குறள் கதை - Page 5 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » குறள் கதை (நீதி கதைகள்)
குறள் கதை
PattuDate: Saturday, 08 Mar 2014, 7:50 PM | Message # 41
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
எவ்வுயிரும் நம் உயிரே

ஒரு காட்டில் நல்ல பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. சற்று வயதான பாம்பு அது. ஒரு நாள் அது இரை தேடிக்கொண்டே காட்டுக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தது.அப்போது ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டு அமர்ந்திருந்தார்.அவரிடம் சென்று பணிந்து நின்றது பாம்பு.

அதைக் கண்களைத் திறந்த முனிவர் பார்த்தார்.புன்னகை புரிந்தார்.
"உனக்கு என்ன வேண்டும்?"

"சுவாமி, நான் போன பிறவியில் பாவம் செய்து இந்தப் பிறவியில் பாம்பாகப் பிறந்துள்ளேன்.அதனால் மீண்டும் பிறவாதிருக்க நான் என்ன செய்யவேண்டும் தயவு செய்து எனக்கு உபதேசம் செய்ய வேண்டும்." என்று கேட்டுக் கொண்டது.அதைப் பார்த்துப் புன்னகை புரிந்த முனிவர்,

"நீ இந்தப் பிறவியில் யாரையும் கடித்துத் துன்புறுத்தாமல் இருந்தால் போதும்.உனக்கு அடுத்த பிறவியில் நல்ல உயர்ந்த பிறவி கிட்டும்" என்று உபதேசித்து ஆசிகூறினார்.

அதைக் கேட்டு மகிழ்ந்த பாம்பு அவரை வணங்கி விடைபெற்றது.
சில நாட்கள் கழிந்தன.காட்டில் திரிந்த பாம்பு தைரியமாக ஊருக்குள் வந்தது.

நாம்தான் யாரையும் கடிப்பதில்லை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என முனிவரிடம் கூறிவிட்டோமே.அதனால் நமக்கும் யாரும் தொந்தரவு தரமாட்டார்கள் என எண்ணிக் கொண்டது.

அதனால் அந்தப் பாம்பு ஊரின் ஓரமாக உள்ள ஒரு மைதானத்தில் உலவியபடி இரை தேடிக்கொண்டு  இருந்தது. அப்போது அங்கு விளையாட வந்த சில சிறுவர்கள் அங்கு உலவும் பாம்பைப் பார்த்து அலறினார்கள்.

அந்த நல்ல பாம்பு யாரையும் லட்சியம் செய்யாமல் தன் வழியே போய்க் கொண்டு இருந்தது.ஆனால் சிறுவர்கள் விடுவார்களா?

 பாம்பின் அருகே வந்து சூ., சூ எனக் குரல் கொடுத்து அந்தப் பாம்பை விரட்டினர். அப்போதும் அந்தப் பாம்பு தன் வழியிலேயே போய்க் கொண்டு இருந்ததைக் கண்டு சிறுவர்களின் பயம் சற்று விலகியது.

"டேய், பாம்புக்குக் கண் தெரியலை போல இருக்குடா.,நம்மளைப் பார்த்தும் அது ஓடாமல் மெல்லப் போகுதுடா!"என்றான் ஒருவன்

அதைக் கேட்ட மற்ற சிறுவர்களுக்கு பயம் அறவே நீங்கியது. பாம்பின் அருகே இருந்த கற்களை எடுத்து வீசத் தொடங்கினர்.சில கற்கள் பாம்பின் மீது பட்டு ரத்தம் கசியத் தொடங்கியது.

அப்போதும் பாம்பு தன் தலையைத் தூக்காது மெல்ல மெல்ல ஊர்ந்து கிடைத்த பொந்தில் நுழைந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. சற்று நேரம் சிறுவர்கள் அந்தப் பொந்தின் முன் நின்று கூச்சல் போட்டுவிட்டுச் சென்று விட்டனர்.

பாம்பு இரவானதும் அந்த இடத்தை  விட்டு வெளியே வந்து தன் இருப்பிடமான காட்டை நோக்கிச் சென்றது.அதனால் ஊர்ந்து செல்ல முடியாதபடி உடல் முழுவதும் காயம்.ரத்தம் சிந்தும் உடலை வலியுடன் நகர்த்திக் கொண்டு சென்று முனிவர் முன் நின்றது.

அதிகாலையில் ரத்தம் சொட்டும் உடம்புடன் வந்து நின்ற பாம்பைப் பார்த்து திடுக்கிட்ட முனிவர்,"என்னவாயிற்று?ஏன் இப்படி காயப் பட்டு வந்திருக்கிறாய்?"என்று அன்போடு வினவினார்.

துக்கம் தொண்டையை அடைக்க கூறியது பாம்பு. "சுவாமி, நீங்கள் சொன்னபடியே யாரையும் கடிப்பதில்லை என முடிவு செய்து விட்டோமே என்று  ஊருக்கு வெளியே இருந்த மைதானத்துக்குச் சென்றிருந்தேன்.

அங்கு யாரையும் தொந்தரவு செய்யாமல் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கு விளையாடவந்த சிறுவர்கள் என்னைப் பார்த்ததும் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள்."என்று கூறிக் கண்ணீர் விட்டது.

அதன் பரிதாப நிலைக்கு இறங்கிய முனிவர் அதன் காயத்துக்கு மருந்து போட்டபடி பேசினார். "உன்னைக் கடிக்காதே என்றுதானே சொன்னேன்.
நீ உன் பிறவிகுணத்தைக் காட்டவேண்டியதுதானே?"

பாம்புக்குப் புரியவில்லை.அது "என்ன சுவாமி சொல்கிறீர்கள்?"என்று கேட்டது. "ஆமாம் உன் பாம்பு குணமான சீறும் குணத்தைக் காட்டியிருந்தால் ஓடியிருப்பார்கள் நீயும் அடிபடாமல் தப்பியிருக்கலாமே என்றுதான் சொன்னேன்."

"உண்மைதான் சுவாமி நீங்கள் கடித்துத் துன்புறுத்தாதே என்றுதான் கூறினீர்கள் சீறிப் பயமுறுத்தாதே என்று சொல்லவில்லையே"
புன்னகையோடு அந்தப் பதிலை ஏற்றுக் கொண்ட முனிவர் பாம்புக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

சில நாட்கள் கழித்து அந்தப் பாம்பு காட்டின் எல்லையில் ஒரு பாறை அருகே படுத்திருந்தது. அப்போது சில மாடு மேய்க்கும் சிறுவர்கள் அங்கு வந்தனர். பாம்பு படுத்திருப்பதைப் பார்த்தனர். ஒவெனக்  கூவியவாறு ஓடினர்.

மீண்டும் அருகே வந்தபோது பாம்பு புஸ் என  சீறவே தங்களின் மாடுகளை விரட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு விலகினர்.பாம்பு நலமுடன் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது.

அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமையவேண்டுமாயின் இப்பிறவியில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்தது அந்தப் பாம்பு.அதே போல் தனக்கு தீமை  ஏற்படுமாயின் தன் குணத்தைக் காட்டித் தப்பிப்பதும் தவறு அல்ல என்பதைப் புரிந்து கொண்டது அந்தப் பாம்பு.


இந்தக் கருத்தையே வள்ளுவரும் கூறுகிறார்.
"தீப்பால  தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை  அடல்வேண்டா  தான்."


எவனொருவன் தீமையின்றி வாழ நினைக்கிறானோ அவன் யாருக்கும் தீங்கு செய்யாதிருப்பானாக. என்கிறார்.இக்கருத்தை நாம் பாம்பின் வாழ்க்கையிலிருந்து தெரிந்து கொண்டோமல்லவா?

"எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணியிருக்கும்" உயர்ந்த வாழ்வைப் பெற்று இன்புற்றிருப்போம்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Sunday, 09 Mar 2014, 7:17 PM | Message # 42
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
பிறர் பொருளை விரும்பாதே

சன்னாசிக்கிழவன் களைப்போடு வீட்டுக்குள் நுழைந்தான்.நடுவீட்டின் உச்சியை அண்ணாந்து பார்த்தான்.ஆகாயத்திலிருந்து நிலாவெளிச்சம் பளீரென்று வீட்டுக்குள் அடித்தது.பெருமூச்சு விட்டவாறே தன் முண்டாசை உதறித் தரைமீது போட்டுக் கீழே அமர்ந்தான்.

"என்னாப்பா, மோட்டுவளையைப் பாக்குறே?எதாச்சும் பணம் கொட்டுமான்னு பாக்குறியா?" என்றவாறே அவன் மகன் சின்னச்சாமி உள்ளே நுழைந்தான். "பணம் கொட்டுதோ இல்லையோ மழை வந்தா தண்ணி கொட்டும்."
" ஆமாம்பா, இந்த மழைக் காலம் வாரதுக்குள்ளே நம்ம வீட்டை இடிச்சுக் கட்டிடணும் அப்பா.".

"எனக்கும் ஆசைதான். ஆனா அதுக்கு  நீ சொன்ன மாதிரி பணம் கூரையிலேந்து கொட்டினாத்தான் உண்டு."
"ஏம்பா அப்பிடிச் சொல்றே.வீட்டக் கட்டிடணும் அப்படீங்கற எண்ணத்தோட உழைச்சா கட்டாயம் நம்மாலே முடியும் அப்பா."

இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பச்சையம்மா "சரி சரி நேரத்தோட சோறு திங்க வாங்க. கெனா அல்லாம் அப்பால காங்களாம்" என்றாள் சலிப்போடு. தந்தையும் மகனும் தங்கள் பேச்சை நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றார்கள்.

மறுநாள் பொழுதோடு எழுந்து வேலைக்குச் சென்றான் சன்னாசி.அந்த ஊர் பூங்காவில் பழுது பார்க்கும் வேலையில் அவன் ஒரு தோட்டக்காரனாக வேலை பார்த்து வந்தான்.

முதல்நாள் விடுமுறை தினமாதலால் நிறைய பேர் பூங்காவுக்கு வந்து சென்றிருந்தனர்.பூங்கா முழுவதும் குப்பையும் கூளமுமாக இருந்தது.அதைச் சுத்தப் படுத்திக் கொண்டிருந்தான் சன்னாசி.

செடியைக் கொத்தி சீர் படுத்தும் போது அதனுள்ளே பளபளவென்று தெரியவே என்னவென்று எடுத்துப் பார்த்தான்.இரண்டு சவரன் தேறும் ஒரு தங்கச் சங்கிலி.

சட்டென அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டான்.ஏதும் அறியாதவன்போல் வேலையில் ஈடுபட்டான்.
சற்று நேரத்தில் அழுது கொண்டிருக்கும்  ஒரு சிறுமியைக் கையைப் பிடித்து இழுத்து வ்ந்தார் அவள் தந்தை.அவளிடம் கடுமையாகக் கேட்டார். "எங்கே விளையாடினே?இங்கேயா, இங்கேயா, சொல்லித்தொலையேன்.தேடிப்பார்க்கலாம்."என்றவர் நான்கு தோட்டக்காரர்களையும் விசாரித்தார்.
"யாராவது ஏதேனும் நகை கிடப்பதைப் பார்த்தீர்களா?"

யாரும் பார்க்கவில்லை எனக் கூறிவிட்டனர். சன்னாசிக் கிழவனும் தன் தலையைப் பலமாக இல்லையென்று ஆட்டிவிட்டான்.கண்களில் நீர் நிறைய "அய்யோ  ஆசையாக வாங்கியது போச்சே. இந்தக் கடனை அடைக்க நான் இன்னும் எத்தனை கஷ்டப் படணுமோ."என்று புலம்பியவாறே தன் பெண்ணை இழுத்துக் கொண்டு வெளியேறினார் அந்த அப்பாவி அப்பா.

சன்னாசிக்குப் பார்க்கப் பாவமாக இருந்தாலும் இதையெல்லாம் பார்த்தால் நாம் கல்லு வீட்டில் உக்கார முடியுமா என்ற எண்ணமும் கூடவே தோன்றியது. வேகவேகமாக வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று அந்தச் சங்கிலியை பத்திரப் படுத்தி வைத்தான்.

ஒரு வாரத்தில் சன்னாசி நினைத்தவாறே கல்லு வீடு எழும்பத் தொடங்கிற்று. சின்னச்சாமிக்கும் அவன் அம்மாவுக்கும் ஆச்சரியம்.என்ன கேட்டும் சன்னாசி "ஆண்டவன் கொடுத்தாண்டி" என்று சொல்லி அவள் வாயை அடைத்து வந்தான்.

ஒரு மாதம்  ஓடிவிட்டது.வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது.ஈரமான தலையைத் துடைத்தவாறே உள்ளே நுழைந்தான் சின்னச்சாமி.
"ஏண்டா தம்பி இம்மா நேரம்? வேலை எதுவும் கெடைக்கலியா?"

"அதில்லம்மா, ஒரு பெரியவரு பார்க்குல உக்காந்திருந்தாரு. எழுந்து போகையில பொட்டிய மறந்து வச்சுட்டுப் போயிட்டாரு.அதை எடுத்துக்கினு அவரு வீட்டத் தேடி கொண்டுபோய் கொடுத்திட்டு வாரதுக்குஇம்மா நேரமாயிடுச்சம்மா."

சன்னாசி மெதுவாக,"அது என்னா பொட்டிடா?"என்று கேட்டான்.
"அது எனக்குத் தெரியாதுப்பா"
"பொழைக்கத் தெரியாத புள்ள"என்றபடியே வெளியே சென்றான் சன்னாசி.

வெளியே லேசாகத் தூறிக்கொண்டிருந்தது திடீரென்று பெரும் மழை பிடித்துக் கொண்டது.நடு இரவில் வெளியே ஒரே கூச்சலாயிருந்தது  கேட்டு சன்னாசி சின்னச்சாமி அவன் தாய் பச்சை  அனைவரும் கதவைத் திறந்து பார்த்தனர்.வெளியே இருந்த குடிசை வீடுகள் எல்லாம் மழையில் அடித்துச் செல்லவே மக்கள் அனைவரும் தங்கள் உடமைகளோடு அருகே இருந்த பள்ளியை நோக்கி ஓடித் தஞ்சம் புகுந்தனர்.

சன்னாசி தான் கல்லு வீட்டில் இருப்பதால் மிகவும் பெருமையோடு மீண்டும் வந்து பாயில் படுத்துக் கொண்டான்.
ஒரு மணி நேரம் போயிருக்கும். திடீரென்று பச்சையம்மா "அய்யோ! எந்திரிங்க வீட்டுக்குள்ளாற தண்ணி வந்திருச்சு" என்று அலறியவாறே சன்னாசியை உலுக்கி எழுப்பினாள்.

அதற்குள் வீட்டுக்குள் மளமளவென தண்ணீர் உயரத் தொடங்கவே செய்வதறியாமல் உயிருக்கு அஞ்சி ஊர் மக்கள் அனைவரும் தங்கியிருக்கும் பள்ளிக்கூடத்திலேயே மூவரும் தஞ்சம் புகுந்தனர்.

சிறிய பள்ளிக்கூடம் மக்கள் ஏற்கனவே நிறைந்திருந்ததால் சன்னாசி குடும்பத்திற்கு ஒண்டிக் கொள்ளத்தான்  இடமிருந்தது.மீதி இரவை நின்று கொண்டே கழித்தனர் சன்னாசியும் அவன் மகன் மனைவியும்.

மறுநாளும் மழை விடவில்லை. வானம் பொத்துக்கொண்டு ஊற்றியது.வாயிலில் வெள்ளமாகத் தண்ணீர் ஓடியது.பலரது வீடுகள் நீரில் மிதந்து செல்வதைக் கண்டும் செய்வதறியாது அனைவரும் புலம்பிக்கொண்டு நின்றிருந்தனர்.

திடீரென்று சன்னாசியும் கதறினான்.அவனுடைய கல்லுவீட்டின் கதவு மிதந்து சென்றதை கண்டுதான் அலறினான்.யாருக்கு யார் சமாதானம் செய்வது. அரசு கொடுத்த உணவை உண்டு அன்று பொழுது கடந்தது.

மாலை நேரம் சற்றே மழை விட்டதும் அணைத்து ஆண்களும் தங்கள் வீட்டில் உடமைகள் ஏதேனும் மிச்சம் இருக்கிறதா என்று பார்க்க வீட்டுக்குச் சென்றனர்.சன்னாசியும் ஓடினான்.அந்தோ, பரிதாபம்.அங்கே அவன் கட்டியிருந்த வீடு இடிந்து மண்மேடாகக் காட்சியளித்தது.

அப்படியே சரிந்து அமர்ந்தான்.அவன் பின்னால் வந்த சின்னச்சாமி அவனைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தான்.
அப்போது ஒரு பெரியவர் வண்டிநிறைய துணிமணிகள் போர்வை ஆகியவற்றுடன் உணவுப் பொட்டலங்களும் ஏற்றிக் கொண்டு அங்கு வந்து நின்றார்.இன்னும் தூறல் நின்றபாடில்லை.

இருப்பினும் பள்ளியில் ஒதுங்கியிருந்த மக்கள் அனைவரும் உணவுப் பொட்டலத்துக்காக ஓடி வந்தனர்.
அவர்களை வரிசையில் வரும்படி பணியாளர்கள் கூறிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்தபடியே நின்றிருந்த பெரியவர் தன் முன்னே சின்னச்சாமியைப் பார்த்ததும் முகம் மலர்ந்தார்.

"ஏய் தம்பி, நீதானே அன்னிக்கி என் பொட்டியைக் கொண்டுவந்து கொடுத்தது."அவரைப் பார்த்து வணக்கம் கூறினான் சின்னச்சாமி.
"ஏம்பா, பொட்டியக் குடுத்துட்டு சொல்லாம போயிட்டியே. உன்னை எங்கெல்லாம் தேடினேன்."
"ஏனுங்க ஐயா?என்னை ஏன் தேடினீங்க?"

"உன் பேர் என்ன சொன்னே,  ஆங் சின்னச்சாமி.எவ்வளவு பெரிய உதவி செஞ்சுட்டு நீ பாட்டுக்குப் போயிட்டியே.உனக்கு ஏதானும் பரிசு குடுக்கணுமே அப்படின்னுதான் தேடினேன்."

"ஐயா, உங்க பொட்டியக் கொண்டாந்து குடுத்ததா பெரிய வேலைன்னு சொல்றீங்க.அது என்ன பெரிய காரியமா?"
"ஆமாம் சின்னச்சாமி அம்பது லட்ச ரூபா சொத்து அந்தப் பொட்டில இருந்துது.அதனாலே உனக்கு நான்கடமைப் பட்டிருக்கேன்."
சின்னச்சாமி திகைத்து நின்றிருந்தான்

"சின்னச்சாமி, இந்த இருபதாயிரத்தை  வாங்கிக் கொள். பாவம், மழையில் வீடிழந்து இருப்பாய்.இதை வைத்து கொள். உனக்கு உதவியாக இருக்கும். மழை நின்ற பிறகு என்னை வந்து பார்."என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போனார். தன் மகனின் கையில் ரூபாய் நோட்டுக்களைப் பார்த்த சன்னாசிக்குப் பேச நா எழவில்லை.

அவன் மனம் தான் செய்த செயலையும் தன் மகன் செய்த செயலையும் எண்ணிப் பார்த்தது.ஒரு 'ஏழைத் தந்தை அழ அவரது பொருளைத் தான் எடுத்துக்  கொண்டதால்தான் தான் அழ அந்தப் பொருள் தன்னை விட்டுச் சென்று விட்டது.என்ற உண்மையும் ஒரு நல்ல வழியில் வந்த பொருள் நாம் இழந்து விட்டாலும்  நம்மை வந்து அடைந்தே தீரும்' என்ற அறிவும் அவன் உள்ளத்தைச் சுட்டது. அவன் மனம் திருந்தியது போல் வானம் பளீரென ஒளிவிடத் தொடங்கியது.


வள்ளுவரின் வாக்கு எத்தனை சத்திய வாக்கு!

"அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை."


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Monday, 10 Mar 2014, 6:54 PM | Message # 43
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
இன்னா செய்தாரை...

குமாரபுரி மன்னனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தனர்.மூத்தவன்குமாரசிம்மன்.இளையவன் அமரசிம்மன்.
இருவருமே வீரத்திலும் கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கினர்.அத்துடன் இருவருமே மிகவும் ஒற்றுமையுடனும் பாசத்துடனும் ஒருவருக்கொருவர் அன்புடனும்  வாழ்ந்து வந்தனர்.

இளவரசர்கள் இருவரும் காளையர்களாக வளர்ந்து நின்றனர்.மன்னனும் வயது முதிர்ச்சியால் தளர்ச்சியடைந்தான்.சீக்கிரமே தன மூத்த மகனுக்கு முடிசூட்டிவிட முடிவு செய்தான்.

அந்த நாட்டுமந்திரியின் மகன் மகேந்திரன் சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பதை விரும்பாமல் எப்படியாவது இவர்களுக்குள் பகையை மூட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தான்.

சொல்வார் பேச்சைக் கேட்கும் எண்ணம் அமரசிம்மனுக்கு இருக்கிறது எனத் தெரிந்து கொண்டு அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.
மூத்தவனுக்கு முடிசூட்டிவிட்டால் இளையவன் அடிமைதான் என்பது போன்ற அச்சத்தையும்உண்டாக்கி  அவனை ஒழிக்க குமாரசிம்மன் திட்டமிடுவதாகவும் பலப்பல சொல்லி மனத்தைக் கலைத்தான்.எடுப்பார் கைப் பிள்ளையாக இருந்த அமரசிம்மன் இதை நம்பி  தன் அண்ணனை சந்தேகத்துடனேயே பார்க்க ஆரம்பித்தான்.

     மகேந்திரனின் இந்த சூழ்ச்சியை அறியாத குமாரசிம்மனும் தம்பியிடம் பாசத்துடனேயே பழகி வந்தான். நாட்கள் செல்லச் செல்ல மகேந்திரனின் சூழ்ச்சிக்கு முற்றிலுமாக அடிமையாகிவிட்டான் அமரசிம்மன்.தன்  அண்ணன் தன்னை எப்போது கொல்ல முயற்சிப்பானோ  என்று அச்சப்பட ஆரம்பித்தான். ஆனால் உள்ளத்தில் கள்ளமில்லாத குமாரசிம்மனோ  அவனிடம் அன்போடு பழகிவந்தான்.

                 மன்னரின் குலவழக்கப்படி சகோதரர் இருவரையும்  காட்டில் வாழும் கொடிய விலங்குகளை வேட்டையாடி வரும்படி மன்னன் ஆணை பிறப்பித்தான். அந்த ஆணையை ஏற்ற குமாரசிம்மனும் அமரசிம்மனும் காட்டுக்கு வேட்டையாட புறப்பட்டனர்.

                 அமரசிம்மன்  மகேந்திரனின் வஞ்சகச் சொற்களை எண்ணிக் கொண்டே வந்தான். அண்ணன் தன்னை எப்போது கொல்வானோ என்று சற்று கவனத்துடனேயே நடந்தான். மகேந்திரன் அந்த அளவுக்கு அவன் மனதில் வஞ்சகத்தை ஆழமாக விதைத்திருந்தான்.

                இருவரும் மாலைவரை வேட்டையாடிக் களைத்தனர். பசியுடனும்  களைப்புடனும்   தங்கள்  கூடாரத்தை  நோக்கித் திரும்பினர். லேசாக இருள் கவியும் நேரமும் வந்தது அமரசிம்மன் எதுவும் பேசாமலேயே நடந்தான்.தம்பியை அன்புடன் திரும்பிப் பார்த்தவண்ணம் நடந்த குமாரசிம்மன் அருகே இருந்த நீரிருக்கும் புதைகுழியில் விழுந்தான்.

சற்றே அதிர்ந்த அமரசிம்மன் அவனது அபயக் குரலைக் கவனியாதவன் போல தனது இருப்பிடத்தை நாடி வேகமாக நடந்தான் அமரசிம்மன்.அண்ணன்  இறந்திருப்பான் என முடிவு செய்தான்.அதே சமயம் காற்று பலமாக அடித்தது வலுவற்ற மரங்கள்  முறிந்துவிழுந்தன.அதிர்ஷ்டவசமாக ஒரு மரம் முறிந்து புதைகுழியில் அகப்பட்டிருந்த குமாரசிம்மனின் அருகில் விழுந்தது.
அதைப் பிடித்துக் கொண்டு கரையேறினான்.

                     அண்ணன் மூழ்கியிருப்பான் இனி வரமாட்டான் என முடிவு செய்துகொண்டு நடந்து கொண்டிருந்தான் அமரசிம்மன்.சட்டென அவன் உணர்வு பெற்று நின்று கவனித்தபோது தன முன் பசியோடு உறுமியபடி ஒரு புலி இவன் வருகையை எதிர்பார்த்து நிற்பதுபோல் நின்றிருந்தது. வேட்டையாடிக் களைத்திருந்த அமரசிம்மன் புலியுடன் சண்டை போட சக்தியற்றிருந்தான்.

பயத்தால் நடுங்கியபடி நின்றிருந்தவன் தான் புலிக்கு இரையாவது உறுதி என முடிவு செய்தான்.அப்போதுதான் செய்துவிட்டு வந்த தவறு புரிந்தது. தான் செய்த பாவத்திற்கு இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். பசியோடு உறுமியபடி பாய்ந்த புலியைப் பார்த்துக் கண்களை மூடிக்கொண்டான்.ஆனால் என்ன ஆச்சரியம்!

 புலி தன மீது இன்னும் பாயவில்லையே ஏன்?தன கண்களைத் திறந்து பார்த்த அமரசிம்மன் தன முன் நடந்த காட்சியைக் கண்டு வாயடைத்து நின்றான். உடல்முழுதும் சேறாகியிருந்த உடலோடு குமாரசிம்மன் புலியின் வாயைப் பிடித்துக் கொண்டு நின்றான். அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பின் புலியைத் தன குத்துவாளுக்கு இரையாக்கி விட்டு அருகே சோர்ந்து விழுந்தான்.

                       ஆனாலும் தம்பியைக் காப்பாற்றி விட்டோம் என்ற திருப்தி அவன் முகத்தில் புன்னகையாகத் தெரிந்தது.
அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதான் அமரசிம்மன். "அண்ணா என்னை மன்னித்து விடுங்கள்.

மகேந்திரனின் மதி கெட்ட சொற்களால் என் மதியை நான் இழந்து விட்டேன்.தங்களைத் தவறாக நினைத்துவிட்டேன்.என்னை மன்னித்துவிடுங்கள்."கதறி அழுத தம்பியை அணைத்துக் கொண்ட குமாரசிம்மன்

"தம்பி, நீ என் உயிரினும்மேலானவன்.உன்னைஒருகாலும் தவறாக எண்ண மாட்டேன்." என்று சமாதானம் செய்தபோதும் அமரசிம்மன் ,"ஐயோ, அண்ணா, உன்னை இழந்திருந்தால் நான் எத்தகைய பாவியாகியிருப்பேன்.என் உயிரைக் காப்பாற்றவே இறைவன் உங்களை அனுப்பியிருக்கிறார். அண்ணா, இந்த உயிர் இனி உங்களுக்குச் சொந்தம் இனி என்னை உங்கள் அன்புப் பிடியிலிருந்து யாராலும் பிரிக்க இயலாது."கதறியபடியே கூறினான்.

 இன்னா செய்த தம்பிக்கு இனியதே செய்துவிட்ட அண்ணனின் அடியொற்றி அவனைத் தாங்கிப் பிடித்தவாறே நடந்தான் அமரசிம்மன். உயிர் போகும் நிலைவரை சென்று திரும்பிய அந்த இரண்டு சகோதரர்களையும் இனி எந்த தீய சக்தியாலும் பிரிக்க இயலாதல்லவா?

குமாரசிம்மனின் தீமை செய்தவனுக்கும் நன்மை செய்த பண்பு  நமக்கு வள்ளுவரின்


"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
 நன்னயம் செய்து விடல்"


என்ற குறட்பாவை நினைவு படுத்துகிறதல்லவா?

 



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Tuesday, 11 Mar 2014, 7:44 PM | Message # 44
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
அமிர்தம் இருக்க விஷத்தை ஏன் விரும்புகிறாய்?

அந்தப் பெரியவர் வீட்டு வாசலில் சிறுவர் பட்டாளம் விளையாடிக் கொண்டிருக்கிறது. திடீரென்று குய்யோ,முய்யோ என்று ஒரே கூச்சல். ஒரு கட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கொஞ்சம் உயரமாக தோற்றமளித்த ஒரு சிறுவன் அடுத்தவனை வாயில் வந்தபடி திட்டித் தீர்த்தான்.
அவன் வீசிய சுடு சொற்கள் பாவம் அந்தச் சிறுவனை வாட்டி வதைக்க அழுது கொண்டே
வீட்டுக்கு ஓடினான்.

அவனை திட்டி விரட்டி விட்ட வெற்றிக்களிப்பு இவன் முகத்தில். ஆட்டம் கலைந்தது. எல்லோரும் வீட்டுக்கு
கிளம்ப ஆரம்பித்தனர். இவை எல்லா வற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த பெரியவர் இப்போது அந்தப் பையனை தன் வீட்டுக்கு அழைத்து உட்கார வைத்தார்.

அவன் எதிரில் ஒரு தட்டு, அதில் இரண்டு மாம்பழங்கள், நான்கு மாங்காய்கள். பெரியவர் சொன்னார், தம்பி நீ
நன்றாக விளையாடினாய் அதற்குப் பரிசு இது. எடுத்து சாப்பிடு என்றார்.

அவன் ஆவலோடு மாம்பழங்களை எடுத்து உண்டான், இன்னொன்றையும் உண்டான். பின்பு அந்தப் பெரியவருக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்படத் தயாரானான்.

அவனைத் தடுத்தப் பெரியவர், தட்டில் மீதமிருப்பத்தையும் சாப்பிடலாமே என்றார். அவை எனக்கு வேண்டாம்
அய்யா. ஏன்? அவை காய்கள். காய்கள் என்றால் சாப்பிடக் கூடாதா? எனக்குப் பிடிக்காது. ஏன்? அவை கசக்கும். இல்லையெனில் புளிக்கும். பரவா இல்லை தின்று பாரேன்.

இல்லை அய்யா அந்த சுவையை என் உள்ளம் ஏற்காது, " உன் உள்ளம் விரும்புவதை மட்டும் ஏற்கும் நீ.. அடுத்தவர் உள்ளம் விரும்பாததை, நீ விரும்புகின்றவரை கொடுக்கின்றாயே அது நியாயமா?

நானா? புரியவில்லை அய்யா?

சற்றுமுன் ஒரு சிறுவனை வாயில் வந்தபடி திட்டி அழ வைத்தாயே. உன் சொற்க்களை அவனுடைய உள்ளம் உவகையுடன் ஏற்றதா?

இல்லை அய்யா. துன்பம் தந்திருக்கும். அதனால் அழுதான்.

நீ மட்டும் உன் உள்ளம் விரும்பாத காய்களை ஒதுக்குவாய் ஆனால் பிறர உள்ளம் ஏற்க்க விரும்பாத சுடு சொற்களை அள்ளி வீசுவாய்.

அய்யா..நான்..

தம்பி உனக்கு கோபம வந்தால் சுடு சொற்களை வீசவேண்டும் என்பதில்லை. உன்னிடம் எவ்வளவோ நச்சுத் தன்மையற்ற இனிய சொற்கள் இருக்கின்றனவே அவைகளை வீசி அந்தப் பையனின் தவறை சுட்டிக் காட்டி
தலை குனிய வைத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு காயை வீசி அவன் உள்ளத்தை
காயப் படுத்தி விட்டாயே.

தன் தவறை உணர்ந்த அவன் தலைகுனிந்து நின்றான்.

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று ."




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 12 Mar 2014, 6:08 PM | Message # 45
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
சிற்றுளியும் மலை பிளக்கும்


                    மகேந்திரன் மச்ச நாட்டு மன்னன். அவனது நாட்டுக்கு அருகாமையில் உள்ள நாடு மருத நாடு
மருதநாட்டு மன்னன் சுரோசனன். மருத நாடு படைபலம் கொண்டது. ஆனால் மச்சநாடு அந்த அளவுக்கு படை பலம் கொண்டதல்ல.

இருப்பினும் மகேந்திரன் மிகவும் பேராசை கொண்டவனாக இருந்தபடியால் மருத நாட்டை வெல்லவேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தான். அதனால் அடிக்கடி சுரோசனன் மீது படையெடுத்து வந்தான்.

தோல்வியடைந்தபோதும் மீண்டும் மீண்டும் மருத நாட்டின் மீது படைஎடுத்தவண்ணம் இருந்தான்.
                     சுரோசனனின் நாடும் பெரிது படையும் பெரிது. அதனால் மகேந்திரன் தோல்வியடைந்த வண்ணமே இருந்தான்.

ஒருமுறை ஒற்றர் மூலம் மகேந்திரன் மீண்டும் படையெடுக்கப் போவதை அறிந்த சுரோசனனின் மதியூக மந்திரி மகிபாலர் மன்னனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

"மன்னா, மகேந்திரன் மீண்டும் படையெடுக்கப் போகிறானாம். நமது படைகளைச் சற்று சீரமைக்கவேண்டும். கட்டளையிடுங்கள்" என்றார். சுரோசனன் சிரித்தான்."மந்திரியாரே, எத்தனை முறை அவன் படையெடுத்தாலும் அவனால் நம்மை வெல்ல இயலாது.

நமது படைக்குமுன் அவன் படை எம்மாத்திரம்?"
"அப்படி அலட்சியமாக இருக்கக் கூடாது மன்னா,நமது வீரர்கள் போரிட்டுக் களைத்திருப்பர் என்றுதான் மீண்டும் உடனே  படையெடுத்து வருகிறான்.

நமது குதிரைப் படைதான் நமது வெற்றிக்குக் காரணம்.குதிரைகளும்  நமது படையில் அதிகம்.அவை பலமுறை போரிட்டதால்  கால்களிலுள்ள குளம்புகளில் ஆணிகள் தேய்ந்து போய் விட்டன.அவற்றிற்கு லாடம் அடிக்கவேண்டும்.அப்போதுதான் நம்மால் படை நடத்த முடியும்."என்றார் பணிவோடு.

ஆனால் சுரோசனன்,"இப்போது அதற்கு அவசரமில்லை. மகேந்திரனின் படையை வெற்றிகொண்டு  துரத்திய பிறகு பார்த்துக் கொள்ளலாம்." என்று அலட்சியமாகக் கூறிவிட்டு அந்தப்புரம் சென்று விட்டான்.
சில நாட்களில் மகேந்திரன் மீண்டும் படையெடுத்தான் இரு மன்னர்களும் தங்கள் படைகளுடன் புறப்பட்டனர்.

சுரோசனன் புன்னகையுடன் தன குதிரைப்படையை நடத்திச் சென்றான்.திடீரென்று படையிலிருந்த குதிரைகள் கீழே விழுந்தன சில சரியாக ஓட முடியாமல் தடுமாறின மகேந்திரனின் படை சிறிதானாலும் எல்லா வகையான பராமரிப்பும் செய்யப்பட்டிருந்தன குதிரைகள் லாடம் அடிக்கப்பட்டு நன்கு ஓய்வெடுத்து போருக்குத் தயாராக சிலிர்த்துக் கொண்டு நின்றிருந்தன.

ஆனால் சுரோசனன் படையோபெரியதாக இருந்தாலும்  போதிய பராமரிப்பு இன்மையால் பாதிக்குமேல் படுத்து விட்டன. மன்னன் சுரோசணனும் அச்சமும் சோர்வும் அடைந்துவிட்டான். தக்கதருணம் பார்த்து மகேந்திரன் சுரோசனனையும் மந்திரி மகிபாலரையும் கைது செய்து சிறையில் அடைத்தான்.
இப்போது இருவரும் மச்சனாட்டுச் சிறையில் இருந்தனர்

மந்திரியின் சொல்லைக் கேளாததால்தான் தனக்கு இந்த நிலை வந்ததென்று வருந்திப் பேசினான் சுரோசனன். அப்போது மகிபாலர்"மன்னா, சிறிய உளிஎன்று நினைப்பது தவறு, அதுதான் பெரிய மலையைப் பிளக்கிறது.

மேலும் ஆணிதானே அடிக்கவேண்டும் பிறகு செய்யலாம் என்று நினைத்ததால்தான் போரில் தோற்கும் நிலை வந்தது.படை பெரிதாயிருந்தும் தக்க தருணத்தில் தேவையான பராமரிப்பைச் செய்யாததால்தான் தங்களுக்கு இந்த நிலை."என்றபோது மன்னனுக்குப் புத்தி வந்தது.

                                          

                                          "வருமுன்னர்  காவாதான்   வாழ்க்கை எரிமுன்னர்
                                            வைத்தூறு    போலக்   கெடும்."


துன்பம் வருவதற்கு முன்பாகவே அதைத் தடுப்பதற்கேற்ற  முன்னேற்பாடுகளை செய்யத் தவறி யவன்வாழ்க்கை நெருப்பின் முன் வைக்கப்பட்ட வைக்கோல் போரின் நிலையை அடையும்.

எந்த சிறு விஷயமாக இருந்தாலும்  தக்க தருணத்தில்  சரியானபடி கவனிக்கவேண்டும் என்ற உண்மையை சுரோசனன் மட்டுமல்ல் நாமும் புரிந்து கொண்டோம் அல்லவா?


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 13 Mar 2014, 5:07 PM | Message # 46
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
காலத்தினால் செய்த நன்றி


செல்லப்பன் ஒரு தொழிற்சாலையில் பணி புரிந்து வந்தான்.அவனுக்கு ஒரு மகன் இருந்தான்.ரவி என்று பெயரிட்டு மிகவும் செல்லமாக வளர்த்து வந்தான்.அவனுக்கு பத்து வயதுதான் இருக்கும்.

செல்லப்பனுக்கு தன மகன் மீது கொள்ளை பிரியம்.தினமும் அருகில் இருக்கும் ரொட்டிக் கடையில் ரொட்டி வாங்கிக்கொடுத்து அவன் தின்ற பிறகே வேலைக்குச் செல்வான். ரவியும் அப்பாவின் மடியில் அமர்ந்து கொண்டு ரொட்டி தின்றுவிட்டுப் பள்ளிக்குச் செல்வான்.

ஒருநாள் தொழிற்சாலைக்குச் சென்ற செல்லப்பன் விபத்தில் அடிபட்டு இறந்துவிட்டார்.
அவன் அம்மாவோ ராணிமாதிரி வாழ்ந்தவள் இப்போது கணவன் செய்த கூலிவேலைக்குச் செல்லத் தொடங்கினாள்.

சிலநாட்கள் வரை தன கணவன் செய்தது போல் மகனுக்கு ரொட்டி வாங்கிக் கொடுத்தாள். அவளுக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை.அதனால் ரொட்டி வாங்கிக் கொடுக்க இயலவில்லை.ஆனால் சிறுவனான ரவிக்கு இதெல்லாம் புரியாது. அவன் தினமும் ரொட்டிக் கடைமுன் சென்று நின்று அழுதுகொண்டு இருப்பான்.

ஒருநாள் அந்த ரொட்டிக் கடை முதலாளி அவனிடம் ஒரு ரொட்டியைக் கொடுத்தார். மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டான்.மறுநாளும் அங்கு வந்து நின்றான்.அந்த முதலாளி அவன் கையைப் பிடித்து அருகே அமர்த்திக் கொண்டார்.

"தம்பி ரவி, நான் தினமும் உனக்கு ரொட்டி தாரேன்.தின்னுட்டு நீ பள்ளிக்கூடம் போகணும்.அங்கே உனக்கு மதியச் சாப்பாடு போடுறாங்க இல்லே அதைச் சாப்பிட்டுட்டு நல்லாப் படிக்கோணும்.

உனக்குப் பதினெட்டு வயசானப்புறம் நீ ப்ளஸ் டூ முடிச்சப்புறம் என் கடையிலேயே வேலை செய்யணும்.செய்வியா?"என்றார். தினமும் ரொட்டி கிடைக்கும் என்ற மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினான் ரவி.ரொட்டியை வாங்கித் தின்றுவிட்டு பரபரப்புடன் வீட்டுக்குள் நுழைந்தான்.

தன் நீலக் கால்சட்டையையும் வெள்ளைச் சட்டையையும் தேடிப்  போட்டுக் கொண்டான். நெற்றியில் திருநீற்றை இட்டுக் கொண்டு கையால் தலையை ஒதுக்கிக் கொண்டான்.மூலையில் கிடந்த தன பையையும் புத்தகங்களையும்  தேடி எடுத்துக் கொண்டவன் 'அம்மா, நான் இஸ்கூலுக்குப் போய்வாறேன்"  என்றபடியே ஓடினான்.

அவன் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மாவுக்கு மனம் மகிழ்ச்சியடைந்தது.
வருடங்கள் செல்லச் செல்ல ரவிக்குக் கல்வி அறிவோடு நல்ல ஒழுக்கமும் வளர்ந்தது.இப்போது அவன் பத்தாவது படிக்கும் மாணவன்.

மாலைநேரத்தில் பள்ளிவிட்டபின் ரொட்டிக்கடை முதலாளிக்கு உதவியாக இருக்கத் தொடங்கினான்.ஏனென்றால் தினமு ஓசியில் ரொட்டி வாங்கித் தின்ன அவன் மனம் இடம் கொடுக்கவில்ல.அவன் தன்மானத்தைப் பார்த்த அந்த முதலாளிக்கு அவன்மீது மிகுந்த மதிப்பு  ஏற்பட்டது.

நல்ல முறையில் பத்தாம் வகுப்புத் தேறிய ரவிக்கு அந்த முதலாளி பாராட்டுத் தெரிவித்ததோடு மேலே படிக்க உதவுவதாகக் கூறினார்.ஆனால் தன அம்மாவை நல்ல முறையில் காப்பாற்றவேண்டுமானால் வேலை செய்துதான் ஆகவேண்டும் என்ற ரவி அந்தக் கடையிலேயே வேலை செய்வதாகக் கூறிவிட்டான்.

அதை ஏற்றுக் கொண்ட கடை முதலாளி அவனுக்கு ஒரு சிறிய ரொட்டிக் கடை வைத்துக் கொடுத்தார். ஐந்தாண்டுகளில் ரவி நல்ல நிலைக்கு உயர்ந்தான்.அவனது அயராத உழைப்பும் நாணயமும்தான் அவனை உயர்த்தின.

அன்று ரவியின் கடை திறந்த ஐந்தாம் ஆண்டு விழா.கடை அலங்கரிக்கப்பட்டு வந்தவர்களுக்கு அமர இருக்கைகள் போடப்பட்டிருந்தன தனக்கு உதவி செய்து தன்னை உயர்த்திய முதலாளியை வணங்கி அவருக்கு மாலையிட்டு மரியாதை செய்தான் ரவி.

மிகவும் கூச்சத்துடன் அந்த முதலாளி,"ரவி இதென்னப்பா, எனக்குப் போயி மாலையெல்லாம்..." என்று கூறினார்.
ரவியோ அவர் கால்களில் விழுந்து வணங்கினான்.
"ஐயா, நீங்க இல்லேன்னா இன்னைக்கி நான் இல்லே."

"என்னப்பா ரவி,உன்னோட உழைப்பாலே நீ முன்னுக்கு வந்தே.என்னை எதுக்கு இப்படி உயர்த்தி வைக்கிறே?"
"ஐயா, நான் சின்னப் பையனா இருந்தப்போ நீங்க ரொட்டித் துண்டைக் குடுத்து பள்ளிக்கூடம் போன்னு  சொன்னதாலே நான் படிச்சேன்.

நல்ல விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.உங்ககிட்டேருந்து உழைப்பையும் கத்துகிட்டேன்.நீங்க என்னை அன்னிக்கி விரட்டி விட்டிருந்தா,ஒரு ரொட்டித்துண்டாலே நான் திருடனா ஆகியிருப்பேன்.இன்னைக்கி நான் உயர்ந்து நிக்க நீங்கதான் ஐயா காரணம்."

"என்னப்பா இது, ஒரு சின்ன உதவி செய்ததையா நீ இவ்வளவு புகழ்கிறே?"
"ஐயா,


                   "காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
                     ஞாலத்தின் மாணப் பெரிது."
    

அப்படீன்னு படிச்சிருகேனய்யா. என்னுடைய சின்ன வயசுல நீங்க செஞ்ச உதவி இந்த உலகத்தை விடப் பெருசுங்கய்யா."என்று கண்களில் நன்றிக் கண்ணீருடன் பேசினான் ரவி.

ரவியின் நன்றி பாராட்டும் பண்பையும் அவன் முதலாளியின் தகுந்த காலத்தில் உதவி செய்யும் குணத்தையும் மறவாமல் அவர்களைப் போல வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையுமல்லவா?


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Mar 2014, 7:22 PM | Message # 47
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
விதியையும் வெல்லலாம்

     வீரப்பன் என்பவர் ஒரு தொழிலாளி. அவருக்கு இரண்டு மகன்கள்  இருந்தனர்.பெரியவன் சிவா. இளையவன் சங்கரன்.சிவா நல்ல ஆரோக்யமான உடலுடன் அழகாக இருந்தான். ஆனால் சிறியவன் சங்கரன்  இரண்டு கால்களும்  செயலிழந்து  நடக்க இயலாதவனாக இருந்தான்.

எப்போதும் தனியாக அமர்ந்து ஆகாயம் மரங்கள் பறவைகள் என வேடிக்கை பார்த்துக் கொண்டு  இருப்பான்.அதிகமாகப் பேசமாட்டான்.

      எப்போதும் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி இருப்பான்.எப்போதாவது அவனைப் பார்க்க நேர்ந்தால் வீரப்பன் கடுகடுவென முகத்தை வைத்துக் கொள்வார்.

ஏதேனும் பேச நினைத்தால் கூட சங்கரன் அவர் முகத்தைப் பார்த்து பயந்து பேசாமல் வெளியே பார்த்துக் கொண்டு  அமர்ந்து விடுவான்.

       ஒருமுறை சங்கரனுக்குப் பிறந்த நாள் வந்தது.அன்று அப்பா கோபமாக, ' இவன் பிறக்கவில்லையென்று யார் அழுதாங்க?ஒன்றுக்கும் உபயோகமில்லை. தன்னையே பார்த்துக் கொள்ள துப்பில்லை" என்று திட்டிவிட்டுப் போய்விட்டார்.

ஆனால் அம்மாதான் மனம் கேட்காமல் சங்கரனுக்குப் புதுச் சட்டை வாங்கிவந்து போட்டு தலைவாரிவிட்டு அவனுக்கு இனிப்பும் ஊட்டிவிட்டார்கள்.அப்போது சங்கரனின் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.

        அந்தப் பிறந்த நாள் சங்கரனின் வாழ்வில் மறக்கமுடியாத நாள்.அவன் மாமா அவனுக்கு ஒரு வண்ணம் தீட்டும் பெட்டியைக் கொண்டுவந்து பரிசாகக் கொடுத்தார்.  அதிலிருக்கும் வண்ணங்களைக் கண்டு சங்கரன் மிகவும் மகிழ்ந்தான்.

கைக்குக் கிடைத்த தாள்களில் எல்லாம் அவனுக்குத் தோன்றிய படங்களை வரைந்து தள்ளி மகிழ்ந்தான். பொழுது போகாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் இப்போது நேரம் போதாமல் வரையும் வேலையில் ஆழ்ந்து போனான்.       
                  
            அவன் இருந்த அறை  முழுவதும் தாள்கள் சிலசமயங்களில் அவன் அப்பா வீரப்பன் இதென்னடா குப்பை என்று திட்டிவிட்டுச் செல்வார்.ஆனாலும் ஏதோ பொழுதைக் கழிக்கட்டும் என்று பேசாமல் இருந்து விடுவார்.அவனுடைய வரையும் ஆர்வத்திற்கு தூண்டுகோலாக இருந்தவன் அவன் அண்ணன் சிவாதான்.

தினமும்  பள்ளியில் இருந்து வந்தவுடன் தன தம்பியுடன் சேர்ந்துதான் டீ அருந்துவான். சங்கரும் தன அண்ணனுக்காகக் காத்திருப்பான்.  இருவரும் ஒருவர்மேல் ஒருவர் மிகுந்த அன்பு வைத்திருந்தனர்.

           அன்றும் பள்ளி விட்டு ஓடிவந்த சிவா தன தம்பி வரைந்த ஓவியங்களை எடுத்துக் கொண்டு அதே தெருவில் வசித்த ராதா டீச்சர் வீட்டுக்குப் போனான். அவர்களிடம் அத்தனை ஓவியங்களையும் கொடுத்தான்.அதைப் பார்த்த டீச்சர் மிகவும் மகிழ்ந்தார்.

ஒருவாரம் கழிந்ததும்தான் அவர்கள் ஏன்  அந்த ஓவியங்களைக் கேட்டார்கள்  என்று புரிந்தது.சிவா படித்த பள்ளியில் கலைப் பொருள் கண்காட்சி ஒன்று நடத்துவதாக ஏற்பாடாகியிருந்தது.அந்த சமயம் ஒரு அறை  முழுவதும் சங்கரனின் ஓவியங்களுக்கு  அழகாக தலைப்புகளைக் கொடுத்து வரிசைப் படுத்தி காட்சிக்கு வைத்திருந்தனர்.அதைப் பார்த்த அனைவரும் அந்த ஓவியங்களைப் பாராட்டினர்.

                பள்ளிவிழாவுக்கு வந்திருந்த பிரமுகர்    அந்த ஓவியங்களைப் பாராட்டியதோடு சிறுவர்களுக்கான கலைப் போட்டி டில்லியில் நடக்கிறது அதற்கு இந்த ஓவியங்களில் சிறந்ததை அனுப்புமாறு ஆலோசனை கூறினார்.

ராதா டீச்சர் மிகுந்த மகிழ்ச்சியோடு அப்படியே செல்வதாக வாக்களித்ததோடு அடுத்த நாளே ஐந்து சிறந்த ஓவியங்களை அனுப்பிவைத்தார். அத்துடன் பள்ளியில் அந்த ஓவியங்களைப் பார்ப்பவர்கள் தங்களால் இயன்ற காசுகளைத் தருமாறு ஒரு உண்டியலும் வைத்திருந்தார்.

பதினைந்து நாட்களில் அந்த உண்டியலில் கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய்கள் சேர்ந்திருந்தன.
அன்று மாலையே ராதா டீச்சர்  அந்தத் தொகையை எடுத்துக் கொண்டு சிவாவுடன் அவர்களின் இல்லம் நோக்கிச் சென்றார். 

ஏதோ படத்தை வரைந்து கொண்டிருந்த சங்கரன் அண்ணனைப் பார்த்து மகிழ்ச்சியுடன் அதைக் காட்டினான்.அவனுடன் வந்திருக்கும் டீச்சரைப் பார்த்து வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டான்.                  
ராதா டீச்சர் வீரப்பனையும் அவர் மனைவி தேவானையையும் அழைத்து அவர்களிடம் பேசினார்.

"ஐயா, உங்கள் மகன் மிகுந்த திறமைசாலி. அவனுடைய படங்கள் டில்லிக்குப் போயிருக்கின்றன. கட்டாயம் அவன் திறமைக்குப் பரிசு கிடைக்கும்.அவனை இன்னும் நீங்கள் ஊக்கப்படுத்தினால் சிறந்த ஓவியனாக வளருவான்.

இதோ அவனுடைய படங்களுக்கான வெகுமதி இந்தப் பணம். இதைவைத்து அவனுக்கு மரக்கால்களைப் பொருத்துங்கள்.நானும் உதவி செய்கிறேன்.அவனை உலகின் சிறந்த மனிதனாகத் தலை நிமிர்ந்து நிற்கச் செய்யலாம். அதோடு அகவனைப் பெற்ற நீங்களும் பெருமைப் படலாம்."

துயரமும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் தேவானை பேசினார்." அம்மா, இத்தனை நாள் நாங்கள் செய்த பாவம். அவன் விதி இதுன்னு இருந்தோம். ஆனா நீங்க சொன்ன பிறகுதான் அவனும் நல்லா வருவான்னு எங்களுக்குத் தெரியுதும்மா.உங்களுக்குத்தான் நாங்க நன்றி சொல்லணும்." என்று டீச்சரின் கரங்களைப் பற்றிக் கண்களில் ஒத்திக் கொண்டாள்  தேவானை.

வீரப்பன் ஏதும் பேசத் தோன்றாமல் கண்களில் நன்றியும் மகிழ்ச்சியும் கலந்த நீர் நிறைய சங்கரனை அணைத்துக் கொண்டார்.

            அடுத்தமாதமே  அந்த ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி பரிசுப் பொருள்களுடன் சங்கரனைத் தேடிவந்ததும் அவனுக்கு டில்லிக்கு வரச்சொல்லி அழைப்பு வந்திருப்பதும் விழாவில் குடியரசுத் தலைவரின் கையால் அவன் பரிசு பெறப் போவதையும் அறிந்த போது வீரப்பனால் நம்பவே முடியவில்லை. சாதாரணத் தொழிலாளியான தனக்கு இத்தனை மதிப்பா என மகிழ்ந்து போனார்.

இப்போது சங்கரன் செயற்கைக் கால்களுடன் தனக்கென ஒதுக்கப்பட்ட தனியறையில் நின்று கொண்டு தூரிகை பிடித்து வரைந்து கொண்டு இருக்கிறான்

அவனைத் தேடி பத்திரிகைக்காரர்களும் சினிமாப் படம் எடுப்பவர்களும் பணத்தைக் கொட்டிப் படம் வேண்டுமென்று கேட்டுத் தவம் கிடக்கின்றனர்.

விதியையும் வெல்லலாம் எனத் தனக்குள் சொல்லிக் கொண்ட வீரப்பன் பெருமையுடன் தன மகனைப் பார்த்தார்.                                   

           அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
            பெருமை முயற்சி தரும்

உண்மைதானே.வள்ளுவர் கூறும் பொன்மொழி நம் வாழ்க்கைக்கு எத்தனை சிறந்த வழிகாட்டி! 

தன்னால் ஏதும் இயலாதென்று தயங்கி தளர்ந்து இராமல் முயற்சி செய்தால் வாழ்வில் பெருமை பெறலாம் என்ற உயந்த அறிவுரைநாம் அனைவரும் முக்கியமாக வளரும் இளைய சமுதாயம் உணரவேண்டும்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Saturday, 15 Mar 2014, 6:34 PM | Message # 48
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
"பலனை எதிர் பார்க்காமல் உதவி செய்து வாழ்பவனே உயிர் வாழ்பவனாவன்"

வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. பள்ளிக்கூடம் விட்டவுடன் வீடு வந்து சேர்ந்துவிடும் குமரன் அன்று வெகு நேரமாகியும் வந்து சேரவில்லை.அவன் தாயார் கோமதிக்குக் கவலையாக இருந்தது.

இந்த மழையில் எங்கே சென்று மாட்டிக்கொண்டானோ என்று தவித்தவாறு காத்துக் கொண்டிருந்தாள். நல்லவேளையாக காலையில் பள்ளிக்குச் செல்லும்போதே குடை எடுத்துப் போகச் சொன்னது நல்லதாப் போச்சு என்று சற்று ஆறுதல் அடைந்தாள்.

லேசாக இருட்டத் தொடங்கிய நேரம் உடம்பு முழுதும் நனைந்தவனாக உள்ளே நுழைந்தான் குமரன். அவனைப் பார்த்தவுடன் "அப்பாடா வந்துவிட்டாயா" என்று ஆறுதல் அடைந்த கோமதி "மொதல்ல உன் சட்டையை மாத்து.

உடம்பை நல்லா தொடைச்சிக்கோ.தலையை நல்லா ஈரம் போகத் போகத் துவட்டு" என்றவள் அவனுக்காக டீ போட உள்ளே போனாள் கோமதி.

உடையை மாற்றிக் கொண்டு  அமர்ந்த குமரன் அம்மா கொடுத்த டீயை ருசித்துக் குடித்தான். கோமதியும் அவனைப் பார்த்தவாறே அவன் அருகே அமர்ந்திருந்தாள் .

டீயைக் குடித்து முடித்த குமரன் கோப்பையைக் கீழே வைத்தான்."அம்மா, நான் லேட்டா வந்ததுக்காக என்னை மன்னிச்சுடு அம்மா.என்ன நடந்ததுன்னு சொல்றேன்."

"சொல்லுப்பா.என்ன நடந்தது?"
"பள்ளிக்கூடம் விட்டவுடன் வழக்கம்போல்தான் நான் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தேன். வரும் வழியில் ஒரு சின்னப்பொண்ணு இரண்டாம் வகுப்பில் படிக்கிறாளாம் பள்ளிச் சுவர் ஓரமா நின்னு அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன்.

ரொம்பப் பாவமா இருந்துதும்மா. அந்தப் பெண்ணைக் கொண்டுபோய் அவங்க வீட்டிலே விட்டுட்டு வந்தேன். போன பிறகுதான் அது என் பிரண்டு சோமுவின் வீடுன்னு தெரிஞ்சுது.அந்தப் பெண் அவன் தங்கச்சிதான்னும்  அப்புறம்தான் தெரிஞ்சுதும்மா."

"அப்படியா"என்று தன் மகனைப் பெருமையுடன் பார்த்தாள் கோமதி.
குமரன் தொடர்ந்து பேசினான்."அங்கே போனா, சோமுவின் வீட்டுச் சுவர் மழைக்கு இடிஞ்சு விழுந்துடிச்சு.

சோமுவும் அவங்கம்மாவும் இருந்த சாமானையெல்லாம் எடுத்து பத்திரப் படுத்தி வெச்சாங்க. நானும் அவங்க கூட இருந்து உதவி பண்ணிட்டு வந்தேம்மா. அதுதான் லேட்டாயிடுச்சு."என்று சொன்ன குமரனை அன்புடன் தலையைக் கோதிவிட்டாள் அம்மா.

"நீ நல்லதுதான் செய்திருக்கே.நேத்து நீ ஒரு குறள் படிச்சியே நினைவிருக்கா?"
"ஆமாம்மா. இன்னைக்கி எங்க தமிழ் வாத்தியார் கூட அந்தக் குறளைத்தான் ஒப்பிக்கச் சொன்னார். அர்த்தமும் சொல்லச் சொன்னார். நான் நல்லாச் சொன்னேன்னு அத்தனை பெரும் கை தட்டினாங்கம்மா."


"அப்படியா. அந்தக்குறளை இப்பச் சொல்லு."

  " ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
    செத்தாருள் வைக்கப் படும்."


"பலனை எதிர் பார்க்காமல் உதவி செய்து வாழ்பவனே உயிர் வாழ்பவனாவன். அவ்வாறு செய்யாதவன் உயிரற்றவனாகவே கருதப் படுவான்.அப்படின்னும் பொருள் சொன்னேம்மா."

"அதுதான் நீ உயிருள்ளவன்னு நிரூபிச்சுட்டு வந்திருக்கே. அந்த உன் நல்ல செயலுக்காக நானும் உனக்குக் கை தட்டுகிறேன் குமரா" என்றபடியே கோமதி பலமாகக் கைதட்டினாள்.

அம்மாவின் பாராட்டைக் கேட்டு மனமகிழ்ந்து அவளைக் கட்டிக் கொண்டான் குமரன். இனி எப்போதும் எந்தப் பலனும் எதிபாராமல் மற்றவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டான்.
குமரனின் முடிவை நாமும் பின்பற்றலாமல்லவா!




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Sunday, 16 Mar 2014, 7:07 PM | Message # 49
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
அரணாகும் அறிவு


முன்னொரு காலத்தில் பல சிற்றரசர்கள் தனித் தனி நாடுகளை ஆண்டு வந்தனர். .அப்படிப்பட்ட  ஒரு சிற்றரசுதான் இங்கு குறிப்பிடப்படும் ஒரு நாடு. சண்பக புரி என்று அந்த நாட்டுக்குப் பெயர்.

அந்த நாட்டுப் பிரபுக்களுக்குச் சில அதிகாரங்கள் இருந்தன. பிரபுக்கள் அந்த நாட்டுக்கு மன்னனைத் தேர்ந்தெடுப்பர். ஓராண்டானதும் அவன் பதவியிறக்கம் செய்யப்பட்டு தொலைவில் உள்ள மனிதரற்ற கடல் நடுவில் இருக்கும் தீவுக்கு அனுப்பப் படுவான்.

கானகம் நிறைந்த அந்தத் தீவில் பல விலங்கினங்கள் வாழ்ந்து வந்தன.அங்கு செல்பவர் இறப்பது உறுதி.இப்படி ஓராண்டுக்கு ஒரு மன்னர் என்ற விசித்திர பழக்கத்தைக் கொண்டிருந்தனர் செண்பக புரி மக்கள்.

அதனால் மன்னர் சிம்மாசனம் என்றால் மக்கள் ஓடி ஒளிந்து கொள்வர். அந்த ஆண்டும் மன்னரைத் தேர்ந்தெடுக்கும்  நாள் வந்தது. நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள மக்கள் அரசு அதிகாரிகள் கண்ணில் படாமல் வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருந்தனர்.

அந்த ஊரில் வைசாலி என்று ஒரு பெண்மணி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு  ஒரே மகன் விசாகன். தந்தையற்ற விசாகனைக் கண்ணும் கருத்துமாக வளர்த்துவந்தாள் வைசாலி. வைசாலி கல்வி கற்காவிடினும்  கேள்வி ஞானம் நிறைந்தவள். அறிவும் ஆற்றலும் மிகுந்தவள். தன் மகனையும் அவள் அறிவு புகட்டி நிறைந்த அறிவுள்ளவனாகவே வளர்த்திருந்தாள்.

அன்று தாயும் மகனுமாகத் தங்கள் நிலத்தைக் கவனிக்க வயலுக்குச் சென்றிருந்தனர்.மாலையில் வீடு திரும்பும்பொழுது ஊர்மக்கள் யாரையும் காணோம்.இருவரும் காரணம் தெரியாமல் திகைத்தபடி நடந்து வந்து கொண்டிருந்தனர்.அவர்கள் எதிரே காவலர் நால்வர் வந்து நின்று அவர்களை பிரபுக்களின் முன்னே கொண்டு போய் நிறுத்தினர். இப்போது அவர்களுக்குப் புரிந்துவிட்டது.

விசாகன் "ஐயா, நான் விவசாயி. கல்வி என்பதே அறியாதவன் என்னை மன்னனாக்கினால் நாட்டின் நிலை என்னாகும்?நன்கு படித்த பிரபுக்களின் வம்சத்தில் மன்னனைத் தேர்ந்தெடுங்கள்."என்று கேட்டுக் கொண்டான்.

ஆனால் இருள் வருமுன் மன்னனுக்கு முடிசூட்ட வேண்டிய கட்டாயத்தினால் பிரபுக்கள் விசாகனுக்கு முடிசூட்டினர். இப்போது விசாகன் அந்த நாட்டு மன்னன். மக்கள் அவனை மகிழ்ச்சியோடு பார்த்ததைவிட பரிதாபமாகப் பார்த்தனர்.இன்னும் ஓராண்டுதானே இவன் ஆயுள்.

பிறகு இவன் விலங்குகளுக்கு இரையாகப் போகிறானே என்பதை எண்ணி அவனுக்காக அனுதாபப் பட்டனர்.வைசாலி கலங்கவில்லை.வருவது வரட்டும்.என்று துணிவுடன் இருக்க தன் மகனுக்கு அறிவுரை கூறினாள்.

நாட்கள் சென்றன. விசாகன் மன்னனாகி இரண்டு மாதங்கள் கழிந்தன. அந்த நாட்டிலிருக்கும் கிராமங்களிலிருந்து மக்கள் சிலர் காணாமல் போகத் தொடங்கினர்.பிரபுக்களுக்கு இதென்ன புது விபரீதம் என்று அச்சம் ஏற்பட்டது.

இதனால் நாட்டில் குழப்பம் ஏற்படத் தொடங்கியது.தெய்வக் குற்றமா அல்லது கடல்கொள்ளையர் வேலையா என ஆலோசனை செய்யத் தொடங்கினர். இப்படியே மாதங்கள் ஓடின.இப்போது இன்னும் ஒரு மாதம்தான் விசாகன் மன்னனாக இருப்பான்.

அதன்பின் நடுக்கடலிலுள்ள தீவுக்கானகத்திற்கு அனுப்பப் படுவான்.அதன்பின் அவன் மீண்டு வரமாட்டான். பாவம் இளம் வயது. அவன் தாய்க்கு மனம் எவ்வளவு வேதனைப் படும்?என்று மக்கள் பலவாறு பேசிக் கொண்டனர்.

திடீரென்று ஒரு நாள் அரண்மனையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த ராஜமாதாவான வைசாலியைக் காணோம். ஊரெங்கும் ஒரே பரபரப்பு. பிரபுக்களின் அச்சம் உச்சத்திற்கே போய்விட்டது. சபையைக் கூட்டி ஆலோசனை செய்தனர்.

ஊரெங்கும் ராஜமாதாவைத் தேட ஆணை பிறப்பித்தான் விசாகன்.ஆனால் வைசாலியோ அவளுக்கு முன்னர் காணாமல் போன மக்களோ யாரும் கிடைக்கவே இல்லை. இதற்கிடையே விசாகனின் மன்னர் பதவி முடிவுக்கு வந்தது. அன்றுடன் அவன் அரசபதவி முடிந்தது.

மறுநாள் அதிகாலையிலேயே அரண்மனையில் பிரபுக்கள் கூடினர்.சகல மரியாதையுடன் விசாகனை கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர்.இளம் வயது மன்னனை கடைசியாகப் பார்க்க மக்கள் கூட்டம் நிறைந்து இருந்தது.

ஒரு சிறிய கப்பலில் விசாகன் ஏற்றப் பட்டான்.அதில் ஒரு மாலுமியும் அவனுக்கு உதவியாளனும் மட்டும் இருந்தனர்.பிரபுக்கள் சைகை செய்து கப்பலை செலுத்தச் சொன்னார்கள். கப்பல் புறப்பட்டது.கண்ணீருடன் சிலர் கப்பல் மறையும் வரை பார்த்து நின்றனர்.

சில நாட்கள் கழித்து அந்தக் கப்பல் மீண்டும் வந்தது. மாலுமி பிரபுக்களிடம் வழக்கம்போல் விசாகனையும் குறித்த இடத்தில் கடலில் தள்ளிவிட்டதாகத் தெரிவித்தான்.பிரபுக்களும் அடுத்த மன்னனைத் தேர்ந்தெடுத்து பட்டாபிஷேகம் செய்து முடித்தனர்.

இப்போதும் சண்பகபுரி மக்கள் காணாமல் போவது நிற்கவில்லை. பிரபுக்களின் கவலை அதிகமாயிற்று. அவர்களின் அதிகாரத்திற்கு இடையூறு வந்ததேயென்று அச்சமும் கோபமும் கொண்டனர்.ஓராண்டு முடியும் தறுவாயில் அந்த சண்பகபுரி  மீது படைஎடுத்தான் ஒரு மன்னன்.

பிரபுக்களுக்கு அச்சத்தை விட ஆச்சரியமே மேலோங்கியது.ஒற்றர்களை ஏவி யாரது என விவரம் கேட்டனர்.
வீரபுரி என ஒற்றர் தெரிவிக்க மிகுந்த ஆச்சரியத்துக்கு உள்ளாகினர்.

அப்படி ஒரு நாடு இருப்பதாகவே தெரியாதே எனத் திகைத்து முடிக்கும் முன்பாகவே வீரபுரி மன்னன் அரண்மனைக்குள் நுழைந்து மன்னராக ஆட்சி புரிந்து வந்த பிரபுக்களைஎல்லாம் கைது செய்து சிறையில் அடைத்தான்.சண்பகபுரியின் ஆட்சியைக் கைப்பற்றினான்.

பட்டாபிஷேகம் செய்து கொண்ட அந்தக் காட்சியைக் கண்டு தலை குனிந்து நின்றிருந்த பிரபுக்களின் முன் வந்து நின்றான் அந்த வீரபுரி மன்னன்.
"என்னைப் பார்த்த நினைவில்லையா உங்களுக்கு?ஓராண்டுக்குள்ளாகவே என்னை மறந்து விட்டீர்களா?"
இந்தக் குரலும் முகமும் பழக்கமானதாக இருக்கிறதே எனத் திகைத்தார்கள் பிரபுக்கள்.

அப்போது அவர்கள் முன் வந்து நின்றாள் வைசாலி. "திகைக்காதீர்கள்.கடந்த ஆண்டு உங்களுக்கு மன்னனாக இருந்த விசாகன்தான்.என் மகன்தான்.உங்களுக்கு அடிமையாக ஒரு ஆண்டு உங்கள் கைப் பாவையாக பொம்மை அரசனாக இருந்தவன்தான்."

'இன்னும் சாகாமல் இருப்பது எப்படி? காட்டில் வனவிலங்குகள் இவனைக் கொல்லவில்லையா? எப்படி ஒரு நாட்டின் மன்னனான்?'அவர்களுக்கு எழுந்த சந்தேகத்தைப போக்கி வைத்தாள் வைசாலி.

"நீங்கள் என்மகனை மன்னனாக்கியதும் அவனிடம் சில வேட்டைக்காரர்களை அனுப்பி அந்தக் காட்டிலுள்ள வனவிலங்குகளை வேட்டையாடச் சொன்னேன். மீண்டும் விவசாயிகள் கட்டடக் கலைஞர்களை அனுப்பி காட்டை நாடாக்கினேன்.

அதையெல்லாம் சீர்செய்ய நானே அங்கு சென்று என் மகன் வரும்வரை நாட்டைப பாதுகாத்து படைகளைச் சேர்த்து வந்தேன்.இந்த ஓராண்டுக்குள் எங்கள் வீரபுரி உங்கள் சண்பகபுரியை  விட வலுப்பெற்று நிற்கிறது. என்மகன் விசாகன் இப்போது அறிவினாலும் வீரத்தினாலும் உங்கள் முன் வெற்றிவீரனாக நிற்கிறான்."

விசாகன்,"பிரபுக்களே உங்களின் பேராசையால் அப்பாவி இளைஞர்களை நீங்கள் பலிகொடுப்பதை நிறுத்த என் தாயின் ஆலோசனையின்படி நடந்து நானும் உயிரபெற்று பிற இளைஞர்களையும் காப்பாற்றிவிட்டேன்.

எங்கள் உயிருக்கு அரணாக இருந்தது என் தாயின் அறிவு சார்ந்த ஆலோசனைகளே.இனி இந்த சண்பக புரி   வீரபுரியின் ஆட்சிக்குட்பட்டது."என்று சொன்னதைக் கேட்டு மக்கள் மகிழ்ந்தனர்.விசாக மாமன்னர் ! வாழ்க, வாழ்க! என்ற கோஷம் வானைப் பிளந்தது.


 
             "அறிவற்றங்  காக்கும்  கருவி  செறுவார்க்கும்
                உள்ளழிக்க  லாகா அரண்."


அறிவு அழிவு வராமல் பாதுகாக்கும் ஆயுதம்.பகைவராலும் அழிக்கமுடியாத பாதுகாப்பு அறிவு.
என்று வள்ளுவர் வாக்கு உண்மையல்லவா ?


இதுவரை ஏமாற்றி வாழ்ந்தோம். இப்போது அறிவு நம்மை வீழ்த்தி விட்டது" என்று மனம் திருந்தி வைசாலிஇடம்  மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர் பிரபுக்கள்.

உண்மைதானே.அறிவிருந்தால் எங்கும் வெற்றி பெற்று வாழலாம்.எனவே அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.ஆனந்தமாய் வாழ்வோம்


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
NathasaaDate: Wednesday, 09 Apr 2014, 8:00 PM | Message # 50
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
அருமையான பதிவு லதாக்கா
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » குறள் கதை (நீதி கதைகள்)
Search: