விவசாய தொழில்நுட்பம் - Page 11 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya, Laya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாய தொழில்நுட்பம் » விவசாய தொழில்நுட்பம் (விவசாய தொழில்நுட்பம்)
விவசாய தொழில்நுட்பம்
JanviDate: Monday, 13 Jul 2015, 4:46 PM | Message # 101
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
செடிக்கு 40 கிலோ!
'ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 700 பழங்கள்ல இருந்து 900 பழங்கள்
வரை கிடைக்குது. 20 பழங்களே ஒரு கிலோ அளவுக்கு எடை இருக்குது. சராசரியா
மரத்துக்கு 800 பழம்னு வெச்சுக்கிட்டாலே, ஒரு மரத்துல வருஷத்துக்கு 40 கிலோ
கிடைச்சுடும். ஒரு ஏக்கர்ல 134 மரங்கள் வரை நடவு செய்யலாம். மொத்தம்
ரெண்டரை ஏக்கர்ல 335 மரங்கள் இருக்கு. ரெண்டரை ஏக்கர்லயும் சேர்த்து
வருஷத்துக்கு 13 ஆயிரம் கிலோவுக்குக் குறையாம எலுமிச்சை மகசூல் ஆகுது. ஒரு
கிலோவுக்கு 35 ரூபாய்ல இருந்து 120 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும்.
சராசரியா கணக்கு பண்ணினா 55 ரூபாய் கிடைச்சுடும். வருஷத்துக்கு ரெண்டரை
ஏக்கர்ல இருந்து 7 லட்சம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்கும்.
முதல் மூணு வருஷம் வரை பராமரிப்பு, இடுபொருள் எல்லாத்துக்கும் செலவு
பண்ண வேண்டியிருக்கும். ரெண்டரை ஏக்கருக்கும் வருஷத்துக்கு ஒன்றரை லட்ச
ரூபாய் வரை செலவாகும். நாலாவது வருஷத்துல இருந்து பெரிசா பராமரிப்பு
தேவையில்லை. ஊட்டம் மட்டும் கொடுத்தா போதும். இயற்கை விவசாயம்கிறதால
அதுக்கும் அதிக செலவு பிடிக்காது.

ஊடுபயிரிலும் உன்னத வருமானம்!
மொத்தம் 350 தென்னை மரம் இருக்கு. அதன் மூலமா வருஷத்துக்கு ஒண்ணேகால்
லட்ச ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கிது. அதுல ஊடுபயிரா 300 நாட்டு
எலுமிச்சை இருக்கு. ஒரு மரத்துல வருஷத்துக்கு 35 கிலோ பழம் கிடைக்கும்.
அந்தக்கணக்குல 10 ஆயிரம் கிலோவுக்குக் குறையாம மகசூலாகும். இந்த
எலுமிச்சைக்கு சராசரியா ஒரு கிலோவுக்கு 40 ரூபாய் கிடைக்கும். அதன் மூலமா,4
லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.5 ஏக்கர்ல இருக்கிற தென்னை, எலுமிச்சை
ரெண்டுலயும் சேர்த்து எல்லா செலவும் போக 2 லட்ச ரூபாய்க்கு மேல லாபம்
கிடைக்கும்.
இப்போ, ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தையிலதான் எலுமிச்சையை விற்பனை செய்துட்டு
வர்றேன். காய்கறிகளைவிட, எலுமிச்சை நிச்சய லாபம் கொடுக்குற பயிரா
இருக்குது' என்று சந்தோஷமாகச் சொன்னார், ராமச்சந்திர ராஜா.  
தொடர்புக்கு,
ராமச்சந்திர ராஜா,
செல்போன்: 9443141379
பாஸ்கர்,
செல்போன்: 9585735787
 
JanviDate: Monday, 13 Jul 2015, 4:47 PM | Message # 102
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
இயற்கை முறையில் எலுமிச்சை சாகுபடி!
எலுமிச்சை சாகுபடி செய்யும் விதம் பற்றி ராமச்சந்திர ராஜா சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

18 அடி இடைவெளி!

'தேர்வு செய்த நிலத்தை நன்றாக உழவு செய்து, ஐந்து நாட்கள் ஆறவிட்டு,
மீண்டும் உழவு செய்ய வேண்டும். பிறகு, மூன்று நாள் காய விட்டு 18 அடிக்கு
18 அடி இடைவெளியில், ஒன்றரை அடி நீளம், அகலம் மற்றும் ஆழத்தில் குழி எடுக்க
வேண்டும். குழியை ஆறவிட்டு மேல் மண்ணை குழியில் பாதி அளவுக்கு நிரப்பி,
மையப் பகுதியில் ஒட்டு எலுமிச்சைச் செடியை வைத்து, மண்ணை நிரப்பி தண்ணீர்
கொடுக்க வேண்டும். நடவின் போது உரம் எதுவும் போடத்தேவையில்லை. ஏக்கருக்கு
134 கன்றுகள் தேவைப்படும். நடவு செய்ததில் இருந்து 5 மாதங்கள் வரை மூன்று
நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். 6-ம் மாதம் முதல் 10-ம்
மாதம் வரை நான்கு நாட்களுக்கு ஒரு முறையும், 10 மாதங்களுக்கு மேல்
காய்ப்புக்கு வரும் வரை ஐந்து நாட்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்ய
வேண்டும் (இவர் சொட்டுநீர்ப் பாசன முறையில் பாசனம் செய்கிறார்).

பூச்சிகளுக்கு வேப்பங்கொட்டை!

நடவு செய்த 15-ம் நாளில் புதிய தளிர்கள் வரும். அந்தச் சமயத்தில்
வண்ணத்துப்பூச்சிகள், தளிர்களின் மீது முட்டையிட்டுச் செல்லும்.
அம்முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளைத் தின்னும். 5 கிலோ
வேப்பங்கொட்டையை உரலில் தண்ணீர் விட்டு மாவு போல் அரைத்து, 15 லிட்டர்
தண்ணீரில் கலந்து ஐந்து நாட்கள் ஊற வைக்க வேண்டும். அந்தக் கரைசலில் ஒரு
லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பான்
மூலமாக 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து வந்தால், வண்ணத்துப்பூச்சிகள்
வராது.
நடவு செய்த இரண்டு ஆண்டுகள் வரை மாதம் ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில்
ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர், 200 மில்லி நீர்த்த சுண்ணாம்புக் கரைசல்
சேர்த்து தண்டுப்பகுதியில் தெளித்து வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி
கூடும். எலுமிச்சை காய்ப்புக்கு வந்த பிறகு இவை தேவையிருக்காது.

பூக்களை பறியுங்கள்!
6-ம் மாத தொடக்கத்தில் செடியைச் சுற்றி ஒன்றரை அடி விட்டத்துக்கு
வட்டப்பாத்தி எடுத்து... ஒரு செடிக்கு 3 கிலோ என்ற கணக்கில் ஆட்டு எரு இட
வேண்டும். 8-ம் மாதத்தில் முதல் பருவப் பூக்கள் பூக்கும். இந்த பூக்களைக்
கிள்ளி விட வேண்டும். 10ம் மாதத்தில் 200 லிட்டர் கொள்ளளவுள்ள பிளாஸ்டிக்
டிரம்மில், 180 லிட்டர் பசு மாட்டுச் சிறுநீர், 20 கிலோ கடலைப்பிண்ணாக்கு, 2
கிலோ சூடோமோனஸ், ஒரு கிலோ பேசிலோமைசஸ் லிலாசினஸ் ஆகியவற்றைப் போட்டுக்
கலக்கி ஐந்து நாட்கள் வைத்திருந்து... ஒரு லிட்டர் கலவைக்கு 10 லிட்டர்
தண்ணீர் என்ற விகிதத்தில் சொட்டு நீர் மூலமாகவோ அல்லது
நேரடியாகவோ  செடிகளுக்குக் கொடுக்க வேண்டும்.
16 மற்றும் 24-ம் மாதங்களில் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் பருவப்
பூக்கள் பூக்கும். இவற்றையும் கிள்ளி விடவேண்டும். 31-ம் மாத இறுதியில் 10
நாட்கள் தண்ணீர் விடுவதை நிறுத்தி, செடியை வாடவிட்டு, 11-ம் நாள் தண்ணீர்
கொடுக்க வேண்டும். அடுத்த 8 முதல் 15 நாட்களில் புதிய தளிர்களும்,
பூக்களும் அதிகம் தென்படும். இந்த சமயத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை
தொடர்ச்சியாக தண்ணீர் பாய்ச்சி வந்தால், அடுத்த 60 நாட்களில் அதாவது 34-ம்
மாதத்தில் எலுமிச்சை முதல் பறிப்புக்கு வந்து விடும். காய்ப்புக்கு
வந்தவுடன், ஒரு செடிக்கு 30 கிலோ ஆட்டுப்புளுக்கை, 5 கிலோ கடலைப்
பிண்ணாக்கு, 2 கிலோ வேப்பம்பிண்ணாக்கு, 30 கிராம் சூடோமோனஸ் ஆகியவற்றைக்
கலந்து ஆண்டுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். செடிகளின் வளர்ச்சியைப்
பொறுத்து சாணத்தின் அளவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.’
 
JanviDate: Monday, 13 Jul 2015, 4:47 PM | Message # 103
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
எலுமிச்சை தாய்ச்செடி... நாரத்தை அடிச்செடி!

கோவில்பட்டியைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாஸ்கர், ''ராமச்சந்திர ராஜா தென்னைக்கு ஊடாக
எலுமிச்சையை நட்டு நல்ல மகசூல் எடுத்துக்கிட்டிருந்தார். அவர் தோட்டத்துல
இருந்த எலுமிச்சை மரங்கள்லயே 30 மரங்களைத் தேர்ந்தெடுத்து... எலுமிச்சையை
தாய்ச் செடியாவும் நாரத்தையை அடிச்செடியாவும் வெச்சு ஒட்டுக்கட்டி பதியம்
போட்டு கன்னுகளை உருவாக்கினோம். இந்தக் கன்னுகளை தை, மாசி, பங்குனி
மாதங்கள்ல நட்டா நல்ல பலன் கிடைக்கும். அதாவது, பகல் நேரத்துல சுமாரான
வெயிலும், இரவு நேரத்துல குளிர்ச்சியாவும் இருக்குற மாதங்கள்ல நடவு
செய்யணும். செடி நடவு செய்த 5 மாசத்துக்கு ஆடு, மாட்டுச் சாணம்னு எந்த
உரமும் போடக்கூடாது. நிலத்தோட மேல் மண்ணைத்தான் குழிக்குள் போட்டு மூடணும்.
அந்த மண்ணுல செடிக வளர்றதுக்குத் தேவையான எல்லா நுண்ணூட்டச் சத்துக்களும்
இருக்கிறதால வேர் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
வாய்க்கால்ப் பாசனத்தைவிட சொட்டுநீர்ப் பாசனம்தான் நல்லது. தண்ணீர்
இல்லாத காலங்கள்ல ஈரப்பதம் இருக்கிறதுக்காக மரத்துக்கு அடியில்
தென்னைநார்க்கழிவுகள், வைக்கோல் மாதிரி பொருட்களைப் பரத்தி விடலாம்.
எலுமிச்சை வறட்சியைத் தாங்கக் கூடிய பயிர். இந்த ஒட்டு ரகத்துல விதைகள்
குறைவா இருக்கும். பழத்தோல் தடிமனாவும், சாறு அதிகமாவும் இருக்கும். அதோட
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமா இருக்கும்' என்றார், சிரித்தபடி.

நான் கற்ற பாடம்!
'எலுமிச்சையைப் பொறுத்தவரையில் மழைக்காலங்களில் நடவு செய்யக்கூடாது.
கோடை காலத்தில்தான் நடவு செய்யணும். மழைக்காலத்துல நடவு செய்தா களை பிரச்னை
அதிகமா இருக்கும். கோடை காலத்துல மூடாக்கு போடலாம். இதனால தண்ணீர்த் தேவை
குறையும். எலுமிச்சை சாகுபடியில தவறு பண்ணினது மூலமா இந்த ரெண்டு
விஷயத்தையும் அனுபவப்பூர்வமா கத்துக்கிட்டேன்' என்கிறார், ராமச்சந்திர
ராஜா.
 இ.கார்த்திகேயன்
 படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

Thanks to Vikatan
 
JanviDate: Monday, 13 Jul 2015, 5:08 PM | Message # 104
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
மணக்கும் புதினா... துளிர்க்கும் வருமானம்..!


35 சென்ட்... 93 ஆயிரம்...


க்காளி் சாதம், வெஜிடபிள் பிரியாணி, மட்டன் பிரியாணி, புலாவ், குஸ்கா... என மசாலா
சேர்த்து சமைக்கப்படும் அத்தனை உணவுகளிலும் புதினா இலை கட்டாயம்
இடம்பெறும். அதோடு, இதில் செய்யப்படும் துவையலுக்கு ஊறாத நாக்குகளே இருக்க
முடியாது என்று கூட சொல்லலாம்.
அந்தளவுக்கு நமது உணவில் ஒன்றிப்போய் இருக்கிறது, மணமும் மருத்துவக்
குணமும் நிறைந்த புதினா. உணவுக்கு மணம் சேர்ப்பது மட்டுமல்லாமல்,
விவசாயிகளுக்கு பணம் சேர்க்கும் பயிராகவும் இருக்கிறது, புதினா. இந்த
விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொண்ட விவசாயிகள் பலரும் தொடர்ந்து புதினா
சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம்,
சூளகிரி பகுதியில் அதிகளவில் புதினா பயிரிடப்படுகிறது.

சூளகிரி-பேரிகை சாலையில் நான்கு கிலோமீட்டர் சென்று, பிரதான சாலையில்
இருந்து இடதுபுறம் திரும்பி ஒரு கிலோ மீட்டர் பயணித்தால் வருகிறது,
ஒட்டர்பாளையம். இங்கு மேற்கே உள்ள மேட்டு நிலங்களில் பச்சைப்புல்வெளி போல
பரந்து விரிந்து கிடக்கின்றன, புதினா தோட்டங்கள். ஒரு மதிய வேளையில்,
புதினா வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஒட்டர்பாளையம் கிராமத்தைச்
சேர்ந்த முனியப்பனைச் சந்தித்தோம்.
“இந்தப்பகுதி முழுக்க ஒரு காலத்துல மேட்டு நிலங்கள்தான். அவரை, துவரை,
சோளம், நிலக்கடலைனு மானாவாரிப் பயிர்களைத்தான் வெள்ளாமை செய்வோம். அதோட
ஆடு, மாடுகளையும் மேய்ப்போம். இதுதான் எங்களுக்கு ஜீவாதாரம்.
இந்தப்பகுதியில மழை குறைவா இருந்தாலும், மிதமான குளிர் இருந்துக்கிட்டே
இருக்கும்.
முப்பது வருஷத்துக்கு முன்ன கிழக்கே (வேலூர் மாவட்டம்) இருந்து வந்த ஒரு
குடும்பம்தான் இந்தப் பகுதியில முதல்முறையா புதினாவைப் பயிர் செஞ்சாங்க.
அதைப்பாத்து மானாவாரி விவசாயம் செஞ்சிக்கிட்டு இருந்த மத்த விவசாயிகளும்,
கிணறு தோண்டி பம்ப்செட் வெச்சு புதினாவைப் பயிர் செய்ய ஆரம்பிச்சாங்க. அதுல
நல்ல வருமானம் கிடைக்கவும், அப்படியே கொத்தமல்லி, கீரை வகைகளையும் பயிர்
செய்ய ஆரம்பிச்சிட்டோம். அப்புறம் மானாவாரி நிலங்கள் எல்லாம் இறவைப் பாசன
நிலங்களா மாறிடுச்சு. முன்ன கிணத்துப் பாசனத்துல இருந்த விவசாயம், இப்போ
போர்வெல் பாசனத்துல நடந்துக்கிட்டு இருக்கு” என்று முன்னுரை கொடுத்த
முனியப்பன், தொடர்ந்தார்.

செம்மண் நிலங்களில் செழித்து வளரும்!
“நாங்க அண்ணன், தம்பிகள் நாலு பேரு. மொத்தமா 2 ஏக்கர் நிலமிருக்கு.
புதினாவை 20 வருஷமா பயிர் செய்றோம். இப்போ 75 சென்ட்ல புதினா
போட்டிருக்கோம். 40 சென்ட்ல நாட்டுப் புதினாவும் (இது ஒரு வகையான ஆராய்ச்சி
ரகம்), 35 சென்ட்ல வீரிய ரகமும் இருக்கு. பொதுவா, செம்மண், களிமண்
நிலங்கள்ல புதினா நல்லா வளரும். எங்க நிலம் லேசான செம்மண் கலந்த மணல்
பகுதி. இதுலயும் நல்ல விளைச்சல் கொடுத்துக்கிட்டிருக்கு. இதை ஒரு முறை நடவு
செஞ்சுட்டு முறையா பராமரிச்சா... அஞ்சு வருஷம் வரைக்கும் மகசூல்
எடுத்துக்கிட்டே இருக்கலாம்” என்ற முனியப்பன், 35 சென்ட் நிலத்தில் புதினா
சாகுபடி செய்யும் முறை பற்றி சொன்ன விஷயங்களைப் பாடமாகத்
தொகுத்திருக்கிறோம்.
25 நாளில் அறுவடை!
‘‘புதினாவுக்கு வைகாசி, கார்த்திகைப் பட்டங்கள் ஏற்றவை. 35 சென்ட்
சாகுபடி நிலத்தைக் களைகள் நீங்க நன்கு உழவு செய்து, 10 நாட்களுக்குக் காய
விட வேண்டும். பிறகு, ஒரு டிராக்டர் எருவைக் கொட்டி பரப்பி சதுரப்
பாத்திகளை அமைத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நான்கு மூட்டை வீரிய ரக
புதினா விதைக்குச்சிகளை 2 முதல் 3 அங்குல இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய
வேண்டும். நடவு ஈரம் காய்ந்த பிறகு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 7 முதல் 10
நாட்களுக்குள் துளிர் வரத்துவங்கும். 10-ம் நாள் களையெடுத்து,
பரிந்துரைக்கப்படும் உரத்தையும், வளர்ச்சி ஊக்கியையும் இட வேண்டும். புதினா
செடி வளர்ந்த பிறகு, இலைகள் மீது ரசாயன உரத்தையோ தொழுவுரத்தையோ
தூவக்கூடாது. அப்படித் தூவினால், இலைகள் அழுகிவிடும். வேர் அழுகல், இலை
அழுகல் நோய்கள் தாக்கினால், தகுந்த தெளிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

நடவு செய்த 20-ம் நாளுக்கு மேல் தேவைப்பட்டால் களை எடுக்க வேண்டும்.
25-ம் நாளில் புதினா அறுவடைக்குத் தயாராகி விடும். நாட்டு ரகமாக இருந்தால்,
35-ம் நாளில் அறுவடைக்கு வரும். வளர்ச்சி ஊக்கிக் கொடுப்பதைப் பொறுத்து
வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். வீரிய ரகத்தில் 25 நாட்களுக்கு ஒரு முறை
தொடர்ந்து அறுவடை செய்யலாம். நாட்டு ரகத்தில் 35 நாட்களுக்கு ஒரு முறை
தொடர்ந்து அறுவடை செய்யலாம்.’
 
JanviDate: Monday, 13 Jul 2015, 5:40 PM | Message # 105
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
சாகுபடிப்பாடம் முடித்த முனியப்பன், வருமானம் பற்றிச் சொன்னார்.

5 அறுவடையில், ஒரு லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்!

“சூளகிரிதான் புதினாவுக்கு முக்கியச் சந்தை. இந்தச் சந்தையை மையமா
வெச்சுதான் சுத்துப்பட்டு கிராமங்கள்ல புதினாவைப் பயிர் செய்றாங்க.
சந்தையில மூட்டைக் கணக்குலதான் வியாபாரிகள் புதினாவை வாங்குவாங்க. ஒரு
மூட்டை, 400 ரூபாய்க்கு விற்பனையானாலே, லாபம்தான். ஒரு மூட்டைக்கு 400
சின்ன புதினாக்கட்டுகள் பிடிக்கும்.
35 சென்ட்ல வைகாசிப் பட்டத்துல (ஜூன் மாதம்) ஹை-பிரீட் ரகத்தை நடவு
போட்டேன். இந்த தை மாசத்தோட 5 அறுப்பு முடிச்சிருக்கேன். தண்ணி
பத்தாக்குறையால அறுவடை தாமதமாகிடுச்சு. இல்லாட்டி மாசத்துக்கு ஒரு அறுவடை
சரியா வந்திருக்கும்.

ஒரு அறுப்புக்கு சராசரியா 35 மூட்டை அளவுல கிடைச்சுது. முதல்
அறுவடையப்போ விலை உச்சத்துல இருந்ததால ஒரு மூட்டை 900 ரூபாய்க்கு போச்சு.
அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா விலை இறங்கிடுச்சு. இந்த அஞ்சு அறுப்புக்கும்
சேத்து, மொத்தமா ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 750 ரூபாய் வருமானம்
கிடைச்சிருக்கு. நடவுல இருந்து இதுவரைக்கும் மொத்தம் 41 ஆயிரத்து 500
ரூபாய் செலவாகியிருக்கு. அதுலயே 93 ஆயிரத்து 250 ரூபாய் லாபம்
கிடைச்சிருச்சு. இன்னும் தொடர்ந்து அறுவடை பண்ணிக்கிட்டே இருக்கலாம்.
தோட்டத்துக்குத் தேவையான பாசனத் தண்ணி, எங்க அண்ணன் கிணத்திலிருந்து
வர்றதால மூணுல ஒரு பங்கு லாபத்தை அவருக்குக் கொடுத்துடுவேன்” என்று சொல்லி
மகிழ்ச்சியோடு விடைகொடுத்தார் முனியப்பன். 
 
ஜீரண சக்திக்கு புதினா!
புதினா பற்றிப் பேசிய ஒட்டர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன்,
“ஜீரண சக்திக்கு ரொம்ப நல்லது புதினா. அதனாலதான் சட்னி அரைச்சு
சாப்பிடுறோம். புதினாவிலிருந்து எஸன்ஸ் எடுத்து சோப், சென்ட்
கம்பெனிக்காரங்களும் பயன்படுத்துறாங்க. மூலிகை மருத்துவத்துலயும் இது
பயன்படுது” என்றார்.
விற்பனைக்கு சூளகிரி சந்தை!
கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது, சிறிய
நகரமான சூளகிரி. சுற்றுவட்டார விவசாயிகள் கொண்டுவரும் தக்காளி, காய்கறிகள்,
புதினாவுக்கென்று தனித்தனியாக சாலையோரங்களிலேயே சந்தைகள் இயங்கி
வருகின்றன. புதினா, கொத்தமல்லித்தழை, கீரைகளுக்கென்று செயல்படும் சந்தையில் வியாபாரம் செய்து வரும் மாரப்பனிடம் பேசினோம்.
“இந்தச்சந்தை காலை 10 மணிக்கு தொடங்கி, சாயந்தரம் 7 மணி வரை இருக்கும்.
கொத்தமல்லித்தழை, புதினா, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, சிறுகீரைனு பலவித
கீரைகளும் வரும். ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் நடக்குது.
உத்தனப்பள்ளி, பேரிகைனு சூளகிரியைச் சுத்தி இருக்கிற கிராமங்கள்ல இருந்து
புதினா வரும். இங்கிருந்து வியாபாரிகள் வாங்கி சென்னை, பெங்களூரு, சேலம்,
தர்மபுரி, கேரளானு பல இடங்களுக்கு அனுப்புறாங்க’’ என்றார்.

இயற்கையிலும் சாகுபடி செய்யலாம்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழுக்க முழுக்க ரசாயன உரங்களைப்
பயன்படுத்தித்தான் புதினா சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், இயற்கை
முறையில் புதினா சாகுபடி செய்யும் முறை பற்றி இங்கு விளக்குகிறார், கரூர்
மாவட்டம், தோகைமலை ஒன்றியம், மேலப்புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை
விவசாயி பிரபாகர்.
“முன்பு நானும் ரசாயன முறையில்தான் புதினாவை சாகுபடி செய்தேன். பிறகு, ‘நல்லகீரை’
அமைப்பில் இயற்கை சாகுபடி பற்றி பயிற்சி எடுத்த பிறகுதான், இயற்கை முறையில்
சாகுபடி செய்கிறேன். புதினா குறுகிய காலத்தில் மகசூல் கொடுக்கும் பயிர்.
இதற்கு உற்பத்திச் செலவும் குறைவு. ஒரு ஏக்கருக்கு 5 லோடு டிராக்டர் எரு
என்ற கணக்கில் கொட்டிக் கலைத்து உழ வேண்டும். பிறகு, 70 கிலோ வேப்பம்
பிண்ணாக்கைத் தூவி விட வேண்டும். விதைக்குச்சிகளை ஜீவாமிர்தத்தில் நனைத்து
நடவு செய்ய வேண்டும். 10 நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப்
பாசன நீரில் கலந்து விட வேண்டும். தெளிப்புநீர்ப் பாசனம் செய்பவர்கள்
ஜீவாமிர்தத்தை வடிகட்டி, தெளிப்புநீர்க் குழாயில் கலந்து விடலாம்.
புதினாவில் இலைப்புழு, அசுவிணிப் பூச்சிகள் தாக்குதல் இருக்கும். வாரம்
ஒரு முறை 500 மில்லி வேப்பங்கொட்டைக் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து
தெளித்து வந்தால், இவற்றின் தாக்குதல் இருக்காது. முதல் அறுவடை முடிந்த
பிறகு ஏக்கருக்கு 3 லோடு எரு, 70 கிலோ கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றைக்
கலந்து வயலில் தூவிவிட வேண்டும். வாய்ப்பிருந்தால் ஏக்கருக்கு 5 லோடு
செம்மண்ணையும் தூவி விடலாம். இவற்றை சரியாகக் கடைபிடித்தால், ரசாயன
முறையில் கிடைக்கும் விளைச்சலை விட, ஏக்கருக்கு 18 ஆயிரம் கட்டுக்கள் வரை
கூடுதலாகக் கிடைக்கும்.
பனிப்பொழிவு அதிகமுள்ள மார்கழி, தை, மாசி மாதங்களில் விளைச்சல் அதிகமாக
இருக்கும். ரசாயனத்திலிருந்து இயற்கை முறைக்கு மாறுபவர்கள் பல தானிய
விதைப்பு செய்து, மடக்கி உழவு ஓட்டி 15 நாட்கள் நிலத்தைக் காயப் போட்டு,
இயற்கை முறை விவசாயத்தை ஆரம்பிக்கலாம்” என்றார், பிரபாகர்.
தொடர்புக்கு, பிரபாகர், செல்போன்: 90038-36427
 
JanviDate: Monday, 13 Jul 2015, 5:41 PM | Message # 106
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
நாட்டு ரகமும் வீரிய ரகமும்!நாட்டு ரகம் தாமதமாக அறுவடைக்கு வந்தாலும், நல்ல வளர்ச்சி இருக்கும்.
தண்ணீர் தேவை குறைவு. அறுவடை செய்த இலைகள் விரைவில் வாடாது. தண்ணீர்
தெளித்து மூட்டை பிடித்தால், மூன்று நாட்கள் வரை வைத்திருக்கலாம்.

வீரிய ரகத்தில் தண்டு பெரிதாகவும், செடி உயரமாகவும் இருக்கும். தண்ணீர்
தேவை அதிகம். விரைவாக வளர்ந்தாலும் அறுவடை செய்த இலைகள் விரைவில் வாடி
விடும். அதனால், உடனடியாக விற்பனை செய்ய வேண்டும். 
தொடர்புக்கு,
முனியப்பன்,
செல்போன்: 99941-95691.

த.ஜெயகுமார்
 படங்கள்: க.தனசேகரன்

--- Thanks to Vikatan
 
JanviDate: Wednesday, 29 Jul 2015, 6:34 PM | Message # 107
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
தகுதியில்லாத நிலத்திலும் சாதிக்கலாம்

மண்ணின் கார, அமில தன்மை 5 முதல் 6.3 வரை இருந்தால் சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும் என்பது அறிவியலாளர்கள் கருத்து. ஆனால் அதிகமான அமில, காரத்தன்மை கொண்ட மண்ணையும், வருவாய் கொடுக்கும் பூமியாக மாற்றியுள்ளார் கன்னிவாடி விவசாயி ராஜசேகரன்,58. அதிகரித்து வரும் மின்தேவையை சமாளிக்க உதவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இவருக்கு நிலத்தின் வடிவத்தில் கைகொடுத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி ஓரியன்ட் கிரீன் பவர் கம்பெனி, தென்னை நார்க்கழிவு, விறகு மூலம் மின்உற்பத்தியை துவக்கியது. தட்டுப்பாடு, விலை உயர்வால் அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதில் சிக்கல்கள் உருவாயின. குறைந்த செலவில் மின்உற்பத்திக்காக, கால்நடைத் தீவன வகை(கம்பு நேப்பியர்-கோ 4) புல்லை பயன்படுத்த முடிவு செய்தனர்.
இதனை சாகுபடி செய்ய விவசாயிகள் பலர் தயங்கியபோது, கன்னிவாடி விவசாயி ராஜசேகரன் தைரியமாக முன்வந்தார். 2012 ஆகஸ்டில், 3.75 ஏக்கரில் சாகுபடி செய்தார். முதற்கட்டமாக இரு மடங்கு லாபம் பெற்றபோதும், கடும் வறட்சியால் அடுத்தமுறை மகசூலில் மந்தம் ஏற்பட்டது.
எதுவுமே சாகுபடி செய்ய முடியாத இந்த நிலத்தில், மாற்று சாகுபடி எதையும் அவர் துவங்கவில்லை. பலமாதங்களாக சருகாய் காய்ந்த புல் தட்டைகள், அப்போது பெய்த மழையால் மீண்டும் உயிர்பெற்றன. வறட்சி தாங்கும் பயிராய் வளர்ந்த இந்த புல்ரகம், இவருக்கு இறைவன் தந்த வரமாய் மாறியது.
அவர் கூறுகிறார்: எனது நிலத்தில் மண் ஆய்வின்போது அமில, காரத்தன்மை 8.4 சதவீதம் எனத் தெரிந்தது. சத்துக்கள் பற்றாக்குறையால், மக்காச்சோளம், பருத்தி, வெள்ளரி, தர்பூசணி என அடுத்தடுத்து சாகுபடியை மாற்றியும் பலன் இல்லை. ஓரியன்ட் கிரீன் பவர் நிறுவன அதிகாரிகள், மின்உற்பத்திக்கான புல் சாகுபடி பற்றிக் கூறினர். நாற்றுக் கரணை, மேல், அடி உரங்கள், மருந்து, வளர்ந்தபின் வெட்டி, எடுத்துச் செல்லும் பொறுப்புகளை அவர்களே ஏற்றனர். நிலத்தை தயார்படுத்தல், நடவு, நீர் பாய்ச்சுதல் போன்ற செலவினங்கள் மட்டுமே இருந்தது. ஊடுபயிராக, அகத்தி வளர்ப்பும் நடக்கிறது.
அறுவடைக்குப்பின், 45 சதவீத ஈரப்பதத்துடன் பெறப்படும் புல், பாய்லரில் எரித்து நீராவியாக பெறப்படுகிறது. இதனை டர்பைன் கலத்தில் செலுத்தி, மின் பெறப்படுகிறது. இரண்டு டன் புல்லில் இருந்து ஒரு மெகாவாட்(ஆயிரம் யூனிட்) உற்பத்தி செய்கின்றனர்.
முதற்கட்டமாக எனக்கு ரூ.58,542 ரூபாய் செலவில், ரூ.ஒரு லட்சத்து 18 ஆயிரம் கிடைத்தது. போதிய மழையின்றி சொட்டு நீர்ப்பாசன முறையில் வினியோகிக்கக்கூட தண்ணீர் இல்லை. எந்த சாகுபடிக்கும் ஏற்பில்லாத மண் என்பதால், காய்ந்து சருகான தட்டைகளை தீவனத்திற்கு விற்க முடிவு செய்தேன்.
அதிகாரிகளின் ஆலோசனையால் முடிவை ஒத்திவைத்தேன். ஒரு ஆண்டு கடந்தபோது காய்ந்து சருகான தட்டைகள் இரு மாதங்களுக்கு முன் பெய்த மழையால் மீண்டும் வேர்பிடித்து வளரத்துவங்கின. தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. தாமதமானபோதும், எவ்வித முதலீடும் இல்லாமல் மீண்டும் மகசூல் கிடைத்துள்ளது,'' என்றார். இவருடன் பேச 94435 05209.
-எல்.தாமோதரன்,
கன்னிவாடி.


--- Thanks to Dinamalar
 
JanviDate: Wednesday, 29 Jul 2015, 6:36 PM | Message # 108
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
ஏக்கருக்கு 4 லட்சம் வருமானம் தரும் கேந்தி மலர் சாகுபடி

"உழுதவன் கணக்கு பார்த்தால் தார் கம்பு கூட மிச்சமாகாது'' என்பது கிராமப்புற விவசாயிகள் கூறுவதுண்டு. ஆனால் இவற்றை எல்லாம் பொய்யாக்கி ஏக்கருக்கு 4 லட்சம் வருமானம் எடுக்கிறேன் என்று கர்வத்துடன் கூறுகிறார் ஒரு சாதனை பெண் விவசாயி சிவகாமி விருமாண்டி.
எப்படி: இவர் வருடந்தோறும் கேந்திமலர் சாகுபடி செய்கிறார். ஈஸ்வெஸ்ட் நிறுவனத்தின் ""மேக்சிமா எல்லோ வீரிய ஒட்டு'' என்ற ரகத்தை ஏக்கருக்கு 10 ஆயிரம் செடிகள் நான்கு உழவு முடிந்தவுடன் 2x2 அளவில் பார் அமைத்து நடவு செய்தார். செடி நட்ட 40 நாளில் முதல் அறுவடை வந்தது. பூ வந்த நாள் முதல் 100 நாட்கள் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 10 டன் பூ வந்தது. 1 கிலோ குறைந்த பட்ச விலை ரூ.40. அதிக பட்சம் ரூ.160. இந்த பூக்களுக்கு வருடத்தில் அனைத்து நாட்களிலும் நல்ல வரவேற்புள்ளது.
ஏக்கர் / 4,00,000. (10,000 x 50 = 5,00,000).
வருமானம் - ரூ.5,00,000. செலவு - 1,00,000. நிகர வருமானம் - ரூ.4,00,000.
செலவு: உழவு - 4000, நாற்று (ரூ) 30,000, மருந்து + உரம் - 16,000, கமிஷன் - 50,000, மொத்தம் 1,00,000. இவர்கள் பூப்பறிப்பதற்கு கூலி ஆட்கள் விடுவதில்லை.
இவருக்கு இவர் கணவர் விருமாண்டி D.Agri தொழில்நுட்ப விவரங்களை கற்றுத் தருகிறார். இவர் இந்த செண்டு பூ வீரிய நாற்றுகளை தமிழ்நாடு முழுவதும் வினியோகம் செய்கிறார். தொடர்புக்கு : 96262 89640

--- Thanks to Dinamalar
 
JanviDate: Wednesday, 29 Jul 2015, 6:38 PM | Message # 109
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
வறண்ட மண்ணில் அசத்தும் "அல்போன்சா'

உலகம் தெரியாத விவசாயியாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டும் பலன் இல்லாமல் போகும். விவசாயி வியாபாரியாக மாறினால் இந்த உலகமே திரும்பிப்பார்க்கும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார் சிவகங்கையை சேர்ந்த விவசாயி முருகேசன்.
வறண்ட மண்ணான சிவகங்கை எ.கருங்குளத்தை சேர்ந்த இவரது பண்ணை 2,000 ஏக்கர். பண்ணைக் குட்டைகளுடன் தென்னந்தோப்பு என பலவகை மரங்களை வளர்த்து வருகிறார்.
வறட்சியில் இந்த கிராமம் தத்தளித்த போது பிழைப்புக்காக வேறு ஊருக்கு புலம் பெயர்ந்த இவர் பல தொழில்கள் செய்தாலும், கடைசியாக தேர்வு செய்தது விவசாயம்.
"அல்போன்சா' மாம்பழம் அதிக விலையில் விற்பதை பார்த்து, தோட்டத்தில் அதை அமைக்கும் விருப்பத்தை விவசாய பல்கலையிடம் கேட்டுள்ளார். இந்த மண்ணில் அது வளராது என கூறியதை கேட்டு, அதையே சவாலாக எடுத்து முதல்கட்டமாக 20 ஏக்கரில் மா சாகுடியை துவங்கி இன்று பெரும் ஏற்றுமதியாளராகவும் மாறியுள்ள முருகேசன் கூறியதாவது:
25 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு இயற்கை உரம் மீது தான் நம்பிக்கை இருந்தது. 15 டன் மண்புழுவை தோட்டத்தில் கொட்டி மண் வளத்தை பெருக்கினேன். 4 இடங்களில் பண்ணை குட்டைகள் அமைத்து மழைநீரை சேமித்து வந்ததால், நிலத்தடிநீர்மட்டம் பாதுகாக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் இருந்து மாங்கன்றுகள் வாங்கி ஏக்கருக்கு 40 மற்றும் 66 மரங்கள் வீதம் நடவு செய்தேன். 
மூன்று மாதத்திற்கு ஒரு முறை களை எடுப்பதற்காக உழவு செய்து, அந்த களைகளே உரமாக்கினேன். சொட்டு நீர் பாசனத்தில் அனைத்து மரங்களும் நல்ல பலனை கொடுத்தது. மும்பையில் ஒரு பழம் ரூ.60க்கு விற்பனையானது. அதே பழம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டால் இன்னும் அதிக வருவாய் கிடைக்கும் என மகன் மதிபாலன் அதற்கான முயற்சிகள் எடுத்தார். விவசாயி வியாபாரியாக மாறினால் தான் விவசாயிக்கு உண்மையான பலன் கிடைக்கும், என்பதையும் நிரூபித்தோம். 
இந்த பழங்களை பேக்கிங் செய்வதற்கு ஜார்கண்ட் தொழி லாளர்கள் ஈடுபடுகின்றனர். மரத்தில் இருந்து விளைந்த மாங்காயை அதன் காம்போடு 3 அங்குலத்தில் "கட்' செய்து, அதை பெட்டியில் வைக்கோல் சுற்றி வெளியிடங்களுக்கு அனுப்புகிறோம். இதற்கு தனி வரவேற்பு உள்ளது. இன்னும் சில மாதங்களில் இதன் சீசன் களை கட்டும். இந்த ஆண்டு நல்ல வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன், என்கிறார்.
இந்த சாதனை விவசாயி முருகேசனை வாழ்த்த - 94865 61677ல் அழுத்தலாம்.
-டபிள்யு.எட்வின், மதுரை.

---- Thanks to Dinamalar
 
JanviDate: Wednesday, 29 Jul 2015, 6:41 PM | Message # 110
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
மலர் சாகுபடியில் மாதம் ரூ. 25 ஆயிரம் வருமானம்: ஊடுபயிரில் சம்பாதிக்கும் கன்னியாகுமரி விவசாயி

எந்தப் பயிரை சாகுபடி செய்தாலும், கூடவே ஊடுபயிர் சாகுபடியும் செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான வேளாண் வல்லுனர்களின் கருத்து. காரணம் முக்கிய பயிர் கைவிட்டாலும், ஊடுபயிர் தாங்கி பிடித்து விடும் என்பதனால்தான்.
அந்த வகையில் வாழைக்கு ஊடுபயிராக 4 ஆண்டுகளுக்கு முன்பு சோதனை முயற்சியாக மேற்கொண்ட கொய்மலர் சாகுபடியால் இப்போது மாதம் ரூ.25 ஆயிரத்துக்கு குறையாமல் வருமானம் வருகிறது என்கிறார் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி சசிகுமார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சாரோடு வெட்டுகாட்டுவிளை. அங்கு வாழை தோட்டத்தில் ஊடுபயிராக ஹெலிகோனியா ரக கொய்
மலர்களை சாகுபடி செய்கிறார் சசிகுமார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொய்மலர் சாகுபடி நடைபெற்று வந்தாலும் அவை பெரும்பாலும் பசுமை குடிலில் வைத்தே வளர்க்கப்பட்டு வருகிறது. அவர்களிலிருந்து மாறுபட்டு
திறந்த வெளியில் கொய் மலர் சாகுபடியில் ஈடுபட்டு அனைவரையும் வியப்பிலாழ்த்துகிறார் சசிகுமார்.
ஒரு காலைப் பொழுதில் சசிகுமாரை அவரது தோட்டத்தில் சந்தித்தோம். மலர் பறிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டே அவர்
பேசத் துவங்குகிறார். ’’எனக்கு சொந்தமாக நிலம் கிடையாது. குத்தகைக்கு நிலத்தை எடுத்துதான் விவசாயம் செய்கிறேன். 4 வருசத்துக்கு முன்னாடி வெறுமனே வாழை மட்டும்தான் போட்டுருந்தேன். குமரி மாவட்ட வேளாண்மை அறிவியல் மையத்
தில் இருந்து விவசாயிகளுக்கு ஹெலிகோனியா பற்றிய பயிற்சி வகுப்பு நடத்தினார்கள். அதில் கலந்துகிட்ட பின்னாடி 75 சென்ட் வாழை தோட்டத்தில் வாழைக்கு ஊடுபயிராக ஹெலிகோனியாவை சாகுபடி செய்தேன்.
நல்ல வருமானம் கிடைச்சுது. இப்போ படிப்படியா முன்னேறி ஒன்றரை ஏக்கரில் வாழைக்கு ஊடுபயிராக ஹெலி கோனியாவை சாகுபடி செய்றேன். என்னோட தோட்டத்தில் ஹெலி கோனியா ரகத்தில் 5 ரூபாய் செடியில் இருந்து 2000 ரூபாய் செடிகள் வரை பல்வேறு ரகங்களும் நடவு செஞ்சிருக்கேன். இப்போ என்னோட தோட்டத்தில் ட்ராபிக்ஸ், வேகினேரியா (ரெட்),வேகினேரியா (மஞ்சள்), அங்குஸ்டா, தக்கோமி, கென்யா ரெட் என்று 50-க்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன.
இதில் சில ரகங்கள் தினசரி பூக்கும். சில வாரம் ஒரு முறையும், சில 6 மாதங்களுக்கு ஒருமுறையும் பூ பூக்கும். ஒரே ரகத்தை நடவு செய்தால் சந்தை வாய்ப்பு இருக்காது. அதே நேரத்தில் இப்படி பல ரகங்களையும் கலந்து நடவு செய்தால் ஆண்டு முழுவதும் சந்தை வாய்ப்பு இருக்கும்.
இதில் சந்தோசமான விசயம் என்னன்னா ஒரு தடவை செடிகளை வாங்கி நட்டு விட்டால் வாழையை போலவே பக்க கன்று விட்டு வளர்ந்து விடும். இதனால் செடி வாங்கும் செலவு ஒருமுறை மட்டுமே. காலப்போக்கில் நம் தோட்ட தேவைக்கு போக உபரியாக இருக்கும் செடிகளை விற்றும் சம்பாதிச்சுக்கலாம்.
தனிப்பயிராக சாகுபடி செய்யும் போது ஏக்கருக்கு 2500 செடிகள் வரை நடவு செய்யலாம். நான் முதலில் ஊடுபயிராக 75 சென்ட்டில் 1,225 செடிகளை நடவு செய்தேன். கொய்மலர்களை பொறுத்தவரை செடிக்கு செடி மற்றும் வரிசைக்கு வரிசை 4 அடி இடைவெளி விட்டு நடவு செய்வது நல்லது. நடவுக்கு பின் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதே நேரத்தில் தண்
ணீர் கட்டிவிடக் கூடாது. நடவு செய்த 85-வது நாளில் செடியின் அடிப்பாகத்தில் சிறிய பாத்தி போல் அமைத்து ஒருகைப்பிடி அளவு பாக்டம்பாஸ் மற்றும் பொட்டாஷ் கலவையை போட வேண்டும்.மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த உரத்தை தொடர வேண்டும். இடையிடையே கோழி எரு, ஆட்டு எருவையும் தூவி தண்ணீர் பாய்ச்சுவேன்.
நடவு செய்த 90 வது நாளில் பூ பூக்கத் துவங்கி விடும். மொட்டு விட்டதிலிருந்து 15-வது நாளில் பறிக்க ஆரம்பித்து விடலாம். ஒரே ஆண்டில் ஒவ்வொரு செடியில் இருந்தும் குறைந்தது ஒன்பது பக்க செடிகள் முளைத்து வந்து விடும். இப்போது என்னோட ஒன்றரை ஏக்கர் தோட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகள் வரை நிக்குது.
இதனால் வருடம் முழுவதும் பூ கிடைக்கும். பல ரகங்களும் கலந்து கட்டி நிற்பதால் வியாபாரிகள் கேட்கும் பூவை கொடுக்க முடியும்.
ஹெலிகோனியாவில் டெம்ரஸ், சொர்ணம் கோல்ட், செக்ஸிபிங் ரகத்திற்கு அதிகபட்சமாக 60 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. ட்ராபிக்ஸ், ஆங்குஸ்டா ரகங்கள் குறைந்தபட்சம் 8 ரூபாய் வரையும் விலை கிடைக்கிறது.
அறுவடை செய்த கொய்மலர்களை திருவனந்தபுரம், பெங்களூர், டெல்லி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அழகு பூவுக்காக சந்தைபடுத்தி வருகிறேன். தமிழகத்தில் வாழை விளையும் மண் வளம் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த கொய்மலர்களை சாகுபடி செய்யலாம். சென்னை போன்ற பெருநகரங்களை ஒட்டியுள்ள விவசாயிகள் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு சாகுபடி செய்யலாம்.
எனக்கு இப்போது செலவெல்லாம் போக ஹெலி கோனியாவின் மூலம் மாதம் 25,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. சொந்த நிலம் கூட இல்லாமல் விவசாய கூலி வேலைகளுக்கு சென்று வந்த நான் ஹெலிகோனியா கொடுத்த வாழ்க்கையின் மூலமாக வில்லுக்குறி பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நர்சரியும் நடத்தி வருகிறேன்.
குமரி மாவட்ட தோட்டக் கலைத் துறை அதிகாரிகளும் எனக்கு வேண்டிய தகவல் தந்து உதவுகின்றனர். ஊட்டியில் நடைபெறும் மலர் கண்காட்சியிலும் ஒவ்வொரு ஆண்டும் கலந்து வருகிறேன். இப்போது என் தோட்டத்தில் வாழைதான் ஊடுபயிர். ஹெலிகோனியா தான் பிரதானப் பயிர்” என்றார் சசிகுமார்.
மேலும் விவரங்களுக்கு 
94876 46213 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


--- Thanks to The Hindu
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாய தொழில்நுட்பம் » விவசாய தொழில்நுட்பம் (விவசாய தொழில்நுட்பம்)
Search: