சுதந்திர கிரகணத்தில் ஓர் எழுத்தாளன்! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » சிந்தனை களம் » சிந்தனை களம் » சுதந்திர கிரகணத்தில் ஓர் எழுத்தாளன்! (நன்றி - ஜூனியர் விகடன்)
சுதந்திர கிரகணத்தில் ஓர் எழுத்தாளன்!
RAWALIKADate: Wednesday, 21 Jan 2015, 8:36 AM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சுதந்திர கிரகணத்தில் ஓர் எழுத்தாளன்!
ப.திருமாவேலன்

நன்றி - ஜூனியர் விகடன்
 

(25 / 01 2015)

ஒரு கவி எழுதினான்...

''சூரிய கிரகணம்பார்த்தோம்...
சந்திர கிரகணம்பார்த்தோம்...
இதுசுதந்திர கிரகணம்!''  - என்று! இன்று தமிழ்நாட்டில் இப்படித்தான் இருக்கிறது.

''எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல. ஆகவே, உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி, அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.



'மாதொரு பாகன்’ நூலோடு பிரச்னை முடிந்து விடப் போவதில்லை. வெவ்வேறு அழைப்புகள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது ஒரு நூலை எடுத்துப் பிரச்னை ஆக்கக் கூடும். ஆகவே பெருமாள் முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:

பெருமாள் முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக் கொள்கிறான். இனி எந்த நூல்களும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறான்.

பெருமாள் முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கி விடுவான்.

பெருமாள் முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தி விடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால், உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான். இனி எந்த இலக்கிய நிகழ்வுகளுக்கும் பெருமாள் முருகனை அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறான்.

எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ, பிரச்னையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறான். அவனை விட்டு விடுங்கள். அனைவருக்கும் நன்றி.''

'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி’  மக்கள் மீது ஒரு படைப்பாளி உமிழ்ந்த எச்சில் இது. யாரும் பார்த்துவிடக் கூடாது என்ற பதற்றத்தில் அந்த எச்சில் துடைக்கப்படலாம். ஆனால் அதன் நாற்றம், தலைமுறை தாண்டியும் அடிக்கும். ஏனென்றால், படைப்பின் சூட்சுமமே அதுதான்.

1600-களில், 1700-களில், 1800-களில் தொடங்கப்பட்ட எந்த அமைப்பும், அரசியல் கட்சியும், சாதிச் சங்கமும் இப்போது இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் உருளத்  தொடங்கிய முதல் அச்சு இயந்திரம் வெளியிட்ட புத்தகங்கள் இன்றும் இருக்கின்றன. பெருமாள் முருகன் உயிர்த்தெழப் போவதில்லை. ஆனால் 'மாதொரு பாகன்’ நாவலுக்கு மரணமில்லை என்பதே உலகியல் யதார்த்தம்.

எந்தவொரு படைப்பின், படைப்பாளியின் குணமே எதிர்ப்புதான். சாதிச் சதியால் சமூகம் கெட்டுச் சீரழிந்தபோது, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொல்லிய வள்ளுவனின் குரல், கலகக்குரல்தான். ஆட்சியாளனைப் பார்த்து பயந்து இருந்த மன்னராட்சி  காலத்தில், 'குடிமக்கள் துன்பப்பட்டு தாங்க முடியாமல் அழும் கண்ணீர் அரசாட்சியை அசைக்கும்’ என்று எழுதும் துணிச்சல் வள்ளுவ படைப்பாளிக்கே இருந்தது. ஆன்மிகவாதிகள் சொல்வதே வேதம் என்றிருந்த நேரத்தில், 'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு’ என்று வழிநடத்தினதால்தான் ஈராயிரம் ஆண்டுகள் கழித்தும் வள்ளுவன் பேசப்படுகிறான்.

'உன்னை அன்றிக் கவிஞர்க்கு வேறு இடமே இல்லையோ?’ என்று மன்னனைப் பார்த்து கேள்வி கேட்கும் திண்மை கம்பனுக்கு இருந்தது. கம்பன்தான் காலங்கள் கடந்தும் நிற்கிறான். கம்பனுக்கு தடைகள் போட்ட மன்னன் பெயர் குலோத்துங்கன் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். சமணப் புலவர்கள் மதுரையை விட்டு வெளியேறக் கூடாது என்று பாண்டிய மன்னன் கட்டளையிட்டதை காதில் வாங்காமல், நள்ளிரவில் ஆளுக்கு ஒரு கவிதையை எழுதி வைத்துவிட்டு தலைமறைவான புலவர்களின் பாட்டைத்தான் 'நாலடியார்’ என்று பல நூறு ஆண்டுகளாகப் படித்துக் கொண்டிருக்கிறோம்.

இதை எழுது, இதை எழுதாதே என்று சொன்னால் கேட்பதற்கு படைப்பாளி ஒன்றும், பத்திரப் பதிவு துறை ரைட்டர் அல்ல. (அப்படிச் சிலர் தங்களை எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளலாம் என்பது வேறு.)

படைப்பாளி நிறுவனங்களை உடைக்கிறான், மீறுகிறான், நிராகரிக்கிறான். இளங்கோவுக்குள் அது இருந்ததால்தான் அரண் மனையை விட்டு வெளியேற வைத்தது. 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியே பராபரமே!’ என்று பராபரக்கண்ணி பாடிய தாயுமானவர் பரம்பரை ஏழைப் பாடகன் அல்ல. திருச்சிராப்பள்ளியை ஆட்சி செய்த விஜயரங்க சொக்கநாதரிடம் அமைச்சராக இருந்தவர். ஆட்சிக்கு அச்சாணியாக இருப்பதைவிட எழுத்தாணி பிடிக்கலாம் என்று வந்தவர். குலசேகர ஆழ்வார் சேர மன்னன் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு அந்த மாளிகைகள் ஒரு பொருட்டே அல்ல. விக்கிர சோழனுக்கு அரசவைப் புலவனாக இருந்து தமிழ் கற்றுக் கொடுத்த ஒட்டக்கூத்தன், மன்னனுக்கு மட்டுமல்ல... அவன் மகனுக்கும், அவனது மகனுக்கும் தமிழ் கற்றுக் கொடுத்தவர். மூன்று தலைமுறைக்குத் தமிழ் கற்பித்துக் கொடுத்து அந்த அரண்மனையிலேயே தவமாய் தவம் கிடந்தாலும், மன்னன் தவறு செய்தபோதும்  தட்டிக் கேட்கும் துணிச்சல் ஒட்டக்கூத்தனுக்கு இருந்தது.

எல்லோரும் மன்னனைப் பாராட்டிக் கொண்டிருந்ததால், 'வீரமே இல்லாதவனை வீமன் என்றும், கொடுக்க மனமில்லாதவனை பாரி என்றும் மூத்து தளர்ந்து, உடல் நடுங்கியவனை மலைபோன்ற தோற்றம் உடையவன் என்றும் பாவியை கெட்டவனை சாது என்றும் புகழாதீர்கள்’ என்று கருத்துக் கட்டளை போட்ட படைப்பாளி சுந்தரர். நாட்டின், வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டது மட்டுமல்லாமல், பாவப்பட்ட குலத்தில் பிறந்த தன் காதலிக்கும் மோட்சம் கொடு என்று கடவுளைக் கேட்டவர் சுந்தரர்.

ஆண்டாள் பாசுரங்களைப் படித்தவர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். திருமால் கடவுளா... காதலனா... என்று? திருமால் ஊதிய சங்கைப் பார்த்து ஆண்டாள் கேட்கிறார். ''வெண் சங்கே! மாதவனுடைய வாயின் சுவையை நீ அறிவாய். மாதவனுடைய வாய் கருப்பூர மணம் கமருமோ, தாமரைப் பூவின் மணம் கமழுமோ, பவளம் போன்ற வாய் தித்திப்பாய் இருக்குமோ'' என்ற பொருளில் பக்தியின் பெருக்கமும், பாட்டின் சுவையும் ஆண்டாள் திருமாலை விலக்கி வைத்து விடுகின்றன. இன்று ஒரு 'பெண்’ அப்படி எழுதினால், ஏன் ஆண்டாளே எழுதினால் தீர்த்துக்கட்டி விடுவார்கள்.
 
RAWALIKADate: Wednesday, 21 Jan 2015, 8:36 AM | Message # 2
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நல்லவேளை கு.ப.ராஜகோபாலன் கதையை இவர்கள் படித்திருக்க மாட்டார்கள். குறிப்பிட்ட சாதியைச் சொல்லி, ''பெண் விபசாரம் செய்வது உங்களுக்கு அவமானமாக இருக்கிறதா?’ என்று கு.ப.ராவின் கதை நாயகி கேட்பாள். பிராமணப் பையனும், முஸ்லிம் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும் 'நூருன்னிஸா’ என்ற கதையை கு.ப.ரா எழுதி பல பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. தனது அம்மாவின் திதியன்று காகத்துக்கு வைத்திருக்கும் பிண்டத்தை பசியோடு காத்திருக்கும் ஏழைக்குக் கொடுத்து விட்டு... காக்கையைப் பார்த்து, 'வாசலில் பார்... அம்மாவே உருவெடுத்து வந்திருப்பதை’ என்று கிண்டலடித்த கு.ப.ரா கதைதான் அந்தக் காலத்தில் புரட்சிகரமான கதை.

அதனால்தான் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்த நாவல்களைப் பார்த்து அந்தக் காலத்து பத்திரிகைகள்கூட குலத்தை கெடுக்க வந்தவை என்று குற்றம்சாட்டின.

பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம்  இந்த மூன்றும் தமிழின் முதல் மூன்று நாவல்கள். 'தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன்’ என்பதுபோல எழுத வந்துவிட்டார்கள் என்று 'வைசியமித்திரன்’ பத்திரிகை குற்றம்சாட்டியது. அடுத்த சில ஆண்டுகளிலேயே நாவல், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஆயுதமாக மாறியது. கல்கியின் 'தியாகபூமி’,  காசி சீ.வேங்கடரமணியின், 'தேசபக்தன் கந்தன்’ போன்ற நாவல்கள் வெளியாகி மக்கள் மனதில் விடுதலை விதையை விதைத்தன. மகாத்மா தனது போராட்டத்தைத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே 'காந்தியின் உண்மைச் சீடன் அல்லது லோகநாயகியின் வெற்றி’ என்ற நாவலை எழுதினார். வெ.துரைசாமி அகிம்சையா... ஆயுதமா..? எதன் மூலம் வெள்ளையரை வெளியேற்றுவது என்று பேசியது சாண்டில்யனின் 'பலாத்காரம்’ நாவல். தொடை நடுங்கி எழுத்தாளர்கள்தான் யாரைப் பார்த்து பயந்தார்கள் இவர்கள்? ராணுவத்தைப் பார்த்து பயப்படவில்லை. பிரிட்டிஷ் தேசத்தில் வாழ முடியாமல் பிரெஞ்சு தேசத்துக்குள் போய் பாரதி பதுங்கிக்கொண்டதை கேள்விப்பட்ட பிறகும் துணிச்சலாக எழுதப்பட்ட இந்த நாவல்கள், பகத்சிங் குண்டு வீசியதுக்குச் சமமானது. நேதாஜி படை திரட்டியதற்கு சளைத்ததல்ல. இதைவிட மகுடம் சூட்டப்பட வேண்டியது பெருமாள் முருகனைத்தான்.

சுதேசி தேச அடக்குமுறையாளர்களை எதிர்த்து எழுதியதற்குச் சமமானது   சுதந்திர தேசத்தில் 'எழுதமாட்டேன், எனது புத்தகத்தை எரித்து விடுங்கள், விற்காதீர்கள்’ என்று பெருமாள் முருகன் அறிவித்திருப்பது. ஒரு மதம் பெருமாள் முருகனை விரட்டுகிறது. இன்னொரு மதம் ஹெச்.ஜி. ரசூலைத் துரத்துகிறது. ஒரு சாதி, பெருமாள் முருகனை மிரட்டுகிறது. இன்னொரு சாதி, 'மள்ளர்’ பாண்டியனை விரட்டுகிறது. கம்பன் காலத்தில் இருந்து கலை இலக்கியத்தின் கதை இது. இந்த எதிர்ப்பை சந்தித்த எழுத்துதான் சாதித்து நிற்கிறது.இதோ காலப்பெருவெளியில் இப்போது பெருமாள் முருகனும்!



==============

இதில் குறிபிட்டுள்ள 
"நல்லவேளை கு.ப.ராஜகோபாலன் கதையை இவர்கள் படித்திருக்க மாட்டார்கள். குறிப்பிட்ட சாதியைச் சொல்லி, ''பெண் விபசாரம் செய்வது உங்களுக்கு அவமானமாக இருக்கிறதா?’ என்று கு.ப.ராவின் கதை நாயகி கேட்பாள். பிராமணப் பையனும், முஸ்லிம் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும் 'நூருன்னிஸா’ என்ற கதையை கு.ப.ரா எழுதி பல பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. தனது அம்மாவின் திதியன்று காகத்துக்கு வைத்திருக்கும் பிண்டத்தை பசியோடு காத்திருக்கும் ஏழைக்குக் கொடுத்து விட்டு... காக்கையைப் பார்த்து, 'வாசலில் பார்... அம்மாவே உருவெடுத்து வந்திருப்பதை’ என்று கிண்டலடித்த கு.ப.ரா கதைதான் அந்தக் காலத்தில் புரட்சிகரமான கதை."

சில கதைகளை இங்கு படிக்கலாம் www.sirukathaigal.com/கு-ப-ராஜகோபாலன்
 
P_SakthiDate: Wednesday, 21 Jan 2015, 12:52 PM | Message # 3
Major general
Group: *Checked*
Messages: 374
Status: Offline
Viji,

Thank you so much for sharing this article. It's really a shame that religion and caste still play a major part in Tamil literature.
 
vetrijDate: Thursday, 22 Jan 2015, 5:30 AM | Message # 4
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 148
Status: Offline
Thanks for the share Rawalika...
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » சிந்தனை களம் » சிந்தனை களம் » சுதந்திர கிரகணத்தில் ஓர் எழுத்தாளன்! (நன்றி - ஜூனியர் விகடன்)
  • Page 1 of 1
  • 1
Search: