நீதிக் கதைகள் - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » நீதிக் கதைகள் (நீதி சொல்லும் கதைகள்)
நீதிக் கதைகள்
PattuDate: Thursday, 20 Feb 2014, 5:05 PM | Message # 21
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
அழகும் அவலட்சணமும்

ஒரு நாள் அழகும் அவலச்சணமும் ஒரு கடைகரையில் சந்தித்து கொண்டன

நாம் இருவரும் சேர்ந்து கடலில் குளிக்கலாமா என்று அழகு கேட்க அவலட்சணமும் ஒப்புகொண்டது. உடைகளை கடற்கரையில் வைத்துவிட்டு குளிக்க சென்றன

சிறிது நேரம் கழித்து குளித்தது போதும்னு அவலட்சணம் கரையேறியது, அங்கிருந்த அழகின் உடைகளை அணிந்தது கொண்டு அவலட்சணம் தன் வழியே சென்றது

பின்னர் குளித்து திரும்பிய அழகு தன் உடைகளை காணமல் தவித்து போனது. ஆடையில்லாமல் தெருவில் போக கூச்சமாக இருந்தது, எனவே வேறுவழி இல்லாமல் அவலச்சணத்தின் உடைகளை அணிந்து கொண்டு சென்றது.

அன்று முதல் இன்று வரை உலகத்தில் பலரும் ஆடையை வைத்து அழகையும் அவலச்சணத்தையும் தவறாக முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர், நிஜமான அழகை அடைந்தவர்கள், அதன் அசிங்கமான ஆடைகளை பார்த்து முகம் சுளித்து அதை ஒதுக்கி விடுகிறார்கள். வேறு சிலர் அழகின் உடைகளில் மயங்கி அவலட்சணத்தை கொண்டாடிகொண்டிருக்கிறார்கள்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 21 Feb 2014, 6:05 PM | Message # 22
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
வாழ்க்கைப் பயணம் - உழைப்பு

அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார்.

அவர், ''ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே?!'' என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.
 
உடனே ராக்ஃபெல்லர், ''விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக... இப்போது எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா?

எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?'' என்று கேட்டார்.

''பெரும் விபத்து நேருமே!''- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ''வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும்.

உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!'' என்று விளக்கம் அளித்தார்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Saturday, 22 Feb 2014, 5:18 PM | Message # 23
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்?

மிகவும் கஷ்டப்பட்ட நிலையிலிருந்த ஒருவன்  கால்நடைப் பயணமாகப் ஒரு காட்டின் வழியே சென்றான்.

நீண்ட தூரம் நடந்ததால் அங்கிருந்த ஒரு மரத்தினடியில் படுத்து ஒய்வெடுக்கத் தொடங்கினான். அந்த மரம் நினைப்பதையெல்லாம் தரும் கற்பக மரம் என்பது அவனுக்குத் தெரியாது.

மிகவும் பசியாக இருக்கிறதே எதாவது உணவு கிடைத்தால் நன்றாக இருக்குமே! என்று நினைத்தான். உடனே ஒரு தட்டு நிறைய உணவு வந்தது. ஆச்சரியமடைந்த அவன் அதைச் சாப்பிடத் தொடங்கினான்.

உணவு சாப்பிட்டதும் உறக்கம் வந்தது. ஒரு தலையணை  இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான், நினைத்தவுடன் தலையணையும் வந்தது.

அதில் படுத்தான். நடந்து வந்ததால் கால்கள் வலிக்கின்றதே, இரண்டு பேர் கால்களை அமுக்கிவிட்டால் சுகமாக இருக்குமே என்று எண்ணினான்.

உடனே இரண்டு வான் தேவதைகள் அவனருகில் அமர்ந்து அவனது கால்களை அமுக்கி விடத் தொடங்கினார்கள்.

அவனுக்கு மிகவும் சந்தோஷமாகப் போய்விட்டது. இதெல்லாம் எப்படி நடக்கிறது என்பது புரியாமல் மேலும் கீழுமாய்ப் பார்த்தான். எதுவும் புரியவில்லை அவனுக்கு!

உடனே அவனுக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது.

ஆஹா நாம் ஒரு காட்டில் அல்லவா ஓய்வு எடுத்துகொண்டிருக்கிறோம்! புலி ஏதேனும் வந்து நம்மை விழுங்கிவிட்டால் என்ன செய்வது? என நினைத்தான் அதன்படியே புலியும் ஒன்று வந்து அவனை விழுங்கிற்று.

தூய்மையான உள்ளமாக இருந்தால் அங்கு கடவுள் வசிப்பார். அவநம்பிக்கையுடன் இருந்தால்.......?




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Sunday, 23 Feb 2014, 5:45 PM | Message # 24
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்


ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது.

"கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.

கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது.

அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியன் "மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்!" என்றான்.

"கடவுளே! உதவி செய்!" என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Monday, 24 Feb 2014, 4:58 PM | Message # 25
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
அதிபுத்திசாலி

ஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவரும் பலசாலிகள், புத்திசாலிகள். ஒருமுறை தங்களில் யார் புத்திசாலி என்பதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. விஷயம் முனிவரிடம் வந்தது. அவர் சீடர்களிடம், சீடர்களே! இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. சமையல் முடிய தாமதாமாகும். அதோ! இரண்டு பேரும் அதோ அந்த மரத்தில் இருக்கும் பழங்களைப் பறித்து வாருங்கள், என்றார்.

குருவிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் அந்த சீடர்கள் மரத்தை நோக்கி ஓடினர். மரத்தை நெருங்க முடியாமல், முள்செடிகள் சுற்றி நின்றன. முதல் சீடன் சற்று பின்னோக்கி வந்தான். பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடினான். ஒரே தாண்டில் மரத்தை தொட்டான். பழங்களை முடிந்தளவுக்கு பறித்தான். மீண்டும் ஒரே தாவில் குருவின் முன்னால் வந்து நின்று, பார்த்தீர்களா! கணநேரத்தில் கொண்டு வந்து விட்டேன், என்றான் பெருமையோடு.

இரண்டாமவன் ஒரு அரிவாளை எடுத்து வந்தான். முள்செடிகளை வெட்டி ஒரு பாதை அமைத்தான். அப்போது சில வழிப்போக்கர்கள் அலுப்போடு வந்தனர். அவர்கள் வெட்டப்பட்ட பாதை வழியே சென்று, பழங்களைப் பறித்து சாப்பிட்டனர். மரத்தடியில் படுத்து இளைப்பாறினர். சிஷ்யனும் தேவையான அளவு பழங்களைப் பறித்து வந்தான்.

இப்போது முனிவர் முதல் சீடனிடம், இரண்டாவது சீடன் தான் அதிபுத்திசாலி என்றார்.முதலாமவன் கோபப்பட்டான். சுவாமி! இன்னும் போட்டியே வைக்கவில்லை. அதற்குள் அவனை எப்படி சிறந்தவன் என சொன்னீர்கள்? என்றான்.முனிவர் அவனிடம், சிஷ்யா! நான் பழம் பறிக்கச் சொன்னதே ஒரு வகை போட்டி தான்! நீ மரத்தருகே தாவிக்குதித்து, பழத்தைப் பறித்தது சுயநலத்தையே காட்டுகிறது. ஏனெனில், அதை எனக்கு மட்டுமே தந்தாய். நான் மட்டுமே பலன் அடைந்தேன்.

இரண்டாம் சீடனோ பாதையைச் சீரமைத்ததால், எனக்கு மட்டுமின்றி ஊராருக்கும் இன்னும் பல நாட்கள் பழங்கள் கிடைக்கும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்பவனே அதிபுத்திசாலி, என்றான்.இங்கே செயல் ஒன்று தான். ஆனால், செய்த விதத்தில் தான் வித்தியாசம்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Tuesday, 25 Feb 2014, 4:53 PM | Message # 26
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
 நள்ளியும் புள்ளியும் | பாட்டிக் கதை

"அக்கா!,

நல்லவன், புத்திசாலி இந்த இரண்டில் நான் எப்படி இருக்க வேண்டும்?"

பேரன் சந்தர் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் பேத்தி புவனாவைப் பார்த்துப் பார்வதிப் பாட்டி சிரித்துக் கொண்டே அன்றைய கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு காட்டில் ஆடு ஒன்றுக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. அவைகளுக்கு நள்ளி, புள்ளி என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்து வந்தது.  குட்டிகளும் வளர்ந்து சுயமாக வாழ வேண்டிய நேரம் வந்து விட்டது.

எதிரிகளிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கச் சொல்லித் தாய் ஆடு அனுப்பி வைத்தது. இரண்டும் தனித்தனியாக வீடுகள் கட்டிக் கொண்டு வாழ ஆரம்பித்தன.

நள்ளி இரக்க குணமுடைய அறிவாளி.. மற்றவர்களைக் கவரக்கூடிய பேச்சுத் திறமையும் அதற்கு இருந்தது. அன்பினால் கொடிய விலங்குகளையும் நண்பர்களாக்கி, காட்டில் யாரும் பயமில்லா வாழ்க்கை வாழ எண்ணியது. முதலில் அதனுடைய போதனையைச் சிறிய பிராணிகளிடம் ஆரம்பிக்க, நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனுடைய கனிவான அர்த்தமுள்ள சிந்தனையைத் தூண்டும் பேச்சுக்கள் அவைகளைக் கவர்ந்து இழுத்தன.

தினமும் நள்ளி வீட்டின் முன் உபதேசம் நடக்கும்.  நாளுக்கு நாள் பல புதிய பிராணிகள் சேர்ந்து கொண்டே இருந்தன. ஒரு நாள் பெரிய ஓநாய் ஒன்று அங்கு வந்தது. அதைப் பார்த்து மற்ற பிராணிகள் பயந்து நடுங்கின. நள்ளி தன் கவர்ச்சிப் பேச்சால் அவைகளுடைய பயத்தைப் போக்கியதுடன் ஓநாயைத் தன் அருகில் கூப்பிட்டு உட்கார வைத்துக் கொண்டது..

திருப்தியாகச் சாப்பிட்டு வந்த ஓநாய்க்குப் பசியில்லை. நள்ளியின் பேச்சை ரசித்துக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருந்தது. கூட்டம் முடிந்தவுடன் கைகுலுக்கி ஓநாயை அனுப்பி வைத்தது.

எப்பொழுது வேண்டுமானாலும் தாழ்ப்பாள் போடாத தன் வீட்டுக்கு வரச் சொன்னது..

இந்த அதிசயத்தைப் பார்த்த மற்ற பிராணிகள் நள்ளியைப் பாராட்டின. ஆனால் புத்திசாலியான புள்ளி அசைவ உணவால் வாழும் மிருகங்களின் ஆபத்தை எடுத்துக் கூறியது. ஆனால், நள்ளி அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

அன்பு கலந்த உபதேசத்தால் கொடிய மிருகங்களின் உணவுப் பழக்கத்தையே மாற்றி விடப்போவதாகச் சொன்னது. 'கூரான கொம்புகள் உள்ள நமக்குப் பகலில் இந்த ஓநாயால் பயம் கிடையாது; இரவில் பாதுகாப்புக்காகக் கதவையாவது தாள் போட்டுக்ககொள்' என்று அது சொன்னதையும் அலட்சியம் செய்து விட்டது நள்ளி.

ஒரு நாள் ஓநாய்க்கு இரை கிடைக்கவில்லை. அலைந்து திரிந்ததால் அதற்கு அகோரப் பசி உண்டான போது நள்ளியின் நினைவு வந்தது. 'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்பது போல் அன்று இரவு எல்லோரும் தூங்கிய பின் நள்ளி வீட்டுக்குச் சென்றது. தாழ்ப்பாள் போடாத கதவைத் திறந்து உள்ளே சென்றபோது நள்ளி நன்றாக துங்கிக் கொண்டிருந்தது.

பாவம் நள்ளி, சிறிது நேரத்தில் ஓநாய்க்கு இரை ஆகிப்போனது..

நள்ளியின் அன்பும், அருளும், பண்பும், பாசமும், இரக்க குணமும் பயனில்லாமல் போய்விட்டன. அடுத்த நாள் புள்ளி நள்ளி வீட்டிற்கு வந்து அங்கிருந்த எலும்புகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. அதற்கு ஓநாய் மேல் சந்தேகம் வர, அதனால் வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க அறிவோடு சிந்தனை செய்ய ஆரம்பித்தது.

நள்ளியைச் சாப்பிட்ட ஓநாய்க்கு அதன் சுவை மிகவும் பிடித்திருந்தது. புள்ளியையும் கபளீகரம் செய்ய இரவில் அங்கு வந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக இதைப் புள்ளி கவனித்தது. கதவு தாழ்ப்பாள் போட்டிருந்ததால் ஓநாய்க்கு உள்ளே போக முடியவில்லை. ஆனால் கதவைத் தள்ளிப் பார்ப்பதைப் பார்த்த புத்திசாலியான புள்ளி அதை ஒழித்துக் கட்ட ஒரு வழி கண்டுபிடித்தது.

மறு நாள் இரவு புள்ளி கதவைத் தாள் போடாமல் ஓநாய் நுழையும் இடத்தில் கருப்பான சுறுக்குக் கயிறை வைத்து அதன் மறு நுனியை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்தது. கதவைச் சிறிதாகத் திறந்து வைத்து வெளியே மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டது..

எப்பொழுதும் போல் ஓநாய் அன்றும் புள்ளி வீட்டுக்கு வந்தது. கதவு திறந்திருப்பதைப் பார்த்தவுடன் அதற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. புள்ளியைக் கபளீகரம் செய்ய அவசரமாக உள்ளே நுழைந்தது. கறுப்பாக இருந்த சுருக்குக் கயிறு அதன் கண்ணில் படவில்லை.

 கழுத்து நன்றாக மாட்டிக் கொண்டு கயிறு இறுக்க ஆரம்பித்தது. பயந்துபோய் ஓநாய் துள்ளத் துள்ள, கழுத்தில் இறுக்கம் அதிகமாகி விட்டது. குரல்வளை நசுங்கி மூச்சுத் திணறி இறந்து போனது.. அன்றிலிருந்து ஓநாய் பயமில்லாமல் மகிழ்ச்சியாகப் புள்ளி வாழ்ந்தது.

நள்ளியின் அன்பு அதைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடப் பயன் படவில்லை. ஆனால், புள்ளிக்கு அதனுடைய புத்திசாலித்தனம் உதவியது. அதனால் புத்திசாலித்தனத்தோடு அன்பு இருந்தால்தான் நாமும் வாழலாம்; மற்றவர்களையும் திருத்தி வாழ வைக்க முடியும்.

கதையை கவனமாக கேட்ட சந்தர் புத்திசாலியாக இருப்பதோடு நல்லவனாகவும் இருக்கப் போவதாகச் சொன்னான். புவனாவும் அதை ஆமோதிக், பாட்டி அவர்களை அணைத்து உச்சி முகர்ந்தாள். அன்பு ஸ்பரிசம் அனைவரையும் விரைவில் ஆனந்தமாகத் தூங்க வைத்தது.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 26 Feb 2014, 5:50 PM | Message # 27
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
வரம்

அடர்ந்த கானகத்தின் நடுவில் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர்
தவம் செய்து வந்தார். அவருக்கு ஒரே ஒரு துணை. அது ஒரு நாய்!

முனிவர் பக்கத்திலேயே அது இருக்கும். அவர் தவம் செய்யும்
போது அவர் காலடியில் வந்து உட்கார்ந்து கொள்ளும். முனிவர்
சாப்பிட்டு மிச்சம் வைக்கும் பழ, காய்களையே அதுவும் தின்றது.
அசைவத்தின் பக்கம் போகக்கூட இல்லை.

ஒரு நாள், பயங்கரமான சிறுத்தை ஒன்று, அந்த நாயை வேட்டையாடத்
துரத்தியது. நடுங்கிப் போன நாய், முவிவரின் கால்களில் விழுந்து
கதறியது.

கவலைப்படாதே. நீ என குழந்தை மாதிரி. நான் உன்னைக்
காப்பாற்றுகிறேன். இந்த விநாடியே நான் என் மந்திர சக்தியால்
உன்னையும் ஒரு சிறுத்தையாக, அந்த சிறுத்தையை விட பலம்
மிகுந்த சிறுத்தையாக மாற்றி விடுகிறேன்’ என்றபடி கண்களை மூடி
மந்திரத்தை உச்சரித்தார்.

அடுத்த விநாடி, அந்த நாய், சிறுத்தையாக மாறிற்று. துரத்தி வந்த
சிறுத்தை, துண்டைக் காணோம், நாயைக் காணோம் என்று ஓடிற்று.
ஒரு வாரம் ஆயிற்று. ஒரு பெரிய புலி அந்த பக்கம் வந்தது.

ஆசிரமத்தில் இருந்த சிறுத்தையைப் பார்த்துப் பசியுடன் துரத்தியது.
வழக்கம் போல் முனிவரைத் தஞ்சமடைந்தது. முனிவர் இப்போது
சிறுத்தையைப் புலியாக மாற்றினார். அப்புறம் என்ன? இந்தப் புலியைக்
கண்டதும், வந்த புலி ஓடிப் போயிற்று.

உருமாற்றம் அடைந்த புலியோ இப்போது பழம், காய்களை
சீண்டுவதில்லை. மெதுவாக முயலில் ஆரம்பித்து மான், பன்றி என்று
ரகசியமாக வேட்டையாட ஆரம்பித்தது.

அப்புறம் மதம் கொண்ட யானை ஒன்று புலியைப் பந்தாட வர,
நம் புலி, முனிவர் தயவில் யானையாக மாறி சேறு, ஆறு என்று ஜாலியாக
அலைந்து ஆசிரமம் பக்கம் கூட எப்போதாவதுதான் வந்தது.

கொஞ்ச நாள் கழித்து பெரிய சிங்கம் ஒன்று யானையைக் கொல்ல
விரைந்து வந்தது. இப்போதும் முனிவர் அருளால் யானை சிங்கமாக
மாறியது.

அத்துடன் அதற்குப் பிரச்னை ஓய்ந்ததா என்றால் அது தான் இல்லை.
அடுத்த வாரமே மிகுந்த வல்லமை கொண்டதும், எட்டுக் கால்களை
உடையதும், எல்லா மிருகங்களை வேட்டையாடக் கூடியதுமான சரபம்
என்னும் மிருகம் அந்தப் பக்கம் வந்தது. சிங்கத்தைக் காலி செய்யத் துரத்தியது.

இப்போதுதான் சிங்கத்துக்கு முனிவரின் நினைவு வந்தது. காப்பாற்றுங்கள்,
காப்பாற்றுங்கள் என்று ஓடிப் போய்க் கெஞ்சியது.. வழக்கம் போல் முனிவர்,
அதை சரபமாக மாற்றினார்.

சரபமாக மாறிய நாய், காட்டையே கலக்க கலக்க ஆரம்பித்தது. கண்ணில்
பட்ட மிருகங்களை எல்லாம் துரத்தித் துரத்திக் கொன்றது. தின்றது. காட்டு
உயிரினங்கள் எல்லாம் ஓடி ஓளிந்தன. தவித்தன. பயந்தன. மிரண்டன.

இப்போதும் ஆபத்து வந்தது. சரபத்துக்கு அல்ல, முனிவருக்கு.
ஆம். தனக்கு வரம் தந்த முனிவரையே கொன்று விட விரும்பியது சரபம்.

ஏன்?

காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் என்னைக் கண்டு நடுங்குகின்றன.
பயந்து ஓடுகின்றன. என்னிடம் அஞ்சும் மிருகங்கள், அந்த முனிவரைச்
சரணடைந்தால் அவரும் பழக்க தோஷத்தில் எல்லா மிருகங்களையும்
சரபமாக மாற்றிவிட்டால் என்ன செய்வது? எனவே அந்த முனிவரைப்
போட்டுத் தள்ளிவிட்டால் நான் மட்டுமே சரபமாக இருப்பேன் என்று
கொக்கரித்த சரபம், முனிவரைக் கொல்ல நெருங்கியது.

எல்லாம் வல்ல முனிவருக்கு இந்த நாயின், சரபத்தின் எண்ண ஓட்டம்
தெரியாதா என்ன? வந்ததே கோபம் அவருக்கு. ஓடி வந்த சரபத்தைப்
பார்த்து ஒரு மந்திரத்தை உச்சரித்தார்.

அவ்வளவுதான், அடுத்த விநாடியே அந்த சரபம், பழையபடி நாயாக,
சோதா நாயாக மாறிற்று.

இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?

பாத்திரம் அறிந்த பிச்சை போடு!




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 27 Feb 2014, 6:56 PM | Message # 28
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
 வன்மை அழியும், மென்மை வாழும் | வாழ்க்கை கதை

 
ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல ஒரு சந்நியாசி, தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒன்றை புரியவைக்க நினைத்தார். எல்லாரையும் அழைத்து உக்கார வைத்து, அவங்களுக்கு தன்னோட பொக்கை வாயை திறந்து காண்பித்தார்.

அவ்வளவுதான், 'வாழ்க்கைத் தத்துவம் இதுதான்'னு சொல்லி போகச் சொல்லிட்டார்.

சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஒரே ஒரு சீடன் மட்டும் வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் தத்துவம் இருந்துதிட போகுதுன்னு குழம்பினவன், மெதுவாக குருவையே எழுப்பி கேட்டான்.

அவர் கேட்டார்.. 'என் வாய்குள்ள என்ன இருந்தது?'

'நாக்கும் உள்நாக்கும் இருந்தது!'

'பல் இருந்ததா?'

'இல்லை.'

'அதுதான் வாழ்க்கை.. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.'



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 28 Feb 2014, 5:32 PM | Message # 29
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
பூஜ்யம் ஒரு ராஜ்ஜியம்

ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன.

ஆசிரியர், ""ஏன் ஒளிந்து கொண்டாய்?'' என்று கேட்டார்.

""நான் வெறும் பூஜ்யம்தானே. என்னை பற்றி யார் கவலைப்படுவார்கள்? எனக்கு மதிப்பே இல்லையே,'' என்று வருத்தமாக கூறியது.

புன்னகைத்த ஆசிரியர், "ஒன்று' என்ற எண்ணை முன்னே வரச்சொன்னார். குழுவினரைப் பார்த்து, ""இதன் மதிப்பு என்ன?'' என்றார்.

""ஒன்று!'' என்றன மற்ற எண்கள்.

அடுத்து பூஜ்யத்தை அதன் அருகில் நிற்கச் சொன்னார்.

""இப்போது?''

""பத்து!'' என்று மற்ற எண்கள் உரக்கக் கத்தின.

அடுத்து பூஜ்யத்தைப் பார்த்து, ""இப்போது தெரிந்து கொண்டாயா உன் மதிப்பு? "ஒன்று' என்ற சாதாரண எண் உன் சேர்க்கையால் பன்மடங்கு அதிக மதிப்பு அடைந்ததைப் பார்த்தாயா?'' என்றார்.

எல்லா எண்களும் மகிழ்ச்சியுடன் கை தட்டின.

""ஆமாம்... நான் சரியான இடத்தில் இருந்தால், நானும் பயனுடையவன்தான். நான் மற்றவருடன் சேர்ந்தால் நாங்கள் அனைவருமே அதிக மதிப்பு வாய்ந்தவர் ஆகிறோம்,'' என்று பூஜ்யம் மகிழ்ந்தது.

இது போலதான் நாம் எப்படி ஆகவேண்டும் எங்கு இருக்கவேண்டும் என நமக்கு வழிகாட்டினார்கள் ஆசிரியர்கள், நாமும் ஆசிரியர்களை வணங்குவோம்.
 




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Saturday, 01 Mar 2014, 5:50 PM | Message # 30
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
 விடா முயற்சி வெற்றி தரும்

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை.

எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றான்.  வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது.

குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது.

அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான்.

அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » நீதிக் கதைகள் (நீதி சொல்லும் கதைகள்)
Search: