிட்டதை குறைகூற யாருக்கும் துணிச்சல் இல்லை.
ரத்தம் பற்றிய ஆராய்ச்சியே மருத்துவத்தின் மகத்தான உயரத்தை அடைய உதவியது. அதுவே மனித மாற்றத்தின் அடிப்படை. அது திருப்பங்கள் கொண்ட திகில் கதை.
அறிவோம்!
விடை தேடுங்கள்... தொடரின் முடிவில் விடை தருகிறேன்!
1. மாடி அறைகள் கொண்ட பெரும்பாலான வீடுகளில் படுக்கை அறை மாடியிலிருப்பது எதனால்?
அ) பாதுகாப்புக்காக
ஆ) சுதந்திரம் கருதி
இ) பரிணாம வளர்ச்சியின் காரணமாக
ஈ) அந்தஸ்த்தை உணர்த்த
2. நாம் பிறக்கும்போது நம் மூளையின் அளவு
அ) 50 விழுக்காடு
ஆ) 75 விழுக்காடு
இ) 10 விழுக்காடு
ஈ) 23 விழுக்காடு
3. தாவர உண்ணிகளுக்கும், மாமிச உண்ணிகளுக்கும் பார்வை அமைப்பு எப்படி அமைந்துள்ளது?
அ) ஒரேமாதிரி பார்வை அமைப்பு
ஆ) வண்ணங்களில் வேறுபாடு
இ) மாமிச உண்ணிகளுக்கு இருவிழிப்பார்வை அமைப்பும் தாவர உண்ணிகளுக்கு ஓரம்சார்ந்த பார்வை அமைப்பும் இருக்கின்றன.
ஈ) மாமிச உண்ணிகளுக்கு பார்க்கும் திறன் அதிகமாகவும், தாவர உண்ணிகளுக்கு குறைவாகவும் இருக்கிறது.
4. நம் கண்களுக்கு வண்ணத்தைக் கொடுக்கும் உறுப்பு எது?
அ) ரெட்டினா (விழித்திரை)
ஆ) கண்மணி (Pupil)
இ) கருவிழி (Iris)
ஈ) கூம்பு வடிவ கோன் செல்கள்
5. நீங்கள் ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். இதுவரை இலையில் அமர்ந்து சாப்பிட்டுத்தான் பழக்கம். அங்கு பஃபே (விரும்பியதை நாமே எடுத்து உண்ணும்) விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் என்ன செய்வீர்கள்?
அ) வயிறு சரியில்லை என சாப்பிடுவதைத் தவிர்ப்பேன்.
ஆ) விரும்பியதை எல்லாம் எடுத்துப் போட்டுக்கொண்டு வந்து சாப்பிட்டு முடிப்பேன்.
இ) தட்டை நிரப்பாமல் குறைவாக எடுத்துக்கொண்டு வந்து இரண்டு, மூன்று முறை சென்று சாப்பிடுவேன்.
ஈ) ஒப்புக்கு சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து வயிராற சாப்பிடுவேன்.
|
|
| |
RAWALIKA | Date: Saturday, 19 Jul 2014, 3:36 PM | Message # 8 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
ஓர் எலி ஏன் சீக்கிரம் செத்துப்போகிறது? ஒரு பட்டாம்பூச்சியின் வாழ்நாள் ஏன் நாட்கணக்கில் மட்டுமே இருக்கிறது? மனிதன் எப்படி இத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறான்? இவை எல்லாம் புதிரான தகவல்கள். எல்லா உயிர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் உள்ள இதயத் துடிப்புகள் சமமானவை. சில பிராணிகள் விரைவாகத் துடித்து முடிந்து போகின்றன. சில நிதானமாகத் துடித்து நின்று வாழ்கின்றன.
'உடலின் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிஸம்) நிறையைப் பொருத்து அமைகிறது’ என்று க்ளீபர் என்பவர் கண்டுபிடித்தார். அதாவது, ஒரு பசுவைவிட அணிலின் எடை ஆயிரம் மடங்கு குறைவு. ஆயிரத்தின் வர்க்கமூலம் 31. முப்பத்தொன்றின் வர்க்கமூலம் 5.5. எனவே, பசுவின் இதயத் துடிப்பு அணிலின் இதயத் துடிப்பைவிட 5.5 மடங்கு குறைவு. அதனால், அது அணிலைப்போல 5.5 மடங்கு அதிக ஆண்டுகள் உயிர் வாழ்கிறது. இதுவே உயிர் ரகசியம்.
நாம் அதிக நாட்கள் உயிர் வாழ்வதற்கு, நலிவடையும் பாகங்களைப் பழுதுபார்க்க நம் உடல் கற்றுக்கொண்டதுதான் காரணம். மிகவும் தாமதமாக இனவிருத்திச் செய்யும் பருவத்தை நாம் அடைவதற்கும் இதுதான் காரணம். ஓர் எலி இரண்டாம் பிறந்த நாளை கொண்டாடுவதுகூட கடினம். மனிதன் எளிதில் 82-வது பிறந்தநாளைக்கூடக் கொண்டாடிவிட முடியும். நம் வாழ்நாளை நீட்டிப்பதற்கு உடலை நாம் புரிந்துகொண்டது முக்கிய காரணம். அதிலும் குறிப்பாக ரத்தத்தைப் பற்றி!
இதயம் எப்படி செயல்படுகிறது என்ற குழப்பத்தில் மனிதன் இருந்தபோது, அதில் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தவர் இத்தாலியைச் சேர்ந்த ஃபேப்ரிகஸ். பெரிய வெய்ன்களில் பெரிய வால்வு இருப்பதைக் கண்டுபிடித்தார். அவை எப்படி பணியாற்றுகின்றன என்பதையும் மற்றவர்களுக்குச் சுட்டிக்காட்டினார். ஆனாலும், வெய்ன்கள் மூலமாக ஒரு திசையில்தான் ரத்தம் செல்ல முடியும் என்பதை உணர முடிந்தது. அதற்கு மேல் என்னாகிறது என்பதைப் பற்றி அவரால் அறிய முடியவில்லை.
சில நேரங்களில் ஆசிரியர்கள் செய்ய முடியாததை, அவர்களின் மாணவர்கள் சாதித்துக் காட்டுகிறார்கள். ஃபேப்ரிகஸுக்கு ஹார்வி என்கிற மாணவர் இருந்தார். அவர், இதயத்தைக் கூர்ந்து படித்தார். ரத்தம் இதயத்துக்கு வெய்ன்கள் மூலமாகச் செல்வதையும், அவை திரும்பி வராதபடி வால்வுகள் தடுப்பதையும் கண்டுபிடித்தார். இதயத்தில் இருந்து ஆர்ட்டரிகள் மூலமாக ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு வெளியே செல்வதையும், அந்த ரத்தம் திரும்பி வராமல் இருக்க ஆர்ட்டரியில் வால்வு இருப்பதையும் அவர் கண்டுபிடித்தார். ஒரு ஆர்ட்டரியை ரத்தம் ஓட முடியாதபடி கட்டினால், இதயம் உப்புவதைக் காண்பித்தார். வெய்னைக் கட்டினால் இதயம் உப்பாமல் இதயத்துக்குப் பக்கவாட்டில் இருக்கும் ஒரு பகுதி உப்புவதைக் காண்பித்தார்.
1628-ம் ஆண்டு 72 பக்கங்களே கொண்டே ஹார்வியின் புத்தகம் வெளியானது. எல்லா குறிப்புகளிலும் தன் முதல் எழுத்தைப் பதிவுசெய்வது ஹார்வியின் வழக்கம். அவருடைய குறிப்புகள் இப்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் 1615-ம் ஆண்டே ரத்தச் சுழற்றியைப்பற்றி கண்டுபிடித்திருந்தாலும், 15 ஆண்டுகள் கழித்து தயக்கத்தோடுதான் வெளியிட்டார் என்பது புரிகிறது. அது மருத்துவத் துறையின் ஒரு புரட்சிகரமான புத்தகம்.
பழமைவாதத்தைத் தலையில் தூக்கிக்கொண்டு ஆடிய மருத்துவர்கள், ஹார்வியைக் கடுமையாகத் தாக்கினார்கள். ஹார்வி இருக்கும் வரை ஆர்ட்டரியையும் வெய்ன்களையும் இணைக்கும் ரத்தக்குழாய்களைப் பற்றிய நுண்மை கண்டுபிடிக்கப்படவில்லை.
உடல் என்பது ஒன்றுக்கொன்று பின்னப்பட்ட செயல்பாட்டுக்கூறுகளின் ஒருங்கிணைப்பு என்கிற கருத்து உருவாக, ஹார்வியின் கண்டுபிடிப்பு உதவியது. ஆர்ட்டரிகளையும் வெய்ன்களையும் இணைக்கிற நுண்குழாய்கள் மார்செல்லோ மால்ஃபிகியால் கண்டுபிடிக்கப்பட்டது. மைக்ராஸ்கோப்பைக் கண்டுபிடித்த பிறகுதான் அது சாத்தியமானது. அவரே லென்ஸ்களைப் பயன்படுத்தி உடல் பற்றிய நுட்பங்களைக் கண்டுபிடித்தார். கேப்பிலரிஸ் என்கிற நுண்குழாய்கள் மூலம் பல பரிமாற்றங்கள் நடப்பதை அவர் கண்டுபிடித்தார்.
|
|
| |
RAWALIKA | Date: Saturday, 19 Jul 2014, 3:36 PM | Message # 9 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| ஆன்டன்வான் லீவான் ஹுக் என்கிற ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவர் மைக்ராஸ்கோப்புகளைக் கண்டுபிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர். தட்டுப்படுவதையெல்லாம் அவர் அந்தக் கருவியில் வைத்துப் பார்ப்பது வழக்கம். அப்படி, தலைப்பிரட்டையின் வாலிலும், தவளையின் காலிலும் ரத்தச்சுழற்சியை முதலில் அவர் கண்டுபிடித்தார். ஒருநாள் தேங்கிக்கிடந்த சாக்கடை நீரைத் தன்னுடைய மைக்ராஸ்கோப்பின் மூலம் பார்க்கும்போது, வெறும் கண்ணுக்குத் தெரியாத சில நுண்ணுயிர்கள் தென்பட்டன. அவற்றுக்கு உயிர் இருப்பதற்கான அத்தனை லட்சணங்களும் தெரிந்தன. அவற்றை அவர் 'அனிமல்க்யூல்’ என்று அழைத்தார். அதுவே பின்பு, 'முதல் விலங்குகள்’ என்று பொருள்படும் புரோட்டோசோவா என்கிற கிரேக்கச் சொல்லைத் தரித்துக்கொண்டது. அதன் மூலமே மைக்ரோபயாலஜி என்கிற புதிய அறிவியல் பிரிவு பிறந்தது.
ராபர்ட் ஹுக் என்கிற இங்கிலாந்து விஞ்ஞானி, உயிரியல் வளர்ச்சியில் மைல்கல்லாகக் கருதப்படும் ஒரு முக்கிய கண்டுபிடிப்பை முன்வைத்தார். அவர் மைக்ராஸ்கோப்களால் வசீகரிக்கப்பட்டவர். அவற்றின் மூலம் பார்த்தவற்றை அவர் அழகான ஓவியங்களாகத் தொகுத்து 1665-ம் ஆண்டில் மைக்ரோக்ராஃபியா என்கிற புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் இருந்த ஓர் ஓவியத்தைப் பற்றிய முக்கியத்துவத்தை அவரே அப்போது உணரவில்லை. கார்க் மரத்தின் ஒரு துண்டை மைக்ராஸ்கோப்பில் பார்த்து அவர் வரைந்திருந்த ஓவியமே அது. அதில் சின்ன செவ்வக அறைகளால் ஆன ஒரு சித்திரம் இருந்தது. அதற்கு செல் என்று பெயரிட்டார். செல் என்றால் சிறிய அறை என்று பெயர்.
18-ம் நூற்றாண்டில் மைக்ராஸ்கோப்களின் வளர்ச்சி போதிய அளவு எட்டியதும் உயிரியல் கண்டுபிடிப்புகள் தேங்க ஆரம்பித்தன. 1820-ம் ஆண்டு அக்ரோமேட்டிக் மைக்ராஸ்கோப்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது மறுபடியும் உயிரியல் பாய்ச்சலில் செல்ல ஆரம்பித்தது.
விஞ்ஞானிகள் சில நேரங்களில் இல்லாதவற்றையும் கற்பனை செய்துகொள்ளத் தொடங்கினர். கண்ணுக்குத் தெரியாதவற்றை எல்லாம் பார்க்க முடிந்ததும், ஆர்வத்தின் உந்துதலால் எதை எதையோ சொல்லி காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டனர். விந்துவில் மனித உருவங்கள் இருப்பதைப்போல படங்கள் வரைந்து காண்பித்தனர். அந்த மனித உருக்குள் இன்னொரு மனித உரு ஒளிந்திருப்பதைப்போல எல்லாம் காட்சிப்படுத்த ஆரம்பித்தனர் இது பரிணாம வளர்ச்சிக்கு முற்றிலும் தடையான ஒன்று.
இந்தக் கருத்தை நோக்கி எதிர்க்கணையை முதலில் செலுத்தியவர், காஸ்பர் ஃபிரடெரிக் உஃல்ப் என்கிற ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி. அவர் 1759-ம் ஆண்டு தன் 26-ம் வயதில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். 'செடியின் வளரும் தண்டு பாகுபடுத்தப்பட்ட, பொதுவான படிவங்களைக் கொண்டுள்ளது. அது வளர வளர பாகுபாடு அடைந்து ஒரு பகுதி மலராகவும், இன்னொரு பகுதி இலையாகவும் மாறுகிறது. அதைப்போலவே முட்டைக்குள் இருக்கும் கரு வளர வளர பாகுபாடு அடைந்து தலை, சிறகு, கால் போன்ற கோழிக்குஞ்சின் பாகங்கள் உருவாகின்றன’ என்பதை அவர் ஆய்வு செய்தார். சிறிது சிறிதாக சிறப்படைவதும், தனி பாகங்களாக உருவாவதும் நடக்கின்றன என்பது அவரால் முன்மொழியப்பட்டது.
ஜேவியர் பிகாட் என்கிற பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர், 'உடம்பின் ஒவ்வொரு பகுதியும் குறிப்பிட்ட தோற்றத்தைப் பெற்றிருப்பதற்குக் காரணம் அவற்றில் இருக்கும் செல்களின் தொகுப்பே’ என்றார். அதை அவர் திசுக்கள் என்று அழைத்தார். அவரே ஹிஸ்டாலஜி என்கிற திசு இயலை தொடங்கிவைத்தவர். மனித உடலின் உறுப்புகள் வெவ்வேறு திசுக்களால் ஆனவை. இதயத்தில் இருக்கும் திசுக்களும், கல்லீரலில் இருக்கும் திசுக்களும் வேறுபட்டவை.
ராபர்ட் ஹுக் முன்வைத்த செவ்வக செல்களின் உள்ளே பிசுபிசுவென்ற திரவம் இருப்பதை, செகஸ்லோவேக்கியாவைச் சேர்ந்த பர்க்கின்ஜி என்கிற விஞ்ஞானி முன்வைத்தார். முட்டைக்குள் இருக்கும் உயிருள்ள கரு பொருளை அவர் புரோட்டோபிளாசம் என்று அழைத்தார்.
செல்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட உயிரியல் அறிஞர்கள், உயிருள்ள திசுக்கள் எல்லாவற்றிலும் அவை இடம்பெற்றிருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்தனர். ஷ்வான் என்பவர் தாவரங்கள் மட்டுமல்ல, விலங்குகளும் செல்களால் நிர்மாணிக்கப்பட்டவை என்கிற கருத்தை முன்வைத்தார். ஒவ்வொரு செல்லும் ஒரு மெல்லிய சவ்வால் மூடப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் முன்வைத்தார். ஷ்லீடன், ஷ்வான் என்கிற இருவருமே சைட்டாலஜி என்கிற செல்கள் பற்றிய புது அறிவியல் கிளை தொடங்க காரணமாக இருந்தார்கள்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கொல்லிக்கர் என்பவர் முட்டையும், உயிரணுவும் தனித்தனி செல்கள் என்பதை முன்வைத்தார். கண்ணுக்குத் தெரிகிற மாதிரி இருக்கும் பறவைகளின் முட்டையும் தனி செல்தான் என்பதையும் அவர் தெரிவித்தார். சினையான முட்டையும் தனி செல்லே என்பதை அவர் உறுதிப்படுத்தினார். விலங்குகளுக்குள் உள்ள வேறுபாட்டை அவற்றின் செல்களின் வளர்ச்சி மூலம் அறிந்துகொள்ள முடியும்.
ரத்தமும் பணமும் ஒரே குணமுடையவை. இரண்டும் சுழற்சியில் இருந்தால்தான் ஆரோக்கியம்! விடை தேடுங்கள்... தொடரின் முடிவில் விடை தருகிறேன்! 1. உங்கள் வீட்டுக்கு ஒரு விருந்தினரை சாப்பிட அழைக்கிறீர்கள். எப்படி பரிமாறுவீர்கள்?
அ) எல்லா பதார்த்தங்களையும் இலையில் வைத்து நிரப்பிய பிறகு சாப்பிடக் கூப்பிடுவேன்.
ஆ) வந்த பிறகு பதார்த்தங்களைப் பரிமாறி ஈ மொய்க்காமல் பார்த்துக்கொள்வேன்.
இ) விருந்தினர் அமர்ந்த பிறகு, ஒவ்வொரு பதார்த்தத்தின் பெயரையும் சொல்லி அவர் அனுமதி பெற்று பரிமாறுவேன்.
2. உங்கள் வீட்டுக்கு வந்திருக்கும் நபர் வந்த ஐந்து நிமிடத்திலேயே சட்டையில் இருந்து கார் சாவியை எடுத்து பார்த்துக்கொண்டே இருக்கிறார். அதன் பொருள்.
அ) அந்த சாவிக்கொத்தின் அழகை நமக்குக் காட்ட விரும்புகிறார்.
ஆ) புதிதாக கார் வாங்கியிருப்பதை நமக்கு சூசகமாகச் சொல்ல விரும்புகிறார்.
இ) அவர் உடனடியாகப் போக வேண்டும் என உணர்த்துகிறார்.
3. உங்கள் பணியாளர் தவறு செய்தால்? அ) நான் கண்டிப்பானவன் என உணர்த்த அனைவர் முன்பும் கண்டித்து மற்றவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவேன். ஆ) முதல் முறை மன்னிப்பேன் இ) தனியாக அழைத்து கண்டிப்பேன்.
ஈ) எழுத்து மூலம் எச்சரிக்கை தருவேன்.
4. எப்போதும் அலுவலகம் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர்கள்
அ) உழைப்பு போதை கொண்டவர்கள்
ஆ) செய்யும் தொழிலே தெய்வம் என நினைப்பவர்கள்
இ) டென்ஷன் பேர்வழிகள்
ஈ) நிர்வாகத் திறன் அற்றவர்கள்
5. நல்ல தகவல் தொடர்பாளராக இருப்பதற்கு முக்கியமான தகுதி
அ) சரளமாகப் பேசும் திறன்
ஆ) உடல்மொழியோடு பேசுதல்
இ) பார்வையாளருக்கேற்ப பேசுதல்
ஈ) கவனித்தல்
- அறிவோம்!
|
|
| |