தனியே குழந்தை... தவிக்கும் மனசு! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » சிந்தனை களம் » சிந்தனை களம் » தனியே குழந்தை... தவிக்கும் மனசு! (Thanks - Vikatan)
தனியே குழந்தை... தவிக்கும் மனசு!
RAWALIKADate: Tuesday, 26 Aug 2014, 2:15 PM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
தனியே குழந்தை... தவிக்கும் மனசு!


ஒரு சென்டிமென்ட் அலசல்

ம.பிரியதர்ஷினி, படங்கள்: கு.கார்முகில்வண்ணன், இரா.யோகேஷ்வரன்  

உலக அளவில் கோலோச்சிக்கொண்டிருக்கும் 'பெப்சிகோ’ குளிர்பான நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் (சி.இ.ஓ) பொறுப்பில் இருப்பவர் நம்மூர் பெண்ணான இந்திரா நூயி. இவர் சமீபத்தில் 'தி அட்லான்டிக்’ என்கிற ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி, உலக அளவில் பலராலும் கவனிக்கப்பட்டது... பரபரப்புடன் அலசவும்பட்டது.

''எனக்குத் திருமணமாகி 34 வருடங்கள் ஆகின்றன. தினமும் காலையில் எழுந்துகொள்ளும்போது, 'இன்றைக்கு அம்மாவாக இருக்கப் போகிறோமா... அலுவலகத் தலைவியாக இருக்கப் போகிறோமா...’ என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு உங்களுடன் இருப்பவர்களும், உங்கள் குடும்பமும் ஒத்துழைத்தால் மட்டுமே டீசன்ட் பேரன்ட்டாக இருக்க முடியும். ஆனால், என் மகளிடம் கேட்டால் மட்டுமே நான் நல்ல தாயா, இல்லையா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்!'' என்றவர், அடுத்தடுத்து அடுக்கிய விஷயங்கள், வேலை செல்லும் பெண்களின் இரட்டைப் பணிச்சுமையை எடுத்துரைப்பதாக இருந்தன.



''என் குழந்தைகள் சின்ன வயதில் இருந்தபோது... முக்கியமாக இரண்டாவது மகளை விட்டுட்டு சீனா, ஜப்பான் என்று பறந்துகொண்டே இருப்பேன். எங்கே, எப்படி, எந்தச் சூழ்நிலையில் இருக்கேன் என்றெல்லாம் தெரியாமல் ரிசப்ஷனுக்கு போன் செய்து, 'எங்கம்மாகிட்ட பேசமுடியுமா?’ என்று கேட்பாள்  மகள் டைரா. 'நான், வீடியோ கேம் பார்க்கவா?’ என்பது மாதிரி ஆரம்பித்து... ஹோம்வொர்க் முடிப்பது வரை அடிக்கடி போன் செய்து கேட்டுக்கொண்டே இருப்பாள். எவ்வளவு பெரிய மீட்டிங்கில் இருந்தாலும், ஓர் அம்மாவாக அவளுக்கு நான் பதில் சொல்லியே ஆகவேண்டும்!''
- இப்படியான விஷயங்கள் நீள்கின்றன இந்திரா நூயியின் பேட்டியில்.

'குழந்தையா... வேலையா..?’ - பணிக்குச் செல்லும் பெண்கள் பலரும் சந்திக்கும் நுட்பமான சிக்கல் இது. இங்கே தங்களின் சொந்த அனுபவங்களைப் பகிர்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த அம்மாக்கள் சிலர்...
திவ்யா, (சாஃப்ட்வேர் இன்ஜினீயர்): 

''என் பையன் சாய் பிரவன், ரெண்டு வயசு குழந்தை. என் மாமியார்தான் பார்த்துக்கிறாங்க. அவங்க இல்லைனா என் நிலைமை அவ்ளோதான்! காலையில எழுந்து ஜிம் போயிட்டு திரும்ப வந்து என் மாமியாருக்கு சமையல்ல ஹெல்ப் பண்ணி நான் கிளம்பி ஆபீஸ் போயிடுவேன். என் பையன் சாப்பிடுற வரைக்கும் கூட இருந்துட்டு கிளம்பிடுவார் கணவர். ஆபீஸ் போன உடனே பையன் என்ன பண்றான், சாப்பிட்டானா, டாய்லெட் போயிட்டானானு விசாரிச்சுட்டு வேலையைத் தொடங்கினாதான் மனசுக்கு நிம்மதியே வரும்.

கூட வேலை பார்க்கிற ஃப்ரெண்ட்ஸ் பலர், ரொம்ப தூரத்துல இருந்து ஆபீஸ் வர்றாங்க. சமயங்கள்ல ஆபீஸ் வந்த நிமிஷமே, குழந்தைக்கு உடம்பு சரியில்லைனு போன் வரும். உடனே கிளம்பிப் போவாங்க. அந்தக் கஷ்டம் எனக்கு வராம என் மாமியார் பார்த்துக்கிறாங்க. ஆனாலும் அவன் இன்னிக்கு ஒரு வார்த்தை பேசினான், எழுந்து நடந்தான், தானா தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிச்சான்னு மாமியார் போன்ல சொல்றப்ப எல்லாம், ஏக்கமா இருக்கும்.

சனி, ஞாயிறு ஆபீஸ் கிடையாதுங்கிறதால, இந்த ரெண்டு நாளைக்கும் மாமியாருக்கு லீவ் கொடுத்துட்டு, வாரம் முழுக்க நான் மிஸ் பண்றதை எல்லாம் சேர்த்து வெச்சு என் பையனை நானே பார்த்துப்பேன். பேச்சு முழுமையா வராத அவனுக்குள்ள என்ன நினைப்புஇருக்குனு எனக்கு இன்னும் தெரியல. ஆனா, அவன் ஸ்கூல் போக ஆரம்பிச்சு என்னை மிஸ் பண்றதா சொல்றப்ப கண்டிப்பா வேலையை விட்டுருவேன்!''

லிடியா (வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்): 

''ஒரு குழந்தைக்கு ஐந்து வயது வரை, அப்பாவைவிட அம்மா இருந்து கவனிச்சுக்கிறது ரொம்ப அவசியம். ஆனா, காலம் நமக்கு அப்படி வாய்க்கிறதில்லையே! குழந்தைங்களோட எதிர்கால நலன் கருதி பொருளாதார சப்போர்ட்டுக்காக வேலைக்குப் போறோம். என் பெரிய பையன் ப்ளஸ் டூ படிக்கிறான். சின்ன பொண்ணு ஃபர்ஸ்ட் படிக்கிறா. பொண்ணை கூட இருந்து கவனிச்சுக்க சொந்தம் இல்லாததால, அவளை பார்த்துக்க வீட்டோட ஆள் வெச்சிருக்கேன்.

காலையில நாலு மணிக்கு எழுந்து பசங்களுக்குத் தேவையானதை சமைச்சு வெச்சுட்டு, டிரெயின் பிடிச்சு கோர்ட்டுக்குப் போயிடுவேன். அங்க இருந்தே பொண்ணு சாப்பிட்டாளா, அழுதாளா, தூங்கினாளானு நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் போன்ல கேட்டுட்டு இருப்பேன். கேஸை ஜட்ஜ் எப்ப எடுப்பாருனு சொல்ல முடியாது. காலையில இருந்து காத்திருக்கணும். ஆனா, நாம வாதாடப்போற வழக்கை சீக்கிரம் விசாரிக்கணும்ங்கிறதுக்கு நியாயமான காரணத்தை ஜட்ஜ்கிட்ட சொல்லலாம். கட்டாயச் சூழல் வர்ற சமயங்கள்ல எல்லாம் ஜட்ஜ்கிட்ட சொல்லி, காலையிலேயே முடிச்சுட்டு மதியம் கிளம்பிடுவேன். அப்படியும் முடியலைனா, கணவரை லீவு போடச் சொல்லிடுவேன்.

வேலைக்குப் போயிட்டு குழந்தைகள், குடும்பம், வேலைனு அத்தனையையும் ஒரே ஆளா, ஒரே நேரத்துல பார்க்க முடியாது. ஸோ, எதையாவது ஒண்ணை தியாகம் பண்ணி... இன்னொண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். அம்மாவா இருக்கிறதால எல்லாத்தையும்விட என் குழந்தைங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மத்ததை குறைச்சுக்கிறேன். 'அம்மா சரியாயிருந்திருந்தா... இப்படி வளர்ந்திருக்குமா?’னு நாளைக்கு பிள்ளைங்களைப் பார்த்து யாரும் சொல்லிடக் கூடாதே!''



ஷியாமளா (கோ-ஆர்டினேட்டர், தனியார் நிறுவனம்): 

''எங்கம்மா இருந்தவரைக்கும் கூடவே இருந்து என் பொண்ணைப் பார்த்துக்கிட்டாங்க. அவங்களால முடியலைங்கிற சிச்சுவேஷன் வந்தப்ப, 'வேலையையும் விட முடியாது... பாப்பாவையும் பார்த்துக்கணும்'னு கிரெச்ல சேர்த்துட்டேன். அப்ப அவ பத்து மாச குழந்தை. காலையில எழுந்து வேலையை முடிச்சுட்டு அவளுக்குத் தேவையானதை எடுத்து வெச்சு, கொண்டு போய் விட்டுவேன். கிரெச்ல ரொம்ப நல்லா பார்த்துகிட்டதால ஓரளவு நிம்மதி. இருந்தாலும் அவ தவழ்ந்தது, நடந்தது, பேசினது எதையும் அந்தந்த செகண்ட்ல கூட இருந்து பார்க்கவே இல்ல.

இப்ப யு.கே.ஜி படிக்கிறா. ஸ்கூல் விட்டதும், கிரெச்ல உள்ள ஆட்கள் பிக்கப் பண்ணி வெச்சுப்பாங்க. நான் 6.30 மணிக்கு போய் கூட்டிட்டு போவேன். வேலை பார்த்துட்டே சின்ன குழந்தையைச் சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்ங்க. நாம நினைச்சே பார்க்க முடியாத நெருக்கடி எல்லாம் வரும். அத்தனையும் குழந்தைகளுக்காக தாங்கித்தானே ஆகணும்.''

ஆம்... இதுதானே உண்மை!


'முதல்ல பால் வாங்கிட்டு வா!’

இந்திரா நூயி தன் பேட்டியில் சொல்லியிருக்கும் சுவாரஸ்யமான சில விஷயங்கள்...

'’பெப்சிகோவுக்கு சி.இ.ஓ-வாக நான் நியமிக்கப்பட போற தகவல் வந்தப்ப நைட் மணி 9.30 மணி. அளவில்லாத சந்தோஷத்தோட வீட்டுக்குப் போய், 'அம்மா ஒரு குட் நியூஸ்!’னு சொன்ன நிமிஷம், 'அதிருக்கட்டும். வீட்ல பால் இல்லை. முதல்ல அதை போய் வாங்கிட்டு வா’னு அம்மா சொன்னாங்க. திரும்பி மேல பார்த்தா, என் ஹஸ்பண்ட் லேப்டாப் பார்த்துட்டு இருந்தார். 'அவர்கிட்ட சொல்லியிருக்கலாமே'னு கேட்டா, 'அவர் டயர்டா இருக்கார்’னு அம்மாகிட்ட இருந்து பதில். 'வீட்டுல வேலைக்காரங்க இருக்காங்களே'னு கேட்டதுக்கு 'மறந்துட்டேன்’னு சொல்றாங்க. உடனே கிளம்பிப் போய்,  பால் வாங்கிட்டு வந்த பிறகு, 'நான் கம்பெனிக்கு பிரசிடென்ட் ஆகப்போறேன். என்னைப் போய் பால் வாங்கிட்டு வரச் சொல்றீங்களே. நீங்க என்ன மாதிரியான அம்மா?’னு கேட்டேன்.

நிதானமா என் பக்கம் திரும்பின அம்மா, 'நீ பிரசிடென்டா இரு, போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ்ல ஒருத்தியா இரு. அதைப்பத்தி கவலையில்லை. ஆனா, எப்போ நீ வீட்டுக்குள்ள நுழையுறயோ அப்போல இருந்து நீ அம்மா, மனைவி, குடும்பத் தலைவி. உன்னோட பதவி கிரீடத்தை எல்லாம் வெளியில கழட்டி வெச்சுட்டு வீட்டுக்குள்ள வா’னு சொன்னாங்க.

ஒரு மனைவியா, தாயா, உயரதிகாரியா எல்லாரையும் ஈஸியா ஹேண்டில் பண்ண முடியுமானு கேட்டா, முடியும்னு எனக்குத் தோணலைனுதான் சொல்லுவேன். 'முடியும்'னு வேணும்னா நினைச்சுக்கலாம். 'நான் எல்லாத்துலயும் ஜெயிச்சுட்டேன்... எனக்கு எல்லாமும் இருக்கு'னு வேணும்னா நினைச்சுக்கலாம்!'
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » சிந்தனை களம் » சிந்தனை களம் » தனியே குழந்தை... தவிக்கும் மனசு! (Thanks - Vikatan)
  • Page 1 of 1
  • 1
Search: