தெரிந்த புராணம் தெரியாத கதை - Page 6 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » தெரிந்த புராணம் தெரியாத கதை (புராண கதைகள்)
தெரிந்த புராணம் தெரியாத கதை
PattuDate: Saturday, 01 Mar 2014, 5:51 PM | Message # 51
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தெரிந்த புராணம்... தெரியாத கதை!

மகாபாரதம், வியாச மகரிஷியால் சொல்லப்பட்டு, விநாயகரால் எழுதப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.
அந்த மகாபாரதம் எப்படித் தோன்றியது தெரியுமா?

நைமிசாரண்யத்தில், பன்னிரண்டு வருடங்களில் நிறைவடையும் சந்திர யாகத்தை  சௌனக முனிவர் முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். அங்கு சூத முனிவர்  வந்தார். மற்ற முனிவர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். ‘‘எங்கிருந்து  வருகிறீர்கள்?

இவ்வளவு காலம் எங்கெல்லாம் போய் வந்தீர்கள்? என்று  கேட்டனர். சூதர், ‘‘ஜனமேஜய மகாராஜனின் சர்ப்ப யாகத்திற்குச்  சென்றிருந்தேன். அங்கே அரசனுக்கு வைசம்பாயன முனிவர் என்பவர், தன்னிடம்  வியாசர் கூறிய புண்ணியமான பாரதக் கதைகளைச் சொல்லக் கேட்டேன் என்றார்.

ஜனமேஜயன் மூலம் சூதர் அறிந்த பாரதக் கதை பற்றி சொல்லும்படி முனிவர்கள் ஆவலுடன் கேட்டனர்.
சூத  முனிவர் கூறலானார் : ‘‘சத்தியவதியின் தவப் பயனாகத் தோன்றிய வியாச பகவான்,  குறைவற்ற தவத்தினாலும் வழுவாத பிரம்மசரியத்தினாலும் வேதங்களை வகுத்தார்.  பிறகு பாரதமாகிய இதிகாசத்தை இயற்றினார்.

‘‘தாய் சத்தியவதியின்  கட்டளையாலும் புத்திமானாகிய பீஷ்மரின் வேண்டுதலாலும் வியாசர் தனது  மைந்தர்களாக திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகிய மூவரை அடைந்தார். அந்த  மூவரும் வளர்ந்து உலகத்தில் வாழ்ந்து பரகதி அடைந்தார்கள். அப்போது ஜனமேஜய  மகாராஜன் கேட்டுக்கொண்டதால் வியாசமுனிவர் குரு வம்சத்தின் விரிவான  சரித்திரத்தைச் சொல்லலானார்.

‘‘காந்தாரியின் பாம்பு போன்ற  குணத்தையும், விதுரனின் புத்தி வன்மையையும், குந்தியின் தைரியத்தையும்,  கண்ணபிரானின் பெருமையையும், சத்தியத்தில் பாண்டவர்க்குள்ள பற்றையும்,  துரியோதனாதியரின் தீயொழுக்கத்தையும் எடுத்துக்காட்டினார்.

இதை பின்னர்  பாரதமாக பல உப கதைகளுடன், லட்சம் சுலோகம் கொண்ட காவியமாக இயற்றினார். உப  கதைகளின்றி பாரதம் மட்டுமாக இருபத்து நாலாயிரம் சுலோகம் கொண்டது.  இதைத்தவிர, நூற்றைம்பது சுலோகங்களைக் கொண்டு பாரதச் சுருக்கம் ஒன்றையும்  வியாசர் இயற்றினார்.

பிறகு வியாசர் அந்தக் கதையை முதலில் யாருக்கு  சொல்வது என்று யோசித்துக் கொண்டே பிரம்மாவை நினைத்தார்.முனிவரை  மகிழ்விக்கவும் உலகத்துக்கு நன்மை புரியவும் அக்கணமே அவ்விடம் பிரம்மா  தோன்றினார்.

பிரம்மாவைக் கண்டு குதூகலித்த வியாசர், ‘பகவானே, நான் ஒரு  காவியத்தை இயற்றியிருக்கிறேன்.வேதத்தின் ரகசியம் முழுவதையும் அதில்  கூறியிருக்கிறேன்.

இதிகாசம், புராணம் போன்றவற்றின் உட்கருத்தும், முக்கால  நிகழ்ச்சிகளும், முதுமை, மரணம், நோய், பயம் இவற்றின் தத்துவமும், ஜாதிய  தர்மங்கள், ஆசிரம தர்மங்கள், ஆத்மவிசாரம், உலக நீதி, மருத்துவம், புண்ணிய  தீர்த்தங்கள், தேசங்கள், நதிகள், மலை, காடு, கடல், உலகப் போக்கு என  அனைத்தையும் இந்த நூலில் விளக்கியுள்ளேன்Õ என்றார்.

அதற்கு பிரம்மா,  ‘‘உலக ரகசியத்தை அறிந்த உம்மை, தவத்தில் சிறந்த வசிஷ்டரையும் விட  மேலானவராக எண்ணுகிறேன். உமது பிறப்பு முதலே உமது வாக்கு உண்மையானது என்பதை  அறிவேன். நீர் காவியம் என்று கூறியதால் இது காவியமாகவே இருக்கப்  போகிறது.

பிரம்மச்சரியம் முதலிய ஆசிரமங்களில் இல்லறம் சிறந்து  விளங்குவதுபோல் உமது காவியமும் அனைத்திலும் சிறந்து விளங்கும். அறம்,  பொருள், இன்பம், வீடு இவற்றை விளக்கும் பாரதம் என்னும் சூரியனால் நீர் உலக  இருளை அகற்றி விட்டீர்.

‘‘பாரதம் என்னும் மரத்துக்கு சங்கிரக  அத்தியாயம் விதை. பௌலோம பர்வம், ஆஸ்திக பர்வம் இரண்டும் ஆணிவேர். சம்பவ  பர்வம் அடி மரம். சபா பர்வமும், அரண்ய பர்வமும் கிளைகள். விராட பர்வமும்,  உத்தியோக பர்வமும் அதன் சாராம்சம். பீஷ்ம பர்வம் பெருங்கிளை.

துரோண பர்வம்  இலை, கர்ண பர்வம் மலர். சல்ய பர்வம் நறுமணம், ஸ்திரீ பர்வம் விஸ்தாரம்,  சாந்தி பர்வம் வலிமை. அசுவமேதம் அமுத ரசம். இந்த மரத்தை கவிகள் அனைவரும்  அண்டி இன்புறப் போகிறார்கள். மக்களுக்கு மேகத்தைப் போல் கவிகளுக்கு இது  அழிவற்ற நற்பயனை அளிக்கப் போகிறது என்று ஆசியளித்து அருளிவிட்டு பிரம்மா  மறைந்தார்.

‘‘வியாச முனிவர் இந்த மகாபாரதத்தைத் தன் மகன் சுக  முனிவருக்குக் கற்பித்தார். தகுந்த பல
சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.  நாரத முனிவர் இதைக்கற்று, தேவருக்குக்கூறினார்.

. தேவமுனி பிதுருக்களுக்கும்; சுக முனிவர்  கந்தர்வர், யட்சர், ராட்சசர் முதலியோருக்கும், வைசம்பாயன முனிவர் ஜனமேஜய  மகாராஜனுக்கும் இதைக் கூறினர்.

‘‘துரியோதனன் தீமையாகிய பெரிய மரம்,  கர்ணன் அதன் அடிப்பாகம், சகுனி கிளை, துச்சாதனன் பூவும் பழமும்,  திருதராஷ்டிரன் வேர், இது ஒரு புறம்; தர்மபுத்திரன் தர்மமே உருவான பெரிய  மரம், அர்ஜுனன் அதன் அடி மரம். பீமன் கிளை; மாத்ரியின் மைந்தர்கள் பூவும்  பழமும் ஆவார்கள்.

பகவான் கிருஷ்ணனும் வேதங்களும் அந்த மரத்தின் வேர்கள்.  இந்த இரு சாராரின் சரிதத்தை இதில் விரிவாகக் கூறியிருக்கிறார் வியாச  முனிவர். பாரதத்தின் ஒரு பகுதியை சிரத்தையாகப் படித்தால்கூட பாவம்  அனைத்தும் விலகும். இதில் தேவரிஷிகள், ராஜரிஷிகள் அனைவருடைய சரிதமும் இடம்  பெற்றிருக்கிறது. இந்த நூலை சிரத்தையுடன் படிப்போர் நீண்ட ஆயுளையும்  தேவலோகப் பதவியையும் அடைவர்.

‘‘முன் ஒரு காலத்தில் தேவ ரிஷிகள்  சேர்ந்து நான்கு வேதங்களையும் ஒன்றாகச் சேர்த்து தராசின் ஒரு தட்டில்  வைத்தார்கள். பாரதத்தை மறு தட்டில் வைத்தார்கள். பாரதம் மகத்தானதாகவும்  பாரத்தை உடையதாகவும் இருந்தது. அதனால் மகாபாரதம் எனப் பெயர் பெற்றது!  -இவ்வாறு விளக்கினார் சூதர்.
 



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Sunday, 02 Mar 2014, 6:15 PM | Message # 52
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
"தன் வினை தன்னை சுடாது விடுமோ?'

சிந்து நாட்டு மன்னனுக்கு ஒரே மகன். பெயர் ஜயத்ரதன். அவன் வளர வளர, தீய குணங்களும் அவனிடம் வளர்ந்தன. பிறருக்குத் துன்பம் இழைப்பதைப் பெரும் மகிழ்ச்சியாகக் கருதினான்.

சிந்து மன்னன் விருத்த க்ஷத்திரன் தன் மகன் செய்யும் கொடுமைகளை அறிவான். ஆயினும் ஒரே மகன் என்ற பாசத்தால் அவனைக் கண்டிக்கவில்லை.

திருமணம் செய்து வைத்தால் அவன் கொடுங்குணம் மாறலாம் என்று எண்ணிய தந்தை, அவனுக்கு துரியோதனன் தங்கை துச்செள்ளையைத் திருமணம் செய்து வைத்தான்.

தந்தையின் எதிர் பார்ப்பு வீணானது. திருமணத்துக்குப்பின் ஜயத்ரதன் கொடுமை எல்லை கடந்து போயிற்று.

"இத்தகைய கொடியவனுக்குக் கேடு நேருமே! யாரிடமாவது சிக்கித் தலை அறுப்புண்டு சாகக் கூடுமே! இனி இவனைத் திருத்தவும் இயலாது. இவன் சாகாமல் காக்கவும் வேண்டும். இதற்கு என்ன வழி?' என்று ஆய்ந்தான். "தவம் செய்து இறைவனிடம் வரம் பெற்று ஒரே மகனைக் காப்போம்' என முடிவு செய்தான்.

காட்டின் நடுவே "சியமந்தம்' என்ற குளம் இருந்தது. அதன் கரையெங்கும் மரங்கள் வானூற ஓங்கி வளர்ந்திருந்தன. வெயில் நுழைய முடியாத சோலையாக அது இருந்தது. தவம் செய்வதற்கு ஏற்ற இடம் இதுதான் என்று அதனைத் தேர்ந்தெடுத்தான்.

"என் மகனைக் கொன்று அவன் தலையை நிலத்தில் இடுபவனின் தலை நொறுங்க வேண்டும்' என்று இறைவனிடம் கேட்க வேண்டிய வரத்தையும் தீர்மானித்துக் கொண்டான்.

பல ஆண்டுகள் தவம் செய்தான்; வரமும் பெற்று விட்டான். தவத்தை முடிக்க வேண்டிய தருணம். அந்த சமயத்தில் எதிர் பாராத நிகழ்ச்சி நடந்தது. பாரதப் போரில் அபிமன்யுவை ஜயத்ரதன் வஞ்சனை செய்து கொன்று விட்டான்.

இதை அறிந்த அபிமன்யுவின் தந்தை அர்ஜுனன், "ஜயத்ரதனைக் கொன்றே தீருவேன்' என்று சபதம் பூண்டான். கண்ணன் உதவியால் மறுநாள் மாலை அர்ஜுனன் ஓர் அம்பால் ஜயத்ரதனின் தலையை வெட்டிக் கொன்றான்.

உடனே கண்ணன், ""அர்ஜுனா! அந்தத் தலையை நிலத்தில் பட விடாதே! மேலும் மேலும் அம்பு தொடுத்து சியமந்தகத் தடாகத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் இவன் தந்தையின் கையில் விழச் செய்'' என்றான்.

கண்ணன் சொன்ன படியே அர்ஜுனன் செய்தான். ஜயத்ரதனின் தலை, தவம் செய்து கொண்டிருந்த அவன் தந்தையின் கையில் விழுந்தது. எதிர்பாராது விழுந்தமையால் துணுக்குற்ற தந்தை, தன் மகன் தலையைக் கீழே போட்டான்.

அவன் பெற்ற வரம் பலித்து விட்டது. "என் மகன் தலையை நிலத்தில் இட்டவன் தலை நொறுங்க வேண்டும்' என்பது தானே அவன் பெற்ற வரம்!

இப்போது நிலத்தில் இட்டவன் அவன் தானே! அக்கணமே அவன் தலை நொறுங்கி உயிரிழந்தான். திருந்தாத தீயவனைக் காக்க எண்ணியவன் அத்தீயவனோடு தானும் மாண்டான்.

தீயவர் யாராயினும் திருந்த முயலுதல் வேண்டும். திருந்த இயலாதவன் தீமைக்குத் தக்க தண்டனை தரவேண்டும். அந்தத் தண்டனை பிறர் தந்தால், "தன் வினை தன்னை சுடாது விடுமோ?' என்று ஆறுதல் பெற வேண்டும்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Monday, 03 Mar 2014, 5:20 PM | Message # 53
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
பாஞ்சாலி ஏன் சிரித்தாள் ?

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே , தட்சிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் , காத்திருந்தார் . அவர் மரணமடைவதற்கு முன்பு , அவரிடமிருந்து நீதி , நேர்மை , அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார் . தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலியுடன் பிதாமகரிடம் சென்றார் .

பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி " தாங்கள் எங்களுக்கு நீதி , நேர்மை , அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் " என்று கேட்க , பாஞ்சாலி மட்டும் பலமாகச் சிரித்தாள் . அதில் கேலி கலந்திருப்பதை உணர்ந்த தர்மர் , " நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் ? " என்று கடுமையாகக் கேட்டார் .

" துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது , கண்ணன் மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும் ? தர்மம் தெரிந்த பீஷ்மர் , அந்தச் சபையில் அமர்ந்து , வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர , துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா ?

 இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றி கேட்கிறீர்களே என்று நினைக்கும்போது சிரிக்காமல் என்ன செய்வது ? " என்று சொல்ல , பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள் . பீஷ்மர் பேசினார் . " பாஞ்சாலி சொன்னது முற்றிலும் உண்மை . அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும் .

 அப்போதுதான் உங்களுக்கும் , உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும் . துரியோதனன் , அன்னமிடுவதில் உயர்ந்தவன் . எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறைய உபசரிப்பான் . ஆனால் , அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல .

சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு , அவர்களை தன் காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வான் . உண்டவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க , வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள் .

" ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன் , மற்றவர்களுக்கு அன்னமிட்டால் , அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும் . நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது . அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோது எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன் ."

" ஆனால் இப்போது , பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த கெட்ட ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது . அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன .

 இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது . எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவன் . கேளுங்கள் " என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார் .

அதனால்தான் அந்தக் காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள் , சாதுக்கள் , பண்டிதர்கள் பரான்னத்தை அதாவது வெளியில் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Tuesday, 04 Mar 2014, 5:11 PM | Message # 54
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
பணிவே வெற்றி.

மகாபாரத யுத்தம் தொடங்குவதற்கு பாண்டவரும் கவுரவரும் ஆயத்தமானார்கள்.கவுரவர்களின் அரசனான துரியோதனன் தனது நட்பு நாட்டு மன்னர்களுக்கெல்லாம் தூதனுப்பித் தன் படை வலிமையைப் பெருக்கிக் கொண்டிருந்தான்.

பாண்டவரும் தங்களின் படையைப் பெருக்கிக் கொண்டிருந்தனர்.இரண்டு சாராருமே கிருஷ்ணனின் துணையை நாடவேண்டும் எனத் தீர்மானித்தார்கள்.

த்வாரகை மன்னனான கிருஷ்ணனிடம் இருக்கும் பெரும் படை தனக்குத் துணையாக வந்தால் நமக்கே வெற்றி நிச்சயம் எனக் கூறினான் துரியோதனன்.சகுனி மாமாவும்  இதை ஆமோதித்தார..

ஆனால் பாண்டவரின் நண்பனாக இருக்கும் கிருஷ்ணன் அவர்களுக்கு உதவாமல் கவுரவர்களான தங்களுக்கு உதவுவானா, என சந்தேகத்தைக் கிளப்பிவிட்டார். ஆனாலும் துரியோதனன் தானே சென்று கிருஷ்ணனின் படையைக் கேட்பதாகக் கூறிப் புறப்பட்டான்.

இதே நோக்கத்தோடு துவாரகையை  நோக்கி வந்து சேர்ந்தான் அர்ச்சுனன். ஆனால் முதலில் அரண்மனையை அணுகியவன் துரியோதனனே. வாயிலில் நின்ற காவலர் துரியோதனனை எந்தத் தடையும் சொல்லாது உள்ளே அனுமதித்தனர். மன்னர் எவர் வந்தாலும் அவரை உடனே உள்ளே அனுமதிக்கவேண்டும் என கண்ணன் கட்டளை இட்டிருந்ததே காரணம்.

மன்னன் என்ற அகந்தையோடு  உள்ளே கம்பீரமாக நுழைந்தான் துரியோதனன். உள்ளே மஞ்சத்தில் சயனத்தில் இருந்தான் கண்ணன்.கண்களை மூடிப் படுத்திருந்தவனின் காலருகே ஒரு ஆசனமும் அவனது தலையருகே ஒரு ஆசனமும் இருந்தன. முதலில் காலருகே இருந்த ஆசனத்தில் அமரச் சென்ற துரியோதனன் சற்றே சிந்தித்தான்.

இவனோ மாடு மேய்த்தவன். இன்று அரசனாக உள்ளான் இவனது காலடியில் மன்னனான நான் அமர்வதா என நினைத்தான். உடனே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தலைமாட்டில் இருந்த ஆசனத்தில் சென்று அமர்ந்து கொண்டான். கண்ணன் கண்களைத் திறப்பதற்காகக் காத்திருந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் அர்ச்சுனன் அங்கு வந்து சேர்ந்தான்.துரியோதனன் தனக்கு முன்பாகவே அங்கு அமர்ந்திருப்பதைப் பார்த்து திகைத்தான். முதலில் வந்த துரியோதனன் கண்ணனிடம் தான்  கேட்க நினைத்ததைக் கேட்டு விட்டால் என்ன செய்வது என்றே திகைத்தான்.

ஆனாலும் நம்பிக்கையோடு இரு கரம் கூப்பி கண்ணனின் காலடியில் நின்று கொண்டு இருந்தான்.சட்டென அப்போதுதான் விழிப்பவன் போல் கண்ணன் கண்களைத் திறந்து மகிழ்ச்சிக் குரலில் வா,வா, அர்ச்சுனா, நலமா உன் அன்னையார் குந்தி தேவியார் நலமா என்று கேட்டபடியே எழுந்து அமர்ந்தான்.

படுத்தவரின் கண்களுக்கு அவர் எழுந்ததும் முன்னே இருப்பவர் தானே கண்களில் படுவர்.அந்த வகையில் தன் காலடியில் நின்றிருந்த அர்ச்சுனனைப் பார்த்துக் கேட்டான் கண்ணன்.

அதே சமயம் குரலைக் கனைத்துத் தான் அங்கிருப்பதை  அறிவித்தான் துரியோதனன். உடனே துரியோதனன் பக்கம் திரும்பிய கண்ணன் அடேடே துரியோதன மகாராஜாவா? ஏது இவ்வளவு தூரம். வரவேண்டும் வரவேண்டும்.தாங்கள் என்னைத் தேடி வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.என்று அப்போதுதான் பார்ப்பதுபோல் பேசினான்.

"கிருஷ்ணா, உன்னை சந்திக்க முதலில் வந்தவன் நான்தான். என் விருப்பத்தைத்தான் நீ கேட்கவேண்டும்."
"அப்படியா, ஆனால் நான் முதலில் பார்த்தது அர்ச்சுனனைத்தானே.சரி. உன் விருப்பப்படியே ஆகட்டும்.நீயே சொல். என்னைத்தேடி வந்த காரணம் என்ன?"
"கண்ணா, பாரதப் போரில் உன் உதவி எனக்குத் தேவை.

"அவ்வளவுதானே. சரி அர்ச்சுனா, இப்போது நீ வந்த காரணத்தைக் கூறு.
"பரந்தாமா, நானும் உன் உதவியை நாடியே வந்துள்ளேன்."
"கிருஷ்ணா, அர்ச்சுனனைப் போல் நானும் உனக்கு உறவு முறைதான். எனக்குத்தான் முதல் உரிமை தரவேண்டும் உன்னை முதலில் சந்திக்க வந்தவனும் நான்தான்."

"நீங்கள் இருவருமே எனக்கு வேண்டியவர்கள்தான். துரியோதனா,என் படைவீரர் அனைவரையும் தரட்டுமா? நான் ஒருவனே துணையாக வரட்டுமா?நான் போரில் ஆயுதத்தைக்  கையால் தொடமாட்டேன். இந்த இரண்டு துணையில் ஏது உனக்கு வேண்டும் கேள்."

"கண்ணா, உன் படைவீரர் அனைவரையும் தந்தால் போதுமானது.நீயும் போரில் ஆயுதம் தாங்குவதில்லை என்று கூறியிருப்பதை மறக்காதே."
"உன் விருப்பப்படியே செய்கிறேன். மகிழ்ச்சிதானே."என்ற கண்ணன் துரியோதனனுக்கு உபசாரம் செய்து அனுப்பினான். துரியோதனனும் மகிழ்ச்சியுடன் அஸ்தினாபுரம் வந்து சேர்ந்தான்.

அதன்பின் தன் நண்பனும் மைத்துனனுமான அர்ச்சுனனிடம் "அர்ச்சுனா, போரில் ஆயுதம் எடுக்காத நான் உனக்குத் துணையாக வருவது உனக்கு மகிழ்ச்சியா?இதை நீ விரும்புகிறாயா?"என்றான் கண்ணன்.

"பரந்தாமா, நீ எங்களுக்குத் துணையாக இருந்தாலே போதும்.உன்துணை ஒன்றிருந்தால் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.எங்கே துரியோதனன் உன்னைத் தனக்குத் துணையாகக் கேட்டு விடுவானோ என நான் அஞ்சினேன்.நல்லவேளையாக அவன் உன்னைக் கேட்காமல் படையை மட்டும் கேட்டான்."

பின்னர் மகாபாரதப் போரில் கண்ணன் சாரதியாக இருந்து   ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்    அர்ச்சுனனைக் காத்து வந்தான். போர் பதினெட்டு நாட்கள் நடந்தன.

எல்லாப் பகைவரையும் முறியடித்து பாண்டவர் வெற்றி பெற்று தருமன் மீண்டும் அஸ்தினாபுரத்திற்கு அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.
மூல முதல்வனான கண்ணனின் துணையும், அர்ச்சுனனின் பணிவுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று தெரிகிறதல்லவா.

வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் நமது பணிவே நமக்குப் பெரும் துணையாக இருக்கும் என்பதை நாம் இதிகாசக் கதைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 05 Mar 2014, 6:57 PM | Message # 55
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
குரு பக்தி

துரோணர்  என்ற  முனிவர்  ஒருவர்  இருந்தார். அவர்  அரசகுமாரர்களான   பஞ்ச பாண்டவர்களுக்கும்   கௌரவர்களான   துரியோதனன்  முதலான  நூற்றுவருக்கும் குருவாக    இருந்தார். அவர்களுக்கு   வில்   வித்தை யை   சிறப்பாகக்   கற்பித்து   வந்தார்.  வில்   வித்தையில்  அர்ஜுனனை    விடச்  சிறந்தவர்  எவருமில்லை   எனக்கூறும்படி   செய்வதாகச்   சபதம்   செய்திருந்தார்.  

 இதனால்   துரியோதனனுக்குக்   கோபமும்   பொறாமையும்   அர்ஜுனன் மீது  ஏற்பட்டிருந்தது.  இயல்பாகவே  அர்ஜுனன்  வில்லில்  அம்பை  ஏற்றி   எய்வதில்    மிகவும்  சிறந்தவன்.  அதனால்  துரோணர்  அர்ஜுனனிடம்  தனி  அன்பு  கொண்டிருந்தார்.

ஒரு  நாள்  துரோணர்  தன்  மாணவர்களுக்காகக்  காத்திருந்தார்.  அப்போது  ஓர்  ஏழைச்சிறுவன்  வந்து  துரோணரைப்   பணிந்து  நின்றான்.
அவனை  ஆசிர்வதித்தார்  துரோணர். "யாரப்பா நீ?  எங்கு  வந்தாய்?"

"குருவே!,  நான்  தங்களிடம்  வில் வித்தை   பயிலவேண்டும்  என  விரும்புகிறேன்.  பலநாட்களாகத்  தங்களைத்  தேடித்  திரிந்தேன்.  இன்றுதான்  தங்களின்  தரிசனம்  கிடைத்தது.  என்னைத்  தங்கள்  மாணாக்கனாக  ஏற்றுக்   கொண்டு  அருள்  செய்ய  வேண்டும்"

"என்ன  கேட்டாய்?  உன்னை  மாணவனாக   ஏற்றுக்கொள்ள  வேண்டுமா?    நான்  அரச  குடும்பத்தாருக்கு  மட்டுமே  கற்பிப்பவன்.  உன்னைப்  போன்ற  ஏழைச்  சிறுவனுக்குக்  கற்பிக்க  மாட்டேன்.  அரசகுமாரர்கள்  வரும்  நேரம்  நீ  போய்  வா.  உனக்கேற்ற  ஆசானைத்  தேர்ந்தெடுத்துக்  கொண்டு  வித்தையைக்  கற்றுக்கொள். என்  பூரண  ஆசி  உனக்கு."

 கைகளை  உயர்த்தி  ஆசி  வழங்கிவிட்டு  துரோணர்  அங்கிருந்து  சென்று  விட்டார். மண்டியிட்டு  அமர்ந்திருந்த  அந்த  வேடுவச்  சிறுவன்  கண்களில்  நீர்  பெருக  நின்றான்.  அவனது  பல  நாள்  ஆசை  நிறைவேறாமல்  போனது  பற்றி  மிகவும்  வருந்தினான்.  

எங்கே  துரோணர்  பாதங்களை  வைத்திருந்தாரோ  அந்த  இடத்திலிருந்து  மண்ணை  அள்ளிக்  கொண்டான்.  துரோணர்  சென்ற  திசை  நோக்கி  வணங்கினான். விடுவிடுவெனத்  தன்  இருப்பிடம்  நோக்கி    நடந்தான்.

இல்லம்  சேர்ந்த  அச்சிறுவன்  மண்ணைக்  குழைத்து  துரோணரைப்  போன்ற  ஒரு  சிலையைச்  செய்து  வைத்துக்  கொண்டான். அந்தச் சிலையின்  முன்னால்  நின்று கொண்டு  வணங்கினான்.  பின்னர்  தனது  பயிற்சியைத்  தொடங்கினான்.  துரோனரையே   தனது  குருவாக  மானசீகமாக  வரித்துக்  கொண்டான்.  விரைவிலேயே  சிறந்த  வில்  வீரனாக  ஆனான்.

நாட்கள்  கடந்தன. ஒரு  நாள்  துரோணரும்  அவரது  மாணாக்கரான  நூற்று  ஐய்வரும்   காட்டுவழியே   சென்று  கொண்டிருந்தனர்.  அப்போது  அந்தவழியில்   இரண்டு  காட்டுப்பன்றிகள்  ஒன்றோடு  ஒன்று  மோதிக்கொண்டு  சண்டையிட்டுக் கொண்டு  இருந்தன.அப்போது "  அர்ஜுனா!     இப்பன்றிகளைக்   கொல்"  எனக்கட்டளையிட்டார்  குரு.

அர்ஜுனன்  திகைத்தான். " ஒரே  பாணத்தினால்  இரண்டு  உயிர்களை  ஒரே  சமயத்தில்  கொல்ல  முடியுமா? குருவே,  அப்படிப்பட்ட  கலையை  நீங்கள்  இன்னும்  எனக்குக்  கற்பிக்கவில்லையே."  இதற்குள்  இரண்டு  பன்றிகளும்  வெகு  உக்கிரமாகப்  போரிட்டுக்  கொண்டு  வழியை  அடைத்துக்  கொண்டு  இருந்தன.  

அப்போது  எங்கிருந்தோ  அம்புகள்  வந்து  ஒரே  அடியில்  இரண்டு  பன்றிகளையும்  வீழ்த்தியது.  பன்றிகள்  இரண்டும்  ஒரே  சமயத்தில்  வீழ்ந்து  இறந்தன.   இதைப்  பார்த்த  அர்ஜுனன்  திகைத்து  நின்றான்.  தன்  குருவை  சந்தேகத்தோடு  பார்த்தான்.

 "தன்னினும்  சிறந்த  வில்வீரன்  ஒருவன்  உள்ளான்.  அவன்  விட்ட  பாணமே  இதற்குச்  சாட்சி.  இந்தக்கலையை  அறிந்தவர்  துரோணர்  ஒருவரே.  இன்று  மற்றொருவர்  உள்ளார்  எனில்  இதைக்  கற்பித்தவர்  தனது  குருவே. "  இவ்வாறு  அர்ஜுனன்  எண்ணம்  ஓடிற்று.

அப்போது  வில்லும்  கையுமாக  அங்கு  வந்தான்  அன்று  வந்த  வேடுவச்  சிறுவன்.  துரோணரைக்  கண்டதும்  மண்டியிட்டு  வணங்கினான். "ஏ  சிறுவனே!  உனக்கு  இக்கலையைக்  கற்பித்தவர்  யார்?  உன்  குரு  யார்?"  சற்றே  கோபமாகக்  கேட்டார்  துரோணர்

"தாங்கள்தான்  எனது  குருநாதர். தினமும்  நான்  உங்கள்  முன்னிலையில்தானே  பயிற்சி   மேற்கொள்கிறேன்."
"பொய் சொல்லாதே!   ராஜகுமாரர்களைத்  தவிர  நான்  யாருக்கும்  கற்பித்ததில்லை. உண்மையைச்  சொல்."

"என்னுடன்  வாருங்கள்."  என்று  அழைத்த  சிறுவனுடன்  அனைவரும்  அவன்  இல்லம்  சென்றனர்.  காட்டின்  நடுவே   ஒரு  குடிசை.  அதன்  முன்னே  ஒரு  திறந்த  வெளியில்  நாடு  நாயகமாக  துரோணரின்  சிலை  அமர்ந்த  நிலையில்  அமைக்கப்  பட்டிருந்தது.  அச்சிலையை  வணங்கிய  சிறுவன்  "இவர்தான்  என்  குருநாதர்.  இவர்  முன்னால்தான்  நான்  பயிற்சி  செய்கிறேன்." என்றான்  பணிவோடு.

"இது  எனது  உருவம்போல்  உள்ளதே" "ஆம்  குருதேவா. தங்களின்  பாதம்  பதித்த  மண்ணைக்  கொண்டுவந்து  அதைச்சேர்த்து  ஒரு  சிலை  செய்து  தாங்களே  அமர்ந்து  எனக்குப்  பாடம்  சொல்வதாக  நினைத்துக் கொண்டேன்.  தங்களை  என்  மனதில்  குருவாக  எண்ணிக்  கொண்டு  தினமும்  வணங்கி  வருகிறேன்."

துரோணர்  அச்சிறுவனின்  குருபக்தியே  அவனுக்கு  இத்தனை  திறமைகளும்  வளரக்காரணம்  என்பதைத்  தெரிந்து  கொண்டார்.  ஆயினும்   அர்ஜுனனுக்கு   வில்லுக்கு  விஜயன்  என்ற  பெயரைப  பெற்றுத்  தருவதாக  வாக்குக்  கொடுத்திருப்பதால்  இந்தச்  சிறுவன்  இனியும்  வில்லை  தன்  கையில்  எடுக்கக் கூடாது என  முடிவு  செய்தார். சிறுவனை  அன்புடன்  பார்த்தார்.

"சிறுவா!, உன்  பெயர்  என்ன?"
"என்  பெயர்  ஏகலைவன்.  இந்தக்  காட்டில்  வசிக்கும்  வேடுவர்  தலைவரின்  மகன்  நான்."
"உன்  திறமையைக்  கண்டு  மிகவும்  மகிழ்ந்தேன்.  குருதக்ஷிணை   தரவேண்டாமா  நீ?"

"குருவே!  எதுவேண்டுமானாலும்  கேளுங்கள். சிங்கம்  புலி  இவை வேண்டுமா?   மான்கள்  வேண்டுமா?  நொடியில்  பிடித்துவருவேன்  .உங்களுக்குக்  குருதக்ஷிணை  யாகத்  தருவேன்"

"அதெல்லாம்  வேண்டாம்.  ஏகலைவா!   நீயே  சிறந்த  மாணவன். என்பதை  நான்  ஒப்புக்கொள்கிறேன். எனக்குக்  குருதக்ஷிணையாக  உன்  வலதுகைக்  கட்டை  விரலைத்  தருவாயா?"

"தாங்கள்  எனது  குரு  என  ஒப்புக்  கொண்டதே  எனக்குப்  போதும்.   தாங்கள்  குருதக்ஷிணை  என  என்  உயிரையே  கேட்டாலும்  நான்  தரத்  தயாராக  உள்ளேன்.  பெற்றுக்கொள்ளுங்கள்."

மறுகணம்  தனது  இடது  கை  வாளால்  வலதுகை  கட்டை  விரலை  வெட்டி  ஒரு  இலையில்  வைத்து  அவர்  பாதத்தில் வைத்துப்   பணிந்து  நின்றான்  ஏகலைவன்.

மனம்  மகிழ்ந்த  துரோணர்  "ஏகலைவா!  குருபக்தி  என்ற  சொல்லுக்கு  நீயே  ஒரு  உதாரணம்.  உலகம்  உள்ளவரை  உன்  பெருமையை  இவ்வுலகம்  பேசும்." என்று  ஆசிகூறி  அங்கிருந்து  சென்றார்.  

அர்ஜுனனுக்குப்  போட்டியாக  ஒருவன்  வருவதைத்  தடுத்து  விட்ட  நிம்மதி  இருந்தாலும்  ஒரு  நல்ல  வில்வீரனை  அவனது  வீரத்தை  திறமையை  அழித்துவிட்டோமே  என்ற  வருத்தமும்  துரோணருக்கு  இருந்தது.

ஆனாலும்  குருபக்தியில்  சிறந்தவன்  ஏகலைவன்  என்ற  புகழை  அவனுக்குக்  கொடுத்து  விட்டோம்  என்ற  பெருமை   துரோணருக்கு  நிம்மதியைக்  கொடுத்தது.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 06 Mar 2014, 5:34 PM | Message # 56
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
கண்ணனிடம் ஏமாந்த யசோதை

  கோகுலத்தில்கண்ணனால்பெரும்தொல்லை கோபியருக்கு.
கண்ணனில்லாவிடிலோ தொல்லை. அதைவிடப் பெரும் தொல்லை. தனிமைத் தொல்லை.

        கண்ணனால் தொல்லைகளையும் துன்பத்தையும் அனுபவிக்கவேண்டும் அதை யசோதையிடம் சொல்லி மகிழவேண்டும் இதுதான் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தவர்களல்லவா கோபியர்.

 வசுதேவர் வருவதைக் கூடக் கவனிக்காமல் கோபத்துடன் தயிர் கடைந்து கொண்டிருந்தாள் யசோதை. வசுதேவரும் அவளைப் பார்த்து "ஏன் யசோதா, வழக்கம்போல உன் மகனைப் பற்றி யாரேனும் புகார் கொடுத்தார்களா?"என்றார் மெதுவாக.

      "வேறென்ன, இந்தக் கண்ணனுக்கு எவ்வளவு சொன்னாலும் தெரியவில்லையே. ஊர்வம்பையெல்லாம் விலைக்கு வாங்கி வருகிறான்."  "அப்படி என்ன செய்தானாம் கண்ணன்?"  

"ஒருத்தி புதுப் பாவாடையில் மண் அள்ளிப் போட்டான் என்கிறாள்.ஒருத்தி பின்னலைப் பிடித்து இழுக்கிறான் என்கிறாள். வேரொருத்தியோ  வாயில் கட்டெறும்பைப் பிடித்துப் போட்டுவிட்டான் என்கிறாள். கடைசியில் பழத்தைப் பறித்துக் கடித்து எச்சில் படுத்திக் கொடுத்தான் என்கிறாள் "

"இதோ பார். அந்த கோபியர் என்ன சொன்னார்களோ எனக்குத் தெரியாது.வேண்டுமானால் நீ  கண்ணன்   பின்னால் சென்று பார்."

"சரி உங்கள் சொற்படி நான் அவன் பின்னே சென்று பார்க்கிறேன் என்று வேகமாக வெளியே வந்த யசோதை தெருவில் தான் வருவது தெரியாமல் மறைந்து நின்று கண்ணனைப் பார்த்தாள்.

   தெரு முனையில் ஒருத்தி பின்னலை அசைத்துக் காட்டி நின்றாள். கண்ணன் தன்னைப் பாராமல் போகிறானே என்ற ஏக்கம் அவள் முகத்தில் தெரிந்தது.

சற்று தொலைவில் இன்னொருத்தி பாவடையை பிடித்துக் கொண்டு அழகுடன் நின்றால். அவளையும் கண்ணன் கவனியாதவன் போல் தலை குனிந்து நடந்தான்.

அதேபோல் சற்றுத் தொலைவில் கையில் பழத்தை வைத்துக் கொண்டு ஒருத்தி கண்ணனை வா வா என அழைப்பதைப் போல நின்றாள் இவர்களையெல்லாம் அலட்சியப் படுத்திவிட்டு ஒன்றுமறியாதவன் போல வீட்டுக்குள் நுழைந்தான் கண்ணன்.

           தன மகன் எவ்வளவு நல்லவனாக இருக்கிறான் இவனைப் பற்றி கோள் சொல்லும் கோபியரைக் கடிந்தவாறே  வீட்டுக்குள் நுழைந்த யசோதை தன மகனுக்கு திருஷ்டி சுற்றிப் போட்டாள்.

    கண்ணனும் கள்ளச் சிரிப்புடன் கோபியரோடு தாயும் ஏமாந்து போனதை எண்ணிப் புன்னகைத்துக் கொண்டான்.
       கண்ணனின் கள்ளத்தனம் நம்மையும் புன்னகைக்க வைக்கிறது இல்லையா.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 07 Mar 2014, 6:05 PM | Message # 57
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
பாண்டவர்களின் மதிநுட்பம்

பாண்டவர்களின் மதிநுட்பம்பாண்டவர்களும், கெளரவர்களும் இளம் வயதில் குரு துரோணாச்சாரியாரிடம் கல்வி பயின்றனர். குரு துரோணாச்சாரியார் அனைவரையும் சமமாகப் பாவித்து கல்வி புகட்டி வந்தார். தான் நடத்திய பாடங்களை மாணவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா? என்று அறிய வினாக்களை அவ்வப்பொழுது கேட்பார்.

பாண்டவர் தரப்பிலிருந்து தருமர், அர்ஜூனன், நகுலன், சகாதேவன், பீமன், ஆகியோர் அக்கேள்விகளுக்கு சரியான விடையளிப்பார்கள்.கெளரவர் தரப்பிலிருந்து துரியோதனன், அவன் தம்பியர்கள் தவறாக பதிலளிப்பார்கள். சில நேரங்களில் பதிலளிக்கமாட்டார்கள், எனவே, குரு பாண்டவர்கள் தரப்பிலிருந்து கேள்வி கேட்டு பதில் வரவழைக்க வேண்டியிருந்தது.

இதை தவறாகப் புரிந்துகொண்டு தம் தந்தை திருதராட்டிரனிடமும், தாத்தா பீஷ்மரிடமும், ஆசிரியர் எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை. பாண்டவர்களுக்கே சொல்லிக் கொடுத்து கேள்விகளைக் கேட்கிறார். என்று குற்றம் சுமத்தினான் துரியோதனன்.
 
திருதராட்டிரனும், பீஷ்மரும், குரு துரோணாச்சாரியார் இவ்வாறு பாரபட்சமாக நடந்துகொள்ளமாட்டார். நம்முடைய குழந்தைகளிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று பேசிக்கொண்டு குரு துரோணாச்சாரியாரிடம் நேரில் கேட்கச் சென்றனர்.

குரு அவர்கள் இருவரையும் வரவேற்று என்ன காரணமாக வந்தீர்கள்? என்று கேட்க துரியோதனன் தங்களிடம் கூறியதை துரோணாச்சாரியாரிடம் கேட்க,அதற்கு ஆசிரியர் நான் இரு தரப்பினரையும் சமமாகப் பாவித்து பாடம் நடத்தி வருகிறேன். பாடம் நடத்திய பிறகு அதற்குரிய வினாக்கள் கேட்கும்போது துரியோதனன் தரப்பில் விடை வருவதில்லை.

பாண்டவர்கள் உடனுக்குடன் விடையளிக்கின்றனர். எனவே நான் அவர்கள் பக்கம் கேள்விகளைக் கேட்டேன் என்றார். இருவரும் தம் பிள்ளைகளின் மனப்போக்கினை அறிந்து இரு தரப்பினருக்கும் ஒரு சிறு பரீச்சை வைத்துப் பார்க்கலாம் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
 
மறுநாள் காலை திருதராட்டிரனும், பீஷ்மரும் துரியோதனனையும் அவன் தம்பியையும் அழைத்து ஒறு சிறு பொருள் கொடுத்து இப்பணத்தை வைத்துக் கொண்டு வீடு நிறைந்து இருக்குமாறு செய், நாங்கள் நாளைக்கு வருகிறோம் என்று கூறிவிட்டுச் சென்றனர்.

இதேபோல பாண்டவர்களையும் பார்த்து துரியோதனனிடம் சொல்லிய கருத்துக்களையே சொல்லி நாளை வருவதாக தெரிவித்துச் சென்றனர்.
 
துரியோதனன் தன் மாமா சகுனியிடம் ஆலோசனை கேட்டான். அதற்கு சகுனி தம்பி துரியோதனா, உன் தந்தையிடம் பொக்கிஷத்தில் நிறைய பணம் உள்ளது. அதிலே பாதியை உன்னிடத்தில் கொடுத்திருக்கலாம். கஞ்சத்தனமாக உன் தந்தையும், தாத்தாவும் இச்சிறு பொருளை கொடுத்துள்ளனர்.

இப்பொருளைக் கொண்டு வீடு நிறைந்து இருக்குமாறு செய்வது கடினம். இருப்பினும், இப்பொருளுக்கு வைக்கோல் வாக்கினால் வீடு நிறைய அடுக்கி விடலாம் என்று யோசனை கூறினான்.அதற்கு துரியோதனன் சரி மாமா, சரியான நேரத்தில் தகுந்த யோசனையை சொல்லியிருக்கிறீர்கள்.

இந்த யோசனையை வேறு யாரிடமும் சொல்லவில்லையே என்று கேட்க, இல்லை என்று பதிலளித்தார் சகுனி. துரியோதனனும், சகுனியும் கையிலுள்ள பணத்திற்கு வைக்கோலை வாங்கி வீட்டை தாழிடமுடியாத நிலைக்கு அடுக்கி விட்டனர்.
 
பாண்டவர்கள் தங்களிடம் கொடுக்கப்பட்ட ஒரு சிறு தொகையை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்தனர். ஐவரும் சேர்ந்து வீட்டை புதுப்பித்தனர். வீடு வெள்ளையடிக்கப்பட்டது. கோலங்கள் போடப்பட்டன. மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டன. அறுசுவை உணவு தயாரிக்கப்பட்டது.

பன்னீரும், சந்தனமும் அறையில் வைக்கப்பட்டன. தட்டில் தாம்பூலம், பழம், இனிப்புகள் அலங்கரிக்கப்பட்டன. ஊதுவத்தி, சாம்பிராணி, புஷ்பம் இவைகளின் வாசனை மூக்கை துளைத்தது. கையிலுள்ள எஞ்சிய பொருளுக்கு அங்கவஸ்திரம் வாங்கப்பட்டது.

மறுநாள் காலை திருதராட்டிரரும், பீஷ்மரும் வருகை தந்தனர். பாண்டவர்கள் ஐவரும், பட்டு அங்கவஸ்திரம் அணிவித்து மலர் மாலைகளுடன் எதிர்கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர். பால், பழம் வழங்கப்பட்டது.

ஊதுவத்தி, சாம்பிராணி, சந்தனம் இவற்றின் மணம் மூக்கைத் துளைத்தது. அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. தாம்பூலம் வழங்கப்பட்டது. இருவரும் மெய்மறந்து போனார்கள். பாண்டவர்களின் அறிவுக் கூர்மையை பாராட்டினார்கள்.
 
நம்முடைய பிள்ளைகள் என்ன செய்திருக்கிறார்கள் பார்க்கலாம் என்ற ஆர்வத்துடன் திருதராட்டிரரும், பீஷ்மரும் துரியோதனன் வீட்டிற்குச் சென்றனர். துரியோதனன் தந்தையைப் பாரத்ததும் மிக்க மகிழ்ச்சியுடன் ஏன் அப்பா இவ்வளவு தாமதம்? தாத்தா உங்களை பாண்டவர்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றிருப்பார்.

ஏன் இப்படி தாத்தாவிற்கு ஓரவஞ்சினை? பாண்டவர்களுக்கு வீடு நிறைய பொருள் வாங்கி வைக்க எப்படித் தெரியும்? பாவம் பஞ்சப் பரதேசிகள் என்று தூற்றினான்.தம்பி துரியோதனா, வீடு நிறைந்து இருக்குமாறு செய்துவிட்டாயா? என்று இருவரும் கேட்க,

வீட்டை திறக்கமுடியாத அளவிற்கு நிறைத்துவிட்டேன் என்றுகூறி கஷ்டப்பட்டு கதவைத் திறக்க முயன்றான். பாதி கதவு கூட திறக்க முடியவில்லை. அந்த அளவிற்கு வைக்கோல் வாங்கி அடைக்கப்பட்டிருந்தது.துரியோதனனின் நிலையைப் பார்த்து அவர் தந்தையும், தாத்தாவும் வெட்கித் தலை குனிந்தனர்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Saturday, 08 Mar 2014, 7:46 PM | Message # 58
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தேவகியின் துயரத்துக்கு என்ன காரணம்?

மகாவிஷ்ணுவின் அவதாரமான ஶ்ரீகிருஷ்ணரை, குழந்தையாகப் பெறும் பாக்கியம் செய்தவர்கள் வசுதேவர் - தேவகி தம்பதி. அப்படிப்பட்டவர்கள் சிறையில் கிடந்து தங்கள் குழந்தைகளின் மரணத்தைப் பார்த்து ஏன் கதறி அழ வேண்டும்? அதற்குக் காரணம் இருக்கிறது.

தட்சனின் பெண்களான திதி, அதிதி இருவரும் மகரிஷி காச்யபரின் மனைவியர். இளையவள் அதிதிக்குப் பிறந்தவன் இந்திரன். மகா பராக்கிரமசாலி. திதிக்கும் இயல்பாகவே குழந்தை பெறும் ஆசை ஏற்பட்டது.

அவள் காச்யபரிடம், ‘‘இந்திரனைப் போல், சகல உலகங்களும் போற்றும் ஒரு குழந்தை எனக்குப் பிறக்க வேண்டும்!’’ என்றாள். ‘‘அப்படியானால், தேவி விரதத்தை முறைப்படி கடைப்பிடி!’’ என்றார் காச்யபர். அதன்படி விரதம் மேற்கொண்ட திதி, கருவுற்றாள்.

இதனால் அதிதியின் நெஞ்சில் வஞ்சம் குடி கொண்டது. பொறாமை மிகுந்த அதிதி, தமக்கையின் கருவை அழிக்கத் தீர்மானித்தாள். எனவே, தன் மகன் இந்திரனிடம், ‘‘பெரியம்மாவின் வயிற்றில் வளரும் குழந்தையால் உனது பதவிக்கு ஆபத்து ஏற்படும். சகல உலகமும் திதியின் குழந்தையைப் போற்றிப் புகழும்!’’ என்று கூறினாள்.

தனது பதவி பறி போகுமோ என்ற பயம் இந்திரனுக்கு வந்ததால் பெரியம்மாவின் மீதுள்ள பாசம் அவனிடம் மறைந்தது. எனவே, அந்த சிசுவைக் கர்ப்பத்திலேயே கொல்லத் தீர்மானித்து திதியை அணுகினான். திதி, சிறந்த தேவி பக்தை.

அதனால், நல்லவன் போல் நடித்து அவளுக்குப் பணிவிடை செய்து தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் இந்திரன்.

ஒரு நாள் பூஜை செய்து கொண்டிருக்கும்போது அசதியின் காரணமாக திதிக்குத் தூக்கம் வந்தது. எனவே, வாயைத் திறந்தவாறு தூங்கினாள் அவள். அப்போது இந்திரன் மிகவும் சிறிய உருவம் கொண்டு அவள் வாயினுள் நுழைந்து கர்ப்பப்பையை அடைந்தான்.

உள்ளிருந்த சிசுவை துண்டுகளாக்கினான். அதன் பின் அங்கிருந்து வெளியேறியவன், தன் தாய் அதிதியிடம் நடந்ததைத் தெரிவித்தான்.
கண் விழித்த திதி, கர்ப்பம் கலைந்ததை உணர்ந்தாள். ஆசையாகச் சுமந்த சிசு அழிந்து விட்டதை தங்கையிடம் தெரிவிக்க விரைந்தாள்.

அங்கே அதிதி, தன் மகனது தீரச் செயலைப் பாராட்டி மகிழ்வது கண்டு அதிர்ந்தாள். சகோதரியும் அவள் மகனுமே தன் சிசுவுக்கு எமன்களானதை அறிந்து கதறி அழுதாள்.

எனவே, ஆத்திரம் தாங்காமல் திதி, ‘‘நீ பெற்ற குழந்தைகளை, உன் கண் முன்பாக வரிசையாகக் கொல்வதைப் பார்க்கும் துர்பாக்கியசாலி ஆவாய். நீ சுமந்து பெற்ற மகனை வளர்க்க முடியாமல் தவிப்பாய். அப்படி நூறு மடங்கு புத்திர சோகம் உன்னைச் சேரட்டும்!’’ என்று சாபமிட்டாள்.

உடனே அதிதி, காச்யபரின் கால்களில் விழுந்து எல்லாவற்றையும் மன்னிக்குமாறு வேண்டினாள். அவளை திதியிடம் அழைத்து வந்தார் காச்யபர்.

இருவரையும் ஒரு சேரப் பார்த்த திதி, ‘காச்யபரும் இந்தக் கொடுஞ்செயலுக்கு உடந்தை!’ என்று கருதி, ‘‘என் தங்கைக்கு நான் இட்ட சாபம் உங்களையும் சேரும்!’’ என்றாள். ‘‘அவசரப்பட்டு விட்டாயே திதி!’’ என்று கலங்கிய காச்யபர், திதிக்கு ஆறுதல் கூறினார்.

திதி இட்ட சாபம்தான், பின்னாளில் அதிதி - காச்யபர் தம்பதியை, தேவகி - வசுதேவராகப் பிறக்க வைத்து துயரத்தில் துடிதுடிக்க வைத்தது.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Sunday, 09 Mar 2014, 7:18 PM | Message # 59
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
பீமன் கர்வம்

பீமன், திரௌபதிக்காக சௌகந்திக மலரைக் கொண்டுவரச் செல்கிறான் . அப்போது வழியில் ஒரு குரங்கு படுத்துக் கிடப்தை காண்கிறான். குரங்கின் வால் தனது பாதையில் குறுக்கே இருப்பதை கண்டு வாலை நகர்த்துமாறு குரங்கை அதட்டுகிறான்.

பீமனுக்கு தனது உடல் பலத்தில் இருந்த பெரும் நம்பிக்கை அங்கே ஆணவமாக மாறுகிறது. அதனை சரி செய்ய அனுமன் தன தம்பியுடன் விளையாடுகிறார்.

வயதானதால் தன வாலை தன்னால் நகர்த்திக்கொள்ள தனக்கு சக்தி போதவில்லை என்றும், முடிந்தால் பீமனை தாண்டி குதித்து செல்லச் சொல்கிறார் . மேலும் ஆத்திரம் அடைகிற பீமன் தாண்டி செல்ல மறுக்கிறான்.

நீ யார் என்று அனுமன் கேட்க, பீமன் , தான் குந்தியின் புதல்வன், சத்ரியன் என்றெல்லாம் சொல்கிறான்.
அப்போது என்னை எளிதாக நீ தாண்டி குதித்துவிட்டு போகலாமே என்று அவனை அனுமன் கிண்டல் செய்கிறார்.

அதை கேட்டு மிகவும் கோபம் அடைந்த பீமன், கடலையே தாண்டி குதித்த அனுமன் தனது அண்ணன் என்றும், இந்த சாதாரண வாலைத் தாண்டி குதிக்க ஒரு நொடி ஆகாது என்றும் கூறுகிறான்.

அப்படியானால் தன வாலை எடுத்து ஓரமாக ஒதுக்கி விட்டு செல்லுமாறு அனுமன் கூற, பீமன் வாலை நகர்த்த முயற்சிக்கிறான். தன முழு பலத்தை கொண்டு முயற்சித்தும் அவனால் அந்த வாலை ஒன்றுமே செய்ய முடியவில்லை.

எதிரில் இருப்பது வெறும் குரங்கு அல்ல என்று உணர்த்த பீமன், தன கர்வம் அடங்கி வணங்குகிறான்.

’நான் தான் உன் அண்ணன் அனுமன்’ என்று தனது விஸ்வரூபத்தை காட்டுகிறார் அனுமன். மேலும் பீமன் தேடி வந்த மலரை அடைய எளிய வழி ஒன்றையும் கூறுகிறார். தன அண்ணன் தன்னை அணைக்கும்போது பீமன் தன உடல் புத்துணர்வு பெறுவதை உணர்கிறான்.

அனுமன் அவனுக்கு வரம் அளிக்கிறார். தாம் மேற்கொள்ளும் மகாபாரதப் போரில் தமது வெற்றிக்கு உதவ வேண்டுகிறான் பீமன். அப்படியே அவரும் வரம் அளிக்கிறார். ”அர்ஜுனின் தேரின் மேலே பறக்கும் கொடியில் நானே அமர்ந்து உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தருகிறேன்” என்று அனுமன் அபயம் அளிக்கிறார்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Monday, 10 Mar 2014, 6:59 PM | Message # 60
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
'வெற்றி உங்களுக்கே!’

சகாதேவன் ஜாதக சாஸ்திரத்தை அறிந்தவன் என்பதால், துரியோதனன் அவனிடம் வந்து, 'யுத்தத்தில் நாங்கள் வெற்றி பெற வேண்டும். அதற்கு நீதான் தேதி குறித்துக் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டான். அமாவாசை நாளைக் குறித்துக் கொடுத்து, 'வெற்றி உங்களுக்கே!’ என்றான் சகாதேவன்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு வந்ததே கடும் கோபம்..! ''துரியோதனன், நம்மிடம் போர் செய்வதற்காகத்தான் தேதி குறிக்கச் சொல்கிறான். நம்மை வெல்வதற்காகத்தான் நல்ல நாள் பார்த்து தரச் சொல்லிக் கேட்டிருக்கிறான். அப்படியிருக்கும்போது, எப்படித் தேதி குறித்துக் கொடுக்கலாம் நீ? சரி... அந்தத் தேதி பொய்யான நாள்தானே?! தப்பான நேரத்தைத்தானே குறித்துக் கொடுத்தாய்?'' என்று கண்ணபிரான் கேட்டான்.

சகாதேவன் மெல்லியதாகச் சிரித்தபடி... ''ஜோதிட சாஸ்திரத்தைப் பொய்யாக எடுத்துரைப்பது பாவம்! அப்படிச் சொல்வது ஜோதிடத்தையே அவமதிப்பதாகிவிடும். ஒருநாளும் அப்படியரு தவற்றை நான் செய்யமாட்டேன். எனவே, நான் குறித்துக் கொடுத்த தேதியில், அமாவாசை திதியில் யுத்தம் செய்தால்... துரியோதனன் நிச்சயம் வெல்வான். நானும் என் சகோதரர்களும் தோற்கலாம்.

ஆனால், ஜோதிடத்தை நம் லாப- நட்டங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. ஜோதிட சாஸ்திரத்தில் இருந்து வழுவாமல் இருப்பது இந்த சகா தேவனின் வேலை. கள்ளத்தனம் செய்து, தகிடுதத்தம் பண்ணி, ஜெயிக்கச் செய்வது உன்னுடைய வேலை! அதை நீ பார்த்துக் கொள்!'' என்று பளிச்சென்று முகத்துக்கு நேராகச் சொன்னான் சகாதேவன்.

'அதெல்லாம் எனக்குத் தெரியும்’ என்று சிரித்துக்கொண்டே வந்த கண்ணபிரான், 14-ஆம் நாளான சதுர்த்தசியன்று, ஆற்றங்கரைக்குச் சென்று தர்ப்பணம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டான். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

 'இதென்ன குழப்பம்! நாளைக்குத்தானே அமாவாசை! கிருஷ்ண பரமாத்மா இன்றைக்குத் தர்ப்பணம் செய்கிறாரே...’ என்று பிரகஸ்பதியிடம் கேட்டார்கள். அதே நேரத்தில் சூரியனும் சந்திரனும் குழம்பிப்போன நிலையில் ஒன்று கூடினார்கள். புலம்பித் தீர்த்தார்கள். 'என்ன இது... ஒன்றுமே புரியவில்லையே..?’ எனத் தவித்து மருகினார்கள்.

இறுதியாக, ஸ்ரீகிருஷ்ணரிடமே சென்று, ''அமாவாசையன்றல்லவா தர்ப்பணம் செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள். உடனே, ஸ்ரீகிருஷ்ணர், 'முதலில் அமாவாசை என்றால் என்ன? அதைச் சொல்லுங்கள்?’ என்று கேட்டார் சிரித்தபடி. ''இதென்ன கேள்வி... சூரிய பகவானாகிய அவரும் சந்திரனாகிய நானும் சந்தித்துக் கொள்வதுதான் அமாவாசை திதி'' என்றார் சந்திர பகவான்.

''அதானே அமாவாசை? இதோ... சூரியன் - சந்திரன், நீங்கள் இரண்டு பேரும் இப்போது ஒன்றாகத்தானே இருக்கிறீர்கள்? எனவே, இந்தத் திதி அமாவாசை திதிதானே? அதனால்தான் தர்ப்பணம் செய்கிறேன்'' என்று குறும்புப் பார்வையுடன் சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர்.

அதுமட்டுமா? ''என் அனுஷ்டானத்துக்கு இடையூறு செய்யாதீர்கள். நான் அமாவாசை தர்ப்பணம் செய்யவேண்டும்'' என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென தர்ப்பணம் செய்வதில் ஈடுபட்டார் கிருஷ்ண பரமாத்மா.

பஞ்ச பாண்டவர்கள்(உண்மை) ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, எப்படி எல்லாம் தந்திரங்களைக் கையாண்டிருக்கிறார் கிருஷ்ணர் !!



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » தெரிந்த புராணம் தெரியாத கதை (புராண கதைகள்)
Search: