சித்தம்... சிவம்... சாகசம்! - இந்திரா சௌந்தரராஜன் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 3
  • 1
  • 2
  • 3
  • »
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » சித்தம்... சிவம்... சாகசம்! - இந்திரா சௌந்தரராஜன் (சித்தம்... சிவம்... சாகசம்! நன்றி விகடன் - தொடர்)
சித்தம்... சிவம்... சாகசம்! - இந்திரா சௌந்தரராஜன்
RAWALIKADate: Thursday, 30 Jan 2014, 10:55 AM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சித்தம்... சிவம்... சாகசம்!


'பொன் வெள்ளி செய்கிறவன் பெரியோன் அல்ல
புகழான அஷ்டசித்தி பெரியோன் அல்ல
முன்னின்ற வைத்தியனும் பெரியோன் அல்ல
மூச்சடக்கி எழுப்பியவன் பெரியோன் அல்ல
சின்னமுள்ள குழியிருப்போன் பெரியோன் அல்ல
திறமுடனே கெவனமிட்டோன் பெரியோன் அல்ல
தன்னிலையை அறிந்தவனே பெரியோனாவான்
கந்தவேள் உரைத்ததெனக் கண்டுகொள்ளே!’(சுப்ரமணியர் சிவயோகப்பாடல்)

எது சித்தம்?கேள்வியுடனேயே தொடங்குவோமே...!

இப்படி நான் கேட்க, நீங்களும் வாசித்திட... நமக்கிடையே பல எண்ணங்கள் ஏற்படுகின்றதே.... அதுதானா?

எண்ணக் கூட்டம்தான் சித்தம் என்றால், இந்த உலகில் வாழும் அவ்வளவு மனிதர்களுக்குமே சித்தம் இருப்பதால், சித்தர்கள் என்றாகிறார்கள்.

எல்லோரும் சித்தர்கள்தான் என்பது பொதுமைக்குப் பொருந்துகிறது.ஆனால், வலிமைக்குத் துளிக்கூட பொருந்த மறுக்கிறதே?!

அப்படியானால், வலிமைமிக்க எண்ணம் கொண்டோரை சித்தர் எனலாமா?

எனலாம்தான்! ஆனாலும், அப்போதும் அதில் ஒரு பரிபூரணம் இல்லாததுபோல் தோன்றுகிறது. வலிமையான சிந்தனை உடையவர்களை சிந்தனையாளர்கள் என்கிறது உலகு! அப்படியானால் சித்தர்கள்..?

சித் எனில் அறிவு; அறிவதையே வாழ்வாகக் கொண்டவர்கள்; அறிந்ததைக் கொண்டு தங்க ளையும் அறிந்தவர்கள்; அப்படி அறிந்ததாலே தங்களை அடக்கி ஆண்டவர்கள் என்று சித்தர்கள் பற்றி எண்ணும்போது, அது விரிந்துகொண்டே போகிறது.

குறிப்பாக, சித்தமாகிய எண்ணத்தை - எண்ணக் கூட்டங்களின் தொகுப்பாகிய மனத்தைக் குழப்பம் இல்லாமலும், ஒளியோடும், தெளிவோடும் வைத்திருப்பவர்களே சித்தர்கள் என்று ஒரு விளக்கமும் இவர்கள் வரையில் தரலாம். கூடவே, உடம்பையும் கல்ப மூலிகை களாலே முதிரா வண்ணம் பார்த்துக் கொண்டார் கள்; அதை ஆட்டிவைத்தார்கள்.

மனத்துக்குப் பஞ்ச பூத சிறை கிடையாது. உடம்புக்கு அது உண்டு. ஓர் அறைக்குள் வைத்து ஒருவரைப் பூட்டிவிட்டால், அறைக் கதவு திறக்கப்படும்வரை அந்த உடம்பு அந்த அறைக்குள் ஒரு சிறைக் கைதி போல அடைந்து கிடந்தே தீர வேண்டும்.ஆனால், மனத்தை இப்படி அடைக்க முடியாது. மனத்தால் இந்த உலகை மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் சுற்றிவர முடியும்.

எனக்குத் தெரிந்து சித்தர் ஒருவர் நான்கு பேருடன் பேசிக் கொண்டிருந்தபோது, 'இதோ, ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு வெளியேறி னார். இயற்கை உபாதைக்காக விலகிச் செல்கிறார் என்று கருதினோம். ஆனால், அந்த நொடிகளில் அவர் இமயமலைச் சாரல் பகுதியில் இருக்கும் அமர்நாத் எனும் ஸ்தலத்துக்கு போய், அங்கு அமர்நாத லிங்க தரிசனம் செய்பவர்களுடன் கூடி நின்று தரி சித்துவிட்டு, அவர்களிடமும் 'இதோ வருகி றேன்’ என்று கூறிவிட்டுத் திரும்ப எங்களிடம் வந்துவிட்டார்.

அப்படி வந்தவர், 'அமர்நாத்தில் இன்று அவ்வளவு பனிப்பொழிவு இல்லை; தரிசனமும் நன்றாகக் கிடைத்தது’ என்று பேச்சுவாக்கில் கூறப் போய்த்தான் எங்களுக்கு அவருடைய அந்த சாகச சஞ்சாரம் தெரிய வந்தது.

இதைக் கேட்பதற்கு ஒரு மாயாஜாலக் கதை போல இருக்கும். ஆனால், இந்த மாதிரி அற்புதங்கள் அல்லது ஜாலங்கள் சித்தர் வரையில் அற்பங்கள்!நாமறிந்த சத்ய சாயிபாபா வாழ்வில் இந்த மாதிரி விஷயங்கள் சர்வ சாதாரணம்! புட்ட பர்த்தியில் எல்லோருக்கும் தரிசனம் தந்தபடி இருக்கும் அவர், அமெரிக்காவில் ஆபரேஷ னுக்காக 'அட்மிட்’ ஆகி இருக்கும் அவரது பக்தருக்கும் காட்சி புரிந்திருக்கிறார்.இதற்கு என்ன சாட்சி? இதை எதன் அடிப் படையில் நம்புவது?
 
RAWALIKADate: Thursday, 30 Jan 2014, 11:04 AM | Message # 2
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
இப்படி நம்முள், இந்த மாதிரியான அமா னுஷ்யங்களைக் கேள்விப்படுகையில் கேள்வி எழும். விஞ்ஞான அடிப்படையில் இந்த அமா னுஷ்யங்களைக் கேள்வி கேட்க மட்டுமே முடிகிறது. நம்ப முடியவில்லை. அதற்குக் காரணமும் இருக்கிறது. எப்போதும் அற்புதங்கள் ஒரு கூட்டத்திடமோ, பலர் முன்னாலோ நடந்ததே இல்லை. அது, ஒரு தனி மனித அனுபவமாகவே இருப்பதுதான் காரணம்!

இந்த அனுபவம், நாம் தாயின் வயிற்றில் அந்தத் தாயே முதலில் அறிந்திடாத நிலையில் கருக் கொள்வதுபோல் நிகழ்ந்துவிடு வதே காரணம்.

கடவுளைப் பற்றிச் சொல்லும் போது ஒரு கருத்தைச் சொல் வார்கள்... 'அது இருக்கிறது; இல்லாமலும் இருக்கிறது’ என்பார் கள். இது என்ன பதம்? இருக்கும் ஒன்று எப்படி இல்லாமல் இருக்க முடியும் என்று நாமும் மண்டையைப் பிய்த்துக் கொள்வோம். நாமேகூட கனவுகள் இல்லாத தூக்கத்தில், இருந்தும் இல்லாதுதானே போகிறோம்?

அமானுஷ்யம் பற்றிச் சிந்திக்காமல் போனாலே இப்படித்தான் கேள்விகள் முளைக் கின்றன. பளிச்சென்று ஓர் அமானுஷ்யத்தைக்கூட விளங்கிக்கொள்ளவோ, நம்பவோ முடியவில்லை.

நம்புவதற்கு நிறைய திராணி தேவைப்படுகிறது. விசாலமான பார்வை, சலியாத மனது, துளியும் அவநம்பிக்கை கலப்பில்லாத முழுமை யான நம்பிக்கை உணர்வு எனப் பல சமாசாரங் கள் தேவைப்படுகின்றன.

அப்படி இருந்தாலேஇதை ஓரளவுக்காவது புரிந்துகொள்ள முடிகிறது.
புலன்களுக்குப் புலனாவதை மட்டும்தான் நம்ப முடியும் என்றால், கண்ணுக்குத் தெரியாத மின் சாரம், காற்று ஆகியவற்றையும் நம்ப முடியாது. இங்கே சற்று வளைந்து கொடுத்து, கண்ணுக்கு நேராகப் புலனாகாவிட்டால் என்ன, மறைமுகமாகப் புலனானால்கூட நம்பலாம் என முன் வந்து, இவற்றை நாம் உணர்வு ரீதியில் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். ஆக, பார்ப்பது அல்லது ஐம்புலன் களில் ஒன்றால் உணர்வது என்பதுதான் இன்று நம் நம்பிக்கையின் அளவு.

சித்தம் இந்த நம்பிக்கை அளவுக்குள் சில நேரம் அகப்படுகிறது; பல நேரம் விலகி விடுகிறது. நன்றாகவே கண்ணாமூச்சி விளையாடுகிறது.

இதுவே இப்படி என்றால், இந்த சித்தத்தின் மூலமான சிவம், 'அன்பெனும் பிடிக்குள் மட்டுமே நான் அகப்படுவேன்; மற்றபடி என்னை அறிவதும் புரிவதும் பெரும்பாடு’ என்கிறது.

ஒரு புராணக் கதையின்படி, இந்தச் சிவமானது அந்தத் திருமாலுக்கும், அயனுக்குமேகூட வசப்பட வில்லை. சிவத்தின் அடி தேடிச் சென்றாராம் திருமால்; முடி தேடிச் சென்றாராம் அயனாகிய பிரம்மா.

முடியில் இருந்து உதிர்ந்து விழுந்த ஒரு தாழம்பூவை பொய் சாட்சியாகக் கொண்டு வந்து நிறுத்தி, சிவபிரானை அவர் ஏமாற்ற முனைய, அது கண்டு வெகுண்ட சிவ பிரான், அயனுக்கு வணக்கத்துக்குரிய கோயிலே இல்லாது போகக்கடவது என்று சபித்துவிட்ட கதை நாமறிந்ததுதான்!

இப்படிப்பட்ட சிவத்தைதான் 'ஆதி சித்தன்’ என்கிறது சித்தர்கள் உலகம்.

'சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி’

என்று, ஒளவையும் தன் பாடல் ஒன்றில் வழிமொழிகிறாள்.

திருமூலரும் தன் திருமந்திரப் பாடல் ஒன்றில்,

'நாபிக்கும் கீழே பன்னிரண்டங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலீர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
ஈசன் கூவிக்கொண்டு அமர்ந்திருந்தானே’ என்கிறார்.

'செகமெலாஞ் சிவமென்றே யறிந்தோன் சித்தன். சிந்தை தெளிந்திருப்பான் அவனே சித்தன்’ என்னும் வான்மீகர் ஞானப் பாடல் ஒன்று, இந்த உலகையே சிவமாகப் பார்ப்பவர்கள் சித்தர்கள் என்கிறது.

நம்மில் ஆறு வழிமுறைகள் உள்ளன. ஆதிசங்கரர்தான் இந்த ஆறு வழிமுறைகளையும் வகுத்துத் தந்தவர். 'சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம்’ என்கிற இந்த ஆறில், ஏதாவது ஒரு வழியில் நாம் நமது ஆத்மாவைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

சைவமென்றால்  சிவன்,
வைணவமென்றால் விஷ்ணு,
சாக்தம் என்றால் பராசக்தி,
கௌமாரம் என்றால் முருகன்,
காணாபத்யம் என்றால் கணபதி,
சௌரம் என்றால் சூரியன்.
 
RAWALIKADate: Thursday, 30 Jan 2014, 11:11 AM | Message # 3
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
- இந்த ஆறு வழிகளிலுமே பல சித்த புருஷர்களுக்கு ஈடுபாடில்லை.

அதே நேரம், சிவத்தை இவர்கள் மறுத்து விடவுமில்லை. பராசக்தி, கணபதி, முருகனையும் மறுக்கவில்லை.

'இந்த வழிமுறைகள் என்பது பக்தி செய்வோர்க்கு! எங்களுக்கு அது தேவையில்லை. அது புறத்தே தேடுவது போன்றது. நாங்கள் எங்கள் அகத்துக்குள்ளேயே அவனைத் தேடிக் கண்டுகொண்டவர்கள்’ என்பதுபோல் இருக்கிறது சித்தர்களின் போக்கு. இதனால், சித்த மார்க்கம் என்றே ஒரு வழிமுறை உருவாகிவிட்டதுதான் விந்தை. ஆனால், இந்த வழிமுறை அத்தனை எளியதோ, சுலபமாகப் பின்பற்ற முடிந்ததோ அல்ல.

ஆதிசங்கரர் காலத்துக்குப் பின்னரே அநேக சித்த புருஷர்கள் தோன்றி, வரலாற்றிலும் பதிவாயினர். இவர் களை என்ன காரணத்தாலோ 18 என்னும் ஒரு கணக்குக் குள் நம் சான்றோர்கள் அடக்கிவிட்டனர். எவ்வளவோ எண்கள் இருக்க, 18-க்குள் சித்தர்களை அடக்கியது குறித்து ஆய்வு ஒருபுறம் நடந்தபடி உள்ளது.

'அரனைப் பாடி உயர்ந்திட்டார் அறுபத்து மூவர்
அருளைப் பாடி மிகுந்திட்டார்  அருட்பெருஞ்சோதி
அரியைப் பாடி சிறந்திட்டார் ஆறிரண்டாழ்வார்
அதனைப் பாடி நிறைந்திட்டார் அறுமூன்று சித்தர்...’

என்கிற ஒரு பாடலும் சித்தர்களைப் 18-க்குள் அடக்கவே பார்க்கிறது. ஆனால், எண்ணிறந்த சித்தர்கள் வாழ்ந்துவிட்டுச் சென்றுள்ளனர். இவர்களில் பாலவர்க்கம், மூல வர்க்கம், கைலாயவர்க்கம் எனப் பிரிவுகள் உண்டு.

முருகனை குருவாகக் கொண்டவர்கள் பால வர்க்கம், திருமூலரை குருவாகக் கொண்டவர்கள் மூல வர்க்கம், அந்த ஆதிசிவனையே குருவாகக் கொண்டவர்கள் கயி லாய வர்க்கம். இதுபோக, யோக, காய, ரசவாத சித்தர் கள் என்று ஒரு கூட்டமும் உண்டு.

எதனாலோ ஒரு சித்தன்கூட காக் கும் கடவுள் திருமாலைப் பின்பற்ற வில்லை. இடைக்காடரையும், திரு மழிசையாரையும் இம்மட்டில் திருமாலடியாராகச் சிலர் சொல்வதன் பின்னே நிறையவே கேள்விகள் உள்ளன. அறுதியிட்ட ஆதாரங்கள் இல்லை. அவ்வளவு ஏன்... பதி னெட்டு சித்தர்கள் எனப்படும் சித்தர் களிலேயே பலருக்கு அவர்களின் பிறப்புக்குப் பின்னால் உள்ள விஷயங்கள் பெரும் மௌட் டீகமாகவே உள்ளன.

ஆனால், இவர்கள் சொல்லிச் சென்ற விஷயங்கள், பாடிச் சென்ற பாடல்கள், இவர்கள் புரிந்த சாகசங் கள் எல்லாமே, மானுடராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் அறிய வேண்டி யவை.

உட்கார்ந்த இடத்தில் உடம்பை அளந்து, ஒரு நாளைக்கு ஒரு மனிதனானவன் 21,600 முறை சுவாசிக்கிறான் என்பதில் இருந்து... அண்டத்தில் சுற்றும் கோள்களில் புகுந்து, எப்போது மழை பெய்யும், எப்போது பயிர் செழிக்கும் என்பது வரை அவர்கள் சொன்னதும்.... அதன்படியே நடப்பதும் ஆச்சரிய மான விஷயங்கள்!

இதனினும் மேலான ஆச்சரியங் களை அள்ளித் தருபவர்கள் அவர்கள். இறந்தவரை உயிர்ப்பிப்பர், கூடுவிட்டுக் கூடு பாய்பவர், செம்பைப் பொன்னாக்குபவர், நீர் மேல் நடப்பவர், ஆகாய வீதியில் பறப்பவர், ஆறடி உயர தூலத்தை அணு போல் சிறிதாக்குபவர், அணு போன்றதை மலை போலப் பெரி தாக்குபவர்... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவற்றுக்குள் புகுந்து வியப்ப தோடு, இவர்களை விளங்கிக்கொள்ள முற்படவே.... இந்த சித்தம் சிவம் சாகசம்!
 
JayDate: Thursday, 30 Jan 2014, 7:39 PM | Message # 4
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Wow wow wow  Tons of thanks to you viji.
 
RAWALIKADate: Thursday, 30 Jan 2014, 7:46 PM | Message # 5
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote Jay ()
Wow wow wow  Tons of thanks to you viji.

Jay

ithu thodar ra varuthu

so i will post all the epi

ithuvarai 34 vanthirukku
 
JayDate: Thursday, 30 Jan 2014, 9:04 PM | Message # 6
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Theriyum Viji.  India poi irunthona pathilernthu padichen.  Athuthaan Inga firstlernthu paartha udan semma happy aagitten
 
RAWALIKADate: Sunday, 02 Feb 2014, 1:57 PM | Message # 7
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சித்தம்... சிவம்... சாகசம்!
'சிவாயவசி என்னவும் செபிக்க இச்சகம் எலாம்
சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே!’
- சிவவாக்கியர்
நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது சித்தர்களின் இஷ்ட தெய்வம்- பரமனாகிய சிவபிரான்தான். இப்பெருமானை நாம் லிங்க வடிவமாகத்தான் இந்த பூமி எங்கும் காண்கிறோம்.ரூபமாக என்றால், நடராஜ தோற்றமே புலனாகிறது. இந்தத் தோற்றம் குறித்து ஆணித்தரமாக ஒரு கருத்தும் சான்றோர்களிடம் நிலவுகிறது. நடராஜ தோற்றம், உலகின் இயக்க கதியை உணர்த்துகிறதாம். அதன் ஒவ்வொரு நெளிவுசுளிவுக்குப் பின்னாலும் ஒரு பெரும் பொருள் இருக்கிறதாம்.


Message edited by RAWALIKA - Sunday, 02 Feb 2014, 1:58 PM
 
RAWALIKADate: Sunday, 02 Feb 2014, 1:59 PM | Message # 8
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
ஈசனின் புருவம் வளைந்தால், அது கடலின் மேல் விளையும் புயல்; பார்வை பதியும் இடம், விளையும் வயல்; விரல்களின் வளைவில் காற்றின் வீச்சு... மொத்தத்தில் நடராஜ நாட்டியத்தின் முத்திரை ஒவ்வொன்றுமே பூவுலகின் பலவித மாற்றங்களைக் குறிக்கிறது. இந்த மாற்றங்களுள், நாம் பொருள் கொள்ளும் வளர்ச்சியும் உண்டு; நாம் அச்சப்படும் வீழ்ச்சியும் உண்டு.நடராஜரின் தோற்றமே ஒரு கருத்துப் புதையல். இந்த வடிவம் எங்கே உள்ளதோ, அங்கே இயக்க கதி சுறுசுறுப்பாக இருக்குமாம். சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் இல்லாத மிக மந்த கதியிலான ஒரு வீட்டுக்குள் நடராஜ சிலாரூபம் நுழைந்து அமர்ந்த மாத்திரத்தில், அந்த இல்லத்துக்குள் ஒரு விசைப்பாடு பலவிதமான வினைகளாக செயலாற்றத் தொடங்குகிறது.ஓர் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், உலகில் அதிகம் செய்யப்பட்ட சிலாரூபம் ஸ்ரீநடராஜ ரூபம்தான்; அதிகம் கடத்தப் பட்டதும் நடராஜ ரூபமே! அதிகம் ரசிக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் நடராஜ ரூபம்தான். புரிந்தும் புரியாமல் தொடர்ந்துகொண்டே இருப்பதும் நடராஜ ரூபம்தான்!

ஆனால் பூஜிக்கவும், அபிஷேக ஆராதனைக்கு மாகவும் லிங்க ரூபமே உள்ளது. இதைத்தான் சித்த புருஷர்களும் இறுகப் பற்றிக் கொண்டனர். அதற்கான காரணத்தைப் பார்த்தால், ஒரு பிரமிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

வேதங்களே நமக்கு ஆதாரமானவை. அதில், ரிக் வேதமே முதல் வேதம். இது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை மேல்நாட்டு அறிஞர்களான வில்சன், மேக்ஸ்முல்லர் ஆகியோர் தங்களது ஆய்வில் உறுதிப்படுத்தியுள்ளனர். அதாவது, இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு எண்ணூறில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது ரிக் வேதம் என்பது அவர்களின் ஆய்வுத் தீர்மானம்.

இந்த ரிக்வேதம் லிங்க வழிபாட்டை வலியுறுத்துவதுடன், அதுவே உன்னதமானது, உத்தமமானது என்றும் கூறுகிறது. ஆனால், நம் சான்றோர் கூற்றுப்படி லிங்கத் தோற்றமும், வழிபாடும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்து வருகின்றன. மூவாயிரம் என்பது ஒரு சுலபமான கணக்கு!

அதாவது... நால்வகை யுகங்களை இந்தப் பூவுலகம் காண வேண்டும். அதன்படி, கிருத யுகமும், திரேதா யுகமும், துவாபர யுகமும் முடிந்து, இப்போது கலி நடக்கிறது. அதிலும் 5,113 வருடங்களைக் கழித்துவிட்டோம். நான்கு யுகங்களுக்கான மொத்த காலம் என்பதோ 43,20,000 வருடங்கள். இதில் மூன்று யுகங்களின் கணக்கோடு, நடப்பு கலியுக கணக்கையும் சேர்த்தால், தோராயமாக முப்பது லட்சம் ஆண்டுகளை இந்த பூமி பார்த்துவிட்டது.

இந்த பூமி தோன்றும்போதே வேதங்களும் தோன்றிவிட்டன என்றால், வேதங்களுக்கான காலமும் முப்பது லட்சம் ஆண்டுகளைக் கடந்தாகிவிட்டது. இந்தக் காலங்கள்தோறும் லிங்க வழிபாடு நிகழ்ந்தே வந்திருக்கிறது.

எதற்காக இந்த லிங்க வடிவம் எனும் கேள்விக்கு கோயிற் புராணத்தின் ஒரு பாட்டில் பதில் ஒளிந்திருக்கிறது.

'வாக்கொடு மனமிறந்த மன்னவனெங்கு மாகி
நீக்கற நிறைந்தானேனு நிகழ்தரா ததனான்
முத்தி போக்கெளிதல்ல வென்றப் புனிதனே
புந்தி செய்தேம் பாக்கிய வகையா வெண்ணில்
பதிமிகு பாரில் வைத்தான்’


எனும் அந்தப் பாடலின் பொருள், உருவ வழிபாட்டுக்கே இலக்கணம் சொல்கிறது.சிவபெருமான் எங்கும் நிறைந்திருக்கிறான்.

அவன் இல்லாத இடம் இல்லை. விறகுக்குள்ளே தீயாக, பசுவின் பாலுக்குள் நெய்யாக, எள்ளுக்குள் எண்ணெயாக இருப்பது எல்லாமும் அவன்தான். ஆனால், இந்த உண்மையை ஞானத்தாலேயே உணர முடியும். மாயை மிகுந்த உலகில், அறிவதாகிய அறிவே முன் தோன்றி செயலாற்றும். அதனால், அறிவதற்கே இங்கே முதலிடம். உணர்வது என்பது இரண்டாம் பட்சமே!


Message edited by RAWALIKA - Sunday, 02 Feb 2014, 2:03 PM
 
RAWALIKADate: Sunday, 02 Feb 2014, 2:06 PM | Message # 9
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
இதுவே உலக இயற்கை என்றால், உயிர்கள் முக்தியடைவது இயலாதே? பாவ- புண்ணிய சுழற்சிக்குள் இருந்து விடுபடாமல், பிறந்தும் இறந்தும், இறந்தும் பிறந்துமாய் அல்லவா இருப்பர்? உயிர்களை மீட்டெடுக்க வழிபட வேண்டுமே?

அதற்காகவே, பூவுலகில் சிவபெருமான் எண்ணற்ற ஸ்தலங்களை உருவாக்கி அருளினானாம். ஸ்தலங்களில் அவனது ரூபம் லிங்க வடிவம் ஆகும். விக்கிரக ஆராதனையைவிட, லிங்க வடிவத்தை ஆராதிப்பதே மோட்ச கதிக்கு மிக உசிதமானது என்கிறது ரிக்வேதம். இதற்குச் சான்றாக, ஒரு கதை மகாபாரதத்தில் காணக் கிடைக்கிறது.

பாரத யுத்தம் மூண்டு, 18 நாட்கள் நடந்ததை அறிவோம். அதில் ஒருநாள், கௌரவர்கள் சார்பாக பாண்டவர்களோடு யுத்தம் புரிகிறார் அஸ்வத்தாமன். அவரை வெல்வது எளிதல்ல. அவரிடம் உள்ள அஸ்திரங்களில் அக்னி அஸ்திரம் ஒன்று போதும்; மொத்த உலகையே சாம்பலாக்கிவிட முடியும். இது பாண்டவர்களுக்கும் தெரியும். குறிப்பாக, கிருஷ்ண பரமாத்மா நன்கறிவார்.

அன்றைய யுத்தத்தில், அஸ்வத்தாமா அந்த அஸ்திரத்தை இறுதியாகப் பிரயோகித்தார். மொத்த பாண்டவ சைதன்யமும் சாம்பலாகப் போகிறது என்றே எல்லோரும் நினைக்க... கிருஷ்ண பரமாத்மா, பதிலுக்கு பாசுபதாஸ்திரத்தைப் பிரயோகிக்கும்படி அர்ஜுனனைப் பணித்தார். சிவனாரைக் குறித்து தவமிருந்து அர்ஜுனன் பெற்றதே பாசுபதாஸ்திரம். அது, அக்னியாஸ்திரத்தை அடக்கிவிடுகிறது. அஸ்வத்தாமனிடம் திகைப்பு!

அக்னியாஸ்திரத்தை மிஞ்சும் ஓர் அஸ்திரம் இருக்கமுடியுமா என்று, பின்னர் அவன் வியாசரிடம் கேட்க, அவர் பதில் கூறத் தொடங்கினார்: ''அஸ்வத்தாமா! நீயும் அர்ஜுனன் போன்று மிகச் சிறந்த வீரனாக இருந்தபோதிலும், அவன் ஈஸ்வரனின் லிங்க ரூபத்தை தியானித்து தவம் செய்து, பாசுபதாஸ்திரத்தைப் பெற்றான். நீயோ அந்தப் பெருமானை விக்கிரக ஆராதனை புரிந்தாய். லிங்க ரூபத்தில் சக்தியும் பீட கதியில் கிடக்கிறாள். ஸ்தூபம் நாதமாக விளங்குகிறது. எனவே, சிவபெருமான் லிங்க ரூபத்தில் வழிபாடு உடையவர்களை, வரம் பெற்றவர்களை முந்தி ஆட்கொள்கிறான். அதனாலேயே அர்ஜுனனை உனது அஸ்திரத்தால் வெல்ல முடியவில்லை!'' என்றாராம்.

மகாபாரதத்தில் கிடைக்கும் இந்தச் செய்திப்படி லிங்க வடிவமே வழிபாட்டுக்கு உரியது என்பது புலனாகிறது.

இதன்படி, லிங்கம் என்பது மணியாகும். மந்திரம் என்பது 'நமசிவாய’ எனும் பஞ்சாட்சரமாகும். விபூதியே மருந்தான ஒளஷதமாகும். இதையே 'மணி மந்திர ஒளஷதம்’ என்பார்கள். சித்த புருஷர்களும் மிக எளிதாக, மணிமந்திர ஒளஷதமாக 'லிங்கத்தை- பஞ்சாட்சரத்தை- விபூதியை’க் கொண்டார்கள்.

இந்த லிங்கமும் ஏழு வகைப்பட்டு, இந்த உலகில் வணங்கப்பட்டு வருகிறது.'சுயம்பு லிங்கம், தேவி லிங்கம், திவ்ய லிங்கம், ஆர்ஷக லிங்கம், மானுஷ லிங்கம், ராட்சஸ லிங்கம், ஆசுர லிங்கம்’ என்று வகைப்பட்டு கிடக்கும் இந்த லிங்கங்களில், பன்னிரண்டு ஜ்யோதிர் லிங்கங்கள் சுயம்பு லிங்க வகையைச் சேர்ந்தவை. இந்த ஜ்யோதிர் லிங்கங்களை நினைத்த நேரம் மனத்தில் நிறுத்தி தியானிக்கலாம்.

இதுவல்லாமல், பஞ்ச பூத மகா லிங்கங்கள் ஐந்து உள்ளன. காஞ்சி, திருவானைக்கா, திருக்காளத்தி, திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய தலங்களில் இந்த பஞ்சபூத மகாலிங்கங்கள் உள்ளன.


Message edited by RAWALIKA - Sunday, 02 Feb 2014, 2:11 PM
 
RAWALIKADate: Sunday, 02 Feb 2014, 2:11 PM | Message # 10
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
லிங்க வடிவத்தையே தேவாதி தேவர்களும் வணங்கி, வரங்களைப் பெற்றுள்ளனர். காஞ்சி ஏகாம்பரேஸ்வரரை வணங்கியே அன்ன வாகனத்தைத் தனதாக்கிக் கொண்டான் பிரம்மன். இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய அஷ்டதிக் பாலகர்களும் ஸ்ரீசைலம், திருவண்ணாமலை, கேதாரம், கோகர்ணம், திருவானைக்கா, திருக்காளத்தி, சித்த வடம், திருவாரூர் ஆகிய தலங்களில் உள்ள ரூபங்களை வணங்கியே தங்களுக்கான ஆதிபத்தியத்தை அடைந்தனர். சூரியனும் சந்திரனும் தினமும் மகா மேருவையே லிங்கமாகக் கருதி வலம் வந்து வணங்குகின்றனர். மற்ற கோள்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியோர் திருவிடைமருதூர், மதுரை, ராமேஸ்வரம், திருவெண்காடு, வேதாரண்யம் ஆகிய தலங்களில் சிவபெருமானை வணங்கி, தங்களின் ஆதிபத்தியத்தை அடைந்தனர். சப்தரிஷிகள் சிதம்பரத்தில் வழிபட்டனர். துருவன் காசியில் வழிபட்டான். ஆதிசேஷன் கும்பகோணத்தில் பூஜித்தான்.

இந்த வரிசையில்தான் சித்தர்களும் வருகின்றனர். சிவபெருமானை வழிபடுவோரில் தேவர்கள், அஷ்டதிக் பாலகர்கள், கிரகங்கள், சப்தரிஷிகள், அசுரர்கள், யட்சர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள் என்கிற வரிசையில்... இறுதியில் வந்து சேர்ந்தவர்களே நவநாயக சித்தர்கள்.

மற்றவர்கள் தங்களுக்கான தேவைக்கு பூஜித்து வரம் பெற்றதுடன் மகிழ்ந்த நிலையில், சித்த புருஷர்கள் மட்டும் சற்றே விதிவிலக்காக சிவபிரானிடம் வரங்களைக் கோராமல், சக்தி கொடு, முக்தி கொடு, ஆயுதம் கொடு, பட்டம் கொடு, பதவி கொடு என்று கோரிக்கை வைக்காமல், தாங்கள் உணர்ந்ததையும் அறிந்ததையும் கொண்டு மானுடர்களுக்கு வழிகாட்ட எண்ணினர். இதை ஒரு நோக்கமாகக் கொண்டு அவர்கள் செயல்படவில்லை; போகிற போக்கில் செய்தனர்.

சிலர் சொல்லிச் செய்தனர்.சிலர் சொல்லாது செய்தனர். இன்னும் சிலரோ 'முடிந்தால் எங்கள் வாழ்வைப் பார்த்துப் புரிந்து கொள்’ என்பது போல, எதுவும் கூறாமல் வாழ்ந்து சென்றனர்.

கூட்டிக்கழித்து, வகுத்துப் பெருக்கி ஆழ்ந்து சிந்தித்தால் தேவரால், முனிவரால், ரிஷிகளால், திக்பாலர்களால், கோள்களால், மற்றுமுள்ள யட்சர்கள், கிம்புருடர்கள், நாகர்கள், ராட்சஸர்கள் என்று சிவபிரானின் லிங்க வடிவை வழிபாடு செய்தவர் களால், லிங்கத்தின் மகாத்மியம் மட்டுமே நமக்குத் தெரியவந்தது; அவர்கள் பக்தியும் பணிவும் தெரிய வந்தன.

ஆனால், சித்தர்களால் மட்டுமே உடல், உள்ளம், ஆன்மா முதல் அண்டம், பிண்டம், பேரண்டம் வரை மானுட உலகுக்கு தெரிய வந்தது.

அது மட்டுமா?

'கேளடா மானுடா’ என அவர்கள் பாடிய பாடல்கள், நமது மூச்சுக் காற்றில் பத்து விதம் உள்ளது என்றது. நாடிகளைக்கூடப் பகுத்து... பித்தம், வாதம், சிலேத்துமம் என்று அடையாளப்படுத்தினர்.

தாவரங்களில் வரமானது எது என்று அறிந்து, அதைத் தங்கள் கைகொண்டு பறித்து, அதன் மூலத்தை அறிந்து, அதுவே மூலிகை என்றனர். அதில் காயகற்பம் செய்து உண்டு, தங்கள் உடம்பை கல்ப தேகமாக்கிக் கொண்டு, மனித வாழ்வின் பெரும் சவாலான மூப்பு- பிணி- சாக்காட்டை சாட்டையால் அடித்து விரட்டினர்.

இதெல்லாம் போதாது என்று அஷ்டமா ஸித்தியை அடைந்து காட்டினர். மொத்தத்தில், மானுட சிவங்களாகவே நடமாடினர்; நடமாடிக் கொண்டும் இருக்கின்றனர்.

சிவத்துக்கும் அவர்களுக்குமான தொடர்போடு, அற்பமாக சாகசங்கள் பல செய்தனர். இந்த சாகசத்தை முதன்முதலாய்த் தொடங்கி வைத்தவனே ஈசன்தான். அவன் மண்மிசை திருவிளையாடல் புரிய வந்தபோது எடுத்த முதல் வடிவமும் சித்த வடிவம்தான்!

எண்ணிறந்த வடிவங்கள் பல இருக்க, பூஜைக்கு லிங்கமாகத் தோன்றியவன், பூமியில் முதலில் சித்தனாய், புலவனாய், பின்பு வேடனாய் என்றே வந்தான். அவனே சித்தனாய் வந்து புரிந்த சாகசத்தைப் பார்ப்போமா?

- சிலிர்ப்போம்.


Message edited by RAWALIKA - Sunday, 02 Feb 2014, 2:15 PM
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » சித்தம்... சிவம்... சாகசம்! - இந்திரா சௌந்தரராஜன் (சித்தம்... சிவம்... சாகசம்! நன்றி விகடன் - தொடர்)
  • Page 1 of 3
  • 1
  • 2
  • 3
  • »
Search: