சித்தம்... சிவம்... சாகசம்! - இந்திரா சௌந்தரராஜன் - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 3 of 3
  • «
  • 1
  • 2
  • 3
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » சித்தம்... சிவம்... சாகசம்! - இந்திரா சௌந்தரராஜன் (சித்தம்... சிவம்... சாகசம்! நன்றி விகடன் - தொடர்)
சித்தம்... சிவம்... சாகசம்! - இந்திரா சௌந்தரராஜன்
RAWALIKADate: Saturday, 01 Mar 2014, 0:02 AM | Message # 21
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சித்தம்... சிவம்... சாகசம்!


தெளிவறி யாதார் சிவனை யறியார்....
தெளிவறி யாதார் சிவனு மாகார்...
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்...
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே!
- திருமந்திரம்



சிதம்பரம் திருத்தலத்தின் பொன்னம்பலத்துள் உறையும் ஸ்ரீநடராஜபெருமானை 'ரஜித ஸ்ருங்க ஸ்தோத்திரம்’ எனும் துதியால் பதஞ்சலி முனிவர் பாடுவது பற்றி அழகாகக் குறிப்பிடுவார் காஞ்சி மகா பெரியவர்.

நந்தி, பிருங்கி, வியாக்ரபாதர் மூவருக்கும் இறைவனின் அந்தத் திருநடனத்தை இசைச் சிறப்போடு தங்களால் மட்டுமே பூரணமாக ரசிக்க முடியும் என்கிற கர்வம் இருந்ததாம். பதஞ்சலிக்குக் காதுகள் இல்லாததால், கண்களால் பார்த்து ரசிக்க மட்டுமே முடியும். இறைவனின் திருநடனத்தில் மெய்ம்மறந்து கண்களைமூட நேரும்போது, காட்சி அற்றுப் போகும். எனவே, அவரால் பூரண திருநடனத்தை ஒருநாளும் காண இயலாது. எனவேதான், அந்த மூவருக்கும் அப்படி ஒரு கர்வம்!
அதற்குப் பதிலாகவே பதஞ்சலி இப்படி ஒரு துதி செய்தார்.
இது ஒரு வேடிக்கையான போட்டி. அதாவது, இறைவனைத் தரிசிப்பதில்- வியப்பதில்- பூரிப்பதில் யார் முதலில் என்கிற போட்டி!இதை நமது மனித மனோபாவனையில் மலிவுபடுத்தி, அந்த ஞானிகளுக்குள்ளேயே போட்டி- பொறாமையா என்று கேட்டுவிடக் கூடாது. இறைவனைத் துதிக்க... அவனோடு ஒன்றிட... கலந்திட... கொம்பும் வேண்டாம்; காதும் வேண்டாம்; காலும் வேண்டாம்;. மனம் மட்டுமே போதும் என்று பதஞ்சலி உணர்த்துவதுதான் உட்பொருள்.
இப்படி, இவர்களிடையே ஒரு போட்டிக்குக் காரணமாய் நின்ற அந்தப் பொன்னம்பலத்த வனை இரணியவர்மன் எனும் மன்னவனும் தரிசிக்கிறான். அவன் மனம், என்றும் காணாத அமைதியை அடைகிறது.
அப்படியே அவனுள் பலவிதமான எண்ண அலைகளும் எழும்பு கின்றன. சிதம்பரத்து ஆலயக் கூரை பொன்னால் வேயப்பட்டுப் பொன்னம்பலமாய்த் திகழ்ந்திட, ஏன் திருமேனி மட்டும் முழுவதும் பொன்னில் இல்லை? சுத்தமான செம்பொன்னில் ஒரு நடராஜ ரூபத்தை ஏன் நாம் உருவாக்கக் கூடாது?
திருப்பூவனம் பொன்னணை யாளுக்கு உத்ஸவ மூர்த்தியைச் செய்யும் ஆசை வந்தது. இரணிய வர்மனுக்கோ நடராஜ ரூபத்தையே செய்யும் ஆசை வருகிறது.

நாடு திரும்புகிறான்; பிரதானியர்களை அழைக்கிறான்; விருப்பத்தைக் கூறுகிறான்; செம்பொன்னையும் குவிக் கிறான். ஆனால், ஒரு பொற்தச்சராலும் சுத்தமான பொன்னில் செப்பு கலவாமல் ஸ்ரீநடராஜர் தோற்றத்தை வார்க்க முடியவில்லை. இரணியவர்மனோ துளியும் செப்பு கலக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான். தச்சர்கள் 'இது ஆகாது’ என்கிறார்கள். இரணியவர்மன் வருந்துகிறான். அவனது வருத்தம் போகர் சித்தர் காது வரை செல்கிறது.

புன்னகைக்கிறார் போகர். தன் சீடனாகிய கருவூராரை இரணியவர்மனிடம் அனுப்புகிறார். கருவூராரும் வருகிறார். இவரது பெயரை இருவிதமாகப் பிரித்துப் பார்த்துப் பொருள் கொள்ளலாம். 'இனிவரும் நாளில் ஒரு கருவிலும் ஊர்ந்திடாமல் பிறவா வரம் பெற வேண்டும்’ என்று வாழ்ந்தவர்; தன் நோக்கையே காரணப் பெயராக கொண்டவர் என்பது ஒரு பொருள்.

'அன்னையின் கருவில் இருந்த நாளிலேயே வேதிய தந்தையின் சாஸ்திர ஞானத்தை, குறிப்பாக ஆலய ஆகம விதிகளை அவர் சொல்லக் கேட்டுக் கருவிலேயே ஊறி வளர்ந்தவர்’ என்பது இன்னொரு பொருள்.
தவிர, இன்றைய கரூரில் பிறந்த காரணத் தாலும் அப்பெயர் கொண்டவர் எனக் கருவூராரைப் பற்றிச் சொல்லும்போது நமக்குப் பல பொருள் ஸித்திக்கும்.
அப்படிப்பட்டவர் ஸ்ரீநடராஜர் ரூபத்தை வடிவமைக்கிறார். கூடுதலான பொன்னோடும் கொஞ்சம் செப்போடும்..! அந்தச் செப்புதான் அவர் செய்த தப்பு. மன்னன் இரணியவர்மன் அதை அறிந்து, பெரும் கோபம் கொள்கிறான். ''நூறு சதம் பொன்னில் நான் உருக் காண விரும்பினால் செப்பைக் கலந்துவிட்டாரே..! செப்பு கூடாது என்பதே என் விருப்பம். என் கட்டளை! அதை மீறிவிட்டார். எனவே, இது ராஜ குற்றம்!’ என, அவரைத் தூக்கிச் சிறையில் பூட்டினான்.
கருவூரார் தயார் செய்த நடராஜர் பொன் விக்கிரகத்தினுள் நூற்றுக்கு நூறு பொன்னில்லை. சிறிது செப்பைச் சேர்த்தால்தான் நடராஜ திருமேனி உருக்கொள்ள முடியும் என்பதே உலோக நுட்பம். இதை மன்னன் இரணியவர்மன் ஏற்கவில்லை; அவனால் நடராஜ உருவை உருவாக்கப் பணிக்கப்பட்ட ஏனைய சிற்பிகளும் ஏற்கவில்லை. 'செப்பைக் கலந்து செய்ய இவர் எதற்கு? இந்தச் சோழ தேசத்தில் இல்லாத பொற்கொல்லர்களா?’ என்று ஏகடியமாய்ப் பேசினார்.



ஆனால், கருவூரார் செய்த நடராஜ மூர்த்தத் தில் நுட்பங்கள் அதிகம் இருந்தன. காலிலும் கையிலும்தான் செப்புக் கலப்பிருந்தது. திருமுகம் நூற்றுக்குநூறு பொன்னில் கொஞ்சியது.

'மன்னா... எந்த ஒரு சிலா ரூபத்தை காணும்போதும் அதன் முகத்தைப் பார்த்தே நாம் வியப்போம். முகத்தின் அமைப்பை வைத்தே மற்ற பாகங்களை ரசிப்பதும், அதைக் கணிப்பதும் நிகழும். இங்கே பொன்முகத்தோடு காட்சி தருகிறான் அந்த ஈசன். எனவே இதை ஒரு பூரண பொற்சிலையாக தாங்கள் கருதலாம்’ என்று கருவூரார் சொன்ன சமாதானத்தை மன்னன் ஏற்கவில்லை.
அதே வேளையில், எங்கே... கருவூராரின் சமாதானத்தை மன்னர் ஏற்றுக்கொண்டு விடுவாரோ என்னும் அச்சத்தினாலும் பொறாமையினாலும் அங்கிருந்த ஏனைய சிற்பிகள், 'அரசே... எங்களுக்கென்னவோ இந்தத் திருமேனியில் பாதிக்கும் மேலேயே செப்பு கலந்திருக்குமோ என்று சந்தேகமாக உள்ளது. இவர் இந்தத் திருஉருவைப் படைக்கும் போது எங்களை காண விடவில்லை. மிக ரகசியமாகவே இதைச் செய்தார். அதிலிருந்தே இவர் பொன்னைக் களவாடி ஒளித்து வைத் திருக்கலாம் என்று எங்களுக்குத் தோன்றுகிறது' என்று கூறவும், மன்னரின் மனது பற்றி எரியத் தொடங்கியது. ''எங்கே நான் கொடுத்த பொன்?'' என்று கருவூராரைக் கோபத்துடன் கேட்டான்.
கருவூராருக்கு அது அதிர்ச்சியைத் தந்தாலும், சித்த உள்ளம் அதை ஜீரணித்து, 'இது ஒரு சோதனை! இதனைத் துணிவோடும் நேர்மை யோடும் எதிர்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானித்து, தன்னை இச்செயலுக்காக பணித்த போகரை மனதில் நினைத்தார்.
சித்த யோகிகளுக்கு தூரமோ இடைவெளியோ ஒரு பொருட்டில்லை. எத்தனை தொலைவில் ஒருவர் இருந்தாலும், தான் நினைக்கும் எண்ணத்தை அவருக்குள் புகுத்த முடியும். அதற்கான அவர்களின் பதிலை அறியவும் முடியும்.கருவூரார் மன்னனின் கேள்விக்குப் பதில் கூறாமல், போகரை எண்ணி தியானத்தில் மூழ்கிட... மன்னனும் கருவூராரைத் தூக்கிச் சென்று அந்தகாரச் சிறைக்குள் போட்டுப் பூட்டச் சொன்னான்.
உணர்வுகளில் சிக்கி, அதன் போக்கில் போகின்றவனாக மட்டுமே அவன் அப்போது இருந்தான். அரசன் என்னும் அதிகார மமதை அவனை ஒரு சித்த புருஷனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படி நடக்கவிடவில்லை.
அதனால் ஒரு பாதகமும் இல்லை. அடுத்த சில நாழிகைகளில் போகர் தன் சீடர்களுடன் பழநியம்பதியில் இருந்து வான மார்க்கமாக, 'மேகமணிக் குளிகை’ என்னும் வானில் சஞ்சரிக்க உதவும் குளிகையை வாயில் போட்டுக்கொண்டு, மன்னன் இரணியவர்மனின் அரண்மனை தர்பாரை அடைந்தார். அவரோடு வந்த சீடர்கள், தங்கள் தலைமேல் கட்டுக்கட்டாக தங்கக்கட்டிகளோடு காட்சி தந்தனர். பொதுவாக தங்கம் பாளம் பாளமாக சதுரத்திலும் செவ்வகத்திலும்தான் இருக்கும். இங்கே சிதறிய பாறைத்துண்டுக் கற்கள் வடிவில் அந்தத் தங்கக் கட்டிகள் இருந்தன. இரணியவர்மன் அதைப் பார்த்து அதிசயித்துப் போனான். போகரைப் பார்த்து ''சித்தர்பிரானே... என்ன இதெல்லாம்?'' என்றும் கேட்டான்.

''அதெல்லாம் இருக்கட்டும். என் சீடன் கருவூரான் எங்கே?'' - கோபமாகக் கேட்டார் போகர்.''சிறையில் இருக்கிறார். அவர் உம் சீடரா?''''எனக்குச் சீடன். ஆனால், உனக்கு அவன் குரு!''''குருவா..?''''ஆம்... உன் ஊனக் கண்களைத் திறக்கப் போகிறவன் அவன். அப்படியென்றால், அவன் உனக்கு குருதானே?''
''சித்தர்பிரானே... தங்களின் கோபமான பதில் எனக்கு வியப்பைத் தருகிறது. நான் சிவனடியார்களை அந்தச் சிவபிரானாகவே கருதிப் போற்றுபவன். அப்படியே தங்கள் சீடரையும் கருதினேன். ஆனால், அவர் என் விருப்பம் தெரிந்திருந்தும் தவறிழைத்து விட்டார்.''
 
RAWALIKADate: Saturday, 01 Mar 2014, 0:02 AM | Message # 22
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
''நிறுத்து உன் பேச்சை! சிற்ப சரித்திரம், ஆலய ஆகமம், உலோக சாத்திரம் மற்றும் சூட்சுமம் எனச் சகலத்தையும் தாயின் கர்ப்பத்துக்குள் இருந்தபோதே கற்றுத் தெளிந்தவன் கருவூரான். ஒரு பொன் உருவுக்காக நீ ஏங்குவதை அறிந்து, நானே அவனை இங்கு அனுப்பி வைத்தேன். துளியும் செப்புக் கலவாமல் தூய தங்கம் கொண்டு எந்த ஒரு உருவையும் செய்ய இயலாது. கோடை காலத்தில் வெப்பம் தாளாது குழைந்து கொடுத்து, மேனியானது கோணியாகிவிடும். இது ஆபரணங்களுக்கும் பொருந்தும். ஆபரணம் குழைந்தால் அணியாமல் உருக்கிப் போட்டுவிடலாம். ஆனால், வழிபாட்டுக்குரிய திருமேனிகள் குழையக்கூடாது. சாத்திரப் பிழை ஏற்பட்டு, தோற்றப்பிழை உருவாகி, பின் அது பெரும் பிழையில் முடிந்துவிடும்.

இறை ரூபங்கள் குறித்த ஞானம் உனக்கு இல்லாததால், நீ என் சீடனைப் புரிந்து கொள்ளவில்லை. இறை மூர்த்தங்களுக்குள் தத்துவங்கள் ஒளிந்திருக்கும் என்பதை முதலில் நீ புரிந்துகொள். அருளும் கரங்கள் நேர் நோக்கில்

இருப்பதில் இருந்து மண் நோக்கி, தன்னை நோக்கி, ஒன்றைப் பற்றிக்கொண்டு, பின் முத்திரை புரிந்த நிலையில் இருப்பது... என்று ஒவ்வொரு தோற்றத்துக்குப் பின்னாலும் பெரும் பொருள் உள்ளது.

வேதியர், ஞானியர் அந்த மூர்த்தத்தைப் பார்த்த மாத்திரத்தில் பொருளை உணர்ந்துகொண்டு, அதன் தத்துவத்தைப் புரிந்து கொள்வார்கள். பழநியம்பதியில் முருகன் கரத்தில் இருக்கும் தண்டமாகிய கோல் சொல்லும் பொருளுக்கும், மதுரை மீனாட்சியின் கரத்தில் வீற்றிருக்கும் கிளியானது உணர்த்தும் பொருளுக்கும் வேறுபாடு உண்டு.

தென்திசை நோக்கி அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தக் கோலம் சின்முத்திரை காட்டி நிற்கும். அது சொல்லில் ஏதுமில்லை, அமைதியில்தான் எல்லாம் உள்ளது என்பதோடு சும்மாயிரு என்றும் கூறுகிறது. திருமாலின் சயன கோலத்துக்குள்ளும் பெரும் பொருள் புதைந்து கிடக்கிறது.

இப்படி ரூபங்களுக்குப் பொருள் இருப்பதோடு, அவை எந்த உலோகத்தில் எப்படி ஒரு சிலா ரூபம் இருக்க வேண்டும் என்பதற்கும் கணக்கு உள்ளது. ஜாதிக் கற்களுக்கும், ஐம்பொன்னுக்கும் சத்தத்தை கிரகித்துத் தேக்கி வைத்துக்கொள்ளும் ஆற்றல் உண்டு. பொன்னுக்கு ஒளிரும் குணமே மிகுதி. பொன்வசம் உள்ள ரத்தினக் கற்கள் வேண்டுமானால் மந்திர உச்சாடனங்களின் அலைக்கதிர்களை ஏற்றுப் பிரதிபலிக்கும். தூய செம்பொன் ஒளி கண்ணொளியை காலப் போக்கில் குறைத்துக் குருடாக்கிவிடும். இப்படிப் பொன்னின் குணம் பற்றி அறியவேண்டியது எவ்வளவோ உள்ளது. இவற்றைக் கசடறக் கற்றுக் தெளிந்தவன் கருவூரான். என்ன ஒரு மமதை இருந்தால், அவனைப் பொற்கள்ளனாகக் கருதி அந்தகாரச் சிறையில் அடைத்திருப்பாய்?'

- நீண்ட விளக்கத்தோடு வந்த போகரின் கேள்வி மன்னனை ஒரு புரட்டு புரட்டிப் போட்டது.

'கருவூரரை அந்தகாரச் சிறையில் அடைத்து அரை நாள்கூட ஆகவில்லை. ஆனால், நடந்தவற்றை அப்படியே பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல எப்படி போகரால் கூற முடிந்தது? அடுத்து... பொன்னுக்கும் சிலா ரூபங்களுக்கும் பின்னால் இப்படி ஒரு பொருட் செறிவா? இது எதையும் இங்குள்ள பொற்கொல்லர்கள் நம்மிடம் கூறவே இல்லையே..?’ - மன்னனுக்குள் கேள்விகள் முளைத்தெழுந்து ஓடத் தொடங்கின.

'என்ன யோசனை? இதெல்லாம் எப்படி எனக்குத் தெரியும் என்றா? சித்தம் தெளிந்து நீயும் சித்தனாகு. உனக்கும் பல உண்மைகள் யாரும் கூறாமலே புரிந்துவிடும். உயிர்வாழும் ஒரு வீடான இந்த தேகத்தின் பேச்சைக் கேட்டு நடப்பவன் சராசரி மனிதன். இந்த தேகத்தை தவத்தாலும் கல்பங்களாலும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே சித்தன். நானொரு சித்தன். கருவூரானும் சித்தன். இரண்டு சித்தர்களுக்கு நடுவில் காற்று போதும், எண்ண அலைகளை எடுத்துச் செல்ல! கருவூரான் என்னை நினைத்து நடந்ததைக் கூறினான். நானும் பழநியம்பதியில் இருந்து பறந்தே வந்துவிட்டேன்.

கருவூரானை உன்னிடம் அனுப்பி வைத்த பிழையை இதோ நானே நேர் செய்யப்போகிறேன். சித்தனுக்கு மனம் பொன்னாக இருப்பதே கணக்கு. இந்த மண்ணின் பொன்னெல்லாம் தூசுக்குச் சமம். கொண்டு வா, கருவூரான் செய்த அந்தப் பொற்சிலையை! துலாபாரத் தராசில் அதை ஒரு பக்கம் வை. ஈடாக இதோ செம்பொன் கட்டிகள். எடைக்கு எடை எடுத்துக் கொள். எங்கே கருவூரான்? முதலில் அவனை விடுதலை செய்...!''

- போகரின் ஆவேசம் மன்னனைத் திகைக்க வைக்க, அந்தப் பொற்சிலையும் வந்து தராசில் ஏறி நின்றது. மறு தட்டில் போகரின் சீடர்கள் தங்கக் கட்டிகளைக் கொட்டினார்கள். மன்னனுக்கு தான் தவறான திசையில் செல்வது புரிந்தது. ஆனால், போகரின் கோபத்தை எதிர்கொண்டு அவரைச் சமாதானப்படுத்தும் விதம் தெரியவில்லை. முதல் காரியமாக கருவூராரை விடுவிக்கச் சொன்னான்.

ஆனால், அந்தகாரச் சிறைக்குள் அவரைக் காணவில்லை. அரண்மனை வீரர்கள் ஓடிவந்து 'சித்தரைக் காணவில்லை’ என்றனர். இது அடுத்த அதிர்ச்சி!

'உன் பொன்னைத் தந்துவிட்டேன். எங்கே என் கருவூரான்?' என்று போகர் மீண்டும்  இடிஇடித்தார்.

'சித்தர் பெருமானே! அவரை சிறையில் அடைத்த தவறை உணருகிறேன். உங்களைப் போல உணர்த்துவார் இல்லாததால் நிகழ்ந்து விட்டது பிழை. உண்மையில் அவர் எவ்வாறு மாயமானார் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும், தாங்கள் எனக்கு எடைத் தங்கமும் தரத் தேவையில்லை. இந்தப் பொன்மூர்த்தியே எனக்குப் போதும். இந்தத் திருஉருவம் பல உண்மைகளை இந்த உலகத்துக்கு இனி உணர்த்தியபடியே வழிபாடு காணட்டும். என் பிழையை அருள்கூர்ந்து மன்னியுங்கள்!'' என்று உருக்கமாய் வேண்டி நின்றான் மன்னன்.

அதன்பின் போகரும் சற்று அமைதியானார். பின், அதே அந்தகாரச் சிறைவாசலுக்குச் சென்று, ''கருவூரா, வெளியே வா! உணரவேண்டியவற்றை உணர வேண்டியவர்கள் உணர்ந்துவிட்டார்கள்'' என்றார். கருவூராரும் புன்னகைத்தபடியே வந்து போகரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார். அப்படியே அனைவருமாகச் சென்று, அந்த நடராஜ திருமேனியை வணங் கினர். அப்போது மன்னன் இரணியவர்மன் போகரிடம், 'இந்தத் தங்கக் கற்கள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன என்று தெரிந்துகொள்ளலாமா?' என்று கேட்டான்.

'தங்கச் சுரங்கம் எதிலிருந்தாவது இவற்றை எடுத்து வரவில்லை.பழநியம்பதியின் பாறைக்கற்கள்தான் இவை. ரசவாதத்தால் இவற்றைத் தங்கமாக்கினேன்' என்றார் போகர்.

''ரசவாதத்தால் எப்படிக் கற்களைத் தங்கமாக்க முடியும்?''

''அது சித்த விஞ்ஞானம் மன்னனே...''

''சித்த விஞ்ஞானமா... புதியதாய் உள்ளதே?''

''புதியதேதான்! இந்த மண்ணில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் உண்டு. அந்த குணப்பாட்டை வேதிமாற்றத்தால்  மாற்றும் முறைக்குப் பெயரே ரசவாதம்.'

''அது எப்படிச் சாத்தியம்?'

''உயிரின் மூலத்தையே அறிந்துகொண்டுவிட்ட சித்தனுக்கு இதுவா பெரிது? என் வரையில் ரசவாதத்தைவிட பெரியது நவபாஷாணமும் அதன் மூலமாக உருவாகப் போகும் தெய்வத் திருமேனியும்தான்!'

போகர் மறைமுகமாக பழநி முருகனின் மூலத் திருமேனி அருகே தன் பேச்சில் வந்து நின்றார்.- சிலிர்ப்போம்...
 
RAWALIKADate: Saturday, 01 Mar 2014, 0:05 AM | Message # 23
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சித்தம்.. சிவம்... சாகசம்!
இந்திரா செளந்தர்ராஜன்
'சித்திக்கு லட்சணந்தான் பிரண்டைமுந்தி
செய்த பின்பு என் மக்காள் கேளுகேளு...
மத்திக்கு பாஷாண மெல்லாந்தின்னு
மலஜலமெலாம் பொன்னாகும் வயிரம் தேகம்
மொத்திக்கு மூன்றுடம்பில் தேகம் தங்கம்
உத்தமனே செம்பாகு மோடுந்தூரம்
சுத்திக்கு சூதமொடு கந்தகத்தை உண்ணு
அம்மம்மா தேகமெல்லாங் களங்குமாச்சே!’
- சித்தர் பாடல்
மன்னன் இரணியவர்மனிடம் ரசவாதம் குறித்துப் பேசத் தொடங்கிய போகர், 'செம்பையும் இரும்பையும் தங்கமாக்கும் ரசவாதம் ஓர் அற்புதம்! அதைவிட மேலானது நவபாஷாணமே!’ என்று கூறத் தொடங்க, இரணியவர்மன் அதிசயித்துப் போனான்.
'பொன் பெரிதல்ல, விஷம் பெரிது என்கிறாரே, எப்படி?’ என்ற கேள்வியும் அவனுக்குள் எழும்பியது. அவனுக்குள்தான் எழும்புமா என்ன? நமக்குள்ளும்தான்..!
அதுமட்டுமா? நவபாஷாணம் என்றதும், பழநி முருகனின் திருஉருவச்சிலை நம் மனக்கண்களில் முந்தும். முருகன் என்றால் அழகன் என்றே பொருள். அந்த அழகன் இங்கே விஷமாக இருப்பது எத்தனை முரண்பாடு?

முரண்பாடு என்று நமக்குத் தோன்றும் இந்த முருகனின் பின்னாலே, நம் சிறு மூளை கொண்டு உணரப்படமுடியாத சூட்சுமாதி சூட்சுமங்கள் பல உள்ளன. அவற்றில் இதுவரை தெரியவந்திருப்பது கொஞ்சம்தான்; தெரியாமல் ஒளிந்திருப்பது அநேகம்!
இந்த முருகனையும், அவரது திருமேனிக் குள் கலந்துகிடக்கும் நவ பாஷாணங்களைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்வதற்கு முன், இதற்கெல்லாம் கர்த்தாவான போக முனிவர் பற்றித் தெரிந்துகொள்வது மிக அவசியம்.



போகர்!
போகங்களை எல்லாம் அறுத்து எறிந்தவர் எனும் பொருளினை இவரது பெயர்மூலம் நாம் கொள்ள நேர்ந்தாலும், அவர் ஒரு சீன தேசத்தவர் என்ற கருத்தும் நிலவுகிறது. அதற்கு ஆதாரமாக, அகத்தியர் பன்னிரண் டாயிரம் எனும் நூலில், ஒரு பாடலும் காணக் கிடைக்கிறது.

'சித்தான சித்துமுனி போகநாதன்
சிறந்த பதினெண் பேரில் உயர்ந்த சீலன்
கத்தனென்னும் காலாங்கி நாதர் சீடன்
கனமான சீனபதிக்குகந்த பாலன்’


- எனும் அந்தப் பாடல் வரிகள், அந்தக் கருத்தை நம்பச் சொல்கின்றன. கூடவே, அநேக சிந்தனைகளும் எழுகின்றன. அந்த நாளிலேயே பாரத தேசம் போலவே சீன தேசமும் 'சீனா’ என்று, இன்று நாம் அழைக்கும் பெயரிலேயே இருந்து, அங்கே நாம் போய் வரவும் இடம் இருந்திருக்கிறது என்பது ஒரு சிந்தனை.

சீன தேசத்தில் இவர் பெயர் 'போ-ஹீ-யங்’ என்பதாகத் தெரியவருகிறது. கூடவே, பாரத மண்ணில் ஒரு சித்தனாய் அலைந்து திரிந்த போகர், தன்முனைப்பால் பல அரிய வித்தை களைக் கற்றார். அதில் ஒன்றான, ஆகாய மார்க்கமாகப் பறவைபோல் பறந்து செல்லும் வித்தை மூலம் சீனா சென்று, அங்கு 'போ-ஹீ-யங்’ எனப்படும் ஒரு ஞானியின் உடம்புக்குள் பரகாயப் பிரவேசமாகக் கூடு விட்டுக் கூடு புகுந்து, அந்த மண்ணின் மூலிகை ரகசியங்களை எல்லாம் அறிந்து வந்தார் என்றும் ஒரு கதை நிலவுகிறது.

இதில் எது உண்மை, எது பொய் என்ற கேள்விக்கே போகாமல், போகரின் சாகசங் களை நாம் வியக்க முற்படுவதே உத்தமம். ஆதாரமற்ற கட்டுக் கதைகளில் வியக்க என்ன இருக்க முடியும் என்ற கேள்விக்குள் புகுந்தால், நூற்றுக்குத் தொண்ணூறு சித்தர் பெருமக்களுமே பொய்யாகிப் போவர். அதேநேரம், அவர்களின் பாடல்கள் மட்டும் எப்படி வந்தன என்கிற கேள்வி மிஞ்சி நிற்கும். இதனால்தான் 'நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதே!’ என்றனர். அது நம்மைத் திசை திருப்பி, நமக்குக் கிடைக்க வேண்டியதைக் கிடைக்கவிடாமல் செய்துவிடும்.

பொதுவாக, எந்த ஒரு சித்தருடைய பெயரும் அவரது இயற்பெயராகவே முதலில் இல்லை. கருவூரார், பாம்பாட்டி, கொங்கணர், தேரையர், பட்டினத்தார், புலிப்பாணி, மச்சமுனி, ரோமரிஷி, பிண்ணாக்கீசர், பிராந்தர், சிவவாக்கியர், சட்டை முனி, திருமூலர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அவ்வளவு பெயர்களும் காரணப் பெயர்களே! அடுத்து, அவர்களின் தாய்- தந்தையர் பற்றியோ, குலம்- கோத்திரம் பற்றியோ, மனைவி- மக்கள் பற்றியோ சரித்திரச் சான்றுகள்போல கல்வெட்டு, பட்டயம் என்று எதுவும் இல்லை. ஒரு சிலரது பின்புலம் தெரிகிறது; அதில்கூட ஒரு தெளிவற்ற தன்மையே காணப்படுகிறது.ஆனால், இவர்களது பாடல்கள் கால வெள்ளத் தால் அடித்துச் செல்லப்படாமல், ஓரளவு நம் வசப்பட்டுள்ளன. அதுவும் ஓரளவுக்குத்தான். அந்தப் பாடல்களைக்கூட இவர்களே எழுதினார் களா அல்லது இவர்கள் சொல்லச்சொல்ல இவர் களின் சீடர்கள் எழுதினார் களா என்று ஆராய வேண்டி உள்ளது.

மக்கள் சமுதாயத்துக்குச் சேதி சொல்ல வேண்டும், அவர்களுக்கு நல்வழி காட்டவேண்டும் என்றெல் லாம் எண்ணி அவர்கள் செயல்பட்டது போலவே தெரியவில்லை. ஒரு சித்த புருஷன் அப்படிச் செயல்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஒரு சித்தன் எப்படி உருவாகிறான் என்று சிந்தித் தால், இந்த விடையே நமக்குப் புலனாகும்.
 
RAWALIKADate: Saturday, 01 Mar 2014, 0:05 AM | Message # 24
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline


மண்ணில் பிறந்துவிட்டோம்; உடம்பு என்று ஒன்று இருந்து பசிக்கிறது; அதற்காக உண்ண வேண்டியுள்ளது; அந்த உணவுக்காக உழைக்க வேண்டியுள்ளது; கூடவே துணிமணி, வீடு- வாசல் எனப் பல தேவைகள்; மனைவி- மக்கள் என உறவுகள்; இவை அனைத்துக்குமாகவும், இவர்கள் அனைவருக்குமாகவும் உழைக்க வேண்டியுள்ளது; இந்த வினைப்பாடுகளுக்குள் நிறையவே ஏற்றத் தாழ்வுகள். பெரியவன்- சிறியவன், ஏழை- பணக் காரன், வீரன்- கோழை, நல்லவன்- கெட்டவன் எனப் பலப்பல நிலைப்பாடுகள்.

'இதெல்லாம் எதற்கு? இவ்வளவு பெரிய உலகில் நான் வந்து பிறக்க எது காரணம்? நான் யார்? எனக்கு என் பெற்றோர் இட்ட பெயர்தான் நானா? இல்லை, இந்த உடல்தான் நானா? இதனுள் மனம் எங்கே இருக்கிறது? அது ஏன் அச்சத்திலும் மிச்சத்திலும் அவ்வப்போது சிக்குகிறது? சாப்பிட்டால் பசி அடங்குகிறது; திரும்பப் பசித்திடாமல் இருப்பதில்லையே! பசியாது இருக்க வழியே இல்லையா? நான் விரும்பும் விதமாக வாழ இயலாதபடி எதிரே எவ்வளவோ விஷயங்கள்... இவற்றை வெற்றி கொள்வது எப்படி?’

- இப்படிப் பல கேள்விகள் எழும்பிய நிலையில், அவற்றுக்காக ஓர் உறுதியோடு விடை தேடி, அப்படித் தேடியதால், தானறிந்த விடையால் தன்னை அறிந்தவனே- அதனால் சித்தம் தெளிந்தவனே சித்தன்.

இந்தத் தெளிவுக்குள் எவ்வளவோ அடக்கம். அதில் ஒன்று, 'யாரும் யாருக்கும் எதையும் கொடுத்துவிட முடியாது’ என்பதும் ஆகும். ஒருவன் ஏழையாக, ஒருவன் பணக்காரனாக... அறிவாளியாக, அறிஞனாக, அழகாக, ஊனமாக என்று இருப்பதன் பின்னாலே, அநேக கர்ம காரணங்கள் இருக்கின்றன. வினைப்பாடுகளே வழி நடத்துகின்றன. அந்த வினைப்பாட்டுக்குள் இடம் இருந்தால் மட்டுமே, ஒரு சித்தனோ முனிவனோ ஒருவருக்கு உதவ முடியும். உதவ நேருகிறது என்றாலே, கடன்பட்டிருக்கிறோம் என்றாகிவிடுகிறது. யாருக்கு அப்படிக் கடன் பட்டிருக்கிறோமோ, அவரை காலமும் உரிய நேரத்தில் கண்ணில் காட்டும். அவரும் கேட்பார். அவருக்குக் கொடுத்துவிட வேண்டியதுதான். அது, தான் கொடுத்ததாக ஆகாது; அவருடையதை அவர் எடுத்துக்கொண்டதாகவே பொருள்!

இந்தத் தெளிவுதான் சித்தர்களை மனித சமுதாயத்தை விட்டு ஒதுங்க வைத்தது. காடு, மலை, குகை என்று போகச் செய்து வாழ்வைக் கழிக்க வைத்தது. அடுத்து... இது மாயா வாழ்வு; எச்சிலும் மலமும் எப்போதும் இருக்கும் வாழ்வு; காமமும் குரோதமும் உடம்போடு பசைபோட்டு ஒட்டிக்கொண்ட வாழ்வு.

ஒரு குருட்டுப் பறவையோ, குருட்டு ஆடோ, மாடோ இரை தேட வக்கற்றுப் போய் இறந்து போகும். ஆனால், மனிதன் குருடாகப் பிறந்தா லும், பேச்சு மொழி எனும் சத்தத்தால் வாழ்ந்து விட முடியும். ஒலி மனிதனுக்குக் கிடைத்த பரிசு. அதையும் மேம்படுத்தி, அதில் ஏழு சுரங்களை இனம் பிரித்து, எழுத்து எனும் மொழியின் உறைவிடத்தைக் கண்டறிந்து, மனிதன் மேலா னவனாக இருக்கிறான். இதெல்லாம் இவனுக்கு அளிக்கப்பட்ட நோக்கம்... இவன் தன்னையறிந்து, இந்த மாயா உலகில் இருந்து விடுபட்டு, முக்தி அடையவேண்டும் என்பதற்காகவே!

ஆனால், அதற்கு முயலாமல் சிற்றின்பங் களை அனுபவித்து வாழ்வதே வாழ்க்கை என்று, அவன் உலகின் நிலையற்ற இன் பங்களில் ஆழ்ந்துவிடுகிறான். அப்படி அமிழ்வதாலேயே அவனது கர்ம வினைப் பாடும் மிகுதியாகி, பிறப்பதும்- இறப்பதும், பின்பு திரும்பப் பிறப்பதும் என்றே அவன் வாழ்நாள் செல்கிறது.

இதில் எவராலும் எப்போதும் இன்பத்தி லேயே இருக்க முடிவதில்லை. இளமையை கைக்கொள்ள முடிவதில்லை. நோய் நொடியை வெல்லவும் வழிவகை தெரிய வில்லை. உரிமையாக 'என் உடம்பு’ என்கி றோம். ஆனால், நம் உடம்பில் ஒரு முடி எப்போது நரைக்கும் என்று நமக்குத் தெரியவில்லை. அதை நரைக்கவிடாமல் செய்யவும் தெரியவில்லை. மொத்தத்தில், நாமே நம் வசமில்லை. எதன் வசம் இருக் கிறோம் என்பதும் தெரியவில்லை. இதுவே மனித வாழ்வு! இதில் உடம்பையும் மனத்தையும், பின்பு காலத்தையும் வென்று வாழ எவனால் முடிகிறதோ, அவனே சித்தன். போகரும் அவர்களில் ஒருவர்.

ஆனால், எடுத்த எடுப்பிலேயே அவர் முழுமையான சித்தனாக ஆகிவிடவில்லை. சித்தத்தின் ஆரம்ப நிலையைச் சுலபமாக அடைந்திட, அவரது கர்மத்தில் இடம் இருந்தது. பின், அடுத்தடுத்த நிலைப்பாடுகள் அவருக்கும் பெரும் அனுபவத்தாலேயே சாத்தியமாயிற்று. அவரது அனுபவங்கள் அலாதியானவை. சித்த புருஷர்களிலேயே ரசமான அனுபவங்களுக்குச் சொந்தக்காரர் என்று போகரைக் கூறலாம்.

சித்தத்தின் ஆரம்ப நிலையில், இவருக்கு அஷ்டமா சித்து வசமாகிவிட்டது. அதாவது, அணிமா (அணு போன்று சிறுத்தல்), மஹிமா (மலை போல் பெருத்தல்), கரிமா (கனத்தல்), இலஹிமா (லேசாதல்), வசித்வம் (ஈர்த்தல்), பரகாயம் (கூடு மாறல்), காரிய ஸித்தி (விரும்பியதை அடைதல்), ஈசத்வம் (இறைநிலை எட்டல்) ஆகியவையே அஷ்டமா ஸித்தியாகும்.

மானுட வாழ்வில், ஒளி- ஒலியிலான வாழ்க்கைப் போக்கில் கர்ம வினைப்பாட்டுக்கு நடுவில், இந்தச் ஸித்துகள் மிகப் பெரியவை! இதனால், மாயா வாழ்வை நம் விருப்பம்போல் அனுபவிக்கலாம். ஆனால், இதை அறிந்து, இதைக் கடந்துவிட வேண்டும். இதிலேயே லயித்துவிடக் கூடாது. இதில் லயித்தால், ஒருகட்டத்தில் இது கைவிட்டுப் போய், இதை அறிந்திருந்த சித்தனும் பெரும் சாபத்துக்கும் பாபத்துக்கும் ஆளாகும்படி ஆகிவிடும். இந்தத் தவறு பல சித்தர்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அஷ்டமா ஸித்திகளை தன் பொருட்டுத் துளியும் பயன்படுத்திக்கொள்ளாதவனே அசலான சித்தன்.

உதாரணமாக, பஞ்சணையில் படுத்து உறங்க வேண்டும் என்றால், காரிய ஸித்தியால் நொடியில் இதை அடைந்துவிடலாம். எதிரி தாக்க வந்தால், அணிமா ஸித்தியால் அணுபோல் சிறிதாகி, எதிரியின் கண்களிலேயே படாமல் தப்பித்து விடலாம். நம்மைத் தூக்கிக் கடலில் போட்டால், இலஹிமா ஸித்தியால் மூழ்கிவிடாமல் மிதக்கலாம். இப்படி மிதந்துதான் கரை சேர்ந்தார் திருநாவுக்கரசர். மஹிமாவால் விசுவரூபம் எடுத்தார் அனுமான்.

போகரும் தொடக்க காலத்தில் இந்தச் ஸித்திகளைப் பெரிதாகக் கருதி, இதை அறிந்துள்ள தன்னையும் பெரிதாகக் கருதிக்கொண்டு, இந்த உலகைக் காக்க வேண்டியது தன் கடமை என்று எண்ணி, தானறிந்த யோகக் கலைகளை எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கத் தொடங்கிவிட்டார். குறிப்பாக, மருத்துவக் கலைக்குள் புகுந்து, இறவாமைக்கு என்ன வழி என்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இவரது சீடர்களில் ஒருவன், வனத்தில் மூலிகை சேகரிக்கும்போது, பாம்பு கடித்து இறந்துபோனான். நீலம் பாரித்த அவன் உடம்பைக் கண்ட போகருக்கு, அவனை எப்படியாவது உயிர்ப்பித்துவிட வேண்டும் என்கிற எண்ணம் ஒரு வெறியாகவே ஏற்பட்டது.

'அவன் கர்மம், அவன் போனான்’ என்று எண்ணாமல், 'என் சீடனுக்கு எப்படி மரணம் நேரிடலாம்?’ என்ற ஆங்காரம், இப்படி ஒரு வெறியை அவருக்குள் உருவாக்கியது. அதாவது, சித்த நிலையை எட்டியவனையே உலக மாயை விடவில்லை. அந்தச் சீடனை உயிர்ப்பிக்க விரும்பிய அவர், ஆகாய மார்க்கமாக, தானறிந்த பறக்கும் வித்தையால் இமயமலை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி விட்டார். அங்கே...?!
- சிலிர்ப்போம்...
 
RAWALIKADate: Saturday, 01 Mar 2014, 0:12 AM | Message # 25
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சித்தம்... சிவம்... சாகசம்!


'விட்டகுறை வந்ததென்றால் தானே யெய்தும்
விதியில்லார்க் கெத்தனைதான் வருந்தினாலும்
பட்டுமன மாய்தலல்லால் வேறொன்றில்லை
பக்தியில்லார்க் குரைத்து மனம் பாழ்போக்காதே
திட்டமதாய்ப் பாணம் வைத்துத் தேவி பூசை
சீர்பெற்றார் பதினெட்டுச் சித்தர் தாமே...’
- கருவூர் சித்தர்



மேகமணிக் குளிகையின் தயவாலும், அட்டமாஸித்தியில் ஒரு ஸித்தியான இலஹிமாவின் திறத்தாலும் பஞ்சு போலாகி வானவீதியில் பறந்து, இமயமலைக்கு நேர்மேலே நின்று, அந்த வெள்ளிப்பனி மலையை நோக்கிய போகர், அதையே கயிலாயமாகக் கருதி 'ஓம் நமசிவாய’ என்று நெக்குருகத் துதித்தபடியே, அந்த மலையின் ஒரு பகுதியின் மேல் இறங்கினார்.
இமயம் ஓர் அற்புதம். அது ஒரு புதிரும்கூட! அங்கே எதுவும் வளர்வதும் இல்லை; எதுவும் அழிவதுமில்லை. அங்கே மாசுமருவுக்கோ, தூசு தும்புக்கோ இடமில்லை.
தூய்மையின் நிறம் வெண்மை; அமைதியின் நிறமும் வெண்மை தான். எனவே, அங்கே எங்கு பார்த்தாலும் இருப்பது அமைதி யும், தூய்மையும் மட்டும்தான்.
எப்பேர்ப்பட்ட காமேந்திரியன்கூட அங்கு செல்லும்பட்சத்தில் உடற்சூட்டை இழந்து, அதன் பிடியில் இருந்து விடுபட்டவனாகிவிடுவான்.
உலகில் அளவில் மட்டும் இது உயர்ந்தது அல்ல; அனைத்திலும் இதுவே உயர்ந்தது. உயரே செல்லச்செல்ல, ஒரு ஆத்மாவுக்கு எது ஸித்திக்கும் என்பதைச் சொல்லும் ஒரு தோற்றமாய் இமயம் விளங்கிக்கொண்டிருக்கிறது. 'மயம்’ என்றால் எல்லாமாயிருப்பது, வியாபித்திருப்பது என்று பொருள். இமயம் என்றால், 'இதுவே எல்லாம்’ எனப்படுவதாகும்.
இது மட்டுமல்ல, உலகின் மையம்- உயிர்களின் மையம் என்றும் இதைக் கூறலாம். நமது இமைகள் இரண்டின் மையத்தில்தான் ஆக்ஞா சக்கரம் சுழன்றபடி உள்ளது. இங்கேதான் நாம் விபூதி, குங்குமம், திருமண் என்று தரிக்கிறோம். இதனால், இதனுள் துர்நீர் சேராதவாறு தடுக்கப்படுகிறது. துர்நீர் சேர்ந்தால், நாம் குழைத்துப் பூசும் விபூதியும், திருமண்ணும் தன் ஈரம் காயும்போது, இதையும் உறிஞ்சி காயச்செய்து விடுகிறது. அதனால், நம் முகப்பொலிவு தேஜசாய் வெளிப் படுகிறது. இந்தப் புருவ மையம்தான் லலாடக்கோயில். மகாபீடம், மூன்றாவது கண், திரிவேணி, திரிமூர்த்தி, குருபீடம், ஞானவாசல் என்றெல்லாம் சித்தர் பெருமக்களால் குறிப்பிடப்படுகிறது.
இந்தப் புருவ மையம்தான் ஒரு மனிதனை ஞானியாக்குகிறது. இந்த மையத்தில் மனத்தைக் குவித்து தியானிக்கும்போது, பேராற்றல் உருவாகிறது. இந்த ஆற்றலால் நேற்று நடந்ததை, இன்று நடக்க இருப்பதை, நாளை நடக்கப்போவதை அறியலாம். உச்சபட்சமாக, இந்த மையத்தில் அந்தப் பரமனையே நாம் காண முடியும்.
இந்த மையம் ஒருவருக்கு எப்படி இருக்கிறது என்பதை வைத்தே, அவரது அறிவும் ஞானமும் தெரியவரும். இந்த மையத்தில் மனத்தை ஒடுக்குவதற்குப் பெயர்தான் தவம். மனிதனுக்கு இரு இமை நடுவே மையம் என்றால், உலகுக்கு மேல்- கீழ் எனும் இரு புறத்துக்கு நடுவேயான மையம் இமயம்!
தவிர, பூமியின் சமதளத்தில் இருந்து ஆகாயம் நோக்கி அதிகபட்சத்துக்கு எழும்பி நிற்பது இது ஒன்றே! இதன் உச்சியே இந்த உலகின் உச்சி. இப்படி ஓர் உச்சிக்கு மனிதனும் சென்று இம்மையாகிய இமயத்தில் நின்று, தன் மையமாகிய லலாடக்கோயிலில் மனத்தை அடக்கி தவம் செய்வது பேராற்றல் மிக்க செயலாகும்.அடுத்து, சத்தமற்ற ஒரு நிலையை இந்த உலகில் வாழும் ஒரு மனிதர்கூட உணர்ந்திருக்க முடியாது. ஏனென்றால், அதற்கு வாய்ப்பே கிடையாது. மிக அதிகபட்சமாக, ஊரே தூங்கும் நள்ளிரவில், வீட்டுக் கடிகார விநாடிமுள் நகரும் சத்தம்கூடக் கேட்கும் ஓர் அமைதியைத்தான் நாம் அனுபவித் திருப்போம். இந்த அமைதியைப்போல நூறு மடங்கு அதிகமானது இமயத்தின் உச்சியில் நிலவும் அமைதி. இப்படி இமயம் பற்றிச் சிந்திப்பதற்கு நூறு நூறு விஷயங்கள் உள்ளன.அப்படி ஒரு இடத்துக்கு போகர் வரவும், அவரிடமும் ஒரு புத்துணர்வு. மேனி எங்கும் ஒரு பரமானந்தச் சிலிர்ப்பு! ஏற்கெனவே தவப் பரிச்சயமும், அதற்கான கர்ம பலமும் உடையவராக இருந்தபடியால், அப்படியே ஒரு குகையாகப் பார்த்து அமர்ந்து, தன்னையும் உலகையும் மறந்துவிடத்தான் முதலில் விரும்பினார்.

ஆனால், சீடனின் நினைவும், அவனுக்கு உயிர் தரும் விருப்பமும் அவரது தவநோக்கத்தை மாற்றி, இந்த வெண்பனிக் கோட்டத்தில் எங்கே சஞ்சீவி மூலிகை கிடைக்கும் என்று தேட வைத்தது. கூடவே, அந்த மலையில் தவமிருக்கும் சித்தர் பெருமக்கள் நினைவும் வந்திட, அவர்கள் எங்கே என்று தேடத் தொடங்கினார். அதற்கு தோதாக, கயிலாய ஏரி எனப்படும் மானசரோவர் கரைக்குச் சென்றார். அங்கே நீராட வரும் சித்தர் பெருமக்களிடம் தன் விருப்பத்தைக் கூறினால், அவர்கள் சஞ்சீவி பர்வதம் உள்ள இடத்தை காட்டக்கூடும் என்று கருதினார்.

அவர் எண்ணியது வீண்போகவில்லை. பல சித்தர் பெருமக்கள் கோவணதாரிகளாக மானசரோவர் கரையில் நீராட வந்திருந்தனர். அப்பியெடுக்கும் குளிரால் உடம்பானது பாதிக்கப்படாதவாறு இருக்க, அவர்கள் தங்கள் உடம்பில் உள்ள அக்னியை நிலைநிறுத்தி இருந்தனர்.
நம் உடம்பின் மேல் நாம் ஆதிக்கம் செலுத்துவது என்பது ஒரு பெரும் ஆற்றல். பசியாதிருப்பது, உறங்காதிருப்பது, அசையாதிருப்பது, நின்றவாறே இருப்பது என்று அதில் பலவிதங்கள் உண்டு. காயகல்பங் களால் உடம்பைப் பேணுபவர்களுக்கே இதெல்லாம் சாத்தியமாகும். போகரோ துவராடையால் மேனி மூடி, குளிருக்கு ஆளாகியிருந்தார். இருப்பினும், அந்த ஏரிக்கரை வரை வரமுடிந்த அவரின் தீரச்செயலை அந்தச் சித்தர்கள் புரிந்துகொண்டு, அவரைப் பார்த்து சிரித்தனர். போகர் அவர்களை எல்லாம் வணங்கினார்.''யாரப்பா நீ?''
''மதங்கொண்ட யானையை அடக்குபவன் பாகன் என்றால், அதனினும் பலம் கொண்ட காமம், குரோதம், மாச்சரியங்களை அடக்கமுடிந்த காரணத்தால் போகன் என்றானவன்!''
''பாகன்- போகன்... பலே!'
''இங்கு வந்த காரணம்?''
''உங்களை எல்லாம் தரிசனம் செய்யவும், மேலான சஞ்ஜீவி மூலிகையை அடையவுமே..!''
''அது எதற்கு உனக்கு?''''எனக்கல்ல... என் சீடனுக்கு...''''அப்படியென்றால், உன் சீடன் இப்போது...?''''ஆம். அரவம் தீண்டி, உதிரம் சுண்டி, உயிரை இழந்து கிடக் கிறான்.''''ஓ... அவன் பிழைத்தெழ  வேண்டுமா?''''ஆம்... மிகுந்த இளம் வயது. அவன் இறந்தது பெரும் கொடுமை.''''அட, அரைச் சித்தா! கர்மம் குறித்த சிந்தனையே உன்னிடம் இல்லையே..?''''கர்மமா?''
''என்ன கேள்வி இது?  கர்மமாகிய வினைப்பாடு குறித்து நீ சிந்தித்ததில்லையா?''''நிறையவே சிந்தித்திருக்கிறேன். அதற்கென்ன?''
''அதற்கென்ன என்றா கேட்கிறாய்? அரவம் தீண்டி அவன் உயிர்பிரிய வேண்டும் என்பது அவன் கர்மம் என்பதை நீ உணரவில்லையா?''''அந்தக் கர்மத்தை வெல்ல வேண்டும் என்பதே என் நோக்கம்...''
''வென்று..?''
''இது என்ன கேள்வி? சித்தன் நினைத்தால் படைத்தல், காத்தல், அழித்தல் என சகலமும் சாதிக்க முடியும் என்று நான் நிரூபிக்க விரும்புகிறேன்...''
''நிரூபித்து..?''
''நிரூபிப்பதன் மூலம், சித்தத்தை உயர்த்திப் பிடிக்க விரும்புகிறேன்...''
''ஆமாம், நீ எப்படி சித்தனானாய்..?''
 
RAWALIKADate: Saturday, 01 Mar 2014, 0:12 AM | Message # 26
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அந்தக் கோவணச் சித்தர்களில் ஒருவர் இப்படிக் கேட்கவும், போகருக்கு நெஞ்சில் முள் தைத்ததுபோல் இருந்தது.
''சித்தர் பெருமக்களே... என் கேள்விக்கு நேரடியாக பதில் கூறாமல், எதற்காக என்னை இப்படிச் சீண்டுகிறீர்கள்? இதில் தங்களுக்குக் கிடைப்பதுதான் என்ன?'' - போகரிடம் இருந்து கோபமாய் கேள்வி வெடித்தது.



''போகனே... சினம் கொள்ளாதே! சினம் தவத்துக்கு நேர் எதிரானது. நீ சேமித்து வைத்திருக்கும் உன் தவப் பயன்களை எல்லாம் அது அழித்து விடும். மாறாக... அந்த தவப் பயன்கள், நீ கோபிக்கும் எங்களை அடைந்துவிடும். எங்களுக்கு எவரிடம் இருந்தும் எதுவும் வேண்டாம். உனது தவப்பயன்கள் எங்களை அடைந்தால், அதை அனுபவிக்க நாங்கள் மேலும் சில காலம் வாழும்படி இருக்கும்...''

''உங்கள் பதில் எனக்கு ஆச்சரியம் தருகிறது. என் சினம், அருளாசி உங்களை அடைந்துவிடும் என்பதும், அந்த அருளை தாங்கள் வேண்டாம் என்பதும் மேலும் ஆச்சரியப்படுத்துகிறது.''

''நாங்கள் வேண்டுவதெல்லாம் ஒன்றே! அது மீண்டும் பிறவாமை! சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாமிய கர்மம், நிஷ்காமிய கர்மம் என்னும் எல்லா கர்மங்களில் இருந்தும் தெளிந்து விடுபடத்தான் மானுடப் பிறப்பு. எனவே, எதன்பாலும் விருப்பம் கொள்ளாமல், இறைவன்பால் மட்டும் விருப்பம்கொண்டு இந்த உடம்புச் செல்களின் முற்றான அழிவுக்காக காத்திருக்கிறோம். கடைசி செல் இயங்கும்வரை ஜீவித்திருப்போம். அதுவும் அடங்கவும் எங்கள் விடுதலை நிகழும்...''
''ஒருநாள், உடல் அழிந்து உயிர் விடுபெறத்தானே போகிறது? அதுவரை உலக மக்கள் நன்மைக்காகப் பாடுபட்டு, அவர்களின் இன்ப வாழ்வுக்காக வழிகாட்டி வாழலாமே..?''
''உன் எண்ணம் மேலான எண்ணமே! ஆனால், அதில் மாயை மிகுந்திருப்பதை நீ உணரவேண்டும். எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுத்துவிட முடியாது. கொடுத்தாலும் எல்லோராலும் பெற முடியாது.''
''அவரவருக்கு எது தேவையோ அதைத் தரலாமே..?''''உன் தேவைக்கே இறைவன்தான் தருகிறான். இதில் நீ எதை பிறருக்குத் தந்துவிட முடியும்?''''என்னிடம் இருப்பதை..!''''அப்படி நீ தருவதன் மூலம் நீ அடைய விரும்புவது...?''
''நிறைவை..!''''அது உனக்கு ஏற்படாவிட்டால்?''
''அது எப்படி ஏற்படாமல் போகும்? இப்போதுகூட என் சீடனுக்கு நான் உயிரைத் தந்துவிட்டால் அது எத்தனை பெரிய நிறைவு?''
''இந்தச் சீடன் நாளையே ஒரு பாவச்செயல் புரிந்தால், அது இவனுக்கு உயிரை அளித்த உன்னையும் சார்ந்திடும். பரவாயில்லையா?''
இந்தக் கேள்வி முன் போகர் ஒரு விநாடி தேங்கினார். அதுவரை பளிச் பளிச்சென்று பதில்களை கூறியதுபோல அவரால் கூற முடியவில்லை.''என்ன சிந்தனை..? பதில் கூறு!''''பாதகமில்லை. அந்தப் பாவம் என்னையும் சேரட்டும். நான் இதற்காக அஞ்சத் தயாரில்லை!''
''போகா... அரைச் சித்தன்தான் நீ என்பதை இந்த பதில் மூலம் நிரூபித்துவிட்டாய். அரை வைத்தியனும், அரைச் சித்தனும் ஆபத்தானவர்கள். உனக்கு உன்னை உணர்த்தவே நாங்கள் இவ்வளவு கேள்விகளையும் கேட்டோம். உன்னிடம் 'நான்’ என்னும் செருக்கும், புகழ் மீது மோகமும் நிறையவே உள்ளது. இந்தச் செருக்கும் மோகமும் ஒரு யோகிக்கு துளியும் ஆகாதவை. நீ அறிய வேண்டியதும் புரிய வேண்டியதும் நிறையவே உள்ளன. அவற்றை நீ அடைந்த நிலையில், இப்போது நாங்கள் பேசிய அளவுக்குக்கூடப் பேச மாட்டாய்.
நாங்களும் உன்னால் இன்று பல நூறு வருடங்களுக்கு பிறகு பேசியுள்ளோம். இந்தத் தூயவெளியும், இதனால் அதிர்வுக்கு ஆளாகியிருக்கும். இங்கே இன்னும் பல நூறு யோகியர் தவம் செய்தபடி உள்ளனர். தொடர்ந்து உன்னோடு பேசுவதால், அவர்கள் தவத்துக்கு ஊறு நேரலாம். பேசியது போதும்; வந்த வழியே புறப்படு!’
அவர்கள் கட்டளை இடும் குரலில் கூறிவிட்டு, நீருக்குள் இறங்கினர். போகருக்கு ஏமாற்றமாக இருந்தது. அந்தச் சித்தர்கள் அவருக்கு சுயநலவாதிகளாகத்தான் தெரிந்தனர்.
அப்படியே நடக்கத் தொடங்கினார். கயிலாய மலையை வலம் வந்து முடித்தவர், ஓரிடத்தில் இருந்து வந்த சிவநாம ஒலியை செவிமடுத்தார்.
அந்த ஒலி அவரை ஒரு பெரும் முனிவர் முன் கொண்டுவந்து நிறுத்தியது. அவரது கால்களும், மூச்சுக்காற்றும் அங்கு வியாபிக்கவும், அந்த முனிவரின் தவமும் கலைந்துபோனது.
கண் திறந்தவர் எதிரில், போகர்! போகரும் அவரை பயபக்தியோடு வணங்கினார். அவரிடம் பதிலுக்கு எந்த ஓர் உணர்வும் வெளிப்படவில்லை. மாறாக, அமர்ந்திருந்தவர் எழ முற்பட்டார். ஆனால், அது சுலபத்தில் சாத்தியமாகவில்லை. போகர் அவருக்கு உதவி செய்தார். அவரும் நன்றியோடு பார்த்தார். இருந்தும், அவரால் எழுந்து நிற்க முடியவில்லை.
''அப்பனே... இன்றைய கால கதியை அடையாளப்படுத்துவாயா?'' என்று கேட்டார் அவர்.
''இப்போது கலியுகத்தில் பல நூறு ஆண்டுகள் கழிந்து, அதில் விபவமும், அதனுள் வசந்த ஹேமருதுவும் நடப்பில் உள்ளது. கிழமையில் இன்று குருவுக்கான வியாழக்கிழமை'' என்றார் போகர்.
''அடேயப்பா... கலி பிறந்து, அதில் பல நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டனவா? நான் முந்தைய துவாபர யுகத்தில் தவத்தில் ஆழ்ந்தேன். அது இங்கு நீ வரவும், முடிவுக்கு வந்துள்ளது. அதனால்தான் சட்டென்று எழுந்து நிற்க முடியவில்லை!'' என்றார். அதைக் கேட்ட போகரிடம் பெரிதும் அதிர்ச்சி.
''முனிவர்பிரானே... தாங்கள் யுகக்கணக்கிலா தவத்தில் இருந்தீர்கள்?''''ஏனப்பா... நம்ப முடியவில்லையா?''
''ஆம்... இன்னுமா உங்களுக்கு இறைவனிடம் வரம் ஸித்திக்கவில்லை?''
''நான் வரம் குறித்து சிந்திக்கவேயில்லையே...?''
''அப்படியென்றால் தங்கள் தவத்தின் நோக்கம்...?''
''நோக்கம் இல்லாததே என் நோக்கம்...''
''நோக்கம் இல்லாததா..? என்ன சொல்லுகிறீர்கள்?''
''பின், நீ வேறு என்ன எதிர்பார்க்கிறாய்?''
''ஒரு நோக்கமும் இன்றி எப்படி தவமியற்ற முடியும்?''
''நான் இயற்றியிருக்கிறேனே... என்னைப் பார்த்துமா கேட்கிறாய்?''
''சரி, இதில் தாங்கள் அடைந்தது எதை?''
''இத்தனை காலம் நான் அழியாமல் அப்படியே இருந்திருக் கிறேனே... அது போதாதா?''''இதில் என்ன பெரிதாக இருக்கிறது?''
''பெரிதாகவா..? அப்படியென்றால், சிறிதாக என்கிற ஒரு எண்ணமும் உன்னிடம் உள்ளது. ஒன்றை பெரிதென்றும் சிறிதென்றும் கருதுவது மானுட அறிவின் தொடக்க நிலை. உண்மையில் பெரிதென்று ஒன்றில்லை; சிறிதென்று ஒன்றில்லை. பெரிதும் சிறிதும் அடையாளங்களே!

இந்த ஊனுடம்பு அழியாமல் யுகம் கடந்து அப்படியே இருந்திருப்பதே தவத்தால்தான். இனியும் இதைத் தொடர்ந்து இருந்தும் இல்லாமல் போவது என்பதுதான் உத்தம நிலை. இதை ஈசத்வம் என்பார்கள். உன் அறிவுக்குப் புரிகிறாற்போல் கூறவேண்டும் என்றால், நானே கடவுளாகிவிடுகிற நிலை - நித்ய இன்ப நிலை! நான் மீண்டும் அதைத் தொடர விரும்புகிறேன். நீ புறப்படு!''போகரைப் பார்த்து இப்படிச் சொன்னவர், திரும்பவும் தவத்தில் ஆழ்ந்தார். அவர் பேசிய பேச்சுகளுக்குள் மிக ஆழ்ந்த பொருள். போகருக்குள்ளும் அவற்றின் தாக்கங்கள்..!- சிலிர்ப்போம்...
 
RAWALIKADate: Friday, 14 Nov 2014, 12:39 PM | Message # 27
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சித்தம் சிவம் சாகசம் -இந்திரா சௌந்தர்ராஜன்
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » சித்தம்... சிவம்... சாகசம்! - இந்திரா சௌந்தரராஜன் (சித்தம்... சிவம்... சாகசம்! நன்றி விகடன் - தொடர்)
  • Page 3 of 3
  • «
  • 1
  • 2
  • 3
Search: