குறள் கதை - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » குறள் கதை (நீதி கதைகள்)
குறள் கதை
PattuDate: Monday, 17 Feb 2014, 4:59 PM | Message # 21
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை!

                  பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
                 அணியல்ல மற்றுப் பிற

 விளக்கம்:

பணிவான நடத்தை, இன்சொல் ஆகியவற்றைக் கொண்டவருக்கு மற்ற விலைமதிப்புள்ள அணிகலன்கள் தேவையில்லை.
 

 சிவநேசன் தன் இளமைப் பருவத்தில் சிறிய முதலீடு செய்து நகை வியாபாரம் செய்யத் தொடங்கினார். அவருக்கு மாணிக்கம் என்ற ஒரு மகன் இருந்தான்.

சிவநேசனுடைய நண்பரான ஆறுமுகம் தன் மகளான அருந்ததியை மாணிக்கத்திற்கு மணமுடிக்க விரும்பினார். சிவநேசனும் தன் மகனுடைய சம்மதத்துடன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்.

 மாணிக்கம் படித்து முடித்து, தன்னுடன் வியாபாரத்தில் துணை நின்று அனுபவம் பெற்ற பிறகே திருமணம் செய்து வைக்க விரும்பிய சிவநேசன், சில ஆண்டுகள் கழித்துத் திருமணத்தை நடத்துவதாக வாக்களித்தார்.

அந்தச் சில ஆண்டுகளில் எதிர்பாராத வண்ணம் சிவநேசனின் வியாபாரம் பிரமாதமாகச் செழித்தோங்க, அவர் பெரும் செல்வரானார். மாணிக்கமும் தன் தந்தையுடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டு நல்ல அனுபவம் பெற்றான்.

ஆனால் சிவநேசனின் மனப்போக்கில் திடீர் மாறுதல் ஏற்பட்டது. தன்னைவிடச் செல்வத்தில் குறைந்த தன் நண்பரின் மகளை, முன்பு வாக்களித்தவாறு தன் மகனுக்கு மணமுடிக்க அவர் தயாராக இல்லை.

ஆகவே, தன் மகனை அழைத்து அவனிடம், மாணிக்கம்! சில ஆண்டுகளுக்கு முன், எனது நண்பரின் மகளை உனக்கு மணம் முடிப்பதாக இருந்தேன்.

ஆனால், நாம் இப்போது அந்தஸ்தில் உயர்ந்து விட்டோம். நவகோடி என்னும் தங்க வியாபாரி ஏராளமான பொன் நகைகள் சூட்டி தன் மகளை உனக்குத் தர ஆசைப்படுகிறார்.

புண்ணியகோடி எனும் வைர வியாபாரி தன் மகளைத் தலைமுதல் கால் வரை வைர நகைகளால் அலங்கரித்து உனக்குத் தர ஆசைப்படுகிறார்.

ஆறுமுகமோ தன் மகளுக்கு ஒரு குன்றுமணியளவுக்குக் கூட தங்க ஆபரணம் சூட்ட வசதியற்றவர். ஆகவே அவருடைய மகள் வேண்டாம்! உன் அபிப்பிராயம் என்ன?” என்றார்.

அதற்கு மாணிக்கம், “மன்னிக்க வேண்டும் தந்தையே! வள்ளுவர் பெருமான் கூறியிருப்பதை நினைத்துப் பாருங்கள். பணிவான நடத்தையும், இன்சொற்களையும் அணிகலன்களாகப் பூண்ட ஆறுமுகத்தின் மகளுக்குப் பிற அணிகலன்கள் தேவையில்லை.

அத்துடன் ஏற்கனவே நாம் வாக்களித்து விட்டதால், அவர்களும் நம்மை நம்பி தங்கள் மகளுக்கு வேறு வரன் பார்க்காமல் காத்திருந்தனர். எனவே நான் அந்தப் பெண்ணையே மணம்புரிய விரும்புகிறேன்!” என்று கூறி விட்டான்.

தனது செய்கையை எண்ணி வருந்திய சிவநேசன் தன் மகனின் அருங்குணத்தைக் கண்டு மகிழ்ச்சியுற்று, திருமணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
NathasaaDate: Monday, 17 Feb 2014, 11:37 PM | Message # 22
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Xcellent one !!
 
PattuDate: Tuesday, 18 Feb 2014, 5:12 PM | Message # 23
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மறு உலகில் இன்பம் பெற...

                          அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
                          இவ்வுலகம் இல்லாகி யாங்கு.


 

விளக்கம்: 

செல்வம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் இன்பம் துய்க்க முடியாது. அதுபோல் அருள் இல்லாதவர்கள் மறு உலகில் இன்பம் துய்க்க முடியாது.

 சிவநேசன் செட்டியார் மிகப் பெரிய தனவந்தர். வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாய் கவனம் செலுத்தி தனது செல்வத்தை மென்மேலும் பெருக்கி வந்தார். ஆனால் அவருக்கு மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனையும், மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு இரங்கும் மனமும் சிறிதுங்கூட இல்லை.

தான் சம்பாதித்த பொருட்களினால் அரண்மனை போன்ற வீடும், ஏவலுக்கு நூற்றுக்கணக்கான பணியாளர்களும், நலபுலன்களும் வாங்கிச் சேர்த்து, வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து மகிழ்ந்தார். அவருக்கு ஒரேயொரு மகன் உண்டு.

தனது சொத்துகளெல்லாம் அவனைச் சேர வேண்டும் என்பதும், அவனும் தன்னைப் போல் சிறந்த வியாபாரியாகி செல்வத்தை இன்னும் பல மடங்குகளாகப் பெருக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.

ஆனால் அவர் மகனுக்கு எதிலுமே நாட்டம் இல்லை. செல்வம் சேர்ப்பதற்காக, தன் தந்தை நடந்து கொள்ளும் முறைகள் மற்றும் அவரது இரக்கமற்ற தன்மையால் மனமுடைந்தான். சிவநேசரின் முதிர்ந்த வயதில் அவன் வீட்டை விட்டு வெளியேறி காணாமற் போனான்.

தன்னுடைய சொத்துக்களின் ஒரே வாரிசான மகன் காணாமல் போனதால், சிவநேசன் துயரக்கடலில் மூழ்கினார். மன ஆறுதலுக்காக அவர் ஒரு யோகியைச் சந்தித்தார். சிவநேசரின் கதையை கேட்ட அந்த யோகி, “இதுவரை உன் வியாபாரம், உன் செல்வம் என்று சுயநல நோக்கத்தோடு பொருளை அள்ளி அள்ளிக் குவித்தாய். அவ்வாறு சேர்த்த செல்வத்தினால் இன்ப வாழ்க்கை நடத்தினாய்.

மற்றவர்களிடம் நீ கருணையே காட்டியதில்லை. மற்றவர்களுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்ளவில்லை. இப்போது, நீ கவலைப்படும் போது உன் செல்வங்கள் அனைத்தும் உனக்கு ஆறுதல் அளிக்கின்றனவா... இனி நீ உன் மறு உலகைப் பற்றி யோசி.

இதுவரை நீ சேர்த்த செல்வம் உன் உடன் வராது. யாருக்காக சொத்து சேர்த்தாயோ, அந்த மகனும் விலகி ஓடி விட்டான். இனியாவது மற்றவர்களுக்கு தான, தருமம் செய். மற்றவர்கள் மீது இரக்கம் காட்டு. அது ஒன்றுதான் உனக்கு மறு உலகிலும் இன்பத்தை அளிக்கும்.

அதை உணர்த்துவதற்காகத்தான், உன் மகன் உன்னை விட்டுச் சென்று விட்டான். கவலைப்படாதே! உன் செயல் முறைகளை மாற்றிக் கொள். உன் மகன் திரும்பி வருவான்!” என்றார். மனம் தெளிந்தவராக சிவநேசன் திரும்பினார்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 19 Feb 2014, 4:55 PM | Message # 24
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
அடுத்தவர் மனதைப் புண்படுத்தினால்...

                           மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
                           நோக்கக் குழையும் விருந்து


விளக்கம்:


முகர்ந்து பார்த்தாலே வாடி விடும் அளவுக்கு மென்மையானது அனிச்ச மலர். அது போல வீட்டுக்கு வந்த விருந்தினர்களைக் கண்டு முகம் சுளித்தால், அவர்களது மனம் உடனே புண்படும்.

நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சிவபாலன் கருணை உள்ளம் கொண்டவன். பொறுமைசாலி. ஆனால் அவன் மனைவி அன்னபூரணி அவனுக்கு நேர் எதிர்.யாரையும் மதிக்க மாட்டாள். தன் கணவனுக்குக் கூட சரியாக உணவளிக்க மாட்டாள்.  கருமித்தனமும், சோம்பேறித்தனமும் நிறைந்தவள்.

ஆனாலும் அவளை சிவபாலன் அனுசரித்து காலம் தள்ளினான். ஒரு முறை வயதான பாட்டி ஒருவர் நல்லூர் கிராமத்தின் வழியாகச் சென்றார். பசியினால் ஒரு மரத்தடியில் சோர்ந்து அமர்ந்தார். இதைப் பார்த்த சிவபாலன், அவர் மீது இரக்கம் கொண்டு தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

தன் கணவனுடன் வயதான பாட்டி வருவதைக் கண்டு எரிச்சலடைந்த அன்னபூரணி, அவனைத் தனியே வீட்டுக்குள் அழைத்துச் சென்று கடுமையாக திட்டினாள். ஆனாலும் அவளிடம் கெஞ்சி சமாதானப்படுத்திய பிறகு, பாட்டியை சாப்பிடுமாறு சிவபாலன் அழைத்தான்.

உள்ளே நடந்ததை கேட்டுக் கொண்டிருந்த பாட்டி, பசியின் கொடுமையால் வேறு வழியில்லாமல் சாப்பிடச் சென்றார். அப்போது "ஏய் கிழவி, உட்கார்ந்து தொலை. சோறு போடுகிறேன், கொட்டிக்கொள்" என கடும் வார்த்தைகளை அள்ளி வீசினாள்.

இதைக் கேட்டு மனம் வெதும்பிய பாட்டி, சாப்பிடாமல் வெளியேறினார். அவரை சமாதானப்படுத்த பின்னாலேயே சென்ற சிவபாலனிடம், ஒரு யோசனையைக் கூறினார் பாட்டி.

அதை ஏற்றுக்கொண்ட சிவபாலன், உடனே வீட்டுக்கு சென்று தான் துறவறம் செல்வதாகக் கூறி அனைத்து உடமைகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

அவனைத் தடுக்காத அன்னபூரணி, தன்னிடம் தேவையான நகைகள், பணம், தானியங்கள், இருப்பதால் கவலை இல்லை என இறுமாப்புடன் இருந்தாள்.

வேலைக்குச் சென்று சம்பாதித்துத் தந்த சிவபாலன் தற்போது இல்லாததால், வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு சமைத்து உண்டு வந்தாள் அன்னபூரணி.

ஒரு நாள் இரவு வீட்டுக்குள் புகுந்த திருடன், அவளது நகைகள், பணம் மற்றும் நெல் மூட்டைகளை கொள்ளையடித்தனர்.

தனியாக இருந்ததால் அவர்களை எதிர்த்து அன்னபூரணியால் எதுவும் செய்ய முடியவில்லை. நாட்கள் செல்லச் செல்ல சாப்பாட்டுக்கு மிகுந்த சிரமப்பட்டாள்.

அவளது குணம் தெரிந்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், ஒரு வாய் சோறு கூட போடாமல் சுடுசொற்களால் விரட்டியடித்தனர்.

 இதே போல தானும் மற்றவர்களிடம் நடந்து கொண்ட போது அவர்கள் மனம் என்ன பாடுபடும் என்பதை உணர்ந்த அன்னபூரணி, தன் செயல்களுக்காக மனம் வருந்தி தனிமையில் அழுது புலம்பினாள்.

அப்போது திடீரென அவள் முன் வந்த சிவபாலன், "கடும் வார்த்தைகளால் மற்றவர்களை புறக்கணிப்பதால் அவர்கள் மனம் புண்படுவதை நீ உணர வேண்டும் என்பதால் தான், துறவறம் செல்வது போல நடித்தேன்.

அதே போல, செல்வம் இருக்கும் மமதையில் யார் துணையும் வேண்டாம் என இருந்த உன்னுடைய செல்வங்கள் கொள்ளை போனதும் பழைய இறுமாப்புடன் உன்னால் இருக்க முடிந்ததா?" என அவளிடம் கேட்டான்.

தான் திருந்தி விட்டதாக தன் காலில் விழுந்த அன்னபூரணியிடம், களவு போன நகை, பணத்தைக் கொடுத்து, அவளுக்கு பாடம் கற்பிக்க தானே கொள்ளைக்காரன் வேடமணிந்து திருடிச் சென்றதாக தெரிவித்தான்.

அதன் பின் கணவனுடன் அன்பாக வாழத் தொடங்கிய அன்னபூரணி, பசி என்று வந்தவர்களுக்கு அறுசுவை உணவு படைத்து மகிழ்வித்தாள்.





Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 20 Feb 2014, 5:04 PM | Message # 25
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம்

                காதலக் காதல் அறியாமை உய்க்கிற்பின்
                ஏதில ஏதிலார் நூல்


விளக்கம்: 

“தனது நோக்கத்தைப் பகைவர் அறிந்துகொள்ளாமல் செயற்படுபவரிடம் பகைவரின் சூழ்ச்சிகள் பலிக்காது.”

  காஞ்சியை நோக்கித் தனது பெரும் படையுடன் போரிட வந்த புலிகேசி மன்னர், தனது பகைவரான மகேந்திர பல்லவரின் செய்கையைக் கண்டு வியப்புற்றார்.

வீரத்தில் சிறந்த மகேந்திரர் தன்னுடன் நேருக்கு நேர் மோதுவார் என்று எண்ணியதற்கு மாறாக, பல்லவச் சக்கரவர்த்தி கோட்டைக் கதவுளை மூடிவிட்டு உள்ளே பதுங்கிக் கொண்டது வியப்பை அளித்தது. மகேந்திரரின் செய்கை அவரது புதல்வரான நரசிம்மருக்கும் வியப்பை அளித்தது.

 அவர் தனது தந்தையை நோக்கி, “தந்தையே! பகைவனுடன் நேருக்கு நேர் மோதாமல் கோட்டைக்குள் பதுங்கியிருப்பது கோழைத்தனம் இல்லையா?” என்று கேட்டான்.

 இதைக் கேட்ட மகேந்திரர் தன் மகனை நோக்கி, “மகனே! இது கோழைத்தனம் அல்ல... இது ராஜதந்திரம்! புலிகேசியின் படையெடுப்பை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே, நம் நாட்டில் போர் என்பதே கிடையாது. இசையிலும், நடனத்திலும், இறைபக்தியிலும் பொழுதைக் கழித்த நான், படைகளைப் போருக்குத் தயாரான நிலையில் வைத்திருக்கவில்லை.

 இந்த நிலையில் போருக்குச் சென்றால், நாம் தோற்பது உறுதி. வீரம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை மாய்க்க நான் விரும்பவில்லை. நீ நினைப்பது போல் நாம் பதுங்கியிருக்கவில்லை.

போருக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நமக்கு உதவி செய்ய சோழ மன்னரையும், இலங்கை மன்னரையும் படைகள் அனுப்புமாறு ஓலை அனுப்பியுள்ளேன்.

 அவர்களுடைய பல்லாயிரக்கணக்கான வீரர்கள் வந்து சேரும் வரையில், நாம் கோட்டைக்குள் பதுங்கியிருக்க வேண்டும். நமது பகைவன் நமது நோக்கத்தை அறிந்து கொள்ளாமல், அவனிடமுள்ள பயத்தால் நாம் பதுங்கியிருப்பதாக நினைத்துக் கொள்வான்.

ஆனால், நமக்கு வெளியிடங்களிலிருந்து படை பலம் கிடைக்கும் வரையிலும், நம்முடைய படைகளைத் தயார் செய்து கொள்ளும் வரையிலும், நாம் செயலற்றிருப்பதுபோல் நடிப்போம். தகுந்த நேரம் வந்தவுடன் அவர்களுடன் நேருக்கு நேர் மோதுவோம்!” என்றார்.

மகேந்திர பல்லவர் கூறியது போல், அவருடைய நோக்கத்தை அறியாமல் பல மாதங்கள் காஞ்சியை
புலிகேசி மன்னர் முற்றுகையிட்டார். இறுதியில் மகேந்திரரின் ராஜதந்திரத்தில் சிக்கி, தன் முயற்சியில் தோற்று மகேந்திர பல்லவருடன் சமாதானம் செய்து கொள்ள நேரிட்டது.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 21 Feb 2014, 6:08 PM | Message # 26
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மன உறுதியின் பலன்

                        வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
                         உள்ளத் தனையது உயர்வு


 விளக்கம் : 

குளத்தின் நீர்மட்டம் எவ்வளவு உயர்ந்துள்ளதோ அந்த அளவுக்கு அதிலுள்ள தாமரை மலர்களும் உயர்ந்து காணப்படும். அது போல ஒருவனுடைய ஊக்கத்தையும், மன உறுதியையும் பொறுத்தே, அவன் வாழ்வில் உயர்வு ஏற்படும்.

 செந்தில் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்த இளைஞன். வசதியில்லாததால், தொடக்கப் பள்ளிக்குப் பிறகு படிப்பை பாதியிலேயே நிறுத்த நேரிட்டது. தாய், தந்தை, ஒரு சகோதரி என ஒரு குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு அவனுக்கு ஏற்பட்டது. அதற்காக கிராமத்தில் பண்ணையாரின் தோட்டத்திலிருந்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு போய், அவற்றை நகரத்தில் விற்று அதற்கான கூலியைப் பெற்று வாழ்க்கையை ஓட்டினான். ஏழ்மையால் சிரமப்பட்டாலும், செந்தில் ஊக்கம் நிறைந்தவன். தனக்கிருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்க்கையில் எவ்வாறு முன்னேறுவது என்பதைப் பற்றியே தீவிரமாக சிந்தித்து வந்தான்.

பண்ணையார் தோட்டத்து காய்கறிகளை வாங்கி விற்பதற்கு பதிலாக, தானே தன் வீட்டில் ஏன் தோட்டம் போடக் கூடாது என்று ஒருநாள் நினைத்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டான். தொடக்கத்தில் அது அவ்வளவு எளிதாக இல்லை. தரிசாகக் கிடந்த தோட்டத்து நிலத்தைப் பயன்படுத்தவே பல மாதங்கள் ஆயின. பல காய்கறிகளின் விதைகளை பண்ணையாரே மனமுவந்து அளித்தார்.

அடுத்து தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச வேண்டிய பிரச்சனை அவனை பயமுறுத்தியது. மிகவும் சிரமப்பட்டு, சிறிது செலவு செய்து ஒரு கிணறு தோண்டினான்.  தோட்டத்தைச் சுற்றி வேலி போட வேண்டியிருந்தது. இரும்பு வேலி போட கையில் காசு இல்லாததால், காட்டு முட் செடிகளை நெருக்கமாக நட்டு, ஓர் உயிர்வேலி தயாரித்தான்.

செந்திலின் குடும்பத்தாரும் அவனுக்கு மிகுந்த ஒத்துழைப்பைத் தந்தனர். செயற்கை உரங்கள் வாங்க பணமில்லாததால், அவனது தாயும் சகோதரியும் சேர்ந்து அரும்பாடுபட்டு இயற்கை உரங்களைச் சேகரித்தனர்.

ஒருவாறாக தோட்டத்தை உருவாக்கி விட்டான். தரிசான நிலத்தில் இயற்கை உரங்களைப் போட்டதால், விளைச்சல் நன்றாக இருந்தது. செந்திலின் குடும்பத்தினர் தோட்டத்தில் பாடுபட, அவன் ஓய்வின்றி நகரத்துக்குச் சென்று காய்கறிகளை விற்று வந்தான்.

 குறைந்த விலை மற்றும் தொடந்து விற்று வந்ததால், நகரத்தில் ஏராளமானோர் செந்திலிடம் மட்டுமே காய்கறிகளை வாங்கினர். இவ்வாறு சில ஆண்டுகள் கடினமாக உழைத்ததால், கிடைத்த லாபத்தில் தன் தோட்டத்தை இன்னும் பெரிதுபடுத்தினான். அடுத்த சில ஆண்டுகளில் நகரத்தில் காய்கறி கடையைத் திறந்து அதிக லாபம் ஈட்டினான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கிராமத்து பெரிய மனிதர்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்தான். இதற்குக் காரணம்,. அவனது மன உறுதியும் ஊக்கமும் தான்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Saturday, 22 Feb 2014, 5:17 PM | Message # 27
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
பொறாமை கொண்டதன் முடிவு

                    அழுக்காறென ஒரு பாவி திருச்செற்றுத்
                    தீயுழி உய்த்து விடும்


விளக்கம்:

மற்றவர்கள் மீது பொறாமை கொள்ளும் ஒருவன், தன் செல்வத்தையெல்லாம் இழந்து தீய வழிகளில் செயல்பட்டு சீர்குலைவான்.

தர்மலிங்கம் திருநின்றவூரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக் கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர். தர்மலிங்கம் வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார்.

ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்குப் போட்டியாக மாணிக்கம் என்ற வெளியூர் இளைஞன் ஜவுளிக்கடையைத் திறந்தான். இளைஞர்களையும், பெண்களையும் கவரும் படி புதிய வகை துணிகளை அவன் விற்பனை செய்ததால், மக்கள் அங்கு குவிந்தனர். தர்மலிங்கத்தின் வியாபாரம் மந்தமாகியது.

மாணிக்கத்தின் மீது பொறாமை கொண்ட  தர்மலிங்கம், அவன் வியாபாரத்தைத் தடுப்பதற்காக, விலை உயர்ந்த நவீன துணிமணிகளை இறக்குமதி செய்தார். கடையையும் பெரிதாக்கி, கண்கவரும் வகையில் அலங்காரம் செய்தார். சினிமா கலைஞர்களை வரவழைத்து தன் கடைக்கு விளம்பரம் செய்தார். இதனால் அவரது சொத்துக்கள் பெருமளவில் கரைந்தன. ஆனாலும் குறைந்த லாபத்தில் அதிக விற்பனை என்ற கொள்கையைக் கொண்டிருந்த மாணிக்கத்தின் கடையில் தான் அதிகமாக வியாபாரம் நடந்தது.

இதைக் கண்டு கொதித்த தர்மலிங்கம் வேறு வழியின்றி மிகக் குறைந்த லாபத்துக்கு துணிகளை விற்க முன்வந்தார். பல லட்ச ரூபாய் வாரியிறைத்து செய்த செலவுகளோடு விற்பனையை கணக்கிட்டுப் பார்த்தால், கடைசியில் நஷ்டம் தான் மிஞ்சியது. உடனே மாணிக்கத்தின் மீது பொறாமை கண்மூடித்தனமாக அதிகரிக்க, அவர் தன் சிந்திக்கும் திறனை இழந்தார். மாணிக்கத்தின் கடைக்கு தீ வைக்க, ஒரு கூலிப் படையை ஏவினார்.

ஒருநாள் இரவு மாணிக்கத்தின் கடை தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிமணிகள், பணம் என அனைத்தும் சாம்பலானதும் தான், தர்மலிங்கத்தின் மனது நிம்மதி அடைந்தது. ஆனால் மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், தீ வைத்த கூலிப் படையினரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் தர்மலிங்கத்தைக் காட்டிக் கொடுத்ததால், அவர் சிறையிலடைக்கப்பட்டார். அவர் கடையில் சீல் வைக்கப்பட்டது.

மாணிக்கம் தன் கடையை காப்பீடு செய்திருந்ததால், இழப்புத் தொகை கிடைத்தது, மீண்டும் வியாபாரத்தைத் தொடர்ந்தான். பொறாமையால் அறிவுக் கண் மூடப்பட்டு தீய வழியில் சென்று வெற்றி பெற நினைத்தால், கடைசியில் பெரிம் துன்பத்தையே சந்திக்க நேரிடும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Sunday, 23 Feb 2014, 5:44 PM | Message # 28
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
முன்கோபம் இருந்தால் கெட்டவனா?

குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

 
  ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.

 
முத்து வேறொரு பள்ளியிலிருந்து மாற்றலாகி வந்த சிறுவன். அவன் சேர்ந்த சில நாட்களிலேயே, அவனது கடுமையாகப் பேசும் குணத்தையும் அவனது முரட்டுத்தனத்தையும் கண்ட அவன் வகுப்பு மாணவர்கள் அவனிடமிருந்து விலகத் தொடங்கினர். பாடங்களில் அவனுக்கு சந்தேசம் ஏற்பட்டாலோ, நோட்டு புத்தகங்கள் தேவைப்பட்டாலோ யாரும் தருவதில்லை.

இப்படி அனைவரும் தன்னிடமிருந்து ஒதுங்கியிருந்து தன்னை ஒரு அன்னியனைப் போல் நடத்துவதைக் கண்டு முத்துவின் மனம் புண்பட்டது. அவன் வருத்தத்துடன் இருப்பதைக் கண்ட வகுப்பு ஆசிரியை அதற்கான காரணத்தை அவனிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டார்.

மறுநாள் வகுப்பில் ஆசிரியை மாணவர்களை நோக்கி, "நம் வகுப்பில் புதிதாகச் சேர்ந்துள்ள முத்துவிடம் யாரும் பழகுவதில்லையே...ஏன்?" என்று கேட்டதும் வகுப்பறையில் மவுனம் நிலவியது. ஒரே ஒரு மாணவன் மட்டும் எழுந்து நின்று, "முத்து ஒரு முரடன். அவனுக்கு நிறைய கோபம் வருகிறது. அதனால் எங்களுக்கு அவனைப் பிடிக்கவில்லை" என்றான். அதை அனைவரும் ஆமோதித்தனர்.

உடனே ஆசிரியர், "முத்துவைப் பற்றி உங்களைக் காட்டிலும் எனக்கு நன்றாகத் தெரியும். அவனிடமுள்ள ஒரே ஒரு குறைபாடு அவனது முன்கோபம் தான். ஆனால் அவனது உள்ளம் மிக மென்மையானது. பழைய பள்ளியில் தனது மதிய உணவை ஏழை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது அவனது வழக்கம். யார் என்ன உதவி கேட்டாலும் தயங்காமல் செய்வான்.

நேர்மையானவன். பாடங்களை முறையாகப் பயின்று நல்ல மதிப்பெண்களைப் பெறுபவன். அவனது ஒரே ஒரு குறையை மட்டும் கண்ட நீங்கள், மற்ற குணங்களைப் பார்க்கவில்லை. இனியாவது அவனிடம் மனம் விட்டு பழகுங்கள்" என்று அறிவுரை கூறினார்.

இதுவரை முத்துவின் முன்கோப குணத்தை மட்டும் அறிந்த மாணவர்கள், அவனது நற்குணங்களை அறியாமல் போனதற்கு வருந்தி, அன்றிலிருந்து முத்துவிடன் நட்புடன் பழகத் தொடங்கினர்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Monday, 24 Feb 2014, 5:00 PM | Message # 29
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
காலத்தால் செய்த உதவி

                                       காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
                                      ஞாலத்தின் மாணப் பெரிது


விளக்கம் :

மிகவும் தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும்.

மகேந்திரன் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பெரிய அதிகாரியாகப் பணிபுரியும் இளைஞன். அந்நகரத்தில் முக்கிய பிரமுகராகவும் மதிக்கப்ப்டுபவன். அந்நகரத்துக்கு அருகிலிருக்கும் நல்லூர் கிராமத்துக்கு ஆண்டுதோறும் சென்று, ஜீவானந்தம் எனும் முதியவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அங்கு செல்லும் போதெல்லாம் அவருக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து, வணங்கி விட்டு வருவான்.

நகரின் பெரிய செல்வந்தரின் மகளுடன் மகேந்திரனுக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மறுநாளே தன் புது மனைவியை அழைத்துக் கொண்டு நல்லூர் புறப்பட்டான்.  காரணம் கேட்ட மனைவியிடம், வயது முதிர்ந்த ஜீவானந்தம் திருமணத்துக்கு வர இயலாததால், அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்கு செல்வதாகக் கூறினான்.

"நேரில் சென்று ஆசி பெறும் அளவுக்கு அவர் உங்கள் நெருங்கிய உறவினரா? அல்லது உங்கள் தந்தையின் நெருங்கிய நண்பரா?" என அவன் மனைவி கேட்டாள். இதற்கு பதிலளித்த மகேந்திரன், "அதெல்லாம் இல்லை. சிறு வயதில் என்னை ஒருமுறை பள்ளிக்கு அழைத்துச் சென்றார்" என்றான். "இவ்வளவு தானா...இந்த சிறிய உதவிக்காகவா அவரிடம் ஆசி வாங்கச் செல்கிறீர்கள்?" எனக் கேட்டு சிரித்தாள்.

"சாதாரண உதவி என்று சொல்லாதே. என்னைப் பொருத்தவரை அது மிகப் பெரிய உதவி. அன்று எனக்கு பள்ளி இறுதியாண்டுத் தேர்வு. பள்ளிக்கு சைக்கிளில் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு கல்லில் இடறி தலை கீழாக விழுந்தேன். என்னால் எழுந்து நடக்க முடியவில்லை.

சைக்கிளும் பழுதாகி விட்டது. அப்போது அவ்வழியே அவசர வேலையாக சைக்கிளில் வந்த ஜீவானந்தம், என் நிலையை உணர்ந்து என்னை தன் சைக்கிளில் அமர வைத்து சரியான நேரத்தில் பள்ளியில் சேர்த்தார்.

 தனது அவசர வேலையைக் கூட மறந்து என்னை பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் கண்டிப்பாக நான் தேர்வெழுதியிருக்க முடியாது. அந்தத் தேர்வில் வெற்றி பெற்று பள்ளியிலேயே முதலாவதாக வந்தேன். .நான் ஏன் அவருக்கு நன்றி பாராட்டுகிறேன் என்று இப்போது புரிகிறதா?" என்றான் மகேந்திரன்.

இதைக் கேட்டு தன் தவறை உணர்ந்த மகேந்திரனின் மனைவி, அவனிடம் மன்னிப்பு கேட்டாள். பின்னர் இருவரும் ஜீவானந்தத்தின் வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றனர்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Tuesday, 25 Feb 2014, 4:50 PM | Message # 30
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
பேராசையால் பொய் பேசியதன் விளைவு!

                               தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
                               தன் நெஞ்சே தன்னைச் சுடும்.


விளக்கம்: 

மனமறிந்து பொய் பேசுவது தவறு. அப்படி பொய் பேசுபவனது மனசாட்சி அவனது வாழ்நாள் முழுதும் வாட்டி வதைக்கும்.

முனுசாமி வாடகை டாக்ஸி ஓட்டுபவன். குடும்பத்தை சிரமப்பட்டு நடத்தி வந்தான். வீட்டில் கலர் டிவி வாங்கித் தருமாறு அவன் மனைவி நச்சரித்து வந்தாள். ஆனால் போதுமான வருமானம் இல்லாததால், முனுசாமியால் டிவி வாங்க முடியவில்லை.

ஒருநாள் அவனது வண்டியில் பயணி ஒருவர் பதட்டத்துடன் ஏறினார். வண்டியை விரைவாக ஓட்டச் சொல்லி அவசரப்படுத்தியவர், வீடு வந்ததும் பணத்தைக் கொடுத்து விட்டு அவசரமாக இறங்கி உள்ளே சென்று விட்டார். சிறிது தூரம் சென்றதும் தேனீர் குடிப்பதற்காக ஓரிடத்தில் வண்டியை நிறுத்திய முனுசாமி, காருக்குள் பை ஒன்று இருப்பதைப் பார்த்தான்.

அது சற்று முன் அவசரமாக இறங்கிய பயணியின் பை என்பதை அறிந்து கொண்ட முனுசாமி, பைக்குள் சில மருந்துகளும்,  ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றும் இருப்பதைப் பார்த்து, டிவி வாங்குவதற்கு பணம் கிடைத்து விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். உடனே அந்தப் பையை சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்தான்.

 அடுத்த ஐந்து நிமிடத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபன், "எங்கப்பா, இந்த வண்டியில தான் வந்தார். வண்டியில இருந்து இறங்கியதும், ஒரு கருப்பு கலர் பையை காணவில்லை. அந்தப் பை ரொம்ப முக்கியமானது. வண்டியில் கொஞ்சம் பாருங்களேன்" என அவசரமாக கெஞ்சினான்.

ஆனால் பை ஏதும் இல்லை என பொய் சொல்லி அந்த வாலிபனை திருப்பி அனுப்பிய முனுசாமி, உடனடியாக வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். ஆனால் தந்தை, மகன் இருவரின் பதட்டத்தைப் பார்க்கும் போது, அந்தப் பையில் இருந்த மருந்துகள் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை உணர்ந்தான் முனுசாமி.

உடனே வண்டியைத் திருப்பி அந்தப் பெரியவர் இறங்கிய வீட்டுக்கு பையை எடுத்துச் சென்றான். அங்கு அந்தப் பெரியவரின் மனைவி இறந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். "சரியான நேரத்துல மருந்தை எடுத்துட்டு வந்திருந்தா அவங்கள பிழைக்க வச்சிருக்கலாம்" என்று அந்தப் பெரியவர் மகனிடன் டாக்டர் வருத்தத்துடன் கூறுவதைக் கேட்டு நிலைகுலைந்தான்.

ஒரு நிமிடம் பேராசைப்பட்டதால், ஓர் உயிரிழப்புக்கு காரணமாகி விட்டோமே என துடிதுடித்த முனுசாமியின் நிம்மதி, அன்று முதல் நிரந்தரமாக சீர்குலைந்தது.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » குறள் கதை (நீதி கதைகள்)
Search: