பெண்களுக்காக - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 3 of 3
  • «
  • 1
  • 2
  • 3
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » பெண்களுக்காக (பெண்களுக்காக)
பெண்களுக்காக
RAWALIKADate: Thursday, 06 Mar 2014, 9:09 AM | Message # 21
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நம் சமூகத்தில் ஒரு பெண் தனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும் எனில், அவள் திருமணம் ஆகாதவளாக இருக்க வேண்டும். இல்லை எனில், திருமண உறவை முறித்துக்கொண்டு வந்தவளாக இருக்க வேண்டும். குடும்ப அமைப்பில் இருந்துகொண்டு தனக்குப் பிடித்த துறையிலும் முழுமையாக ஈடுபடுவது என்பது பெரும்பாலும் இங்கு பெண்களுக்குச் சாத்தியம் இல்லாத ஒன்றாகிப் போனது.

அலுவலகத்தில் தாமதமாக ஒரு பெண் வந்தால், ஒரு நாள் விடுமுறை எடுத்தால், ஒரு மாலையில் அவள் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்று கோரினால், 'இந்தப் பொம்பளைங்களை வேலைக்கு வெச்சாலே இப்படித்தான். எப்பப் பாரு வீடு, பிள்ளைங்கனு புலம்பிக்கிட்டு...’ என்று எவ்வளவு எளிதாகச் சொல்லிவிடுகிறோம். 'ஸ்கூல் மீட்டிங்குக்கு எனக்கு நேரம் இல்லை. நீயே போய்க்கோ’ என்று காலையில் மனைவியிடம் உத்தரவிடும் போது, இதேபோன்ற ஒரு சலிப்பான வசவை அவள் வேறு ஏதோ ஒரு மேலதிகாரியிடம் வாங்க வேண்டியிருக்கும் என்பது ஏன் நினைவுக்கு வருவது இல்லை?


ஒரு பெண் மேலதிகாரியாக இருந்துவிட்டால், தனித்த ஆளுமையோடு செயல்பட்டால், கார் வாங்கிவிட்டால், வேகமாக வண்டி ஓட்டிவிட்டால், பதவி உயர்வு கிடைத்தால்... என ஒரு பெண் தன் வாழ்க்கையில் ஒரு படி முன்னால்வைக்கும்போது அலுவலகங்களில் ஏன் அவளைப் பற்றி அத்தனை ஒப்பாரிகள்? ஆணுக்கு இங்கே சாதாரணமாகக் கிடைக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் பெண் எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது தெரியுமா?
சில நாட்களுக்கு முன்பு அலுவலக வளாகத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு பெண் கொலைசெய்யப்பட்டுக் கிடந்ததைப் பார்த்த பிறகும் அந்த அலுவலகத்தில் எந்தப் பெண்ணும் வேலையைவிட்டுச் சென்றுவிடவில்லை. இங்கே ஆணுக்குப் படிப்பு, வேலை எல்லாம் இயல்பாகக் கிடைக்கும் விஷயங்கள். ஆனால், ஒவ்வொரு பெண்ணும் அதற்காகக்கூட இன்னமும் இங்கே போராடியாக வேண்டியிருக்கிறது. ஓர் அடி பின்னால் எடுத்துவைத்தால்கூட மீண்டும் முன்னால் வருவதற்கு ஆண்டுகள் ஆகும் என்பதை அவள் அறிந்தே இருக்கிறாள்.
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் முன் எப்போதையும்விட உச்சத்தில் இருக்கும் நேரம் இது. வேறு எந்தக் குற்றத்திலும் பாதிக்கப்பட்டவர் மீதே பழி சுமத்துவது நடக்குமா எனத் தெரியவில்லை. பாலியல் குற்றத்துக்குத் தீர்வு சொல்லும் அனைவருமே பெண்கள் எப்படிப் பாதுகாப்பாக இருப்பது என்றே மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடம் அலுவலகத்தில் வண்டி கேளுங்கள் என்று சொல்லிவிடலாம். வாணியம்பாடியில், நாகர்கோவிலில், விழுப்புரத்தில், தேனியில் ஒரு துணிக் கடையில் கால் கடுக்க வேலை செய்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பும் பெண்களுக்கு? தவிரவும்... வேலை செய்கிற இடங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பானது என்பது போலவும், ஆபத்துகள் வெளியே இருந்து வருவதுபோலவுமே பேசுவதே எவ்வளவு முரணாக இருக்கிறது?
நாங்கள் உங்களைப் போலவே இந்த உலகுக்கு வந்தோம் நண்பர்களே. உங்களைப் போலவே இந்த உலகம் எங்களுக்கானதும்கூட என நம்பினோம். கடலும்-காற்றும், வானும்-சூரியனும், இரவும்-பகலும் அனைவருக்கும் பொதுவானவை என்றே நினைத்தோம். ஆனால், அப்படி இல்லை என்று மறுக்கிறீர்கள். 'ராத்திரியில் உனக்கென்ன வேலை, தனியா நீ ஏன் அங்கே போகணும், உன்னை யாரு பஸ்ல போகச் சொன்னது, நீ எதுக்கு அந்த ஊருக்குப் போகணும்?’ என எல்லாக் கேள்விகளையும் எங்களிடமே கேட்கிறீர்கள்.
எங்கும் எப்போதும் ஓர் ஆணைச் சார்ந்திருக்கவே நிர்பந்திக்கிறீர்கள். கூடவே, 'எதையும் தனியாச் செய்யத் தெரியாது. எல்லாத்துக்கும் ஓர் ஆள் வேணும்’ என சலித்துக்கொள்கிறீர்கள். அப்பா, அண்ணன், கணவன் எல்லோரிடமும் அந்தச் சலிப்பு தெரிகிறது. முடியாத கட்டங்களில், 'எதுக்கு நீ வெளியே போகணும்?’ என மீண்டும் வீட்டுக்குள் உட்காரச் சொல்கிறீர்கள். வேலை நிமித்தமாகத் தனியாகப் பயணம் செய்யும் பெண்கள், தனியாக வாழும் பெண்கள் என்ன செய்வது நண்பர்களே?

நாங்கள் உங்களைச் சார்ந்திருக்கும் நிர்பந்தங்களை உருவாக்கிவிட்டு, நாங்கள் சுமை என்று சொல்வது நியாயமே இல்லைதானே?


சுமைகளைக் கொஞ்சம் இறக்கிவையுங்கள். முதுகில் ஏறி உட்கார்ந்து இருப்பது எங்களுக்கும் சிரமமாகத்தான் இருக்கிறது. நீங்களும் கொஞ்சம் ஓய்வு எடுங்கள். எங்களின் பிரச்னைகளை நாங்களே எதிர்கொள்கிறோம். அண்ணனாக, அப்பாவாக, காதலனாக, கணவனாக... உங்களின் பயம் எங்களுக்குப் புரிகிறது.

பெண்களை வன்புணர்வு செய்பவனும் ஏதோ ஒரு பெண்ணுக்கு மகன், கணவன், காதலன், அண்ணன்தான் இல்லையா? தன் வீட்டுப் பெண்களைப் பத்திரமாகப் பூட்டிவைத்துவிட்டு, பிற பெண்களை மோசமாகக் கிண்டல் செய்யும், அவமதிக்கும் எல்லோரும்தான் இதில் குற்றவாளிகள் இல்லையா? அதற்கு இன்னும் எங்களால் பழி ஏற்க முடியாது.

பொழுதுகள் எங்களுக்குச் சொந்தமும் இல்லை; நேரங்களை நாங்கள் ஆள்வதும் இல்லை. 'மாலைப் பொழுதில் காலாற நடக்க விரும்புகிறேன். அது எனக்குப் புத்துணர்ச்சியைத் தரும்’ என்பது எங்கள் தேவை. ஆனால், இப்படிக் கேட்டால் அது மறுக்கப்படும் என்று அறிந்தும் தயக்கத்துடன் கேட்பது பரிதவிப்பு. இந்த நூலிழை வித்தியாசம் எப்படிப்பட்ட இரும்புச் சங்கிலியாக பெண்களின் கால்களை நடக்க முடியாமல் சுற்றியிருக்கிறது என்பதை ஒரு விநாடி யோசித்துப் பாருங்கள்.

இருந்தும்கூட இன்றைக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள், கண்களில் நம்பிக்கை ஒளிர வீடுகளில் இருந்து தினம் தினம் கிளம்பிக்கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேளுங்கள். ஏனெனில், உங்களைப்போல் நாங்கள் மௌனமாகச் சிந்திப்பது இல்லை. பதிலாக, பேசும்போதுதான் சிந்திக்கிறோம். சிந்திப்பதற்காகத்தான் பேசுகிறோம். அதேபோல் ஒருபோதும் எங்கள் கண்ணீரைத் துடைக்க விதவிதமான விரல்களுடன் எங்கள் முன்னால் வராதீர்கள். எங்களிடமே விரல்கள் இருக்கின்றன. பேசவிடுங்கள் அது போதும்.

நம் சமூக அமைப்பில் பெண்கள் இரண்டாம் பட்சம்தான் என்ற தாழ்வுமனப்பான்மை பெண்களிடமும் இருப்பதுதான் வேதனை. இதை உணரும் சில பெண்கள், ஆண்களை ஆதிக்கம் செலுத்துவது என்ற பழிவாங்கும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். இதுவும் ஆபத்தானதே. அடங்குவது அல்லது மீறுவது என்ற இரண்டுக்கும் இடையில் இணைந்து வாழ்வது என்ற இடத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதைப் பெரும்பான்மை பெண்கள் உணர்ந்தே இருக்கிறோம்.

நாங்கள் எங்கள் மகள்களுக்கு இந்த உலகை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுத்தருவோம். கூடவே... எங்கள் மகன்களுக்கு பெண்களை எப்படி நடத்துவது என்பதையும் நாங்களே சொல்லித்தருவோம். இந்தச் சமூகம் மாறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
 
RAWALIKADate: Saturday, 15 Mar 2014, 0:09 AM | Message # 22
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
பெண்கள் 2014!

Thanks - Doctor Vikatan

உடலும் உள்ளமும் நலம்தானா?அசத்தல் அட்வைஸ்!



குடும்பத்தில், மகள், மனைவி, சகோதரி, தாய், பாட்டி என்று எந்த வடிவத்தில் இருந்தாலும், பெண் பெருமைக்குரியவள். அழகு, செயல், நளினம், கூர்ந்த அறிவு இவற்றுடன் இயற்கை தந்திருக்கும் 'தாய்மை’ என்னும் பெருங்கொடை.

பிறந்தது முதல் பெண் கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கிய வழிமுறைகள், எச்சரிக்கை விதிமுறைகள், எதிர்கொள்ளும் சவால்கள் எக்கச்சக்கம்.  இன்று, எல்லா வயதுப் பெண்களின் சூழ்நிலைக்கு ஏற்ப பிரச்னைகளும் சவால்களும் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. வீடு, குழந்தைகள், வேலை என எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்து வாழ்வது முக்கியமாகிவிட்டது!''எந்தப் பிரச்னை வந்தாலும், அதை எதிர்கொள்ளவும், சமாளித்து முன்னேறவும், அடிப்படைத் தேவை ஆரோக்கியம். இந்த ஆரோக்கியத்துக்கான விழிப்பு உணர்வும், அக்கறையும் குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்க வேண்டும். அந்த வயதிலிருந்தே அம்மாதான் ஆரோக்கியப் பாடத்தைக் கற்பிக்க வேண்டும்'' என்கிறார், சென்னை சாய் விமன்’ஸ் கிளினிக்கின் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் தீபா தியாகராஜமூர்த்தி.பெண்களின் ஆரோக்கியத்துக்கு அவர் தரும் அசத்தல் அட்வைஸ் இதோ...

பள்ளிப் பருவம்

உணவின் முக்கியத்துவம், சரியான உணவுப் பழக்கம் இவற்றைக் குழந்தையில் இருந்தே சாதத்துடன் கலந்து குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். அதோடு, 'பெர்சனல் ஹைஜீன்’ எனப்படும் அந்தரங்க ஆரோக்கியத்தின் அவசியத்தை அவசியம் கற்பிக்க வேண்டும். அந்தரங்க உறுப்புகளின் சுத்தம், அந்நிய ஆண்களோடு பழகும் விதம், 'குட் டச், பேட் டச்’ போன்ற விஷயங்களைக் குழந்தைக்குக் கற்பிக்க வேண்டிய தருணம் இதுதான். உணவுப் பழக்கம், அளவு மீறிய வளர்ச்சி இவற்றால், பெண் பருவம் அடைவது 8, 9 வயதிலேயே தொடங்கிவிடுகிறது. இதனால், இனப்பெருக்க உறுப்புகள் குறித்தும், பூப்பெய்துதல், மாதவிலக்கு போன்றவை குறித்தும் குழந்தைக்கு விளக்கிச் சொல்லவேண்டியது தாயின் கடமை. பல சிறுமிகள், பள்ளியில் பாத்ரூம் சுத்தமாக இல்லை என்று, மாதவிலக்கு நாட்களில் 'நாப்கின்’ மாற்றாமலேயே இருக்கின்றனர்.  இதனால் பல தொற்றுகள் ஏற்படலாம். தினமும் மூன்று அல்லது நான்கு முறையாவது நிச்சயம் நாப்கின் மாற்ற வேண்டியது மிக அவசியம்.



டீன் ஏஜ் பருவம்

இந்த வயதில் பொதுவாகக் காணப்படும் உடல் பிரச்னை, தேவையற்ற ஊளைச்சதையும், உடல் பருமனும்தான். இதற்கான விழிப்புஉணர்வு அதிகரித்து வந்தாலும், நல்ல உணவுப் பழக்கத்தை நடைமுறையில் கொண்டுவர முடியவில்லை. பிள்ளைகள் சாப்பிடும் உணவு அதிகம். ஆனால், செய்யும் வேலை குறைவு. எடை அதிகரிக்கும்போது, அதன் பக்கவிளைவுகளான சினைப்பை நீர்க்கட்டி (பி.ஸி.ஓ.டி.), அதைத் தொடர்ந்து ஒழுங்கற்ற மாதவிலக்கு என்று ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும்.

இதன் விளைவு உடல் பருமன். மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடுகிறது.  பெண் குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே, சரியான உணவுப்பழக்கத்தை கற்பிப்பதன் மூலம் உடல் எடையைச் சீராக வைத்திருக்கலாம். இதனால், மாதவிலக்கு ஒழுங்காக வருவதுடன், பிற்காலத்தில் வரும் பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

ஜங்க் ஃபுட், சிப்ஸ், நூடுல்ஸ் மற்றும் பேக்கரித் தயாரிப்புகளைத் தவிர்த்து, மாலை ஸ்நாக்ஸ்க்கு பால், பழங்கள், கடலை, பொரி, சுண்டல் என்று மாற்றினாலே, ஆரோக்கிய உணவுப் பழக்கத்துக்கு 'பிள்ளையார் சுழி’ போட்டுவிட்டதாக அர்த்தம்.


வேலைக்குச் செல்லும் காலம்


இந்த நூற்றாண்டில், வேலைக்குச் செல்கிற  இளம்பெண்கள் பலர். வேலை நிமித்தம், நகரங்களுக்கு நகரும் பெண்கள், ஹாஸ்டலிலோ, தோழிகளுடன் வீடு எடுத்தோ தங்குகிறார்கள். வீட்டில் உண்ட கொஞ்சநஞ்ச ஆரோக்கிய உணவும், வெளியே தங்கும்போது இன்னும் மோசமாகிவிடுகிறது. வேளைக்குச் சாப்பிடுவது இல்லை. முக்கியமாக, காலை உணவை உண்பதே இல்லை. இரவு வெகு நேரம் விழித்திருப்பது, லேட்டாக எழுந்திருப்பது, குளித்துவிட்டு சாப்பிடாமல் ஓடுவது, தாங்க முடியாத பசியில் மதியம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது... இதெல்லாமே உடல் பருமன், அசிடிட்டி போன்ற பிரச்னைகளுக்குத்தான் வழிவகுக்கும்.  அதீத வேலைப்பளு, அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், குறிப்பிட்ட இலக்கை அடைய, வெறி பிடித்த மாதிரி இரவும் பகலும் வேலை செய்தல், இரவு நேரப் பணி - என்று வாழ்க்கைமுறையும் உணவுமுறையும் மொத்தமாக மாறிவிடுகின்றன. எல்லாவற்றிலுமே அவசரம்!

ரிலாக்ஸ் செய்துகொள்ள கண்டிப்பாக வேறு ஏதேனும் ஒரு விஷயத்தில் மனதைச் செலுத்தலாம்.  இசை, நடனம், நீச்சல், தோட்டம், பயணம்... இப்படி ஏதேனும் ஒரு விஷயத்துக்கு நேரம் ஒதுக்கலாம். மனதுக்கு அமைதி,  உடலுக்கும் பயிற்சி கிடைக்கும். தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படும். மனதையும் உடலையும் ஆசுவாசப்படுத்தும் பயிற்சிகள்தான் அவசியம் தேவை.
 
RAWALIKADate: Saturday, 15 Mar 2014, 0:10 AM | Message # 23
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
மனைவி என்ற பதவி



இருப்பதிலேயே மிக அதிகமான சவாலான கட்டம் இது.  ஒரு பக்கம் அலுவலகம், வேலை... இன்னொரு பக்கம் கணவர், குழந்தை, குடும்பம்... இரண்டையும் சமாளித்து பேலன்ஸ் செய்வதில் திணறிவிடுகின்றனர்.  அதனால் ஏற்படும் மன அழுத்தம், ஆரோக்கியத்தை அச்சுறுத்துகிறது. தவிர, தினமும் நீண்ட தூரப் பயணம், இரவு திரும்ப நெடுநேரம் ஆவதால், வீட்டில் சமைக்க முடியாமல் ஹோட்டலில் சாப்பாடு என இன்றைய வாழ்க்கை முறை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. ஹோட்டல் உணவில், சுவைக்காக சேர்க்கப்படும் நெய், மசாலா, செயற்கை மணமூட்டிகளால், உடம்பு இஷ்டத்துக்குப் பெருக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவும் ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. சிலருக்கு வேலையை முன்னிட்டு, கருத்தரித்தலும் தள்ளிப்போகிறது. உட்கார்ந்தே வேலை பார்ப்பதால்,  முதுகு வலி, இடுப்பு வலி மற்றும் 'போஸ்ச்சர் ரிலேட்டட்’ பிரச்னைகள். பால், தயிர், மோர் அதிகம் எடுக்காததால், நடுத்தர வயது வரும் முன்னரே கால்சியம் குறைபாடும் அதனால் எலும்புகள் வலுவிழத்தலும் ஆரம்பிக்கிறது.

உடல், ஆரோக்கியத்துக்கென இந்தப் பெண்கள் எந்த முயற்சியும் எடுப்பது இல்லை. 24 மணி நேரத்தில் கொஞ்சமே கொஞ்சம் நேரம் அதற்கென ஒதுக்கினால், உடலுக்கும் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

ஊட்டமான உணவு, உடற்பயிற்சி, கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் எலும்புப் பிரச்னைகளைச் சமாளிக்கலாம்.

குழந்தை பெற்ற தாயாக இருப்பின், குறைந்தபட்சம், ஆறு மாதங்களாவது தாய்ப்பால் கொடுக்கவேண்டியது அவசியம். இது குழந்தைக்கு ஊட்டத்தைத் தரும் என்பதுடன், தாய்க்கு மார்பகப் புற்றுநோய் வரும் ஆபத்தையும் குறைக்கும்.

மெனோபாஸ் கட்டம்

மெனோபாஸ் ஆக, சராசரி வயது 50தான் என்றாலும், இந்தியப் பெண்களுக்கு அதற்கு முன்னரே வந்துவிடுகிறது. இந்த வயதில் கால்சியம், வைட்டமின் மாத்திரைகள் அவசியம் தேவை. கால்சியம் மாத்திரைகள் அதிகம் எடுத்தால் கிட்னியில் கல் வரும் என்பது தவறான நம்பிக்கை. நாம் எடுக்கும் சிறு அளவுக்கெல்லாம், கட்டாயம் கல் வராது.

பெண்கள் கடைப்பிடிக்க:

போதுமான தூக்கம்தான், நிம்மதியான ஓய்வு. நம்முடைய ஹார்மோன்களுக்கென்று ஒரு ரிதம் உண்டு. சில ஹார்மோன்கள் அதிகாலையிலும் சில ஹார்மோன்கள் இரவிலும் சுரக்கும். எனவே, சரியான நேரத்தில் படுத்து, சரியான நேரத்தில் எழுதல் நல்லது.யாருமே குடும்பத்தினருக்கென 'தரமான நேரம்’ (Quality time) ஒதுக்குவது இல்லை. ஆரோக்கியத்தின் ஆணிவேரே குடும்பத்தினருடன் கழிப்பதுதான்.  வாரத்தில் ஒரு நாள், எந்தவிதமான நவீன மின்னணு சாதனமும் (Gadgets) பயன்படுத்தாமல், குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியில் செல்வது, வீட்டில் எல்லோருமாக கூடிப் பேசி இளம்வயதில் நடந்த விஷயங்களைப் பகிர்ந்து வாய்விட்டுச் சிரிக்கலாம். அழுத்தத்தை விரட்டும் அருமருந்தும் ஆரோக்கியத்தின் அச்சாணியும் அதுதான்!

- பிரேமா நாராயணன்படங்கள்: உசேன், ப.சரவணகுமார், அ. ஜெஃப்ரி தேவ்,மாடல்கள்: உமா சீனிவாசன், எஸ். ஐஸ்வர்யா - ஸ்ரீலட்சுமி, ஸ்ரீயா, ஜானவி




தடுப்பு ஊசி.. அவசியம் தேவை!


 கல்யாண வயதில் உள்ள பெண்களுக்கு: திருமணத்துக்கு முன்பே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு ஊசி (Cervical Cancer Vaccine) போடுவதற்கான சரியான வயது இது. இந்தத் தடுப்பு ஊசியை ஒரு பெண், தாம்பத்திய உறவை ஆரம்பிப்பதற்கு முன்னரே போடவேண்டும். 3 டோஸ்களாக, ஆறு மாதத்தில் இதைப் போட்டுக் கொள்ளலாம்.

மார்பகப் புற்றுநோய்க்கான சுய பரிசோதனையை, ஒரு மருத்துவரிடம் முறையாகக் கேட்டு அறிந்துகொண்டு, அதை மாதம் ஒரு முறை வீட்டில் செய்துகொள்ள வேண்டும். 20 வயதிலிருந்து இதை ஆரம்பிக்கலாம்.45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், 3 வருடங்களுக்கு ஒரு முறை 'மேமோகிராம்’ பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.மெனோபாஸ் பருவத்தில் இருக்கும் பெண்கள், 'பாப்ஸ்மியர் என்னும் பரிசோதனை அல்லது 'லிக்விட் பேஸ்டு சர்வைகல் ஸைட்டலஜி’ (Liquid based cervical cytology) போன்ற எளிய பரிசோதனைகளை, 3 வருடங்களுக்கு ஒரு முறை செய்துகொள்வது நல்லது. இதன் மூலம் கேன்சருக்கு முன்னோடியான செல்களைக் கண்டுபிடித்து, சிகிச்சை அளித்து, சரிசெய்துவிடலாம்.நீரிழிவு, ரத்த அழுத்தம், தைராய்டு, புற்று நோய் - போன்ற மரபுரீதியான பிரச்னைகள் குடும்பத்தில் யாருக்காவது இருந்தால், 'நமக்கும் வர வாய்ப்பு இருக்கிறதா?’ என்பதை, உரிய நேரத்தில் பரிசோதனைகளை செய்துகொண்டால், நோய்களை வரும் முன் தடுத்திடலாம்.
 
rajiiDate: Saturday, 15 Mar 2014, 10:28 AM | Message # 24
Major
Group: *Checked*
Messages: 83
Status: Offline
Hi rawalika,

Thx for the useful info.
 
saiDate: Tuesday, 01 Apr 2014, 4:48 PM | Message # 25
Lieutenant colonel
Group: Users
Messages: 137
Status: Offline
Hai I am new for magalirkadal. This thread is very useful and informative,
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » பெண்களுக்காக (பெண்களுக்காக)
  • Page 3 of 3
  • «
  • 1
  • 2
  • 3
Search: