தெரிந்த புராணம் தெரியாத கதை - Page 5 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » தெரிந்த புராணம் தெரியாத கதை (புராண கதைகள்)
தெரிந்த புராணம் தெரியாத கதை
PattuDate: Thursday, 20 Feb 2014, 5:10 PM | Message # 41
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
ஊர்மிளையும் தியாகிதான்

ராமாயண காவியத்தை நினைவுகூர்ந்தால் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன், ஹனுமான், வாலி, சுக்ரீவன் எனப் பல ஆண் கதாபாத்திரங்கள் நம் மனக்கண் முன் தோன்றுவர். அதேபோல கோசலை, சுமித்திரை, கைகேயி, சீதை, மண்டோதரி, சபரி போன்ற பெண் கதாபாத்திரங்களும் நினைவுக்கு வருவர்.

இவர்களெல்லாம் தத்தமக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து, தங்கள் சாதனைகளால்- தியாகத்தால் முக்கிய கதாபாத்திரங்களாகத் திகழ்கின்றனர்.

 ஆனால், ராமாயணத்தில் ஊர்மிளை என்ற கதாபாத்திரம் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? யார் இந்த ஊர்மிளை? அவள் என்ன சாதித்தாள்? அவளையும் மேலே குறிப்பிட்ட முக்கிய கதாபாத்திரங்களோடு சேர்த்து நாம் ஏன் நினைவுகூரவேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவோமா?

சீதையின் சகோதரிதான் ஊர்மிளை. லட்சுமணனின் மனைவி. சீதா கல்யாணம் நிகழ்ந்தபோதே ஊர்மிளைக்கும் திருமணம் நடந்துவிடுகிறது. திருமணமான பிறகு ராமன் வனவாசம் செல்ல நேர்கிறது. ராமனுக்குத் துணையாக லட்சுமணனும் வனவாசம் சென்றுவிடுகிறான்.

அதற்குப்பின் ராமாயணக் கதை ராமன், லட்சுமணன், சீதை ஆகியோரைச் சுற்றியே செல்கிறது. அதனால் அயோத்தியில் அரண்மனையில் வாழ்ந்தவர்கள் பற்றிய செய்திகள் அதிகம் பேசப்படவில்லை.

ஆனால், ராமன் வனவாசம் செல்லுமுன் நிகழ்ந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தால் ஊர்மிளை பற்றிய ஒரு முக்கியத் தகவல் தெரியவருகிறது. அதை விரிவாகப் பார்ப்போம்.

தனக்குப் பட்டாபிஷேகம் இல்லை; வனவாசம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவானதும், தாய் கோசலையைச் சமாதானப்படுத்தி, அவள் ஆசி பெற்ற பின், சீதையிடம் அதுபற்றிச் சொல்லச் சென்றான் ராமன். சீதையோ தானும் காட்டுக்கு வருவதாகப் பிடிவாதம் செய்தாள். அதற்காக ராமனோடு வாதிட்டாள்.

''ஸ்வாமி! தாங்கள் கானகம் செல்லும் செய்தி கேட்டு, தங்களை விட்டுப் பிரிய மனமில்லாத காரணத்தால், தங்கள் தாயும் தங்களுடன் கானகம் வருவதாகப் பிடிவாதம் பிடித்தால், கூட்டிச் செல்ல மாட்டீர்களா?' என்று கேட்டாள்.

''ஆம் சீதா, அன்னை கௌசல்யாதேவியும் நீ கூறியபடியே என்னுடன் வருவதாகப் பிடிவாதம் பிடித்தார்கள். நான் அவர்களுக்கு ஸ்திரீ தர்மத்தை எடுத்துச் சொன்னேன். திருமணமான பெண் கணவனை விட்டுப் பிரியக்கூடாது.

அதனால், என் தந்தை தசரதனுடன் அயோத்தியில்தான் தாங்கள் இருக்கவேண்டும் என்று விளக்கினேன். அவரும் அந்த நியாயத்தை ஒப்புக்கொண்டார்' என்றான் ராமன்.

'நன்றாகச் சொன்னீர்கள் நியாயம்! நீங்கள் எடுத்துச்சொன்ன அந்த ஸ்திரீ தர்மம் எனக்கு மட்டும் பொருந்தாதா? என் பதிக்கு சேவை செய்ய நான் அவருடன் இருக்க வேண்டாமா?' என்று வாதிட்டு, ராமனை அவனது சொற்களாலேயே மடக்கி, அவனுடன் வனவாசம் செல்லும் அனுமதி பெற்றாள் சீதை.

லட்சுமணனும் ராமனோடு தர்ம நியாய அடிப்படையில் வாதாடி, தானும் ராமனுடன் காட்டுக்கு வர அனுமதி பெற்று விடுகிறான். இந்நிலையில், சீதாதேவியும் ராமனுடன் கானகம் செல்ல முடிவெடுத்து விட்டாள் என்ற செய்தி கேட்டு, லட்சுமணனின் மனத்தில் ஒரு கலக்கம் ஏற்பட்டது.

அதாவது, அண்ணனுக்கும் அண்ணிக்கும் சேவை செய்வதற்காகவே கானகம் செல்லும் தன்னோடு தன் மனைவி ஊர்மிளையும் வருவதாகப் பிடிவாதம் பிடித்தால் அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்பதே அவன் கவலை.

இந்தக் கலக்கத்துடனேயே மனைவி ஊர்மிளையை அவளது அந்தப்புரத்தில் பார்க்கச் சென்ற லட்சுமணனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. ராமனின் வனவாசச் செய்தி கேட்டு நாட்டு மக்கள் அனைவரும் கண்ணீரும் கம்பலையுமாக நின்றுகொண்டிருந்த அந்த நேரத்தில், ஊர்மிளை மட்டும் சீவி முடித்து, சிங்காரம் செய்துகொண்டு, பொன்னாடைகளும் அணிகலன்களும் தரித்து மஞ்சத்தில் ஒய்யாரமாக வீற்றிருந்தாள்.

கோபத்தால் கண்கள் சிவந்த லட்சுமணன், 'இது என்ன கோலம் ஊர்மிளா? ஊரே அழுது கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உனக்கு ஏன் இந்த ஆடம்பரம்?' என்று கேட்டான்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 20 Feb 2014, 5:10 PM | Message # 42
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
அதற்கு அவள் நேரடியாக பதில் சொல்லாமல், 'ஸ்ரீராமன்தானே காட்டுக்குச் செல்ல வேண்டும்?
உங்களை யாரும் போகச் சொல்லவில்லையே! நீங்கள் ஏன் மரவுரி தரித்து,
அலங்கோலமாக நிற்க வேண்டும்?' என்று திருப்பிக் கேட்டாள்.

ஊர்மிளைக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என ஒரு கணம் பதறினான் லட்சுமணன். சமாதானமாகப்
பேசி, பல நியாயங்களை எடுத்துச் சொல்லி, அவள் செய்வது சரியல்ல என்று
விளக்கினான். ஆனால், ஊர்மிளை சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.

''நீங்கள் கோசல நாட்டின் இளைய ராஜகுமாரன். உங்கள் ராணியாக அரச போகங்களை அனுபவிக்க
வேண்டுமென்று ஆசைப்பட்டுத்தான் உங்களைத் திருமணம் செய்துகொண்டேன்.

அரச போகங்களைத் துறந்து செல்வது ஸ்ரீராமனின் விதி என்றால், அதில் நீங்கள் ஏன்
பங்குகொள்ள வேண்டும்? நான் ஏன் என் சௌபாக்கியங்களை இழக்க வேண்டும்?'' என்று
கேட்டாள்.

லட்சுமணனின் ரத்தம் கொதித்தது. தாடகையைவிடக் கொடிய அரக்கிபோல் அவன் கண்களுக்குத் தெரிந்தாள் ஊர்மிளை. பெண் இனத்துக்கே அவளால்
அவமானம் எனக் கருதினான். அவளை மனைவியாக அடைந்த தன் துர்பாக்கியத்தை எண்ணி
நொந்து கொண்டான்.

''அடிப் பாவி! நீ கைகேயியைவிடக் கொடியவளாக இருக்கிறாயே! அரச போகத்திலும் ஆடம்பர வாழ்க்கையிலும் ஆசை கொண்டவள் நீ.
பதிபக்தி இல்லாதவள். உன்னை மனைவி என்று சொல்வது கூடப் பாவம்.

இக்கணம் முதல் உன் சிந்தனையை என் மனத்திலிருந்து அகற்றிவிட்டேன். இனி நமக்குள்
பந்தமில்லை; உறவில்லை; ஊர்மிளை என்ற சொல்லுக்கே அர்த்தமில்லை.

இன்று முதல் நீ யாரோ, நான் யாரோ!' என்று கோபத்தில் கொந்தளித்தவன், போய்வருகிறேன்
என்றுகூடச் சொல்லாமல், 'போகிறேன்’ என்று கூறிப் புறப்பட்டான்.

தன் உணர்ச்சிகளை எல்லாம் கொன்றுவிட்டு, அவனுடன் உரையாடிய ஊர்மிளை, கணவன்
லட்சுமணனின் தலை மறைந்ததும் விக்கி விக்கி அழுதாள். கண்ணீர் வெள்ளத்தில்
மூழ்கினாள்.

ராமனுக்கும் சீதைக்கும் 14 ஆண்டுகள் பணிவிடை செய்யப்போகும் லட்சுமணனுக்குத் தன்னைப் பற்றிய ஆசாபாசங்கள், காதல்
நினைவுகள் ஏற்பட்டு, அதனால் அவர் செய்கின்ற பணிக்கு இடையூறு வராமல்
இருக்கவேண்டும் என்பதற்காகவே அவள் இப்படியரு நாடகமாடி, தன் மீது அவனுக்கு
முழு வெறுப்பு ஏற்படும்படியாகச் செய்துகொண்டு, கணவன் ஏற்றுக்கொண்ட கடமை
எனும் யாகத் தீயில் தன்னையே நெய்யாக்கி ஆஹூதி தந்தாள் ஊர்மிளை. 14
வருடங்கள் அன்ன ஆகாரமின்றி மிக எளிமையாக, சன்யாசினியாக வாழ்ந்தாள்.

தான் செய்த இந்த தியாகத்தைப் பற்றி அவள் யாரிடமும் கூறவில்லை. லட்சுமணனுக்கும் ஊர்மிளை செய்த இந்தத் தியாகம் தெரியாது.

வனவாசம் முடிந்து ராமன் அயோத்தி திரும்பி பட்டாபிஷேகம் செய்துகொண்டான். அப்போதும்
லட்சுமணன் ஊர்மிளையை ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. இவர்களுக்குள் உள்ள
மனபேதத்தை ஊகித் தறிந்த சீதாதேவி, ஒருநாள் ஊர்மிளையை அழைத்துக் காரணம்
கேட்டாள்.

அப்போதும் ஊர்மிளை சொல்ல மறுத்தாள். சீதா மிகவும் வற்புறுத்த, தான் செய்த செயலையும், அதற்கான காரணத்தையும் விளக்கினாள்
ஊர்மிளை. சீதை பிரமித்து நின்றாள்.

''ஊர்மிளா! ஆயிரம் சீதைகளும் உனக்கு ஈடாக மாட்டார்கள். விரைவிலேயே நான் லட்சுமணனிடம் நடந்ததையெல்லாம்
எடுத்துக்கூறி, உங்கள் இருவரின் பிரிவுத் துயரைத் துடைக்க வழி செய்கிறேன்'
என்றாள் சீதா.

இதற்கான தருணத்தை சீதை எதிர்நோக்கியிருந்தாள். அப்போதுதான் ஸ்ரீராமன், கர்ப்பிணியான சீதையை காட்டுக்கு அழைத்துச் சென்று
வால்மீகி ஆஸ்ரமத்தில் விட்டு வருமாறு லட்சுமண னுக்குக் கட்டளையிட்டான்.

இந்தத் தகவலை சீதைக்குத் தெரிவிக்காமல் மனசுக்குள் புழுங்கியபடி,
கண்ணீரோடு லட்சுமணன் தேரைச் செலுத்திக்கொண்டிருந்த வேளையில்தான் அவனிடம்
ஊர்மிளையின் தியாகத்தை எடுத்துக் கூறி, அவளை ஏற்றுக் கொள்ளும்படி சொன்னாள்
சீதை.

ஒரு பக்கம் துயரமும், மறுபக்கம் ஊர்மிளை பற்றிப் பெருமிதமும் கொண்ட லட்சுமணன், ''அண்ணி! எனக்கொரு நல்ல செய்தியைச் சொன்னீர்கள். அதற்காக
நன்றி! ஆனால், இந்தப் பாவி உங்களுக்கொரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்ல
வேண்டிய நிலையில் உள்ளேன்.

என் அண்ணனின் ஆணைப்படி, தங்களை இந்தக் கானகத்திலேயே விட்டுச் செல்ல வந்திருக்கிறேன். என்னை மன்னியுங்கள்!'' என்று
கூறி, கதறி அழுதான்.

அப்போது சீதை அதிர்ச்சியில் மனமுடைந்து சொன்னாள்... ''லட்சுமணா! ஸ்ரீராமன் எது செய்தாலும் அதில் ஒரு தர்மம்
இருக்கும்; ஒரு நியாயம் இருக்கும். அயோத்தியின் ஒரு பிரஜைக்கு நியாயம்
வழங்க, எனக்கு இந்த இரண்டாவது வனவாசம் தந்திருக்கிறார்.

பரவாயில்லை; ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு வேண்டு கோள்; எக்காரணம் கொண்டும் எந்தக்
காலத்திலும் உன் மனைவி ஊர்மிளைக்கு இதுபோல் தண்டனை எதுவும் தந்துவிடாதே!
தர்மம் அதை ஒருக்காலும் தாங்காது!''

பாவம் லட்சுமணன்! தாங்க முடியாத துயரத்துடன் அயோத்தி வந்தவன், நேராக ஊர்மிளையைச் சந்தித்து, அவள் தன்
மனைவி என்றும் பாராமல் அவள் கால்களில் தடாலென விழுந்து, அவள் பாதங்களைக்
கண்ணீரால் கழுவினான்.

ராமன் இருக்குமிடமே அயோத்தி என்று கணவனின் திருவடிகளைப் பின்பற்றிக் கானகம் சென்று, பல துயரங்களை அனுபவித்து, பின்பு
அக்னிப்பிரவேசம் செய்யவும் தயாரான சீதை தியாகியா?

தாய் பெற்றுத் தந்த ராஜ்ஜியத்தைத் துச்சமாக மதித்து, தனயன் திருவடிகளைத் தாங்கும்
பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து, அயோத்தியின் சேவகனாக 14
ஆண்டுகள் வாழ்ந்த பரதன் தியாகியா?

அரச போகம் அனைத்தையும் துறந்து, அண்ணன் ராமனுக்குச் சேவை செய்ய 14 ஆண்டுகள் இமைக்காமல், கானகத்தில் தொண்டு செய்த லட்சுமணன் தியாகியா?

இவர்கள் அனைவரும் தியாகிகள் என்றால், கணவன் ஏற்றுக்கொண்ட தியாகப் பணி தடையின்றி
நடக்க, தன்னையே அவன் வெறுத்து ஒதுக்கும் சூழ்நிலையை உருவாக்கி, அந்தத்
துயரத்தைத் தன்னுள்ளேயே புதைத்துக்கொண்டு, 14 ஆண்டுகள் ஊண் உறக்கமின்றி
அரண்மனைக்குள்ளேயே அக்ஞாதவாசம் செய்து வாழ்ந்த ஊர்மிளையும் இவர்களுக்கு
ஈடான தியாகிதான், அல்லவா
?


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 21 Feb 2014, 6:13 PM | Message # 43
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தர்மன் நினைத்திருந்தால்?

மகாபாரத யுத்தம் முடிந்து பாண்டவர்கள் அரியணை ஏறிய பிறகு,  பகவான் கிருஷ்ணரிடம் ஒரு கேள்வி கேட்கபட்டதாம்.  

கிருஷ்ணா... நீ பாண்டவர்கள் மேல் அளவில்லா அன்பு கொண்டவன்.  அவர்கள் நலனில்
அக்கறை உள்ளவன்.  உன் தங்கை சுமித்ராவை  கூட ,  அர்சுனனுக்கு திருமணம்
செய்து கொடுத்து இருக்கிறாய்.  

இப்படி இருக்க....பாண்டவர்கள் சூதாடி,  நாட்டை இழந்து, நாடோடியாய் காட்டில்
அலைந்தார்கள்.  நீ நினைத்து இருந்தால் இதை தடுத்து இருக்க முடியாதா. 

அதற்கு கிருஷ்ணன் சொன்ன பதில் இதுதான்.

சூதாடுவது என்பது அரச தர்மம்.  தர்மன் சூதாடியத்தில் தவறு இல்லை.  ஆனால்
துரியோதனன் சூதாட அழைத்த போதே என் சார்பாக மாமா சகுனி ஆடுவார் என்று
திரியோதனன் சொன்னான்.  

ஆனால் தர்மனோ தான் என்ற எண்ணம் கொண்டு தானே ஆட முனைந்தான்.  தர்மன் என்
சார்பாக கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லி இருந்தால்,  முடிவு வேறு மாதிரியாக
இருந்து இருக்கும்.  

தர்மன் செய்த தவறுதான் இந்த நிலைமைக்கு காரணம்   என்றார்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Saturday, 22 Feb 2014, 5:16 PM | Message # 44
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
 நலன்... நீலன்

பகவான் ஸ்ரீராமசந்திர மூர்த்தி இலங்கை செல்ல சுக்ரீவன் தலைமையில்,  வானர படைகளின் உதவியோடு கடலில் பாலம் அமைக்கிறார்.  

வானர படைகள் கல், பாறை, மரம், மலை என்று பெயர்த்து கடலில் போடுகின்றனர்.  ஆனால் எத்தனை போட்டாலும், கடலின் ஆழத்தால்  அது அத்தனையும் முழ்கி விடுகிறது.  

துவண்டு போன சுக்ரீவன் பகவானிடம் வந்து......கடலின் ஆழம் மிகவும் அதிகமாக உள்ளது.  பாலம் கட்டி முடிக்க எங்கள் சக்தியால் முடியாது போலிருக்கிறது..... என்ன செய்வது என்று வணங்கி கேட்டார்.  

அதற்கு ஸ்ரீராமசந்திர மூர்த்தி... அங்கு விளையாடி கொண்டிருந்த நலன் நீலன் என்ற இரண்டு குட்டி குரங்குகளை காட்டி,  கடலில் போடும் ஒவ்வொன்றையும்  அவர்களை தொட செய்து போடுங்கள் என்று கூற,  அப்படியே சுக்ரீவன் செய்தான்.  

என்ன ஆச்சர்யம்...  இப்போது கடலில் போட்ட பாறைகளும், மலைகளும் மிதக்க ஆரம்பித்தன.  

அனுமனுக்கு ஒரே ஆச்சர்யம்.  அவர் பகவான் ஸ்ரீராமசந்திர மூர்த்தியை வணங்கி,  அந்த குரங்குகள் தொட்டு கொடுத்தால் மட்டும் எப்படி எல்லாம் மிதக்கிறது?  என்ன காரணம் என்று கேட்டார்.  

அனுமா... ஒரு முனிவர் அத்தி மரத்தின் அடியில் கடும் தவம் செய்து கொண்டிருந்தார்.  அந்த பக்கம் விளையாடி கொண்டிருந்த நலன் நீலன் இருவரும்  அந்த மரத்தில் இருந்த அத்தி பழங்களை பறித்து விளையாடி கொண்டிருந்தன.  

அந்த பழங்கள் முனிவர் மீது விழுந்தது.  கோபத்தில் கண் விழித்த முனிவர்.... தன் கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்து, கைகளை ஓங்கியபடி மரத்தை அண்ணாந்து பார்த்தார்.  

அங்கே... இரண்டு இளம் குரங்கு குட்டிகள் விளையாடி கொண்டிருப்பதை பார்த்து,  முனிவர் மனம் இளகுகிறது.   ஆனால் கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்தாகி விட்டதே.... எனவே, தன் சாபத்தை மாற்றி அவர்கள் எறியும் எதுவும் பஞ்சுபோல் மிதக்கட்டும் என்று கூறிவிடுகிறார்.  

அதனால் தான் இவர்கள் தொட்டு கொடுக்கும் பாறைகள் கடலில் மூழ்காமல் மிதக்கின்றன என்று ராமசந்திர மூர்த்தி கூறினார்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Sunday, 23 Feb 2014, 5:38 PM | Message # 45
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
ஸ்ரீராமனும் தேரையும்

ஒரு நாள் ஸ்ரீராமசந்திர மூர்த்தி குளிக்க ஆற்றுக்கு போனார்.  கையில் வில் இருந்தது.  பொதுவாக வீரர்கள் கையில் வில்லை எடுத்தால் எய்யாமல் வைக்க கூடாது.  

அப்படி வைக்கும் நிலைமை வந்தால் அதை பூமியில் தான் குத்தி வைக்க வேண்டும்.   அந்தநாள் ராமன் வில்லை ஆற்று கரையில் குத்தி வைத்து விட்டு குளிக்க சென்றார்.  

திரும்பி வந்து அம்பை எடுத்த போது,  வில்லின் நுனியில் ஒரு தேரை குத்து பட்டு துடித்து கொண்டிருந்தது.   அதை பார்த்த ராமன் துடித்து விட்டார்.  

யே.... தேரையே நான் வில்லை குத்தும் போதே நீ சத்தம் போட்டுருந்தால் இவ்வளவு நேரம் நீ வழியால் துடித்துருக்க மாட்டாயே.  ஏன் மௌனமாக இருந்து விட்டாய் என்று கேட்டார்.  

அதற்கு அந்த தேரை... பகவானே... எனக்கு எதாவது துன்பம் வந்தால் ராமா என்றுதான் அழைப்பேன்.  ஆனால் அந்த ராமனே என்னை துன்புறுத்தும் போது நான் யாரை அழைப்பது என்று தெரியவில்லை... அதனால் தான் அமைதியாக இருந்து விட்டேன் என்று சொன்னதாம்.  ராமனால் பதில் சொல்ல முடியவில்ல


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Monday, 24 Feb 2014, 5:01 PM | Message # 46
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
பொறாமையினால் ஏற்படும் துன்பம்

பாண்டுவின் மனைவியர்களான குந்தி, மாதுரி இருவரும் ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். தனது ஓரகத்திகளுக்குப் பிள்ளைப் பேறு உண்டாகியும், தனக்கு உண்டாகாததை எண்ணி பொறாமை கொண்ட பாண்டுவின் அண்ணன் மனைவியான காந்தாரி ஓர் உலக்கையால் வயிற்றில் அடித்துக் கொண்டாள். சில நாள்களில் கர்ப்பமான காந்தாரி ஒரு மாமிசப் பிண்டத்தைப் பெற்றுஎடுத்தாள்!

வியாச முனிவர் அதை நூறு பிள்ளைகளாகவும், ஒரு பெண்ணாகவும் மாற்றினார். அதாவது, காந்தாரியின் பொறாமை நூறு பிள்ளைகளாகவும் பெண்ணாகவும் உருவெடுத்தது. பொறாமையே மனித உருவாகப் பிறந்ததனால், அவர்களில் மூத்தவனான துரியோதன் பாண்டவர்களின் வீரம், புகழ் ஆகியவற்றைக் கண்டு பொறாமை கொண்டான். குறிப்பாக, நிகரற்ற உடல் பலம் கொண்டிருந்த பீமனைக் கண்டு மிக அதிகமாகப் பொறாமைப் பட்டான்.
 
அதன் விளைவாக, ஒருநாள் துரியோதனன் தன் சகோதரர்களுடன் சேர்ந்து பீமனுக்கு விஷமளித்து, அவனை நாகப்பாம்புகள் நிறைந்த ஆற்றினில் தூக்கி வீசினர். நாகங்கள் அவனைத் தீண்ட, அவற்றின் விஷம், ஏற்கெனவே துரியோதனன் அளித்த விஷத்தை முறியடித்து விட்டது. ஆற்றில் மூழ்கிய பீமன் ஆற்றின் அடியிலிருந்த நாகலோகத்தை அடைந்தான். நாகராஜா அவனை வரவேற்று உபசரித்து, ஆயிரம் யானைகளின் பலத்தை அவனுக்கு அளித்தான்.
 
உயிர் பிழைத்து வந்த பீமனைக் கண்டு, துரியோதனின் பொறாமை பல மடங்கு பெருகியது. பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரருக்கு சூதாட்டத்தில் ஆசை உண்டு. அதைப் பயன்படுத்திக் கொண்டு அவரை சூதாட்டத்தில் தோற்கடித்த துரியோதனன், பாண்டவர்களை பதின்மூன்று ஆண்டுகளுக்கு நாடு கடத்துகிறான்.
 
பதின்மூன்று ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகும், பாண்டவர்களின் உரிமையை துரியோதனன் தர விரும்பாததால், பாரதப் போர் நிகழ்கிறது. மொத்தத்தில், துரியோதனுடைய பொறாமையினால் மற்றவர்களுக்குத் துன்பமும், இறப்பும் உண்டாகிறது.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Tuesday, 25 Feb 2014, 5:00 PM | Message # 47
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
சிலம்பை மட்டுமே அறிந்த லட்சுமணன்!

சீதாபிராட்டியை ராவணன் தூக்கிச் சென்றபோது, தன்னைத் தூக்கிச் செல்லும் வழி ராமனுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகத் தன்னுடைய ஆபரணங்களைக் கழற்றிப்
போட்டுக்கொண்டே சென்றாள் சீதை.

அனுமன் அவற்றை ஒவ்வொன்றாகச் சேகரித்து வைத்திருந்து கிஷ்கிந்தாபுரிக்கு ராமர்&லட்சுமணர் வந்தபோது கொடுத்தான்.

அந்த ஆபரணங்கள் ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனித்த ராமர், அவை சீதை
அணிந்திருந்தவைதான் என்பதை உணர்ந்து மிகவும் வருந்தினார். காதணி, கழுத்து
ஆபரணம், கைவளையல்கள் என ஒவ்வொன்றிலும் சீதையின் முழுவடிவம் மனக்கண் முன்
தோன்றி ராமரை மேலும் வருத்தியது.

தம்பி லட்சுமணா, இந்த ஆபரணங்களைப் பார்! இவை அனைத்தும் உன் அண்ணி
அணிந்திருந்தவை அல்லவா? எனத் தாங்கொணாத் துயரத்துடன் தம்பியிடம் கேட்டார்.

லட்சுமணன் கலங்கிய கண்களுடன் காதணியை எடுத்தான். உடனே விலக்கி அப்பால்
வைத்தான்! வளையல் களை எடுத்தான். விலக்கி அப்பால் வைத்தான்! கழுத்தில்
அணியும் ஆபரணத்தை எடுத்தான். அதையும் அப்பால் வைத்தான்! அடுத்து காலில்
அணியும் சிலம்பை எடுத்தான்.

உடனே,

அண்ணா... இது அண்ணியினுடையதுதான். சந்தேகமே இல்லை என்று குரலில் வருத்தம் தோயச் சொன்னான்.

அண்ணியின் பாதங்களைத் தவிர திருவுருவத்தை அவன் ஏறெடுத்தும் பார்க்காதவன்.
பாதசேவை மாத்திரம் செய்தவன். எனவே, பிராட்டியின் மற்ற ஆபரணம் எதையும் அவன்
பார்த்ததில்லை. திருவடியில் அணிந்திருந்த சிலம்பை மாத்திரம் அடையாளம் கண்டு
சொன்னான்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 26 Feb 2014, 5:48 PM | Message # 48
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
எது சிறந்த பக்தி?

துரியோதனனுடன் சூதாடித் தோற்றார் தருமர். பாண்டவர்களின் ராஜ்யத்தைக் கைப்பற்ற, அவர்களைக் கொன்றொழிக்க பல முயற்சிகள் செய்து வந்தான் துரியோதனன்.

ஆனாலும் பாண்டவர்கள் தர்ம வழியில் நடப்பவர்கள் என்பதால் எல்லாச் சூழ்ச்சியிலும் தப்பி, பத்து வருட வனவாசத்தை ஏற்று, காட்டில் வாழச் சென்றார்கள்.

காட்டில் வாழ்ந்து வந்த குந்திதேவி, பாஞ்சாலி, பஞ்சபாண்டவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் பீமனோ, தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுவான். இதனால் அவன் பிரார்த்தனையில் பங்குபற்றுவதில்லை.

ஒருநாள் "நீ யானைபோல் பலசாலிதான், ஆனாலும் பிரார்த்தனையில் ஈடுபடும் எண்ணமே இல்லாமல் இருக்கிறாயே. உனக்கு ஏன் பக்தி இல்லாமல் போயிற்று!" என்று கடிந்தார் தருமர்.

இதன்பிறகாவது நேரத்திற்கு எழுந்து பிரார்தனையில் கலந்து கொள்வான் என்று எண்ணினார் தருமர். ஆனாலும் வழக்கம்போல தாமதமாகவே பீமன் படுக்கையிலிருந்து எழுவான்.

ஒரு நாள் கிருஷ்ணரை விருந்துக்கு அழைக்க எண்ணி, "நகுலனை, கிருஷ்ணரிடம் அனுப்பி வைத்தார். நகுலன் திரும்பி வந்து "நாளைக்கு கிருஷ்ணருக்கு வேறு வேலை இருக்கிறதாம். வேறு ஒருநாள் தான் அவரால் வரமுடியுமாம்" என்று கூறினான்.

"நீங்களெல்லாம் கூப்பிட்டால் கிருஷ்ணன் வரமாட்டார். நான் போய் அழைத்து வருகிறேன் பாருங்கள்" என்று கூறியவாறு அருச்சுனன் நம்பிக்கையுடன் எழுந்து சென்றான்.

அங்கு சென்ற அருச்சுனனும், நாளை விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தான். "என்ன செய்வது, நாளைக்கு எனக்கு வேறு வேலை இருக்கிறதே" என்றார் கிருஷ்ணர்.

மனம் இடிந்தவனாக,அருச்சுனன் திரும்பினான். அருச்சுனன் போய் அழைத்தும், கிருஷ்ணர் வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டாரே.. என்று எல்லொரும் கவலையாக இருந்தனர்.

வழக்கம் போல, தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்த வந்த பீமன், "ஏன் எல்லோரும் என்னவோ போல இருக்கிறீர்கள்?" என்று வினவினான்.

அப்பொழுது தருமர், "ஒன்றுமில்லை, கிருஷ்ணரை இன்று விருந்துக்கு அழைத்திருந்தோம், அவருக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார்" என்றார்.

"இவ்வளவுதானா.., நான் போய் கிருஷ்ணரை அழைத்து வருகிறேன்" என்றான் பீமன்.

"நான் போய் அழைத்து வரமுடியாத கிருஷ்ணர்.., நீ கூப்பிட்டு வந்துவிடுவானா.." என்று அருச்சுனன் கிண்டல் செய்தான். பீமன் தனது கதையை (தண்டாயுதம்) தூக்கிக் கொண்டு புறப்பட்டான்.

போகும்போது "பாஞ்சாலி... நீ விருந்து தயார் செய். கிருஷ்ணனுக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு எடுத்து வை" என்று கூறிவிட்டுச் சென்றான்.

சிறிது தூரம் போனபின், தன் கதையை வானத்தை நோக்கி வீசி எறிந்தான்! "கிருஷ்ணா! நீ விருந்துக்கு வருகிறாயா இல்லையா? வராவிட்டால் நான் வீசிய கதை என் தலைமேல் விழுந்து, நான் என் உயிரை விடுவேன்." என்று உரக்கக் கத்தினான்.

உடனடியாக கிருஷ்ணர் தோன்றி, பீமனின் தலைக்கு மேலாக விழுந்து கொண்டிருந்த கதையை சட்டென்று பிடித்துக்கொண்டார்! பீமனின் அன்பு அழைப்பினை ஏற்று, அவனோடு விருந்திற்கு வந்தார். பீமனோடு கிருஷ்ணர் வருவதைக் கண்டதும், கேலி செய்தவர் தலை குனிந்தனர்.

பீமனின் பக்திதான் சிறந்தது என்று நிரூபணம் ஆயிற்று. அவன் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை என்பதை உணர்ந்தான் அருச்சனன்.

தினமும் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாத போதிலும், அவன் பக்தியே தூயதாகவும் தன்னலம் அற்றதாகவும் இருந்தது.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 27 Feb 2014, 6:55 PM | Message # 49
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
அமாவாசை விரத கதை

ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையை படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் உங்களுக்கு தெரியுமா?

விரதம் சரி... அது என்ன கதை எதற்காக அதை சொல்ல வேண்டும்?

அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதை தீர்த்துக்கொள்ள அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான்.

மன்னன் மகிழ்ச்சியோடு இருந்த போது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன் இளமைப்பருவத்தை எட்டும் போது இறந்து போவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோவில் ஒன்றில் அவன் வழிபட்ட போது உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை.

அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமை பருவம் வந்தால் இளவரசன் ஒருநாள் இறந்து போனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்து போன இளவரசனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளை காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்த பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்... தனக்கு தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள்.

இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர் பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடி மாத அமாவாசை நாளாகும். தனக்கு அருளிய தேவியிடம் அந்த பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெற செய்தது போலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள்.

 மகிழ்ந்த அம்பிகை, ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களை உரியவர்களுக்கு தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும்.

ஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில் அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால் நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 28 Feb 2014, 5:33 PM | Message # 50
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தெரிந்த புராணம்... தெரியாத கதை!

காலதேவனைக் காலால் உதைக்கலாமா?

நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் பெற விரும்பி, சிவபெருமானை வழிபடுகிறோம். சிவனுக்கு ம்ருத்யுஞ்ஜயன் என்ற பெயர் உண்டு. ம்ருத்யு என்றால் மரணம், ஜெயம் என்றால் வெற்றி என்று பொருள். ம்ருத்யுஞ்ஜயன் என்றால், மரணமடையும் உடலிலிருந்து உயிர்களை எடுத்துச் செல்லும் கடமையைச் செய்யும் எமனை வென்றவன் என்பது பொருள். சிவபெருமானை வழிபட்டு மரணத்தையே வென்ற மார்க்கண்டேயனின் கதை பலருக்குத் தெரியும்.

தன் பக்தனின் ஆயுளை அதிகரிக்கச் செய்ய, அவன் மீது பாசக் கயிற்றை வீசிய எமனைக் காலால் எட்டி உதைத்து, தன் பக்தனான மார்க்கண்டேயனுக்கு 'என்றும் பதினாறு வயது’ என்று சிவபெருமான் வரம் தந்ததாகப் புராண வரலாறு.

பதினாறே வயது வரையில்தான் உயிரோடு இருப்பான் என்ற நிபந்தனை இருந்தபோதிலும், ஒழுக்கமான அந்த ஒரு புதல்வன் போதும் என அந்த வரத்தைக் கேட்டுப் பெற்றார் மிருகண்டு மகரிஷி. அந்தத் தவப்புதல்வன்தான் மார்க்கண்டேயன்.

 அவன் பரமசிவனின் பக்தன். அவனுக்கு 16 வயது முடியும்போது, அவன் ஆயுள் முடிவடைந்தது. இது அவனுக்கும் தெரியும்; காலதேவனான எமதர்மனுக்கும் தெரியும்.

 'மார்க்கண்டேயன் 16 வயது வரையில்தான் வாழ்வான்’ என்று அவனது தந்தைக்கும், அவருக்கு வரம் தந்த பரமசிவனுக்கும் தெரியும்.
காலம் தவறாமல் ஜீவன்களை மனிதக் கூட்டிலிருந்து கவரும் பணியைச் செய்யும் எமதர்மன், மார்க்கண்டேயன் உயிரையும் கவர வந்தான்.

அப்போது, 'ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே, சிவலிங்கத்தை திரிகரண சுத்தியுடன் பூஜித்துக் கொண்டிருந்தான் மார்க்கண்டேயன். குறிப்பிட்ட நொடியில் பாசக் கயிற்றை வீசினான் எமன். சிவலிங்கத்தை அணைத்துக் கொண்டான் மார்க்கண்டேயன். எமன் வீசிய பாசக் கயிறு சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது.

தன் மீதே பாசக் கயிற்றை வீசிய எமனைத் தன் காலால் உதைத்தார் சிவனார். இது புராணம்.
காலம் தவறாமல் தன் கடமையைச் செய்ய வந்த காலதேவனைக் காலால் உதைக்கலாமா? தன்னை ஒரு பக்தன் வழிபட்டுவிட்டான் என்பதற்காக, நீதி வழங்க வந்த நீதி தேவனையே தண்டிக்கலாமா?

அப்படியானால், ஆயுள் முடியும்போது அனைவருமே அந்த சிவனை ஆலிங்கனம் செய்துகொண்டு, எமனிடமிருந்து தப்பிவிட மாட்டார்களா? இவையெல்லாம் நியாயமான கேள்விகள்தான்! இவற்றுக்குப் பதில் காண முயலும்போது, புதிய உண்மைகள் வெளிப்படுகின்றன.

எமதர்மன் சர்வேஸ்வரனான சிவனை தினமும் உபாஸிப்பவன். தேவர்கள், மானிடர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், தெய்வத்தை நம்புகிறவர்கள், நம்பாதவர்கள் என்ற பாகுபாடின்றி, அவரவரின் கர்மவினைகளுக்கேற்ப, காலமறிந்து நீதி வழங்கும் பொறுப்பு அவனுக்கு உண்டு.

சிந்தனையின் இருப்பிடம் மூளை என்றால், ஆசாபாச உணர்ச்சி களின் இருப்பிடம் இதயம். எல்லோரும் இறைவனின் திருவடிகளைச் சிரத்தில் ஏற்க விரும்பினார்களென்றால், இறைவனின் திருவடிகள் தன் மார்பிலேயே பதிய வேண்டுமென்று தவமிருந்தான் எமதர்மன்.

உணர்ச்சிகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் இடம் கொடுக்காமல், சத்தியத்தின் பிரதிநிதியாக நீதி பரிபாலனம் செய்ய, ஈஸ்வரனின் திருவடிகள் தன் இதயத்திலேயே பதியவேண்டும் என, தினமும் ருத்திர தேவனைப் பிரார்த்தித்தான் எமதர்மன்.

அந்தப் பிரார்த்தனை நிறைவேற, மார்க்கண்டேயன் ஒரு கருவியானான். எமன் பாசக் கயிற்றை மார்க்கண்டேயன் மீதுதான் வீசினான். அதே நொடியில் மார்க்கண்டேயன் இறைவனின் திருமேனியைத் தழுவிவிட்டான். பாசக்கயிறு இறைவனையும் பிணைத்துவிட்டது. எல்லாமே ஈஸ்வரனின் சங்கல்பப்படிதான் நடந்தது.

மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை முதலிலேயே தழுவிக் கொண்டிருந்தால், நிச்சயமாக எமதர்மன் தன் பாசக் கயிற்றை தான் வணங்கும் தெய்வத்தின் மீது வீசத் துணிந்திருக்கமாட்டான். மார்க்கண்டேயன் மீது வீசிய பாசக்கயிறு தன் மீது விழும்படி செய்து, இருவருக்கும் தரிசனம் தந்து, தன் திருவடியை எமதர்மனின் இதயத்திலேயே வைத்து, அவன் தவத்தைப் பூர்த்தி செய்தான் இறைவன்.

ஆனால், அந்தத் திருவடி அம்பிகையின் அம்சமாக அமைந்தது எமதர்மன் செய்த பாக்யம். மார்க்கண்டேயனுக்கு 'என்றும் பதினாறு வயது’ இருக்க அருள் செய்து, அவனது பக்திக்கும் ஒரு பரிசு தந்தார் சிவபெருமான். ஈசன் எமனைக் காலால் உதைத்த வரலாற்றில், மற்றொரு ரகசியத் தத்துவமும் உண்டு.

மார்க்கண்டேயனுக்கு சிவபெருமான் தீர்க்காயுள் தந்த புண்ணிய க்ஷேத்திரம், தஞ்சை மாவட்டத்திலுள்ள திருக்கடையூர் அல்லது திருக்கடவூர் ஆகும். அன்னை அபிராமி அருள்பாலிக்கும் இந்த க்ஷேத்திரத்தின் பெருமையையும், அம்பிகையின் அருளையும் பற்றி அபிராமபட்டரின் அந்தாதித் தமிழ் இன்றும் நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்தல புராணத்தின்படி, காலதேவனை சிவபெருமான் காலால் உதைத்த சம்பவத்துக்கு ஓர் அற்புதமான காரணம் சொல்லப்படுகிறது.

சிவபெருமான் உமையருபாகன் அல்லவா! அவன் பார்வதியைப் பாதி உடலாகக் கொண்ட அர்த்தநாரீஸ்வரன். அவனது திருமேனியில் இடதுபுறம் அன்னை உமாதேவியின் அம்சம். மார்க்கண்டேயன் மீதும் தன் மீதும் பாசக் கயிற்றை வீசிய எமனைத் தனது இடது காலால்தான் உதைத்தான் ஈசன். இடப் பாகம் சக்தியினுடையது. எனவே, இது சிவனின் திருவடியல்ல; சக்தி பார்வதியின் திருவடிதான்.

கடமையைச் செய்த காலதேவனை சிவபெருமான் தன் காலால் உதைக்கவில்லை. மாறாக, தர்மம் தவறாமல் தன் கடமைகளை அவன் தொடர்ந்து செய்ய, அன்னை சக்தியின் அருள் அவனுக்குக் கிடைப்பதற்காக, அன்னையின் பாதமே தர்மதேவனின் இதயத்தைத் தொட்டு, அவனை வைராக்கியமுள்ளவனாகச் செய்தது. அதற்கு இறைவன் ஒரு வாய்ப்பளித்தான். இது திருக்கடவூர் ஸ்தல புராணக் கதை.

கடமையைச் செய்யும்போது, கடவுளென்றும் பாராமல் நீதி தருகிறவன் எமதர்மன். அவன் வெறும் மரண தேவன் அல்ல; உயிர்களை மனிதக் கூட்டிலிருந்து விடுதலை செய்யும் தர்மதேவன்.

சிவசக்தியின் சங்கல்பத்தின்படி, அவன் உயிர்களைக் கவருகிறான். அவன் நெருங்கும் வேளையிலும்கூட, சிவசக்தியின் அருள் இருந்தால், ஆரோக்கியமும் ஆயுளும் நீடிக்கும் என்பதே இப் புராணக் கதை சொல்லும் தத்துவம்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » தெரிந்த புராணம் தெரியாத கதை (புராண கதைகள்)
Search: