RAWALIKA | Date: Tuesday, 26 Aug 2014, 1:26 PM | Message # 1 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| எங்கே 'செல்'லும் இந்த 'செல்ஃபி'?!
'செல்ஃபி... 2013-ம் ஆண்டுக்கான பிரபல வார்த்தை' (word of the year) என்று 'ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷ்னரீஸ்' அறிவிக்கும் அளவுக்கு தீயாக பரவிக்கொண்டிருக்கிறது.
'இன்ஸ்டாகிராம்’ எனும் புகைப்படத் தளத்தில் உலக அளவில் தினசரி 200 மில்லியன் புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன. இதில் ஒரு மில்லியன் புகைப்படங்கள், 'செல்ஃபி' (selfie) எனப்படும் தங்களைத் தாங்களே எடுத்துக்கொள்ளும் வகையைச் சேர்ந்தவை. 91 சதவிகித இளைஞர்கள் தங்களது செஃல்பி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள். குறிப்பாக, பெண் களிடையே அதீதமாக பிரபலமடைந்து வருகிறது இந்த 'செல்ஃபி’ கலாசாரம்!
'இதில் அப்படி என்னதான் சுவாரஸ்யம்?' என்று சென்னையைச் சேர்ந்த எம்.சி.சி கல்லூரி பெண்கள் சிலரிடம் கேட்டோம்.
''எங்கயாவது வெளியில போனா, அன்னிக்கு ரொம்ப அழகா இருக்கிறதா ஃபீல் பண்ணினா அல்லது எதுவுமே நடக்காம போரடிச்சா... இப்படி எல்லா தருணங்கள்லயும் செல்ஃபி எடுக்கிறதுதான் இன்னிக்கு டிரெண்ட். நம்மை நாமே எடுத்துக்கிற இந்த 'செல்ஃபி’ போட்டோவால என்ன கிடைக்குதுனு கேட்டா... என்னத்த சொல்றது?! அந்த செல்ஃபியில அழகா, அசிங்கமா, மொக்கையானு எப்படி இருந்தாலும், அதைப் பார்த்து என்ஜாய் பண்றது ஒரு தனி ஃபீல் தெரியுமா!'' என்று கண்ணடிக்கிறார் ஃபர்ஸ்ட் இயர் விஸ்காம் படிக்கும் ஜென்னிடா.
''செல்ஃபி எடுக்கிறது மட்டுமில்ல, அதை அப்படியே சுடச்சுட அப்லோட் பண்றதுதான் விஷயமே!''னு விஸ்காம் செகண்ட் இயர் படிக்கிற தாருண்யா எடுத்துரைக்க, ''கமென்ட்ஸ், லைக்ஸ் சும்மா அள்ளும்ல..!'' என்று தன் ஃபேஸ்புக் அக்கவுன்ட் காட்டுகிறார் ஃபர்ஸ்ட் இயர் விஸ்காம் படிக்கும் மேக்னா. ''முன்ன எல்லாம் தனியாவோ, குரூப்பாவோ ஒரு போட்டோ எடுக்க, யாருடா எடுத்துக் கொடுப்பானு காத்திருக்கணும். ஆனா, தன் கையே தனக்கு உதவினு புரிய வெச்சிடுச்சு இந்த செல்ஃபி டிரெண்ட். கூடவே இது எல்லாரையும் கிரியேட்டிவ் போட்டோகிராஃபர் ஆக்கிடுச்சு'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் நேத்ரா. இவரும் ஃபர்ஸ்ட் இயர் விஸ்காம்தான்.
இப்படி உலகமே கொண்டாடும் இந்த செல்ஃபியை ஆபத்தாக நினைக்க வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதுதான் கவலை தருவதாக இருக்கிறது. சமீபத்தில் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், தன் கணவர், மற்றும் இரண்டு குழந்தைகளோடு வார இறுதி நாளில் வெக்கேஷன் சென்றிருக்கிறார். அங்கு மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுத்திருக்கிறார். கீழே அதல பாதாளத்தில் கடல் இருப்பதை அவர் கவனிக்காமல் இல்லை. இருந்தும் செல்ஃபி சுவாரஸ்யம் அவரை உந்த, கால் சறுக்கி கணவன், மனைவி இருவரும் குழந்தைகளின் கண் முன்னே அதலபாதாளத்தில் விழுந்து இறந்து போயிருக்கிறார்கள். மெக்சிகோவைச் சேர்ந்த ஒருவர், துப்பாக்கியை தன் முன்னே வைத்து செல்ஃபி எடுத்தபோது, தோட்டா போட்டிருந்ததை மறந்து கை தவறி டிரிக்கரை அழுத்தியதால் இறந்து போயுள்ளார். இதேபோல இந்தியாவின் கேரளாவில் ஆகஸ்ட் 12-ம் தேதி ஷொரனூர் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூட்ஸ் ரயிலின் மீது ஏறி செஃல்பி எடுக்க முற்பட்டிருக்கிறான் பள்ளியில் படித்து வந்த ஒன்பது வயது ஷிகாபுதீன். அப்போது தலைக்கு மேலே போய்க்கொண்டிருந்த 250 கிலோவாட் மின்சார ஒயரில் சிக்கி உயிரிழந்தான்.
ஆசையில் துவங்கி விபரீதத்துக்குள் போய் முடியும் இந்த செல்ஃபி கலாசாரம் பற்றி சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் சங்கரசுப்பு சரவணனிடம் கேட்டோம்.
''மற்றவர்களின் உதவி, தலையீடு இன்றி உங்கள் புகைப்படங்களை, அதன் வாயிலாக உங்கள் எண்ணங்களை, விருப்பங்களை, குணத்தை எப்படி பகிர்ந்துகொள்ள நினைக்கிறீர்களோ, அப்படி பகிர்ந்துகொள்ள வழிவகுக்கிறது செல்ஃபி. வாழ்க்கையின் முக்கிய நினைவுகளைப் பதிவுசெய்ய, விருப்பமானவர்களுடன் பகிர்ந்துகொள்ள, மன நிலையை பிரதிபலிக்க என்று இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் முக்கியமாகிறது. இப்படி காரணம் எதுவாக இருந்தாலும், உங்களைச் சந்தோஷப்படுத்தவும், உங்கள் வாழ்வை மேன்மைப்படுத்தவும் அது பயன்படுகிறது என்றால், அதில் தவறில்லை. உதாரணமாக, 125 செல்ஃபிகளை எடுத்த ஒரு பெண் மாடல், 'எவர் உதவியுமின்றி ஃபேஷன் உலகில் நுழைய இது எனக்கு உதவியது' என்று பெருமையோடு குறிப்பிட்டிருப் பதையே எடுத்துக்கொள்ளலாம்.
மனோதத்துவரீதியாக நோக்கும்போது, பிறருடைய கவனம், அங்கீகாரம் மற்றும் பாராட்டுகளைக் குறிவைத்து எடுக்கப்படும் செல்ஃபிகள் அநேகம். ஃபேஸ்புக்கில் செல்ஃபி அப்லோட் செய்பவர்கள், அதற்கு வரும் 'லைக்’ மற்றும் 'கமென்ட்’களை எதிர்பார்த்துக் காத்திருப்பது கண்கூடு. எதிர்பார்த்தது போலவே பின்னூட்டங்கள் கிடைக்கும்போது, அது பகிர்தலுக்கு ஆள் தேடும் அவர்களின் மனநிலைக்கு வடிகாலாக அமைகிறது. அது கிடைக்காதபோது, மன உளைச்சலைத் தருகிறது. இவ்வகை மன உளைச்சல், குறிப்பாக இளம் வயதினரிடம் சமீபமாக அதிகளவில் அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். இது ஆபத் தான போக்கு'' என்று சொன்ன சங்கரசுப்பு,''மொத்தத்தில், செல்ஃபி என்பது ஒரு வகை டெக்னாலஜிக்கல் கலாசார பரிணாமம். இதனால் ஏற்படும் விபத்துகள் அவரவருடைய குணத்தினாலும், அலட்சியத்தாலும் ஏற்படுபவையே. அதீத செல்ஃபி மோகம்... ஆபத்தின் எச்சரிக்கையாகவும் இருக்கலாம் என்பதை உணர்ந்தாலே உஷாராகிவிடலாம்'' என்று வார்த்தைகளில் அக்கறை சேர்த்தார்.
உணர்வோம்... உஷாராவோம்!
- அ.பார்வதி
படங்கள்: டி.ஆரோன் பிரின்ஸ் காட்ஸன்
|
|
| |