மதிப்புக்கூட்டும் கருவிகள்! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Jeniliya, Laya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாயிகளின் நண்பன் » மதிப்புக்கூட்டும் கருவிகள்! (நன்றி - பசுமை விகடன்)
மதிப்புக்கூட்டும் கருவிகள்!
RAWALIKADate: Wednesday, 25 Mar 2015, 11:04 PM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
மதிப்புக்கூட்டும் கருவிகள்!

ஆலோசனை கொடுக்கும் ஆராய்ச்சி நிலையம்!

நன்றி - பசுமை விகடன்

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் கீழ்... கர்நாடக மாநிலம், மைசூரில், மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் (Central Food Technological Research Institute-CFTRI) செயல்பட்டு வருகிறது. வேளாண் விளைபொருட்களுக்கான அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், மதிப்புக் கூட்டும் வழிமுறைகள், மதிப்புக் கூட்டும் கருவிகள், புதிய உணவு தானியப் பயிர்களை அறிமுகப்படுத்துதல், ஆலோசனைகள்... எனப் பல்வேறு வகையிலும் விவசாயிகளுக்கு உதவும் விதமாக இயங்கி வரும் இந்த நிலையம், பல்வேறு பயிற்சிகளையும் வழங்கி வருவது சிறப்பு!

 மத்திய உணவு ஆராய்ச்சி நிலைய வளாகம், மைசூர்



மைசூர் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பற்றிய விரிவான தகவல்களை தமிழக விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், அந்த மையத்துக்குச் சென்று வந்தோம். நம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் ராம்ராஜசேகரன், மையம் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் விரிவாகவே பேசினார்.



“இந்த மையம் 1950-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரதமரைத் தலைவராகக் கொண்டு இது செயல்பட்டு வருகிறது. உலகளவில் அதிக விற்பனை வாய்ப்புள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களைக் கண்டறிந்து... அதன் விதைகளை அறிமுகப்படுத்துகிறோம். மாறிவரும் உணவுப் பழக்கத்துக்கேற்ற பயிர்களையும், உணவுகளையும் கண்டறிந்து அவற்றை விளைவித்தல், அதை உணவுப் பண்டங்களாக மாற்றி பேக்கிங் செய்தல், அவற்றுக்கான கருவிகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவைதான் எங்களின் முக்கியப் பணி. இன்று நீங்கள் பயன்படுத்தும் மாவு அரைக்கும் மில் உபகரணங்களுக்கான மாதிரிகள் எல்லாமே 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து சென்றவையே. இதுவரை விவசாயம் சார்ந்த பணிகளுக்கு மறைமுகமாக பணியாற்றிக் கொண்டிருந்தோம். இப்போது நேரடியாக விவசாயிகளோடு தொடர்பு கொள்ளத் திட்டமிட்டிருக்கிறோம்.

ஆலோசனைகள் இலவசம்!

‘சியா’ என்ற எண்ணெய்வித்துப் பயிரையும், ‘கினாவோ’ என்ற சிறுதானியப் பயிரையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம். இரண்டு ரகங்களுமே தென்அமெரிக்க நாடுகள் மற்றும் மெக்சிகோவில் மானாவாரியாக விளையக்கூடியவை. உலகளவில் இந்த தானியங்களுக்கான சந்தை வாய்ப்பு பெரியளவில் உருவாகியுள்ளது. சியா என்ற எண்ணெய்வித்து தானியத்தில் கொழுப்புச் சத்துக் குறைவு. சிறுதானிய ரகமான கினோவாவில் 14% புரதம் இருக்கிறது. இதை, ‘அதிக புரதச் சத்து உள்ள தானியம்’ என்று ஐ.நா. சபை அங்கீகரித்து உள்ளது. இரண்டு ரகங்களும் ‘சூப்பர் ஃபுட்’ என்று உலகளவில் பிரபலமாகி வருகின்றன. ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் கினோவாவை வறட்சியான நிலங்களில் விவசாயிகள் பயிர் செய்து விளைவித்துள்ளனர். சமீபத்தில் விவசாயிகளுக்கு நடத்திய பயிற்சியில் மைசூரைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு இந்த தானியங்களைப் பயிர் செய்ய மாதிரிகளாகக் கொடுத்திருக்கிறோம்.



இங்கிருக்கும் கருவிகளைப் பயன்படுத்தி பலவித உணவு பொருட்களைத் தயாரிக்கலாம். இவற்றில் 65 தொழில்நுட்பக் கருவிகள் செயல்பாட்டில் இருக்கின்றன. இவ்வளவு கருவிகள் இருந்தாலும், தொழில் முனைவோரின் தேவைகளுக்கு ஏற்பவே கற்றுத் தருகிறோம். இயந்திரம் பழுதானால் அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதை சரி செய்வதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் கொடுத்து வருகிறோம். ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இயந்திரங்களை கூடுதல் திறனுள்ளதாக மாற்றம் செய்வதற்கு வேண்டிய தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்குகிறோம். எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருக்கும் கருவிகளை விவசாயிகள் பார்வையிடலாம். அதுபோன்ற கருவிகள் தேவையென்றால் அதற்கான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளையும் வழங்குவோம். உணவு உற்பத்தி, உணவுப் பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல் ஆகிய துறைகளுக்குத் தேவைப்படும் தொழில்நுட்பக் கருவிகளை வாங்குபவர்களுக்கு அதுகுறித்த விளக்கமும், ஆலோசனையும் வழங்கப்படும். ஏதாவதொரு உணவுப் பொருளைப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று வருபவர்களுக்கு ஆய்வுக் கருவிகளை வாடகைக்கும் தருகிறோம்” என்ற ராம்ராஜசேகரன், கருவிகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். 

பாலைப் பவுடராக்கும் கருவி!

“பாலைப் பவுடராக்கிப் பதப்படுத்தி விற்பனை செய்யும்போது கூடுதல் வருமானம் கிடைக்கும். 100 லிட்டர் பாலை இந்தக் கருவியில் ஊற்றினால், ஒன்பது கிலோ பால் பவுடர் கிடைக்கும்.  இதில், பழங்களையும் பதப்படுத்தி பவுடராக்க முடியும். உதாரணமாக 100 கிலோ தக்காளியில் இருந்து 6 கிலோ தக்காளி பவுடர் எடுக்க முடியும். காற்றை 150 டிகிரி வெப்பநிலைக்கு சூடாக்கி, அதை குழாய் வழியாக செலுத்தி பாலிலிருந்து பவுடர் எடுக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் ஒரு லிட்டர் பாலைப் பவுடராக்கும் கருவியின் விலை 5 லட்ச ரூபாய். ஒரு மணி நேரத்தில் 8 லிட்டர் பாலைப் பவுடராக்கும் கருவி 20 லட்ச ரூபாய். ஒரு மணி நேரத்தில் 30 லிட்டர் பாலைப் பவுடராக்கும் கருவி 24 லட்ச ரூபாய். இக்கருவிகள் எரிவாயு மூலம் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆவியாக்கும் கருவி!

எந்தவொரு பொருளையும் ஆவியாக்கி, அந்தப் பொருளிலிருந்து சாறு எடுத்துப் பயன்படுத்த இக்கருவி பயன்படுகிறது. இது, ஆரம்ப நிலை ஆவியாக்கும் கருவி, இரண்டடுக்கு ஆவியாக்கும் கருவி என்று இரண்டு விதங்களில் செயல்படுகிறது. தேவைக்கேற்ப இதன் விலை மாறுபடும். இவையும் எரிவாயு மூலமாக செயல்படும் கருவிகளும் தொழிற்துறையினருக்கு மட்டுமே உகந்ததாக இருக்கும்.

 
RAWALIKADate: Wednesday, 25 Mar 2015, 11:04 PM | Message # 2
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
வாசனை எடுக்கும் கருவி!

வீடுகளில் மட்டன், சிக்கன், மீன் ஆகியவற்றை சமைக்கும்போது மணம் கிளம்புவதை நுகர்ந்திருப்போம். அதேபோல மணத்தை (ஃபிளேவர்) திரவ வடிவில் தனியாகப் பிரித்தெடுத்து சேமிக்கும் பணியை இக்கருவி செய்கிறது. இக்கருவியில் நீராவியை உட்செலுத்தி இயக்க வேண்டும். இதில் 150 அன்னாசிப் பழங்களைத் துண்டு துண்டாக நறுக்கி இட்டு நீராவியை உட்செலுத்தினால், 150 மில்லி எசன்ஸ் கிடைக்கும். இது நீண்ட நாட்களுக்குக் கெடாது. மாம்பழம், திராட்சை என்று பலவித பழங்களிலிருந்தும் இப்படி எசன்ஸ் எடுக்கலாம். தேவைப்படும் உணவுப் பொருள்களில் ஒரு சொட்டு எசன்ஸை விட்டால், உணவுப்பொருள் முழுவதுக்கும் இந்த வாசனை வந்துவிடும். இந்த எசன்ஸ்கள் அதிக விலைக்கு விற்பனையாகின்றன. இப்போது பாஸ்மதி அரிசியிலிருந்து எசன்ஸ் எடுத்து, மற்ற அரிசிகளில் சமைக்கும் உணவுகளில் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் ஐஸ் க்ரீமில் இவ்வகை எசன்ஸ்கள் அதிகளவில் பயன்படுகின்றன” என்று விளக்கங்களைத் தந்தார், ராம்ராஜசேகரன். 

 
உருளை உலர்த்தி, நெல் அரைக்கும் கருவி, தோல் நீக்கி, பருப்பு அரைக்கும் கருவி என்று கருவிகளின் பட்டியல் நீளமே. இவற்றிலிருந்து சில கருவிகள் குறித்து, அடுத்த இதழில் பார்ப்போம்.

சியா, கினோவா சாகுபடி முறைகள்!

சியா, கினோவா ஆகியவற்றின் சாகுபடி முறைகள் பற்றி ராம்ராஜசேகரன் சொன்ன தகவல்கள் இங்கே...

“சியா, கினோவா ஆகியவற்றை ஜூன்-ஜூலை, அக்டோபர்-நவம்பர் மாதம் என இரு பருவங்களில் பயிரிடலாம். இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது சியாவை இறவையிலும், கினோவாவை மானாவாரியிலும் பயிர் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. நாங்கள் சோதனை அடிப்படையில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விளைவித்திருக்கிறோம். இயற்கை முறையிலும் இதை விளைவிக்க முடியும்” என்று சொன்னவர், இயற்கை முறை விவசாயத்துக்கான பரிந்துரைகளைத் தந்தார்.

சியா!

“சியாவை சதுரப்பாத்திகளில் நாற்று விட்டு வளர்த்து, நடவு செய்யும்போது அதிக விளைச்சல் கிடைக்கும். மண்ணை நிலத்தடி மட்டத்திலிருந்து அரை அடிக்கு உயர்த்தி பொலபொலப்பாக்கி 100 கிராம் சியா தானியத்தை (ஒரு ஏக்கருக்கு) 300 கிராம் நிலத்து மண்ணோடு கலந்து சமமாகத் தூவ வேண்டும். நிலத்தின் வளத்தைப் பொறுத்து தேவையான அளவு மண்புழு உரத்தை இடலாம். தொடர்ந்து மண்ணில் ஈரப்பதம் இருக்கும்படி தண்ணீர் தெளித்து வந்தால்... 4 நாட்களில் விதை முளைத்து வெளியே வந்து விடும். 21 நாட்களில் நாற்றுகளைப் பறித்து நடவு செய்ய வேண்டும்.



நிலத்தை 4 சால் உழவு ஓட்டி, ஏக்கருக்கு 4 டன் தொழுவுரத்தைக் கொட்டி பரப்பி... தக்காளிக்கு பாத்திகள் அமைப்பது போன்று அமைத்து செடிக்கு செடி அரை அடி இடைவெளி, வரிசைக்கு வரிசை இரண்டு அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். அக்டோபர்-நவம்பர் மாத பருவமென்றால் செடிக்குச் செடி ஒன்றரை இடைவெளி தேவை. மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்யவேண்டும். 15 நாட்களுக்கு மேல் களையெடுத்து செடிக்குச் செடி ஒரு கைப்பிடி அளவு மண்புழு உரத்தை இட்டு தண்ணீர் விட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை 100 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். பெரும்பாலும் பூச்சித் தாக்குதல் இருக்காது. அப்படி இருந்தால் 10 லிட்டர் தண்ணீரில், 50 மில்லி வேப்பெண்ணெய், 20 கிராம் காதிசோப் கலந்து தெளிக்கலாம். 40 முதல் 55 நாட்களில் பூக்கள் பூக்கும். அதிலிருந்து ஒரு மாதத்துக்குள் விதைகள் உருவாகி அறுவடைக்குத் தயாராகி விடும். செடியோடு அறுவடை செய்து தானியத்தைப் பிரித்தெடுத்து காயவைத்து சேமித்து விற்கலாம். ஏக்கருக்கு 350 கிலோ முதல் 400 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

கினோவா!

கினோவோ வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ரகம். மணல் கலந்த இருமண் பாங்கில் நன்றாக வளரக்கூடியது. நிலத்தை 2 சால் உழவு ஓட்டி. ஏக்கருக்கு 4 டன் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்ப வேண்டும். தொழுவுரம் இல்லையென்றால், 2 டன் மண்புழு உரத்தைப் பயன்படுத்தலாம். மானாவாரியில் தூவி விதைக்கும் முறையில் ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். நிலக்கடலை விதைப்பது போன்று விதைத்தால் 500 கிராம் விதை போதுமானது. நிலத்தில் சால் விடுவது போன்று விதைக்கும்போது 2 கிலோ மண், 1 கிலோ மண்புழு உரத்தோடு கலந்து விதைத்து மண்ணை மூடி விட வேண்டும். மண்ணில் போதுமான ஈரப்பதம் இருந்தால், விதைத்த 24 மணி நேரத்தில் முளைக்க ஆரம்பித்து விடும். 5 முதல் 7 நாட்களுக்குள் பயிர் முளைத்து வெளியே வந்துவிடும்.

பிறகு, செடிக்குச் செடி ஒன்றரை அடி இடைவெளியும், வரிசைக்கு வரிசை 2 அடி இடைவெளியும் இருக்குமாறு செடிகளைக் களைத்து விட வேண்டும். பிறகு, செடிக்குச் செடி ஒரு கைப்பிடி வீதம் மண்புழு உரத்தை இடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். இதிலும் பூச்சித் தாக்குதல் இருக்காது. இருந்தால், வேப்பெண்ணெய் கரைசல் தெளிக்கலாம். விதைத்து 90 முதல் 120 நாட்களில் செடி வளர்ச்சி அடைந்து விதை பெருக்கமடைந்து விடும். தானியத்தை அழுத்திப் பார்த்தால் கடினமாக வெளிர் மஞ்சள் நிறத்திலும், இலைகள் சிவப்பு நிறத்திலும் மாறினால் அறுவடை செய்து விடலாம்.



தானியங்களைப் பிரித்து, சுத்தம் செய்து காயவைத்து, சேமித்து வைத்து விற்கலாம். இது அதிக முளைப்புத்திறன் கொண்டது என்பதால், காலதாமதம் இல்லாமல் அறுவடை செய்து விட வேண்டும். இது மானாவாரி என்பதால், ஏக்கருக்கு 250 கிலோ முதல் 300 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இதுவே, இறவைப் பாசனம் என்றால், 500 கிலோ முதல் 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும்”என்ற ராம்ராஜசேகரன்,“இந்தப் பயிர்களுக்குத் தற்போதைக்கு இந்தியாவில் விற்பனை வாய்ப்பு பெரிதாக இல்லை. ஆனால், வெளிநாடுகளுக்கு ஏற்றமதி செய்யமுடியும். அதைப் பற்றி விரிவாக தெரிந்து கொண்டு, இதைப் பயிர் செய்வது நல்லது. இதைப் பற்றிய ஆலோசனைகளை நாங்கள் தரமுடியும்” என்று சொன்னார்

‘அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தலாம்’’

‘‘இந்தியாவில் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகவே இந்த தானியங்கள் இங்கே அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஏற்கெனவே நம்முடைய பாரம்பர்ய சிறுதானியங்கள் இருந்தாலும் கூடுதல் புரதச்சத்துக்கும், விளைச்சலுக்கும் இந்த தானியத்தைப் பரிந்துரை செய்கிறோம். கினோவாவை அரிசிக்கு மாற்றாக அனைத்து உணவுப் பொருட்களிலும் பயன்படுத்தலாம்.

இட்லி, தோசை உள்ளிட்ட பலவகையான உணவுப் பொருட்களாகச் செய்து சாப்பிடலாம். சியா தானியத்தை மீன் எண்ணெய்க்கு பதிலாக பயன்படுத்தலாம். மூளை வளர்ச்சிக்கென்று மாத்திரைகளை சாப்பிடும் காலமிது. அதற்கு பதிலாக தினமும் 10-15 கிராம் தானியத்தைச் சாப்பிடலாம். பேக்கரி, ஐஸ்கிரீம் தயாரிப்புகளிலும் இதைப் பயன்படுத்தலாம். இந்தியாவில் இதற்கான சந்தை இப்போதுதான் வளர்ந்து கொண்டிருக்கிறது” என்றார் ராம்ராஜசேகரன்.

தொடர்புக்கு,

Head, Information & Publicity,

CFTRI, Mysore- 570020

Telephone : 0821-2514534 / 2515910

E-mail :ttbd@cftri.res.in

Website :www.cftri.res.in

 
த.ஜெயகுமார்

 படங்கள்: க.தனசேகரன்
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாயிகளின் நண்பன் » மதிப்புக்கூட்டும் கருவிகள்! (நன்றி - பசுமை விகடன்)
  • Page 1 of 1
  • 1
Search: