நலம் 360’ - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 3
  • 1
  • 2
  • 3
  • »
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » நலம் 360’ (Thanks - Vikatan)
நலம் 360’
RAWALIKADate: Thursday, 12 Jun 2014, 8:53 AM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நலம் 360’ - 1



மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான்

குந்தா மலைக்கிராமத்தின் சாலையோரத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பு, என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணத்தைப் பரிசளித்தது!



''எனக்கு 71 வயசு. 40 வருஷ விகடன் வாசகன். 'ஆறாம்திணை’ முடிஞ்சிருச்சுனு படிச்சப்ப, மனசு பாரமாயிடுச்சு. நெஜமா சொல்றேன் தம்பி... கண்ணீர் வந்திருச்சு! ரெண்டு வருஷத்துல என் வீடே வேற மாதிரி ஆகிருக்கு. எல்லாரும் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறாங்க. உளுந்தங்களி திரும்ப வந்திருக்கு. மருமக முடக்கறுத்தான் தோசை சுடுறா. வித்துடலாம்னு சொன்ன பூமில 'ஏதாச்சும் செய்யலாமாப்பா?’னு பையன் கேட்கிறான். இப்போ 'ஆறாம்திணை’யைக் கண்டிப்பா நிறுத்தியே ஆகணுமாப்பா?'' மேலும் நெகிழ்வுடனும் ஆதங்கத்துடனும் அந்தத் திருப்பூர் பெரியவர் பேசப் பேச, நான் அழுதேவிட்டேன். எத்தனை கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், இணையத்தில், சமூக வலைதளங்களில் நிரம்பி வழிந்த அரவணைப்புகளில் நானும் விகடனும் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டோம். இழந்ததையும் தொலைத்ததையும் எடுத்துச் சொல்லி, தினம் நம் மீது இறுகும் இறுக்கமான வணிகப்பிடியை அடையாளம் காட்டி, நலவாழ்வை நோக்கி நகர வழிகாட்டிய வரிகள்தான் 'ஆறாம்திணை’ கட்டுரையின் வாசக்கால்கள். அழுக்குப் புடைவை அணிந்த பொக்கை வாய்ப் பாட்டியைக் கண்டதும் பட்டணத்துப் பேரக் குழந்தை ஓடிச்சென்று கட்டி அணைப்பது போலதான், 'ஆறாம்திணை’யை அதன் வாசகர்கள் உச்சிமோந்து அணைத்துக்கொண்டார்கள்.

அதே நெகிழ்வுடனும் நிறைவுடனும் கொஞ்சம் இளைப்பாறிவிட்டு வரலாம் என சென்னை வெப்பத்தில் இருந்து தப்பி, சொந்த கிராமத்துக்குச் சென்று, பக்கத்துத் தோட்டத்தில் புதுசாக வாங்கியிருந்த டிராக்டரை குதூகலமாக ஓட்டிப்பார்த்தபோதுதான் அந்த அழைப்பு! ''சார்... எங்க இருக்கீங்க?'' என விகடன் ஆசிரியர் தொலைபேசினார். ''சின்ன பிரேக் எடுத்துக்கலாம்னு சொன்னீங்களே... அதான் ஊரு பக்கம் வந்துட்டேன்...'' என நான் பதிலளிக்க, ''இங்க மெயிலும் போனும் கதறது. ''ஆறாம்திணை’யை ஏன் நிறுத்தினீங்க?’னு கேட்கிறாங்க. அடுத்த வெர்ஷனை உடனே ஆரம்பிச்சிடலாம்னு ஐடியா. தலைப்புகூட முடிவு பண்ணிட்டோம். நீங்க ரெடியா?'' என்று கேட்க, 'நலம் 360’ பூத்துவிட்டது.

'நலம் 360’... வெறும் மருத்துவக் கட்டுரை அல்ல. நலவாழ்வு என்பது மருந்து, மாத்திரை, கசாயம், ஈ.சி.ஜி. விஷயம் அல்ல. ஆரோக்கியம் என்பது, சிக்ஸ்பேக் உடம்பில் கட்டமைக்கப்படுவதும் கிடையாது. ஆறு லட்சம் பாலிசி மூலம் அதை வாங்கி வீட்டில் வைக்கவும் முடியாது. அஞ்சறைப்பெட்டியிலும், அடுப்பாங்கரைப் பரணில் கவிழ்த்திவைத்த வெங்கலத் தவலையிலும், ரசம் வைக்கும் ஈயச்சட்டியிலும், பட்டாசல் மாடக்குழியில் பத்திரப்படுத்திய அகல்விளக்கிலும், வாய்க்கால், வரப்பு ஓரங்களில் வளர்ந்து நிற்கும் நீர்முள்ளி, கீழாநெல்லியிலும், கரிசாலை கண்மையிலும், கத்தாழை எண்ணெய்க் குளியலிலும், வசம்புக் கட்டை கை வளவியிலும், மருதாணிப் பற்றிலும், புளியில்லா பொரிச்ச குழம்பிலும், சுண்டுவார் ரசத்திலும், இடுப்புச் சுருக்குப்பை தாம்பூலத்திலும்தான் நம் நலவாழ்வு நங்கூரமிட்டு இருந்தது!



வண்ணத்துப்பூச்சியின் சிறகு அசைவில் எங்கோ சூறாவளி உருவாகும் கேயாஸ் தியரி போல, மீந்துபோன சாம்பாரை ப்ளாஸ்டிக் கவரோடு ரயில் பயணத்தின்போது வீசி எறிவதில்கூட, யாருடைய வாழ்க்கைப் பயணத்திலோ ப்ளாஸ்டிக்கின் சுவடுகளான அடினோ கார்சினோமா தூக்கிச் செருகும் சாத்தியம் மிக அதிகம். பின்னிரவில் முகநூலில் ஏற்றிய தன் புகைப்படத்துக்கு எத்தனை 'லைக்ஸ்’ விழுந்திருக்கின்றன என இரவெல்லாம் பரபரப்புடன் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை செல்போனைச் சீண்டும் இளசுகளுக்கு, உறக்கம் தொலைத்த தன் உடம்புக்கு நோய்க்கூட்டம் 'லைக்’ போட்டிருக்கும் விஷயம் தெரியவில்லை. இதுவும் இன்னபிறவுமாக நல்வாழ்வு தொடர்பான விசாலமான பார்வையை விதைப்பதே நலம் '360’-ன் நோக்கம்!

'எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்பது முதுமொழி. ஆனால், அந்த எண்சாண் உடம்பு, நலத்தோடு அன்றாடம் நகர்வதற்கு அடிப்படையான விஷயம் வயிறும் அதில் நடக்கும் செரிமானமும்தான். சாப்பிட கொஞ்சமே கொஞ்சம் தாமதமானாலும் லேசாக நெஞ்சாங்கூட்டுக்குக் கீழே எரிவதும், 'எண்ணெய் பலகாரம் வீணாகுதே’ என என்றைக்கோ ஒரு நாள் சாப்பிட்டதற்கு, அடுத்த இரண்டு நாள்கள் ஏப்பத்தில் வாசம் காட்டி வதைப்பதையும் நாம் பல சமயம் அலட்சியப்படுத்திவிடுவது உண்டு. அரிசியையும், கம்பையும், சோளத்தையும், மணத்தக்காளிக் கீரையையும் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பார்த்துப் பழகிய நம் ஜீரண மரபுக்கு, சிவப்பு சிக்கன் பீஸுடன் வரும் 'அலூரா சிவப்பு’, 'எரித்ரோசைன்’ ஆகியவை கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். இந்தத் திகிலில், சில துளி ஜீரணசுரப்பைக் கூட்டவோ குறைக்கவோ செய்யும்போதுதான் அல்சரில் இருந்து கொலைட்டிஸ் வரை குடலின் இயல்பு தாறுமாறாகச் சிதைகிறது. கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசி ஜெயித்துவிடலாம் என்று பழகிவிட்ட டி-20 மனம், அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு கடைசி நிமிடத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு அரக்கப் பரக்கக் கிளம்பும் பழக்கம்... இவைதான் வியாதிக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கும்!

உமிழ்நீரில் தொடங்குகிறது ஜீரணம். உணவு மேஜையில் மூக்கின் மோப்பத்தில் தொடங்குகிறது என்றுகூட சொல்லலாம். 24 மணி நேரத்தில் சுரக்கும் சுமார் 11.25 லிட்டர் எச்சில், அதனுடன் நாம் உண்ணும் கார்போஹைட்ரேட்டை உடைத்து, குளுக்கோஸ் துகள்களாக்கி ஜீரணத்துக்கு பிள்ளையார் சுழி போடுகிறது.

ஒரு துண்டு உணவு உள்ளே போனதும் வாயில் ஊறும் எச்சிலில் உணவைச் செரிக்க உதவும் மியூசின் அமைலோஸ் சுரப்புகளும், உடலுக்கு ஒவ்வாத பொருள்களை முறித்து வெளியேற்றும் லைபேஸ் நொதியும் சுரக்கத் தொடங்கும். உணவை மெதுவாக நொறுக்கி, அந்த உமிழ்நீருடன் கலந்து உள் அனுப்ப வேண்டும். இதற்கு எல்லாம் அறுசுவையை உணரும் ஆசுவாசமான மனம் நிச்சயம் வேண்டும். இடது கையில் கம்ப்யூட்டர் மவுஸோ, ஸ்மார்ட் போனோ, தொலைக்காட்சி ரிமோட்டோ... ஏன் 'ஆறாம்திணை’ புத்தகமோ வைத்துக்கொண்டு வலது கையில் பாற்கடல் அமிர்தம் சாப்பிட்டால்கூட அது பாழ் தான். உணவு உத்தமமாக ஜீரணிக்க பரபரப்பு இல்லாத மனம் அடிப்படைத் தகுதி.

உடலை நோய்ப்பிடிக்குச் சிக்காமல் தற்காக்கும் பொடி வகைகளை நம் முன்னோர்கள் காலம் காலமாக உணவில் சேர்த்து வந்திருக்கின்றனர். சாதாரண சளி, இருமலில் இருந்து சர்க்கரை வியாதி வரை காக்கும் அப்படியான ஒரு பொடி அன்னப் பொடி. சமீபமாக எக்குத்தப்பு இரவு விருந்து உண்டாக்கும் எதுக்களிப்பு, வயிறு முதல் தொண்டை வரை எரியவைத்து நாள்பட்ட வயிற்று வியாதியை (Gastroesophageal Reflux Disease) வரவைக்கிறது. இதற்கு அன்னப்பொடி மிகச் சிறந்த மருந்து. ஜீரணத்தை வரைமுறைப்படுத்தும் அன்னப்பொடியின் செய்முறை பெட்டிச் செய்தியில்.

தாய்ப்பாலுக்குப் பின் அரிசி/கஞ்சியில் தொடங்கி, ஐந்து வயதுக்குள்ளாகவே ஹைதராபாத் தம் பிரியாணி வரை ஜீரணிக்கப் பழகும் நம் ஜீரண மண்டலம், உடலுக்கான மிகப் பெரிய பாதுகாப்பான அரண். அதில் ஓட்டை உடைசல் ஏற்படுவதற்குக் காரணம்... வாயைக் கட்டாமல் வளைத்து அடிக்கும் மனோபாவமும், எதைத் தின்கிறோம் என்ற அக்கறையில்லாத வாழ்வியலும், 'ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுப் போயேன்’ என்ற கரிசனக் குரலை அலட்சியப்படுத்தி நகர்வதும்தான். சின்னச் சின்ன அக்கறைகளை சிறுவயது முதல் உண்டாக்குவது மட்டுமே நாளைய நலவாழ்வுக்கான நம்பிக்கைகள்.

நம்பிக்கையோடு நலம் காப்போம்!- நலம் பரவும்...


 
RAWALIKADate: Thursday, 12 Jun 2014, 8:53 AM | Message # 2
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அன்னப்பொடி

தேவையான பொருள்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம், நிழலில் உலர்த்திய கறிவேப்பிலை, கல் உப்பு அனைத்தும் தலா 50 கிராம். பெருங்காயம் 25 கிராம்.

செய்முறை: சுக்கின் புறத்தோலைச் சீவி உலர்த்தி, மற்றவற்றை எல்லாம்  நன்கு குப்பை நீக்கி உலர்த்தி, அனைத்தையும் பொன்வறுவலாக வாணலியில் வறுத்து, பொடித்துவைத்துக்கொண்டு வாரம் மூன்று நாள் முதல் உருண்டைச் சோற்றில் பிசைந்து சாப்பிடுவது அஜீரணத்தைப் போக்கும் எளிய மருந்து.

உணவுக்கு முன் வெந்தயப்பொடி, உணவோடு அன்னப்பொடி அல்லது ஐங்காயப்பொடி, உணவில் தூதுவளை ரசம், உணவுக்குப் பின் கடுக்காய்ப்பொடி என்று உணவை மருந்தாக்கிச் சாப்பிட்டவர்கள் நாம். நவீனத்தில் மாடுலர் கிச்சனாக மாறிப்போன அடுப்பங்கரையில், ஆலிவ் ஆயிலும் மயோனைஸும் குடியேறி, ஓமத்தையும் திப்பிலியையும் ஓரங்கட்டி ஒழித்துவிட்டன. கொஞ்சம் அவற்றை மீட்டெடுத்து சாம்பார் பொடி, ரசப்பொடி செய்வது போல அன்னப்பொடி செய்து சாப்பிட்டுப் பாருங்கள். ஆரோக்கியம் உங்கள் வீட்டில் ஆயுளுக்கும் குடியிருக்கும்! 

==============================================


சுகர், பி.பி., போன்றவற்றை தவிர்க்க, தமிழர்கள் 'கை’க்கொள்ளும் ஒரே உத்தி... நடைப்பயிற்சி! ஆனால், நாம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி முறையானதா? இதுகுறித்த சில சரி, தப்பு விவரங்கள் இங்கே...

நடைப்பயிற்சிக்கு மாற்றாக மருந்து கிடையாது. இந்தப் பயிற்சி இல்லாமல் எடை குறைக்கவோ, சர்க்கரை நோயை வெல்வதோ சாத்தியமே இல்லை.

எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். காலையில்தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. இரவில் நடக்கையில் 5-10 சதவிகிதம் பயன் குறையலாமே தவிர, தப்பு கிடையாது.

ஓடுவதற்கும் நடப்பதற்கும் கலோரி எரிப்பில் அதிக வித்தியாசங்கள் இல்லை. 30 நிமிடங்களில் 3 கி.மீ கடக்கும் வேகத்தில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் நடக்கலாம். ஆனால், 'விண்டோ ஷாப்பிங்’ போல பராக்குப் பார்த்துக்கொண்டே நடப்பது அதிகம் பயன் தராது.

நடைக்கு முன்னர் தேநீர் அருந்தலாம். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சிக்கு முன்னர் பச்சைத் தேநீரும், கொஞ்சம் முளைகட்டிய பயறு அடங்கிய சுண்டலும் சாப்பிடலாம்.

நடக்கும் 45 மணித்துளிகளும் பாட்டு கேட்டுக்கொண்டே நடப்பேன்’ எனப் பிடிவாதம் பிடித்தால், கூடிய விரைவில் ஆரோக்கியமான காதுகேளாதவராக மாறக்கூடும்.

குடும்ப உறவுச் சிக்கல்கள், ஷேர் வேல்யூ, பட விமர்சனம், தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் எனப் பேசிக்கொண்டு நடப்பது உடற்சோர்வையும் மன உளைச்சலையுமே தரும்.

'அதான் கிச்சன்ல, மொட்டைமாடில நடக்கிறேனே... அதுவே ரெண்டு கி.மீ வரும்!’ போன்ற சமாதானங்கள் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது.

சர்க்கரை நோயாளிகள், கண்டிப்பாக வெறும் காலில் நடக்கக் கூடாது. தரமான, எடை குறைவான, மெத்தென்ற கேன்வாஸ் ஷூ அல்லது செருப்பு நல்லது.
 
RAWALIKADate: Saturday, 21 Jun 2014, 2:33 PM | Message # 3
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நலம் 360’ - 2


மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான்




தொழில்நுட்பம், நம் விரல் நுனிக்குள் உலகை அடக்கிவிட்டது  உண்மைதான். நியூயார்க் நகரத்து வெள்ளைக்காரன், தான் பயணிக்க வேண்டிய விமானத்தின் இருக்கையை உறுதிசெய்ய, சென்னையின் கடற்கரை சாலையின் அடுக்குமாடி கம்பெனியில் இருந்து தெலங்கானா ராமண்ணாவிடம்தான் பேசியாக வேண்டும். 'யோசனைகாத தூரங்கள்’ எல்லாம் எலெக்ட்ரான் துகள்களுக்குள் நெருக்கப்பட்டு மைக்ரோ விநாடிகளில் கடந்துபோக ஆரம்பித்தாயிற்று. அதே சமயம், நம்மில் பலருக்கும் அடிக்கடி எழும் கேள்வி... இந்தத் தொழில்நுட்ப வீச்சில் நாம் எல்லோரும் நெருங்கி இருக்கிறோமா... விலகி இருக்கிறோமா? என்பதுதான்.

இன்று இணையமும், முகநூலும், கைபேசிக் குறுஞ்செய்திகளும் நாம் எழுதிய அடுத்த கணத்தில், எமோட்டிக்கான் புன்னகையுடன் என்னதான் அதனையே பரிமாறினாலும், தொலைவும் காத்திருப்பும் தந்த உயிர்ப்பசையை உலரவைத்துவிட்டது என்பதே உண்மை.  



'நாட்டார் வழக்காற்றியல்’ மூத்த பேராசிரியர் தொ.பரமசிவம் தன்னுடைய  'வழித்தடங்கள்’ என்ற நூலில், ஒரு பொருளின் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையிலான பண்பாட்டு விலகல் எந்த அளவு நம் சமூகத்தைச் சிதைக்கிறது என, மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். உற்பத்தி செய்யப்படும் பொருள் குறித்த முழுமையான அறிவை மரபுவழித் தொழில்நுட்பம் அறிந்திருக்கும். அது வீட்டுக்கான வாசற்கதவு செய்வதாக இருந்தாலும் சரி, மாதவிடாயின்போது வாந்தியுடன் வரும் வயிற்றுவலிக்கான கைப்பக்குவ மருந்து செய்வதாக இருந்தாலும் சரி, யாருக்காகச் செய்கிறோம், எப்படிச் செய்கிறோம், எதைக்கொண்டு செய்கிறோம், நுகர்வோரின் மனம் அதில் எப்படிக் களிக்கும் என்ற பார்வை, மரபுவழித் தொழில்நுட்பத்தில் இருந்தது.

மூட்டு அறுவை மருத்துவர் 'எலும்புமுறிவை நான் இணைத்துவிட்டேன். நடக்கவைப்பதற்கு பிசியோதெரபிஸ்ட் வருவார்’ என்று மறைவதும், அதற்குள் அவசரமாக, 'சா£ர்... நான் என்ன சாப்பிடலாம்?’ என்றால், 'டயட்டீஷியனிடம் அப்பாயின்மென்ட் வாங்கிட்டீங்கல்ல...’ என்று பதில் வருவதும், தொழில்நுட்பம் புகுத்தும் விலகலுக்கான நிதர்சன அடையாளங்கள்.

பாரதிதாசனின் கவிதையில் வரும் 'கொண்டவர்க்கு ஏது பிடிக்கும், குழந்தைகள்  எது விரும்பும், தண்டூன்றி நடக்கும் மாமன் மாமிக்குத் தக்கதென்ன?’ என,  உண்பவர் தம்மைக் காணும் அக்கறையைத் தொலைத்தோம்.  'என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளன?, எப்படித் தயாரித்தார்கள்?’ என்ற விவரங்கள் படுநேர்த்தியாக மறைக்கப்பட்ட குப்பை உணவுக்கூட்டம் ஒவ்வொரு வீட்டிலும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. இந்தத் துரித உணவின் படைப்புகள், பெரும்பாலும் நுகர்வோரிடம் இருந்து வெகுதூரம் திட்டமிடப்பட்டு விலகியே இருக்கிறது. மெக்ஸிகோ சோளம், ஜெர்மானிய இயந்திரத்தில் இத்தாலியன் நறுமணத்துடன், கிழக்காசியக் கூலிகளால் தயாரிக்கப்பட்டு, பின்னர் இங்கிலாந்து கம்பெனியால் இந்தியாவில் வணிகப்படுத்துவதில் எப்படி விலகுகிறோம், எப்படித் தொலைந்துபோகிறோம் என்பது தெளிவாகவே புரியும். படைப்பும் நுகர்வும் அந்நியப்பட்டுப்போனது, ஆதிக்க சக்திகளுக்கான அதிகபட்ச லாபத்துக்கான சுரங்கம் என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், அது விளிம்பு நிலையில் உள்ள விலாசமற்ற மனிதர்களின் நலவாழ்வை மிதித்து நசுக்கி நாசமாக்குவது வேதனையான விஷயம்.  படைப்பின் சூட்சுமம் நேர்த்தியாக மறைக்கப்பட்டு, அதீத அலங்காரத்துடன் விற்கப்படும் 'ரெடி டு ஈட்’ உணவுகளில் பெருவாரியானவை, ஜீரண நலத்துக்குச் சிக்கல் வைப்பவை. காலை எழுந்ததும் சிரமம் ஏதுமின்றி மலத்தை வெளியேற்றும் பழக்கத்தைச் சிதைப்பவை.

'காலைக் கடன்’ என்ற வார்த்தையை யார் முதலில் அழகாகச் செதுக்கினார்கள் எனத் தெரியவில்லை. உடனே பைசல் பண்ணாவிட்டால், வட்டியைக் குட்டியாகப்போட்டு வாழ்வைச் சிதைக்கும் கடன் சுமைபோல... மலச்சிக்கல் பல நோய்களைப் பிரசவித்து நல்வாழ்வுச் சிக்கலை உண்டாக்கும். நவீன மருத்துவம், வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது மலம் கழிக்கவில்லை அல்லது இறுகிய வலியுடன்கூடிய மலம் கழித்தலை மட்டும்தான் 'மலச்சிக்கல்’ என வரையறுக்கிறது. ஆனால், பாரம்பரிய மருத்துவம் அனைத்தும், எந்த மெனக்கெடலும் இல்லாத சிக்கலற்ற காலை நேர மலம் கழித்தலை மிக ஆணித்தரமாக அறிவுறுத்துகிறது. 'கட்டளைக் கலித்துறை’ என்ற நூலோ நாள் ஒன்றுக்கு மூன்று முறை மலம் கழிப்பது நல்லது என்றும், சித்த மருத்துவ நோய் அணுகா விதியோ... 'மலத்தை அடக்கினாலோ'முழங்காலின் கீழ் தன்மையாய் நோயுண்டாகும்
தலைவலி மிக உண்டாகும்
சத்தமானபான வாயு பெலமது குறையும்
வந்து பெருத்திடும் வியாதிதானே’என்று அறிவுறுத்துகிறது. மூலநோய், மூட்டுவலி, தலைவலி முதல் எந்த ஒரு தசை, நரம்பு சார்ந்த நோய்க்கும், மலச்சிக்கலை நீக்குவதைத்தான் தலையாய முதல் படியாக, சித்த மருத்துவமும் தமிழர் வாழ்வியலும் சத்தமாகச் சொல்கின்றன. சமீபமாக, துரித நவீன வாழ்வியலில் இந்தப் புரிதல் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்படுகிறது. வரும்போது அல்லது வசதிப்படும்போது போய்க்கொள்ளலாம் எனும் மனோபாவம் பலமாக வளர்கிறது, 6.30 மணிக்கு எழுந்து 7 மணிக்குள் வண்டியேற வேண்டிய பால்குடி மறந்த பச்சிளம் கேஜி முதல், சில நேரங்களில் பல் துலக்காமல், குளிக்காமல்கூட ஆனால் மறக்காமல் செல்போன் ஹியர் பீஸை மட்டும் காதில் செருகிவிட்டு, பஸ் இருக்கையில் தூங்கிக்கொண்டே பயணிக்கும் கல்லூரி இளசுகள் வரை காலைக் கடன் கடைசிபட்சமாகிவிட்டது. பின்னாளில் இதுவே பழக்கமாகி காலைக் கடன் பலருக்கும் மதியம், மாலை, இரவுக் கடனாக இஷ்டத்துக்கு மாறிவிட்டது. 'அதுதான் போகுதே... அப்புறமென்ன?’ என அலட்சியப்படுத்துவதுதான் பல வியாதிகளுக்கும் ஆரம்பம். அதிகாலையில் மலம் கழிப்போருக் குத்தான், பகல் பொழுதில் பசி, ஜீரணம் சரியாக இருக்கும்; வாயுத்தொல்லை இருக்காது; அறிவு துலங்கும். நேற்று சாப்பிட்ட உணவில் கொஞ்சம் துவர்ப்பு கூடிருச்சோ, அதனால்தான் மலச்சிக்கலோ என வீட்டுப் பெரியவர் யோசித்து, அடுத்த முறை வாழைப்பூவின் அளவைக் குறைத்து சமைக்கும் தொழில்நுட்ப சாத்தியம், 'டூ மினிட்ஸ்’களில்  சாத்தியம் இல்லை.



பாரம்பரியப் புரிதலின்படி அன்றாடம் நீக்கப்படாத 'அபான வாயு’ உடல், உள்ளம் இரண்டையும் நிறையவே சங்கடப்படுத்தும். ஸ்கூல்விட்டு வந்ததும், புத்தகக் கட்டோடு நேரே கழிப்பறைக்குப் பறந்தோடும் குழந்தைக்கு மாலை, இரவு, நள்ளிரவில்தான் பசிக்கும். பகலில் கொண்டுசெல்லும் உணவைப் பத்திரமாகத் திருப்பிக் கொண்டுவர வைக்கும். நாள்பட்ட மூட்டுவலி முதல் பக்கவாதம், தோல் நோய்கள் வரை உடலில் சீரற்று இருக்கும் வளி, அழல், ஐயம் எனும் முக்குற்றங்களை முதலில் சீராக்கி மருத்துவம் செய்ய முதல் மருந்தாக பேதி கொடுப்பதுதான் பல ஆயிரம் ஆண்டுப் பழக்கம். ஆரோக்கியமான உடலுக்கு வருடம் இரண்டு முறை பேதி எடுத்துக்கொள்வது நல்லது. உடனே 'பேதி மருந்து ரெண்டு பார்சல்...’ என மளிகைக் கடை சாமான் மாதிரி வாங்கி வராமல், குடும்ப மருத்துவரை அணுகி நாடி பார்த்து, உடல் வன்மை பார்த்து, உடலுக்கு ஏற்ற பேதி மருந்து எடுப்பதுதான் உத்தமம்.

மலச்சிக்கலைத் தவிர்க்க, கொஞ்சம் மலம் இறுகத் தொடங்கினாலோ அல்லது அதற்கான அழைப்பு காலையில் வரவில்லை என்றாலோ மெனக்கெடுவது மிக மிக அவசியம். பெருங்குடலில் தண்ணீர் அதிகம் உறிஞ்சப்படுவது, குடலின் இயல்பான அசைவுவேகம் குறைவு, இரும்பு வலிநிவாரணி மாத்திரைகள், நார்ச்சத்து அற்ற குப்பை உணவுகள்... என மலச்சிக்கலை வரவழைக்கும் அன்றாட விஷயங்கள் நிறைய. அலட்சியமும் சோம்பேறித்தனமும் கூடுதல் காரணங்கள்.

மைக்ராஸ்கோப் டெலஸ்கோப் வைத்து பார்த்தாலும், எந்த இணையத்தில் தேடினாலும் சிக்கவே சிக்காத சூத்திரத்தில் செய்யப்படும் இது மாதிரி உணவுகளுக்குள் சிக்காமல், நிறையவே கரிசனத்துடன் உருவாக்கப்பட்ட உணவையும் வாழ்வியலையும் அப்படியே பின்பற்றுவது நிறையவே நலம் பயக்கும். ஆனால், 'கொஞ்சம் கோணலா இருந்தாலும் குத்தமில்லை’ எனக் கும்மியடித்து விற்கப்படும் பல உணவுகள், சில நேரம் நல்வாழ்வை முற்றும் கோணலாக்கும் வாய்ப்பு உண்டு.

- நலம் பரவும்...

 
RAWALIKADate: Saturday, 21 Jun 2014, 2:37 PM | Message # 4
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline


இரவில் படுக்கும்போது இளஞ்சூடான நீர் இரண்டு குவளை அருந்துவதும், காலை எழுந்ததும் பல் துலக்கி, பின்னர் இரண்டு குவளை சாதாரண நீர் அருந்துவதும் நல்லது.

பச்சிளங்குழந்தைகளுக்கு 5-10 திராட்சைகளை (அங்கூர் திராட்சை அதிலும் குறிப்பாக ஆர்கானிக் கிஸ்மிஸ் வாங்குவது நல்லது. திராட்சைக்குத்தான் சகட்டுமேனிக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கிறார்கள்.) நீரில் 2-3 மணி நேரம் மாலையில் ஊறவைத்து, பின் அதனை நன்கு நீருடன் பிசைந்து கொடுக்கலாம்.

கடுக்காய்ப் பிஞ்சை லேசாக விளக்கெண்ணெயில் வறுத்து, பொடித்த பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு முதியோர் சாப்பிடலாம். மலம் சுகமாகக் கழிவதுடன் கடுக்காயின் எக்கச்சக்கமான ஆன்ட்டிஆக்சிடன்ட்கள் வயோதிக மாற்றங்களைக் குறைக்கவும் செய்யும்.

மேலே சொன்னதுக்கு எல்லாம் பெப்பே காட்டும் நபருக்கு, நிச்சயம் மருத்துவ ஆலோசனை அவசியம்.  ஊசிப்பட்டாசு / பொட்டுவெடியில் இருந்து ஏகே 47 வரையிலான பல வகையான மலமிளக்கிகள் பாரம்பரிய மருத்துவத்தில் உண்டு.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று மூலிகைக்காய்களின் உலர்ந்த (விதை நீக்கிய பின்) தூள், ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மிக முக்கிய மருந்து; உன்னதமான உணவு. மாலையில் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் வரை சாப்பிடுவது காலையில் மலத்தை எளிதாகக் கழியவைப்பதுடன் பல ஆரோக்கிய அசைவுகளை உடலில் நிகழ்த்தும். 'திரிபலா’ என்றழைக்கப்படும் இந்த மும்மூர்த்திக் கூட்டணி, வீடுதோறும் இருக்க வேண்டிய நலப்பொக்கிஷம்.








ஐங்காயப் பொடி செய்முறை:


யிறு சம்பந்தமான உபாதகளைத் தவிர்க்க ஐங்காயப் பொடி நல்ல உபாயம். அதன் செய்முறை இங்கே...

தேவைப்படும் பொருட்கள்: 

வேப்பம் பூ ஒரு டேபிள்ஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் ஒரு டேபிள் ஸ்பூன், மணத்தக்காளி வற்றல் ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், திப்பிலி 6, சீரகம் ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4, துவரம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு, தனியா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

இவை அத்தனையையும் உலர்த்தி, வறுத்து, பருப்புப் பொடி செய்வதுபோல் மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொள்ளவும். சுடுசோற்றில், குறிப்பாக வரகரிசி சாதத்தில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயுடன் கொஞ்சம் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால், சுவையுடன் ஆரோக்கியம் அலவன்சாகக் கிடைப்பது உறுதி!
 
P_SakthiDate: Friday, 27 Jun 2014, 6:42 PM | Message # 5
Major general
Group: *Checked*
Messages: 374
Status: Offline
Hi Viji,
 
Good to see you here. Due to my work load I have not been visiting the forums much.  I will visit the forum more.
 
Take care
 
RAWALIKADate: Thursday, 03 Jul 2014, 9:53 AM | Message # 6
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நலம் 360’ - 3


மருத்துவர் கு.சிவராமன்

முடி பற்றிய புரிதலும் வரலாறும் மிக மிக நீட்சியானது. முடியைப் பராமரிக்க, அலங்கரிக்க, அதை வைத்து அடையாளப்படுத்திக்கொள்ள மனித இனம் காலம்தொட்டு எடுத்துக்கொண்ட முயற்சிகளும், அதற்கான பதிவுகளும் வியப்பையும் விஞ்ஞானத்தையும் உள்ளடக்கியவை.



'ஆய்மலர் வேய்ந்த இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே’ என, காதலோடு நெருங்கிய கணவனைக் காண வெட்கி, ஆம்பல் மலர் கொய்த தன் கூந்தலை விரித்து அதன் கருமைக்குள் புதைந்த கவித்துவம் முதல், 'அரிவை கூந்தலின் நறியவும் உளவோ...’ என ஆண்டவரும் அரசாங்கக் கவியும் அடித்துக்கொண்டது வரை சங்க இலக்கியத்தில் கூந்தல் குறித்த செய்திகள் ஏராளம். ஆணும் பெண்ணும் பன்னெடுங்காலமாகக் கூந்தலை ஆற்றலின் வடிவமாக, ஆண்மையின் அடையாளமாக, பெண்மையின் அழகியலாக, மனச்செம்மையின் சின்னமாக... எனப் பல வடிவில் வைத்திருந்தனர். சமணர்கள், துறவின் அங்கமாக மழித்ததும், சமயம் கிடைத்தபோதெல்லாம் சைவம் அதைப் பழித்ததும் வரலாறு சொல்லும் முடி குறித்த செய்திகள்.

தன் அழகிய கூந்தலை, மிகுந்த மனஉளைச்சலில் இருக்கும் பெண்கள் கத்தரிக்கோலால் வெட்டிக்கொள்ளும் செய்தி, இன்றைக்கு உளவியல் நோயான Paranoid Diseases-ல் விவரிக்கப்படுவதுபோல, தமிழின் பழம் இலக்கியங்களில் உளப் பிறழ்வு கிரியை நோய்களிலும் சொல்லப்பட்டுள்ளன. கவிதையாக சங்கம் பேசிய இந்த முடி விஷயம், இன்று இந்தியச் சந்தையில் 100 பில்லியன் ரூபாய் வணிகம் என நீல்சன் கணக்கீடு சொல்கிறது.'கோவிந்தா... கோவிந்தா...’ என திருப்பதியில் நாம் கொடுக்கும் முடி, நம்மிடம் மழித்த பிறகு fumigate  (கிருமி களை முழுமையாக நீக்க, பூச்சிக்கொல்லி மருந்தடித்து 'ட்ரீட்’ செய்யும் முறை) செய்யப்பட்டு, பல தரப் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு, கொஞ்சம் கெரட்டின் சத்து எடுக்கவும், 'தாத்தா’ வயதில் 'மாமா’ தோற்றம் காட்ட 'விக்’ செய்யவும் விற்கப்படுகிறதாம். எவ்வளவுக்குத் தெரியுமா? வருடத்துக்கு 200 கோடி ரூபாய் மதிப்புக்கு!



20 வயது வரை, 'எண்ணெயா? என் தலையைப் பார்த்தா, உனக்குத் தாளிக்கிற பாத்திரம் மாதிரி தெரியுதா?’ என்றெல்லாம் கேட்டுவிட்டு, 'அங்கிள்... நீங்க எங்கே வேலை பார்க்கிறீங்க?’ எனப் பக்கத்து வீட்டுச் சின்னப் பெண் கேட்டதும் பதறி, 'அங்கிளா... நானா?’ என ஓடிப்போய் கண்ணாடியைப் பார்க்கையில், முன் மண்டையின் ஊடாக 'கூகுள் எர்த்’ தெரியும். உடனே, 'மச்சான் டேய்... முடி கொட்டுதுபோல. யாரைப் பார்க்கலாம்?’ என்ற முதல் கேள்வி பிறக்கும்.

அப்படி விசாரிக்கும் இளைஞர் கூட்டம் சிட்டி, பட்டி வித்தியாசம் இல்லாமல் பல்கிப் பெருகுவது தெரிந்ததும், 'பிசிபிசுப்பு இல்லாத மிகவும் லேசான எண்ணெய், நறுமண எண்ணெய், நெல்லிக்காய் முதலிய மூலிகை சேர்ந்த தைலம், வைட்டமின், புரதம் எல்லாம் சேர்ந்த மருத்துவ எண்ணெய், குளிர்ப்பூட்டி எண்ணெய்...’ என, இன்று சந்தையில் பல கம்பெனிகள், இந்த முடி பிரச்னைக்கு மருந்து தருவதாக ஏராளமான எண்ணெய் களுடன் திரிகின்றன. 'சாட்சாத் சந்திர மண்டலத்தில் இருந்து எடுத்த எண்ணெயில் காய்ச்சியது என்றும், வெள்ளை கோட் அணிந்த டாக்டர் தோற்ற அழகி, 'இந்த உலகின் முதல் தர சர்ட்டிஃபிகேட் பெற்றது எங்கள் எண்ணெய்’ என்றும் அல்வா கிண்டுகிறார்கள். கூடவே, 'இது மொட்டை மண்டையில்/வழுக்கையில் முடி வளரவைக்கும்’ என்றெல்லாம் சொல்லி, சாட்சிக்கு கிராஃபிக்ஸ், அனிமேஷன் எல்லாம் செய்து, 'அப்போ அப்படி... இப்போ இப்படியாக்கும்’ என, கூந்தல் வளர்ந்ததைக் காண்பித்து நடக்கும் வணிகம் கோடிகளில் கொடிகட்டிப் பறக்கிறது.

Androgenetic alopecia எனும் வழுக்கைதான், இன்றைய இளைஞர்களுக்கும் பெண்களுக்குமான முக்கிய முடி பிரச்னை என நவீன மருத்துவம் கூறுகிறது. AR எனும் மரபணுவின் காரணமாகத்தான் இந்த வழுக்கை வருகிறது. பொதுவாக, தலையின் ஒரு சதுர செ.மீட்டரில் புதிதாக முளைக்கும் முடி, நீளமான வளர்ந்த முடி, வளர்ந்து வாழ்ந்து ஓய்வில் இருக்கும் முடி... எனப் பலதரப்பட்ட முடிகள் இருக்கும். அந்தக் கூட்டத்தில் வயதாக வயதாக புது முடி பிறக்காமல் இருப்பதுதான் வழுக்கைக்கான காரணம்.

டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் எனும் ஆண்ட்ரோ ஜனின் காரணமாக இது அதிகரிப்பதாகவும் கண்டறிந் துள்ளார்கள். தமிழர் மருத்துவமான சித்த மருத்துவமோ பித்தம் உடலில் அதிகரிப்பதும், உடற்சூடு பெருகுவதை யுமே முடி கொட்டுவதற்கான முக்கியக் காரணங்கள் எனச் சொல்கிறது. இதில் முக்கியமான விஷயம், ஹிப்போகிரேட்டஸ் பேரன்மார் சொல்லும் நவீன மருத்துவ டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோனும், புலிப்பாணி பேரன்மார் சொல்லும் சித்த மருத்துவப் பித்து ஆதிக்கமும் உற்றுப்பார்த்தால் ஒன்றாகப் புரிவது வியப்பு மட்டுமல்ல; பாரம்பரிய அனுபவத்தின் அறிவியல் செறிவும்கூட!

கூந்தல் ஆரோக்கியமாக இருக்க, குழந்தை முதலே கரிசனம் வேண்டும். உணவு அக்கறை, முடி பராமரிப்பு, கூடவே நன்மை மட்டுமே விளைவிக்கும் வாழ்வியல்... இவைதான் அடர்த்தியான முடிக்கு அடிப்படை. அதோடு அப்பாவுக்கு 'அனுபம்கெர்’ நெற்றி இருக்கும்போது, பையனுக்கு 40 வயதில் 'விராட் கோஹ்லி’ கூந்தல் வராதுதான். முடி கொட்டுவதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி, எந்த நேரமும் அதைப் பற்றியே சிந்தித்து, கூகுளில் துழாவி, எல்லா மருத்துவர் கிளினிக்கிலும் கர்ச்சீஃப் போட்டு வைத்து, வாழ்வைத் தொலைக்கும் இளைஞர் கூட்டமும் இன்று ஏராளம். 'சார்... போன 15 நாள்ல எனக்குக் கொட்டுன முடியைப் பார்க்கிறீங்களா?’ என ஒரு கைப்பையில், தினமும் படுக்கையில், பாத்ரூமில், சீப்பில் சேகரமான முடிகளை ஒன்றுவிடாமல் சேகரித்து எடுத்து வந்த அந்த இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் எனக்கு திகில் ஏற்படுத்தினார். 'சுவாரஸ்யமாப் படிச்சிட்டு இருக்கும்போது, என்னை அறியாம முடியை விரல்ல சுத்தி 'பச்சக்’னு பிடுங்கிடுறேன்’ என, தலைப்புண்ணோடு முடி கொட்டி வந்த பெண்ணையும் பார்த்துப் பயந்திருக்கிறேன்.

'தலைக்குக் குளிச்சிட்டு காஞ்சதும் தேங்காய் எண்ணெய் கொஞ்சமாவது தேய்ச்சுக்கணும்’ என்பது மட்டும்தான் நம்மவர்கள் கடைப்பிடிக்கும் பல ஆண்டு பழக்கம். ஆனால் இன்றைக்கு, பல குளியல் அறைகளை எட்டிப் பார்த்தால், ஒரு மருந்துக்கடை அலமாரி போலவே காட்சியளித்து பயம் தருகிறது. பழைய நம்பியார் படங்களில் கண்ணாடிக்குப் பின் உள்ள அலமாரியில் தங்கக்கட்டிகள் இருப்பதுபோல, குளியலறை சவரக் கண்ணாடிக்குப் பின் பல கெமிக்கல் சாமான்கள். 'குளிப்பதற்கு முன் இந்த ட்ரீட்மென்ட் ஆயிலை கொஞ்சம் தேய்க்கணும். அப்புறம் இந்த ஷாம்பு, அதுக்குப் பின்னாடி இந்தக் கண்டிஷனர், அதன் பின்னர் உலர்த்திவிட்டு இதில் சில சொட்டுகள்... அதோடு முடி கலையாமல் இருக்க இந்த கிரீம், மினுமினுப்பாக இருக்க இந்தத் தெளிப்பான்’ என, ஏழெட்டுச் சங்கதிகளை சின்னதாக ஒரு யாகம் நடத்துவதுபோல தலையில் நடத்தும் இளைஞர்களுக்கும், ஆன்ட்டி-அங்கிள் பருவத்தினருக்கும், சோடியம் லாரல் சல்பேட், மீத்தைல் ஐசோ தையோசிலினைன் முதலான பல விஷமிகள் அலர்ஜி முதல் கேன்சர் வரை வரவைப்பன என்று தெரியுமா?
 
RAWALIKADate: Thursday, 03 Jul 2014, 9:54 AM | Message # 7
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சரி, இதற்கெல்லாம் என்ன செய்யலாம்?

சின்ன வயசு முதலே சாப்பாட்டில் முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, சிறுகீரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். கம்பஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலை துவையல்... போன்றவை வாரம் 2-3 நாட்கள் அவசியம். மாதுளை ஜூஸ், காய்ந்த திராட்சை, உலர் அத்தி சாப்பிடுவது மிக நல்லது. வாரம் ஒரு நாளேனும் தலைக்கு நல்லெண்ணெய்த் தேய்த்துக் குளிப்பது அவசியம். தினமும் தலைக்குக் குளிப்பது முடி கொட்டும் என்பது, புளியமரத்தடியில் படுத்தால் பேய் பிடிக்கும் என்பது மாதிரியான மூடநம்பிக்கை. தலைக்குக் குளித்தால் முடி வளர்க்கும். சிஸ்டின் லைசின், அர்ஜினைன், மித்தோனைனின் போன்ற அமினோ அமிலங்களின் குறைவும்கூட முடி கொட்டுவதற்கான காரணங்கள். குழந்தைப் பருவம் முதல் வீட்டில் அடிக்கடி சுண்டல், நவதானியச் சத்துமாவுக் கஞ்சி, சிறுதானிய உணவு, பீன்ஸ், அவரை முதலான காய்கறிகள் சாப்பிடுவது, முடி கொட்டும் குறைபாடு நிகழாது தடுக்கும். இளம் வயதில் உணவின் மீதான அக்கறை, பின்னாளில் இளநரை இல்லாமல் முடியைக் காக்கும்!

திருச்செங்கோடு அருகில் 2,200 அடி தோண்டி தண்ணீர் எடுத்து, தென்னைக்கு ஊற்றுகிறார்களாம். இப்படிச் சூழல் சிதைவால் நீர் வற்றி, காற்று மாசுபட்டுப்போனதும் முடி கொட்டுவதற்கானப் பின்னணிச் சூழலியல் காரணங்கள். கட்டுப்படாத சர்க்கரை, இதய நோய், அதற்கான தவிர்க்க முடியாத மருத்துவம், சினைப்பை நீர்க்கட்டிகள், புராஸ்டேட் கோள வீக்கம், தைராய்டு குறைவு... என, சில மருத்துவக் காரணங்களும் முடி கொட்டுதலுக்குத் துணை செய்யும். இவையெல்லாம் தாண்டி, முடி கொட்டுவதற்கு மிக முக்கிய இன்னொரு காரணம், பரபரப்பாகவும், பரிதவிப்பாகவும், பயமாகவும் நகரும் மனம். பல பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் முடி கொட்டுவதற்கும் இதுதான் முக்கியக் காரணம். இளைஞர்களுக்கு வாழ்வின் முக்கிய நகர்வுகள் மீதான பயமும் அவநம்பிக்கையும் முடி கொட்டவைக்கும் முக்கியக் கூறுகள். மசபுசா மலையடிவார மூலிகை, அல்ட்ரா டெக்னாலஜி அணுக்கள் அடங்கிய ட்ரீட்மென்ட்டைவிட, சின்னதாக உச்சி முத்தம், கைகளை அழுந்தப் பற்றிய நடை, தோளோடு சேர்த்த அரவணைப்பு, 'அட’ எனும் பாராட்டுகள்கூட முடி கொட்டுவதை நிச்சயம் நிறுத்தும். செய்துதான் பாருங்களேன்..!

- நலம் பரவும்...
 
RAWALIKADate: Thursday, 03 Jul 2014, 9:54 AM | Message # 8
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
பொடுகு, டை... சில நம்பிக்கைகள்!

1. பொடுகுத் தொல்லை, தலையில் உள்ள சரும உலர்வால் ஏற்படு வதே தவிர, பூச்சித் தொற்று காரணம் கிடையாது. 'பொடுதலை’ என்ற ஒருமூலிகை நம் மண்ணில் உண்டு. அதன் சாற்றை, தேங்காய்எண்ணெயில் காய்ச்சி வாரம் 2-3 நாட்கள்தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். SCALP PSORIASIS எனும் தோல்நோயைப் பலரும் பொடுகுத் தொல்லை என தவறாக நினைத்து அலட் சியப்படுத்துகின்றனர். அதிக
அளவில் பொடுகுத் தொல்லை இருந்தால் குடும்ப மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்.

2. 100 சதவிகித 'மூலிகை டை’ என்று ஒன்று உலகில் இல்லவே இல்லை. 'கௌரவ வேடத்தி லாவது நீங்க நடிச்சா போஸ்டர்ல உங்க படம் போட்டுபப்ளிசிட்டி பண்ணிக்குவோம் சார்!’ எனப்பிரபலத்தை 'லைட்டா’ காட்டி படம் எடுப்பது போலத்தான், மூலிகை டை விஷயமும். கறுப்பு வண்ணம் தரும் நிறமி மட்டும்தான் மூலிகை.அதைத் தலையில் நிறுத்துவது ரசாயனக் குழம்பே!

3. தலையில், தாடி, மீசை, புருவத் தில்ஆங்காங்கே மழித்ததுபோல் வரும் சிக்கலை 'புழுவெட்டு’ எனும் அலோபீசியா ஏரியேட்டா என்பார்கள். இது உடல் நோய்எதிர்ப்பாற்றல் குறைபாட்டால் முடி வளர்ச்சியைப் பாதிக்கும் நோய். ஆனால் புழு, பூச்சிகள் இதற்குக் காரணம் கிடையாது. மற்றவர் பயன்படுத்தியசீப்பைப் பயன்படுத்தியதால் பரவும் தொற்று நோயும் கிடையாது. இதற்கு தடாலடி மருத்துவம் பயன் அளிக்காது. மன அழுத்தம் காரணமாக ஏற்படும் இந்தத் தொல்லைக்கு, தொடர்ச்சியான சிகிச்சை மட்டுமே அதுவும் மெள்ள மெள்ள நிவாரணம்அளிக்கும்!

வீட்டிலேயே முடி வளர்ச்சித்தைலம் செய்வது எப்படி?

1. தேங்காய் எண்ணெய் - 1.5 லிட்டர்.(செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும்
புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக்கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்!)

2. வெள்ளைக் கரிசாலைச் சாறு - 0.5 லிட்டர்

3. கீழாநெல்லிச் சாறு - 0.5 லிட்டர்

4. அவுரி சாறு - 0.5 லிட்டர்

5. கறிவேப்பிலைச் சாறு - 0.5 லிட்டர்

6. பொடுதலைச் சாறு - 0.5 லிட்டர்

7. நெல்லிக்காய்ச் சாறு - 0.25 லிட்டர்

8. சோற்றுக் கற்றாழைச் சாறு - 0.25 லிட்டர்

(மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில்பரவலாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.)



இலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம்சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில்அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் களில் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர்அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.

இந்தச் சாறுகளின் கலவையைத் தேங்காய்எண்ணெயுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றிதைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிருக்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக்கொள்ளவும்.

இது மருந்து கிடையாது. அதனால் முடிவளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் தைலம் குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.) அதன் பிறகே தலைக்குக் குளிக்கவேண்டும். பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷனர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங்களின் கலவைதான். எண்ணெய் தேய்க்காத தலைமுடி கண்டிப்பாக
உதிரும் என்பது நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!


Message edited by RAWALIKA - Thursday, 03 Jul 2014, 9:57 AM
 
RAWALIKADate: Thursday, 03 Jul 2014, 10:08 AM | Message # 9
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நலம் 360’ - 4


மருத்துவர் கு.சிவராமன்


புத்திசாலியாக இருப்பதற்கும் ஞாபகசக்திக்கும் தொடர்பு இல்லை என்பதற்கு, வால்ட் டிஸ்னி, வின்ஸ்டன் சர்ச்சில், அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்... எனப் பல உதாரணங்கள் உண்டு. ஆனாலும், 'நேத்து படிச்சது இன்னைக்கு ஞாபகம் இல்லைன்னா எப்படி... மண்டைக்குள்ள அப்படி என்ன ஓடுது?’ எனும் கவலை நம்மில் பலருக்கும் உண்டு.  

ஒன்பது வகையான அறிவாற்றல்கள் இருப்பதாக நவீன அறிவியல் சொன்னாலும், படித்ததை ஞாபகம் வைத்து, அப்படியே வாந்தி எடுக்கும் ஸ்கூல் இயந்திரத்தை, 'பல தொழிலுக்கும் தகுதியானவர்’ என்று தேர்ந்தெடுப்பதுதான், அந்த ஒன்பது அறிவாற்றல்களில் ஞாபகசக்தியை மட்டும் சமூகம் உசத்திப் பிடிக்கக் காரணம்!

எப்படியோ முக்கி முனகிப் படித்து, வேலை தேடி, உழைத்து, ஓடி, ஓயும் சமயத்தில் மீண்டும் அந்த 'ஸ்கூல் மனப்பாடப் பிரச்னை’ தலைதூக்கினால், சின்ன வயதில் ஸ்கேலில் வாங்கிய அடி, இப்போது மனதில் விழத் தொடங்கும். அந்த மறதியைத்தான் 'அல்சீமர்’ என்கிறது மருத்துவ மொழி; 'வயசாச்சா... அவருக்கு ஓர்மையே இல்லை’ என்கிறது உள்ளூர் மொழி. 'கார் சாவியை எங்க வெச்சேன்?’, 'காதலியிடம் புரபோஸ் பண்ண தேதியை எப்படி மறந்து தொலைச்சேன்?’ அவன் முகம் ஞாபகம் இருக்கு... ஆனா, பேரு மறந்துபோச்சே’ எனும் முக்கல் முனகல்கள், ஆரம்பகட்ட மறதி நோய் (அல்சீமர்) என்கிறது நவீன மருத்துவம். இப்படி, கொஞ்ச மாக மறக்கத் தொடங்கி, கடைசியாக எங்கு இருக்கிறோம், என்ன செய்ய வந்தோம்... என்றெல்லாம் மறக்க ஆரம்பிப்பதுதான் அல்சீமர் நோயின் உச்சகட்ட அட்டகாசம்!  

அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்த மறதி பற்றிய படமான 'பிளாக்’ பார்த்தவர்களுக்கு, இந்த அல்சீமர் நோயின் பிரச்னை கொஞ்சம் புரிந்திருக்கும். 2001-2011-ம் ஆண்டுகள் வரை, 1,000 முதியவர்களைத் தொடர்ந்து ஆராய்ந்த ஆய்வு ஒன்று, 'முன் எப்போதும் இல்லாதபடி இந்தியாவில் இந்தப் பிரச்னை அதிகரித்துள்ளது. அதே சமயம் ஐரோப்பா, அமெரிக்கா அளவுக்கு நாம் அதிக அளவில் அல்சீமருக்குள் சிக்கவில்லை. என்றாலும், இங்கே இருக்கும் வயோதிகத்தின் சமூகப் பிரச்னைகள் பலவற்றை கருத்தில்கொண்டால், எதிர்காலத்தில் அல்சீமர் நிச்சயம் மிகப் பெரிய சவால்!’ என எச்சரிக்கிறது.

ஆம்... இது நிதர்சன உண்மை! வழக்கமாக இல்லாமல், இந்த நோய் ஏன் இங்கு கொஞ்சம் குறைவு எனப் பார்த்தால், 'APO4’ எனும் மரபணு சங்கதி என்கிறது ஆய்வு முடிவுகள். வளர்ந்த நாட்டினரைவிட 'APO4’ மரபணு சங்கதி நம்மவர்களுக்குக் குறைவாக இருந்து, பாதுகாப்பு அளிக்கிறது என்று மரபணு விஞ்ஞானிகள் பலர் கூறுகிறார்கள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சூரியனை வணங்கும் சாக்கில் உடம்பின் உள்ளிருக்கும் நாளமில்லா சுரப்பிகளைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கும் யோகாசனப் பழக்கம் போன்றவை அதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு முன்னரே 'மனசுதாம்லே முக்கியம்; அது சரியா இருந்துச்சுன்னா, ஒரு மந்திர மாங்காயும் வேண்டாம்’ என நியூரோ பிசியாலஜியை வேறு மொழியில் சொன்ன திருமூலரின் கூற்றை, சில பல நூற்றாண்டுகளாவது பின்பற்றிய வாழ்வியல்தான் இந்தப் பாதுகாப்புக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், அதெல்லாம் 'ஆஹா... மெள்ள நட... மெள்ள நட... மேனி என்னாகும்?’ காலத்தில். இந்த 'எவன்டி உன்னைப் பெத்தான் பெத்தான்...’ யுகத்தில் நிலைமை அப்படியா இருக்கிறது?

'ஏம்ப்பா... அப்பா சாப்பிட்டாங்களா?’ எனக் கேட்க பெரும்பாலும் வீட்டில் எவரும் இல்லை. 'அவரு ஒருத்தருக்காக மூணு பெட்ரூம் உள்ள ஃப்ளாட்டுக்குப் போக வேண்டியிருக்கு. அவரு எப்போ 'போவாரோ’ தெரியலை?’ என்ற 'எதிர்பார்ப்பு’, தீப்பெட்டிக் குடியிருப்பு நகர வாழ்க்கையில் இப்போது அதிகம். 'நீங்க அந்தக் கல்யாணத்துக்குப் போயி அப்படி என்ன ஆகப்போகுது? உங்களைக் கவனிக்கவே தனியா ஒரு ஆள் வேணும். நாங்க மட்டும் போயிட்டு வந்துடுறோம்’ என்ற 'அக்கறை’யான உதாசீனமும் சகஜம். 'அதெல்லாம் டிக்கெட் புக் பண்ணும்போதே, 'கீழ் பர்த் வேணும்’னு கேட்டிருக்கணும். இப்போ வந்து ஏற முடியாதுனா எப்படி? எனக்கும்தான் லோ பேக் பெயின்’ எனும் சக முதிய பயணிகளைக் கண்டிக்கும் சுயநலம், 'யோவ் பெருசு... நீயெல்லாம் எதுக்குய்யா தியேட்டருக்கு வர்ற? அதுதான் திருட்டு டி.வி.டி விக்கிறாங்களே. இங்கே கூட்டத்துல வந்து எங்கேயாவது விழுந்து வைக்கிறதுக்கா? போய் ஓரமா நில்லுய்யா...’ என்ற தீண்டாமை, 'அதுக்குத்தாம்பா, இந்தப் பிரச்னை எல்லாம் இல்லாத ஒரு ஹோமுக்கு உங்களைக் கூட்டியாந்திருக்கேன். வருஷத்துக்கு ஒருக்கா திருப்பதிக்கு வந்து பெருமாளைச் சேவிச்சிட்டு, தி.நகர்ல ஜட்டி, பனியன் எல்லாம் வாங்கிட்டு அப்படியே உங்களையும் பார்த்துட்டுப் போயிடுவேன்’ எனும் 'க்ரீன் கார்டு ஹோல்டர்’ மகனின் கரிசனம்... எனப் பல சங்கடங்களைத் தினமும் கடக்கவேண்டியுள்ளது இப்போதைய வயோதிகம்!



இவை அத்தனையையும் மூளையின் கார்டெக்ஸ் மடிப்புகளுக்குள் வைத்துப் புழுங்கும்போது, இத்தனை காலம் குறைச்சலா இருந்த 'APO4’ மரபணு, எபிஜெனிடிக்ஸ் விநோத விதிகளின்படி விக்கி, வீங்கி, அல்சீமர் நோய், கட்டுக்கடங்காமல் போகக்கூடிய சாத்தியங்கள் அதிகம். 'இருக்கிற வியாதியைப் பார்க்கவே நேரம் இல்லை. இதைப் பத்தி இப்போ என்ன அக்கறை வாழுதாம்?’ என அவசரப்பட வேண்டாம்.

2020-ல் உலக மக்கள்தொகையில் 14.2 சதவிகித 'வயோதிகர்கள்’ இந்தியாவில்தான் இருப்பார்கள் என்கிறது ஒரு கணக்கு. அதேபோல் பென்ஷன் பேப்பர் வந்த பின்தான் மறதி நோய் வரும் எனக் கிடையாது. முன் நெற்றி, மீசைப் பகுதிக்கு டை அடித்து, செல்ல தொப்பையை அமுக்கி, திணித்து ஜீன்ஸ் போட்டுக் கொள்ளும் 40-களிலும் இந்த மறதி நோய் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
 
RAWALIKADate: Thursday, 03 Jul 2014, 10:08 AM | Message # 10
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
'அவ்வளவா பிரச்னை இல்லை’ என்று நம்மை எப்போதோ யோசிக்கவைத்த மறதி, 'அடடா... மறந்துட்டேனே’ என நாம் சுதாரிக்கும் மறதி, மற்றவர் 'அதுக்குள்ள மறந்துட்டீங்களா?’ என அங்கலாய்க்கும் மறதி, 'சார்... அவரு மறதி கேஸ். எழுதிக் குடுத்துடுங்க’ என அடுத்தவர் எச்சரிக்கும் மறதி, 'எதுக்குக் கிளம்பி வந்தேன்?’ என யோசித்து நடு வழியில் திணறும் மறதி, 'நான் யார், என்ன செய்ய வேண்டும்?’ என்பதே தெரியாதுபோகும் மறதி, ஒட்டுமொத்தமாகச் செயல் இழந்து முடங்கும் மறதி... என அல்சீமர் மறதி நோயை ஏழு படிநிலைகளாகப் பார்க்கிறது நவீன மருத்துவம்.

சற்றே ஆழ்ந்து யோசித்தால், அவற்றில் இரண்டு, மூன்றை நம்மில் பலர் அனுபவித்திருப்போம். ஆனால், சாதாரண வயோதிகத்துக்கும், இந்த மறதி நோய்க்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. மூளையில் புதிதாக முளைக்கும் அமைலாய்டு பீட்டாவை இதற்கு முக்கியமான தடயமாகப் பார்க்கிறார்கள். சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, அதிக ரத்தக்கொதிப்பு போன்ற தொற்றா வாழ்வியல் நோய்கள்தான், இந்த மறதி நோயைத் திரிகிள்ளித் தூண்டும் என உலகச் சுகாதார நிறுவனம் பலமாக எச்சரிக்கிறது.

ஓர் ஆச்சர்யமான விஷயம், Mediterranean diet  சாப்பிட்டால் இந்த மறதி நோய் வருகை குறையும் என்பது! 'இது என்னப்பா புது கம்பெனி உணவு?’ எனப் பதற வேண்டாம். மத்தியத் தரைக்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் வழக்கமாக இருந்த பாரம்பரிய உணவுகளை 'Mediterranean diet ’ என்கிறார்கள். இந்த வகை உணவுகள், அதிக ஆன்ட்டி ஆக்சிடென்ட்களையும், அழற்சியைக் குறைக்கும் (Anti-inflammatory) தன்மையையும் கொண்டவை என, அமெரிக்கா, இங்கிலாந்து விஞ்ஞானிகளால், ஹார்வர்டு போன்ற பல்கலைக்கழகங்களில் ஆராயப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் உலகச் சுகாதார நிறுவனப் பட்டியலில் அவற்றுக்குத் தனி இடம் கிடைத்திருக்கிறது.

அந்த மத்தியத் தரைக்கடல் சங்கதிகளுக்கு, நம் ஊர் மிளகு, சீரகம், வெந்தயம், பூண்டு, பெரிய நெல்லிக்காய், முருங்கை, மணத்தக்காளி கீரை, கம்பு, கேழ்வரகு முதலான சிறுதானியங்களும், பாரம்பரிய இந்திய உணவுகளும் கொஞ்ச மும் சளைத்தவை அல்ல. இவை எல்லாமே அதைவிட அதிக ஆன்ட்டி ஆக்சிடெண்ட்களையும், அழற்சியைக் குறைக்கும் தன்மையையும் கொண்டவைதான். கூடுதலாக, மருத்துவக் குணம்கொண்ட பல தாவர நுண்சத்துக்களையும் கொண்டது.



என்ன... படிக்கப்போன நம்ம ஊர்  அண்ணன்மார்கள், கம்பங்கூழையும் சோளப் பணியாரத்தையும் பற்றி யோசிக்காமல், நாம் ஏன் கத்திரிக்காயின் மரபணுவை மாற்றி அதில் சிக்கன் 65 சுவை கொண்டுவந்து மக்களைக் குஷிப்படுத்தி, அதற்கு காப்புரிமை பெற்று, நாம் மட்டுமே நிறைய சம்பாதித்து, ஜாகுவார் காரில் உல்லாசமாகப் போகக் கூடாது என தீவிரமாகச் சிந்தித்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுகிறார்கள்.

எதிர்கால மறதி சிக்கலில் இருந்து தப்பிக்க, நிகழ்காலத் தேவை, அப்போது இருந்த அக்கறை மட்டுமே.

நம் பிள்ளைகளுக்கு, நெருக்கடியிலோ அல்லது சுயநலத்திலோ உதாசீனப்படுத்தும் உள்ளத்தை, 'எனக்கான ஸ்பேஸ் இது’ எனும் அலங்கார வார்த்தை மூலம் சுயநலமாக வாழக் கற்றுக்கொடுக்கிறோம். அப்படி நாம் கற்றுக்கொடுக்கும் அவர்களது 'எனக்கான ஸ்பேஸ்’ வாழ்வியலில், நமக்கான 'ஸ்பேஸ்’ நிச்சயம் இருக்காது. நடைப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, அன்றாடம் ஆரோக்கியமான உணவு என வாழ்க்கையைத் திட்டமிடத் தவறினால், பெற்ற பிள்ளை, மாமன், மச்சான் என அனைவரையும் மறந்துபோகும் மறதி நோய்கொண்ட வயோதிகம் வரும் சாத்தியம், மிக அதிகம் என்பதை ஞாபகத்தில் கொள்வோம்!- நலம் பரவும்...

பி.குறிப்பு: இரு வாரங்களுக்கு முந்தைய ஜீரணம் குறித்த கட்டுரையில், ஒரு நாளைய உமிழ் நீர் சுரப்பு 11.25 லிட்டர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது தவறு. 1 முதல் 1.25 லிட்டர் என்பதே சரி!


ஞாபகசக்தி அதிகரிக்க...

வல்லாரை கீரையைச் சட்னியாக அரைத்துச் சாப்பிடலாம். அதிலுள்ள Asiaticosides,  மூளைச் சோர்வு தராமல் அறிவைத் துலங்கவைக்கும் என்று நவீன அறிவியல் நம் பாரம்பரியப் புரிதலுக்குச் சான்று அளிக்கிறது. கொத்துமல்லி சட்னி அரைப்பதுபோல் கொஞ்சம் மிளகாய் வற்றல், கொஞ்சமாக புளியைச் சேர்த்து சட்னியாக அரைத்து தோசைக்குச் சாப்பிடலாம். வல்லாரை தோசை, வல்லாரை சூப் இன்றைக்கு பாரம்பரிய உணவகங்களில் பிரபல உணவும்கூட.

'பிரமி’ - பாரம்பரிய மருத்துவத்தின் பிரபலமான ஞாபகசக்தி மருந்து. மறதியை நீக்கவும், ஞாபகசக்தியை அதிகரிக்கவும் இதில் உள்ள Baccosides பயன் அளிப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது, நீரோடைப் பக்கம் நிற்பதால் 'நீர்ப் பிரமி’ என்றும் அழைக்கப்படும்.

சித்த மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படும் வாலுளுவை அரிசி எனும் மூலிகையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில், மறதிக்கு மருந்து எடுக்கும் முயற்சி இன்றும் ஆய்வில் உள்ளது. நீதி வழங்கும் முன் அலசி ஆராய(!) அந்தக் கால நீதிபதிகள் இதில் இரண்டு அரிசி எடுத்து வாயில் போட்டுக்கொள்வார்களாம்.

 DHA   - ஞாபகமறதி நீக்க பயன்படும் சத்து மீனில் இருந்தும், ஃபிளாக்ஸ் விதையில் இருந்தும் இதை உணவில் அன்றாடம் பெற்றுக்கொள்ள முடியும்.

வல்லாரையோ, பிரமியோ எதுவாக இருந்தாலும் நாம் எடுக்கும் முயற்சியில்தான் பயன் அளிக்குமே தவிர, சுவர் ஏறிக் குதித்து படம் பார்த்துவிட்டு குப்புறப் படுத்துத் தூங்கும் பிள்ளைக்கு, சந்தனக் காப்பு அரைத்துக் குளிப்பாட்டினாலும் எதுவும் நினைவில் நிற்காது!



யோகா அளிக்கும் ஆஹா மெமரி!


தினசரி 20 முதல் 40 நிமிடங்கள் யோகாசனப் பயிற்சிகள் மற்றும் பிராணாயாமப் பயிற்சிகள், முதியோருக்கு மறதியைப் போக்கவும், இளைஞர்களுக்கு ஞாபகசக்தியைப் பெருக்கவும் பெரும் அளவில் பயன்படும் என்று பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. யோகாசனப் பயிற்சியும், பிராணாயாமப் பயிற்சியும், வார்த்தைகளைத் தேடும் மறதியை, உருவ மறதியை, கவனச் சிதறலால் ஏற்படும் மறதியை, வார்த்தைகளைச் சரளமாக உச்சரிப்பதை நிர்வகிக்கும் ஆற்றல் குறைவு, பணியில் மந்தம் போன்றவற்றைத் தீர்ப்பதாக Trail Making Test மூலம் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள். கூகுளிலோ, பழைய புத்தகக் கடையில் தற்செயலாகப் பார்த்த புத்தகத்திலோ கற்றுக்கொள்ளாமல், யோகாசனப் பயிற்சியில் தேர்ந்த ஆசிரியரிடம் இதைக் கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்!
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » நலம் 360’ (Thanks - Vikatan)
  • Page 1 of 3
  • 1
  • 2
  • 3
  • »
Search: