ஜெ.கே. என்றால் துணிச்சல்! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » சிந்தனை களம் » சிந்தனை களம் » ஜெ.கே. என்றால் துணிச்சல்! (அஞ்சலி..)
ஜெ.கே. என்றால் துணிச்சல்!
RAWALIKADate: Thursday, 09 Apr 2015, 1:29 PM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
ஜெ.கே. என்றால் துணிச்சல்!

நன்றி - விகடன்

தமிழ் இலக்கிய உலகில் வேறு எந்த எழுத்தாளரும் செய்யாத சாதனையை எழுத்தாளர் ஜெயகாந்தன் செய்தார். உலகில் வேறு எந்த எழுத்தாளரும் செய்திராத சாதனை என்று இதை நான் நினைக்கிறேன்.



'நான் இனிமேல் எழுதப் போவதில்லை' என்று ஜெ.கே. அறிவித்தார். சுமார் கால் நூற்றாண்டுகளாக எந்தப் படைப்பிலக்கிலத்தையும் அவர் செய்யவில்லை. ஆனாலும், தமிழ் எழுத்தாளர்களின் அடையாளமாக இன்றுவரை அவர்தான் இருந்தார்... இருக்கிறார். அவர் எத்தனை ஆண்டுகாலம் தீவிரமாக எழுதினாரோ, அத்தனை ஆண்டுகாலம் தீவிரமாக எழுதாமலும் இருந்தார். அவர் எழுதாத அந்தக் காலத்திலும்கூட மக்களால் எழுத்துச் சிங்கமாகப் போற்றப்பட்டவர் அவர் ஒருவர்தான்.

எழுத்துத் துறையில் மட்டுமல்ல; மேடைப் பேச்சுகளிலும் உண்மையின் ஒளி பிரகாசிக்கும். பெரியார் அமர்ந்திருக்கும் மேடையிலேயே பெரியாருக்கு இலக்கியம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்று கேட்டவர் ஜெ.கெ. அண்ணா அமர்ந்திருக்கும் மேடையிலேயே 'எனக்கு அண்ணாவையும் பிடிக்காது; அவருடைய எழுத்துக்களையும் பிடிக்காது' என்று கர்ஜித்தவர். எம்.ஜி.ஆர். முதல்வராக பொறுப்புக்கு வந்த நேரத்தில் 'எம்.ஜி.ஆர் தமிழரா' என விவாதித்தவர். அவருடைய சத்துணவு திட்டத்தை விமர்சித்தவர்.



ஆனால் பெரியாரும், அண்ணாவும், எம்.ஜி.ஆரும் ஒருபோதும் ஜெ.கே.வை விமர்சித்தது இல்லை. மாறாகப் போற்றினார்கள். மதித்தார்கள். அதுதான் உண்மையான எழுத்தாளனுக்குக் கிடைத்த மரியாதை. மரியாதைக்குரிய எல்லோராலும் மதிக்கப்பட்டவர் ஜெ.கே. காமராசர், கண்ணதாசன், ப.ஜீவானந்தம் என அவருடைய மதிப்புவட்டம் மகத்தானது. சாதாரண அச்சகத் தொழிலாளியாக இருந்து மாபெரும் எழுத்தாளனாக, அறச்சீற்றம் மிக்க அரிய மனிதனாக ஜெ.கே. உயர்ந்தார். அவருடைய காலகட்டத்தில் தமிழ் எழுத்து கம்பீரமாக உலாவந்தது.

புதிய வார்ப்புகள், தரிசனங்கள், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன, உண்மை சுடும், பிரளயம், அக்னி பிரவேசம், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள், ரிஷிமூலம்... என அவருடைய படைப்புகளுக்கு அவர் வைத்தப் பெயர்களே அன்று தமிழைப் புரட்டிப் போட்டன. சரஸ்வதியில் எழுத ஆரம்பித்து ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, தினமணி கதிர், குங்குமம், சாவி என அனைத்து இதழ்களிலும் எழுதினார். எழுதினார் என்பது இலக்கணக் சுருதி.  கொடிகட்டிப் பறந்தார் என்பதே சரி.




சாகித்திய அகாதமி, ஞான பீடம் என இலக்கியத்துக்காக இந்திய அரசு வழங்கும் அனைத்து விருதுகளையும் அந்த விருதுகளைப் பெற்றவர்களைக்காட்டிலும் இளைய வயதில் பெற்றவர்.

அவருடைய வீட்டின் மாடியில் அப்போது ஓர் ஓலைக் குடிசை இருக்கும். அதிலே மாலை வேளைகளில் பலரும் கூடுவார்கள். பெரிய எழுத்தாளர்கள், டாக்டர்கள் முதல் ரிக்‌ஷா தொழிலாளி வரை அந்தச் சபையிலே இருப்பார்கள். கஞ்சா குடிப்பார்கள். அதை அவர் மறுத்ததில்லை.

நீங்கள் கஞ்சா குடிப்பீர்களா என கேட்டபோது, பகவான் ராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் மகாகவி பாரதியும் கஞ்சா அடித்தவர்கள்தான். அந்த வரிசையில் நானும் அடிக்கிறேன் என்றார். வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாகச் சொல்லியும் கைது செய்யப்படாதவர் அவர்...  இத்தனைக்கும் அவரால் விமர்சிக்கப்பட்ட அரசியல்வாதிகள் பலரும் அப்போது இருந்தார்கள். அவர்களின் இயக்கங்கள் ஆட்சியில் இருந்தன. ஓர் மாபெரும் எழுத்தாளன் மீது அரசாங்கம் வைத்த பயபக்தியின் அடையாளம் அது.

சினிமா, திரைப் பாடல், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றிலும் அவருடைய எழுத்துக்கள் பிரகாசித்தன. பத்திரிகையாளராகவும் பொதுவுடமை அரசியல்வாதியாகவும் திரைப்படக் கலைஞராகவும் எழுத்தாளராகவும் சிறந்த பேச்சாளராகவும் இருந்தவர். இன்று இல்லை என்பது அந்த அத்தனைத் துறைக்குமே இழப்பு.

ஒரு கலகக்காரன்... காலத்தின் நாயகன்... கண் மூடினான்.

-தமிழ்மகன்
 
RAWALIKADate: Thursday, 09 Apr 2015, 1:37 PM | Message # 2
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
'எழுத்து, எனக்கு ஜீவனம் அல்ல; ஜீவன்!'


ஜெயகாந்தன் அகவை 80-ஐ எட்டிய வேளையில், 'ஜெயகாந்தன் கதைகள்’ விகடன் பிரசுர வெளியீடாக கடந்த ஆண்டு வெளிவந்தது. ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பாக வந்த இந்த நூலை,  இங்கிலாந்தில் வசிக்கும் டாக்டர் என்.ராம், வனிதா ராம் தம்பதியினர் தொகுத்திருந்தனர்.

அப்போது அவர் விகடனுக்கு அளித்த பேட்டி இங்கே...

ஓய்வாக இருக்கிறார் ஜெயகாந்தன். முதுமை உருவாக்கிய கனிவுக் கண்களால்... 'அப்படி என்ன கேட்டுவிடப்போகிறீர்கள்?’ என்கிறது வலது கண். 'இன்னும் சொல்ல என்ன இருக்கிறது?’ என்கிறது இடது கண். அறைக்குள் நுழையும் பேத்தி ஷைலுவைக் கொஞ்சும்போது, குழந்தை ஆகிறார்.

''அய்யா... உடல் நிலை எப்படி இருக்கிறது?''

''ம்ம்ம்... வயதுக்கு ஏற்ப உடல் நிலை இருக்கிறது.''

''எல்லாவற்றுக்கும் ஆயுள் என்று ஒன்று உண்டு. ஒரு படைப்பாளியின் எழுத்தின் ஆயுளைத் தீர்மானிப்பது எது?''

'''எழுத்தாளன் ஒரு சட்டத்தின் துணைகொண்டு, 'இது சரி... இது தப்பு...’ என்று தீர்ப்பும் தண்டனையும் அளிக்கும் சாதாரண ஒரு நீதிபதி அல்ல. வஞ்சிக்கப்பட்டவர்களிடமும், தண்டிக்கப்பட்டவர்களிடமும், சபிக்கப்பட்டவர்களிடமும் குடிகொண்டுள்ள மனித ஆத்மாவையே அவன் நாடிச் செல்கிறான்’- எழுத்தாளன் பற்றி நான் சொன்ன இந்தக் கருத்து எழுத்துக்கும் பொருந்தும். எழுத்தின் ஆயுளைத் தீர்மானிப்பவர்கள் அதை எழுதிய எழுத்தாளர்கள்தான். வேறு யாரும் வெளியில் இருந்து தீர்மானிக்க முடியாது. ஆனால், எழுத்தைக் கீழான நோக்கங்களுக்குப் பலர் பயன்படுத்தியதால், அது கூர்மை மழுங்கிப்போய் இருக்கிறது. எழுத ஆரம்பித்திருக்கும் இளைஞர்கள்தான், அதற்குக் கூர்மை கொடுக்க வேண்டும்!''



'' 'கதைகளில் வேகம் இருக்க வேண்டும், விறுவிறுப்பு இருக்க வேண்டும்’ என்று சொன்னபோது 'குதிரைப் பந்தயத்துக்குப் பயன்படுத்தும் வார்த்தைகளை எல்லாம் இலக்கியத்துக்குப் பயன்படுத்தக் கூடாது’ என்றீர்கள். இப்போது ஸ்பீட் கதைகள், ஒரு நிமிடக் கதைகள், குறுங்கதைகள் என்றெல்லாம் இலக்கியம் வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. கால மாற்றத்துக்கு இந்த வடிவங்கள் எல்லாம் தேவை என்று நினைக்கிறீர்களா?''

''இந்த மாதிரி கதைகளைப் பற்றி நான் ஒன்றுமே நினைப்பது இல்லையே!'' (முகத்தை உயர்த்திப் பார்க்கிறார்)

''எழுத்தாளர், பத்திரிகையாளர், சினிமாக்காரர்... எனப் பல முகங்கள் உங்களுக்கு உண்டு. எழுத்தாளனாக உச்சம் தொட்ட நீங்கள், மற்ற துறைகளில் எதில் நிறைவு கண்டதாக உணர்கிறீர்கள்?''

''பத்திரிகைத் துறை பங்களிப்பில் நிறைவு கண்டதாக நினைக்கிறேன். அதுவும் ஓரளவுதான். பத்திரிகை என்பதுதான் பலருடைய எண்ணங்க ளுக்கு இடம் அளிக்கவேண்டிய துறை. அதில் பலருடைய எண்ணங்களையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. பலருடைய நிலைமைகளையும் அனுசரித்து நிறைவேற்றிய நிறைவு, எனக்கு ஓரளவு உண்டு.''

''இப்போது வாசித்துக்கொண்டிருக்கிற புத்தகம்?''

''தஸ்தாயெவ்ஸ்கியின் 'கேம்ப்ளர்’ நாவலை இப்போது வாசித்துக்கொண்டி ருக்கிறேன். அது எழுதப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. என்றாலும், அது எனக்குப் புதிதாகவே இருக்கிறது. படிக்கும்போது அது எழுதப்பட்ட கால வித்தியாசத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.''

''எழுத்தாளர்களைச் சமூகம் கொண்டாட வேண்டும் என்று சில எழுத்தாளர்கள் சொல்கிறார்களே?

''எழுத்தாளனை எழுத்தாளனாகக் கொண்டாட வேண்டும் சமூகம். 'என்னைத் தனியாகக் கவனியுங்கள், என்று எழுத்தாளன், மக்களிடம் மனு போட்டுக்கொண்டிருக்க முடியாது. ஆனால், எழுத்தாளனின் ஸ்தானத்தை எழுத்தாளர்கள்தான் கெடுத்துக்கொள்கிறார்கள். இது தனி மனித உரிமை என்றொரு வாதம் வைக்கப்படுகிறது. பிரச்னைகளை அக்கறையோடு அணுகி, தீர்வு காண வேண்டும் என்பதுதான் கலைஞனின் சமூகக் கடமை. அது இல்லாதபட்சத்தில் அவனை சமூகம் விட்டுத்தள்ள வேண்டும். இதற்குக் கூட்டம் கூட்டி ஒன்றும் செய்ய முடியாது!''



''ஓர் எழுத்தாளனாக முழு திருப்தியோடு வாழ்ந்திருக்கிறீர்களா?''

''எழுத்து, எனக்கு ஜீவனம் அல்ல; ஜீவன். நான் வாழ்ந்திருக்கிறேன். அது போதாது. எல்லோரும் நிறைவோடு வாழ வேண்டும் என்பதும் என் அவா!''

''முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இடதுசாரிகள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். ஓர் இடதுசாரியான உங்களுக்கு இதில் வருத்தம் ஏதும் இல்லையா?''

''மக்களை விமர்சிப்பதில் பயன் இல்லை. ஏனென்றால், தேர்தல் வந்தால் மக்களிடம்தான் செல்ல வேண்டியிருக்கிறது. குறிப்பாக, அரசியல்வாதிகள் தங்களை மதிக்காத மக்களை நாடிச் செல்கிறார்கள். அதற்குரிய பலன் இதுவே. அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி உண்டாகிவிட்டது. கூடியவரை மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றுவதும், மக்களிடம் அரசியல்வாதிகள் ஏமாறுவதும் மாறிமாறி நடக்கின்றன. இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது!''

'''வாழ்க்கை, முரண்பாடுகளின் மூட்டையாக இருக்கிறது’ என்று எழுதியிருக்கிறீர்கள். உங்கள் தொடக்கக் கால வாழ்வோடு இப்போது எந்த அளவுக்கு முரண்பட்டிருக்கிறீர்கள்?''

''எல்லா விஷயங்களிலும் வாழ்க்கை முரண்பட்டிருக்கிறது. வாழ்க்கையின் அமைப்பே அப்படித்தான் இருக்கிறது. இயற்கையிலேயே இருக்கிற முரண்பாடுகள் ஒரு பக்கம் என்றால், செயற்கையான பல முரண்பாடுகளை சில வியாபாரிகள் உருவாக்கி வருகிறார்கள்!''

''இப்போது, உங்களுடைய ஒரு நாள் வாழ்க்கை எப்படி அமைகிறது?''

''ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. மாற்றம் எதுவும் இல்லை!''

''நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாக நினைக்கிறீர்களா?''

''இல்லை... நிறைவு அளிக்கவில்லை. மிகவும் குறைபாடுடையதாக... குறைபாடுகள் மட்டுமே தெரிவதாகத் தெரிகிறது!''

''இன்றைய தலைமுறையினருக்கு பணம் மட்டுமே வாழ்வு என்று ஆகியுள்ளதே?''

''மதிப்பெண் வாங்குவதையே வெற்றி என்று நினைக்கிறார்கள் மாணவர்கள். பெற்றோர்கள் இதை ஊக்குவித்து வழி வகுக்கிறார்கள். அரசியலிலும் தனி மனித வாழ்விலும் எங்கும் லாபக் கணக்குகளைப் பார்த்து மட்டுமே வாழத் தொடங்கிவிட்டனர். இதையும் மாற்ற, இளைஞர்கள்தான் வர வேண்டும். லாப-நட்ட கணக்குகளை மட்டுமே பார்க்கக் கூடாது. மக்களை விமர்சனம் செய்வதில் பலன் இல்லை என்று ஆரம்பத்தில் சொன்னேன். மக்கள் என்போர் முன் தலைமுறையைச் சார்ந்தவர்கள்தான். வரும் தலைமுறையை வழிநடத்த வேண்டியது முன் தலைமுறையின் கடமை!''

''தமிழர்களின் மிகச் சிறந்த குணம் எது... மிக மோசமான குணம் எது?''


''தமிழர்களிடம் சிறப்பான குணம் என்று ஒன்றைத் தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. கோழைத்தனம்தான், பொதுவான குணமாக இருக்கிறது. தனிப்பட்ட குணமாக ஒன்றிரண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலையெடுக்கலாம். அதில் சிறப்பானதைக் கொண்டாடுவதும், சிறப்பற்றதைக் காணாமல்விடுவதும்தான் எழுத்தாளன் பணி.''
 
P_SakthiDate: Thursday, 09 Apr 2015, 7:55 PM | Message # 3
Major general
Group: *Checked*
Messages: 374
Status: Offline
Viji,

One of my favourite writers of all time. He had never been afraid to say what he wanted to say.

In a way I see that quality in your reviews too.

His writings will last for ever. Thanks for the post.
 
RAWALIKADate: Thursday, 09 Apr 2015, 9:20 PM | Message # 4
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote P_Sakthi ()
In a way I see that quality in your reviews too.

சக்தி அக்கா நன்றி

Quote P_Sakthi ()
One of my favourite writers of all time. He had never been afraid to say what he wanted to say.

ஒரு எழுத்தாளரின் எழுத்து எப்படி இருக்க வேண்டும் என்று இவரின் படைப்புகளைப் படித்தால் புரியும். இதனால்தான் அவர் பல ஆண்டுகளாக எழுதாவிட்டாலும் அவருக்கு என்று நிலைத்த இடத்தை யாரும் தொடவில்லை...
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » சிந்தனை களம் » சிந்தனை களம் » ஜெ.கே. என்றால் துணிச்சல்! (அஞ்சலி..)
  • Page 1 of 1
  • 1
Search: