குறள் கதை - Page 4 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » குறள் கதை (நீதி கதைகள்)
குறள் கதை
PattuDate: Wednesday, 26 Feb 2014, 5:51 PM | Message # 31
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline

நா... காக்க!

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு


 விளக்கம்:

ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்திற்கு காரணமாகிவிடும்.”

  அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் நபர்களில் அரவிந்த் மிகக் கடுமையாகவும், திறமையாகவும் உழைப்பவன். இளைஞனான அரவிந்த் அந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்த போதிலும், பலரும் புகழும் படியாக தன் அலுவல்களைத் திறம்படச் செய்தான். மேலாளர் துரைசாமியே மனதிற்குள் அரவிந்தை பலமுறை வியந்து பாராட்டியிருக்கிறார்.

 அவரது பேச்சு, வார்த்தைகள் கடுமையாக இருக்குமே தவிர, இயல்பாகவே துரைசாமி நல்ல மனிதர். அரவிந்தின் திறமை, உழைப்பு ஆகியவற்றால் கவரப்பட்டு, அந்த ஆண்டு அவரே அவனுக்கு பதவி உயர்வு தருவதாகத் திட்டம் போட்டிருந்தார்.

அவர் மனதில் இருந்ததைப் பற்றி அறியாத அரவிந்த் ஒருநாள் அலுவலகத்தில் அவரைத் தனியே சந்தித்துப் பேசினான்.
"சார், உங்களிடம் ஒரு விஷயம் பேச அனுமதிப்பீர்களா?"

"சொல் அரவிந்த், என்ன வேண்டும்?" என்று கேட்டார் மேலாளர்.
"நான் வேலைக்குச் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன..."
"ஆகட்டும். அதற்கென்ன இப்போது?"
"நான்..... எனக்கு...... பதவி உயர்வு பற்றி...."

தான் நினைத்துக் கொண்டிருந்ததை அரவிந்த் நேரிடையாகக் கேட்டதை அறிந்து துரைசாமி ஆச்சரியப்பட்டார். இருந்தாலும் தனது சுபாவப்படி அரவிந்திடம் கடுமையாகப் பேச ஆரம்பித்தார்.

'பதவி உயர்வு தரும் அளவுக்கு நீ என்ன சாதித்து விட்டாய்?" என்று கேட்டார். அரவிந்தின் இள ரத்தம் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சூடேறியது. சார், என்னுடைய திறமையும் உழைப்பும் உங்களுக்கே தெரியும்" என்று கூறினான் அரவிந்த்.

"அவற்றைக் குப்பையிலே போடு. அவற்றால் அலுவலகத்திற்கு என்ன லாபம்?" என்றார் துரைசாமி. இதை கேட்டதும் அரவிந்துக்கு ஏனோ அன்று சுர் எனக் கோபம் வந்தது.

 "ஏன் லாபமில்லை? என்னுடைய உழைப்பை நன்றாக உறிஞ்சிவிட்டு ஏன் இப்போது இப்படிப் பேசுகிறீர்கள்?" என்று கோபத்தில் கத்தினான் அரவிந்த்.

தன்னைப் பற்றி அரவிந்த் இவ்வாறு நிதானம் தவறிக் கூறியதைக் கேட்டு துரைசாமியும் கோபம் அடைந்தார்.

"உன் போன்ற நாவடக்கம் இல்லாத ஆள் என் அலுவலகத்திற்குத் தேவையில்லை.உனக்கு பதவி உயர்வும் தர முடியாது, வேலையும்  கிடையாது. போ, வெளியே"என்று சீறி வெடித்தார்.  

பாவம், அரவிந்த்! கோபத்தில் நிதானம் இழந்து, தான் பேசிய சில வார்த்தைகளால் தனக்கு வரவிருந்த அரியவாய்ப்பைத் தானே கெடுத்துக் கொண்டு தன் வேலையையும் இழந்து விட்டான்.

அதனால்தான் வள்ளுவர் அப்பொழுதே நாவை கட்டுப்படுத்தி வாழச் சொல்லியிருக்கிறார்.
 



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 27 Feb 2014, 6:57 PM | Message # 32
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
உயிர்காத்த நண்பன்


                               உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
                               இடுக்கண் களைவதாம் நட்பு


விளக்கம்:


உடுத்திய ஆடை தளர்ந்தால் உடனே நமது கை எவ்வாறு விரைந்து செயல்பட்டு ஆடையை சரிசெய்கிறதோ, அதுபோல ஆபத்து நேரத்தில் மெய்வருத்தம் பாராமல் உடனே உதவி செய்வது தான் நட்புக்கு அழகு.

விஜயனும், சிவாவும் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்து பயின்று வந்தார்கள். இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். ஒருநாள் இரவுக் காட்சி சினிமாவுக்கு சென்று விட்டு இருவரும் பைக்கில் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.  சிவா வண்டியை ஓட்ட, விஜயன் பின்னால் அமர்ந்திருந்தான்.

நெடுஞ்சாலையில் வேகமாக ஓட்டிய சிவா, திடீரென நிலை தவறி சாலையில் தவறி விழுந்தான். தரையில் தலை பலமாக மோதியதால் ரத்தம் அதிகமாக வெளியேறி சிவா நினைவிழந்தான். பலத்த காயங்களுடன் தப்பிய விஜயன், தன் நண்பன் உயிருக்குப் போராடுவதைக் கண்டு மனம் பதைத்தான்.

உடனே தன் சட்டையைக் கழற்றி சிவாவின் தலையில் வைத்து அழுத்தியவாறே, உதவிக்கு யாராவது வருவார்களா என பதட்டத்துடன் சாலையில் அங்குமிங்கும் ஓடினான் ஆனால் நள்ளிரவு என்பதால் சாலை வெறிச்சோடி இருந்தது.  அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஒரு பைக்கை நிறுத்தி, நிலைமையை அழுகையுடன் எடுத்துக்கூறி உதவுமாறு விஜயன் கெஞ்சினான்.

விஜயனுக்கும் பலத்த காயங்கள் இருப்பதைப் பார்த்த அந்த நபர், "நண்பரே, உங்களுக்கும் அதிகமாக காயம் ஏற்பட்டுள்ளது. உடனே உங்கள் இருவருக்கும் சிகிச்சை தேவை. உங்கள் நண்பரை நடுவில் அமர வைத்து, பின்புறம் நீங்கள் அமர்ந்து கொண்டு அவரைப் பிடித்துக் கொள்ளுங்கள். வண்டியில் மூன்று பேர் செல்லக்கூடாது என்றாலும், ஆபத்துக்கு பாவமில்லை," என்று கூறி, இருவரையும் பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்தார்.

மருத்துவமனையில் சிவாவுக்கு திவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. தனது விடுதி நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்த விஜயன், சிவாவுக்கு தேவையான அளவு ரத்தம் செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்தான். மறுநாள் சிவாவுக்கு நினைவு திரும்பியது.

தனக்கு ஏற்பட்ட காயங்களைப் பொருட்படுத்தாது, ஒரு மாத காலம் தொடர்ந்து சிவாவுடன் நிழல் போல இருந்து அவனை கவனித்துக் கொண்டான் முற்றிலும் குணமடைந்த சிவா தன் நண்பன் விஜயனைப் பார்த்து, "உனக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் என் உயிரைக் காப்பாற்ற கடுமையாக போராடினாய். உன்னால் தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன். நீயல்லவா உண்மையான நண்பன்," எனக் கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தான்



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 28 Feb 2014, 5:37 PM | Message # 33
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தகுதியானவர் யார்?


தக்கார் தகவிலர் என்பதவரவர்
எச்சத்தாற் காணப்படும்


விளக்கம்:  

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ, அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.

குழந்தைகளுக்கான உடைகள் தயாரிக்கும் பெரிய நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாகியான கிருஷ்ணா தீவிர ஆலோசனையில் ஆழ்ந்திருந்தார். அதே நிறுவனத்தில் பொறுப்பான பதவி வகித்து வந்த அவருடைய மகள் ரம்யா, தன் தந்தை எதைப் பற்றி யோசிக்கிறார் என்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் அவரிடம், "என்ன யோசிக்கிறீர்கள் அப்பா?" எனக் கேட்டாள்.

"நமது நிறுவனத்தின் புதிய கிளையை பக்கத்து நகரத்தில் தொடங்க இருக்கிறோம் என்பது உனக்குத் தெரியும். நம்மிடம் பணிபுரியும் சூர்யா, திலீப் ஆகிய இருவரில் யாரை அந்தக் கிளைக்கு பொறுப்பேற்கச் செய்யலாம் என்று தான் யோசிக்கிறேன். திலீப் பெரிய குடும்பத்துப் பிள்ளை. பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்ற பட்டதாரி. நல்ல பேச்சுத் திறமை கொண்டவன்.

அவன் தந்தை எனக்கு நெருங்கிய நண்பர்.  அவனோடு ஒப்பிடுகையில் சூர்ய ஒரு சாதாரண பட்டதாரி. அதிகம் பேசாமல் அமைதியாக இருப்பவன். மிகச் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன். ஆனால் நமது விற்பனையை அதிகரித்ததில் பெரும் பங்காற்றியவன். இருவரும் ஒவ்வொரு விதத்தில் தகுதியானவர்கள். அதனால் தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியுள்ளது" என்றார்.

"இரண்டு பேரின் திறமையையும் கவனித்துள்ளேன். சூர்யா தான் நம் புதிய கிளையை நிர்வகிக்க தகுதியானவர்" என்றாள் ரம்யா. "அது எப்படி ரம்யா?" என்று கிருஷ்ணா கேட்டார்.

"அப்பா, கல்லூரியில் பட்டம் பெறுவது என்பது வேலை கிடைக்கத் தேவையான அனுமதி பத்திரம் மட்டும் தான்! பதவி உயர்விற்கான ஒருவனது தகுதியை அவனது சாதனைகளைக் கொண்டு மதிப்பிட வேண்டுமே தவிர, அவன் முன்பு பெற்ற பட்டத்தைக் கொண்டோ, பணக்கார குடும்பப் பின்னணியைக் கொண்டோ, அல்லது பேச்சுத் திறமையைக் கொண்டோ மதிப்பிடக் கூடாது.

 நம் விற்பனையை பன்மடங்கு பெருகச் செய்ததில் சூர்யாவின் சாதனை திலீப்பை விடப் பெரியது. எனவே இந்தப் பதவி உயர்விற்கு சூர்யா தான் தகுதியானவர்" என்று அடித்துக் கூறினார். "நீ சொல்வது தான் சரி" என்று கிருஷ்ணாவும் அதை ஆமோதித்தார்.


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Saturday, 01 Mar 2014, 5:49 PM | Message # 34
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
எது சிறந்தது - அன்பா, செல்வமா, வெற்றியா?


அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு


அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும். இல்லையேல் ,அது வெறும் எலும்புத்தோல் போர்த்திய வெறும் உடலாகும். சுருங்கச் சொன்னால்..அன்பு மனம் கொண்டவர்களே மனிதர்கள் ஆவர்.

 
ஒரு ஊரில் கோபு  தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான். அப்போது அவன் வீடட்டின் முன் மூன்று நபர்கள் வந்து ' உள்ளேவரலாமா ' என்று கேட்டனர்.

கோபுவின் தந்தை 'வாருங்கள்' என்றார்.

ஐயா! 'நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது!. யாராவது ஒருவர் தான் வரமுடியும்.

என் பெயர் பணம்...இவர் பெயர் வெற்றி...இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்.. எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்' என்றார் பணம் எனப்படுபவர்.

கோபுவின் தந்தை ' வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்' என்றார்.

ஆனால் கோபுவோ ...'அப்பா! பணத்தையே உள்ளே அழைக்கலாம் நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்...எல்லாவற்றையும் வெற்றி உட்பட அனைத்தையும் வாங்கலாம்' என்றான்.

ஆனால் கோபுவின்  தாயோ 'வேண்டாம் அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்' என்றாள்.

பின் மூவரும், 'அன்பு உள்ளே வரட்டும்' என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர். உடனே கோபுவின் அம்மா'அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்' என்றார்.

அன்பு சொன்னார்,' நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம். ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்..நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்'

அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாழ்வில் வெற்றியும்,தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.

அன்பே சிவம்...அன்பே முக்கியம்



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Sunday, 02 Mar 2014, 6:00 PM | Message # 35
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
கூடா நட்பு கேடாய் முடியும்.

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.


மீண்டும் மீண்டும் ஆராயாமல் கொள்கிற நட்பு, கடைசியில் ஒருவர் சாவுக்குக்
காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.


சங்கமித்திரன் என்ற அரசன் ஒரு நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு குரங்குகள்
என்றால் மிகவும் பிரியம். ஆகையால் தன் அறைக்குள்ளேயே ஒரு குரங்கை வளர்த்து
வந்தான். தன் படுக்கையறைக்குள் வருமளவுக்குச் சுதந்திரம் அளித்து
வைத்திருந்தான் சங்கமித்திரன்.

ஒரு நாள் அரசவையில் அதன் அட்டகாசம் தாங்காது அமைச்சர்களும் மற்றவர்களும்
குரங்கின் நட்பை விட்டுவிடுமாறு கூறினார்கள். அவர்களது அறிவுரையை ஏற்கவும்
மறுத்தான் சங்கமித்திரன்.

ஒரு நாள் இரவில் தான் தூங்கப் போகும் போது குரங்கை தனக்கு விசிறி விடுமாறு
சொல்லிவிட்டு ஆழ்ந்து தூங்கிப் போனான் அரசன். அப்போது ஒரு ஈ ஒன்று அவன்
கழுத்தில் வந்து அமர்ந்தது. விசிறியால் மீண்டும் மீண்டும் விசிறியும் ஈ
பறக்காமல் அமர்ந்திருந்தது.

இதனால் கோபம் கொண்ட குரங்கு, "உன்னைக் கொன்று
விடுகிறேன் பார்" என்று சொல்லி அரசனின் வாளால் அரசனின் கழுத்தில் அமர்ந்திருந்த
ஈயை வெட்ட வாளை ஓங்கி வீசியது. அரசனின் கழுத்து துண்டானது.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Monday, 03 Mar 2014, 5:15 PM | Message # 36
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
பொய்யா விளக்கு

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.


புற இருளை நீக்குகின்ற சூரியன்,சந்திரன்,தீபம் போன்ற விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல.அகத்தே ஏற்றப்படுகின்ற "உண்மை" என்னும் விளக்கே சான்றோர்களுக்கு அழகு தருவதாகும். 

இராமகிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது சுமார் ஒன்பது வயதில், அவரது பிறந்த குலவழக்கப்படி, அவருக்குப் பிரம்மோபதேசம்,அதாவது பூணூல் போட்டு ஆன்மீக உபதேசம் செய்யும் உபநயனச் சடங்கு நடந்தது.அதில்,பூணூல் போட்ட சிறுவன்,மற்றவர்களிடம் பிச்சை எடுக்கவேண்டும் என்று ஒரு கட்டம் உண்டு.

பிச்சை ஏற்கும் கட்டம் வந்ததும்,இராமகிருஷ்ணருக்குத் தான் கொடுத்த வாக்கு ஒன்று நினைவிற்கு வந்தது.தனது அன்னைக்குப் பலவகையிலும் உதவி செய்து அன்னையின் அன்பிற்குப் பாத்திரமாக நடந்து வந்தாள் தானி என்னும் ஒரு கருமானின் மனைவி.அவள் தன்மேல் அன்பு காட்டியதன் விளைவாக,"உபநயனத்தன்று,என்னிடம் பிச்சை ஏற்பாயா?" என்று கேட்டதற்கு,"ஏற்பேன்" என்று வாக்களித்தார் இராமகிருஷ்ணர்.

அந்த வாக்கு இப்போது நினைவிற்கு வந்தது. அண்ணாவிடம் அதைக்கூறி,அவளிடமிருந்துதான் முதலில் பிச்சை ஏற்கப் போவதாகக் கூறினார்.உடனே அண்ணா வெகுண்டார்,"தாழ்ந்த குலப் பெண்ணிடம் பிச்சை ஏற்பது மரபல்ல" என்றுகூறி "அவளிடம் பிச்சை ஏற்கக்கூடாது" என்றார்.

ஆனால் இராமகிருஷ்ணர்,"அவளுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன்.கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்றால் நான் உண்மை நெறியினின்று தவறியவன் ஆவேன்.உண்மை நெறியை நான் கடைப் பிடிக்கவில்லை என்றால் இந்தப் பூணூல் அணிவதால் பயன் ஏதும் இல்லை" என்று கூறிப் பிடிவாதமாக தானியிடமிருந்து பிச்சை ஏற்றுத் தன வாக்கினைக் காப்பாற்றினார்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Tuesday, 04 Mar 2014, 5:04 PM | Message # 37
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
சாதலின் இன்னாதது இல்லை


சாதலின் இன்னாதது இல்லை இனிததூம்
ஈதல் இயையாக் கடை.


இறப்பை விடக் கொடிய துன்பம் தருவது எதுவும் இல்லை.ஆனால் தன்னிடம் இரப்பவர்க்கு எதுவும் கொடுக்க இயலாதபோது இறப்பும் இனிமை உடையதாகும்.

குமணன் என்பவன் வள்ளல்களில் ஒருவன்.இவன் இரப்பவர்க்கு இல்லையென்னாது வாரிக்கொடுக்கும் வள்ளன்மை கொண்டிருந்தான்.குமணன் பலருக்கும் பொருள் கொடுத்து உதவுவது அவனுடைய தம்பி இளங்குமணனுக்குப் பிடிக்கவில்லை.அவன் பலவகையிலும் தன் அண்ணனுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான்.

பிறகு சூழ்ச்சியால் ஆட்சியைக் கவர்ந்தான். தன் அண்ணன் குமணனைக் காட்டிற்கு விரட்டிவிட்டான்.பிறகு அண்ணன் திரும்பி வராமல் இருக்க, அவனைக் கொன்று தொலைக்கவும் ஏற்பாடு செய்தான். தன் அண்ணனுடையத் தலையைக் கொண்டு வருபவர்களுக்குக் கோடி செம்பொன் வழங்குவதாகவும் பறை அறிவித்தான்.இச்செய்தி காட்டிலிருந்த குமணனுக்குத் தெரிந்தது.

ஒருநாள் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர், பரிசில் பெறக்கருதி காட்டில் இருந்த குமணனிடம் சென்றார்.தம் வறுமை நிலையை எடுத்துரைத்தார்.புலவரின் வறுமை நிலை அறிந்து குமணன் மிகவும் வருந்தினான்.புலவரிடம் கொடுப்பதற்கு தன்னிடம் பொருள் இல்லையே என்று ஏங்கினான்.

பிறகு தன்னுடைய தம்பி தன்னுடைய தலைக்குக் கோடி செம்பொன் கொடுப்பதாகக் கூறியிருத்தலை எண்ணி மகிழ்ந்தான்."நாம் இறந்த பிறகு நம்முடைய தலை வீணாகப் போகப்போகிறது. அதனை இப்பொழுது இப்புலவருக்கு கொடுத்தால் இவருடைய வறுமை நீங்கி நலமுறுவார். நமக்கும் புகழுண்டாகும்,

புலவருடைய வறுமையைப் போக்காத நாம் உடலைத் தாங்கிக் கொண்டிருத்தலால் என்ன பயன்?"என்று எண்ணினான். தன்னுடையத் தலையைக் கொய்து கொண்டுபோய் தம்பியிடம் கொடுத்துக் கோடி செம்பொன் பெற்றுக் கொள்ளுமாறு கூறினான்.

ஆனால் புலவர் குமணனை கொல்ல விரும்பவில்லை.குமணன் தந்த வாளோடு அவன் தம்பி இளங்குமணனிடம் சென்றார். "யான் உன் தமையனைக் கண்டு பாடினேன்.அவன் தான் நாடு இழந்த துன்பத்தைவிட எனக்குப் பொருள் தராத துன்பத்தைப் பெரிதாக எண்ணினான்.

தன்னிடம் வேறு பொருள் இல்லாததால் தன் தலையைக் கொய்து கொள்ளுமாறு வாளை என்னிடம் தந்தான்.அதனுடன் நான் வந்தேன்"என்று கூறினார்.

பிறகு "இவ்வுலகத்தில் நிலைபெற விரும்பியவர் புகழை நிலைநிறுத்திச் சென்றனர்.மற்றவர் இரந்தவர்க்கு வேண்டியன தராது இவ்வுலகத்தில் தொடர்பின்றி மறைந்தனர்." என்று உரைத்தார்.இளங்குமணன் மனம் திருந்தினான், தன் அண்ணனை அணுகித் தன் மனமாற்றத்தை உரைத்து திரும்ப அழைத்து வந்து நாட்டை ஆளச் செய்தான்.





Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 05 Mar 2014, 7:01 PM | Message # 38
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
 மாறிய மனம்

பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.

பரமசிவம் அவன் பெற்றோருக்கு ஒரே பையன். மிகவும் செல்லமாக வளர்ந்து வந்தான்.அவன் அப்பா அவன் கேட்டதையெல்லாம் வாங்கித்தருவார். அவன் அம்மாவோ சாப்பிட அவன் விரும்பியதையெல்லாம் செய்து தருவார். அதனால் கஷ்டம் என்பதே என்னவென்றே அறியாமல் வாழ்ந்து வந்தான்.

அவன் அம்மா காய்ச்சலால் துன்பப்படும்போது கூட கவலைப்படாமல் தனக்கு வேண்டிய தின்பண்டத்தைச் செய்து தரச் சொல்லி ரகளை செய்வான்.

அவன் மனம் எப்போதும் எதைப் பற்றியும் கவலைப் பட்டதே இல்லை.அவனும் யாரையாவது துன்பப்படுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைவான் .நாய் கல்லடிபட்டு நொண்டிச் செல்வதையும், ஓணான் கயிற்றில் கட்டப்பட்டுத் துடிப்பதையும் பார்த்து மகிழ்வான்.

அந்த ஊரில் அழகு தரும் பொன்னியாறு ஓடிக்கொண்டிருந்தது.சிறுவர்கள் விடுமுறை நாட்களில் அந்த ஆற்றில் நீந்திக் குளிப்பது வழக்கம். வயிறு பசிக்கும்போதுதான் வீட்டு நினைவு வரும். அதுவரை நீந்திக் கொண்டிருப்பார்கள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பரமசிவம் அவன் நண்பர்களுடன் ஆற்றங்கரைக்கு வந்தான். உச்சி வேளையாதலால் ஆற்றில் கூட்டமில்லை. ரவி என்ற பையன் "டேய், கூட்டமில்லாமல் இருக்கு. நல்லா நீந்தலாம்டா. வாடா குளிக்கலாம்." என்றபடியே ஆற்றில் இறங்கினான். ராமு "ஊஹூம், நான் மாட்டேன். எனக்கு நீந்தத் தெரியாது."என்றபடியே தள்ளி நின்றான்.

அந்த ஆண்டுதான் அவர்கள் அந்த ஊருக்கு வந்திருந்தார்கள். அவன் அப்பா ஒரு வங்கி அதிகாரி. ஆனால் பரமசிவம் அவன் கையைப் பற்றி இழுத்தான்."பயப்படாதே. நான் உனக்கு நீந்தக் கத்துக் குடுக்கறேன். வா" ராமுவுக்கும் அவர்களைப்போல நீருக்குள் அமிழ்ந்து விளையாட ஆசையாக இருந்ததால் மெதுவாக ஆற்றில் இறங்கினான். பத்து நிமிடமாக அவனை இழுக்க முயற்சித்தவனுக்குத திடீரென அவனைத் துன்புறுத்திப் பார்க்க ஆசை வந்துவிட்டது.

முழங்கால் அளவு நீரில் நின்றவனை கையைப் பற்றி இழுத்து நீருக்குள் தள்ளிவிட்டான். பயந்து போன ராமு பதறியபடி எழ முயன்றான்."டேய், இப்படியெல்லாம் பண்ணாதே....." என்றபடியே பயத்துடன் கரையை நோக்கி நடந்தான் .அவனை பரமசிவம் மீண்டும் இழுத்து நீருள் தள்ளினான்.

"ஆ, ஆ, என வாயைப் பிளந்தபடியே நீருக்குள் தவிக்கும் ராமுவைப் பார்த்துச் சிரித்தான் பரமசிவம்.
அவனது தவிப்பைப் பார்த்து ரசித்தான். தன்னைக் காத்துக் கொள்ள ராமு படும் துன்பத்தைப் பார்த்துக் கை கொட்டிச் சிரித்தான்.

அப்போது ரவி பரமசிவத்தின் காதில் நீரை ஊற்றவே அவனிடம் சண்டைக்குப் போனான். அந்தசமயம் ராமு கரையேறி மணலில் படுத்துக் களைப்பைப் போக்கிக் கொண்டான்."சே, என்ன நண்பன் இவன், உயிருக்குப் போராட வைத்து விட்டானே. இனிமேல் இவனுடன் சேரவே கூடாது." என்று எண்ணியவன் தன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் பின்னால் பரமசிவம் "டேய், பயந்தாங்குளி ஓடுடா ஓடு..." என்று சிரிப்பதை ராமு பொருட்படுத்தவேயில்லை.

ஐந்து நாட்கள் கழிந்தன. அன்று சனிக்கிழமை. பள்ளி பிற்பகல் விடுமுறை.சாப்பிட்டுவிட்டு ஊரைச் சுற்றி வந்தான் பரமசிவம். தெருக்கோடியில் ஒரு வீடு. அது ஒரு கிட்டங்கி.வீடு முழுவதும் வெல்ல மூட்டைகளை அடுக்கியிருப்பார்கள். வீட்டு வாயிலில் வெல்ல வாசனை கும்மென்று அடிக்கவே மெதுவாக உள்ளே நுழைந்தான்.

உள்ளே வெல்லம். அச்சு வெல்லம் பனைவெல்லம், மண்டைவெல்லம், என வகை வகையாகப் பார்த்தவனுக்கு நாக்கில் நீர் ஊறியது வெல்ல கட்டிகளை எடுத்துத் தன் பாக்கெட்டில் நிரப்பிக் கொண்டான். வேண்டியமட்டும் தின்றான். திடீரென்று அவன் மீது ஏதோ விழுந்தது.

 பயந்து போனவனாய் "ஐயோ, அம்மா "என அலறினான். மேலும் இரண்டு எலிகள் மேலே விழவே துள்ளி ஓடினான். இரண்டு எலிகள் அவனைக் கீறிவிட்டு ஓடின. பயந்து போன பரமசிவம் அறையை விட்டு வெளியே வந்தான். வீடு ஒரே இருட்டாய் இருப்பதைப் பார்த்து மேலும் பயந்தான்.

"ஐயோ, இதென்ன இவ்வளவு இருட்டா இருக்கு. கொஞ்ச நேரம் முன்னே வெளிச்சம் இருந்துதே!. இப்போ வாசற்படியே தெரியலியே.ஐயோ, அம்மா, அம்மா..."அலறினான் பரமசிவம். அவனையும் வெல்ல மூட்டை என எண்ணிய எலியும் பெருச்சாளியும் அவன் மேலே விழுந்து கீறின.உடம்பில் எரிச்சல்.

 மனதில் பயம், காற்றில்லாததால் திணறினான். அவன் வரும்போது திறந்திருந்த கதவை அவன் உள்ளே இருக்கும் போது யாரோ மூடிவிட்டுச் சென்று விட்டார்கள். இதை உணர்ந்து கொண்ட பரமசிவன் அலறினான்."யாராவது என்னைக் காப்பாத்துங்க. பயமா யிருக்கு யாராவது வாங்க.ஐயோ, அம்மா..."வெகுநேரம் அலறியவாறு இருந்தான். வியர்வையில் அவன் சட்டை முழுவதும் நனைந்து விட்டது.

வெல்லம் சாப்பிட்டதால் மிகுந்த தாகமும் ஏற்பட்டது. இருட்டறையில் தண்ணீர் எப்படிக் கிடைக்கும்? ஒரு நிமிடம் போவது கூடக் கடினமாக இருந்தது.அப்போதுதான் அவன் மனம் சிந்திக்கத் தொடங்கியது. "காற்றுக்காக நான் இப்போது தவிக்கிறேனே இப்படித்தானே ராமுவும் அன்று தவித்திருப்பான்.

மீண்டும் மீண்டும் அவனை நீருக்குள் தள்ளி வேடிக்கை பார்த்தேனே. அவனின் துன்பம் கண்டு சிரித்தேனே....கடவுளே! நான் செஞ்சது தப்புதான். என்னை மன்னிச்சுடு. இனிமேல் யாரையும் துன்புறுத்த மாட்டேன். என்னைக் காப்பாத்து." மனமிரங்கி அழுதான். கதவைத் தேடிப் பிடித்து படபடவெனத் தட்டினான்.

திடீரெனக் கதவு திறந்தது. இரண்டு பேர் உள்ளே நுழைந்தனர். பாதி மயக்கத்தில் சரிந்து உட்கார்ந்திருந்த பரமசிவத்தைப் பார்த்து அவனைத் தூக்கி வெளியே அமர்த்தினர்."நீ ஏண்டா உள்ளே போனே? வெல்லம் திருடவா?" "வேற எதுக்குப் போவான் படிக்கவா போவான்?"

"ஏலே, வெல்லம் திருடி! உங்கம்மா உன்னைக் காணோமின்னு ரொம்ப நேரமா தேடிக்கிட்டிருக்காங்க. நீ இங்க வந்து மாட்டிகிட்டிருக்கே பொறியிலே அகப்பட்ட எலி மாதிரி."

"நல்ல வேளை பூட்டு சரியாப்பூட்டியிருக்கான்னு பாக்க வந்தது நல்லதாப்போச்சு. இல்லையின்னா நாளைக்கு ஞாயித்துக்கெழமை பூராவும் இவன் உள்ளாறவே இருந்துருக்கணும். ஏலே, பெருச்சாளி எலி கடிச்சுதாலே?" "ஆமா."பரமசிவம் அழுதுகொண்டே சொன்னான்.வெளிக்காற்று உடம்பில் பட்டதும் புத்துணர்ச்சி பெற்றான்.

"அண்ணாச்சி.வெல்லம் தின்கிற ஆசையிலே உள்ளே போயிட்டேன்.மன்னிச்சுடுங்க இனிமே இப்படிச் செய்ய மாட்டேன்."சிவந்த கண்களைத் துடைத்தவாறே சொன்னான் பரமசிவம்.
"போடா, போய் உங்கம்மாவைப் பாரு. பாவம் எங்கெங்கயோ தேடிக்கிட்டு இருக்காங்க. இந்தா. இந்த வெல்லக்கட்டியை எடுத்துக்கிட்டுப் போ."

ஒரே ஓட்டமாக ஓடினான் வீட்டுக்கு. ஊரெங்கும் தேடி விட்டு பிள்ளையைக் காணோமென்று அழுதுகொண்டிருந்த அம்மாவின் மடியில் தலை வைத்துக கொண்டவனுக்கு தான் எவ்வளவு துன்பப் பட்டோம் என்பது புரிந்தது.

அம்மாவின் மடி அவனுக்கு சுவர்க்கமாக இருந்தது. மற்றவர் துன்பத்தை நினைத்துப் பார்க்காததால்தான் துன்பப் படுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சியைக் கண்டேன். இனி அனைவரையும் நேசிக்கக் கற்றுக் கொள்வேன்.யாரையும் கஷ்டப்படுத்தவே மாட்டேன்.என்று அம்மாவின் மடியில் தலைவைத்தவன் தனக்குள் உறுதி பூண்டான்.

பரமசிவனின் மனம் மாறியதை அறியாமலேயே அவன் கிடைத்து விட்டதற்காக மகிழ்ந்தார் அவன் அம்மா.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 06 Mar 2014, 5:32 PM | Message # 39
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
நாவடக்கம் வேண்டும்! 

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நின்றாகாதாகி விடும்.


விளக்கம்:

"ஒரு குடம் பாலில் துளி நஞ்சு போல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லானால் அதுவரை கூறிய நல்ல சொற்கள் பயனற்றுப் போய்விடும்.”

ரவீந்திரன் ஒரு வேலையில்லாப் பட்டதாரி. எத்தனையோ நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்றும், நாவடக்கமின்றி பதில் கூறியதால் எங்குமே வேலை கிடைக்காமல் போயிற்று. அவன் தந்தை அவனுக்கு எத்தனையோ முறை நாவடக்கத்தைப் பற்றி அறிவுரை அளித்தும், தேர்வு நேரத்தில் அவனையும் அறியாமல் ஏதாவது ஏடாகூடமாக பதில் அளித்து விடுவான்.

இப்படியே நீண்ட நாட்களாக வேலை கிடைக்காததால் ரவீந்திரன் ஒருநாள் தன்னை முழுவதுமாக மாற்றிக் கொள்ள முடிவு செய்தான். கேள்வி கேட்பவர் தாறுமாறாகக் கேட்டாலும், பொறுமையுடனும் பணிவுடனும் பதில் அளிக்கத் தீர்மானித்தான். சில நாட்களிலேயே அவனுக்கு ஒரு நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்தது.

அவன் பயந்தபடியே தேர்வாளர் இடக்கு மடக்காகக் கேள்விகள் கேட்டார். “என்னப்பா! பட்டம் பெற்று ஓராண்டு ஆகியுமா வேலை கிடைக்கவில்லை?” என்றார். “ஆமாம் சார்!” என்று சொன்னான் ரவீந்திரன். “இதற்கு முன் வேலை செய்த அனுபவம் உண்டா?”

“இல்லை! வேலையே இதுவரை கிடைக்காததால் அனுபவத்திற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.”

“அனுபவம் இல்லாத உன்னை எப்படி வேலைக்குச் சேர்த்து கொள்ள முடியும்?”

“தயவு செய்து ஒரு வாய்ப்புக் கொடுங்கள்! என் திறமை, உழைப்பு ஆகியவற்றை நிரூபிக்க ஒரு வாய்ப்புத் தாருங்கள்!”

“சரிதான்! நீ அனுபவம் பெறவே ஆறு மாசம் ஆகும். அதுவரை நான் தண்டச் சம்பளம் கொடுக்க வேண்டுமா?”

"முதல் ஆறு மாதம் சம்பளமின்றியே வேலை செய்யத் தயாராயுள்ளேன்.”

ரவீந்திரனின் அடக்கமான அதே சமயம் தன்னம்பிக்கையுடன் கூடிய பதில்கள் தேர்வாளருக்குத் திருப்தி உண்டாக்கியது. இருந்தாலும் அவன் பொறுமையை மேலும் சோதிக்க விரும்பினார். “உன் திறமையின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. நீ சொல்வதை நம்பி உனக்கு எவ்வாறு வேலை கொடுக்க முடியும்?” என்று அவனைச் சீண்டினார்.

அதுவரை பணிவுடன் பதிலளித்த ரவீந்திரன் திடீரென பொறுமை இழந்தான். “உங்களைப் போன்ற ஒரு சாதாரண நபர் இந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கும்போது, திறமையுள்ள என்னால் வேலை செய்ய முடியாது என்று ஏன் நினைக்கிறீர்கள்?” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு அறையை விட்டு ரவீந்திரன் வெளியேறினான்.

ஒரு நிமிடம் பொறுமை காக்காமல் நாவடக்கத்தை மறந்து அவன் பேசிய பேச்சு, நல்ல வேலை கிடைக்காமல் செய்து விட்டது.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 07 Mar 2014, 6:00 PM | Message # 40
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மானம் காத்த மாவீரன்


சிவந்த கண்களைப் பெற்றிருந்ததால் சோழ மன்னன் செங்கணான் எனப் பெயர் பெற்றிருந்தான்.இவனை வரலாறு கோச்செங்கணான் என்று கூறும்..பெரும் வீரனாக இருந்ததோடு சிறந்த சிவ பக்தனாகவும் இருந்தான்.

ஒரு முறை சேர மன்னன் கணைக்கால் இரும்பொறைக்கும் கோச்செங்கனானுக்கும் போர் மூண்டது.
இருவரும் பெரும்படை கொண்டு போரிட்டனர்.மலைகள் போல் யானைகள் இருதிறத்தில் இருந்தும்  மோதிக் கொண்டன. பல நாட்கள் போர் நீண்டது.

சோழனின் பெரும்படையை சேரனின் படைகள் வீரத்துடன் எதிர்த்தன.ஆயினும் கடைசியில் சேரன் தோல்வியைத் தழுவினான்.

கோச் செங்கணான் அவனைக் கைது செய்து குணவாயில் கோட்டம் என்னும் இடத்தில் சிறையில் அடைத்தான். சிறைப்பட்ட கணைக்கால் இரும்பொறை சற்றும் அஞ்சாது நிமிர்ந்து நின்றான்.

பகைவனுக்குத் தலை வணங்க மறுத்தான்.அஞ்சாது பேசினான்.நாட்கள் கழிந்தன.
சிறைப்பட்ட சிங்கம்போல் சிறையில் அடைபட்டிருந்தான் இரும்பொறை.

ஒருமுறை சேரனுக்கு சிறையில் தாகமெடுத்தது.நீர் வேண்டும் என்று சிறைக்காவலரைக் கேட்டான்.

கூப்பிட்ட குரலுக்கு உடனே ஆயிரம் பேர் வரக்கூடிய நாடாளும் மன்னனின் குரலுக்கு அந்த சிறைக் காவலர் செவி சாய்க்கவில்லை.காலம் நீட்டித்துப் பின் நீர் கொணர்ந்து கொடுத்தனர்.

அவர்களது அலட்சியத்தை  பார்த்து மிகுந்த அவமானப் பட்டான் கணைக்கால் இரும்பொறை.
அந்த நீரைப் பருகாமல் தாகத்தால் வாடித் தன் உயிரை மாய்த்துக் கொண்டான்.


அவன் இறக்குமுன் ஒரு பாடலை எழுதி விட்டு இறந்தான்.
    "குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
       ஆள் அன்று என்று வாளில் தப்பார்"
என்று தொடங்கும் பாடல்தான் அது.


தமிழனின் மானத்தின் பெருமையை காட்டக்கூடிய இப்பாடல் புறநானூறு என்னும் நூல் தொகுப்பில் உள்ளது.

இதன் பொருள், குழந்தை இறந்து பிறந்தாலும் வெறும் மாமிசப் பிண்டமாகப் பிறந்தாலும் அதனை வாளால் கீறி மார்பில் வீரத் தழும்பை உண்டாக்கித்தான் புதைப்பர்.

அப்படிப்பட்ட வீர மரபில் உதித்த மன்னனான நான் சிறையில் காவலரின் அலட்சியமாகக் கொணர்ந்த இந்த நீரைப் பருகி உயிர் வாழ்வதோ" என்று ஒரு பாடலைப் பாடி உயிர் நீத்தான்.

இந்த வரலாறு பொதிந்த பாடல் இலக்கியச் சான்றாக இருந்து தமிழரின் மானத்தின் உயர்வையும் மானம் இழந்து உயிர் வாழாமை என்ற சிறப்பையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறதன்றோ.


வள்ளுவரின்
"மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
 உயிர்நீப்பர்  மானம் வரின்."


என்ற குறளின் பொருளையும் நமக்கு நன்கு உணர்த்துகிறதன்றோ?




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » குறள் கதை (நீதி கதைகள்)
Search: