வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் - Page 9 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya, Laya  
வீட்டு தோட்டம் / மாடி தோட்டம்
JanviDate: Friday, 05 Jun 2015, 8:11 PM | Message # 81
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
மாடியில் ஒரு உணவுத் தோட்டம் 



நாங்கள் சைவம். முட்டையைக்கூடத்
தொடுவதில்லை. மீன், முட்டை, இறைச்சி எல்லாமே புரதச் சத்தும் கொழுப்புச்
சத்தும் நிரம்பியவை. இவற்றை ஈடு செய்ய பால், மோர், நெய், நல்லெண்ணெய்,
பருப்பு, காய்கறிகள் போதுமானவை. சைவ உணவு உண்பவர்களுக்கு நோய் குறைவாக
வரும். சைவ உணவு உண்பவர்கள் நிறைய எண்ணெய்ப் பலகாரங்கள் மற்றும்
வனஸ்பதியில் செய்யப்பட்ட இனிப்பின் காரணமாக நோயுறுவார்கள். அளவோடு உண்டால்
அவ்வளவாக நோய் வராது. உணவில் அதிகளவில் காய்கறிகள் சேர்க்க வேண்டும்.
சென்னையில் வாழ்க்கை ஓடியவரையில் காய்கறிகள் பார்த்துப் பார்த்து
வாங்குவதுண்டு. என் மனைவியை எந்தப் பொருளாலும் திருப்தி செய்ய முடியாது.
பச்சென்று காய்கறிகளை வாங்கிப் போட்டால் அப்பசுமையைப் பார்த்து அவள்
சினமும் தணிந்துவிடும்.
காய்கறிகளை நான் இன்று மொட்டை மாடியிலும்
தரையில் வீட்டைச் சுற்றிலும் சாகுபடி செய்து வருவதுடன் மொட்டை மாடியில்
எப்படி காய்கறி சாகுபடி செய்யலாம் என்பது பற்றிய விவரத்துடன் ரூ.55/-
விலையில் ஒரு புத்தகம் எழுதி அதுவும் ஆயிரக்கணக்கில் விற்றவண்ணம் உள்ளது.
நான் காய்கறிகளைப் பற்றிய அங்காடி அறிவைச் சென்னையில் கொத்தவால் சாவடியில்
கற்றேன்.

1962-ஆம் ஆண்டில் நான் சென்னையில் ‘நியூ
இண்டியா மேரிடைம்ஸ்’ என்ற கப்பல் கம்பெனியில் ஒரு உதவியாளராக ஓராண்டு
பணிபுரிந்த அனுபவம் எனக்கு உண்டு. கப்பல் கம்பெனி வேலை மிகவும் கடுமையானது
என்றாலும் ஒரு சுவாரசியமும் உண்டு. அந்தக் கம்பெனிக்குச் சொந்தமான கப்பல்
கிடையாது. யுகோஸ்லேவியா கப்பல்களுக்குச் சென்னையில் அந்தக் கம்பெனி
ஏஜெண்டு. சரக்கு ஏற்றுவார்கள். Bill of Lading வசூல் செய்வதிலிருந்து
கப்பலுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்குவது வரை எனது பணி. காய்கறி,
வெண்ணை, டீ போன்றவை வாங்க வேண்டும். அவர்கள் விரும்பும் ஆங்கில காய்கறிகள்
முதல் தரம் பார்த்து வாங்க வேண்டும். சில பசுமை ஐட்டங்கள் மூர்
மார்க்கெட்டில் மட்டுமே கிடைக்கும். செலரி, ஹெலாட், இலையுடன் உள்ள இளசான
பீட்ரூட் போன்றவை வெள்ளைக்காரர்களின் தேவைக்காகவே
அந்தக்காலமூர்மார்க்கெட்டில் கிடைத்தன.
கப்பல் கம்பெனி அனுபவங்களில் காய்கறி
பற்றிய சில நுண்ணறிவும் கற்றேன். இது திருமணத்துக்குப் பின் உதவின.
மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய மார்க்கெட், கபாலி கோயிலை ஒட்டிய தெற்கு
மாடவீதி மார்க்கெட், சைதாப்பேட்டை மார்க்கெட், திருவான்மியூர் மார்க்கெட்
என்று எதையும் விட்டுவைப்பதில்லை. பயண உத்தியோகம் என்பதால் வெளியூர்
செல்லும்போது வேலூர் ஆர்க்காட் மார்க்கெட்டில் அருமையான முள்கத்தரி
வாங்காமல் திரும்புவதில்லை. திருநெல்வேலியில் வெள்ளைக் கத்தரிக்காய், 
மதுரை திண்டுக்கல்லில் பச்சைக் கத்தரிக்காய், கும்பகோணம் நீலக்கத்தரிக்காய்
என்று வகைவகையான கத்தரிக்காய்களை வாங்கி வருவதுண்டு. எனது பயண சூட்கேஸுடன்
காய்கறிப் பையும் சென்னை திரும்பும்.காய்கறி வாங்குவது சரி. அவற்றை ஒருவர்
ருசியுடன் சமைக்க வேண்டுமே! அந்த விஷயத்தில் இறைவன் கொடுத்த வரமாக என்
மனைவி இன்றளவும் அப்பணியை நிறைவேற்றி வருகிறாள்.
ஓய்வு பெற்றதும் சென்னையிலிருந்து
அம்பாத்துறைக்கு ஜாகையை மாற்றும்பொழுது நிலம் வாங்கி காய்கறி தோட்டம்,
பசுமாடு எல்லாம் பராமரிக்க முடிவு செய்தாலும், அப்படி உடனேயே அமையவில்லை.
நிலம் வாங்குவது 1996-ல் அவ்வளவு கடினமில்லை. விலையும் அதிகமில்லை. நிலம்
வாங்க நண்பர்களுடன் அலைந்தபோது என் வீட்டு நிதியமைச்சர் ஒப்புதல் தரவில்லை.
இன்னம் ஒரு கடமை மீதமுள்ளதே என்று எச்சரித்தாள்.
உண்மைதான், பெண்ணுக்கு வரன் பார்த்து
 
JanviDate: Friday, 05 Jun 2015, 8:11 PM | Message # 82
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
கல்யாணத்தை முடித்துவிட்டு மிச்சப் பணத்தில் நிலம் வாங்கி விவசாயம்
செய்யலாம், என்றாள் என் மனைவி. என் பெண்ணோ படித்துக் கொண்டே இருந்தாள்.
எம்.எஸ்.ஸி., எம்.எட்., எம்.ஃபில் என்று போய்க் கொண்டிருந்தாள். உகந்த வரன்
தேடுவது கடினமான செயல். பொருத்தமான நபர் கிட்டினாலும் ஜாதகம் பொருந்த
வேண்டும். இது ஒரு பக்கம். அந்தக் கடமையும் இரண்டு ஆண்டுக்குப்பின்
முடிந்தபோது சேமிப்புகள் எல்லாம் கரைந்துவிட்டன. கடன் ஏற்படவில்லை என்ற
அளவில் மகிழ்ச்சிதான்.
என் மகள் திருமணம் என்ற பொறுப்பை
எண்ணியதும் நிலம் வாங்கும் யோசனை நின்று போனது. இறைவன் கொடுத்த வரம் மொட்டை
மாடியில் காய்கறி சாகுபடிக்கான ஒரு புதிய யோசனை உதித்து தொடக்க விழாவையும்
நடத்தியது. எனது தமையனார் நிறைய மண்தொட்டிகளை வாங்கி பூச்செடிகளை
நட்டிருந்தார். சரியாக பரமாரிக்கப்படாததால் 75 சதவிகித செடிகள் பட்டுப்போய்
விட்டன. அவற்றை நீக்கிவிட்டு பூந்தொட்டிகளை மொட்டை மாடிக்கு மாற்றும்
யோசனையை மனைவி கூறினாள். கீழே இடப்பற்றாக்குறை. அதிக அளவில் மண்தொட்டிகள்
நெருக்கமாக இருந்ததால் சுருட்டைப் பாம்புகளும் அடைந்திருந்தன. பாம்புகள்
அடையாமல் இருக்க என் மனைவி பூனைகளை வளர்த்திருந்தாள்.
எங்கள் வீட்டின் சிறப்பு பூனைப்படைகள்.
கீரியைப் போல் பூனையும் பாம்பைப் பிடித்துத் தின்றுவிடும். ஓணானைப்
பிடித்தால் தலையை மட்டும் பூனை தின்னும். பாம்பைப் பிடித்தால் தலையைத்
தின்னாது. எலி, அணில் ஆகியவற்றைத் தின்னும்போது வாலை மட்டும் மிச்சம்
வைக்கும். பழத்தோட்டம் போடும்போது அணில் தொல்லையைப் போக்க பூனைகள் வளர்க்க
வேண்டும். மண்புழுக்களைத் தின்ன வரும் கோழி, பெருச்சாளி போன்றவற்றைப்
பூனைகள் பிடித்துத் தின்றுவிடும்.

20 பூந்தொட்டிகள் மொட்டை மாடிக்குச்
சென்றன.
 
JanviDate: Friday, 05 Jun 2015, 8:12 PM | Message # 83
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
மேலும் 30 பூந்தொட்டிகள் மதுரையிலிருந்து வாங்கி வந்தோம். அப்போது,
1197-ல் ஒரு அடி உயரமுள்ள பூந்தொட்டியின் விலை பத்து ரூபாய்.
பூந்தொட்டிகளின் அடியில் சிறுசிறு ஜல்லிக்கற்களை கால் அடி ஆழத்துக்கு
நிரப்பிவிட்டு கீழே உள்ள தோட்ட மண்ணை நிரப்பி கத்தரி நாற்று நட்டேன்.
வெண்டை விதைத்தேன். ஊட்டத்திற்கு என்ன செய்வது? ஒரு பெரிய சிமெண்டு
தொட்டியில் குழாய் மூலம் தண்ணீர் நிரப்பி தினமும் ஒரு கிலோ அளவில்
பசுஞ்சாணியைக் கரைத்து ரசப்பதத்தில் விட்டேன். விருட்சாயுர்வேதப்
புத்தகத்தில் உள்ள குறிப்புப்படி பால் ஜலம், மோர் ஜலம், கழுநீர்,
ஆகியவற்றையும் விட்டேன். வேப்பம் பிண்ணாக்கை நீரில் ஊறவைத்து அந்த ஜலத்தை
இலைவழி ஊட்டமாக வழங்கியபோது பூச்சித்தொல்லையும் ஏற்படவில்லை.
அடுத்த கட்டமாக பூந்தொட்டிகளுடன் சிமெண்டு
சாக்கில் மண் நிரப்பி பயிர் எழுப்பும் யோசனை வந்தது. சிமெண்டு சாக்கு
உயரத்தைக் குறைத்து – அதாவது, உட்புறமாக மடித்து பாதி சாக்காக மாற்றி,
உள்ளே நிறைய காய்ந்த சருகுகளை அடைத்துவிட்டு அடிப்பாகத்தைச் சற்று
கிழித்துவிட்டு போதிய மண் நிரப்பி இரண்டு செங்கல் வைத்து அதன்மீது
வைத்தேன். நீர் வடியும். தளத்திற்கும் பாதிப்பு வராது. அவ்வாறு சிமெண்டு
சாக்கில் மண் நிரப்பி பயிரிடும்போது மரப்பயிர்களைத் தேர்ந்தெடுத்தேன்.
முருங்கை, அகத்தி மிகவும் உகந்தவை. இரண்டு மரங்களுக்கும் ஆணிவேர்.
பக்கவாட்டில் வேர் குறைவாக வளரும். காற்றில் உள்ள நைட்ரஜனை கிரகிக்கும்
ஆற்றல் அதிகம். அதே சாக்கில் வெண்டை, தக்காளி, கத்தரி ஊடுபயிர்களாகவும்
நடலாம்.
சிமெண்டுச் சாக்கில் கொடி வகை பயிர்களான
அவரை, புடல், பாகல், பீர்க்கை போன்றவற்றையும் நடலாம். ஒரு குச்சி வைத்து
ஏற்றலாம். பந்தல் அமைக்க பூந்தொட்டி, சிமெண்டுத் தொட்டி, மண்ணில் குச்சி
ஊன்றி பின்னர் கம்பி கட்டிக் கொள்ளலாம்.
இப்படிப்பட்ட யோசனைகளை வெற்றியுடன்
நிறைவேற்றி வீட்டுக்குத் தேவையான அவரை, புடல், பீர்க்கை, பாகல் போன்ற
காய்கறிகளும் மாடியில் உற்பத்தியாயின. இடவசதியைப் பொறுத்து
கொடிப்பயிர்களைத் தேர்ந்தெடுத்துதான் பயிரிட முடியும். ஒரே நேரத்தில்
இரண்டு கொடிவகைகளுக்கு மேல் இயலாது. கறிக்கோவையையும் சாகுபடி செய்யலாம்.
அவரை சாகுபடி செய்யும்போது அது அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்துக்
கொள்ளும்.
அடுத்த கட்டமாக வீட்டில் பயன்படுத்தும்
பிளாஸ்டிக் வாளி, டப் முதலியவை ஓட்டையாகும்போது அவற்றையும் பூந்தொட்டியைப்
போல் பயன்படுத்தலாம். நுட்பமாக மேலும் ஓட்டை போட்டுச் சிறு கற்களை
நிரப்பிவிட்டு மண் கொட்டலாம். மரம், கொடிப்பயிர்களை ஏற்ற
வாய்ப்பாயிருக்கும்.

நான் எனது மாடித் தோட்டத்தைத் திட்டமிட்டு
உருவாக்கவில்லை. வீடு காட்டும்போதே மேல்தளத்தை இன்னும் சிறப்பாகச்
செய்திருக்கலாம். வீடு கட்டும்போது மாடியில் தோட்டம் போடும் எண்ணமே
வரவில்லை. திட்டமிடாமல் திடீரென்று உருவாக்கியதனால் எதுவும் பாழாகி
விடவில்லை. செலவேயில்லாமல் சீரோ பட்ஜெட் என்ற கருத்தில் உருவான இந்த மாடித்
தோட்டத்தில் வீண் பொருளை மறுசுழற்சி செய்யும் உத்தியும்
கடைபிடிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் வாளி, டப் முதலியன உடைந்தால் அது
பயிரேற்றப் பயனாகிறது. புதிய தொட்டி வாங்கும் செலவும் மிச்சம்.
ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது மாடித்
தோட்டம், மாடியில் காடாக மாறியிருந்தது. அப்போதுதான் கோடை பண்பலையிலிருந்து
சோமஸ்கந்தமூர்த்தி வந்து பார்வையிட்டார். இப்போது பாதிக்கு மேல்
திருத்தியமைக்கப்பட்டிருந்தாலும் மொட்டை மாடிக்கு இவ்வளவு மண் எப்படி
வந்தது? நான் நிறைய சிமெண்டு பைகளைப் பயன்படுத்தி வந்தேன். அப்போது ஆறு மாத
விசாவில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு வந்தது. மாடித் தோட்டத்தை
நிர்வகிக்க முடியவில்லை. எனினும் சிமெண்டுச் சாக்கு மண் மூட்டைகளில்
முருங்கை விதைகள் ஊன்றியிருந்தேன். அவை நான் புறப்படும்போதே நன்கு வளர்ந்து
மூன்றடிச் செடியாக இருந்தன. சிமெண்டுச் சாக்கு இத்துப் போய் மண்
சரிந்துவிட்டது. நெருக்கமாகப் பயிர் வைத்திருந்த அவ்வளவு சிமெண்டுச்
சாக்குகளும் நைந்து மண் தரையில் கொட்டி அருகம்புல்லும் மண்டி
வளர்ந்திருந்தன. முருங்கை, மரமாகி நிறைய காய்த்திருந்தது. நடுவில் மாதுளை
மரமும் உருவானது. புற்கள், பூக்கள், காய்கறிச் செடிகள் எல்லாம் தரையில்
உள்ளது போல் வளர்ந்திருந்தன. மாடியே ஒரு புஷ்பவனமாகக் காட்சியளித்தது.
மனிதனால் நிர்வாகம் செய்ய முடியாத சூழ்நிலையில் இயற்கை தன்னைத் தானே
அற்புதமாக நிர்வாகம் செய்துகொண்டது. இவ்வளவு வளர்ந்தும்கூட நீர்க்கசிவு
ஏற்படாதது எனக்கே வியப்பாக இருந்தது. புற்களின் வேர்கள், பிரண்டை வேர்கள்
எல்லாம் தண்ணீரை உறிஞ்சிக் கொள்கின்றன. நீர்த்தேக்கம் இல்லை. நீர்க்கசிவும்
இல்லை.
அடுத்த கட்டமாக எனது மாடித் தோட்ட
அனுபவத்தை ஏன் நூலாக எழுதக் கூடாது என்ற எண்ணம் வந்தது. யாரும் என்னைத்
தூண்டவில்லை. அப்படி வந்ததுதான் மாடியில் மரம், காய்கறி சாகுபடி என்ற
புத்தகம்.
கடந்த 16 ஆண்டுகளாக நான் மாடித்
தோட்டத்தைப் பராமரித்து வருகிறேன். எல்லாவிதமான காய்கறிகளையும் கீரை
வகைகளையும் சாகுபடி செய்துள்ளேன். காய்கறி வகைகளில் செடிப்பயிராக தக்காளி,
வெண்டை, கத்தரி, கொத்தவரை, முட்டைகோஸ், காலிஃப்ளவர், பாலக் கீரை, அரைக்
கீரை, முளைக் கீரை, தண்டுக் கீரை, மணத்தக்காளி; கொடி வகைகளில் அவரை, பிடல்,
பாகல், கறிக்கோவை, பூசணி, செம்பசலை, பிரண்டை, கறித்தட்டாம்பயிறு; கிழங்கு
வகைகளில் பீட்ரூட், வெங்காயம், முள்ளங்கி; மர வகைகளில் முருங்கை, அகத்தி,
மாதுளை, கொய்யா; மலர் வகைகளில் மல்லிகை, ரோஜா, அரளி என்று அனைத்து
பயிர்களையும் மாடியில் சாகுபடி செய்த அனுபவம் உள்ளது. இத்துணைப்
பயிர்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாது. மாடியில் உள்ள இடநெருக்கடி
காரணமாக இரண்டு வகை கொடிப்பயிர், பல வகை செடிப் பயிர்கள் மட்டுமே உண்டு.
உணவு மனிதர்களுக்கு மட்டுமல்ல,
பசுக்களுக்கும் உண்டு. முருங்கை மரங்கள் எனது வீட்டின் தரைப் பகுதியில்,
காய்ப்புக்கு இருப்பதால் மாடியில் உள்ள முருங்கை, அகத்தி, தீவனப் புற்கள்
எல்லாம் நான் வளர்க்கும் பசுக்களுக்கு பசுந்தீவனமாகப் பயனுறுகிறது.
மாடியில் வளரும் முருங்கையையும் அகத்தியையும் மர்மாக்காமல் கவாத்து செய்து
பசுந்தீவனமாகவும் வழங்கலாம். ஆகவே மாடியில் செடித்தோட்டம், மரத்தோட்டம்,
கொடித்தோட்டம், பூந்தோட்டம் என்று சொல்வதைவிட மாடியில் உணவுத் தோட்டம்
என்று சொல்வது பொருந்தக்கூடியதுதானே!

-- Thanks to  solvanam.com
 
JanviDate: Friday, 05 Jun 2015, 8:18 PM | Message # 84
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline







வீட்டிலேயே இயற்கை விவசாயம்




சென்னை, கோவை மாநகராட்சி பகுதிகளில், தோட்டக்கலைத்துறை மூலம், நகர்ப்புற காய்கறி அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • வீட்டு மாடி, காலி இடங்களில் ‘நீங்களே செய்து பாருங்கள்’ என்ற திட்டத்தில் காய்கறி வளர்க்கலாம்.
  • இதற்கு 2,650 ரூபாய் செலவாகும்.
  • அதில், 50 சதவீதம் மானியம் போக, மீதமுள்ள தொகையை மக்கள் செலுத்தினால் போதும்.
  • பாலித்தீன் கவர் 20, தென்னை நார் கழிவு, விதை, இயற்கை உரம் என, 15 வகையான பொருட்கள் வழங்கப்படும்.
  • தென்னை நார் கழிவுடன், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் இயற்கை உரத்தை கலந்து, ஒரு வாரத்துக்கு தண்ணீர் தெளித்து மட்க செய்ய வேண்டும்.
  • அதன்பின், விதைப்பு செய்ய வேண்டும்.
  • செடி வளர்ந்ததும், ஒவ்வொரு பாலித்தீன் பையிலும் மட்கிய நார் கழிவை நிரப்பி, செடியை நடவு செய்ய வேண்டும்.
  • தினமும் தண்ணீர் தெளித்து பராமரித்தால் போதும்.
  • பூச்சி, புழு தாக்குதலுக்கு வேப்ப எண்ணெய் கலவையை ‘ஸ்பிரே’ செய்ய வேண்டும்.
  • ரசாயன மருந்தில்லாமல், காய்கறியை இயற்கையாக விளைவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
  •  இந்த திட்டத்தில் வீட்டு மொட்டை மாடியிலும் விவசாயம் செய்யலாம்.
  • திட்டம் குறித்த, மேலும் விவரங்களுக்கு, துணை இயக்குனர் அலுவலகம், தோட்டக்கலைத்துறை, நெ.8, தடாகம் ரோடு, கோவை என்ற முகவரியிலும், 04222453578
    என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


Thanks Dinamalar
 
JanviDate: Friday, 05 Jun 2015, 8:19 PM | Message # 85
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline







காய்கறிகளை அள்ளித்தரும் மாடித்தோட்டம்





புதுவையைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்.
விவசாய நாடான இந்தியாவில், விளை நிலங்களின் பரப்பு வெகுவாகக் குறைந்து
வருகிறது. ஆனால், மக்கள் தொகை வேகமாகப் பெருகிவரும் சூழலில், உணவுப்
பொருள், தானியம், காய்கறிகளின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால்
உணவுப் பொருள்களின் விலையானது ஏறுமுகத்தில் இருப்பதும், சாதாரண மக்களின்
மாத பட்ஜெட்டில் இதற்காகப் பெரும் தொகையை செலவிட வேண்டிய நிலையும்
ஏற்படுகிறது.
இதனை நன்கு உணர்ந்துகொண்ட புதுவை உருளையன்பேட்டையைச் சேர்ந்த
திருஞானசம்பந்தம், தனது வீட்டு மொட்டை மாடியில் 850 சதுர அடி பரப்பில்
தோட்டம் அமைத்து காய்கறிக்கான செலவை மிச்சப்படுத்தி வருகிறார். இவர் ஓய்வு
பெற்ற பஞ்சாலை ஊழியர் ஆவார்.
இத் தோட்டத்தில் பீர்க்கங்காய், பரங்கி, சுரக்காய் மற்றும் கொம்பன்
அவரை, பட்டை அவரை, பாகற்காய் என கொடிகளில் கொத்துக், கொத்தாய் காய்த்துத்
தொங்குகின்றன.
கத்தரிக்காய், தக்காளி, வெண்டைச் செடிகளுடன் சிவப்பு முருங்கை, பச்சை
முருங்கை, சடை முருங்கை என்று 21 வகையான முருங்கைகளையும் வளர்த்து
வருகிறார். ஒரே செடியில் 37 ரக வெள்ளைக் கத்தரிக்காய்கள் காய்த்துள்ளன.
மேலும், துளசி, புதினா, சோற்றுக்கற்றாழை, கருவேப்பிலை போன்ற மூலிகைச்
செடிகளுக்கும் பஞ்சமில்லை.
செடிகளை புதுப்பிக்க வசதியாக தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்டச்
செடிகளுக்கான விதைகளை விதைத்து, நாற்றுகளையும் பராமரித்து வருகிறார்.
பூத்துக் குலுங்கும் மலர்கள்:
இங்கு குண்டுமல்லி, முல்லை, கனகாம்பரம், சிவப்பு ஊசி மல்லி, அலரி,
செம்பருத்தி, அரிய வகையான பாரிஜாதம், சங்கு பூச்செடி உள்ளிட்ட மலர்களும்
பூத்துக் குலுங்குகின்றன. கொய்யா, மனத்தக்காளி என்று வகை, வகையான காய்,
கனிச் செடிகளும் வளர்க்கப்பட்டுள்ளன.
இது குறித்து திருஞானசம்பந்தம் கூறியது:
இளம் வயதில் வேளாண் படிப்பை முடித்தேன். தனியார் ஆலையில் வேலை
கிடைத்ததால் திசை மாறிவிட்டேன். இருந்தபோதும், விவசாயத்தின் மீதான எனது
ஆர்வம் குறையவில்லை. ஆரம்ப காலத்தில் வீட்டின் பின் பகுதியில் தோட்டம்
அமைத்திருந்தேன். கடந்த 4 ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற பின், வீட்டு
மாடியில் தோட்டம் அமைத்தேன். இது எனது நீண்ட நாள் கனவு. மாடித் தோட்டத்தில்
வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பூக்கள், கனிகள் மன நிறைவாகக்
கிடைக்கின்றன. அருகில் வசிப்போருக்கும் காய்கறிகளை இலவசமாக வழங்கி
வருகிறேன்.
மாடித் தோட்டத்தை எளிதாகப் பராமரிக்க முடியும். மண்புழு உரம், சாணம்
போன்ற இயற்கையான உரத்தை பயன்படுத்துவதால், பூச்சிக்கொல்லியின் தாக்கம்
இல்லாத ஆரோக்கியமான காய்கறிகளை சுவைக்க முடிகிறது.
இச்செடிகளுக்கு சிறிதளவு தண்ணீரே போதுமானது. மாடித் தோட்டம், சமையலுக்கு
பயன்படுவதோடு வீட்டுக்கும் அழகு சேர்க்கிறது. ஓய்வு நேரத்தில் எனக்கு மன
அமைதியைத் தருகிறது என்கிறார் அவர்.
நன்றி: தினமணி

 
JanviDate: Monday, 15 Jun 2015, 8:13 PM | Message # 86
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
தற்போதைய விவசாய முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவரான திரு சுரேஷ் பாலேகர் மண்புழு பற்றிய விவரங்களை பசுமை விகடனில் வெளியிட்டுள்ளார்.
அவையாவன
மண்புழு பற்றிய டிப்ஸ்:
மண்புழுக்கள், அள்ள அள்ளக் குறையாமல் மண்ணில் பொதிந்து கிடக்கும்
சத்துக்களை வெளியே கொண்டு வந்து பயிர்களுக்குக் கொடுக்கும். காசில்லாமல்
வேலையைச் செய்யும் ஆட்கள் தான் இந்த மண்புழுக்கள்.
மண்புழுக்கள் இருட்டை விரும்பும். அதனால் தான் மண்ணின் அடி ஆழத்தில் சென்று வாழுகின்றன.
மேல் மட்டத்தில் உணவும், வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலையும் இல்லாத போது அவை மண்ணுக்குள் புகுந்து விடுகின்றன.
மண்புழுக்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய ஆற்றல் நாட்டு மாட்டின் சாணத்தில் மட்டுமே உண்டு.
இந்தச் சாணத்தை மண்ணின் மீது வைத்து விட்டாலே போதும். நம் பயிருக்குத் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகளைச் சாப்பிடும்.
பொழிகின்ற மழை நீர், இதன் காரணமாக உங்கள் நிலத்தில் இறங்கி நீர்மட்டம் உயரும்.
பயிருக்கு வேண்டிய சத்தான உரத்தை ஒரு பக்கம் கொடுப்பது மட்டுமல்லாமல், நீர்ச்சேமிப்புக்கும் அவை உதவுகின்றன.
மண்புழுக்களின் உடல் மீது நீர்ப்பட்டால் அதுவும் உரமாக மாறி விடும். இதை
வெர்மிவாஷ் என்று சொல்கிறார்கள். பயிர்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்
திறனும், அதிகமாக காய்ப்பிடிக்க வைக்கும் தன்மையும் இந்த வெர்மிவாஷீக்கு
உண்டு.
மண்ணில் இயற்கையாகவே உள்ளச் சத்துக்களை மண்புழுக்கள் மேலே கொண்டு வந்து சேர்க்கின்றன.
சுமார் 15 அடி ஆழம் வரை அவை சர்வ சாதாரணமாக சென்று வருகின்றன. 7 அடி ஆழத்தில் தழைச்சத்து உள்ளது.
மண்ணிற்கு அடியில் பாஸ்பரஸ் இருக்கிறது. 11 அடியில் சாம்பல் சத்து இரும்பு,
10 அடியில் கந்தகம் எனச் சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை மேலேக்
கொண்டு வந்து சேர்க்கின்ற உன்னதப் பணியினை இந்த மண்புழுக்கள் செய்கின்றன.
ஒரு சதுர அடி நிலத்தில் நான்கு மண்புழுக்கள் இருந்தால், ஒரு ஏக்கரில் 2 லட்சம் எண்ணிக்கையில் மண்புழுக்கள் இருக்கும்.
ஏக்கருக்கு 200 டன் கரும்பு, 120 குவிண்டால் நெல், 120 குவிண்டால் கோதுமை,
120 குவிண்டால் கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற தானியங்கள், 40 முதல் 80 டன்
வரை காய்கறி, பழங்கள் என்ற எல்லாமும் விளைந்து கொழிக்கும்.
மண்புழுக்களை அதிகமாகப் பெருக்கவேண்டும் என்றால் நாட்டுப் பசுமாடு அவசியம்.
நாட்டு மாட்டுச் சாணத்தில் மட்டுமே மண்புழுக்கள் அதிக அளவில் பெருகும்.
நாட்டு மாடு நாள் ஒன்றுக்கு 11 கிலோ சாணம் கொடுக்கும். இதை வைத்து 30
ஏக்கர் நிலம் முழுக்க விவசாயம் செய்ய முடியும்.
மாட்டின் சிறுநீர், நாளாக நாளாகத்தான் அதிகப் பலன் கொடுக்கும். பொதுவாகச்
சாணத்தை 7 நாட்களுக்குள் பயன்படுத்தினால் தான் பலன் உண்டு. ஒரு ஏக்கருக்கு 5
முதல் 10 லிட்டர் கோமியம் இருந்தாலே போதுமானது.
இயற்கை விவசாயத்தினை பரவ செய்வதன் மூலம் நம் நாட்டு விவசாயிகளின்
வாழ்க்கைத்தரம் உயரும், அப்படி உயர்ந்தால் ஒளிய நாடு முன்னேர வேறு
வழியில்லை
 
JanviDate: Wednesday, 17 Jun 2015, 5:46 PM | Message # 87
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
பசுமைக்குடில் தொழில்நுட்பம்



இன்று எங்கு பார்த்தாலும் பசுமை குடில் மூலம் விவசாயம் நடக்கிறது. வருடம் முழுவதும் காய்கறிகள், காளான் வளர்ப்பு, நாற்று உற்பத்தி செய்து சம்பாதிக்கின்றனர். அது பற்றி அறிவோம்.
எதையும் உயர்த்திட, தரமான தொழில்நுட்பம் தேவை. கிணற்றில் நீர் இறைக்க மாட்டை பயன்படுத்தினர். மோட்டார் தொழில்நுட்பம் வந்து 300 அடிகளில் இருந்து கூட நீரை இறைத்து விவசாயம் செய்கின்றனர். அப்படிப்பட்ட தொழில்நுட்பம் தான் பசுமை கூடார விவசாயம் ஆகும்.
90 முதல் 95% பயிர்கள் வயல்வெளிகளில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் வருடம் முழுவதும் வளர்க்க முடியாது. ஆனால் பசுமைக் கூடாரம் அமைத்தால் வருடம் முழுவதும் விவசாயம் செய்ய இயலும். குளிர்பிரதேசங்களில் அதிகப்படியான குளிரில் இருந்து பயிர்களை தொடர்ந்து காப்பாற்றி, உயர் மதிப்புள்ள பயிர்களை வளர்க்க ""பசுமைக் கூடார தொழில்நுட்ப முறைகள்'' உருவாக்கப்பட்டன. காற்று, குளிர், மழை, அதிக சூரிய ஒளி, அதிக வெப்பம், பூச்சி மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. பசுமைக் கூடாரம் என்பது ஒளி ஊடுருவக் கூடிய கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் போர்த்தப்பட்ட அமைப்பாகும்.
இதனுள் தேவையான தட்பவெப்ப நிலை உருவாவதுடன், இரவில் வெளியிடும் கரியமில வாயு உள்ளேயே தங்கி, ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது. விளைச்சல் அதிகமாகிறது. ஈரப்பதம் குறையாது. அதிகநீர் தேவைப்படுவதில்லை.
பசுமைக் கூடார பயன்கள்: பூச்சி, எலி, பறவைகளின் தாக்குதல் இல்லை. வெப்பம், பெரும் மழை, காற்று தடுக்கப்படும். பூச்சி மருந்து / உரங்களின் சரியான பயன்பாடு சாத்தியமாகும். தட்பவெப்பம் கட்டுப்படுவதால் வருடம் முழுவதும் எந்த பயிரையும் பயிர் செய்யலாம். ஆண்டு முழுவதும் காய்கறிகள், கொய்மலர்கள் கிடைப்பதால் லாபம் அதிகமாகிறது.
இதனை அமைக்க சிறிது மேடான இடமாக இருக்க வேண்டும். தேவையான மின்சாரம் கிடைக்க வேண்டும். அருகில் மரம் / கட்டடம் இருக்க கூடாது. கிழக்கு - மேற்காக அமைக்க வேண்டும். வாய்க்கால் வடக்கு - தெற்காக அமைய வேண்டும்.
அமைக்கும் முறை : 4x2 மீ அளவில் செவ்வகமாக உருவாக்கலாம். 4 மூலைகளிலும் இரும்புக் குழாய்களை கான்கிரீட் மூலம் நிறுவ வேண்டும். பின் முடிவுச் சட்டத்தைப் பொருத்த வேண்டும். பக்கவாட்டு தாங்கிகளை பொருத்த வேண்டும். பின் தேவைப்படும் குழாய்களை நிறுவ வேண்டும். பின் கூடாரத்தின் மேல் பாலிதீன் தாள் கொண்டு மூட வேண்டும். காற்றோட்ட வசதி, சூடேற்றும் வசதி செய்ய வேண்டும். இதன் மூலம் கொய்மலர்கள், காளான், தரமான நல்ல விளைச்சல்களைப் பயிரிடலாம்.

--- Thanks Dinamalar
 
JanviDate: Wednesday, 17 Jun 2015, 5:49 PM | Message # 88
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
தங்கம் விளையும் தரிசு பூமி : மாற்றிக் காட்டிய பஞ்சாப் விவசாயிகள்



ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள ஏ.தரைக்குடியிலிருந்து 3 கி.மீ., தொலைவில் போக்குவரத்து வசதி இல்லாத கிராமமாக உள்ளது வல்லந்தை. இங்கிருந்து ஒரு கி.மீ., தொலைவில், 105 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியுள்ள பஞ்சாப், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்துள்ள 20 குடும்பத்தினர், அந்த தரிசு நிலத்தில் முற்றிலும் மாறுபட்ட பழப்பண்ணையையே உருவாக்கி உள்ளனர்.
இந்த பழப்பண்ணையில் தென்னை, மா, நாவல், பலா, நெல்லி, சப்போட்டா, கொய்யா, தர்பூசணி, வெள்ளரி, போன்றவற்றை பயிரிட்டு உள்ளனர். இப்பழப்பண்ணை மூலம் மாதம் 2 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
2007 ல் கருவேல மர காடாகவும், மண் மேடாகவும் இருந்த செம்மண் நிலத்தை விலைக்கு வாங்கி, 2009 வரை செவ்வனே சீரமைப்பு பணிகளை செய்து, குறைந்த சம்பளத்திற்கு வட மாநில தொழிலாளர்களை வரவழைத்து, வறண்ட பூமியை, வளமான பூமியாக மாற்றி உள்ளனர். இங்கிருந்து உற்பத்தியாகும் மா, கொய்யா, வெள்ளரி, தர்பூசணி போன்ற பழங்களை கமுதி, அபிராமம் வியாபாரிகளுக்கு விற்பனை செய்தது போக, மதுரை, பெங்களூருவுக்கு மொத்தமாக வாகனங்களில் அனுப்புகிறார்கள். சமீபத்தில் ஒன்றறை டன் எடை "ஹிமாம் பசந்த்' வகை மாம்பழங்கள், பெங்களூருவுக்கு, கிலோ 210 ரூபாய் வீதம் அனுப்பியுள்ளனர். அவற்றுக்கு தமிழகத்தில் கட்டுபடியான விலை இல்லாதபோதும், கிடைக்கும் லாபத்தில் சந்தோஷமாகவே உள்ளனர். அவ்வளவாக தமிழ் தெரியாததால் உதவ, ஓய்வு பெற்ற அபிராமம் வி.ஏ.ஓ., செய்யது சேகனாவை மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நியமித்துள்ளனர்.
105 ஏக்கரில் விவசாய பணிகள் துவங்கியபோது, மின் இணைப்பு இல்லாததால், "ஜெனரேட்டர்' வசதியுடன் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தனர். அதன்பின், 50 ஆயிரம் ரூபாய் திட்டத்தில் 9 மின் இணைப்புகளை பெற்றுள்ளனர். மேலும் 4 இணைப்புகளுக்காக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இந்நிலம் பஞ்சாபை சேர்ந்த 32 பேர் கொண்ட ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமானது.
குடிநீர் வசதியில்லாததால், உவர்ப்பு நீரை, சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.
விவசாயி தர்ஷன் சிங் கூறுகையில்,""விவசாயத்திற்காக பஞ்சாபில் கடுமையாக உழைத்தும் போதிய வருமானமில்லை. அங்கு நிலமும் இல்லை. அதனால் குறைந்த முதலீட்டில், வல்லந்தையில் தேவையான அளவு இடத்தை வாங்கி, கொய்யா, நெல்லி, மா வகைகளான "பங்கனபள்ளி', "ஹிமாம் பசந்த்', "அல்போன்சா', மற்றும் நாட்டு மாமரச் செடிகளை பயிரிட்டு வளர்க்கிறோம். தமிழக அரசிடமிருந்து மானியம் கிடைத்தால், தரிசு நிலங்களை தங்கம் விளையும் பூமியாக மாற்றுவோம். வல்லந்தையை போல், அபிராமம் அருகே நகரத்தார்குறிச்சி, அச்சங்குளம், ஏ.தரைக்குடி, டி.புனவாசல் ஆகிய பகுதிகளிலும், பல நூறு ஏக்கர் பரப்பளவில் எங்களது உறவினர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
போக்குவரத்து வசதி செய்து கொடுத்தால் மா, கொய்யா, மாதுளை பழ வியாபாரிகளுக்கு, குறைந்த விலையில் பழங்களை விற்பனைக்கு வழங்குவோம்,'' என்றார்.
--- Thanks Dinamalar
 
JanviDate: Wednesday, 17 Jun 2015, 5:53 PM | Message # 89
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
கீரை சாகுபடியில் சாதிக்கும் விவசாயி


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தை சேர்ந்த விவசாயி கட்டத் தேவன், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கீரை செடிகளை வளர்த்து அதிக லாபம் ஈட்டி வருகிறார். இவர் 60 சென்ட் நிலத்தில் வெந்தயக்கீரை, மிளகு தக்காளி கீரை, அரைக்கீரை, பருப்பு கீரை, சிறுகீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை, அகத்திக்கீரை என பல வகை கீரைகளை சாகுபடி செய்துள்ளார்.
நோய் தாக்குதல் இல்லாமல் இருந்தால் ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை இதன் பயனை அனுபவிக்க முடியும். வியாபாரிகள் தோட்டத்திற்கு வந்து வாங்கிச்செல்கின்றனர். ஒரு கிலோ ரூ.10 வரை விலை கிடைக்கிறது. ஒரு முறை அறுவடை செய்துவிட்டால் மீண்டும் 10 நாட்களுக்கு பிறகு தான் மீண்டும் அறுவடை செய்யமுடியும். கீரைகள் நல்ல முறையில் வளர்ந்து பலன் தரவேண்டும் என்றால் உவர்ப்பு தன்மை உள்ள நீரை பயன்படுத்தவேண்டும்.
ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. நெல், வாழை, கரும்பு என பணப்பயிர்களை பயிரிட்டு நீர் பற்றாக்குறை மற்றும் நோய் தாக்குதலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இவர் மகிழ்ச்சியாக விவசாயம் செய்து வருகிறார்.
விவசாயி கட்டத்தேவன் கூறியதாவது: எனக்கு சொந்தமான விவசாய கிணற்றில் கிடைக்கும் நீர் உவர்ப்பு தன்மை கொண்டதாக உள்ளது. இதனால் காய்கறி மற்றும் இதர பயிர்களை சாகுபடி செய்தால் பலன் கிடைக்காது. இதனால் கீரை சாகுபடியில் ஈடுபட்டேன், என்றார்.
தொடர்புக்கு 99445 23405.

--- Thanks Dinamalar
 
JanviDate: Wednesday, 17 Jun 2015, 5:56 PM | Message # 90
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
வறண்ட பூமியில் சந்தன மரம்



வறண்ட பூமியான சிவகங்கையில் சொட்டு நீர் பாசனம் மூலம் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார் நாட்டரசன்கோட்டை விவசாயி செல்வம்.
அவர் கூறியதாவது: நாட்டரசன்கோட்டை அருகே மாங்காட்டுப்பட்டியில் 10 ஏக்கரில் பரிட்சார்த்தமாக சந்தன மரம் நடும் முயற்சியில் இறங்கினேன். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டமாக இருப்பதால்,தண்ணீரின்றி விவசாயம் செய்வது கடினம். இருப்பினும் சொட்டு நீர் பாசனம் மூலம் சந்தன மரங்களை வளர்த்து வருகிறேன். கடந்த 6 ஆண்டுக்கு முன் ஏக்கருக்கு 300 சந்தன மரக்கன்று வீதம் 3,000 கன்றுகளை நடவு செய்தேன். பெங்களூருவில் இருந்து ஒரு கன்று ரூ.150க்கு வாங்கினேன். 2 ஆண்டு நன்கு பராமரித்து, வளர்ந்த பின் முறையாக தண்ணீர் விட்டும், பூச்சி தாக்காமல் மருந்து தெளித்தால் போதும். 15 முதல் 20 ஆண்டு கழித்து வருவாய்துறை அனுமதியுடன் மரங்கள் வெட்டலாம். 
வளர்ந்த மரங்களில் 30 சதவீதத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். எஞ்சிய மரங்களை நாமே விற்கலாம். மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரும் சந்தன மரங்களை வறண்ட சிவகங்கையில் வளர்க்கும் நோக்கில் வளர்க்கிறேன். சந்தன மரங்களை அரியானா, அருணாச்சல பிரதேசத்திற்கு அனுப்பி, அங்கு சந்தன தைலம் தயாரிப்பர். அன்றைய அரசு விலை நிர்ணயப்படி பல லட்சம் வருவாய் கிடைக்கும், என்றார். ஆலோசனைக்கு 94424 52330.

--- Thanks Dinamalar
 
Search: