வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya, Laya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் » வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் (வீட்டு தோட்டம் / மாடி தோட்டம்)
வீட்டு தோட்டம் / மாடி தோட்டம்
LayaDate: Friday, 07 Feb 2014, 9:20 AM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் சம்பந்தமான தகவல்களை பகிரவும்  கூடுமானவரை இயற்கை விவசாயமாக இருக்கவேண்டும்
 
MeenatchiDate: Friday, 07 Feb 2014, 10:44 AM | Message # 2
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
hi frds,
   I have some plants in my home.im prefare always natural vitamins for plants.
1.waste vegetables(onion and other vegetables peel)
2. raw rice washing water.
3.mixing of turmeric and salt save the plant  from insects.


Meenatchi .S
 
RAWALIKADate: Friday, 07 Feb 2014, 1:01 PM | Message # 3
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சுற்றுச்சுவரில் கீரை... உரி பைகளில் காய்கறி...

நன்றி - பசுமை விகடன்

மனம் கவரும் மாடிவீட்டு உழவர்...!யுக்திஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய்

''விவசாயம் செய்ய நினைத்தால், ஏக்கர் கணக்கிலான நிலம் தேவையில்லை. ஆர்வமும், அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டும்போதும். வீட்டு காம்பவுண்ட் சுவற்றில்கூட விவசாயம் செய்யலாம்'' என்கிறார், கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் பால்ராஜ்.

சுற்றுச்சுவர் தோட்டம், உரித்தோட்டம் என விதவிதமான முறைகளில் காய்கறி சாகுபடி செய்திருக்கும் வின்சென்ட் பால்ராஜை, தேடிச் சென்றபோது... தன் வீட்டுச் செடிகளுக்கு பூவாளி மூலம் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அறிமுகப்படுத்திக் கொண்டதும்... உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

''இந்தியன் பேங்க்ல 30 வருஷம் வேலை பாத்துட்டு, வி.ஆர்.எஸ் வாங்கிட்டேன். தினமும் மார்க்கெட்டுக்குப் போய் தேவையான காய்கறிகளை வாங்கிட்டு வருவேன். எங்க வீட்டுல கீரைகளை விரும்பிச் சாப்பிடுவோம். மார்க்கெட்ல வாங்கிட்டு வர்ற கீரைகளை தண்ணியில நல்லா கழுவின பிறகும், கெட்ட நாத்தம் வந்துகிட்டே இருந்துச்சு. விசாரிச்சப்போ, கீரை சாகுபடி செய்ற பகுதியில ஓடுற ஆத்துத் தண்ணியில சாக்கடையும் கலந்து போகுதுனு தெரிஞ்சுது. அப்போதான், 'நாமே கீரையை உற்பத்தி செய்யலாம்’னு தோணுச்சு. அப்ப ஆரம்பிச்சதுதான், இந்த காம்பவுண்ட் விவசாயம்'' என்று முன்னுரை கொடுத்த வின்சென்ட் பால்ராஜ்,  

சுற்றுச்சுவரில் விளைந்து நின்ற கீரைகள், உரிகளைப் போல தொங்கவிட்ட பைகளில் காய்த்து தொங்கிய காய்கறிகள் போன்றவற்றைக் காட்டியபடி சாகுபடி முறையை விளக்கினார்.''9 இஞ்ச் அகலத்துக்கு உள்ள சுற்றுச்சுவரில்தான் செடிகள் வளர்க்க முடியும். சுவற்றின் மேல்பகுதியில், பாலிதீன் ஷீட்டைக் கொண்டு, நீள்வடிவ உறையைத் தயாரிக்க வேண்டும். இந்த உறையின் மேல்பாகமானது, திறந்து மூடுவது போல இருக்க வேண்டும். பிறகு, பாலிதீன் உறைக்குள் அரை அடி உயரத்துக்கு தேங்காய் நார்க்கழிவுகளைக் கொட்டிப் பரப்பி, அதன் மீது... இலை, தழை, குப்பைகளை தூளாக்கித் தூவ வேண்டும். பிறகு, உறையை மூடித் தைத்துவிட வேண்டும்.  இந்த உறையானது, சுவற்றின் மீது இறுகப் பற்றி நிற்கும்வகையில், மரச்சட்டங்களைப் பயன்படுத்தி, கொட்டில் போல உருவாக்க வேண்டும்.

பின்னர், தேவைக்கு ஏற்ப உறையின் மேல்பாகத்தில் துளையிட்டு, அதன் வழியாக காய்கறி விதைகளை விதைத்து, தண்ணீர் அளித்து வந்தால் போதும், குறிப்பிட்ட நாட்களில் அவை வளர்ந்து மகசூல் தரும். இதேபாணியில் கீரையையும் விதைக்கலாம். கீரைக்காக தயாரிக்கும் உறையின் மேல்பாகத்தை மூடத் தேவையில்லை. தொட்டிபோலயே தயாரித்து, அதில் கீரை விதைகளைத் தூவவேண்டும். 20 நாட்களில் கீரை வளர்ந்து விடும். இது, தமிழ்நாட்டில் யாரும் செய்யாத யுக்தி. இந்த முறையில் பல வகை கீரைகளை உற்பத்தி செய்யலாம். நான், அரை கீரை, சிறு கீரை ஆகிய இரண்டையும் சாகுபடி செய்கிறேன். பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று அனைத்து இடங்களிலும் சுற்றுசுவர்களில் இப்படி விவசாயம் செய்ய முடியும்.கொய்மலர்கள் மீது எனக்கு ஆர்வம் உண்டு. அதற்காக நிழல்வலை அமைத்து வளர்த்து வருகிறேன். இந்த நிழல் வலைக்குள்ளேயேதான் உரித்தோட்டத்தை அமைத்துள்ளேன். இரண்டு அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்ட 15 பிளாஸ்டிக் பைகளில் தேங்காய் நார் கழிவுகளை ஒரு அடி உயரத்துக்கு நிரப்பிக் கொள்ள வேண்டும். மீதி உள்ள இடத்தில் மண்புழு உரம், வெட்டிவேர், மட்கிய இலைக்கழிவுகள் ஆகியவற்றைப் போட்டு நிரப்ப வேண்டும். பிறகு, அதனுள் லேசாக தண்ணீர் விட்டு, தேவையான கீரைகள் மற்றும் காய்கறி விதைகளை தகுந்த இடைவெளியில் ஊன்ற வேண்டும். பின்னர், பூவாளி மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். இதுதான் உரித்தோட்டம். செடிகள் வளரும் பருவத்தில், இலைகளே மூடாக்கு போட்டு விடுவதால், களைகள் அதிகமாக வர வாய்ப்பில்லை.இந்த பிளாஸ்டிக் பை தொட்டிகளை, கொய்மலர்களுக்கான நிழல்வலை பந்தலில், கைக்கு எட்டும் உயரத்தில் தொங்கவிட வேண்டும். இப்படிச் செய்வதால் குறைந்த இடத்தில் நிறைய தொட்டிகளை வைக்க முடியும். கீழேயுள்ள இடத்தில் அலங்காரச் செடிகளையும் வளர்க்கலாம்'' என்று தொழில்நுட்பங்கள் தந்த வின்சென்ட் பால்ராஜ் நிறைவாக,
மாடி வீட்டு உழவர்!

''நான் உரித்தோட்டத்தில் அவரை, தக்காளி, கத்திரி, கீரை மாதிரியான வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை சாகுபடி செய்றேன். பூச்சித் தாக்குதல் இருந்தா... வேம்பு, புகையிலை கலந்த மூலிகைப் பூச்சிவிரட்டியைத் தயாரிச்சு, கையடக்க ஸ்பிரேயர் மூலமா 'ஸ்பிரே’ செஞ்சுடுவேன். 'ஹியூமிக் ஆசிட்’டை பயன்படுத்துறதால மண்ணோட கரிமச்சத்து அதிகமாகுது.முழுக்க இயற்கை முறையில உற்பத்தியாகறதால தரமான, சுவையான காய்கறிகள் கிடைச்சுடுது. நான் இந்தத் தோட்டம் மூலமா வாரம் 2 கிலோ கத்திரி, 2 கிலோ தக்காளி, தினமும் ஒரு கிலோ கீரை உற்பத்தி செய்றேன். அதேமாதிரி, கழிவுத் தண்ணியைத்தான் செடிகளுக்குப் பயன்படுத்துறேன். வீட்டுத்தோட்டம் அமைக்க முடியலையேனு யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த முறையைக் கடைபிடிச்சு, மாடிவீட்டு உழவரா வாழமுடியும்'' என்று சொல்லி விடைகொடுத்தார்.
 
RAWALIKADate: Friday, 07 Feb 2014, 1:07 PM | Message # 4
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
வீட்டுத் தோட்டம் அமைக்க...வங்கிக் கடன் கிடைக்குமா ? !

நன்றி - பசுமை விகடன் படங்கள்: வீ. ராஜேஷ், தி. விஜய்ஜே. வேங்கடராஜ்''எங்கள் வீட்டு மொட்டை மாடியில் உள்ள காலி இடத்தில் தோட்டம் அமைக்க விரும்புகிறேன்... ஆலோசனை தாருங்களேன்?''

ஆர். பிரபாகரன், கோயம்புத்தூர்.

கோயம்புத்தூர், வீட்டுத் தோட்ட ஆலோசகர் சித்ரா துரைராஜ் பதில் சொல்கிறார்.

''மாடியில் மட்டுமல்ல, வீட்டில் எந்தெந்தப் பகுதிகளில் சூரிய ஒளி கிடைக்கிறதோ... அங்கெல்லாம் காய்கறிச் செடிகளை வளர்க்க முடியும். வீட்டுத் தோட்டத்தை இரண்டு முறைகளில் அமைக்கலாம். நிழல் வலை (Shade Net) குடில் அமைத்து தோட்டம் போடுவது ஒரு முறை. வழக்கமான முறையில் திறந்த வெளியில் அமைப்பது மற்றொரு முறை. நிழல் வலைக்குள் செடிகளை வளர்க்கும்போது... தண்ணீர் எளிதில் ஆவியாவதில்லை. அதோடு, பூச்சிகளும் தாக்க முடியாது.

பொதுவாக, திறந்த வெளியில் வளர்ப்பதைத்தான் பலரும் விரும்புகிறார்கள். சாதாரண 'பாலிதீன்’ பைகளில் செடிகள் வளர்க்கும்போது நாளடைவில் அவை வெப்பத்தால் இளகி, வளைந்து நீர்க்கசிவை ஏற்படுத்தும். ஆனால், 'யூவி பாலிதீன்’ என்ற பிரத்யேக பைகள், மூன்றாண்டுகள் வரை தாக்குப் பிடிக்கக் கூடியவை என்பதால், அவற்றைப் பயன்படுத்தலாம். கோயம்புத்தூர், சேலம்... போன்ற பகுதிகளில் இந்தப் பைகள் கிடைக்கின்றன. நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்களில் இந்தப் பைகளும் தேவையான விதைகளும் விற்கப்படுகின்றன.


வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்து காய்கறிகளையும் வீட்டுத் தோட்டத்திலேயே சாகுபடி செய்ய முடியும். இதற்கு அதிகளவில் இடமும் தேவையில்லை. 200 சதுரடி பரப்பளவுள்ள இடம் இருந்தாலே போதுமானது. வீட்டுத் தோட்டம் அமைக்க, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் வரை கடனும் கிடைக்கிறது. சொந்தமாக வீடு மற்றும் அதையட்டிய இடம், மொட்டை மாடி இருக்கவேண்டும் என்பது, இதற்கு முக்கியமான விதிமுறையாகும்!
வீட்டுத் தோட்டத்தில், மறந்தும்கூட ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால்... வீட்டுத் தோட்டம் என்பதன் அடிநாதமே அடிபட்டு போய்விடும். பூச்சிவிரட்டி, பயிர் வளர்ச்சி ஊக்கிகள் என்று அனைத்தையுமே இயற்கையான முறையில் நீங்களே தயாரிக்கலாம். அல்லது, தரமான கடைகளில் வாங்கியும் பயன்படுத்தலாம். சொட்டுநீர் அமைப்பதை விடுத்து, நாமே தினமும் தண்ணீர் விடும்போது... நமக்கும் செடிகளுக்குமான உறவு பலப்படும். கூடவே மனதுக்கு உற்சாகம், நிம்மதி கிடைப்பதோடு உடற்பயிற்சியாகவும் அமைந்து உடலுக்கு வலு சேர்க்கும். இவையெல்லாம் ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபணமான உண்மைகள். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்!''

தொடர்புக்கு, செல்போன்: 97897-74662.


''கறிவேப்பிலைப் பயிரில் இலைப் புள்ளித் தாக்குதலை எப்படி கட்டுப்படுத்துவது?''

பி.ஆர். ரங்கசாமி, தீராம்பாளையம்.

கோயம்புத்தூர் மாவட்ட முன்னோடி கறிவேப்பிலை விவசாயி, சுப்பையன் பதில் சொல்கிறார்.

''கறிவேப்பிலை செடியாக இருந்தாலும் சரி... வேறு எந்தச் செடியாக இருந்தாலும் சரி, அது எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தால்தான் நோய்களும் பூச்சிகளும் தாக்காமல் இருக்கும். மாதம் ஒரு முறை... 300 மில்லி பஞ்சகவ்யாவுக்கு 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து, கறிவேப்பிலைச் செடிகளின் மீது இலைவழித் தெளிப்பாகத் தெளித்து வந்தால், செடிகள் நல்ல ஊட்டத்தோடு செழித்து வளர்வதோடு, எதிர்ப்பு சக்தியும் பெருகும். நோய்கள், பூச்சிகள் தாக்காமல் இருக்கும்.

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் கறிவேப்பிலைக்கு, கூடுதல் மணம் கிடைப்பதோடு அதிக நேரம் வாடாமல் இருக்கும் தன்மையும் இருக்கும். ரசாயன விவசாயத்தில்தான் கறிவேப்பிலையில் இலைப்புள்ளி நோய் அதிகமாகத் தாக்குகிறது. இதனால், விற்பனையும் பாதிக்கும். பத்து லிட்டர் தண்ணீரில் 100 மில்லி சூடோமோனஸ் கலந்து ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை தெளித்தால், இலைப்புள்ளி சரியாகி விடும்.''

தொடர்புக்கு, செல்போன்: 93632-28039.
 
RAWALIKADate: Friday, 07 Feb 2014, 2:02 PM | Message # 5
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
மாடித்தோட்டம்

நன்றி - பசுமை விகடன்
உணவுக்குக் காய்கறி... மருந்துக்கு மூலிகைகள்..

.மலைக்க வைக்கும் மாடித்தோட்டம்!
என். சுவாமிநாதன் ,படங்கள்: ரா. ராம்குமார்

பல்பொருள் அங்காடிகளில்... பளீர் விளக்குகளின் வெளிச்சத்தில்... பளபளக்கும் காய்கறிகளை ஒரு வாரத்துக்குத் தேவையான அளவுக்கு மொத்தமாக வாங்கி, அவற்றைஎல்லாம் குளிர்சாதனப் பெட்டியில் அடுக்கி வைத்து, சமைத்துச் சாப்பிடுவதுதான் பெரும்பாலான நகரவாசிகளுக்குப் பழக்கம். ஏன், கிராமங்களில்கூட இந்தப் பழக்கம் இப்போது மெள்ள தொற்றிவருகிறது. இத்தகையோருக்கு மத்தியில், பரபரப்பான நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான வெட்டூர்ணிமடத்தில் உள்ள தங்கள் வீட்டில், மாடித்தோட்டம் அமைத்து, தினமும் புத்தம்புதிய காய்கறிகளைப் பறித்து உண்டு, ஆரோக்கியத்தைக் கடைபிடித்து வருகிறார்கள், ஆட்ரிஜோவின் குடும்பத்தினர்!
''16 வருஷத்துக்கு முன்ன அமைச்சது, இந்த மாடித்தோட்டம். இப்போ, நான் கோயம்புத்தூர்ல, பொறியியல் கல்லூரி துணைப் பேராசிரியரா இருக்கறதால... இதுல அதிகம் ஈடுபாடு காட்ட முடியல. லீவு கிடைச்சா போதும்... தோட்டத்தைப் பார்க்கறதுக்காகவே உடனே கிளம்பி வந்துடுவேன். அப்பாவும் அம்மாவும்தான் முழுக்க இந்த மாடித்தோட்டத்தைப் பாத்துக்கறாங்க'' என்று உற்சாகமாகச் சொன்ன ஆட்ரிஜோவின், மாடித்தோட்டம் அமைத்தது பற்றிய அனுபவத்தை, தொழில்நுட்பத் தகவல்களோடு கலந்து சொல்ல ஆரம்பித்தார்.
கழிவுப்பொருட்களில் காய்கறிச்செடிகள் !

''எங்க வீட்டு மாடி, 600 சதுர அடி. இதுல சில மூலிகை உட்பட இருபதுக்கும் மேலான செடி வகைகள் இருக்கு. வீட்டுத் தேவைக்காக வெளியில் இருந்து விலை கொடுத்து காய்கறி வாங்கறதை நிறுத்தி, 15 வருசம் ஆச்சு. மாடித்தோட்டம் அமைக்கறப்போ தண்ணி இறங்கி, கட்டடம் சேதமாகாம இருக்கறதுக்காக... தொட்டிகளுக்கு அடியில, ரெண்டு அடுக்கா செங்கல் வைக்கணும். மண்தொட்டிதான்னு இல்லாம, மண் கொட்டி வைக்க முடியுற எதுல வேணாலும், செடிகளை வளக்கலாம். நாங்க எண்ணெய் கேன்களைக் கூட ரெண்டா வெட்டி செடி வெச்சுடுவோம். அப்பா ஃபிரிட்ஜ் மெக்கானிக். அதனால, அவர் கழட்டிப் போடுற உதிரி பாகங்கள்லகூட செடி வளர்க்கிறோம்.



தொட்டி, பாத்திரம், வாளினு செடி வைக்கறதுக்காக எதைத் தேர்ந்தெடுத்தாலும்... அதுல நாலு கதம்பையை (தேங்காய் மட்டை) வெச்சு, 5 கிலோ மண், ஒரு கிலோ தொழுவுரம், ஒரு கையளவு செங்கல்பொடி போட்டு, செடிகளை நட்டுடுவோம். சமையலறைக் கழிவுகள், கழிவு நீர் எல்லாம் எங்க வீட்டுப் புழக்கடையிலதான் சேருது. அங்க இருந்து மண் எடுத்துதான் செடி வளர்க்கிறோம். இப்படி சத்தான மண் கிடைச்சுடறதால... செடிகள் நல்லா வளருது.

செடிகளுக்கு உரமாகும் கழிவுகள் !



வீட்டுல நிறைய கலர் மீன்கள் வளர்க்கிறோம். மீன்தொட்டியில 15 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் மாத்தணும். அந்தத் தண்ணியையும் வீணாக்காம செடிகளுக்கு ஊத்திடுவோம். அதுல மீன்கழிவுகள் கலந்து இருக்கறதால... அது நல்ல திரவ உரமா ஆயிடுது. எங்க சொந்தக்காரர் ஒருத்தர் முயல் வளக்குறார். அவர் வீட்டுல இருந்து முயல் கழிவுகளை எடுத்துட்டு வந்து... இருபது லிட்டர் தண்ணீருக்கு, ஒரு கிலோ முயல் கழிவுனு ஒரு கேன்ல கலந்து வெயில்ல வெச்சுடுவோம். 15 நாட்கள்ல அதுல நல்லா பாசி பிடிச்சுடும். அதை அப்படியே செடிகள்ல ஊத்திடுவோம். அதனால, பயிர்களுக்கு நைட்ரஜன் சத்து அதிகமா கிடைச்சுடுது. இந்த மாதிரி இயற்கையா கிடைக்கிற பொருட்களை மட்டும்தான் ஊட்டத்துக்காகப் பயன்படுத்துறோம். மத்தபடி, தினமும் காலையில... சாயங்காலம் தண்ணீர் ஊத்துறதோட சரி.

எங்க தோட்டத்தில பீன்ஸ், கோழிஅவரை, மிளகாய், சுண்டைக்காய், வெண்டை, பாகற்காய், சிவப்புக்கீரை, வழுதலங்காய், பிரண்டை, கோவைக்காய்னு நிறைய காய்கறிகள் இருக்குது. மாடியில விளைஞ்சுருக்குற காய்களை வெச்சுதான் நாங்க சமையலை நிர்ணயிப்போம். அதேமாதிரி, திப்பிலி, சோற்றுக்கற்றாழை, துளசி, செம்பருத்தி, மருதாணி, கீழ்க்காய்நெல்லி (கீழா நெல்லி)னு மூலிகைகளும் நிறைய நிக்குது.
பயிர்களைக் காக்கும் சிலந்தி-ஓணான்!

முழுக்க இயற்கை முறைனாலும், அப்பப்போ பூச்சிகளும் எட்டிப் பாக்கும். அதுக்காக ரசாயன மருந்தெல்லாம் அடிக்க வேண்டியதில்லை. செடிகள்ல வலை கட்டுற சிலந்தியை மட்டும் கலைக்காமல் விட்டுட்டாலே போதும்... பூச்சிகளை அது பாத்துக்கும். அதேமாதிரி செடிகளைத் தேடி வர்ற ஓணான்களையும் நாங்க விரட்டறதில்லை. அதுகளும் பூச்சி, புழுக்களைப் பிடிச்சு சாப்பிட்டுடறதால்... பூச்சி பிரச்னை இருக்கறதில்லை. இந்த மாதிரி சின்னச்சின்ன நுணுக்கங்களைக் கடைபிடிச்சாலே... நல்ல முறையில காய்கறிகளை உற்பத்தி பண்ணி சாப்பிட்டு, ஆரோக்கியமா வாழமுடியும்'' என்று சொன்ன ஆட்ரிஜோவின், மாடித்தோட்டம் அமைக்கும் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்னைக்கான தீர்வு ஒன்றையும் சொன்னார்.

வாடாமல் காக்கும் கதம்பை!

''நாலு நாள் வெளியூர் போனா... செடிகள் வாடிப் போயிடுமேனுதான் நிறைய பேர் மாடித் தோட்டம் போடத் தயங்குறாங்க. ஆனா, அதுக்காகக் கவலைப்படத் தேவையில்லை. அந்தத் கவலையை... கதம்பை (தேங்காய் மட்டை) பார்த்துக்கும். ஆமாம்... ஒரு வாரத்துக்குத் தேவையான தண்ணீரை அது எப்பவும் கிரகிச்சு வைச்சுக்கிடும். அதனால கவலையேயில்லை'' என்றவர், நிறைவாக...


இதயத்துடிப்பை சீராக்கும் செம்பருத்தி!

''செம்பருத்தி இலைகளை தினமும் சாப்பிட்டா... இதயத்துடிப்பு சீராகிடும். செம்பருத்தியையும், மருதாணியையும் சேர்த்து அரைச்சு தலையில் தடவினா, இளநரை கட்டுப்படும். கீழ்க்காய் நெல்லி... மஞ்சள் காமாலைக்கு நல்ல மருந்து. சோற்றுக் கற்றாழைக்குள்ள இருக்குற 'ஜெல்’லை தினமும் ரெண்டு துண்டு சாப்பிட்டா தோல் சம்பந்தமான நோய்களும், உணவுக்குழாய் பிரச்னைகளும் வரவே வராது. மாடித்தோட்டத்தால, காய்களுக்குக் காய்களும் ஆச்சு. மருந்துக்கு மருந்தும் ஆச்சு. இதைவிட வேற சந்தோஷம் என்ன இருக்க முடியும்?'' என்று மகிழ்ச்சியாகச் சொல்லி விடைகொடுத்தார்!

உண்மைதானே!தொடர்புக்கு,
ஆட்ரிஜோவின், செல்போன்: 99947-97284
 
RAWALIKADate: Friday, 07 Feb 2014, 2:05 PM | Message # 6
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
10 சென்ட்... 100 பயிர்...

நன்றி - பசுமை விகடன்
வியக்க வைக்கும் வீட்டுத் தோட்டம்...!

என். சுவாமிநாதன்படங்கள்: ரா. ராம்குமார்
 வீட்டுத் தோட்டம்

நகரமோ... கிராமமோ... புதிதாக வீடு கட்டுகிறார்கள் என்றால், வீட்டுத் தோட்டத்துக்காகவும் இடம் விடுவது, இப்போதெல்லாம் ஒரு வழக்கமாகவே மாறிக் கொண்டிருக்கிறது. ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி போன்றவற்றைப் பயன்படுத்தாமல், சொந்த உழைப்பில் இயற்கை முறையில் நாமே காய்கறிகளை உற்பத்தி செய்து வீட்டின் ஆரோக்கியத்தைக் காப்பதோடு, மனதின் நிம்மதியையும் கூட்டிக் கொள்ளலாம் என்பதுதான் இதற்குக் காரணம்!
இதோ... கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையிலிருந்து, அருமனை செல்லும் சாலையில் இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கும் 'வட்டவிளை’ கிராமத்தில் வசிக்கும் ரஞ்சிதஜாய் என்பவரின் வீடு... செடி, கொடிகள் சூழ, பசுமை போர்த்திய வீடாகவே மாறி கிடக்கிறது!காம்பவுண்ட் வாயிலிலிருந்த கொய்யா, பலா, முருங்கை, அழகுச் செடிகள்... என அசைந்து வரவேற்க, வாசல் தொடங்கி வீடு வரை படர்ந்து கிடக்கிறது, முல்லை. பலவித பூக்களின் நறுமணங்கள் ஒன்றாகக் கலந்து பரவ, அந்த இடமே ஏகாந்தமாக இருந்தது.



''டி.எஸ்.பி.-யா வேலை பாத்திட்டிருந்த என் வீட்டுக்காரர் தாசப்பன், கொஞ்ச வருஷத்துக்கு முன்ன இறந்துட்டார். எங்களுக்கு நாலு ஆம்பளைப் பசங்க. நாலு பேரையும் கல்யாணம் முடிச்சுக் கொடுத்து பேரன், பேத்தியெல்லாம் எடுத்தாச்சு. மன அமைதிக்காகத்தான் இந்தத் தோட்டத்தை அமைச்சேன். ஆனா, அது இப்போ எனக்கான அடையாளமாவே மாறிடுச்சு. அறுபது வயசுலயும் என் மனசு இளமையா இருக்கறதுக்குக் காரணமே இந்தத் தோட்டம்தான்'' என்று உற்சாகமாகப் பேச்சை ஆரம்பித்த ரஞ்சிதஜாய், தோட்டத்தில் உள்ள செடிகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
10 சென்டில்... 100 பயிர்கள்!

''வீட்டைச் சுத்தி பத்து சென்ட் அளவுக்குக் காலி இடம் இருந்துச்சு. அதுலதான் தோட்டத்தை அமைச்சுருக்கேன். அஞ்சு மாமரம், ஆறு தென்னை, அஞ்சு ரொபஸ்டா வாழை, ஏழு ஏந்தன் வாழைனு இருக்கு. பப்பாளி, சீதா மரங்களும் இருக்கு. மிச்சமிருக்குற இடத்துலதான், மத்த பயிர்கள். மொத்தமா கணக்கெடுத்தா... ஏறத்தாழ நூறு பயிர்களுக்கு மேல இருக்கும். ரசாயனத்தைப் பயன்படுத்துறதே கிடையாது. தோட்டத்துக்குள்ள மட்டும் இல்லாம... பால்கனி, மொட்டை மாடினு எல்லா இடத்துலயும் பிளாஸ்டிக் சாக்குகளை வெச்சுச் செடிகளை வளர்க்கறேன்.
ரோஜா முதல் கற்றாழை வரை!

கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கட்டுமேனு ரோஜாவை வெச்சுருக்கேன். சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு, நீலம், நாட்டு ரோஜானு மொத்தம் பனிரெண்டு ரகங்கள் நிக்குது. தண்டுகளை ஒடிச்சு விட்டுட்டா... நிறையப் பூக்கள் கிடைக்கும். பக்கத்திலயே மணத்தக்காளி, வெண்டை, காலிஃபிளவர், மிளகாய், இஞ்சி, சோற்று கற்றாழைனு வரிசையா இருக்கு.


அழகுக்காக ஆர்கிட் மலர்களையும் நட்டுருக்கேன். இந்தத் தொட்டிகளைக் கயித்துல கட்டித் தொங்க விடுறப்போ... தண்ணிவிட வேண்டிய அவசியமில்லை. காத்துல இருக்குற ஈரத்துலேயே வளந்துடும்.

ரகம் ரகமா மிளகாய், கீரை!மிளகாய்ல... பச்சை, உருண்டை, வெள்ளை, ஃபேன்சி, பஜ்ஜி மிளகாய், 'காந்தாரி’ன்ற மோர் மிளகாய்னு  ஏகப்பட்ட ரகங்கள் என்கிட்ட இருக்கு. வாரம் ஒரு தடவை மிளகாய் பறிக்கிறேன்.அதேமாதிரி, பொன்னாங்கண்ணி, சிவப்புக் கீரை, பச்சைக் கீரை, கொடிப்பசலி, ஆப்பிரிக்கன் கீரை... இப்படி நிறைய கீரை வகைகளும் இருக்கு. எங்க வீட்டுச் சாப்பாட்டுல தினமும் ஏதாவது ஒரு கீரை இருக்கும். வீட்டுத்தேவைக்குப் போக மீதியை பக்கத்து வீடுகளுக்கு வித்துடுவேன். கீரையில மட்டும் தினமும் அம்பது ரூபாய்க்குக் குறையாம கிடைக்கிது.


ஆறு மாசத்துக்கு முன்ன நட்டு வெச்ச அயர்ன் பீன்ஸ், இப்ப கொடி விட்டு மூணாவது மாடி வரைக்கும் போயிடுச்சு. இந்த பீன்ஸ், பாக்குறதுக்கு அரிவாள் மாதிரி இருக்கும். இதைப் பிஞ்சா இருக்குறப்பவேப் பறிச்சு சமைச்சுடணும். முத்திடுச்சுனா உபயோகப்படாது. நல்ல சுவையாவும் இருக்கும்.

மலைக்க வைக்கும் மலைப் பயிர்கள்!..

இதுபோக, சேம்பு, சேனை, முள்ளங்கி, சுரைக்காய், கூவைக்கிழங்கு, சோளம், சுண்டக்காய், வலுதலங்காய், சீனி அவரை, வெண்டை, கறிவேப்பிலை, அன்னாசி, சாம்பார் இலை, ரம்பை இலைனு எதுவுமே இல்லைனு சொல்ற அளவுக்கு அவ்வளவு காய்கறியும் இருக்குது. மலைப் பிரதேசத்துல விளையுற முட்டைக்கோஸ், காலிஃபிளவர், கேரட், பீட்ரூட் எல்லாம்கூட இங்க அருமையா விளையுது. அதனால வெளியில காய்கறி வாங்குறச் செலவே எனக்குக் கிடையாது.

என் பசங்க, மருமகள்கள், பேரப்பிள்ளைகள்னு அவ்வளவு பேரும் சேர்ந்துதான் தோட்ட வேலைகள் அத்தனையையும் செய்றோம். செலவில்லாம ஆரோக்கியமான உணவு கிடைக்கறதோட, எங்க எல்லாருக்கும் நூறு சதவிகிதம் மன நிறைவும் கிடைக்குதுங்கறது சத்தியமான உண்மை'’ என்று நெகிழ்ந்தார் ரஞ்சிதஜாய்.     
இப்படித்தான் தோட்டம் போடணும்...

வீட்டுத் தோட்டம் அமைப்பது தொடர்பாக ரஞ்சிதஜாய் தந்த சிறப்பு ஆலோசனைகள் இதோ...

'தொட்டிகளில்தான் செடிகளை வளர்க்க வேண்டும் என்பதில்லை. பழைய சாக்குகளிலும் வளர்க்கலாம். சாக்கின் அடிப் பகுதியில் ஒரு அடுக்கு கதம்பையைப் (தேங்காய் மட்டை) போட்டு, அதன் மேல் மட்கிய இலை தழைகளை ஒரு அடுக்குப் போட வேண்டும். மீதமுள்ள கொள்ளளவில் பாதியளவுக்கு செம்மண், மணல் கலந்தக் கலவையை இட்டு... ஒரு கிலோ தொழுவுரம், ஒரு கைப்பிடி வேப்பம்பிண்ணாக்கு, அதே அளவு எலும்புத்தூள், கொஞ்சம் சுண்ணாம்புத்தூள் ஆகியவற்றை இட வேண்டும். பிறகு நமக்கு விருப்பமான செடிகளை நடவு செய்யலாம். கதம்பை போடுவதால், தண்ணீர் கீழே வடியாமல் இருப்பதோடு, மண்ணும் உறுதியாக இருக்கும்  அதிகளவில் கேந்திப்பூச்செடியை வளர்ப்பதன் மூலம் பூச்சித் தாக்குதலைத் தவிர்க்கலாம். தவிர, துளசி, புதினா, வசம்பு, செவ்வந்தி... போன்ற செடிகளும் பூச்சிகளின் வரவைத் தடுக்கின்றன. வசம்பின் வாசம் இருந்தால்... அந்தப் பக்கமே பாம்பு தலை வைக்காது.தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகள் தண்ணீர் ஊற்ற வேண்டும். வாரம் ஒருமுறை, சிறிது பச்சை சாணம், சிறிது கடலைப் பிண்ணாக்கு, சிறிது வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைத் தண்ணீரில் கரைத்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை, ஒவ்வொரு செடிக்கும் ஒரு கையளவு தொழுவுரம் இட வேண்டும். காய்ந்த இலை தழைகளை செடிகளில் மூடாக்காகப் பயன்படுத்தலாம். முட்டைக் கூடு, வெங்காயத் தொழி... என்று சமையலறைக் கழிவுகளையும் செடிகளுக்கு உரமாக இடலாம். தேவைப்பட்டால், வேப்பெண்ணெய், மஞ்சள்தூள் ஆகியவற்றை சோப்புக்கரைசலில் கலந்து பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தலாம்.
 
shanDate: Friday, 07 Feb 2014, 5:46 PM | Message # 7
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
hai rawali,
nanri tagavaluku....vidaigal kidaikum idam chennaiyil?
 
TamilMadhuraDate: Sunday, 09 Feb 2014, 3:04 PM | Message # 8
Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
பயனுள்ள தகவல்கள் ரவளிக்கா.

வீட்டில் தினமும் உபயோகிக்கும் கொத்துமல்லியை சிறு பாத்திரத்தில் (பூந்தொட்டியில்தான் வளர்க்க வேண்டும் என்றில்லை. பழைய பிளாஸ்டிக் மக போன்றவற்றில் அடியில் ஒரு ஓட்டை போட்டுவிட்டு மண் நிரப்பிப் பயன்படுத்தலாம்) மண் நிரப்பி, மல்லி விதைகள் தூவலாம். விரைவில் வீட்டில் பயன்படுத்தத் தயாராக ஆர்கானிக் முறையில் வளர்க்கப் பட்ட கொத்துமல்லி ரெடி. ரசத்துக்குத் தாளிக்கும்போது பிரெஷ்ஷாகப் பயன்படுத்தினால் வாசம் தூக்கும்.

அதே போல் சிறிது வெந்தயத்தை தூவி வைத்தால் வெந்தயக் கீரை ரெடி. நம்ம ஊரின் வெயிலுக்கு சமையலில் சேர்த்துக் கொண்டால் உடலுக்குக் குளிர்ச்சி தரும். பெண்கள் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.


தமிழ் மதுரா
 
shanDate: Sunday, 09 Feb 2014, 10:56 PM | Message # 9
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
hai tamil,
siiya alavil pasumaiyaana malli,keerai wow........
 
NathasaaDate: Tuesday, 11 Feb 2014, 4:32 PM | Message # 10
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
hi friends
thnx for the information
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் » வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் (வீட்டு தோட்டம் / மாடி தோட்டம்)
Search: