அம்மா ரெசிபி! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 3
  • 1
  • 2
  • 3
  • »
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » அம்மா ரெசிபி! (அம்மா ரெசிபி! - தொடர் - நன்றி டாக்டர் விகடன்)
அம்மா ரெசிபி!
RAWALIKADate: Wednesday, 12 Feb 2014, 9:05 PM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
 
RAWALIKADate: Wednesday, 12 Feb 2014, 9:07 PM | Message # 2
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
ராகி மசாலா ரிப்பன்

'’முன்பு எல்லாம் கேழ்வரகு மாவில் அடை, தோசை, புட்டு போன்றவை செய்வதுதான் எங்கள் வீட்டில் வழக்கம். ஆனால், குழந்தைகள் டிபனைவிட, நொறுக்குத் தீனி சாப்பிடத்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால், இப்போது கேழ்வரகு மாவில் பக்கோடா, தட்டை, முறுக்கு, ரிப்பன் என்று வகை வகையாகச் செய்து தர ஆரம்பித்துவிட்டேன். தட்டில் வைத்த அடுத்த நொடியே அத்தனை யும் காலியாகிவிடுகிறது. கேழ்வரகு முறுக்கைக் கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள். சத்துக்குச் சத்து... சுவைக்குச் சுவை!''  சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் இந்திராணி சொன்ன அசத்தல் டிப்ஸ் இது. ராகி மசாலா ரிப்பன் செய்யும் முறையையும் அவரே விவரிக்கிறார். 



தேவையான பொருட்கள்: 

கேழ்வரகு மாவு - 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், மிளகாய்த்தூள், பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், சோம்புத்தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.  செய்முறை: 

எண்ணெயைத் தவிர, மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, முறுக்கு மாவு பதத்தில் கலந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் நெருப்பை சிம்மில் வைத்துக்கொள்ளவும். முறுக்குக் குழாயில் ரிப்பன் அச்சுப் போட்டு மாவை வைத்து காய்ந்த எண்ணெயில் ரிப்பன்களாகப் பிழியவும். சிவந்ததும் எடுக்கவும். ராகி மசாலா ரிப்பன் தயார். பூண்டுக்குப் பதில் வெங்காயத்தையும் விழுதாக அரைத்துச் சேர்த்துச் செய்யலாம்.சித்த மருத்துவர் வேலாயுதம்:  

கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் அடங்கி இருக்கின்றன. நீரழிவு நோய் தாக்கத்தில் இருந்து விடுபடவும், உடல் வலுப்பெறவும், குடல் புண்ணை ஆற்றவும், பித்தம் தொடர்பான நோய்களைப் போக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும், உடல் சூட்டைத் தணிக்கவும், சருமத்தைப் பளபளப்பாக்கவும் கேழ்வரகு உதவுகிறது. இதனுடன், புரதச்சத்து நிறைந்த பொட்டுக் கடலை மாவும் சேர்ப்பதால் குழந்தைகளின் வளர்ச்சி அதிகரித்து உடலுக்கு நல்ல உறுதியைத் தரும்.படங்கள்: பீரகா வெங்கடேஷ்
 
RAWALIKADate: Wednesday, 12 Feb 2014, 9:09 PM | Message # 3
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
பருப்பு அடைஅம்மா ரெசிபி!''என் வீட்டில் வாரம் ஒரு முறை அடை செய்து சாப்பிடுவது வழக்கம். குழந்தைகள் முதல் வீட்டில் உள்ள பெரியவர்கள் வரை விரும்பிக் கேட்கும் வெரைட்டியான உணவு இதுதான். மொறுமொறுவென முருங்கை அடையின் வாசமும், பயறு வகைகளின் சுவையும் நாவைச் சுண்டி இழுக்கும்.'' என்கிறார் ஓசூரைச் சேர்ந்த வீ.வித்யா. முருங்கைக் கீரை நவதானிய அடை செய்யும் முறையை விவரித்தார். தேவையானவை: 

பச்சரிசி - கால் கிலோ, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை, கறுப்பு சுண்டல் கடலை, காராமணி, பச்சைப்பயறு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா 50 கிராம், சுத்தம் செய்து ஆய்ந்த முருங்கைக்கீரை - 2 கப், காய்ந்த மிளகாய் - 8, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

அரிசியுடன், காய்ந்த மிளகாய், பருப்பு, பயறு வகைகளைச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். இதை மிக்ஸியில் தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். மாவில் முருங்கைக்கீரை, உப்பு சேர்த்துக் கலக்கி தோசைக் கல்லில் அடையாக வார்த்து எடுக்கவும்.  இந்த அடைக்குத் தொட்டுக்கொள்ளத் தக்காளி சட்னி அல்லது சின்ன வெங்காயச் சட்னி நன்றாக இருக்கும்.
டயட்டீஷியன் குந்தலா ரவி:  

தானிய வகைகளில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இவை வளரும் குழந்தைகளுக்கு ஏற்றவை. பயறு வகைகளை அதிகம் சேர்த்தால், சிலருக்கு வாயுத் தொல்லை வரலாம். ஜீரண சக்திக் குறைபாடு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் பயறு வகைகளைக் குறைவாகவும், முருங்கைக் கீரையை அதிகமாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.எலும்புகள் உறுதி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலுக்கு வலு சேர்ப்பதுடன், கபம், பித்தத்தையும் குறைக்கும்.படங்கள்: நா.வசந்தகுமார்
 
RAWALIKADate: Wednesday, 12 Feb 2014, 9:11 PM | Message # 4
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
பஞ்சவர்ணப் பொங்கல்அம்மா ரெசிபி''81 வயதாகும் என் அம்மாவுக்கும், என் கணவருக்கும் என் சமையல்தான் ரொம்பப் பிடிக்கும்.  அதிலும் சத்து நிறைந்த சிறு, குறு தானியங்களைக்கொண்டு நான் செய்யும் பஞ்சவர்ணப் பொங்கலை விரும்பிச் சாப்பிடுவார்கள். எளிதில் ஜீரணமாகும். சாதாரணப் பொங்கலைவிட, அதிகச் சுவையுடன் இருப்பதால், நெய் தேவைப்பட்டால் மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம்.  குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது, நெய்யில் முந்திரியை வறுத்துச் செய்து தருவேன்.
தினமுமே சிறு தானியங்களில், காலையில் தினைக் கஞ்சி. மத்தியானம் அரிசியுடன் வரகு சேர்த்த சமையல். சாயங்காலம், அரிசி கறுப்பு உளுந்துடன், கோதுமை, ராகி மாவுகளைக் கலந்து தோசை செய்வேன். வீட்டில் இருக்கும் வயதானவர்களும் ஆரோக்கியமாக இருப்பதற்கு இதுதான் காரணம்.'' - சிலாகித்துச் சொல்லும் திருச்சியைச் சேர்ந்த மீனாட்சி மோகன், பஞ்சவர்ணப் பொங்கல் செய்வது பற்றிச் சொல்கிறார்.

தேவையானவை:

தினை, வரகு, அரிசிக் குருணை, கோதுமை ரவை, பாசிப் பருப்பு இவற்றைச் சம அளவு கலந்து அதில், ஒரு தம்ளர் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். 
இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம், நெய் - சிறிதளவு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை:

தானியக் கலவையை வெறும் கடாயில் லேசாக வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு சிறிது தண்ணீர் விட்டுக் களைந்து சுத்தம்செய்து எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து  குக்கரில் குழைய வேகவிடவும். கடாயில் சிறிது எண்ணெய்விட்டு இஞ்சி, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுப் பொரித்து, கடைசியில் மிளகுத் தூளை லேசாக வறுக்கவும்.  வேகவைத்த தானியக் கலவையில் இதைச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

சித்த மருத்துவர் கண்ணன்:

புரதம், நார்ச் சத்து, மாவுச் சத்து, தாது உப்புகள் சிறு குறு தானியங்களில் நிறைந்து இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  இதயம் வலுவாகும்.  உடல் பருமனைக் குறைக்கும்.  சர்க்கரையின் அளவைக் குறைக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஊட்டச் சத்துக் குறைபாடின்றி, உடல் நன்றாக வலுவடையும்.

படங்கள்: தே.தீட்ஷித்


Message edited by RAWALIKA - Wednesday, 12 Feb 2014, 9:13 PM
 
RAWALIKADate: Wednesday, 12 Feb 2014, 9:15 PM | Message # 5
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அம்மா ரெசிபி!

''வருடங்கள் ஓடினாலும், என் அம்மாவின் கைமணத்தில் ருசித்துச் சுவைத்த உணவுகளை இன்று நினைத்தாலும், நாவில் நீர் ஊறும். அப்படி அருமையாய் குழம்புகளைசெய்து அசத்துவார். அவரது சமையல், மருத்துவக் குணம் நிறைந்ததாக இருக்கும். இன்றும் நோய் நொடியில்லாமல் நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு, அம்மாவின் கைமணம்தான் காரணம். இந்தக் குழம்பை வெல்லம் சேர்த்து பச்சடியாகச் செய்யலாம். ஜீரணத்துக்கு நல்லது. வாய் கசப்பைப் போக்கும்.'' என்கிற மயிலாப்பூரைச் சேர்ந்த ஜானகி ரங்கநாதன், நார்த்தங்காய் குழம்பு செய்யும் முறையை விவரித்தார்.  

   தேவையான பொருட்கள்:

ஜாதி நார்த்தங்காய் - 1, சாம்பார் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, பெருங்காயம், புளி, உப்பு - தேவையான அளவு, துவரம்பருப்பு - ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.செய்முறை:


பாதி நார்த்தங்காயை நறுக்கிச் சாறு பிழிந்து அரை ஸ்பூன் உப்புப் போட்டு தனியாக வைக்கவும். மீதி நார்த்தங்காயை பொடிப்பொடியாக நறுக்கி, கல் சட்டியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், வெந்தயம், துவரம்பருப்பு போட்டு வறுத்து, நார்த்தங்காயைப்போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, புளியைக் கரைத்துவிட்டு பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு இறக்கி, நார்த்தங்காய்ச் சாறை விடவும். கடைசியில் கறிவேப்பிலைபோட்டு இறக்கவும்.சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு, இந்தக் குழம்பு சேர்த்துச் சாப்பிடலாம்.  

படங்கள்: பீரகா வெங்கடேஷ்

டயட்டீஷியன் குந்தலா ரவி:

 வ‌யி‌ற்று‌ப் புழு, வயிற்று புண்ணைப் போக்கும். பசியைத் தூண்டும். ‌க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் வாய்க் கசப்பு, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், பி‌த்த‌ம் நீங்கும். வாயு‌ப் ‌பிர‌ச்‌னை இருந்தால், ஒரு நார்த்தங்காய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல்போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌ன்றா‌ல், வாயு‌க் கோளாறு உடனே சரியாகும்.
 
RAWALIKADate: Wednesday, 12 Feb 2014, 9:16 PM | Message # 6
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
 
RAWALIKADate: Wednesday, 12 Feb 2014, 9:18 PM | Message # 7
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அம்மா ரெசிபி!

'புளி அதிகம் சேர்ப்பது உடலுக்குக் கெடுதி. ஆனால், புளிப்பு சுவை இல்லாமல் நம்மால் இருக்கமுடியுமா?  குழம்பு முதல் ஊறுகாய் வரை அனைத்துமே புளிப்புடன் இருந்தால், எக்ஸ்ட்ராவாக நாலு கவளம் தொண்டையில் இறங்கும்.  அதனால்தான் எங்கள் வீட்டில் புளிச்சக் கீரையைப் பயன்படுத்தி சட்னியாக செய்துவைத்துக்கொள்வோம். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.  தோசை, இட்லிக்கும் தொட்டுக்கொள்ளலாம்'' என்கிற ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மாதங்கி, புளிச்சக் கீரையைப் பயன்படுத்தி சட்னி தயாரிக்கும் முறையை கூறுகிறார். தேவையான பொருட்கள்:  

புளிச்ச கீரை (கோங்குரா) - 2 கட்டு, காய்ந்த மிளகாய் - 4, பச்சை மிளகாய் - 6, கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - சிறுதுண்டு, மஞ்சள் தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்துக்கொள்ளவும்.  இரண்டு குழிக் கரண்டி எண்ணெயை அதில் விட்டு, பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும். அதேபோல், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாயை வதக்கி எடுக்கவும்.  கீரையை நரம்பில்லாமல் ஆய்ந்து நன்றாகக் கழுவி நீரை வடித்துக்கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் விட்டு புளிச்சக் கீரையைப் போட்டு சுருள வதக்கவும்.  கீரையைத் தவிர, வதக்கிய எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, மஞ்சள் தூள், உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்துப் பொடிக்கவும்.  கீரையையும் போட்டு நன்றாக மசிய அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, விழுதைப் போட்டு சுருளக் கிளறி இறக்கவும்.    இயற்கை மற்றும் ஹோமியோபதி மருத்துவர் ஜீவா சேகர்:புளிச்சக் கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.  கர்ப்பிணிகள் அடிக்கடி சாப்பிட்டால் குமட்டல் இருக்காது. இரும்புச் சத்து நிறைந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதைக்காட்டிலும் இந்தக் கீரை இயற்கையான இரும்புச் சத்தை உடலுக்கு அளிக்கிறது.  நாவில் உள்ள சுவை நரம்புகளைத் தூண்டும். 

 இந்தச் சட்னி செய்யும்போது, காரத்தைக் குறைவாக சேர்ப்பது நல்லது.படங்கள்:  தே.தீட்ஷித்
 
RAWALIKADate: Wednesday, 12 Feb 2014, 9:23 PM | Message # 8
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அம்மா ரெசிபி!

''என் மாமியார் சமைக்கும் பல சத்துணவுகளில் புட்டு மாவும் ஒன்று. சமைக்கும்போதே புட்டு மாவின் மணமும் சுவையும் கமகமக்கும். என் வீட்டில் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவதும் இதைத்தான்'' என்கிறார் தேனியைச் சேர்ந்த ஜோதி ராணி அருள் அழகன்.  வீட்டில் அனைவரும் தெம்புடன் இருக்க அடிக்கடி சமைக்கும் உணவு ரெசிபியும் இதுதானாம். ''இந்தப் புட்டு மாவை, சூடாகச் சாப்பிட்டால் தும்மல், மார்புச் சளி பிரச்னைகூட இருந்த இடம் தெரியாமல் பறந்து போகும்'' என்கிற ஜோதி, புட்டு மாவு செய்முறையைப் புட்டுப் புட்டு வைத்தார்

.   தேவையான பொருட்கள்: 

கேப்பை மாவு - ஒரு கப், பனங்கற்கண்டு - 50 கிராம், முற்றிய தேங்காய் - பாதி, மிளகுத் தூள் - ஒன்றரை ஸ்பூன், சித்தரத்தை - அரை ஸ்பூன், நல்லெண்ணெய் - 5 ஸ்பூன், உப்பு - சிறிதளவு.செய்முறை:

கேப்பை மாவில் சிறிது உப்பு சேர்த்துப் புட்டுக்கு, பிசைவதுபோல் பிசையவும். வெறும் கடாயில் பிசைந்த மாவைப் போட்டு வறுக்கவும். மாவு லேசாக வறுபட்டதும், நல்லெண்ணெய் சேர்த்து வறுத்து, துருவிய தேங்காயைச் சேர்த்து நன்கு கிளறவும். நல்ல வாசனை வந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத் தூள், சித்தரத்தை சேர்த்துக் கிளறி சூடாகச் சாப்பிடவும். மழைக்காலத்துக்கு ஏற்ற சிறந்த சிற்றுண்டி இது.சித்த மருத்துவர் ஜீவா சேகர்:

கேழ்வரகில் கால்ஷியம் இருப்பதால் எலும்புகளுக்கு நல்லது.  இரும்புச் சத்தும் உள்ளதால் ரத்தசோகையைத் தடுக்கும். ஆஸ்துமா பிரச்னை தீரும். சித்தரத்தை, மிளகு சேர்ப்பதால், சளியைக் குணமாக்கும்.  உடல் உஷ்ணத்தைச் சம நிலையில் வைத்திருக்கும்.- படங்கள்: சக்தி அருணகிரி
 
RAWALIKADate: Wednesday, 12 Feb 2014, 9:26 PM | Message # 9
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சோள ரவை பிடி கொழுக்கட்டைஅம்மா ரெசிபி!''தி னமும் எங்க வீட்டுல செய்யற உணவு சத்தானதா, உடலுக்கு சக்தியைக் கொடுக்கக்கூடியதா இருக்கணுங்கிறதுல நான் ரொம்பவே மெனக்கெடுவேன். சோம்பலை விரட்டி சுறுசுறுப்பைத் தரணும்னா, சமையல் செய்யறதுலயும் சோம்பல் படக்கூடாது.  வீட்டுல எல்லாருக்கும் பிடிச்சது சத்தான சோள ரவை பிடி கொழுக்கட்டை. வாரம் ஒரு தடவை செஞ்சிடுவேன். செய்யறதும் சுலபம்... டேஸ்டும் சூப்பர்''  என்கிற கோவையைச் சேர்ந்த நம் வாசகி ஷியாமளா வெங்கட், அதன் செய்முறையை விளக்குகிறார். தேவையானவை:

மக்காசோள ரவை - ஒரு கப், கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, பெருங்காயம் - சிறிதளவு, தேங்காய் துருவல் - அரை கப்.செய்முறை:

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு 3 கப் தண்ணீர் விடவும். இந்த ரவை வேக தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ளும். பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்துவிட்டு, தேங்காய்த் துருவல், உப்பு போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் சோள ரவையைப் போட்டு நன்றாகக் கிளறி மூடிவைக்கவும்.  

அடுப்பை 'சிம்’மில் வைத்து, அடிக்கடி திறந்து கிளறி விடவும். மாவு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும் இறக்கி ஆற வைக்கவும். ஆறிய மாவு பிடிக்கும் பதத்தில் வந்ததும் கொழுக்கட்டைகள் பிடித்து ஆவியில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
இதற்கு தொட்டுக்கொள்ள சின்ன வெங்காய சட்னி நல்ல காம்பினேஷன்.ஊட்டச்சத்து நிபுணர் காந்திமதி: 

 இது ஹை ப்ரொட்டீன் ரெசிபி. சோளத்தில் புரதம், மாவுச் சத்து, கால்ஷியம், இரும்புச்சத்து, பீட்டா கரோடின்... போன்ற பல சத்துக்கள் உள்ளன. வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லதுபடங்கள்: ஆர். சதானந்த்
 
RAWALIKADate: Wednesday, 12 Feb 2014, 9:27 PM | Message # 10
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அம்மா ரெசிபி!
'தினமும் வீட்டுல நாம சமைக்கிற உணவே சத்தானதாக இருக்கணும். அதுவும், வளர்ற குழந்தைங்களுக்கு ஆரோக்கியம் ரொம்பவே முக்கியம். 'ஐந்தில் வளையாதது ஐம்பதுல வளையாது’ன்னு சொல்வாங்க. அதனால் நல்ல உணவு முறைகளை இப்பவே பழக்கப்படுத்திட்டோம்னா ஜங்க் ஃபுட்ஸ் பக்கமே போக மாட்டாங்க'' என்று சென்னை போரூரைச் சேர்ந்த வாசகி எஸ்.கௌரி சுப்பிரமணியம், அசத்தலான மூலிகை அடை செய்யும் முறையை விளக்கினார். 
தேவையானவை: 

துளசி இலை, வெற்றிலை, ஓமவல்லி இலை - தலா ஒரு கை பிடி, புழுங்கல் அரிசி - ஒரு டம்ளர், பச்சை மிளகாய் - 2, சின்ன வெங்காயம் - 5, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: 

புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து, நைஸாக அரைக்க வேண்டும். துளசி, வெற்றிலை, ஓமவல்லி இலையை நன்கு பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும். நறுக்கி வைத்துள்ள மூலிகை இலைகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அரைத்த மாவை சேர்த்து நன்றாகப் பிசைந்து வைத்து கொள்ளவும்.   வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தொட்டு எலுமிச்சம் பழம் அளவு பிசைந்த மாவை எடுத்து மெல்லிதாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும். இதை அப்படியே சாப்பிடலாம். சுவையாக இருக்கும். தேவையெனில் தேங்காய் சட்னி சேர்த்துக்கொள்ளலாம்.ஊட்டச் சத்து நிபுணர் காந்திமதி:

''குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும், சளி, கபம், தொண்டைக்கட்டு போன்றவற்றுக்கு துளசி அல்லது ஓமவல்லிக் கஷாயம் செய்து கொடுத்தால் குடிக்க மாட்டார்கள். இதுபோல ருசியான அடையாக செய்து கொடுத்தால், அடம் பிடிக்காமல் சாப்பிடுவார்கள்.படங்கள்: புகழ். திலீபன்
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » அம்மா ரெசிபி! (அம்மா ரெசிபி! - தொடர் - நன்றி டாக்டர் விகடன்)
  • Page 1 of 3
  • 1
  • 2
  • 3
  • »
Search: