விவசாய தொழில்நுட்பம் - Page 12 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya, Laya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாய தொழில்நுட்பம் » விவசாய தொழில்நுட்பம் (விவசாய தொழில்நுட்பம்)
விவசாய தொழில்நுட்பம்
JanviDate: Thursday, 20 Aug 2015, 6:43 PM | Message # 111
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
சும்மா தராது சுரைக்காய் ஏக்கருக்கு 12 டன்


குறைந்த பரப்பில் கூட நன்கு நிரந்தர அமைப்புகள் அமைத்து அதன் மூலம் சுரைக்காயை பலவித மண் வகைகளிலும் வளர்த்து 12 டன் வரை மகசூல் ஒரு ஏக்கரில்
பெறலாம் என்றவுடன் செலவு அதிகமாகுமே என்று ஏங்க வேண்டாம். இதற்கு
வங்கிகளின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் தப்பே இல்லை.
சுரைக்காய்க்கு உள்ள சிறப்பே அது ஓராண்டு தாவரமாக, வேகமாக படர்ந்து
செல்லும் தன்மை தான். இதனை தரையில் மற்றும் கூரைகளில் கூட படர விடலாம்.
மாட்டுக் கொட்டகை, பம்ப் ஹவுஸ், சேமிப்பு கூடம் இப்படி எங்கெல்லாம் கொடியை
ஏற்ற முடியுமோ அங்கு கூட பந்தல் இன்றி சமாளித்து சற்று சம்பாதிக்க உதவும்.
இப்பயிர் வறட்சியை தாங்கி வளரும்.
சுரைக்காய்க்கு உப்பில்லை என்பது தவறு. அதில் சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் இரும்பு சத்து, வைட்டமின் பி
மற்றும் புரதம் 0.2 சதமும் கொழுப்புச்சத்து 0.1 சதம் கார்போ ஹைட்ரேட் 2.5
சதமும் தாது உப்புக்கள் 0.5 சதம் உள்ளன. சுரைக்காயில் பல ரகங்கள் உள்ளன.
கோ.1, அர்கா பஹார், புசா சம்மர், புராலிபிக் நீளம் புசா சம்மர், புராலிக்
உருண்டை மெகதூத் மற்றும் பூசா மன்ஞரி முதலியன குறிப்பிடத்தக்கவை.
நேரடியாக விதைப்பதை விட ஒரு ஏக்கருக்கு 1.200 கிலோவை பாலிதீன் பைகளில் நாற்று
விட்டு வளர்த்தல் அல்லது குழித்தட்டு முறையில் வளர்த்து நடுதல் நன்று.
விதைக்கு முன்பு அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் ஒரு கிலோ விதைக்கு 500 கிராம்
என்ற அளவில் ஆறின அரிசிக் கஞ்சியில் கலந்து கலவையில் நன்கு கலக்கி நிழலில்
உலர்த்தி பின் விதைக்கலாம். நடவு வயலுக்கு 10 டன் நன்கு மக்கிய தொழுஉரம்
அல்லது தரமான மண்புழு உரம் 5 டன் மற்றும் 188 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம்
இடவேண்டும்.
ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம் (800 கிலோ) 4 பாக்கெட் மற்றும் சூடோமோனாஸ் 5 பாக்கெட் (ஒரு கிலோ) என்ற அளவில் நன்கு மட்கிய தொழு உரத்துடன்
40 கிலோ வேப்பம் பிண்ணாக்கும் சேர்த்து கடைசி உழவிற்கு முன் இடவும்.
செடிக்கு செடி 2 .5 மீட்டர் வீதம் இடைவெளி, வரிசைக்கு வரிசை 2 மீட்டர்
வீதம் இடைவெளியில் குழிகள் எடுத்து 7-10 நாட்கள் அந்த குழிகள் ஆற விட
வேண்டும். ஒருஅடி நீளம், ஒருஅடி அகலம், ஒருஅடி ஆழம் உள்ள இக்குழிகள்
தோண்டிட கருவிகள் உள்ளன. குழிக்கு ஒரு நாற்று நட்டால் நன்று.
பெண் பூக்கள் தோன்றிட எத்ரல் பயிர் வளர்ச்சி ஊக்கியை 2.5 மிலி எடுத்து அதனை
சுத்தமான நீர் 10 லிட்டரில் கலந்து முதல் இரண்டு இலை உருவாகிய பின் முதல்
முறையும் பின் வாரம் ஒருமுறை இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும். உயர்
விளைச்சல் ரகத்துக்கு ஏக்கருக்கு 120 கிலோ தழைச்சத்து 40 கிலோ மணி சத்து,
சாம்பல் சத்து 40 கிலோ இட வேண்டும். 30 நாள் கழித்து தழைச்சத்து, சாம்பல்
சத்துக்கள் மேலுரமாக இடவும். வண்டுகள் வந்தால் மீதைல் டெமடான் ஒரு மில்லியை
1 லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவும். தாமிரம் மற்றும் கந்தகத்
தூள்களை தெளிக்கக் கூடாது. மோனோக்ரோட்டா பாஸ் பயன்படுத்தக் கூடாது. மேலும்
விபரங்களுக்கு 98420 07125 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
- டாக்டர் பா.இளங்கோவன்
தோட்டக்கலை உதவி இயக்குனர், உடுமலை.
 
JanviDate: Thursday, 20 Aug 2015, 6:45 PM | Message # 112
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
பஞ்சகவ்யா தயாரிப்பது எப்படி



இன்று தமிழ்நாட்டு திட்ட கமிஷன் துணைத்தலைவர் சாந்தஷீலா நாயர் முதல் த.நா.விவசாய பல்கலை கழக துணை வேந்தர் டாக்டர் ராமசாமி வரை மட்டுமல்ல,
ஸ்பிக் போன்ற இரசாயன உரத் தயாரிப்பாளர்கள் கூட இயற்கை வழி விவசாயம் பற்றி
பேசத் தொடங்கி விட்டனர். ஸ்பிக் நிறுவனம் 3 வகை இயற்கை உரங்களை விற்பனைக்கு
அனுப்ப தொடங்கி விட்டது.
இந்நிலையில் ""பஞ்சகவ்யா'' பற்றி எங்கும் பரபரப்பாக பேசுகின்றனர். பஞ்சகவ்யா என்றால் என்ன? டாக்டர் நம்மாழ்வார்
தினம் தினம் பேசினாரே இந்த பஞ்சகவ்யா பற்றி அறிவோம்.
இதை தயாரிக்க மாட்டு சாணம் 3 கிலோ, மாட்டு சிறுநீர் (கோமியம்) - 3லி, பால் - 2லி, தயிர் -
2லி, நாட்டு சர்க்கரை - 1 கிலோ, (கரும்புச்சாறு - 2லி பயன்படுத்தலாம்),
வாழைப்பழம்-12, இளநீர்-2லி, ஈஸ்ட்-100கி, கடலை பிண்ணாக்கு- 1 கிலோ.
பிண்ணாக்கை ஊறவைத்து, அனைத்து பொருட்களையும் மண் பானை / வாளியில் கலந்து, துணியால்
மூடி நிழலில் வைக்க வேண்டும். தினம் கலக்கி விட்டால் நுண்ணுயிர்கள்
பெருகும். இதன் மூலம் 30லி பஞ்சகவ்யா கிடைக்கும். 10 லிட்டர் நீரில்
300மிலி கலந்து தெளிக்கலாம். பயிர்கள் சிறப்பாக வளரும். 6 மாதம் வரை இதை
பயன்படுத்தலாம். 1 ஏக்கருக்கு 30லி பஞ்சகவ்யாவுடன் 200லி அமுதக் கரைசல்
பாசன நீருடன் கலந்து விடலாம். இதை பயன்படுத்த மண் வளம் கூடும். பூக்கள்
அதிகமாகும்.
அதிக லாபம் கிடைக்கும். www.vanagam.com, www.tnau.ac.in இணைய தளத்தை பாருங்கள்.
- எம்.ஞானசேகர்,
விவசாய ஆலோசகர்,
93807 55629.
 
JanviDate: Thursday, 20 Aug 2015, 6:48 PM | Message # 113
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
வனிலா



கர்நாடகத்தில் சிமோகா மாவட்டத்தில் சாகர் வட்டத்தில் உள்ள பாக்குத் தோட்டங்களில் வனிலாவை ஊடுபயிராகச் செய்துள்ளனர். வனிலாவுக்கு என்று தனியே
இங்குள்ள விவசாயிகள் எந்த செலவும் செய்வதில்லை. அதற்கென உரங்களை கூட
இடுவதில்லை. வனிலாவிற்கு அவசியம் செய்தாக வேண்டிய மகரந்தச் சேர்க்கையை
அந்தந்த விவசாயிகளின் குடும்பத்தினரே செய்து கொள்வதால் அதிகப்படியான செலவு
எதுவும் இல்லை.
உழவியல் முறைகள் : தென்னை ஓலை, பாக்கு ஓலை மற்றும் காய்ந்த மரக் கொப்புகளைப் பயன்படுத்தி நடவு செய்திட்ட கொடிகளுக்குத்
தனித்தனியே பந்தல் போன்று ஏற்படுத்தி, சூரிய ஒளியின் நேரடித்
தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். சீதோஷ்ண நிலைமையைப் பொறுத்து கொடி
களுக்குத் தேவைப்பட்டால், தண்ணீர் ஊற்றிவர வேண்டும். கொடிகளின் தூர்ப்
பாகங்களில் போதுமான அளவிலே அங்ககக் கழிவுகளைப் பயன்படுத்தி மூடாக்கு இட
வேண்டும். வனிலாக் கொடிகளைத் தாங்குவதற்கு மரங்களின் மீது கட்டி ஏற்றி
வருவதைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
குறைவான உயரம் உள்ள இடங்களில் பூக்கள் மலரத் தொடங்கியிருந்தால், அன்றே காலை 6 மணி முதல் மதியம்
1 மணி வரை கை கொண்டு பூக்களில் மகரந்தச் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும்.
வனிலா பீன்ஸ்களின் அடி நுனி மஞ்சளாக மாறும்பொழுது அறுவடையைச் செய்ய
வேண்டும். இதனால் வனிலா பீன்ஸ்களின் தரத்தை மேம்படுத்த இயலும். அறுவடை
செய்தவுடன் பச்சை பீன்ஸ்களாக விற்பனை செய்யலாம்.
காசர்கோடு பகுதியில் வனிலாவை வைத்து "வனிலா சுகர்' என்ற புதிய பொருளைத் தயாரித்து வருகின்றனர்.
மற்றும் வனிலாவை வைத்தே ஐஸ்கிரீம் பாதாம் பால் என்ற மணம் கமழும் பொருட்களை
வழங்கி வருகின்றனர். வனிலா என்பது இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதமாகும்.
இத்தகைய இயற்கையான வனிலாவை உற்பத்தி செய்து நீடித்த முறையிலே வருமானம்
பெறுவதற்கு முயற்சிக்கலாம். (தகவல் : ஸ்பைசஸ் இந்தியா இதழ், கொச்சி).
வாசனை கருதி சாக்லேட் தயாரிப்பிலும் வனிலா இணைகின்றது. வனிலாவைக் கொண்டு ஊற
வைத்த மதுபானங்கள் புத்துணர்வு அளிக்கின்றனவாம். மருத்துவத் துறையில்
காய்ச்சல், வலிப்பு முதலான பிணிகளைக் குணமாக்கவும் இது உபயோக மாகின்றதாம்.
- எஸ்.நாகரத்தினம், விருதுநகர்.
 
JanviDate: Thursday, 20 Aug 2015, 6:49 PM | Message # 114
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
ஐந்து ஏக்கரில் மல்லிகை... மாதம் ரூ.2 லட்சம் வருவாய்

ஐந்து ஏக்கர் நிலத்தில் மல்லிகைப்பூ சாகுபடி செய்து மாதம் ரூ.2 லட்சம் வருமானம் கிடைக்குமா? என கேட்கலாம். மதுரை மாவட்டம் மஞ்சம்பட்டியை சேர்ந்த
பட்டதாரி விவசாயி ரெங்கநாதன் தனது நிலத்தில் மல்லிகை சாகுபடி செய்து
பணியாளர்கள் 150 பேருக்கு தினமும் சம்பளம் வழங்குவதோடு மாதம் ரூ.2 லட்சம்
வருவாய் ஈட்டுகிறார். தேசிய அளவில் சிறந்த விவசாயிக்கான விருது
பெற்றுள்ளார்.
மல்லிகை விவசாயத்தை மணக்கச் செய்யும் ரெங்கநாதன் கூறுகையில், ""சொட்டுநீர் பாசனம் மூலம் ஐந்து ஏக்கரில் மல்லிகை விவசாயம்
செய்கிறேன். செடியை நடவு செய்து ஆறாவது மாதத்தில் இருந்து பூக்கள்
பறிக்கலாம். முறையாக பராமரித்தால் 15 ஆண்டுகள் கூட மல்லிகை கிடைக்கும்.
உதாரணத்துக்கு எனது மகன் அழகர்சாமி பிறந்த போது, அவரது பெயரில் மல்லிகை
செடி ஒன்றை நட்டேன். அவருக்கு இப்போது வயது 15. ஐந்து ஏக்கரில் நடவு
செய்த செடியில் இருந்து அதிகளவு பூக்கள் பூக்கிறது. இயற்கை அடிஉரம் மட்டுமே
பயன்படுத்துகிறேன். நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 கிலோ வரை பூக்கள்
கிடைக்கும். சராசரியாக கிலோ ரூ.200க்கும், முகூர்த்த நேரங்களில் கிலோ
ரூ.1500க்கும் அதிகமாக விலை கிடைக்கும். மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்
விலைக்கே வியாபாரிகள் பூக்களை எடுத்து கொள்கின்றனர். மஞ்சம்பட்டி குண்டு
மல்லிகைக்கு மணம் அதிகம் என்பதால் ஏற்றுமதியும் செய்கின்றனர். வயல்
பராமரிப்பு, களை எடுப்பு, பூக்கள் பறிப்பு, நீர் மேலாண்மை, உர மேலாண்மை என
150 பேருக்கு வேலை கொடுக்கிறேன். மாதம் வருவாய் சராசரியாக ரூ.2
லட்சத்துக்கு குறையாது. மல்லிகை விவசாயத்தில் முறையான பராமரிப்பு, உழைப்பு,
இயற்கை அடிஉரம், பூச்சிக்கொல்லி முதலியவற்றை முறையாக கடைப்பிடித்தால்
மல்லிகை விவசாயம் மணக்கும். எனது தொழில்நுட்ப ரகசியத்தை பிறருக்கும்
கற்றுத்தருகிறேன்,'' என்றார்.
தொடர்புக்கு: 90957 28851
-கா.சுப்பிரமணியன், மதுரை.
 
JanviDate: Thursday, 20 Aug 2015, 6:51 PM | Message # 115
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
அதிக லாபம் தரும் ஒட்டு ரக பப்பாளி - 2 ஆண்டில் ரூ.10 லட்சம் வரை லாபம்

சிவகாசி எம்.புதுப்பட்டி நெடுங்குளம் கிராம விவசாயி சுப்பிரமணியன் புதிய முயற்சியாக ஒட்டு ரக பப்பாளி பயிரிட்டு அறுவடை செய்கிறார். 72 வயதாகும்
இவர் தற்போது மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில்
பி.எப்.டேக்(பண்ணை படிப்பு)முதல் ஆண்டு படிக்கிறார்.அவர் கூறியதாவது:
ரெட்ராயல் என்னும் ஒட்டு ரக பப்பாளியை 1 ஏக்கரில் சாகுபடி செய்து உள்ளேன்.
ஒட்டு ரக செடி ஸ்ரீவில்லிப்புத்தூர் பூவாணியில் கிடைக்கிறது. கரிசல் காட்டு
மண் என்பதால் செடி நன்கு வளர்கிறது. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால்
போதும். உரத்தின் அளவும் குறைவு தான். இந்த ரக பப்பாளி ஒன்று 1 முதல் 2
கிலோ வரை இருக்கும். செடி நட்டு 6 மாதம் பின் ஒவ்வொரு நாளும் குறைந்தது 300
கிலோ வரை பப்பாளி கிடைக்கிறது. மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ. 12 முதல் 20
வரை விலை போகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு குறைந்தது 300 முதல் 500 வரை
வருமானம் கிடைக்கிறது. செடியின் வாழ்வு காலம் 2 ஆண்டு. இரண்டு ஆண்டில் 200
டன் பப்பாளி மகசூல் பெறுவேன். குறைந்தது 10 லட்சம் வரை லாபம்
ஈட்டலாம்,என்றார்.தொடர்புக்கு 94434 60082.- எஸ்.சுகந்தன், சிவகாசி.
 
JanviDate: Friday, 28 Aug 2015, 5:55 PM | Message # 116
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
தேங்காய் உடைக்கும் இயந்திரம்



விவசாயிகளுக்காக தேங்காய் உடைக்கும் இயந்திரம் கோவை மாவட்டம், சிட்கோவைச் சேர்ந்த வேலுச்சாமி (98430 33808) வடிவமைத்துள்ளார். நாளுக்கு நாள்
அதிகரிக்கும் ஆட்கள் பிரச்னை விவசாயத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. இதை
நிவர்த்தி செய்ய இந்த தேங்காய் உடைக்கும் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரமானது மின் மோட்டார் 3 குதிரைத்திறன் உள்ளதாக உள்ளது.
உட்செலுத்தும் கலன், நெம்புகோல் தத்துவம், பிளேடு ஆகியவை அமைப்பில் உள்ளன.
மட்டையிலிருந்து உரித்த தேங்காயை இரண் டாக பிரிக்கும் திறன் உள்ளது. ஒரு
மணிக்கு 2000 காய்கள் உடைக்கும் திறன் உள்ளதாக உள்ளது. தேங்காயிலிருந்து
கிடைக்கும் தண்ணீர் வெளியேற்ற குழாய் அமைப்பு உள்ளது. உட்செலுத்தும் கலனில்
தேவையான அளவு தேங்காய் போடும் அளவுஅமைப்பு உள்ளது. இதன் உத்தேச விலை
ரூ.5,00,000/- ஆகும்.
 
JanviDate: Friday, 28 Aug 2015, 5:57 PM | Message # 117
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
வாழையில் வாடல் நோய்

வாழை சாகுபடியாளர்களின் கவனத்திற்கு...

உங்கள் வாழையில் பனாமா வாடல் நோய் ஏற்பட்டுள்ளதா என்று கண்காணியுங்கள்.
தாக்கப்பட்ட மரங்களின் அடி இலைகள் திடீரென முழுவதும் பழுத்து, தண்டுடன்
சேரும் இடத்தில் சுற்றிலுமாக ஒடிந்து, மடிந்து வாழைத் தண்டைச் சுற்றிலும்
துணி கட்டியதுபோல் காட்சியளிக்கும். பின் தண்டின் அடிப்பாகத்தில்
மண்ணிலிருந்து மேல்நோக்கி நீள வாக்கில் வெடிப்பு ஏற்படும். கிழங்கினைக்
குறுக்கே வெட்டிப்பார்த்தால், செம்பழுப்பு நிறத்தில் வட்ட வட்டமாக
இப்பூஞ்சாணம் தாக்கி அழிந்துள்ள பகுதிகளைக் காணலாம்.
செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், விருப்பாட்சி மற்றும் பல உள்ளூர் ரகங்களை இந்நோய் தாக்கி பெரும்
சேதத்தை விளைவிக்கின்றது. நூற்புழு பாதிப்பு இருக்கும் தோட்டத்தில் வாடல்
நோயின் அறிகுறிகள் அதிக அள வில் காணப்படுகின்றன.
வாடல் நோயின் வித்துக் கள் மண்ணில் பல ஆண்டுகள் உயிருடன் இருக்கும் தன்மையுடையது. பூஞ்சாண
வித்துக்கள் முளைத்து பக்க வேர்கள் மூலமாக கிழங்குப் பகுதியைத் தாக்கும்.
நோய் தாக்கிய கிழங்குகள் மூலமாகவும், பாசன நீர் மூலமாகவும் இந்நோய்
ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்குப் பரவுகிறது.
மேலாண்மை முறைகள்: வாடல் நோய் அதிக அளவில் காணப்படும் நிலங்களில் இந்நோய்க்கு எதிர்ப்புத்திறன்
கொண்ட பூவன் (கதலி), ரொபஸ்டா, கை போன்ற வாழை ரகங்களைப் பயிரிடலாம். வாழைக்
கன்றுகளை நோய் தாக்காத தோட்டங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்.
விதைக்கிழங்குகளைப் பரிசோதித்து செந்நிறப் பகுதிகள் இல்லாதவற்றை தேர்வு
செய்ய வேண்டும். கிழங்குகளை நடுவதற்கு முன் களிமண் குழம்பில் நனைத்த
கிழங்கின் மீது பத்து கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற உயிரியல்
பூசணக்கொல்லியினைச் சீராகத் தூவ வேண்டும்.

வாழை வாடல் நோய் தடுக்க...
ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளூரசன்ஸ் 20 கிலோ உலர்ந்த சாண எரு
அல்லது மணலுடன் கலந்து ஒவ்வொரு வாழைக்கும் தூர்ப் பகுதியைச் சுற்றிலும்
இடவேண்டும். காப்சூல் எனப்படும் மாத்திரை குப்பிகளில் 50 மில்லி கிராம்
சூடோமோனாஸ் புளூரசன்ஸ் நிரப்பி நட்ட ஐந்தாம் மற்றும் ஏழாம் மாதங்களில்
கிழங்கினுள் செலுத்த வேண்டும். வாழைக்கிழங்கில் 45 டிகிரி சாய்வாக 10
செ.மீ. ஆழ துளையிட்டு உள்ளே செலுத்த வேண்டும். வாழைத்தண்டில் செலுத்தினால்
பயன் இல்லை. குப்பியினைச் செலுத்தியபின் களிமண் உருண்டை கொண்டு துளை வாயிலை
மூடிவிடவும்.
மாத்திரை குப்பி வைப்பதை தக்க ஆலோசனை பெற்று வைக்க வேண்டும். நோய் தாக்கிய மரங்களை கிழங்கோடு பிடுங்கி அழித்துவிட வேண்டும்.
அக்குழியில் போதிய அளவு சுண்ணாம்பு (குழிக்கு 1-2 கிலோ) இடவேண்டும்.
முனைவர்
எஸ்.ஜெயராஜன் நெல்சன்,
ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.
 
JanviDate: Friday, 28 Aug 2015, 5:59 PM | Message # 118
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
"சொட்டு சொட்டாக நீர்; கட்டுக் கட்டாக கரும்பு''



சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் நீர் சொட்டு சொட்டாக வேருக்கு செல்வதால் களைகள் கட்டுப்பட்டு பயிர்கள் நன்றாக வளரும் என மதுரை வேளாண்மைக் கல்லூரி
வேளாண் அறிவியல் மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் ரங்கராஜ், உதவி பேரா
சிரியர் ராஜமாணிக்கம் தெரிவித்தனர். பேராசிரியர் கூறியதாவது :
மதுரை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் குறைந்தளவு நீரில் பயிர்
விளைவிப்பதற் காக செயல்படுத்தப்படும் திட்டம் தேசிய வேளாண் வளர்ச்சி
திட்டம். தற்பொழுது இத்திட்டத்தின் கீழ் சந்தை சார்ந்த துல்லிய
பண்ணைத்திட்டம் வேளாண்மை அறிவியல் மையம் மதுரையில் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க விவசாயிகள்
ஊக்குவிக்கப்படுகின்றனர். மதுரை மாவட்டத்திற்கு இத்திட்டத்தின் மூலம்
கரும்பிற்கு மட்டும் 98 எக்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு எக்டருக்கு தேவையான
கரையும் உரங்கள் மானியமாக வழங்கப்படுகிறது. சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து
கரும்பு சாகுபடி செய்து வரும் விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைய
தகுதியுடையவர்களாவர்.
துல்லிய பண்ணைத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 40 சதவீதம் நீர் சிக்கனப்படுத்த முடியும். இரு மடங்கு விளைச்சல், தரமான
விளைபொருள், களைக்கட்டுப்பாடு சாத்தியமாகிறது. மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு
வட்டத்திலும் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. சொட்டுநீர்ப் பாசனம்
அமைத்துள்ள கரும்பு விவசாயி கள் கரையும் உரங்களை மானியமாகப் பெற்று பயனடைய
0452 - 242 2955 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
- முனைவர் தி.ரங்கராஜ்,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
மதுரை.
 
JanviDate: Friday, 28 Aug 2015, 6:01 PM | Message # 119
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.1.65லட்சம் : அதிக வருவாய் தரும் நாட்டு வாழை



ரசாயன நச்சு உரங்கள் கலக்காமல் இயற்கை உரங்கள் கொண்டு வாழை சாகுபடி செய்கிறார் திருத்தங்கல் விவசாயி திருவேங்கட ராமானுஜம். அவர் கூறியதாவது: 3
ஏக்கர் பரப்பளவில் 1 ஏக்கருக்கு 1100 வீதம் 3,300 வாழை கன்றுகள் நட்டு
பராமரித்து வருகிறேன். பாரம்பரிய வாழையான நாட்டு வாழைக்கு தமிழகத்தில்
என்றுமே மவுசு உண்டு. ஜீரணதி, வைட்டமின்கள் நிறைந்த நாட்டு வாழையில் பல
மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த வாழையின் நுணுக்கங்கள் அறிந்தால்
பராமரிப்பது எளிது. இதன் இலைகள் தடித்து இருப்பதால் மார்க்கெட்டில் தனி
"டிமான்ட்' இருக்கிறது. இலை ஒன்று ரூ. 2 முதல் 3 வரை விற்பனை ஆகிறது.
வாழைத்தார் வரும் வரை கிட்டத்தட்ட இதிலே ஒரு வாழை மரத்திற்கு 100 ரூபாய்
வரை பார்த்து விடலாம். வாழை தார் ஒன்று 150 முதல் 200 வரை விற்பனை ஆகின்றன.
ஏக்கருக்கு குறைந்தது 1லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வரை வருமானம்
ஈட்டமுடியும்.
பயிர் செலவினங்களும் குறைவு தான். தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை மூலமாக மானிய விலையில் விவசாயிகள் களை வெட்டும்
இயந்திரங்கள் கிடைக்கிறது.
இதில் ஊற்றப்படும் டீசல் ஒரு நாளைக்கு 5 லிட்டர் என பார்த்தால் ரூ. 200, இயந்திரத்தை இயக்க கூலி ரூ. 500 என களை
வெட்ட ரூ. 700 தான் வருகிறது. இதனால் களை வெட்ட மாற்று ஆட்களை
தேடவேண்டியதில்லை.
நாட்டு வாழைக்கு இயற்கை சார்ந்த குப்பை, மாடு, ஆட்டு சாணி, எரிக்கிலை, பசுமை தாழ் உரங்கள் நேரம் அறிந்து போடப்பட்டு
பயிரிடப்படுகிறது. வாழை மிகவும் கால் ஊன்றி மழை காலங்களில் சாயும் தன்மை
குறைகிறது. இந்த ரக நாட்டு வாழைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். மருந்து
செலவுகள் குறைவு, செயற்கையாக ஏதும் சேர்ப்பது இல்லை.
மண்புழு உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்டோ பாக்டீரியா திரவ வடிவில் குப்பையுடன் சேர்த்து
போடும் போது, நோய் தன்மை குறைந்து வாழைக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது
என்றார். இவரிடம் பேச 98655 83986 ல் அழைக்கலாம்.
-எஸ்.சுகந்தன், சிவகாசி.
 
JanviDate: Friday, 28 Aug 2015, 6:07 PM | Message # 120
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
மண்ணை பொன்னாக்கிய ஹிட்லர்



மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி பெரியபட்டியை சேர்ந்த முன்னாள் கப்பல்படை வீரர் ஹிட்லர். 53 வயதான இவர் 15 ஆண்டுகள் கப்பல்படையில் பணிபுரிந்தார்.
பின் விருப்ப ஓய்வில் சொந்த ஊருக்கு வந்தார். கப்பல்படை பணியில் கிடைத்த
பணப் பலன்களை பாழாக்காமல் ஐந்து ஏக்கர் வாங்கி மண்ணைப் பொன்னாக்கினார்.
விவசாயம் பற்றி துளியும் தெரியாத ஹிட்லர் படிப்படியாக விவசாயப் பணிகளை
குறுகிய காலத்தில் ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார்.
நெல், கரும்பு சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் தேவை. மல்லிகைப்பூ சாகுபடிக்கு கூடுதல்
பணியாளர் தேவை என்பதால், சொட்டுநீர் பாசனம் மூலம் குறைந்த நீரில் அதிக
மகசூல் தரும் பட்ரோஸ் விவசாயத்தில் ஹிட்லர் களம் இறங்கினார். இவரது
ஆர்வத்துக்கு தோட்டக் கலைத்துறை நேசக்கரம் நீட்டியது. 50 சதவிகித
மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க உதவியது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக
பட்ரோஸ் உற்பத்தியில் மதுரை மாவட்ட அளவில் சாதனை விவசாயியாக திகழ்கிறார்.
ஹிட்லர் கூறியதாவது: விவசாயம் பற்றி துளியும் எனக்கு தெரியாது. கப்பல்படையில்
கிடைத்த பணம் முழுவதையும் விவசாயத்தில் முதலீடு செய்ய எண்ணினேன். 20
ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி பண்படுத்தினேன்.
தோட்டக்கலைத்துறை மானியத்துடன் 70 சென்டில் "நிழல்வலை' அமைத்து பட்ரோஸ்
வளர்த்து வருகிறேன். மேற்கு வட்டார வேளாண் துறையினர் மூலம் மண் புழு
மற்றும் இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்தி வருவதால் சாகுபடி அதிகரித்து
வருகிறது.
பட்ரோஸ் செடியை நடவு செய்து மூன்றாவது மாதம் முதல் எட்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து பலன் கொடுக்கும். ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்
செடிகளுக்கு கவாத்து செய்ய வேண்டும். மல்லிகைப்பூ விவசாயத்தை விட பட்ரோஸ்
விவசாயத்தில் பராமரிப்பு குறைவு. நாள் ஒன்றுக்கு எட்டு முதல் பத்து கிலோ
வரை பட்ரோஸ் கிடைக்கும். சாதாரணமாக கிலோ ரூ.70 வரை போகும். முகூர்த்த
நாட்களில் ரூ.150 வரை விற்கும். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஒரே
தொழில் பட்ரோஸ் வளர்ப்பு தான்,'' என்றார். பட்ரோஸ் சாகுபடி குறித்து 98945
98425க்கு அழுத்தலாம்.
-கா.சுப்பிரமணியன், மதுரை.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாய தொழில்நுட்பம் » விவசாய தொழில்நுட்பம் (விவசாய தொழில்நுட்பம்)
Search: