கேள்வி பதில் - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya, Laya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாயிகளின் நண்பன் » கேள்வி பதில் (விவசாயம், கால்நடை சம்மந்தமான கேள்வி பதில்கள்)
கேள்வி பதில்
JanviDate: Tuesday, 10 Feb 2015, 6:11 PM | Message # 11
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
ஆடு வளர்ப்பு லாபகரமான ஒரு தொழில்தானா... இதில் முதலீடு
செய்தால் பலன் கிடைக்குமா?


காட்டுப்பாக்கம், கால்நடை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி, டாக்டர் குமாரவேல் பதில்
சொல்கிறார்.


ஆடு வளர்ப்பு நல்ல லாபகரமான தொழில்.கொட்டில் முறை ஆடு வளர்ப்பு,
ஆழ்கூள முறை ஆடு வளர்ப்பு என்று விதவிதமான முறைகள் இருக்கின்றன.
இவற்றில் லாபம் அவ்வளவாக கிடைப்பதில்லை. இப்போது மேய்ச்சலுடன்
கலந்த கொட்டில் முறை என்ற ஒன்று பரவலாக பயன் தருவதாக
உள்ளது. 10 பெட்டை ஆடுகளும் ஒரு கிடாவும் இருந்தால் போதும்...
ஒரே நபர் தன் கட்டுப்பாட்டுக்குள் வளர்த்து பயன்பெறலாம்.

பெட்டை ஆடுகளை நாட்டு இனமாக பார்த்து வாங்குங்கள். கிடாவை மட்டும்
தலைச்சேரி, ஜமுனாபாரி போன்ற உயர் இனத்தை தேர்ந்தெடுத்து
வாங்குங்கள். நாட்டு ஆடுகள் நோய் நொடியில்லாமல் வளரும்.
உயர் இன ஆடுகள் 'கொழுகொழு'வென வளர்ந்து நிற்கும். இரண்டுக்கும்
பிறந்த குட்டிகள், இரண்டின் சிறப்புத் தன்மைகளையும் பெற்றிருக்கும்.

இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை குட்டி போடும். ஆட்டுக்கு ஒரு
குட்டி என்றால்கூட, பத்து ஆடுகளுக்கு ரெண்டு வருடங்களில் மொத்தம்
30 குட்டிகள் கிடைக்கும். இதில் 15 குட்டிகளை உங்கள் பண்ணையிலேயே
வளரவிட்டுவிடலாம். மீதி 15 குட்டிகளை 8 மாதம் கழித்து விற்கலாம்.
சராசரியாக ஒரு குட்டி ஆயிரம் ரூபாய் வரை விலை போகும்.
மீதி 15 குட்டிகள் ஒரு முதலீடாக உங்களிடம் இருக்கும். ஆடு வளர்ப்பை
திறமையாக செய்து லாபம் பெற கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில்
தனியான பயிற்சிகளும் கொடுத்து வருகிறோம்.''

இந்தப் பயிற்சியைப் பெற விரும்புபவர்கள்... டாக்டர். குமாரவேல்,
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம்,
காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி நிலையம், காட்டாங்குளத்தூர்,
காஞ்சிபுரம்-603 203. தொலைபேசி : 044-27452371
என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
 
JanviDate: Tuesday, 10 Feb 2015, 6:12 PM | Message # 12
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
'வாழைநார் எங்கு அதிகமாக கிடைக்கிறது? வாழை நார் பற்றிய விவரங்கள்
தெரிந்துகொள்ள யாரை அணுகுவது?'

இந்தக் கேள்வியை எதிர்கொள்பவர், திருச்சியிலிருக்கும் தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சி.கே.நாராயணன்.


வாழை நார் பற்றி தெரிந்துகொள்ளவும் அது சார்ந்த தொழிலில் லாபம்
ஈட்டவும் பலருக்கு ஆர்வம் இருந்தாலும் இந்தத் தொழில் அவ்வளவாக
இன்னும் இங்கே வளரவில்லை.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி பகுதியில் விளையும்
வாழையிலிருந்து கிடைக்கும் நார்கள்தான் அதிக தரத்தோடு உள்ளன.
இது ஒரு கிலோ ரூபாய் 80 என்கிற அளவில் போகிறது. மற்ற
பகுதிகளில் விளையும் வாழை நார் ஒரு கிலோ ரூபாய் 40 என்று
விற்கிறது.

வாழை நார் எடுக்க சிறந்த ரகம் செவ்வாழை தான். மற்ற ரகங்களைக்
காட்டிலும் கூடுதல் விலையும் கிடைக்கும். ஆனால், முறைப்படுத்
தப்பட்ட மார்க்கெட் இல்லாததால் லாபம் இவ்வளவு கிடைக்கும்
என்று இப்போதைக்கு அறுதியிட்டு சொல்ல முடியாது. நாரின் நீளத்தைப்
பொறுத்தும் அது அமையும்.

இன்னொரு விஷயம், இப்போது வாழைக்காய், பழம் மற்றும்
பூ ஆகியவற்றிலிருந்து ஊறுகாய் தயாரிப்பது பிரபலமடைந்து வருகிறது.
இந்த உணவுக்கு மார்க்கெட்டில் நல்ல தேவை இருக்கிறது. ஒரு
கிலோ ஊறுகாய் ரூபாய் 120 வரை விற்கிறது என்றால் கணக்கு
போட்டுக் கொள்ளுங்கள்.''

வாழை பற்றிய சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய
முகவரி... இயக்குனர், தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம்,
திருச்சி-102. தொலைபேசி: 0431-2618104.
 
JanviDate: Tuesday, 10 Feb 2015, 6:18 PM | Message # 13
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
காளான் வளர்க்க எந்தக் காலநிலை ஏற்றது?

திருவள்ளூர் அருகேயுள்ள திரூர்குப்பத்தில் இருக்கும் தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தின்
விவசாய ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி மு.தேவநாதன் இதற்கு பதில்
சொல்கிறார்.

‘‘காளான்களில் பலவகை உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான
காலநிலை ஏற்றதாக இருக்கும். பெரும்பாலும் மொட்டுக் காளான்,
சிப்பிக் காளான் மற்றும் பால் காளான் ஆகியவைதான் உணவுக்காக
வளர்க்கப்படுகின்றன.

மொட்டுக் காளான் வளர்க்க ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு போன்ற
பகுதிகள் ஏற்றவை. சமவெளியில் இந்த ரகத்தை வளர்க்க முடியாது.
மிதமான, இதமான குளிர்ந்த நிலையில்தான் இந்த ரகம் வளரும்.

சிப்பிக் காளான், பால் காளான் போன்ற ரகங்களைத்தான்
சமவெளியில் வளர்க்கமுடியும். பொள்ளாச்சி, உடுமலை, கோவை
போன்ற பகுதிகளில் ஆண்டு முழுக்க இவற்றை வளர்க்கலாம். காரணம்,
ஆண்டு முழுவதும் இங்கு இதற்கு ஏற்ற சீதோஷ்ணநிலை பதமாக இருக்கும்.
மற்ற மாவட்டங்களில் கடுமையான உஷ்ணம் நிலவும் மே மாதத்தில்
மட்டும் இவற்றை வளர்க்க முடியாது. அதிகமான வெப்பநிலை இருந்தால்
அது காளான் வளர்ச்சியை கடுமையாகப் பாதிக்கும். மற்றபடி
11 மாதமும் வளர்க்கலாம்.’’
 
JanviDate: Tuesday, 10 Feb 2015, 6:19 PM | Message # 14
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
எனக்கு ஏரிக்கரை அருகில் நிலம் உள்ளது. ஏரியில் 3 மாதங்களுக்குத் தொடர்ந்து
அதிக அளவில் தண்ணீர் தேங்கியிருக்கும். அந்தச் சமயத்தில் என்
நிலத்தில் ஈரப்பதம் நிறைய இருக்கும். இந்த நிலத்தில் இலவம்
பஞ்சு மரங்களை நடலாமா?''


கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்க கொள்கை
பரப்பு செயலாளர் நாராயணசுவாமி பதில் சொல்கிறார்.

இலவம் பஞ்சு மரம் நடுவதைக் காட்டிலும் உங்கள் நிலத்தில் வெட்டிவேர்
நடுவது சிறந்தது. வெட்டிவேருக்கு நல்ல மவுசு இருக்கிறது. கூடவே
உங்கள் நிலத்துக்கும் அது நல்லது. வெட்டிவேர் மண் அரிப்பைத்
தடுக்கும். அதிகமாக நீர் நின்றாலும் ஒன்றும் ஆகாது. இதன் வேர்கள்
நிலத்தில் 10 அடி ஆழம் வரை செல்லும் மற்ற பயிர்களையும் இது
பாதிக்காது. ஏரிக்கரை ஓரங்களிலும் குளக்கரையிலும் இதை நடவு
செய்யலாம். இதனால் கரைகளும் பலப்படும். நீர்க்கசிவும் ஏற்படாது.

எல்லா வகையான மண்ணிலும், எல்லாப் பருவத்திலும் இதை நடவு செய்யலாம்.
வெட்டிவேரிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கிலோ 4 ஆயிரம்
ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை
செய்பவர்கள் உடலில் சூடு ஏற்படும். சேரில் வெட்டி வேர் விரிப்பை
போட்டு உட்கார்ந்தால் உடலை சூடு அதிகமாகத் தாக்காது.
வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு தேய்த்து
வந்தால் முடி கருகருவென வளரும்.

நிலத்தைச் சுற்றிலும் வரப்பு ஓரங்களில் நட்டால் கூட போதும்
ஆண்டுதோறும் கணிசமான வருமானத்தை தரக்கூடியது. எனவே நிலங்களில்
வெட்டிவேரை பயிரிட விவசாயிகள் முன்வரவேண்டும். வெட்டிவேர்
நடவு மற்றும் விற்பனை தொடர்பாக நாங்கள் உதவி செய்ய தயாராக
இருக்கிறோம்.'' தொடர்புக்கு: கோவை மாவட்ட மூலிகை மற்றும்
மரம் வளர்ப்போர் சங்கம், சைட் நம்பர் 109, சிவா நகர்,
காளப்பட்டி அஞ்சல், கோவை -641035.

அலைபேசி: 94433-84746
 
JanviDate: Tuesday, 10 Feb 2015, 6:19 PM | Message # 15
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
''வெள்ளாட்டுக்கு தக்கைப்பூண்டை பசுந்தீவனமாகக் கொடுக்கலாமா?''

வெள்ளாடு வளர்ப்பு நிபுணரும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக
விஞ்ஞானியுமான சௌந்திரராஜன் இதற்கு பதில் சொல்கிறார்.


‘‘தக்கைப்பூண்டு தீவனமாகக் கொடுப் பதற்கு உகந்ததல்ல. சில இடங்களில் அதிகளவுக்கு
தக்கைப்பூண்டை உண்ட ஆடுகள் இறந்துள்ளன. எனவே, தக்கைப்
பூண்டை தீவனமாக கொடுக்காமல் இருப்பது நல்லது.

வெள்ளாட்டுக்குத் தீவனம் கொடுக்கும்போது ஒன்றைக் கவனிக்கவேண்டும். நாம் கொடுக்கும்
தீவனத்தில் புரதச்சத்து இருந்தால்தான் அது வெள்ளாட்டின் எடையைக்
கூட்டும். அதிகளவு புரோட்டீன் கொடுக்கக்கூடிய பசுந்தீவனங்களான
கோ-3, வேலிமசால் போன்றவற்றை பயிரிட்டு ஆடுகளுக்குக் கொடுக்கலாம்.
இவ்விரு தீவனங்களில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் ஒரு முறை
பயிரிட்டால் 8 ஆண்டுகள் வரை தொடர்ந்து பசுந்தீவனத்தை அறுவடை
செய்யலாம். கோ-3 பசுந்தீவனம் ஓர் ஆண்டில் ஹெக்டேருக்கு
120 டன்னும் வேலிமசால் ஆண்டுக்கு 80 டன்னும் அறுவடை செய்யமுடியும்.

100 ஆடுகள் கொண்ட பண்ணைக்கு 5 ஏக்கரில் பசுந்தீவனம் பயிரிட்டு
வளர்க்க வேண்டும். வணிகரீதியாக ஆடு வளர்க்கும்போது தீவனம்
கொடுப்பதில் கவனம் தேவை. கால்நடை மருத்துவரின் அறிவுரைப்படி,
பண்ணையை நடத்துவது நஷ்டத்தைத் தவிர்க்கும்.’’

அலைபேசி: 94422-72383
 
JanviDate: Tuesday, 10 Feb 2015, 6:21 PM | Message # 16
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
''தேங்காய் தண்ணீரைப் புளிக்க வைத்து அதை வயலுக்கு பாய்ச்சுகிறார்கள் சில
விவசாயிகள். இது பயிர் வளர்ச்சிக்கு நல்லதா... கெட்டதா?''


இவரின் கேள்வியை எதிர்கொள்கிறார் செங்கல்பட்டிலிருக்கும் அரசு உயிரியல் ஆய்வு மையத்தின் நுண்ணுயிரியல் துறை விஞ்ஞானி ரேவதி.


தமிழ்நாட்டில் விவசாயிகள் பயன்படுத்திவரும் பஞ்சகவ்யா என்ற இயற்கை பயிர்
வளர்ச்சி ஊக்கியில் தேங்காய் தண்ணீர் ஊற்றி தயாரிக்கப்படுகிறது.
இந்த பஞ்சகவ்யாவை சோதனைக்கூடத்தில் வைத்து ஆய்வு செய்தபோது
ஆச்சர்யப் பட்டோம். பயிர் வளர்ச்சிக்கு உதவும் அசோஸ்பைரில்லம்,
பாஸ்போபாக்டீரியா, சூடோமோனஸ் போன்ற நுண்ணுயிர்கள் அதில்
பல மடங்கு பெருகியிருந்தன. ஆரம்ப காலகட்டங்களில் தேங்காய்
தண்ணீர் கலக்காமல் பஞ்சகவ்யா தயாரித்து தெளித்தபோது அதன்
பலன் சற்று குறைவாக இருந்தது. தேங்காய் தண்ணீர் சேர்த்து
தெளித்தபோது பயிர் வேகமாக வளர்ச்சி அடைந்தது. இதை வைத்துப்
பார்க்கும்போது, நுண்ணுயிர்களை பெருக்கும் திறன் தேங்காய் தண்ணீருக்கு
உண்டு என்று அறியமுடிந்தது. இதனால் வயலுக்கு தேங்காய் தண்ணீரை
பாய்ச்சுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மண் வளம் பெறும்
என்பதுதான் உண்மை

--- Thanks to Pasumai vikatan
 
JanviDate: Friday, 06 Mar 2015, 6:04 PM | Message # 17
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
''வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களுக்கு தோல் நீக்க இயந்திரம் உள்ளதா?''

- எஸ். சுந்தரம், திருவண்ணாமலை.
கோயம்புத்தூரில் உள்ள மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் சி. பாலசுப்பிரமணியன் பதில் சொல்கிறார்.
''தினை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி போன்ற தானியங்கள்
அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால், தோல் நீக்குவதில் கூடுதல் நேரம்
எடுக்கும். மேலும், இவ்வகை தானியங்களில் சுமார் 30 சதவிகிதம் உமி
இருப்பதால், அப்படியே உணவில் சேர்த்துக் கொள்ள முடியாது. என்றாலும்,
குறைந்த விலையில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய,
சிறுதானியங்களை விட்டால் வேறு வழியில்லை. குறைந்த அளவு நீரைக்கொண்டு, நல்ல
விளைச்சல் கொடுக்கக் கூடியவை சிறுதானியங்கள்தான், எதிர்காலத்தில் முக்கிய
உணவுப்பயிராக மாறும். எனவேதான், எங்கள் மத்திய வேளாண் பொறியியல் மண்டல
ஆராய்ச்சி நிறுவனம், சிறுதானியங்களை உடைத்து, உமி மற்றும் தவிடை
முற்றிலுமாக அகற்றும் வகையில் 'சி.ஐ.ஏ.இ. மில்லட்’ (CIAE-Millet) என்ற
இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. இந்த இயந்திரத்தில் சிறுதானியங்களை முதல்
முறை செலுத்தும் போதே (சிங்கிள் பாஸ்) உமி மற்றும் தவிடு ஆகியவை 95
சதவிகிதம் நீங்கிவிடும். ஒரு மணி நேரத்தில் 100 கிலோ தானியத்தை தோல்
நீக்கம் செய்ய முடியும். 100 கிராம் அளவு தானியங்களைக்கூட இந்த
இயந்திரத்தில் செலுத்தி தோல் நீக்க முடியும்.

இதைக் கையாள்வது எளிது என்பதால், ஆண்/பெண் இருவருமே சுலபமாகக்
கையாளலாம். அதிக சப்தம் வராமலிருப்பதோடு, தூசு மற்றும் உமிகளினால்
சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்க, சைக்லோன் பிரிப்பான் எனும் அமைப்பும்
பொருத்தப்பட்டுள்ளது. ஒரு குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டாரில் இயங்கும்
இதற்கு, ஒரு முனை மின்சாரமே (சிங்கிள் பேஸ் கரன்ட்) போதுமானது. தற்போது,
சிறுதானியங்களுக்கான தேவை அதிகமிருப்பதால், சிறிய நகரங்களில் இந்த
இயந்திரத்தை வியாபார ரீதியாகக்கூட பயன்படுத்தலாம். இதன் விலை 60 ஆயிரம்
ரூபாய்.''
தொடர்புக்கு, முதன்மை விஞ்ஞானி, மண்டல அலுவலகம், மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம், கோயம்புத்தூர் 641003.
செல்போன்: 86810-17811.
 
JanviDate: Friday, 06 Mar 2015, 6:04 PM | Message # 18
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
''மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்... என, நாள் பார்த்து விவசாயம் செய்வது மூடநம்பிக்கையா?''

- ஏ. கனகராஜ், கள்ளக்குறிச்சி.
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி நவநீதகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.
''மேலை நாடுகளில் அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பெறுவதற்கு
முன்பே, நம் நாட்டில் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் தூரத்தைத்
துல்லியமாகக் கணக்கீடு செய்துள்ளனர். கோள்கள், நட்சத்திரங்களின் தாக்கம்,
பூமியில் உள்ள உயிரினங்கள் மீது பிரதிபலிக்கும் என்பது அறிவியல்பூர்வமாக
நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் விவசாயம் மட்டுமே பிரதான தொழில்.
அதைச் சிறப்பாகச் செய்ய சில கணக்கீடுகள் செய்துள்ளனர். அவற்றில் ஒரு
பகுதிதான் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் போன்றவை. இன்றளவும் இந்த
நாட்கள், தினசரி நாட்காட்டி மற்றும் பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படுகின்றன.
இதைப் பயன்படுத்தும் நுட்பம் தெரியாமல் போனதால், மூட நம்பிக்கை என்று
மேலோட்டமாகச் சொல்லி ஒதுக்கி விடுகிறோம்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, இதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு
வருகிறேன். சந்திரனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள தூரம் அதிகரிக்கும்
நாட்கள் மேல்நோக்கு நாட்கள் என்றும்... தூரம் குறையும் நாட்கள் கீழ்நோக்கு
நாட்கள் என்றும் கணக்கிடப்படுகின்றன. கீழ்நோக்கு நாள், வாழை, கருணை போன்ற
கிழங்கு வகைகளை விதைக்கவும், செடிகளை பதியன் போடவும் ஏற்றது. இந்த நாள்
கரும்பு அறுவடை செய்யவும் ஏற்ற நாளாகும். மேல்நோக்கு நாட்களில் பூமியில்
உள்ள தாவரங்களில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும். பூமியிலும் ஈரப்பதம்
குறையும். அந்த நாட்களில் விதைகளை விதைப்பது, நாற்று நடுவது போன்ற பணிகளைச்
செய்யலாம். ஈரப்பதம் குறைவாக இருப்பதால், புதிய வேர்கள் வேகமாக உருவாகும்.
முழுநிலவு தினமான பௌர்ணமி அன்று காய்கறி, பழங்களை அறுவடை செய்தால்,
விரைவில் கெட்டுப் போகாது. சுவையும் கூடுதலாக இருக்கும். பௌர்ணமி தினத்தில்
அனைத்துப் பயிர்களையும் விதைக்கலாம். மற்ற நாட்களில் விதைத்த பயிர்களைவிட,
பௌர்ணமியில் விதைத்த பயிர்கள் வேகமாக வளரும். அமாவாசை அன்று பூமியில்
ஈரப்பதம் குறைவாக இருக்கும். அப்போது, தானியங்களை அறுவடை செய்யலாம்.
ஈரப்பதம் குறைவாக இருப்பதால், அந்த தானியத்தில் பூச்சிகள் அண்டாது.
இப்போதும், கேரளாவில் அமாவாசை அன்றுதான், விதைகளைக் காய வைப்பது,
மரங்களை வெட்டுவது போன்ற பணிகளை பரவலாகச் செய்கிறார்கள். மரங்களில்
ஈரப்பதம் குறைவாக இருப்பதால், செல் அரிக்காது. உளுத்துப் போகாது. நீண்ட
காலத்துக்கு அந்த மரத்தைப் பயன்படுத்த முடியும். நம் மண்ணில் கண்டறிந்து
பயன்பாட்டில் இருக்கும் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்
தொழில்நுட்பம்தான், வெளிநாடுகளில், 'உயிராற்றல் விவசாயம்’ என்கிற பெயரில்
தற்போது உலா வருகிறது. நமது நாட்காட்டி, பஞ்சாங்கத்தில் உள்ள நாட்களைப்
பின்பற்றி விவசாயம் செய்தாலே 95 சதவிகிதம் நல்ல பலன் கிடைக்கும்.''
தொடர்புக்கு, செல்போன்: 94878-50277.
 
JanviDate: Friday, 06 Mar 2015, 6:05 PM | Message # 19
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
 
JanviDate: Friday, 06 Mar 2015, 6:07 PM | Message # 20
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
'கொசுக்களை விரட்ட நொச்சிச் செடிகளை வளர்க்கலாமா... வேறு ஏதேனும் எளிய வழிகள் உள்ளனவா?''
-எம். சுஜாதா, மாங்காடு.

கொசு விரட்டிகள் பற்றி ஆய்வு செய்து வரும் சென்னையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் பதில் சொல்கிறார்.
''கொசுக்களை விரட்ட, பலவிதமான ஆய்வுகளைச் செய்து பார்த்துள்ளேன்.
என்னுடைய அனுபவத்தில் நொச்சிச் செடியை வளர்ப்பதால் மட்டும் கொசுக்களைக்
கட்டுப்படுத்த முடியாது. அதன் தழைகளை வைத்து, புகை மூட்டம் போடும்போது
மட்டுமே கொசுக்கள் விரட்டப்படுகின்றன. வேப்பிலை, எருக்கன் இலை, துளசி போன்ற
கசப்புச் சுவையுடைய இலைகளை புகை போட்டாலும் கொசுக்கள் வராது.

கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கொசு விரட்டிகளால் உடல்நலம்தான்
பாதிக்கப்படும். இதைத் தவிர்க்க வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை
தலா 100 மில்லி என்ற அளவில் கலந்து, உடலில் பூசிக்கொள்ளலாம். வேப்பெண்ணைய்
10%, ஐசோ ஃபுரோபில் ஆல்கஹால் (Isopropyl alcohol) 90% என்ற அளவில் கலந்து,
அறை முழுக்க தெளித்து விடலாம். ஐசோ ஃபுரோபில் ஆல்கஹால் என்பது ரசாயன
பொருள்தான். இதனால், பாதிப்பு ஏற்படாது என்று சொன்னாலும், எச்சரிக்கையாகவே
கையாள வேண்டும். கடைகளில் கிடைக்கும் கொசுவிரட்டி ஹீட்டரில், மாத்திரை
வைக்கும் பகுதியில் கற்பூரத்தை வைத்தாலும், கொசுக்கள் வராது. தற்போது
கிடைக்கும் கற்பூரங்களிலும் பெரும்பாலும் ரசாயனம் கலக்கப்படுகிறது என்பதை
மனதில் கொள்ளவும்.''
தொடர்புக்கு, தொலைபேசி: 044-23660675.

--- Thanks to PasumaiVikatan
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாயிகளின் நண்பன் » கேள்வி பதில் (விவசாயம், கால்நடை சம்மந்தமான கேள்வி பதில்கள்)
Search: