தெரிந்த புராணம் தெரியாத கதை - Page 7 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 7 of 7
  • «
  • 1
  • 2
  • 5
  • 6
  • 7
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » தெரிந்த புராணம் தெரியாத கதை (புராண கதைகள்)
தெரிந்த புராணம் தெரியாத கதை
PattuDate: Tuesday, 11 Mar 2014, 7:52 PM | Message # 61
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
கண்ணன் ஏன் காப்பாற்றவில்லை?

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர்,

 ''உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?'' என்றார் உத்தவர்.

''உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, 'பகவத் கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், 'உத்தவ கீதை’. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்'' என்றான் பரந்தாமன்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''
''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்.
''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.

நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை?

போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான்.

சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு.

இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.

மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு,

எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். ''உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்'' என்றான் கண்ணன்.

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்: ''துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம்.

தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே?

சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.

தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.

 'ஐயோ... விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்; என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான்.

நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.

பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!

அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!

நல்லவேளை... துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி.

அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன். ''அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை.

உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன்.
''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''

புன்னகைத்தான் கண்ணன். ''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை.

நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.

''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.

''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!

பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது,

அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை!


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 12 Mar 2014, 6:00 PM | Message # 62
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
ராதையின் காதல்

           நந்தகோபரின் மனையில் வளர்ந்து வந்த கண்ணன் செய்த லீலைகள் கேட்டுக்கேட்டு மகிழத் தக்கவை.அதிலும்  கோபியரின் அன்புடன் கூடிய பக்தி நம்மை மெய்  சிலிர்க்க வைக்கக் கூடியது. எல்லா    கோபிகையரிலும்  ராதை கொண்ட அன்பு அதீதமானது.

கண்ணனும் அப்படியே அவளிடம் அதிக அன்பு வைத்திருந்தான்.இருவரும் எப்போதும் இணைபிரியாமல் வனத்திலும் சோலைகளிலும் யமுனைக் கரையிலும் ஆடலும் பாடலுமாக இருந்ததைக் கண்டு கோகுலத்து மக்கள் யசோதையிடம் வந்து புகார் கூறினர்.

         அத்துடன் ராதையின் தாயிடமும் ராதையைப் பற்றிக் குறை கூறவே அவளும் ராதையைக் கண்டிக்கத் தொடங்கினாள்.அதனால் இப்போது கண்ணனும் ராதையும் சந்திக்க இயலாமல் தவித்தனர்.

கண்ணனிடம் யசோதை அவன் வெளியில் எங்கும் போகாமல் வேலைகளைக் கொடுத்து அவனை அருகிலேயே வைத்திருந்தாள்.இருவரும் எப்போது சந்தர்ப்பம் வரும் வெளியே போய் சந்திக்கலாம் எனக் காத்திருந்தனர்.

         கண்ணனுக்கு அவன் அன்புக்கினியவளைக் காண இயலாத ஏக்கம். ராதைக்கு அதைவிட அதிக ஏக்கம்.எப்படியாவது கண்ணனை சந்திக்க வழி தேடினாள்.

        அன்று ராதையின் இல்லத்திற்கு மாடு கறக்க யாரும் வரவில்லை.மாடுகள் தவித்தபடி குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. அந்தக் குரலைக் கேட்டு யசோதையும் பாவம் மாடுகள் தவிக்கின்றன. என்று இரக்கப்பட்டாள்.

இதையே காரணமாக வைத்துக் கொண்டு "நான்வேண்டுமானால் அவர்கள் வீட்டு மாடுகளைக் கறந்துவிட்டு வரட்டுமா?"என்றான் சாதுவாக.வேறு எங்கோ கவனமாக இருந்த யசோதை "சரி போய்விட்டு சீக்கிரமாக வந்துவிடு".என்று கூறி அனுப்பினாள்.

        உடனே கண்ணன் ராதையின் இல்லம் நோக்கி காற்றாய்ப் பறந்தான்.கண்ணனின் வருகையை அறிந்த ராதையும் அம்மாவிடம் "அம்மா, நான் தயிர் கடைந்து வெண்ணை எடுக்கிறேன்" என்றவுடன் அவள் தாயும் "அப்படியே செய்" என்று கூறவே ராதையும் தயிர் கடையும் மத்து பானை சகிதமாக உள்ளே சென்றாள்.

       கீழே கண்ணன் அமர்ந்து மாடு கறக்கும் காட்சி நன்கு கண்ணுக்குத் தெரியும் வண்ணம் மாடியின் சன்னல் ஓரத்தில் பானையை வைத்துக் கொண்டு வேக வேகமாகத் தயிர் கடைந்தாள்  ராதை.அதே சமயம் மாடியில் இருக்கும் ராதையைப் பார்த்துப் புன்னகைத்தவாறே கண்ணன் மாடு கறந்தபடி அமர்ந்திருந்தான்.

பலநாட்கள் பார்க்க இயலாதிருந்ததால் தன்  காதலையெல்லாம் கண்களின் வழியே அவனை நோக்கி ஓடவிட்டாள்  ராதை.
           இரண்டு பேரும் வெகு நேரம் இவ்வாறு அமர்ந்திருக்க ராதையின் தாய் கறந்த பாலை எடுத்துச் செல்ல வந்து திகைத்து நின்றாள்.

"ஏய் கண்ணா,என்ன வேலை செய்கிறாய் நீ?"என்று அதட்டியதும் விழித்தவன் அப்போதுதான் இதுவரை தான் கறந்தது காளைகளை வைத்து எனப் புரிந்து கொண்டு அசட்டுச் சிரிப்புடன் அங்கிருந்து ஓடினான்.சலித்துக் கொண்டவளாய் ராதையின் தாய்

 "ஏய் ராதா, வெண்ணை திரண்டிருக்கும் எடுத்து வை" என்றவாறே பாத்திரத்துடன் வந்தாள் அப்போதுதான் ராதை தயிரே ஊற்றாமல் வெறும் பானையைக் கடைந்து கொண்டிருந்தாள்  எனக் கண்டாள் .

"என்னடீ இது?"தாய் திகைத்து நிற்பதைக் கண்டு சிரித்தவாறே கண்ணனின் பின்னே ஓடிவிட்டாள்  ராதை

இந்த அழகிய காட்சியை நாராயணீயம் என்ற காவியத்தில் கண்டு படித்து மகிழலாம். ராதையின் பக்திக்குக் கட்டுண்ட கண்ணன் அவளிடம் கட்டுப்பட்டு நின்ற நிலை அவள் சிறந்த பக்திக்கு ஒரு எடுத்துக் காட்டு அல்லவா?




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 13 Mar 2014, 5:10 PM | Message # 63
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
முக்திக்கு வித்து

பாண்டவருக்கும் துரியோதனாதியர்க்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீரன் படைக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்தனர்.

கௌரவர்  படைக்கு அன்று கர்ணன் படையை நடத்தத் தயாரானான்.இந்தச் செய்தியைக் கண்ணன் அறிந்தான்.பாண்டவர் தாயான குந்திதேவியைத் தேடிச் சென்றான்.
அவளின் நலம் விசாரித்துப் பின் பேசினான்.

"அத்தை, உங்களின் மூத்த புதல்வனைப் பற்றிய செய்தி ஏதேனும் தெரிந்ததா?"
"அதை இப்போது ஏன் நினைவு படுத்துகிறாய் கண்ணா?"

"காரணம் இருக்கிறது. உங்கள் மூத்த மகன்தான் அந்தக் கர்ணன்.இதைத் தெரிந்து கொண்டுதான் தங்களிடம் சொல்ல வந்தேன்.நீங்களே இதை நேரில் சென்று பரீட்சித்துப் பாருங்கள்" என்றான் கபடமாக.
உடனே தன மூத்த மகனைக் காணப் புறப்பட்டு விட்டாள் குந்திதேவி.

"சற்று இருங்கள் அத்தை.அவன்தான் தங்களின் மூத்த மகன் என்று தெரிந்தபின் அவனை பாண்டவர் பக்கம் வந்து சேர்ந்து விடச் சொல்லுங்கள். அவன் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றால் இரண்டு வரங்களையாவது வாங்கி வாருங்கள்."

"வரமா? நான் கேட்பதா?"என்று தயங்கினாள்  குந்தி.

"ஆம் அத்தை.கர்ணன் சுத்த வீரன் அவனுக்கு இணையானவன் அர்ஜுனன் ஒருவன்தான்.எனவே அர்ஜுனன் தவிர வேறு யாருடனும் போரிடக் கூடாது.

அத்துடன் அவனிடமுள்ள நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது  ஒருமுறைக்கு மேல் மறுமுறை  ஏவக் கூடாது. என்ற இரு வரங்களை மட்டும் பெற்று வாருங்கள்."என்றான்

குந்தியும் சம்மதித்தாள்.மகனைக் காண ஆவலுடன் சென்றாள்

கர்ணன் அவளை வணங்கி வரவேற்றான்.அவள் தன்னை மகனே என அழைத்தது கேட்டு மகிழ்ந்தான். தன்னிடமிருந்த பட்டுச் சேலையைக் காட்டி குந்தி அதைத் தன மீது போர்த்துக் கொண்டு அழுததைக் கண்டு அவளே தன தாய் எனக் கண்டு கொண்டான்.

மனம் மிக மகிழ்ந்தான்.வெகுநேரம் கடந்தபின் குந்தி,
"மகனே நீ பாண்டவருக்கு மூத்தவன்.குருட்சேத்திரப் போரில் பாண்டவர் வெற்றி பெற்றபின் நீயே இந்த நாட்டுக்கு மன்னனாக முடிசூடவேண்டியவன்.

கௌரவரை விட்டு பாண்டவர் பக்கம் வந்து விடு.உன் தம்பிமாரான தருமன் முதலானோர் மிகவும் மகிழ்வார்கள்."என்று மெதுவாக கேட்டுக் கொண்டாள்.

அவள் மடியில் படுத்திருந்த கர்ணன் விருட்டென எழுந்தான்."தாயே, என்ன வார்த்தையம்மா கூறினீர்கள்., துரியோதனன் என் உயிரினும் மேலானவன்.

மானம் காத்த மாமனிதன்.இன்னுயிரினும் மானம் மேலானதன்றோ மன்னனுக்கு?நானோ நேற்றுவரை அனாதையாக இருந்தவன்.தேரோட்டிமகன் நான்.

மன்னர் சபையில் என் மானம் காத்து என்னை அங்கதேசத்தின் மன்னன் என்று அனைவரிடமும் கூறி என்னைத் தலை நிமிர வைத்தவன் அல்லவா அம்மா அவன்?அவனை எப்படிப் பிரிவேன். என் உயிர் கூட அவனுக்குத் தானே சொந்தம்?"

"கர்ணா, உன் உடன் பிறந்தவருடன் சேர்ந்து இருக்க உனக்கு விருப்பமில்லையா?"

"அம்மா, இதைவிடுத்து வேறு என்ன வேண்டுமானாலும் தருகிறேன் கேளுங்கள் ஆனால் நன்றி மறக்கும் செயலை மட்டும் செய்யச் சொல்லாதீர்கள். என்னை மன்னித்து விடுங்கள் அம்மா.துரியோதனனின் அன்பை நான் மறந்தால் எனக்குப் பெரும் பாவம் மட்டுமல்ல பழியும் வந்து சேரும்."

"அப்படியானால் நீ அர்ஜுனனைத் தவிர வேறு யாரையும் கொல்லக்  கூடாது. நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருமுறைக்கு மேல் பிரயோகிக்கக் கூடாது.இந்த இரண்டு வரங்களைத் தருவாயா?"

"நிச்சயமாகத் தருகிறேன். தாங்களும் எனக்கொரு வரம் தரவேண்டும்."

"கேள் மகனே"

 "போர்க்களத்தில் நான் இறந்து விட்டால் தாங்கள் என்னை மடியில் வைத்து மகனே என்று கூவி அழவேண்டும் இந்த உலகுக்கெல்லாம் நான் தங்கள் மகன் என்ற உண்மையைப் பறைசாற்றவேண்டும் நான் இறக்கும் வரை இந்த  உண்மையை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. இந்த வரத்தை எனக்குத் தாங்கள் தரவேண்டும் அம்மா."

கண்களில் கண்ணீருடன் குந்தி"அப்படியே செய்கிறேன் கர்ணா,"என்றபடியே திரும்பி இருப்பிடம் வந்து சேர்ந்தாள்

தம்பியரானாலும் தாயானாலும் கர்ணனுக்கு  துரியோதனனின் நன்றிக்கடனுக்கு முன் எதுவும் முக்கியமல்ல.

இவனது இரண்டு முக்கியமான செயல்களாலேயே இறைவனின் அன்புக்குப் பாத்திரமானான்.
இவனது நன்றி மறவாமை.மற்றொன்று அள்ளிக் கொடுக்கும் வள்ளல்தன்மை.

இந்தப் பண்புகளாலேயே இதிகாசத்தில் இவன் போற்றப் படுகிறான்.
 கர்ணனின் முக்திக்கு அவனது நன்றி மறவாத் தன்மையே வித்தாக இருந்தது என்பதை நாமும் ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Mar 2014, 7:27 PM | Message # 64
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
இராதா மாதவம்

யமுனை நதிக்கரை. காற்றிலே ஈரம் தவழ்ந்தது. கரையோரமாக ஒரு கல்லின் மேல் பளிங்குச் சிற்பமென அமர்ந்திருந்தாள் இராதை. ஆம் ! கோகுலக் கண்ணனின் இராதையே தான். காற்றின் ஈரம் அவள் கண்ணிலிருந்து வந்ததோ என்று நினைக்கும் அளவு அவள் நீண்ட பெரிய விழிகள் கண்ணீரைத் தேக்கி வைத்திருந்தன.

இன்று கண்ணன் வர சற்று தாமதம் ஆன காரணத்தால் வந்த கண்ணீரல்ல அது. ஏனென்றே தெரியாமல் , எதற்கென்றே புரியாமல் மனசு கனக்க வெளியே துளி விழாதபடி பெருகிய கண்ணீர் அது.

இப்பொழுதெல்லாம் கண்ணன் முன் போல இல்லை. சிந்தனை அவனுக்கும் வேறு எங்கோ செல்கிறது. முன்பு எந்நேரமும் புல்லங்குழலிசை கேட்டுக் கொண்டேயிருக்கும். அதன் இனிமை அவளை மட்டுமா கட்டி இழுக்கும் ? , மாடு ,கன்று , பறவை , விலங்கு ஏன் மரங்கள் கூடக் காற்றுக்குத் தலையாட்டாமல் கண்ணன் பாட்டுக்குத் தலையாட்டுவதை இராதையே பார்த்திருக்கிறாளே!

அவன் எங்கே என்று தேட வேண்டிய அவசியமே இல்லை. எங்கே பெண்களின் , குழந்தைகளின் சிரிப்புச் சத்தம் கேட்கிறதோ அங்கே போனால் போதும் கண்டிப்பாக கண்ணன் அங்கே தான் இருப்பான். ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லை. ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறான். கேட்டால் ஒன்றுமில்லை என்று சிரிக்கிறான். அவன் எண்ணத்தை யாரால் அறியக் கூடும்?

பெருமூச்செறிந்தாள் இராதை. இன்னும் கண்ணன் வந்த பாடில்லை. ஏனோ அவள் மனம் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. அவனைப் பற்றிய நினைவுகளில் மூழ்கித் திளைப்பது அவனோடு இருப்பதைக் காட்டிலும் இன்பமாக இருந்தது. ஒரு மென்மையான் வலி நெஞ்சில் எப்போதும் இருந்தது. தனக்கு ஏன் அவன் நினைவுகள் தரும் ஆனந்தமே போதும் என்று தோன்ற வேண்டும்?

இதிலும் அவனின் சூது ஏதேனும் இருக்குமோ? தன்னைச் சோதிக்கிறானோ? என்ன இருந்தாலும் மதுசூதனன் இல்லையா அவன். இது எந்த நாடகத்திற்கான துவக்கமோ? மீண்டும் தனக்குள் மூழ்கினாள் இராதை. ஒரு முறை அவர்கள் சிறு குழந்தைகளாக இருந்த போது கண்ணன் யசோதையிடம் “இராதை மாத்திரம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கிறாளே , நான் மட்டும் ஏன் இப்படிக் கருப்பாக இருக்கிறேன்” என்று கேட்டான்.

அதற்கு யசோதை ” இராதை பூரண நிலவு ஒளி வீசும் பௌர்ணமியன்று பிறந்தாள் , ஆனால் நீ தேய்பிறை அஷ்டமியன்று பிறந்தாய் அது தான் கருப்பாயிருக்கிறாய் . ஆனால் இந்தப் பாலைக் குடித்தால் நீயும் இராதையைப் போல நல்ல நிறமாகி விடுவாய் ” என்றாள்.

உடனே பாலைக் குடித்து விட்டு தன் கை , கால்கள் சிவப்பாகவில்லையே என்று அழுத அப்பாவியான என் கண்ணன் இப்போது எங்கே?

நேற்றுக் கூட கண்ணன் இவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது மதுராவைப் பற்றியும் , அங்கு நடக்கும் கொடுங்கோலாட்சி பற்றியும் பேசினான்.” மதுராவில் என்ன நடந்தால் நமகென்ன? நம் கோகுலம் பத்திரமானது. கம்ச மஹாராஜா நம்மவர்களை மரியாதையாகத்தானே நடத்துகிறார்.

நாம் ஏன் மற்றவர்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டும்?” என்று இராதை கேட்டதற்கு கண்ணனுக்கு எவ்வளவு கோபம் வந்தது ? “என்ன ராதே! நீயும் சிந்தனைத் திறனற்ற முட்டாள்கள் போல் பேசுகிறாய்? பக்கத்து தெருவில் வீடுகள் தீப்பற்றியெரிந்தால் எனக்கென்ன?

என் வீடு பாதுகாப்பாகத் தானே இருக்கிறது என்று எண்ணும் சுயநலம் மிக்கவளா நீ? தியாகத்திற்கும் , சுயநலமின்மைக்கும் நீ ஒரு உதாரணமாக இருப்பாய் என்று நினைத்தேனே? இவ்வளவுதானா நீ?” என்று பொரிந்து தள்ளிவிட்டான். கண்ணனின் இன்முகத்தையே கண்டு பழகியிருந்த இராதை வெலவெலத்துப் போனாள்.

பிறகு அவனே அவள் பயத்தைத் தெளிவித்து அவளை இது குறித்து யோசிக்கும்படிசொன்னான்.அவன் வார்த்தையின் அர்த்தம் அவளுக்கு மெதுவாக புரிய ஆரம்பித்து.ஒரு வேளை அந்தக் கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு தான் இன்று இன்னும் வரவில்லையோ?

அவனைப் பற்றிய நினைவுகளே இனிமை என்று நினைத்தவளுக்கு இப்போது கண்ணனைக் கண்ணாரக் காண வேண்டும் , அவன் சிரிப்பையும் , புல்லாங்குழலிசையையும் காதாரக் கேட்க வேண்டும் என்று ஏக்கம் தோன்றியது. பந்து போல ஏதோ ஒன்று உருண்டு அவள் தொண்டையை அடைத்தது.

சாயங்கால வேளையில் கூட்டிற்குக் கூடச் செல்லாமல் பறவைகள் வர ஆரம்பித்துவிட்டனவே? அவை அப்படி வருவது என்பது ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் அது கண்ணனின் புல்லாங்குழலிசை கேட்கும் ஆசையினால் தான். அவை வரத் தொடங்கிவிட்டன என்றால் கண்ணன் வந்து கொண்டிருக்கிறான் என்று தானேஅர்த்தம்.

கனவிலிருந்து மீண்டவள் போல இராதை தலையைக் குலுக்கிக் கொண்டாள். உடைகளைத் திருத்திக் கொண்டு , தலை முடியையும் சீர் செய்து கொண்டாள். அழுதேனோ? கண்கள் சிவந்திருக்கின்றனவோ? முகம் எப்படியிருக்கிறது? என்று நினைத்தவள் யமுனையின் தூய நீரில் முகம் பார்த்தாள். கலைந்திருந்த நெற்றிச் சுட்டியை சரி செய்து கொண்டவள் , மீண்டும் முகம் பார்க்க எண்ணி நீரைப் பார்க்க அங்கே இரு தாமரைக் கண்கள் அவளைப் பார்த்துச் சிரித்தன.

முகம் மலரத் திரும்பியவள் கண்ணனை ஆரத் தழுவிக் கொண்டாள். அவள் அணைப்பிலிருந்து விடுபட்டவன் , இராதையின் கண்களையே பார்த்தான். பார்வையின் தீட்சண்யம் நேற்று நான் சொன்னவற்றைப் புரிந்து கொண்டாய் அல்லவா? என்று கேட்டன.

தன் கண்களையே இராதை தூது விட்டாள். அவள் கண்கண் சொன்ன செய்தி சேர வேண்டிய இடத்தில் போய்ச் சேர்ந்து விட்டது என்பதன் அடையாளமாக அவள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். பேசவோ , கேட்கவோ ஒன்றுமில்லையென்று தோன்றியது இராதைக்கு.

இதோ இங்கே என் கைகளைப் பற்றியிருப்பவனுடன் வானத்தின் பல மண்டலங்களைக் கடந்து , வெண்மையான அலைகள் வீசும் கடலின் மீது ஒரு மென்மையான படுக்கையின் மேல் அவனின் காலடியில் அமர்ந்து அவனோடு பேசிக் களித்தது போல ஒரு உணர்வு நிழலாடியது.


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Mar 2014, 7:27 PM | Message # 65
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
இந்த உறவு இப்போது தொடங்கியதல்ல. காலங்களைக் கடந்தது. எத்தனையோ யுகயுகங்களாய் இவனே என் துணைவன் , இவனே என் தலைவன் .இன்னும் சொல்ல முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆட்பட்டது அவள் மனம். அவளது நினைவுகளை அறிந்தவன் போல் “கனவிலிருந்து மீண்டு வா ராதே!” என்றான்

மென்மையாக.அவனைப் பார்த்து சிரித்தவளின் கையை விட்டு விட்டு புல்லாங்குழல் இசைக்கத் தொடங்கினான் அந்த மாயவன். அன்று ஏனோ அவன் புல்லாங்குழல் சோகத்தை மொழி பெயர்த்தது. கல்லையும் உருக்குமிசை காற்றில் மிதந்தது வந்தது.

மரத்திலிருந்த பறவைகளின் கண்ணில் கூட நீர்த்துளி. யமுனையும் சேர்ந்து கண்ணீர் பெருக்கியதோ என்னவோ நதியின் நீர்மட்டம் உயர்ந்தது. இராதையின் நிலையோ பரிதாபமாயிருந்தது. கண்ணிலிருந்து பெருகிய துளிகள் அவள் அழகிய மார்பையும் , நனைத்து தரையில் சிறு குட்டை போலத் தேங்கியிருந்தது.

இன்று ஒரு அதிசயம் போல கண்ணனின் கண்ணிலும் கண்ணீர்த்துளிகள். அந்தக் காட்சி ஒரு ஓவியமாக காலத்தின் கற்சுவரில் பதிக்கப்பட்டது போல் ஒரு தோற்றம். உலகமே நகராமல் சில மணித் துளிகள் அப்படியே நின்று விட்டது போல பிரமையில் மூழ்கிருந்தாள் இராதை.

சடசடவென பறவைகளின் சிறகொலியில் சுயநினைவுக்கு மீண்டாள் இராதை. ஏன் கண்ணன் சோக ராகமிசைக்கிறான்? இதன் மூலம் அவன் எனக்கு சொல்லும் சேதி என்ன? அவனின் ஒவ்வொரு அசைவுக்கும் காரணம் உண்டல்லவா? தன்னை மறந்து விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டானோ? இப்படி ஏதேதோ எண்ணத்தில் தத்தளித்தது இராதையின் மனப் படகு.

வாய் திறந்தான் கண்ணன். புல்லாங்குழலையும் விஞ்சிய இனிய குரல் அவனுக்கு. “ராதே! நான் வரும் முன் என்ன செய்து கொண்டிருந்தாய்?” . என்ன சொல்லுவாள் இராதை? அவன் நினைவுகள் தந்த இனிமையைப் பற்றிக் கூறினாள். கண்ணனின் முகத்தில் அர்த்தம் பொதிந்த பாவம்.

“ராதே! உனக்கு புரிந்து விட்டது , என் வேலையை எளிதாக்கி விட்டாய்” என்றான். இராதையின் மனதில் புயல் அடித்தது. கண்ணன் தொடர்ந்தான் , ” ராதே! நீ என் ஆன்மாவில் பாதி! பிரிவு என்பது நமக்குள் இல்லை , நான் உன்னை மறப்பதோ , இல்லை நீ என்னை மறப்பதோ என்பது நிச்சயமாக நடக்க முடியாத விஷயம்.

நீ என்னை நன்கு உணர்ந்தவள் , நான் ஆற்ற வேண்டிய கடமைகளை நீ அறிவாய். மதுராவில் நிலைமை சரியில்லை ராதே. பெற்ற தகப்பனையும் உடன் பிறந்த சகோதரியயும் அவள் கணவனையும் கைதியாக வைத்திருக்கிறான் கொடியவன் கம்சன்.

அது மட்டுமல்ல அவர்களுக்குப் பிறந்த எட்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமில்லாமல் கொன்றிருக்கிறான். அதிலும் எட்டாவதாகப் பிறந்தது ஒரு பெண் குழந்தையாம் அதையும் கொல்லத் துணிந்திருக்கிறான். ஆனால் அது மாயையின் வடிவம் எடுத்து வானத்தை நோக்கி சென்று விட்டது.

செல்லும் போது அவனை அழிப்பவன் இன்னும் உயிரோடு கோகுலத்தில் இருப்பதாகச் சொல்லிச் சென்றதாம்.அதிலிருந்து கம்சன் என்னை தன் எதிரியாகப் பார்க்கிறான். என்னைக் கொல்ல எத்தனையோ அரக்கர்களை அனுப்பித் தோற்ற நிலையில் இனி என்ன செய்வான் என்பது தெரியவில்லை” கண்ணன் சற்றே நிறுத்தினான்.

இராதையின் முகம் இப்போது சித்திரை நிலவாகப் பிரகாசித்தது. “கண்ணா ! நான் யாரென்று உணர்ந்து கொண்டேன். உன் கடமையை ஆற்ற நான் ஒரு நாளும் குறுக்கே நிற்க மாட்டேன் என்பது உனக்கும் தெரியும். நீ உலகிற்கு வழி காட்ட வந்தவன். வரவிருக்கும் யுகங்களில் எல்லாம் மக்களுக்கு நல்வழிப் பாதையை போதிக்க அவதரித்திருப்பவன்.

நான் உன்னுடைய அன்பிலும் லீலைகளிலும் மயங்கி உன்னை எனக்கு மட்டும் சொந்தமானவன் என்று நினைத்து விட்டேன். அதுவும் நீ நடத்திய ஒரு நாடகமே என்று உணர்ந்து கொண்டேன். இன்றில்லையெனினும் உனக்கு என்றாவது ஒரு நாள் மதுராவிலிருந்து அழைப்பு வரும் என்று என் மனதுக்குப் படுகிறது.

பரந்து விரிந்த உலகம் உன்னை அழைக்கும் காலம் நெருங்கி விட்டதாகவே உணர்கிறேன் , நீ சென்று நீதியை நிலை நாட்டு ! உலகிற்கு வழி காட்டு” என்றாள் இராதை. இப்போது கண்ணன் இராதையைப் பார்த்த பார்வையில் பாசமும் , பரிவும் போட்டி போட்டன.

“இராதே ! நீ இப்படித்தான் சொல்வாயென நான் நினைத்திருந்தது சரியாயிற்று. என் இனிய தோழியே! நீ என்னிடமிருந்து வேண்டுவது ஏதாவது இருந்தால் சொல் நிறைவேற்றுகிறேன்” என்றான்.

“கண்ணா நீயும் , நானும் வேறில்லை என்று ஆன பிறகு நான் என்ன வேண்டுவது? இருந்தாலும் என் மனதில் ஒரு ஆசை இருக்கிறது சொல்லட்டுமா? என்றாள் கண்மணி இராதை. கண்ணன் தலையசைத்தான். ” கண்ணா ! நீ மதுராவிற்குச் செல்வதே உன்னைப் பெற்ற அன்னையைக் காப்பாற்றத்தான் என என் மனது சொல்கிறது.

அப்படி நீ உன் சொந்த அன்னையை தரிசித்த பின்னும் உன்னை வளர்த்த அன்னையான யசோதையை நீ மறக்கக் கூடாது. இனி வரும் காலம் முழுதும் கண்ணனின் தாய் என்றவுடன் யசோதையின் நினைவு தான் வரவேண்டும் இதை நீ எனக்குத் தந்தருள வேண்டும்” என்றாள். ”

கண்ணே! என் அன்னையின் சார்பில் நீ கேட்ட வரம் பல யுகங்கள் நின்று வாழும். என் தாய் என்றவுடன் மக்களுக்கு முதலில் அன்னை யசோதைதான் ஞாபகத்திற்கு வருவாள் . போதுமா ராதே? அவ்வளவுதான உனக்கென எதுவும் கேட்க மாட்டாயா?” என்றான் ஆதங்கத்துடன் .

இராதை தொடந்தாள் “நீ பல நகரங்களுக்குச் சென்று பல திருமணங்கள் புரிந்து கொள்ளும் நிலை வரலாம் , ஆனால் உலகில் என்றென்றும் , உன் பெயருடன் என் பெயரும் இணைந்தே வழங்கப் பட வேண்டும். உலகில் பலவேறு அடையாளங்களால் நீ அறியப் பட்டாலும் ராதையின் கண்ணனாகவே எப்போதும் நீ இருக்க வேண்டும்.என்னிலிருந்து உன்னைப் பிரிக்க முடியாது என்பதற்கு அதுவே சாட்சி.” என்றாள்.

கண்ணன் ” அது அப்படியே நிறைவறும் ராதே! அது மட்டுமல்ல என்றுமே என் காதலியாக தோழியாக உன் பெயரையே மக்கள் குறிப்பிடுவார்கள். உன்னை வணங்குபவர்களுக்கு என் அருள் என்றும் மாறாதிருக்கும்.” என்றான்.

இராதையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். கண்ணன் புல்லங்குழல் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது. இம்முறை துள்ளும் இனிமை சந்தோஷத்தோடு இசை பொங்கி வழிந்தது.


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Saturday, 15 Mar 2014, 6:31 PM | Message # 66
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
 தீபாவளி பிறந்த கதை

நரகன் என்னும் அசுரன் பூவுலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தான். மண்ணுலகும் வானுலகும் அவனிடம் துன்பப் பட்டுக்  கொண்டிருந்தது. இது போதாது என்று அவன் சாகாவரம் பெற எண்ணினான்.

எனவே நரகன் சிருஷ்டி கடவுளான பிரும்மாவைக் குறித்துத் தவம் மேற்கொள்ள முடிவு செய்தான்..
அவனது தாயான பூமிதேவியும் "மகனே! நீ சாகாவரம் பெற்று விட்டால் என் மனம் மிகவும் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெறும். உன் எண்ணப்படியே பிரும்மதேவரிடம் சாகாவரம் பெற்று வருவாயாக" என்று ஆசி கூறி அனுப்பினாள்.

தாயின் அனுமதி பெற்று நரகன் பிரும்மாவைக் குறித்துத் தவம் மேற்கொண்டான். காலம் கடந்தது.
 நரகன் கடுமையான தவத்தை மேற்கொண்டிருந்தான். அவனது தவத்திற்கு மெச்சிய பிரும்மாவும்
அவன் முன் தோன்றினார்.

"நரகா! உனது கடுந்தவம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். எதற்காக இந்தத் தவம்? என்ன வரம் வேண்டும் உனக்கு?"
கனிவுடன் கேட்டார் பிரும்மா.

"சுவாமி! எனக்கு தாங்கள் சாகாவரம் அளிக்க வேண்டும். புவனங்கள் அனைத்தையும் நான் ஒருவனே ஆளவேண்டும்.

எனக்கு அழிவென்பதே இருக்கக் கூடாது. இந்த வரத்தைத் தாங்கள் அளிக்கவேண்டும்."

"நரகா! உலகங்கள் யாவையும் நீ அடிமைப் படுத்தி வாழ்வாய் என்ற வரம் தருகிறேன்.
ஆனால் சாகாவரம் தருவது என்பது இயலாதது.

ஆனால் நீ எப்படி சாகவிரும்புகிறாயோ அப்படியே சாக வரம் தருகிறேன். கேள்."

நரகன் அருகே நின்ற தன் தாயின் முகத்தைப் பார்த்தான். சற்றே சிந்தித்தவன் புன்னகை செய்து கொண்டான்.
"அம்மா!, தங்களின் அன்புக்குரிய மகன் நான். தங்களின் கையினாலேதான் நான் மரணமடைய வேண்டும்
எனக் கேட்கிறேன். தாங்கள் எப்படி அம்மா என்னைக் கொல்வீர்கள்?

அதனால் எனக்கு யாராலும் ஏன் தேவராலும் மூவராலும் கூட  மரணம் நேராது .எப்படி அம்மா என் வரம்?"
பூமிதேவி மனமகிழ்வுடன் புன்னகைத்தாள்.

"மிகவும் சரி மகனே. அப்படியே வரத்தைப் பெற்றுக்கொள்."
நரகாசுரன் பிரும்மாவைப் பணிந்தான்.

"தேவாதி தேவா! என் தாயின் கையினாலேதான் நான் மரணமடைய வேண்டும்.
வேறு யாராலும் எனக்கு சாவு வரக் கூடாது."
புன்னகை புரிந்த பிரம்மா "அப்படியே தந்தேன்" என வரம் தந்து மறைந்தார்.

நரகன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து தாயை வணங்கினான்.
காலம் உருண்டது. நரகனின் அட்டஹாசம் அளவிடற்கரியதாக இருந்தது.
தேவரும் மூவரும் நாராயணனிடம் முறையிட்டனர்.

நாராயணன் கிருஷ்ணனாக அவதரித்து மாமனான கம்சனை சம்ஹாரம் செய்தான்.
ருக்மணி சத்யபாமாவை மணந்து துவாரகையில் மன்னனாக ஆட்சி செய்து வந்தான்.
அப்போது மக்கள் நரகனிடம் படும் துன்பத்தைப் பற்றி அவனிடம் முறையிட
 நரகனுடன் போர் தொடுக்கப் புறப்பட்டான்

கண்ணன். போர்க்கோலம் பூண்ட கிருஷ்ணன் தன் மனைவி சத்யபாமாவை
தன் தேரினை ஒட்டிவரக் கூறினார். தேரோட்டுவதிலும் போர்க்களப்
பயிற்சியிலும் தேர்ந்தவளான சத்யபாமாவும் மிக்க மகிழ்ச்சியுடன் புறப்பட்டாள்.  

நரகாசுரனுக்கும் கிருஷ்ணனுக்கும் கடும் போர் நடந்தது. தேவர்கள் அச்சத்துடன்
வானிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நரகனின் வரம் பற்றி
அறிந்தவர்களாதலால் என்ன நடக்குமோ என்று கவலையுடன் கவனித்தனர்.
 நரகன் விடுத்த ஆயுதத்தால் கிருஷ்ணன் மயங்கி வீழ்ந்தான்.

இதைக் கண்ட சத்யபாமா தேரில் நின்றவண்ணம் கிருஷ்ணனின் கையில்
இருந்த வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டாள். அப்போது
அவளைக் கவனித்த நரகன் திகைத்து நின்றான்.

சற்றும் தாமதியாது கோபத்துடன் பாமா விடுத்த அம்பு நரகனின் மார்பைத் துளைத்தது.
நரகன் கீழே  விழுந்தான். அதே சமயம் மயங்கியவர் போல் விழுந்திருந்த கிருஷ்ணன்
எழுந்து பாமாவின் அருகே வந்தான்.

தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். உயிர் பிரியும் நிலையில் நரகன் பாமாவைப்
பார்த்து " அம்மா" என அழைத்தான். அந்தக் குரல் கேட்ட பாமாவிற்கு தன் முற்பிறவி
நினைவிற்கு வந்தது. பூமாதேவியின் வடிவமும் கொண்டாள்.

தன் மகனைத் தன் மடியில் தாங்கிக் கொண்டு அழுதாள்.
"மகனே! நானே உன் இறப்புக்குக் காரணமாகிவிட்டேனே. நீ கேட்ட வரம் பலித்துவிட்டதே மகனே!
 இந்த அம்மாவை மன்னித்து விடடா மகனே."

"அம்மா! கலங்காதீர்கள். தங்கள் கையினால் நான் மடிவதில் எனக்கு மகிழ்ச்சியே."
கிருஷ்ணன் நாராயணனாக வடிவம் தாங்கி அருகே வந்து நின்றார்

." நரகா! உன் வரத்தின் படியே நீ முடியவேண்டும் என்பதற்காகவே
சத்தியபாமாவை உடன் அழைத்து வந்தேன். அவள் கையினாலேயே
நீமடியவேண்டும் என்ற உன் விருப்பம் நிறைவேறியதல்லவா"

"தந்தையே, உலகில் தோன்றிய எந்த உயிரும் மறைந்தே தீரும்
என்ற உண்மை என்னால் நிரூபிக்கப் பட்டுவிட்டது."
 "உண்மை. நரகா, உனக்கு என்ன வேண்டும் கேள். "

 "எனக்கு தாங்கள் ஒரு வரம் தரவேண்டும்"
"மீண்டும் எழவேண்டும் என்பதைத்தவிர  வேறு
 என்ன வேண்டுமானாலும் கேள்."  மிகவும் கவனமாகப் பேசினான் நாராயணன்.

"இல்லை தந்தையே. நான் மறைந்த இந்த நாளை மக்கள் விழாவாகக் கொண்டாட வேண்டும்.
இருளிலிருந்து ஒளிக்குத் திரும்பும் மக்கள் மனங்களில்
மகிழ்ச்சியைப் போலவே ஊரெங்கும் ஒளிபெற்றுத் திகழ வேண்டும்.
இந்த வரத்தைத் தாங்கள் அருளவேண்டும்."

நாராயணன்  மகிழ்ச்சியுடன் "ததாஸ்து"  என அருள் செய்தான்.
போர்க்களம் விட்டு அரண்மனை திரும்பிய கிருஷ்ணனும் நரகனின்
மறைவைக் கொண்டாடும் படிப் பணித்தான். உலக மக்களும் வானுலக
தேவர்களும் நரகாசுரனின் இறப்பைப் பெரும் விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நாமும் இந்தநாளை ஒளித் திருநாளாகக் கொண்டாடி மகிழ்கிறோமல்லவா.
தீபஒளித் திருநாள் என்ற பெயரில் நாம் கொண்டாடும் பண்டிகையே
தீபாவளித் திருநாள் எனப் படுகிறது.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Sunday, 16 Mar 2014, 7:01 PM | Message # 67
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
உமை போட்ட சீதை வேடம்

ஒருநாள் சிவபெருமான் உமையம்மை யிடம் இராமனின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தார். குறிப்பாக இராமனது ஏகதார விரத மேன்மையைப் பலவாறு புகழ்ந்தார்.

""வேறு யாராவது சீதையைப்போல் மாறு வேடமணிந்து வந்தால் இராமன் ஏமாற மாட்டானா? ஏமாறுவது மனித இயல்புதானே! இராமன் சாதாரண மனிதன் தானே?'' என்று உமையம்மை மறுதலித்துப் பேசினாள்.

""இராமன் மனிதனாகத் தோன்றினாலும் அவன் பரம்பொருள். அவனுக்குத் தெரியாத ரகசியம் எதுவுமே உலகில் இல்லை'' என்றார் சிவபெருமான்.

""நான் இராமனை சோதித்து வென்று, அவன் பரம்பொருள் அல்ல; மனிதன்தான் என்று காட்டுகிறேன்'' என்று சபதம் செய்தாள் உமை.

""மனைவியைப் பிரிந்தவன் பரம்பொருளானால் சீதை இருக்கும் இடத்தை உணர்ந்து கொள்ள மாட்டானா? இப்படிக் காடெல்லாம் அழுது கொண்டு திரிவானா? ஆதலால் இராமன் பரம்பொருள் அல்ல என்பது உறுதி'' என்று மேலும் கூறினாள் உமை. பின்னர், சீதையாக வேடமிட்டுக் கொண்டு இராமன் வரும் வழியில் சென்று நின்று கொண்டிருந்தாள்.

நடுவழியில் சீதை உருவில் உமையைக் கண்ட இராமன், ""சகோதரி, நீ உன் கணவர் உடலில் பாதியாக உள்ளவள் அல்லவா! இப்போது பிரிந்து ஏன் இங்கு வந்தாய்? உன் கணவர் உனக்காகக் காத்திருப்பார். உடனே புறப்படு!'' என்றான் இராமன்.

"சீதை உருவிலிருக்கும் தன்னை அடையாளம் கண்டு கொண்டு, "சகோதரி' என்று அழைத்தமையால், பிறர்மனை நோக்கா பேராண்மை இராமனிடம் உள்ளது. ஆதலால் இராமனைப் பரம்பொருள் என எண்ணத் தடையில்லை. என் சோதனையில் இராமன் வென்றான். நான் தோற்றேன்' என்று நாண முற்ற உமை, அக்கணமே சிவபெருமானிடம் சென்று, தான் இராமனை சாதாரண மனிதன் என்று எண்ணியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » தெரிந்த புராணம் தெரியாத கதை (புராண கதைகள்)
  • Page 7 of 7
  • «
  • 1
  • 2
  • 5
  • 6
  • 7
Search: