கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 1 - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Forum moderator: Jeniliya  
கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 1
RAWALIKADate: Saturday, 21 Jun 2014, 2:47 PM | Message # 11
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
இதில் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு - (Corporate Social Responsibility-CSR) என்பது, இன்று முக்கியமாகப் பேசப்படுகிறது. பெரு நிறுவனங்கள் தங்களது வருமானத்தின் குறிப்பிட்ட சதவிகிதத்தை சமூகநலப் பணிகளுக்காகச் செலவிடுவதை வலியுறுத்துவதுதான் சி.எஸ்.ஆர். உதாரணத்துக்கு, கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலை நிறுவனம் ஒன்று, அங்குள்ள பள்ளிகளுக்கு தனது சி.எஸ்.ஆர். நிதியத்தில் இருந்து நிதி உதவி செய்கிறது. இதனால் அந்த நிறுவனத்துக்கு நற்பெயர் கிடைக்கிறது. ஆனால், இதன் மூலம் சிப்காட் வளாகத்தில் அந்த நிறுவனத்தால் சீரழிக்கப்பட்ட மண்வளமும் நீர்வளமும் மறக்கடிக்கப்படுகின்றன. தூத்துக்குடியில் சூழல் சீர்கேட்டு சர்ச்சைகளுக்குப் பெயர்போன ஒரு நிறுவனம், மதுரை கண்மாய் ஒன்றைத் தூர்வார நிதி அளித்துள்ளது. இப்படி சி.எஸ்.ஆர் என்பது, பெரு நிறுவனங்கள் தங்களின் தவறுகளை மறைத்துக்கொள்ளும் புதிய முகமூடியாக உருவெடுத்துள்ளது. தவறே செய்யவில்லை என்றாலும், தனது வரம்பற்ற லாபவெறி மக்களிடம் எதிர்மறை எண்ணத்தை உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காக அவர்களே முன்வந்து நன்கொடை அளிக்கின்றனர். அடாவடி மன்னன் ஆண்டுக்கு ஒரு முறை உப்பரிகையில் நின்று அள்ளி வீசும் சில்லறைக் காசுகள் என்றும் கூறலாம்.

தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் எண்ணிக்கை வெறும் 499-தான். ஆனால், இந்த பி.பி.பி முறை, ஒரே ஆண்டில் புதிதாக 358 சி.பி.எஸ்.இ. பள்ளிகளை உருவாக்கி உள்ளது. எனில் மொத்த சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் எண்ணிக்கை 857. அடுத்தடுத்த ஆண்டுகளில் பி.பி.பி பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், இன்னும் ஐந்து, பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திரும்பிய திசை எங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மட்டுமே நிறைந்திருக்கும். ஏற்கெனவே சமச்சீர் கல்விமுறை வந்த பிறகு அரசுப் பள்ளிகளுக்கும், மெட்ரிக் பள்ளிகளுக்கும் இருந்த வித்தியாசம் ஒழிக்கப்பட்டுவிட்டது. 'நாங்கல்லாம் வேற’ என்று சொல்லிக்கொள்ள முடியாத நிலையில் எப்பாடுபட்டாவது சி.பி.எஸ்.இ. முறைக்கு மாறிவிட மெட்ரிக் பள்ளிகள் மெனக்கெடுகின்றன. அவர்களுக்கு இது ஓர் நல்வாய்ப்பு. அதுவும் அரசாங்கமே நிதியை அள்ளித் தருகிறது என்ற நிலையில் நான், நீ என்று போட்டிப்போடுகின்றனர்!

- பாடம் படிப்போம்...


வாஜ்பாயில் தொடங்கி சிங் வரை...

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பல்வேறு துறைகளிலும் பி.பி.பி. முறையைக் கொண்டுவருவதற்காக ஒரு குழுவே அமைக்கப்பட்டது. பிறகு அந்தக் குழு திட்டக் குழுவுக்கு மாற்றப்பட்டது. 2004-ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோதும் அதே குழு நீடித்தது. 2007-ம் ஆண்டு செப்டம்பரில் 'கல்வியில் அனைத்து மட்டங்களிலும் அரசு - தனியார்- கூட்டு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ மன்மோகன் சிங் அறிவித்து, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் தங்குதடையில்லாமல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது!
 
RAWALIKADate: Saturday, 21 Jun 2014, 2:55 PM | Message # 12
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 6


பாரதி தம்பி, படம்: தி.விஜய்

பயணச்சீட்டு வாங்காமல் பேருந்தில் போனால், 500 ரூபாய் அபராதம். பயணச்சீட்டு வாங்கியும் அடையாள அட்டை இல்லாமல் ரயிலில் போனால், அதற்கும் அபராதம். ஆனால், ஒரு மாநிலத்தின் தலைநகரத்தில், எந்தவித அனுமதியும் வாங்காமல் ஐந்து ஆண்டுகளாக பள்ளிக்கூடம் நடத்தியவர்களை நமது நீதி-நிர்வாக அமைப்பால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஒன்று அல்ல; இரண்டு அல்ல... 36 பள்ளிக் கூடங்கள். 'செட்டிநாடு ஏ ஸ்கூல்’ என்ற பெயரில், 2009-ம் ஆண்டில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டன. சி.பி.எஸ்.இ முறைப்படி செயல்படுவதாகச் சொல்லிக்கொண்ட போதிலும், அப்படி எந்த அனுமதியும் பெறப்படவில்லை. கட்டட அனுமதி முதல் சுகாதாரத் துறை அனுமதி வரை எதுவுமே வாங்கவில்லை; வாங்க முயற்சிக்கவும் இல்லை.வாங்கியவை எல்லாம் ஆயிரம் ஆயிரமாகக் கல்விக் கட்டணம் மட்டும்தான். ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகள் இந்தப் பள்ளிகளில் நடத்தப்பட்டன. 36 பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 3,397 மாணவர்கள் படித்தனர் (இது, பள்ளி நிர்வாகம் சொல்லும் கணக்கு. உண்மை எண்ணிக்கை வேறாகவும் இருக்கலாம்). செட்டிநாடு குழுமக் கல்வி நிறுவனங்கள் புகழ்பெற்றவை என்பதாலும், அதன் மீது உயர்வர்க்க பெற்றோர்களுக்கு அளவு கடந்த மோகம் இருப்பதாலும் இந்தப் பள்ளிகளிலும் அது எதிரொலித்தது. ஏராளமானோர், போட்டி போட்டுக்கொண்டு தங்கள் பிள்ளைகளைச் சேர்த்தனர்.



விண்ணப்பப்படிவம் 1,800 ரூபாய், சேர்க்கைக் கட்டணம் 9,000 ரூபாய், பருவக் கட்டணம் 27,000 ரூபாய், ஸ்நாக்ஸ் 450 ரூபாய், பள்ளி வாகனக் கட்டணம் 6,900 ரூபாய் என்று ஏகப்பட்ட கட்டணங்கள். எனினும், எல்லோரும் வசதி படைத்தவர்கள் என்பதால், அவர்களுக்குப் பணம் ஒரு பொருட்டாக இல்லை. 'குழந்தைகளுக்கு அபாக்கஸ், சமையல் பயிற்சி, இ-மெயில் முகவரி உருவாக்குதல் போன்றவற்றுக்காக மேலும் 9,800 ரூபாய் கட்ட வேண்டும்’ என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் கேட்டபோது பெற்றோர்கள் கொந்தளித்தனர். 'பிஞ்சுக் குழந்தைக்கு சமையல் பயிற்சியா, இ-மெயில் முகவரி உருவாக்க 10 ஆயிரமா?’ என்று கடுப்பானார்கள். அதைத் தொடர்ந்து பள்ளிக்கு அனுமதி வாங்கப்படவில்லை என்பதையும் தெரிந்துகொண்டனர். பெற்றோர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். பிறகு, 13 மாணவர்களின் பெற்றோர்கள் நீதிமன்றத்துக்கு சென்றனர். இந்த வழக்கில் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க, நீதிபதிகள் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட விளக்கத்தில், 36 பள்ளிகளும் மூடப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.பள்ளிகள் மூடப்பட்டது சரிதான். ஆனால், இதுவரை அனுமதி இல்லாமல் பள்ளிக்கூடம் நடத்தியதற்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படவில்லை. கூவம் கரையோரத்தில் 50 ரூபாய்க்குக் கஞ்சா பொட்டலம் விற்பவன் சமூக விரோதி என்றால், அனுமதி இல்லாமல் 36 பள்ளிக்கூடங்கள் நடத்தி, ஏறக்குறைய 3,000 பிஞ்சு குழந்தைகளின் வாழ்க்கையோடு விளையாடும் இவர்களுக்கு என்ன பெயர்? இத்தகைய கிரிமினல்கள் நடத்தும் பள்ளிகளில், தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று தவமாய்த் தவம் இருக்கும் உயர் நடுத்தர வர்க்கம்தான், அரசுப் பள்ளிகளைப் பற்றி அவதூறு செய்கிறது.முறைகேடான வகையில் ஒவ்வொன்றாக 36 பள்ளிகள் தொடங்கப்படும் வரை, கல்வித் துறை அதிகாரிகள் எல்லோரும் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்களா? அப்படிக் கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் என்ன? இத்தனைக்கும் பல பெற்றோர்கள், முன்பே புகார் கொடுத்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு, இந்தச் செட்டிநாடு ஏ பள்ளிகள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இவை எவற்றையும் பள்ளி நிர்வாகத்தினர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மாட்டிக்கொண்டால் அவமானப்பட வேண்டியிருக்குமே என்ற தயக்கம்கூட இல்லை. சொல்லப்போனால், சட்டத்தையும் அரசாங்கத்தையும் கால் தூசுக்குச் சமமாக மதித்துள்ளனர். இல்லையெனில், முறைகேடான இத்தனை பள்ளிகளை நடத்தும் நெஞ்சழுத்தம் அவர்களுக்கு எங்கு இருந்து வரும்?

இதில் பெற்றோர் தரப்பும் கடும் விமர்சனத்துக்கு உரியவர்களே. பள்ளியின் தரம், ஆசிரியர்கள் இருக்கிறார்களா, போதுமான வசதிகள் இருக்கின்றனவா... என எதையுமே பார்க்காமல் வெறுமனே பிராண்ட் மோகத்தினால் இத்தகைய பள்ளிகளைத் தேர்வு செய்துள்ளனர். இத்தனைக்கும் இவர்கள் யாரும் படிக்காதவர்கள் அல்லர். படித்த, வசதி படைத்த, சமூகக் கௌரவம்மிக்க மேல்நிலை மக்கள்தான் இத்தகைய படுகுழியில் பணம் கொடுத்து விழுந்துள்ளனர். இப்போது நீதிமன்றம், 'ஒவ்வொரு மாணவருக்கும், இடைக்கால நிவாரணமாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்’ எனக் கூறியுள்ளது. உண்மையில், பெற்றோர்கள் கட்டிய பணம், இதைவிட பல மடங்கு அதிகம். அது எதற்கும் பில் கொடுத்திருக்க மாட்டார்கள். 'அந்தப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும்’ என்று எந்தப் பெற்றோரும் கேட்கப்போவதும் இல்லை. 'இவங்ககிட்டப் போய் யாருங்க அலைஞ்சுகிட்டு இருக்கிறது? போய்த் தொலையுதுனு விடவேண்டியதான்!’ என்று சொல்வார்கள். திருடியப் பணத்தைத் திருடனிடம் இருந்து திருப்பி வாங்காதது, பெருந்தன்மை அல்ல; கோழைத்தனம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.''நான் விட மாட்டேன். என் மகனின் எல்.கே.ஜி படிப்புக்கு, சுமார் 40 ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளேன். அவ்வளவு பணத்தையும் வாங்கிக்கொண்டு மோசமாக அவமானப்படுத்தினார்கள். புகார் என்று பள்ளிக்குப் போனால் பதில் வராது. மெயில் அனுப்பச் சொல்வார்கள். எத்தனை மெயில் அனுப்பினாலும் பதில் வரவே வராது'' என்கிறார் செட்டிநாடு ஏ பள்ளியில் தன் மகனைப் படிக்க வைத்திருந்த விலாசினி.

இந்தப் பள்ளி மட்டுமல்ல... மாநிலம் முழுவதும் இப்படி அங்கீகாரம் பெறாத ஏராளமான பள்ளிகள் செயல்படுகின்றன. சமீபத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதி பெறாத 42 மழலையர் பள்ளிகளைத் தடைசெய்து கல்வித் துறை உத்தரவிட்டது. கோவை மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத 49 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் தொடர் அனுமதி பெற வேண்டும். பல பள்ளிகள் இதைச் செய்வது இல்லை. அதே போல, 'நாங்கள் சி.பி.எஸ்.இ முறைப்படிதான் பள்ளி நடத்துகிறோம். மத்திய கல்வி வாரியத்திடம் அனுமதி வாங்கினால் போதும்’ என்றும் சொல்ல முடியாது. சி.பி.எஸ்.இ என்றாலும், மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். பள்ளி நடத்தும் அனுமதிபோக, கட்டடச் சான்று, சுகாதாரச் சான்று, தீ தடையில்லாச் சான்று, பள்ளியின் வரைபடச் சான்று, பள்ளியின் தணிக்கை அறிக்கை, விளையாட்டு மைதானப் பத்திரம் அல்லது ஒப்பந்தம்... என ஏராளமானச் சான்றுகளைப் பள்ளி நிர்வாகம் அளிக்க வேண்டும். சான்று என்றால், வெறுமனே கையெழுத்து இட்ட காகிதத்தைக் காட்டும் சடங்கு அல்ல. விளையாட்டு மைதானச் சான்று என்றால், உண்மையாகவே மைதானம் இருக்க வேண்டும். ஆனால், யதார்த்தம் என்ன?

கடந்த பிப்ரவரி மாதம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், அரசுத் தரப்பில் கூறப்பட்ட தகவல் இது... 'நகரமைப்புத் துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். அதன்படி தோராயமாகக் கணக்கிட்டதில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2,906 பொறியியல், மருத்துவ, துணை மருத்துவ, கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் வெறும் 45 கல்லூரிகள் மட்டுமே கட்டடங்கள் கட்ட நகரமைப்புத் துறையிடம் அனுமதி பெற்றுள்ளன. இதுபோக, 17 ஆயிரம் பள்ளிகள் கட்டட அனுமதி பெறவில்லை’ என்கிறது அந்தத் தகவல். ஒன்று அல்ல, இரண்டு அல்ல... '17 ஆயிரம் பள்ளிகள், கட்டட அனுமதி பெறவில்லை’ என்று அரசே சொல்கிறது. இதுதான் நம் ஊரில் பள்ளிக்கூடம் நடத்தும் லட்சணம்.

 
RAWALIKADate: Saturday, 21 Jun 2014, 2:55 PM | Message # 13
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
கட்டட அனுமதி என்பது என்ன?

பிஞ்சுப் பிள்ளைகள் படிக்கும் இடம் வசதியானதாக, காற்றோட்டமானதாக, ஆபத்து என்றால் உடனே வெளியேறும் வசதி உடையதாக... எனப் பல விஷயங்கள் அதில் இருக்கின்றன.

கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட சம்பத் கமிஷன் அறிக்கை, பல பரிந்துரைகளை வழங்கியது. மூன்றாம் வகுப்பு வரையிலும் கண்டிப்பாக தரை தளத்தில்தான் இருக்க வேண்டும். மாடியில் இருக்கக் கூடாது. மாடிப் படிக்கட்டுகள் 16-க்கு மேல் இருக்கக் கூடாது. ஒரு கட்டடத்தில் அதிகபட்சம் இரண்டு தளங்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு வகுப்பறைக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் இருக்க வேண்டும். தூய்மையான குடிநீர், போதுமான கழிப்பறை வசதிகள் இருக்க வேண்டும். விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். பள்ளியின் நுழைவாயில் நெடுஞ்சாலையில் இருக்கக் கூடாது. குளம், காடுகளுக்கு அருகில் பள்ளிக்கூடம் இருக்கக் கூடாது. பள்ளிக் கட்டடத்தைச் சுற்றி சுவர் இருக்க வேண்டும்... எனப் பல பரிந்துரைகள். இவற்றை, பெரும்பாலான பள்ளிகள் கடைப்பிடிப்பதே இல்லை என்பது வெளிப்படை. பல பள்ளிகள், முட்டுச் சந்துகளிலும், காற்றுப் புக வழி இல்லாத நெருக்கடியான இடங்களிலும்தான் செயல்படுகின்றன. இது ஒன்றும் ரகசியம் அல்ல, எல்லோருக்கும் தெரிந்துதான் நடக்கிறது. எந்த அதிகாரி வந்து நடவடிக்கை எடுத்தார்? இத்தனைக்கும் அதிகாரிகளுக்குப் பஞ்சம் இல்லை. கல்வி ஆய்வாளர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், துணை இயக்குநர், இணை இயக்குநர், இயக்குநர்... என்று ஏகப்பட்ட பேர். பள்ளிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதைக் காட்டிலும், இவர்களுக்கு வேறு என்ன வெட்டிமுறிக்கும் வேலை என்றுதான் தெரியவில்லை!

- பாடம் படிப்போம்...


பள்ளிகள் ஏலம்!

மும்பை மாநகராட்சியால் நடத்தப்படும் 'பி.எம்.சி பள்ளிகள்’ மகாராஷ்டிராவில் புகழ்பெற்றவை. மொத்தம் உள்ள 1,174 பி.எம்.சி பள்ளிகள், எட்டு பயிற்று மொழிகள், 11,500 ஆசிரியர்கள், நான்கு லட்சம் மாணவர்கள்... என இதன் பலம் மிகப் பெரியது. கல்விக்காக அதிகம் செலவிடும் மாநகராட்சியில், மும்பைக்கு எப்போதும் முதல் இடம். கடந்த ஆண்டு செலவிட்ட தொகை 2,342 கோடி ரூபாய். மும்பையின் கல்வி வரலாற்றில் இந்தப் பள்ளிகளுக்கு முக்கியமான இடம் உண்டு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் பெரும் வீழ்ச்சி. இதைக் காரணம் காட்டி, ஒட்டுமொத்த பி.எம்.சி பள்ளிகளையும் பி.பி.பி (Public-Private-Partnership) முறையில் தனியாருக்குக் கொடுக்க முடிவு எடுத்துள்ளது மும்பை மாநகராட்சி. பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், கடந்த ஜனவரியில் திடீரென இந்த அறிவிப்பு வெளியானது. இப்போது பள்ளிகளை, தனியாருக்கு ஒதுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐ.பி.எல் அணி வீரர்களை ஏலம் விடுவதைப் போல பி.எம்.சி பள்ளிகள் ஏலம் விடப்படும். தனியார் நிறுவனங்கள் இதில் பங்கேற்று பள்ளிகளைப் பெறலாம்.

''மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது, அதனால் தனியாரிடம் கொடுக்கிறோம் என்பதை ஏற்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாகவே பி.எம்.சி பள்ளிகளை, பி.பி.பி முறையில் நடத்துவது குறித்து பல என்.ஜி.ஓ-க்கள் பேசி வருகின்றன. அதுமட்டுமல்ல, முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது கடந்த இரு ஆண்டுகளாக பி.எம்.சி பள்ளிகளுக்குச் செலவிடப்படும் தொகை திடீரென அதிகரித்துள்ளது. தனியாருக்குத் தரப்போவதை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு, மக்கள் பணத்தில் பள்ளிக்கான உள்கட்டமைப்பு வேலைகளைச் செய்துள்ளனர். இது மோசடியானது'' என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், புகழ்பெற்ற கல்வியாளருமான டாக்டர் சடகோபால்.
 
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Search: